Thursday, August 26, 2010

பாரதி ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்! சீனி.விசுவநாதன்



நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வது,  படித்ததில் பெற்ற அனுபவங்களை, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையில் இந்தப் பக்கங்களில் சில புத்தகங்கள், எழுத்தாளர்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தமிழில் கவிதை, சிறுகதை, வசன கவிதை, தேசீய கீதங்கள், கேலிச் சித்திரங்கள், பத்திரிக்கை நடத்திய அனுபவம் என்று எதைப் பேச முனைந்தாலும்  அதன் முன்னோடியாக மஹாகவி சுப்ரமணிய பாரதியார் இருப்பதைப் பார்க்க முடியும். புத்தகங்களைப் பற்றி எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் பாரதியை மறத்தல் ஆகுமோ?!

பாரதியைத் தமிழகம் முழுமையாக அறிந்திருக்கிறதா?

பாரதியைப் பற்றி அவதூறாக விமரிசித்து வரும் நிறையக் கட்டுரைகளை  இணையத்திலும் அச்சிலும் பார்க்கும்போது, பாரதியைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது மிகக் குறைவு தான் என்பது புலனாயிற்று. ஒரு நல்ல நூலைப் படித்து, அதை விமரிசனம் செய்யும்போது, படித்தவர் பரிந்துரையாக நாலு வார்த்தை சொல்லுவோமில்லையா?

அப்படிப் "படித்தான் பரிந்துரை" என்ற தலைப்பில் ஸ்ரீ ரங்கம் திரு. வி. மோகன ரங்கன் அவர்கள் மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில்  எழுதிய நூல் அறிமுகத்தை இங்கேயும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. இதோ ஸ்ரீ ரங்கம் வி மோகன ரங்கன் அவர்களின் மோகனத் தமிழில், படித்தான் பரிந்துரையாக......

சீனி.விசுவநாதன் 

"பாரதி  ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்"  நூல்  640 பக்கங்கள்  கொண்ட ஹார்ட் பௌண்ட் புத்தகம்.   முன்னரே சிக்கல்கள்  மட்டும் பற்றிச்  சிறு நூலொன்று   இவரால்   எழுதப்பட்டு  வந்தது.   ஆனால் இந்த  நூல்   மிக  விரிந்ததும்,   கிட்டத்தட்ட  அனைத்துக் குளறு படிகளையும், பாரதி  நூல்கள்,  வாழ்க்கைச்  செய்திகள்,  சரித நூல்கள், மூன்றாம் மனிதர் தகவல்,   சக  காலத்து  அறிஞர்கள்  பின்னிட்டுப் பாரதியின் பெருமை  உணரத் தலைப் பட்ட பின் புது ஊக்கம் கொண்டு தாங்கள் பழக நேர்ந்த பாரதி நாட்களைப் பற்றிய நேரடி வர்ணனைகளின் சான்றாண்மை என்று மிக விரிவாகச் செய்திருக்கிறார் ஆசிரியர். 

பாரதி இயலின் பெரும் உபகாரி இந்த ஆசிரியர் என்பது பலருக்கும் மேன்மேலும் தெரிந்துகொண்டு வரும் விஷயம்.


10 வால்யூம்கள் கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி நூல்கள் இது வரை வந்துவிட்டன. மேற்கொண்டு ஓரிரு வால்யூம்கள் வர இருக்கின்றன. அந்த நூல்களில் எல்லாம் ஆசிரியரின் உழைப்பைப் பூரணமாகப் பார்வையிடும் பொழுது எனக்குத் தோன்றிய கருத்து இந்த ஆசிரியருக்கு உண்மையில் இந்த வேலைக்காக இரண்டு பட்டங்கள் தரவேண்டும் என்பதுதான். ஏனெனில் பாரதியின் எழுத்துக்களைத் தேடிப்பிடித்து வந்து கால நிரல் படுத்தி ஊர்ஜிதம் செய்து போடுவது ஒரு பெரும் பணி. 

