Tuesday, December 9, 2014

காண்பதெல்லாம் உண்மையல்ல! No one is what they seem!


குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டருக்கே என்று ஆரம்பித்து கேட்கிற கேள்வி அந்தநாட்களில் ரொம்பவுமே பிரபலம்! வீடியோவில் இரண்டாவது நிமிடத்தில் இருந்து அந்த கேள்வியை, கேட்டுவிட்டு ஓமகுச்சி நரசிம்மன் படுகிற பாட்டையும் இங்கே பார்க்கலாம்,
ஆனால் அதே மாதிரி ஒரு சிச்சுவேஷனில் எட்கார் ஆலன் போ என்கிற  ஒரு அமெரிக்கக் கதாசிரியர் "The System of Dr. Tarr and Prof. Fether" என்றொரு கதை எழுதியிருப்பது Stonehearst Asylum என்கிற திரைப் படத்தைப் பார்க்கிற வரை தெரியாது. 1890 களில் இங்கிலாந்தில் விக்டோரியா ராணி காலத்துப் பின்னணியில் ஒரு மனநலக் காப்பகத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மனநலம் பிறழ்ந்தவர்களுக்கு அந்த நாட்களில் அளிக்கப்பட்ட கொடூரமான சிகிச்சைமுறைகள் கொஞ்சம் கோடிட்டுக் காட்டப் பட்டாலும் பயமுறுத்துகிற படமாக எல்லாம் இல்லை.

ஒரு வகுப்பறையில் மனநலம் பிறழ்ந்தவர்கள் பற்றியான லெக்சருடன் திரைப்படம் தொடங்குகிறது. எலைசா கிரேவ் என்கிற புத்திசுவாதீனமற்ற இளம் பெண்ணை வகுப்பறைக்கு அழைத்து வந்து அவளுடைய கேஸ் விவரிக்கப் படுகிற நேரத்திலேயே அவள் தனக்கு ஒன்றுமில்லை, காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறாள். ஒருவிதமான வலிப்புடன் அவள் மயக்கமுற பிரெண்டன் க்ளீசன் (நடிகர்)  அந்த நோயாளியைப் பற்றிக் கொஞ்சம் சொல்வதுடன் காட்சி முடிகிறது.


கிறிஸ்துமசை ஒட்டி பனிப்பொழிவில் ஸ்டோன்ஹெர்ஸ்ட்  அசைலம் அடுத்த காட்சியாக விரிகிறது. எட்வர்ட் நியூகேட் என்கிற மருத்துவர்  வசதி படைத்தவர்களுக்கான இந்தமனநலக்காப்பகத்தை நடத்தி வரும் டாக்டரிடம் அவருடைய சிகிச்சை முறைகளைத்தேரிந்து கொள்வதற்காக வந்து சேர்கிறார். முதல் காட்சியில் அறிமுகமான எலைசா கிரேவ் அங்கே இருக்கிறார். டாக்டர் சிலாஸ் லாம்ப் கொஞ்சம் புரட்சிகரமான சிகிச்சை முறைகளைக் கையாள்கிறார். தன்னை ஒரு குதிரையாகக் கற்பனை செய்து கொள்ளும் ஒரு வசதி படைத்தவர், உறவினர்களுக்கோ சங்கடம் ஆனால் இந்தக்காப்பகத்தில் அப்படியே இருக்கும் சுதந்திரம். கதாநாயகியின் கதையும் அதே போலத்தான். எலைசா கிரேவுக்கு பியானோ வாசிப்பதில் ஈடுபாடு, எவ்வளவு நேரம்ஆனாலும் வாசித்துக் கொண்டிருக்க அனுமதிக்கப்படுகிறார். இப்படியே ஒவ்வொரு நோயாளிக்கும் அவரவர் இஷ்டப்படியே நடந்து கொள்ள சுதந்திரம். மருத்துவர் எட்வர்ட் நியூகேட் நோயாளி எலைசா கிரேவ் மீது மையல் கொள்கிறார்.

அடுத்து முதல் திருப்பமாக முதலில் டாக்டர் சால்ட் வசமிருந்த அந்தக் காப்பகம் டாக்டர் சிலாஸ் லாம்ப் வசமாகிவிட்டதும் டாக்டர் சால்ட் உட்பட அவருடைய உதவியாளர்கள் எல்லோருமே கீழே பாதாள கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும் எட்வர்டுக்குத் தெரிய வருகிறது. டாக்டர் சிலாஸ் லாம்ப் அங்கே சிகிச்சை பெற்று வந்த மனநோயாளி என்பதும் தெரிய வருகிறது.கீழே அடைபட்டிருப்பவர்களை விடுவிக்க எட்வர்ட் உதவுவதாக முடிவு செய்து எலைசாவிடம் அவளுடைய ஒத்துழைப்பையும் கேட்கிறார்.  முதலில் அவரை நம்ப மறுக்கும் எலைசா அவளிடம் காதலில் விழுந்தே தேடி வந்ததாகச் சொல்கிற கட்டம் நன்றாக இருக்கிறது.

இதற்கிடையே கீழே அடைப்பட்டிருந்தவர்களில் இருவர் வெளியே தப்பித்துச் செல்கையில் டாக்டர் சிலாஸ் லாம்பின் ஆட்கள் ஒருவரை சாகவிட்டு, இன்னொருவரைத் திரும்பக் கொண்டுவருகிறார்கள். கதாநாயகன் எட்வர்டும் வில்லன்களிடம் சிக்கிக் கொண்டு எலெக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்டுக்குத் தயார் செய்யப்படுகையில் கதாநாயகியின் உதவியோடு தப்புகிறார் டாக்டர் சிலாசாக இருந்தவர் பழையபடியே மனநோயாளியாக.

இப்போது, க்ளைமாக்சில் எதிர்பாராத அடுத்த திருப்பம். இந்தக் காப்பகத்தை பரிசோதிக்க டாக்டர் எட்வர்ட் நியூகேட் என்று சொல்லிக்கொண்டு ஒரு உதவியாளருடன் இன்னொருத்தர் வந்து சேர்கிறார் அப்படியானால்,முதலில் வந்த எட்வார்ட் நியூகேட் யார்,கதாநாயகியை முதன்முதலில்  எங்கே எப்படிப் பார்த்தார் எப்படிக் கண்டவுடன் காதல் வந்து தேடிக்கொண்டு வந்தார் என்பது ரொம்பவும் சுவாரசியமாகச சொல்லப் பட்டிருக்கிறது இந்த ஒரு சுவாரசியமான திருப்பத்துக்காக மட்டுமே திரைப் படம் எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது என்று நினைக்கிறேன் படத்தைப்  பார்த்துவிட்டு அது சரிதானா என்பதை நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்!

1 comment:

  1. சொல்லிப்போன்விதம் படம் பார்க்கும்
    ஆர்வத்தைத் தூண்டிப்போகிறது
    அவசியம் பார்த்துவிடுவேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete