Pages

Sunday, April 25, 2010

மதுரை மீனாட்சிக்குக் கல்யாணம்!

மலையத்துவசன் என்று ஒரு பாண்டிய ராஜா!

நீண்ட நாட்களாகப் பிள்ளை இல்லை. தவமிருந்து, அப்புறம் ஒரு பெண் பிள்ளை பிறந்தது..பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்களோடு பிறந்த பெண்பிள்ளையைப் பார்த்து, ஐயோ, இப்படி இருக்கிறதே என்று பாண்டியன் கலங்கினானாம்! இந்தப் பெண்பிள்ளை வளர்ந்து பெரியவளானால் யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கவலை வாட்ட ஆரம்பித்தது. அசரீரியாக, "வருந்தாதே! அவளுக்குத் திருமண நேரம் வரும்போது, அவளைத் தேடி மணாளன் வருவான். அவனைப் பார்த்ததுமே, மூன்றாவதாக இருக்கும் ஸ்தனம் மறைந்துவிடும்!" என்று ஆறுதல் சொல்லியுமே கூட, மன்னனுக்குத் துயரம் தாங்கவில்லை. அந்தக் கவலையுடனேயே மரணமடைந்தான்.

கண் ஊஞ்சல் ஆட்டினாள் காஞ்சனமாலை என்று தாலாட்டுப் பாட்டெல்லாம் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை
, மீனாக்ஷி பெரிய ராவடியாகவே இருந்தாள் என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது. இப்படித் தாலாட்டுப் பாடியே, அவளை ராவடியாக்கி விட்டார்களோ?!

ஒவ்வொருத்தரிடமாகப் போய்
,
என்னுடன் சண்டைக்கு வருகிறாயா என்று கூப்பிட்டுக் கூப்பிட்டுச் சண்டை செய்வதற்காகவே திக்விஜயம் செய்ய  ஆரம்பித்தாள். பூலோகம், மேலோகம் என்று இவளது ராவடியை கண்டு அத்தனை பேருமே அரண்டு போய்த் தோல்வியை ஒப்புக் கொண்டார்களாம்!தனி ஆவர்த்தனமாகவே போய்க் கொண்டிருந்த போது, இவளை விடப் பெரிய ராவடியாகஅந்தப் பரமேஸ்வரனே சோம சுந்தரனாக மதுரைக்கு வந்தானாம்! அப்படி  வந்தவனைக் கண்டவுடன், ராவடி, சண்டை போடுவதை எல்லாம் மறந்து மீனாக்ஷி  வெட்கம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டாளாம்! மூன்றாவது ஸ்தனமும், ஏற்கெனெவே அசரீரி சொல்லியிருந்ததைப் போல, மறைந்தது.

மூன்றாவது ஸ்தனம் மறைந்ததைக் கண்டு
, காஞ்சனமாலை மாப்பிள்ளை ஒருத்தன் வசமாக மாட்டிக் கொண்டான் என்று தெரிந்துகொண்டு, முப்பத்து முக்கோடி தேவர்களோடு சேர்ந்து பெண்ணுக்குத் திருமண ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தாள்


மதுரையில் மீனாட்சிக்குக் கல்யாணம்! 

ஊரெல்லாம் கொண்டாட்டம்!

கல்யாணமும் ஆகி, சாப்பாட்டுப் பந்தியெல்லாம் முடிந்தபிறகு , சமைத்ததெல்லாம் நிறைய மீந்து போனது! முப்பத்து முக்கோடி தேவர்களும் சாப்பிட்டும் மீந்துபோனால் எப்படி! சமைத்து வைத்த உணவெல்லாம் மீந்து போய்விட்டது, உம்முடைய உறவினர்கள் எண்ணிக்கை அவ்வளவுதானா என்று கொஞ்சம் நக்கலாகக்  கேட்கிறாள் மதுரைக்கு அரசி, முத்து மீனாக்ஷி! 

அதுவரை அடக்க ஒடுக்கமாக இருந்த மாப்பிள்ளை சோமசுந்தரன், தன்னுடைய ராவடியை ஆரம்பித்தானாம்!

இரு! ஒரே ஒரு குட்டிப் பூதத்தை அனுப்புகிறேன்
, அவன் சாப்பிட்ட பிறகு மிச்சம் மீதி ஏதாவது இருந்தால், அப்புறம் மற்றவர்களைக் கூப்பிடுவதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு குண்டோதரன் என்ற ஒரு பூதத்தை அனுப்பி வைத்தானாம்.  


குண்டோதரனும் சமைத்து வைத்திருந்த அத்தனை உணவையும் சாப்பிட்டு, பசி, இன்னும் வேண்டும், பசி, இன்னும் வேண்டும் என்று அரிசி, காய்கறி இப்படி சமைப்பதற்கு வைத்திருந்த அத்தனையையும் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்து மீனாட்சியே பயந்து போனாளாம்! போதும் போதுமென்று வீட்டுக்காரனிடம் கெஞ்சுகிறாள் மீனாக்ஷி!