அதோடு நிற்காமல் பாரதி ஒரு கட்டுரை எழுதுகிறார் என்றால் அந்தக் கட்டுரை வேறு ஏதோ நிகழ்ச்சிகளையோ, அல்லது மற்றவர் எழுதிய இதழ்க் கட்டுரைகளையோ குறிப்பிட்டால் அந்த நிகழ்ச்சிகள் பற்றிய தகவல், அந்தக் கட்டுரைகள்   பற்றிய தகவல், முடிந்த இடத்தில் எல்லாம் அந்தக் கட்டுரைகளின் நகல், மற்றும் அதன் தமிழாக்கம் (ஆங்கிலமாய் இருப்பின்) என்று அந்தக் காலக் கட்டத்தையும் சேர்த்து ஆவணப் படுத்திவிட்டார் ஆசிரியர்.

இவ்வளவு நெடிய உழைப்பில் பழுத்த, பாரதி வித்தையை வளர்க்கும் பெரியவர் இப்பொழுது கொண்டு வந்திருக்கும் நூல் ‘பாரதி ஆய்வில் சிக்கல்களும் தீர்வுகளும்’. இந்த நூல் எந்த அளவிற்குச் சான்றாண்மை மிக்கதாய் இருக்கும் என்று நீங்களே ஊகிக்கலாம்.

நூலாசிரியரின் ’படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை’ என்ற அறிமுகம், 32 தலைப்புகளில் நெடுங்கட்டுரைகள், 6 பின்னிணைப்புகள் என்று நூல் பரந்துபட்டு பாரதி ஆய்வுலகின் சிக்கல்களையும், தீர்வுகளையும் விளக்குகிறது.


உதாரணத்திற்கு மூன்று சொல்கிறேன். ‘சத்தியப் போர்’ என்பது பாரதி பாடலா? சங்கு சுப்பிரமணியன் தம் இதழில் போட்டது. அது பாரதி பாடல் இல்லை என்று பாரதியின் தம்பி திரு சி விஸ்வநாதனும், திரு சிதம்பரம் ரகுநாதனும் கருத்து தெரிவித்தனர். திருமதி செல்லம்மா பாரதி வெளியிட்ட சுதேச கீதங்கள் பதிப்பில் இருந்ததாகத் திரு சிதம்பரம் ரகுநாதனின் கருத்து. பாரதியின் தம்பி கருதியது சொற்கள் பாரதியின் சொல்லாட்சியாக இல்லை என்பது. பாரதி பிரசுராலயம் வெளியிட்ட பதிப்பில் இந்தப் பாடல் இடம் பெறவில்லை.  நூல் இந்தச் சிக்கலை விளக்கி, தீர்வும் தருகிறது.

அடுத்து பாப்பா பாடல். பாரதி பிரசுராலயத்தாரின் பதிப்பில் பல பிழைகள் என்று வாசகர்களின்  சார்பாக நியாயக் குரல் எழுப்பினார் புதுமைப் பித்தன் மணிக்கொடியில். ஆனால் அவர் சுட்டிக்காட்டிய தவறுகள் பாரதி காலத்திலேயே பதிப்பிக்கப்பட்ட தொகுப்புகளில் ஏறியிருந்தால். அப்பொழுது அவை தவறுகள் அல்லவே. 

கிடைத்ததைக் கொண்டு பாரதியின் ஆகச்சிறந்த உண்மையான பாடம் என்றுதானே ஆகும். இவை எல்லாம் பாரதி பற்றிய ஆவணங்களை பல பத்தாண்டுகளாகத் தேடித் திரட்டி வரும் ஆசிரியர் சுட்டிக் காட்டி உண்மை நிலவரங்களைத் தெளியப் படுத்துவது எத்தகைய ஆக்க பூர்வமான பணி!

