Friday, February 18, 2011

நீ.....! ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் சிறுகதை!

நீ.....

ன்று காலையிலிருந்தே தான் ஆகிய ஜெனி ஏதோ எங்கோ மறந்து வைத்துவிட்டவளைப் போல்தான் பொருந்தாமல் இருக்கிறாள்.


கைவிரல் நகங்கள் கச்சிதமாகக் கடிக்கப்பட்டுவிட்டன. முன்னத்தி மயிர்ச்சுருள் இறுக்கி, நெகிழ்த்தி, இறுக்கிப் பல ஆவ்ருத்தி ஆகிவிட்டது.

பிரபாகரன் அவளுக்குக் காலையில் காப்பிப் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தவனைப் பார்த்து, “நீ...” என்றவள்தான் பிறகு ஒன்றும் பேசவில்லை.  பிரபாகரன் நயமறியும் ஜீவன். ஏதோ எண்ண ஓட்டம் என்று எடுத்துக்கொண்டு அவள் செய்யும் வழக்கமான வேலையை எல்லாம் தானே முடித்துவிட்டான். தெரியும் அவனுக்கு. அவளை இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வேலை செய்யத் தொணப்பினால் பல குளறுபடிகள் நடக்கும்.

வன் சுறு சுறுவென்று வேலை செய்வதை நெட்டுக்குத்தினால் போல் பார்த்துக்கொண்டிருந்தாள் என்றும் சொல்லலாம். ஏதும் அவள் அறியாள் என்பதும் உண்மை. ஆனால் அவன் தடுமாடும் போது தன்னிச்சையாக அவள் வாயும் பழக்கமும் சில உதவிக் குறிப்புகள் கொடுப்பதை வைத்து அவள் மனத்தில் பதிந்திருக்கும் இதெல்லாம் என்பது சொல்ல முடியாது.

பிரபாகரனுக்குப் புதிதில்லை. ஆயினும் அவனுக்கு இது புரிபடவில்லை.
பெரிய அக்கா ஒரு சமயம் அலுத்துக்கொண்ட போதும் அவனிடமிருந்து எந்த உடன்பாட்டுப் பதிலும் இல்லை --- ‘இதுக்குத்தான் வீட்டுல பெரியவா பார்த்துப் பண்ணி வைக்கணும்ங்கறது’

ந்தச் சொல் ஜெனியின் மனத்தில் எப்படி தைத்தது என்று அவனுக்குப் புரியவில்லை. பின்னொரு சமயம் அவள் கேட்டாள் அவனை -- பெரியவா பார்த்து ஒரு பெண்ணை நீ பண்ணிக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா?

பெரிய அக்கா கிடக்கிறா விடு!

ன் பெரிய அக்காவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

வள் சொன்னதைத்தானே நீ கேட்கிறாய்?

ல்லை. எனக்குத் தெரியாது அவள் சொன்னாளா என்று. ஏதோ எனக்குத் தோன்றியது.

வள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்வது சரி என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் பிரபாகரன்.

ன்? இவ்வளவு மாவு இருக்கிறதே. எதற்கு இப்பொழுது மீண்டும் ஊறப்போட்டாய்?’

'ல்லை. மிகவும் புளித்துப் போய்விட்டது. அது வேண்டாம். '

வனோடு ஏற்பட்ட முதல் சந்திப்பு. பால் பூத்திலா? இல்லை எதாவது நிச்சயம் ஏதோ கடையில்தான். என்னமோ ஒரு துள்ளல். இவனே வேறு மாதிரிதான் தெரிந்தான். அதுதான் இவனா? அல்லது இவன் தான் அதுவா? இது ஒன்றும் புரிந்து கொள்ள சுளுவாய்த் தெரியவில்லை. அக்கறை அன்பு கடமை பொறுப்பு இதில் எல்லாம் ஒன்றும் குறைவு இல்லை.
லட்சியக் கணவனா என்பது அநாவசியக் கேள்வி. நம்முடைய வாழ்க்கையை  வேறு எங்கோ மாட்டிவைத்து ஒப்பிடுவது. ஆனால் அன்று நம் கண்ணுக்குப் பட்ட அந்தக் காதலன்...என்ன ஆனான்? அல்லது நாமும்தான் அவன் கண்ணுக்கு அப்படித்தானோ?

