Friday, February 8, 2019

டில்லி பாதுஷாக்களும்! திருக்குவளைச் சோளர்களும்!

டில்லியில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன? தெரியுமா? 
இது இந்திரஜால் காமிக்ஸில் வந்த ஒரு பீர்பால்  கதை! டில்லி 
பாதுஷாக்களுக்கு இப்படிப்பட்ட சந்தேகங்கள் தான் எப்போதும்  வரும்போல! இங்கே ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் பீர்பால் கதைகளைத் தொட்டு நடப்பு அரசியலோடு சொல்லிக் கொண்டிருந்ததை, மறுபடி ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதோ?  
Private Citizen  என்று காங்கிரஸ் கட்சியால் .சொல்லப்பட்ட சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா மணிலாண்டரிங் விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு இரண்டுநாட்கள் தொடர்ந்து SPG பாதுகாப்பு பரிவாரங்களுடன் ஆஜரானார்  


நேரு இந்திரா வாரிசுகள் இங்கே டூப்ளிகேட் காந்திகளாக, ஆட்சியில் இல்லாத போது கூட SPG பாதுகாப்பு பரிவாரம் புடைசூழ, அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜரான படங்களைப் பார்த்தீர்கள் இல்லையா? எந்த ஊழல் விசாரணையானால் என்ன எங்களை யார் அசைத்துவிட  முடியுமென்ற மிதப்பு டில்லி பாதுஷாக்களாக தங்களை நினைத்துக்கொண்டு இருப்பவர்களிடம் தெரிகிறதுதான்!


       
ஒருநாள், பாதுஷா அக்பருக்கு  திடீரென்று ஒரு சந்தேகம் வந்து விட்டது!ராஜா, பாதுஷா என்றாலே இப்படித்தானே என்கிறீர்களா? அதுவும் உண்மைதான்! இந்த மாதிரியான ஆசாமிகளுக்கு  வருகிற சந்தேகங்களே  கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருக்கும். இங்கே மதுரையில் இப்படித் தான் ஒரு வேலைவெட்டி இல்லாத பாண்டியனுக்கு  திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது! பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டா இல்லையா என்று!  அப்புறம் என்ன  ஆயிற்றென்பது, ஏ பி நாகராஜன் 'சங்கறுப்பது எங்கள்  குலம் சங்கரனார்க்கேது குலம்' என்று வசனம் எழுதுகிற காலம் வரையும், அதையும் தாண்டியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறதென்பது தெரிந்ததுதானே!

ஆக ஒரு விஷயம் தெளிவு! இப்படி உருப்படாத விஷயங்களில் தான் நம்மூர் ராஜாக்கள், பாதுஷாக்கள், மனுநீதிச் சோழர்களுக்கு சந்தேகமே வரும்!

ஆமாம் சாமிகளா! அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் பெருத்த சந்தேகம்! நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள்  என்று ஒரு பெரிய துதிபாடிக் கும்பலே இருக்கிறதே!  வேடிக்கை பார்க்க  மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி அவ்வப்போது நடத்தும் தர்பாரும் உண்டு! இது போதாதா? 

தர்பாரில் அக்பர் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்கிறார். "உலகத்தில் குருடர்கள் எண்ணிக்கை எவ்வளவு?" 

ரொம்ப முக்கியமான கேள்வி! கேள்வியில் என்ன இருக்கிறது, ராஜா வாய்திறந்தாலே அது முக்கியம் தான்! ராஜா மனம் குளிருகிற மாதிரிப் பதில் சொல்லி விட்டால், இலவச வீட்டு மனை,   வரி, வட்டி ஏதுமில்லாத ஜாகிர்கள், தப்பாமல் பிறந்தது அப்பனா அல்லது குப்பனா இந்த மாதிரி  துதிபாடும் கூட்டத்தில் நிரந்தர உறுப்பினர் பதவி, அதன் முன்-பின் சௌகரியங்கள் எல்லாம் வந்து சேருமே என்று சபையில் உள்ள ஒவ்வொருவரும் பதில் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்கள் எல்லோரும் சொன்ன பதிலின் சாராம்சம் இது தான்.