அடுத்து, திலகர் மறைந்த போது ஏன் பாரதியார் அவரைபற்றி எதுவும் பாடவில்லை? எங்கிருந்தார்? கடலூரில் எழுதிக்கொடுத்த வாசகங்கள் அவரைப் பாட விடாமல் கையைக் கட்டிப் போட்டதா? கிடைத்த தகவல்களுக்கிடையிலும், அந்தத் தகவல்களையும் அணுகும் முறையில் ஆர்வம், ஆர்வமின்மை காரணமாகவும் பலரும் பெரும் கேள்விகள் எழுப்பி, தம் கேள்விகளையே முடிவுகளாகவும் ஆக்கிச் செய்திருக்கும் குழப்பத்தின் இடையே இந்தச் சிக்கல் என்ன? அதன் தீர்வு யாது? என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

பாரதிதாசன் நோக்கில் பாரதியார் என்னும்படி ஒரு நூலில் திரு மணிகண்டன் தொகுத்த பாரதி பற்றிய பாரதிதாசன் பாடல்களில் ஒன்று அன்றொரு நாள் என்று 1907 ஆம் ஆண்டைப்பற்றிக் குறிப்பிட்டு பாரதியார், வவெசு ஐயர், அரவிந்தர் ஆகியோரைப் பற்றிப் பாண்டிச்சேரி சூழலில் விவரிக்கிறது. ஆசிரியர் திரு சீனி. விசுவநாதன் ’பாரதிதாசன் ஆய்வாளர்கள்  இந்தப் பாடலை மீள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்.  ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா?

இதுபோல் 640 பக்கங்களும் பாரதி ஆய்வாளர்கள், மாணவர்கள், நேசர்கள்  ஆகியோருக்கு அருமையான பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை.

பின்னிணைப்புகளில் தலைப்புகளே அவற்றின் முக்கியத்வத்தைக் கூறும்.  

1)பாரதி காலத்தில் பத்திரிக்கைகளில் பிரசுரமான பாடல்கள்  

2)பாரதி காலத்தில் நூல் வடிவம் பெறாத பாடல்கள் 

3)பாரதி காலத்திய நூல்களில் மறுபிரசுரம் செய்யப்பட்ட பாடல்களுக்கான விவரம்  

4)பிரிட்டிஷ் அரசு ஆட்சிக்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாரதி பாடல்கள்.

பாரதி இயலை கற்பனைகளின் மைதானமாக ஆக்கிவிடும் நிலையிலிருந்து மீட்டு, ஆரோக்கியமான ஆய்வுகள் மிகுவதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியதில் பெரும் பங்கு திரு சீனி. விசுவ நாதனுடையது.


--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

பாரதி  ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்


ஆசிரியர் --சீனி.விசுவநாதன்


முதற் பதிப்பு -- 31 டிசம்பர் 2009 

நூல் கிடைக்குமிடம்


சீனி. விசுவநாதன்
2, மாடல்  ஹவுஸ் லேன்,
சி ஐ டி நகர்,
சென்னை நகர் -- 600035
தொலைபேசி:  044-24315757


விலை ரூ 275 --00

மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தின் இழை ஒன்றில் இருந்து நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப் படுகிறது.


4 comments:

  1. "... பாரதியார் சூரத் காங்கிரஸூக்கு முன் திலகரைப்
    பார்த்ததில்லை; பார்க்க ஆவல்.காங்கிரஸ் சமயத்தில் சூரத்தில் பலத்த மழை;காங்கிரஸ் கொட்டகைக்கும் பிரதிநிதிகள் தங்கியிருந்த இடத்துக்கும் இடையே நல்ல பாதையில்லை. செப்பனிடப்பட்ட பாதையும். மழையால் சீர்குலைந்து போய்விட்டது. அந்தப் பாதையை ஆட்களைக்கொண்டு செப்பனிட்டுக் கொண்டிருந்தார் திலகர். அந்த மகானுக்கு எந்த வேலை சிறிது,எந்த வேலை பெரிது?