ரொம்பப் பண்ணாத! தலைமுடி உதிரும் பார்த்து......

ரி காதல் என்பதுதான் என்ன? உடல் இச்சைக்கு உள்ளம் பூசும் சாயமா? அப்படி என்றால் உடலோடு போய்த் தொலையாமல் உள்ளத்தை இந்தப் பாடு படுத்துவானேன். அன்று தேவ குமாரனாய்க் காட்சி தந்தவன் இன்று ஏன் மடைப்பள்ளி பரிசாரகன் போன்று ஆகிவிட்டான்? அவனுக்குத் தான் செய்யும் எந்தப் பணிவிடையிலும் அவன் தனக்குச் செய்ய என்றும் சளைத்தவனில்லை என்றாலும் அந்தக் காதல் மனிதன் மறைந்தவன் தான். காணவில்லை.

த்தனைக்கும் அன்று, காதல் காலத்தில் பேசிய பேச்சு எல்லாம் பிதற்றல். இன்றோ உளறாமல், தடுமாறாமல் எந்தச் சூழலையும் சமாளிக்கும் நேர்த்தி மிக்கவன். ஆனாலும் அந்தப் பிதற்றலில் திகழ்ந்த வாழ்வின் ஆழம் அடிமண் இட்டுப்போய் வாழ்வே கணுக்கால் அளவு ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

'சாப்பிட்டுவிடு. ஆறுகிறது பார். மறுபடியும் கொஞ்சம் சூடு பண்ணிவிடவா?'

'இல்லை. இப்படியே இருக்கட்டும். '

ல்லாப் பெண்களின் வாழ்விலும் இப்படித்தானோ? காதலன் ஒரு தோற்ற மயக்கம் தானோ?

ண்ணுக்கு மையிட்டுக் காணும் மயல் காட்சியோ? முன்னொரு முறை இதைப் பற்றி வினவியபொழுது வாழ்க்கை வேறு, கற்பனை வேறு என்று சொல்லிப் போய்விட்டான். ஆனால் அந்தக் காதலனை விரும்பித்தானே நான் இவனை மணந்தேன். அவன் மறைந்து போன இவனின் மிச்ச வடிவத்தை வைத்து வாழ்வு ஓடுவதை எப்படிச் சீரணித்துக்கொள்வது? எல்லாப் பெண்களுமே இப்படிக் காதலனை இழந்து இப்படிக் கொடுப்பினை இருந்தால் பரிசாரகனுடனோ அல்லது துரதிருஷ்டம் என்றால் பாதகனுடனோ தான் காலம் தள்ளுவர் போலும்.

தியிலிருந்தே அப்படித்தானோ? அதனால்தான் வாழ்வின் முடை நாற்றங்களில் சிக்காத நித்திய கற்பனையாக, கற்பனைக்கும் எட்டாத நிதய காதலனாக கிருஷ்ணனை வைத்தார்களோ? ஆம் !

வன் ஒருவன் தான் காதலனாக இருக்க முடியும். மனிதர்கள் எப்படிக் காதலர்களாக இருத்தல் கூடும்? இங்குதான் நடைமுறை என்னும் தரைமட்டப் பிசாசு அனைத்துக் காதல்களையும் துடைத்துவிடுகிறதே. ராதையும் உலகத்தைச் சேர்ந்தவள் இல்லை. கிருஷ்ணனும் உலகத்தைச் சேர்ந்தவன் இல்லை. காதல் என்பதே உலக சமாச்சாரம் இல்லை.

கையை அலம்பிண்ட்ரேன், காயறது பாரு.....  ஹலோ....ஜெயபத்மாசினி...

ஹாங்....

ப்ப காதல் என்பதை யார் தமக்குள் நிரந்தரமாகக் குடிகொள்ள வைத்து விடுகிறார்களோ அவர்களிடத்தில் கிருஷ்ண பிரஸன்னம் என்று கொள்ளலாமா?  ராதையின் லீலை என்று சொல்லலாமா? ஆனால் பாவம், இந்த ஆண்பிள்ளைகள் அச்சுப் பிச்சுக்கள் பாவம்!