உலகம் பெரிது. அதனால், துல்லியமான எண்ணிக்கையைச்  சொல்வது கஷ்டம். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்! கண் பார்வை உள்ளவர்களோடு ஒப்பிடும்போது, குருடர்களுடைய எண்ணிக்கை சொற்பம் தான்!

தர்பாரில் அனேகமாக எல்லோருமே கருத்துச் சொல்லியாகி விட்டது. ஒரே ஒருவர் மட்டும் எதுவும் சொல்லவில்லை. அவர் பீர்பால்! மகேஷ் தாஸ் என்ற இயற் பெயருடன் இருந்தவர் அக்பரின் தர்பாரில் ராஜா பீர்பால் ஆனார்!  புத்திசாலி! புத்தியுள்ளவர்கள் அமைச்சராக இருந்தது அந்தக் காலம்! ஒளிவு மறைவு இல்லாமல் தன்னுடைய மனதில் பட்டதைத் தெளிவாகச் சொல்கிற குணம் பீர்பாலிடம் இருந்தது. அதைக் கண்டு அக்பருக்கே கொஞ்சம் பயம்! ஏன் பயந்தார் என்பதை ஏற்கெனெவே இங்கே கதையாகப் பார்த்திருக்கிறோம்!

எல்லோரும் கருத்துக்களைச் சொன்ன பிறகும் கூட பீர்பால் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தது, அக்பருக்கே கொஞ்சம் உறுத்தலாக இருந்திருக்க வேண்டும். என்ன தான், ஒவ்வொருவரும் ஒரு நூறு தரம் பாராட்டு விழா எடுத்து நனைய விட்டாலும், கொஞ்சம் காய்வதற்கு வெய்யிலும் வேண்டியிருக்கிறது இல்லையா? இல்லையென்றால் ஜன்னியல்லவா வந்துவிடும்! 

 பீர்பால், நிச்சயமாக இவர்கள் சொன்னதற்கு நேர்மாறாகத் தான் சொல்வார் என்பது தெரிந்திருந்தாலும், என்ன தான் சொல்லப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள, அக்பருக்கே கொஞ்சம் ஆசை வந்து விட்டது. "பீர்பால், நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே!"

"நான் சொல்லி என்ன ஆகப் போகிறது, பாதுஷா! குருடர்களே நிறைந்திருக்கும் உலகத்தில், பார்வையுள்ளவர்களைக் கண்டுபிடிப்பது தான் கஷ்டம் என்று எனக்குப் படுகிறது! பார்க்கத் தெரியாதவர்களிடம் போய்ப் பார்வை அல்லது பார்ப்பது என்றால் எப்படியிருக்கும் என்பதை எப்படிச் சொல்வது? அதனால் தான் மௌனமாக இருந்து விட்டேன்!"


பாதுஷாவுக்குக் குழப்பம்! "பீர்பால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இங்கே சபையில் உள்ளவர்களையும் சேர்த்து, பெரும் பாலானவர்கள் குருடர்கள் தான் என்று சொல்ல வருகிற மாதிரித் தெரிகிறதே!" என்றாராம்.

"வருகிறமாதிரித் தெரிகிறதே என்ன பாதுஷா,  சொன்னது அப்படித்தான்!" ஒரே போடாக பீர்பால்போட்டு விட்டு உட்கார்ந்து கொண்டார். 


அக்பருக்கு இன்னும் குழப்பம், பாழாய்ப் போன சந்தேகத்தைக் கேட்டே இருக்கக் கூடாதோ? இந்த பீர்பால் இன்னமும் குழப்புகிறான். எதையாவது எசகு பிசகாகக் கேட்டு, அவனும் எடக்கு மடக்காகப் பதில் சொன்னால் தர்பாரிலேயே மானம் போய்விடுமே! 