    திலகரைக் காண வேண்டுமென்ற ஆவலினிலா, பாரதியார் தாம் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே போய் விசாரித்தார். திலகர் எங்கே இருக்கிறார் என்று சொல்ல யாருக்கும் தெரியவில்லை. கசந்த மனத்துடன், பாரதியார் குறியில்லாமல், காங்கிரஸ் பாதையில் நடந்து சென்றார்; நூறு ஆட்கள் வரையிலும் பாதையைச் செப்பனிடுவதைக் கண்டார்; கிட்டே நெருங்கினார். குடை பிடித்துக் கொண்டு, தலைமை மேஸ்திரியாக ஒருவர் பாரதியின் பார்வைக்குப் பட்டார். பின்னர் நடந்ததை பாரதியார் பின்வருமாறு என்னிடம் சொன்னார்: "போய்க் கொண்டிருக்கையில்,குடையின் பின்பக்கத்தைப் பார்த்தேன். எதிரே போனேன். அந்த மனிதனுடைய கண்களைப் பார்த்தேன். அவை உயிர்த் தணலைக் கக்கும் குண்டுகளைப் போல் என் பேரில் பாய்ந்தன. ஒன்றும் பேசாமல், அவர் பாதங்களைத் தொட்டு சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தேன்!"

    லோகமான்யரின் தீ விழிகளைக் கண்டவர், பயபக்தி கொள்ளாமலிருக்க முடியாது. இந்தியாவின் சுதந்திர தாகமும் சக்தியும் லோகமான்யரின் அக்கினி ஜூவாலைக் கண்களில் பிரகாசித்ததில் ஆச்சரியம் உண்டா?.."
    -- வ.ரா., மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு நூலில்.வர்த்தமானன் பதிப்பகம் பதிப்பித்தது. பாரதியார் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு என்று நான்கு தொகுதிகள் கொண்ட தொகுப்பொன்றை வெளியிட்டுபெருமை பெற்றது சென்னை வர்த்தமானன் பதிப்பகம். ஜனவரி 2004-ல் நான்கு தொகுப்புகளின் விலை ரூ.167/- மட்டுமே.'நாலடியார்' தொகுப்பு ஒன்றையும் கூட சேர்த்து இலவசமாகத் தந்தார்கள். அற்புதமான தொகுப்பு.
    பாரதியாரைப் பற்றி நாம் அறியவேண்டிய அரிய தகவல்கள் பல உண்டு. 1919-ல் சென்னையில் மகாத்மா காந்தியை பாரதியார் சந்தித்து, தான் நடத்தவிருந்த ஒரு கூட்டத்திற்கு அவரைத் தலைமை தாங்க அழைத்த, அற்புதமான ஒரு சந்திப்பைப் பற்றி வ.ரா. மிக சுவையாக இதில் எழுதியிருக்கிறார்.
    திலகரை எவ்வளவு மேன்மையுடன் பாரதியார் தன் உள்ளத்தில் கொண்டிருந்தார் என்பதற்காக இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடத் தோன்றியது.

    காங்கிரஸ் சோஷலிஸ்டுகளாய் இருந்து பிற்காலத்தில் பிரிந்தவர்களின் தொடர்ச்சியாய்த் திகழ்ந்தவர்களின் பலரின் வீடுகளில் திலகரின் அழகான புகைப்படம் கதர் மாலை சாற்றப்பட்டு நான் பார்த்திருக்கிறேன்.
    ஒரு ஓவல் சைஸ் வட்டத்துள் திலகர் காட்சியளிப்பார்.

    அரவிந்தரிடம் மிகுந்த பக்தி கொண்ட கொடியாலம் வா. ரங்கசாமி அய்யங்கார், வ.ரா.வை அரவிந்தரைக் காண புதுவைக்கு அனுப்புகிறார். வ.ரா. புதுவையில் முதலில் பாரதியாரைச் சந்தித்து பாரதியார் அரவிந்தரிடம் வ.ரா.வை அழைத்துச்செல்ல ஏற்பாடு.
    வ.ரா. அரவிந்தருடனான இந்த சந்திப்பை உணர்வு கொப்பளிக்க எழுதியிருப்பார். இதையெல்லாம் படிக்கையில் ஏற்படுகின்ற ஏக்கத்தையும், நெஞ்சடைக்கும் உணர்வுகளையும் வர்ணிக்க வார்த்தைகளிலில்லை.

    ReplyDelete
  2. வாருங்கள் ஜீவி சார்!

    திலகர் மறைந்த பாரதி ஏன் அவரைப் பாடவில்லை என்று நமக்கு நாமே திட்டம் மாதிரித் தானே கேள்வி கேட்டுக் கொண்டு தானே பதில் சொல்கிற பாணியில் பாரதியை பிரிட்டிஷ் காரர்களுக்குப் பயந்து பதுங்கிப் போனவராகச் சித்தரிக்கும் முயற்சியை இந்தப் புத்தகத்தில் சீனி விசுவநாதன் தெளிவு படுத்தியிருப்பதாகத் தான் திரு வி.மோகனரங்கன் சொல்கிறார்!

    திலகரைப் பற்றிய பாரதி பாடல்கள் இரண்டு இதோ!

    1. வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!
    வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே!

    நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!
    நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!
    ஏலு மனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே!
    எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே!

    கல்வி யென்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் - நல்ல
    கருத்தினால் அதனைச் சூழ்ந்தொர் அகழி வெட்டினான்
    சொல்விளக்கம் என்று அதனிடைக் கோயிலாக்கினான்
    ஸ்வாதந்தர்ய மென்ற தன்மேற் கொடியைத் தூக்கினான்.

    துன்பமென்னும் கடலைக் கடக்கும் தோணி அவன்பெயர்
    சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன்பெயர்
    அன்பு என்னும் தேன் ஊறித் ததும்பும் புதுமலர் அவன்பேர்
    ஆண்மை என்னும் பொருளைக் காட்டும் அறிகுறி அவன்பேர்.

    2. நாமகட்குப் பெரும் தொண்டு இயற்றிப் பன்
    நாட்டினோர் தம் கலையிலும் அவ்வவர்
    தாமகத்து வியப்பப் பயின்றொரு
    சாத்திரக் கடலென்ன விளங்குவோன்
    மாமகட்குப் பிறப்பிடமாக முன்
    வாழ்ந்து இந்நாளில் வறண்டயர் பாரதப்
    பூமகட்கு மனம் துடித்தே இவள்
    புன்மை போக்குவ லென்ற விரதமே.

    நெஞ்சகத்தோர் கணத்திலு நீங்கிலான்
    நீதமேயோ குருவெனத் தோன்றினோன்
    வஞ்சகத்தைப் பகையெனக் கொண்டதை
    மாய்க்குமாறு மனதிற் கொதிக்கின்றோன்
    துஞ்சுமட்டும் இப்பாரத நாட்டிற்கே
    தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும்
    அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
    அன்பொடோதும் பெயருடை ஆரியன்.

    வீரமிக்க மராட்டியர் ஆதர
    மேவிப் பாரத தேவிதிருநுதல்
    ஆரவைத்த திலகம் எனத்திகழ்
    ஐயனல்லிசைப் பால காங்காதரன்
    சேரலர்க்கு நினைக்கவும் தீயென
    நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
    சீரடிக்கமலத்தினை வாழ்த்துவேன்
    சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே.