மக்காவது காதல் என்பதற்குக் காதலன் தெய்வம் இருக்கிறது. இதுகளுக்குக் காதலி தெய்வம் எங்கிருக்கிறது? எல்லாம் அம்மா அம்மா என்று சொல்லிக் காதலியைத் தெய்வமாக்குவதில் கோட்டை விட்டுவிட்டதுகள். ஏதோ பாரதியே கஷ்டப்பட்டுக் கண்ணம்மா என்றெல்லாம் சொன்னாலும் மரபில் வரவில்லையே! ஒரு வேளை காதலி தெய்வம் ஏற்படாத காரணம்தானோ இதுகள் எல்லாம் கல்யாணத்திற்குப் பிறகு மண்ணாந்தைகளாய் ஆகி விடுகின்றன. ச ... ரொம்ப பாவம்... !

ன்ன ஒரே யோசனை? இப்படியேவா உட்கார்ந்துண்ட்ருக்கப் போற?

'ம் இல்லல்ல........... நீ.... சாப்பிட்டாயா? '

ரிதான். இவ்வளவு நேரம் நீதானே பரிமாறினே..... சரி வா தூங்கு. ராத்திரி கண் முழிக்காத.

....................................

ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்!  என்னுடைய இரண்டு வலைப்பதிவுகளிலும் இவரைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறேன். மோகனத்தமிழை வியந்து கொண்டாடி இருக்கிறேன்.

"கதைசிறுத்தாலும்..." சிறுகதை எப்படி உருவாகிறது என்பதை  தமிழ் வாசல் கூகிள் வலைக் குழுமத்தில் ஒரு அட்டகாசமான ஒரு விவாத இழையாகத் தொடங்கினார். இதை ஏற்கெனெவே ஒருபதிவில் சொல்லியிருந்தேன். அந்தத்தருணத்தில் விவாத இழைகளைக் குழும உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்று இருந்தது, இன்று முன்னிரவு முதல் எவரும் பார்க்கலாம்,  படிக்கலாம் என்று பொதுவெளியில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது சிறு கதை என்ற இழையைத்தொடங்கி....மூன்று  சிறுகதைகள்! மனிதன் கலக்கிக் கொண்டிருக்கிறார்! அதில் முதல் சிறுகதை இது!

சிறுகதை வடிவம் பொருந்தி வந்திருக்கிறதா? என்ன சொல்கிறீர்கள்?


5 comments:

 1. கதை அருமை.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. திரு.சரவணன்!

  கதை அருமை! அவ்வளவுதானா?!!

  :-)))

  ReplyDelete
 3. //சிறுகதை வடிவம் பொருந்தி வந்திருக்கிறதா? என்ன சொல்கிறீர்கள்?//

  எழுதியவருக்குப் பிடித்திருந்தால் சரி. இதில் சொல்வதற்கு எதுவொன்றும் இல்லை என்றே படுகிறது.

  நாலு பக்க சிறுகதையையும் ஈடுபாட்டோடு படித்திருக்கிறோம். 'சுயதரிசனம்' போன்ற ஜே.கே.யின் நீண்ட பல சிறுகதைகளையும் சுவாரஸ்யத்தோடு படித்திருக்கிறோம். 'இது இப்படித்தான் இருக்க வேண்டும்; 'இது' என்றால் இப்படித்தான் எழுத வேண்டும்' என்று வரையறை யோடு எந்த சட்டத்திற்குள்ளும் யார் அடைத்தாலும் இலக்கியம் என்பது திமிறத் தான் செய்யும்.

  அவரவருக்கு வசதியாகத் தெரிவதை அந்தந்த காலத்து அவரவர் தூக்கிப் பிடிக்கவே செய்கின்றனர்; Multi Purpose Project- மாதிரி பலதரப்பட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு உண்டு. காலத்தின் ஓட்டம், பத்திரிகைகளும் சரி, எழுதுகிறவர்களும் சரி, அவர்கள் சொன்னதை அவர்களே மீறவும் வைக்கிறது. எத்தனையோ பார்த்து விட்டோம்.