ராவடி மன்னனான சுந்தரேசப் பெருமானும் குண்டோதரனின் பசி அடக்கித் தாகத்தை உண்டு பண்ணினானாம்! தண்ணீர், தண்ணீர் என்று அலைந்த குண்டோதரனிடம் இதோ வை கை என்று சொல்ல, வைகை நதி உண்டாயிற்றாம்! இது திருவிளையாடல்  புராணத்தில் வருகிற கதை!



வையை என்னும் பொய்யாக் குலக்கொடி என்று மகிழ்ந்து கொள்கிறது திரு விளையாடற் புராணம்! வை கை என்று சொன்னதினாலோ என்னவோ கை நனைக்கிற அளவுக்குக் கூட வைகையில், பெரும்பாலான தருணங்களில் தண்ணீர் இருப்பதில்லை! சிறு கூடற்பட்டியில் பிறந்த எங்கள் கவிஞன் கண்ணதாசன் ஒரு திரைப் படப் பாடலில் சொன்னபடி,

மலைமேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயுமுன்னே வந்த வெள்ளம் போனது ராசா!


இப்படி, அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும், வைகையின் கதை மட்டுமல்ல, பாண்டிய நாட்டின் கதையே அப்படித்தான் இருக்கிறது!
அம்மையும் அப்பனுமே ராவடி பண்ணிக் கொண்டிருந்தால் எப்படி? 
அடிப்பொடிகளோடு அட்டகாசம் பண்ணஅடுத்து ஒரு 'னா வர வேண்டாமா!

ராவடி பண்ணிய  மீனாட்சியும், ராவடி மன்னன் சுந்தரேசனுமே  

அ' றங்காவலர் குழு செய்வது தான் சரி என்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்! மதுரைக்கு அரசி மீனாக்ஷி என்பதெல்லாம் முப்பதாண்டுகளுக்கு முந்தைய பழைய நம்பிக்கை!  என்னை மாதிரிப் பழைய நினைவுகளைக் கொஞ்சம் சுமந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே,  இன்னமும் அப்படி நம்பிக் கொண்டிருக்கிறோம்!

பண்டிகை என்ற மட்டுக்கு சித்திரைத் திருவிழாவின் போது  மீனாக்ஷி கையிலும் ஆவணி மாதத்தில் சோமசுந்தரர் கையிலும் மதுரையின் ஆட்சி இருப்பதாக ஒரு கற்பனை மட்டும் பண்ணிக் கொண்டு, செங்கோல் கொடுக்கிற படலம் ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறது!
 
ஆக, மதுரை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மூணு!  

அப்புறம் ராவடி! ஒரு ராவடியை அடக்க, அதற்குக் கொஞ்சம் அதிகமான ராவடி என்று அராத்தாக, ராவடியாக இப்படித் தொடர்ந்து இருப்பதே மதுரையின் கதையாக, புராணமாக இருக்கிறது!

தடி எடுத்தவனெல்லாம்  தண்டல்காரனா என்று கேட்கிற மாதிரி  ராவடி செய்யத் தெரிந்தவனை எல்லாம் பாண்டியனாக ஆக்கிப் பார்ப்பதே மதுரைக்கு உள்ள தனிச் சிறுமை! கலக்டராக இருந்த ஒரு ஆங்கிலேயன், மீனாட்சிக்கு ஆபரணம் செய்து போட்டானாம்! அவனையும் பீட்டர் பாண்டியன் என்பார்கள்! பெரிய மருது, சின்ன மருது என்று இரு சகோதரர்கள்! அவர்களையும் பாண்டியன் என்பார்கள்! பிற்கால பாண்டிய வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் பாண்டியன் என்று எவர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்! என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்!

திருநெல்வேலி தாண்டி தெற்கே, பாண்டியன் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டுப் பாருங்கள்!

இன்றைக்கு, மதுரையில் மீனாக்ஷி திருக்கல்யாணம்! திருக்கல்யாணத்தை கேபிள் டிவியில் பார்த்தும்,  இரவு  யானை வாகனத்திலும், ஆனந்தராயர் பல்லக்கிலும் மீனாக்ஷி சுந்தரேஸ்வராள் மாசி வீதிகளில் புறப்பாடு கண்டருளுவதை ஒதுங்கியிருந்து  சேவித்துக் கொண்டு, ஏற்கெனெவே எழுதியிருந்த பதிவைக் கொஞ்சம் மாற்றியமைத்து எழுதிய மீள் பதிவு!

மதுரைக்கு அரசி நீயல்லவோ என்று அவளிடத்தில் கேட்க ஆசைதான்! 


அவள் என்றைக்கடா வாயைத் திறந்து பேசினாள் என்ற  வசனம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது!


No comments:

Post a Comment