    ReplyDelete
  3. "உண்மையில் பாரதியின் இந்தச் 'சித்தக்கடல்” நூல்தான் அவனின் புதுச்சேரி வாசத்தை உள்ளது உள்ளபடி நமக்குக் சொல்லிக்கொண்டிருக்கும் காலக் கண்ணாடி; இலக்கிய சாசனம். 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகே பாரதி புதுச்சேரி வந்திருக்கக்கூடும் என்பது பாரதி ஆய்வாளர்களின் முடிவு. அந்தக் காலம் பாரதியின் இலக்கிய வாழ்வில் மிகவும் நெருக்கடியான காலம். அவன் சூரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்ததும் திலகரின் கொள்கையையும், வழியையும் ஆதரித்துத் தம்முடைய 'இந்தியா” பத்திரிகையில் 'எரிமலையாய்...” எழுதிக் கொண்டிருந்தான். அப்போது திலகருக்கு ஆறு வருஷம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திலகர் கோஷ்டியைச் சேர்ந்தவர்களையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் அடக்குமுறைக்கு ஆளாக்கியபோது பாரதி மீதும் அவர் நடத்திய 'இந்தியா” பத்திரிகை மீதும் சென்னை சர்க்கார் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தலைப்பட்டதும் பாரதியின் நண்பர்கள் அவரை உடனே புதுச்சேரிக்குப் போய்விடும்படி ஆலோசனை வைக்கிறார்கள். இந்தச் சமயத்தில் பாரதி, தேச விடுதலைக்காகச் சிறை செல்வதைக் காட்டிலும் கவிதைத் தொண்டு மூலமாக விடுதலை வேள்வியை வென்றெடுக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பப்பட, அதன்படியே அவனும் புதுச்சேரி வர நேர்ந்தது.

    இந்த அரசியல் பின்புலத்தை அறிந்து கொள்ளாது, 'பாரதியார் கோழை, பயங்கொள்ளி என்று சிலர் தவறாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். சிலர் வாய்விட்டும் சொன்னார்கள். பாரதி பயங்கொள்ளி அல்ல. ஒரு மனிதனுடைய உள்ளத்தின் உண்மையான நிலைமையை, அவன் பேசுகிற பேச்சு தெளிவாகக் காண்பித்துவிடும். பாரதியின் எழுத்திலே அச்சத்தை, தாட்சண்யத்தை லவலேசமும் காண முடியாது. நெருக்கடியில் பயப்படுகிறவன் அவன் அல்லன். பாரதி புதுச்சேரி போவதற்குக் காரணம் அவனுடைய நண்பர்கள். நண்பர்களின் யோசனைத் திறனில், பாரதிக்கு எல்லையற்ற நம்பிக்கை. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கிப் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தபின் பாரதி பட்ட கஷ்டங்கள், சிறைக் கஷ்டங்களைக் காட்டிலும் நிரம்ப ஜாஸ்தி என்றுதான் சொல்ல வேண்டும். 'எண்ணெய் காய்கிற இருப்புச் சட்டியிலிருந்து, எரிகிற நெருப்பில் வீழ்ந்த கதையைப் போல ஆயிற்று பாரதியாரின் புதுச்சேரி வாசம்...” என்று பாரதியால் 'தமிழ்நாட்டுத் தேசபக்தன்” என்று அரவிந்தரிடத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட வ.ரா. என்கிற வ. ராமஸ்வாமி ஐயங்கார் தம்முடைய 'மகாகவி பாரதியார்” நூலில் குறிப்பிடுவது பாரதியின் புதுச்சேரி வாழ்வின் இன்னுமொரு இலக்கியப் பதிவு."



    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9140:2010-05-27-20-31-51&catid=1118:09&Itemid=388

    ReplyDelete
  4. பாரதியார் அவர் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரும் புரட்சிக்காரர். கலகக்காரர். காலத்தால் அழிக்க முடியாத கவிதைகளால் கருத்து சொன்ன எழுச்சிக் கவிஞர்.

    பெற்ற தந்தை. கட்டிய மனைவி. உற்ற நண்பர்கள். ஊரார், உறவினர்கள் புரிந்து கொள்ள முடியாத புதுமை மனிதர்.

    ஜாதி, மத, இன வெறி அடக்குமுறைகளை எதிர்த்து உரத்த குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் செயலிலும் காட்டிய சீர்திருத்தவாதி.

    எவரிடத்தும், எந்த ஒரு விஷயத்திற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத கொள்கை பிடிப்பு கொண்ட சுயமரியாதைகாரர்.

    அறிவில் சிறந்த ஆளுமை என்பதால் வாழ்ந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியினராலும், அதற்கு பிந்தைய காலங்களில் தமிழகத்தில் தலையெடுத்த அரசியல் கட்சிகளாலும் தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டு , மறக்கடிக்கப் பட்ட மாமனிதர்.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)