  கால ஓட்டத்திற்கேற்பவான மாற்றங்கள் நாம் அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் பீடிக்கிற மாதிரி, இலக்கிய முயற்சிகளிலும் தன் தடத்தைப் பதிக்கிறது. இதற்கெல்லாம் பல்வேறுபட்ட மனிதர்கள், அவர்களின் தேவைகள் இதெல்லாம் தாம் காரணமே தவிர, 'இந்தச் சட்டையைத் தான் இதற்குப் போடவேண்டும்; அந்த சட்டை இப்படித்தான் தைத்திருக்க வேண்டும்' என்று எதுவொன்றும் இல்லை. திடீரென்று புதுமாதிரி ஒரு சட்டையைத் தரித்து ஒருவன் உலாவந்தால், அந்த சட்டை பலருக்குப் பிடித்திருந்தால், அப்படி சட்டையைத் தைத்துப் போட்டுக் கொள்வது ஒரு காலகட்டத்திற்கு க்யாதிபெற்று உலாவருகிறது.
  அவ்வளவு தான். ஓடுகிறவரை தான் இந்த ஓட்டம்.
  அது பழசாகிப் போவதை அதுவே எதிர்பார்த்துத் தான் அதுவே ஓடுகிறது.

  அதனால், இதையெல்லாம் யாரும் எந்த காலத்தும் நிர்ணயிக்க முடியாது என்கிறேன்; அவ்வளவுதான்.

  ReplyDelete
 4. வணக்கம் ஜீவி சார்!

  இந்தப்பதிவின் கடைசியில் கதை சிறுத்தாலும், சிறுகதை என்று என்று இழைகளின் லிங்க் இருக்கிறது. முதல் லிங்கில் சிறுகதையைப் பற்றி, அதன் உள்ளடக்கம் என்று நிறைய விஷயங்கள் ஓர் விவாத இழையாக ஓடியது இருக்கிறது. இன்றைக்கு இணையத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்த அத்தனைபேருக்குமே சிறுகதை எழுதிக் குவித்துவிடும் ஆசை உள்ளூர இருக்கத்தான் செய்கிறது.

  இந்த இரண்டு இழைகளிலும் வந்து பார்த்துவிட்டு, அப்புறமாகச் சொல்லுங்களேன்!

  ReplyDelete
 5. அந்த இழைகளைப் படித்துவிட்டுத் தான் இங்கு வந்து எழுதினேன், எஸ்.கே. சார்! சொல்லப் போனால், இந்தப் பதிவை நீங்கள் பதிந்த பொழுதே அவற்றைப் படித்து விட்டேன். இப்பொழுதும் புதிதாக யாராவது ஏதாவது சொல்லியிருக்கிறார்களா என்று தெரிந்து எழுத வேண்டுமென்கிற கடப்பாட்டில் மறுமுறை படித்துவிட்டு எழுதுகிறேன்.

  இந்த மாதிரியான குழும இழைகள் எந்த கருத்தையும் கோர்வையாக அடியொற்றி அடியொற்றி சொல்வதற்கு இடம் கொடுப்பதில்லை. இடையில் யாராவது விளையாட்டாக இழுத்த இழுப்புக்குக் கூட இணங்கி வேறு திசையில் பயணிப்பதால், எழுதுகிறவர் என்ன நினைத்து எழுதுகிறாரோ அந்த எதிர்பார்ப்புகள் கூட நிறைவேறாமல், சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் போய்விடுகிறது.

  விவாதத்தில் சிந்தனைக்குட்படுத்தும் கருத்துக்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பின்னூட்டங்களும், அந்தப் பின்னூட்டங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு பதிலளிக்கிற வகையில் தான் விவாதிக்கிற விஷயத்தை மேலும் கூர்மையாக முன்னெடுத்துச் செல்வது. இல்லையா?..

  இந்தமாதிரியான விவாதங்களில் விவாதத்தை எழுப்புவரும், எதிர்கொள்கிறவரும் சம கோட்டில் பயணிக்கிற மாதிரி விவாதத்தைச் செழுமையுடன் எடுத்துச் சென்றால், படிப்பவருக்கு புதுப்புது தகவல்கள் கிடைப்பதற்கு வழிவகைகள் தன்னாலே ஏற்படும். அதே நேரத்தில் அந்த விவாதத்தின் பல்வேறு முகங்கள் அலசப்பட்டு வெண்ணை திரண்டு வந்த மாதிரி முழுமையான கருத்து செழித்துக் கண்ணுக்குப் புலப்படும்.

  அதனால், உங்கள் பதிவில் நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு பின்னூட்டமிட வேண்டுமென்கிற ஆவலில் எழுதினேன்.

  மிக்க நன்றி, சார்!

  ReplyDelete