பயந்தவனுக்கும், முட்டாள்களுக்கும் ஒரே நொண்டிச்சாக்கு, எப்படி என்று நீயே சொல்லேன் என்று தங்களுக்கு சொல்லத் தெரியாது என்பதை மறைத்து, "எனக்குக் கேக்கத் தான் தெரியும்! நானே கேக்கறேன்!" என்ற ரீதியில் கேள்வியாகத்தானே வரும்!

"பீர்பால்! அப்படியானால் என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறீர்களா?" அக்பருக்கு நப்பாசை! பாதுஷா என்பதால் எக்செம்ப்ஷன் கிடைக்கலாம் அல்லவா!

பீர்பால் எவருக்கும் எக்செம்ப்ஷன் கொடுக்கிற மாதிரி இல்லை! "ஆமாம் பாதுஷா! நமக்கெல்லாம் கண் பார்வை இருக்கிறது, பார்க்கத் தெரியும் என்று நாம் தான் நம்பிக் கொண்டிருக்கிறோம்! ஆனால், உண்மை அப்படி இல்லை!"

"நிரூபிக்க முடியுமா பீர்பால்? நீங்கள் உங்கள் எல்லையை மீறிப் பேசிக் கொண்டிருக்கிற மாதிரித் தெரிகிறது!" அப்பாடா! கேள்விக்குப் பதிலைச் சொல்கிற பொறுப்பு இனி பீர்பாலுடையது!

"இப்போதே பாதுஷா!" என்று நிரூபிக்கத் தயாராகிறார் பீர்பால். ஒரு நீளமான துணியை எடுத்துத் தலைப்பாகையாகச் சுற்றிக் கொண்டு "பாதுஷா! சபையோர்களே! இது என்ன?" என்று கேட்கிறார்,

தலைப்பாகை! தலைப்பாகை! என்று எல்லோரும் விடை சொல்கிறார்கள்.

துணியைப் பிரித்து, கழுத்தில் மடித்து தொங்கவிட்டு, "சபையோர்களே! இப்போது இது என்ன?" என்கிறார் பீர்பால்.

"சவுக்கம்! செர்வானியோடு அணிகிற கழுத்துக் குட்டை" 

மறுபடியும் துணியை பிரித்து இடுப்பில் கட்டிக் கொண்டு "சபையோர்களே! இப்போது இதன் பெயர் என்ன?" என்கிறார் பீர்பால்.

"லுங்கி! அல்லது வேட்டி!" வெறித்தனமாகக் கூச்சல் இடுகிறது சபை! ஏதோ இப்படி ஒரே வார்த்தை சொல்லி விட்டால் ஓகோவென்று வாழ்க்கை அமைந்துவிடும் என்று அவர்களுக்கு சூரியன் குடும்பம் நிகழ்ச்சி நடத்திச் சொல்லித்தராமலேயே அப்படி ஒரு கூச்சல்!

"பாதுஷா! சபையோர் சரியான விடைதான் சொன்னார்கள் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?" என்று அக்பரைக் கேட்டார் பீர்பால். அக்பருக்கு ஒரே ஆச்சரியம்! சபையோடு தானும் சேர்ந்து கூச்சலிட்டுப் பதில் சொன்ன பிறகும் பீர்பால் இப்படிக் கேட்பது எதற்காக?

"அதில் என்ன சந்தேகம் பீர்பால்? சபை மட்டுமல்ல, நானும் அந்த விடைகளைத் தான் சரியானதென்று சொல்கிறேன்!"

"அப்படியானால் பாதுஷா, நான் சொன்னேனே, நாம் அனைவருமே பெரும்பாலும் குருடர்களாகத் தான் இருக்கிறோம் என்று! அதுவும் சரியானது தான்!" பீர்பால் சொல்லிவிட்டு மறுபடி தன்னுடைய ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டார்.

அக்பருக்கு வியப்பு, ஆச்சரியம், கோபம்! எதை முதலில் கொட்டுவது என்பதிலும் குழப்பம், சந்தேகம்! ஒரு சந்தேகமே இன்னும் தீர்ந்தபாடில்லை, இப்போது இந்த சந்தேகத்தையும் முன்வைத்தால், முட்டாள் பட்டம் நிச்சயம்! ஆனால், பீர்பால், என்னதான் சொல்ல வருகிறான்?பாதுஷா  மண்டைக்கு எட்ட மாட்டேன் என்கிறதே! மானாட, மயிலாட என்று பார்த்துக் கொண்டே இருந்ததில், எல்லாமே மசங்கித் தான் போய்விட்டது!சபையில் இருக்கிற  அனைவரும்  கூட்டத்தோடு கூட்டமாக துதிபாடத் தான் லாயக்கு! தனியாக, சொல்லச் சொல்லிக் கேட்டால், இம்சைஅரசன் படத்தில் ராஜாதி ராஜ என்று துதி ஆரம்பித்து இடையிலேயே மறந்து போய்த் தலையைச் சொரிந்து கொண்டு நிற்கிற கூட்டம் மாதிரித் தான்!  பரிதாபமாக பீர்பாலைப் பார்த்தார் அக்பர்.

"பாதுஷா! எல்லோரும் பார்த்தார்கள், நீங்களும் பார்த்தீர்கள்! இருந்தது ஒரே பொருள் தான்! ஒரு பத்துமுழத் துணி! ஆனால் யாருக்கும் அது துணி என்று சொல்ல முடியவில்லை! தலையில் கட்டினால் முண்டாசு, இடுப்பில் கட்டினால் வேட்டி என்று தான் சொல்ல முடிந்தது. இடம் மாறியதும் பெயரும் மாறிவிட்டது! பெயர் வேறானால், பொருளும் வேறுதான் என்று ஆகிறதல்லவா? 


அதைத் தான் சொன்னேன், பார்ப்பதாக நாம் நினைக்கிறோம்! ஆனால், நாம் பார்த்துப் புரிந்து கொள்வதென்னவோ வேறாகத் தான் இருக்கிறது! அப்படி, இருப்பதைப் பார்க்க முடியாத பார்வை, இருந்தும் இல்லாததுபோலத்தான் இல்லையா? இப்போது சொல்லுங்கள்! உலகத்தில் குருடர்கள் எண்ணிக்கைதான் அதிகம்! உண்டா, இல்லையா?"

சபை இப்போது பாதுஷா இருப்பதை, பாதுஷாவைக் குளிரச் செய்வது மட்டுமே தங்களுடைய வேலை என்று செயல்பட்டதை  மறந்து விட்டது. பீர்பால் சொன்னது சரிதான்!ஆமாம், ஆமாம் என்றது. பாதுஷா மட்டும் வேறு என்ன சொல்லிவிட முடியும்?

அக்பர் மனதுக்குள் கருவிக் கொண்டார். பீர்பால் நீ புத்திசாலிதான்! ஆனால், என்றைக்காவது ஒரு நாள், நீ என் முன்னால் மண்டியிட்டுக் கெஞ்சத் தான் போகிறாய்!  அப்படி ஒரு நாள் வராமலா போய்விடும்?

பீர்பால் அக்பரைப் பார்த்துச் சிரித்தது, தன்னுடைய  மனவோட்டத்தைப் புரிந்துகொண்டதால்தான் என்று அக்பருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் முளைத்தது. சந்தேகமெல்லாம், இப்போதே அதைக் கேட்கலாமா, வேண்டாமா என்பது தான்!
இப்போது, பாதுஷாவுக்கு அடுத்த குழப்பம் ஆரம்பித்து விட்டது. 


 

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)