Pages

Sunday, June 23, 2019

கூத்தாடி ....கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!

ஒருவழியாகக் கூத்தாடிகள் சங்கத்தேர்தல் நடந்து முடிந்து விட்டதாம்! வாக்கு எண்ணிக்கை இரண்டு வாரம் கழித்துத் தானாம்! இனிமேலாவது நாட்டில் என்ன நடக்கிறது, எது முக்கியமானது என்பதைப்பற்றி இங்குள்ள ஊடகங்கள் கவனத்தைப் பெறுமா? பேசுவார்களா? என்று கேட்டால் இல்லை, மாறமாட்டார்கள் என்பது மட்டுமே பதிலாக வரும். 


RJ பாலாஜி காமெடியாகப்பேசுகிறேனென்று, ஒரு  உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்! உண்மை கூட யார் பேசுகிறார்கள் என்பதில்தான் அளவிடப்படுகிற உலகத்தில் ஒரு சாதா காமெடியன் பேசினால் எடுபடுமா?    இங்கே ஊடகங்களுக்கு அதுவும் மெல்லக் கிடைத்த சிறு பொரி,  அவல் அவ்வளவுதான்! எது பொருளோ அதை பேசவே மாட்டோம் என்பதில் எத்தனை உறுதியாக நிற்கிறார்கள், பாருங்கள்!


தமிழ்நாட்டைச் சீரழிப்பதில் புதிய தலைமுறை, தந்தி டிவி இரண்டுமே  நீ முந்தியா நான் முந்தியா  என்ற போட்டியில் இருக்கின்றன போல!  

பெரும்பாலான தமிழ் சேனல்கள் ...மக்களுக்கு எந்த வகையிலும் பயனில்லாத நடிகர் சங்க தேர்தலை.. அமெரிக்க அதிபர் தேர்தல் அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் மிகப் பெரிய ரயில்வேயிலும் யூனியன் சங்க தேர்தல்கள் நடக்கின்றன. எக்கச்சக்கமான அரசியல். ஏகப்பட்ட அரசியல். SRMU வின் அரசியல் அட்டகாசங்களை குறித்து மட்டுமே பல மாதங்களுக்கு எழுதலாம்.அந்த அளவிற்கு பல நிர்வாக & அரசியல் விஷயங்களை /தகவல்களை கொண்டவை.
அத் தேர்தல்கள் குறித்து என்றாவது மக்களுக்கு கொண்டு சேர்க்கப் பட்டிருக்கிறதா ??!


மருத்துவர் ராமதாஸ் ஊடகக்காரர்களிடம் கோபப்பட்டதில் எவ்வளவு நியாயம் அவர்தரப்பில் இருந்தாலும், பேசியவிதம் அத்தனையையும் அடித்துப்போட்டுவிடுகிறதே!  ஊடகங்கள் தவறான செய்திகளைப் போட்டதில் தான் தோற்றோம் என்கிறார் ராமதாஸ். இப்படிப் பேசினால் எப்படி நல்லவிதமாகச் செய்தி போடுவார்கள்?


          
இங்கே விதவிதமாய் மோசடி செய்கிறவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேபோவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே பெரும்பாலான தருணங்களில் மோசடி செய்கிறவர்களுடைய கூட்டாளிகளாக இருப்பதும் ஒரு காரணம் Islamic Monetary Advisory என்ற மோசடி நிறுவனம் 2006 இலேயே ஆரம்பிக்கப்பட்டு 2008 இல் கலைக்கப் பட்டு 2013 இல் இப்போதைய வடிவத்தில் இஸ்லாமியர்களைக் குறிவைத்து ஷரியத் சட்டப்படி நடத்தப்படுகிற முதலீட்டு நிறுவனம், வருடத்துக்கு 20% வருமானம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி 5000 கோடிரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என்கிறார்கள். மோசடிக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 40000 பேர்களைத் தொடும் என்றும் சொல்கிறார்கள். இப்போது நடிகர் பிரபு விளம்பரங்களில் பிரபலப்படுத்திய நகைக்கடை மீதும் ரெட் பிக்ஸ் தளம் என்னென்னமோ சொல்கிறது. உஷாராய் இருந்து கொள்ள வேண்டியது மக்கள்தான்!

நந்தவனத்திலோர் ஆண்டி அவன் நாலாறுமாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந்தானொரு  தோண்டி 
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்றொரு தத்துவப்பாடல் உண்டு! நான் இங்கே தத்துவமெல்லாம் பேசப் போவதில்லை! கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்ற கதையாக நாட்டுநடப்பைச் சொல்லவேண்டுமென்கிற ஆசையில் எழுத ஆரம்பித்த பதிவுக்கு  மிகவும் பொருத்தமான நபர் ராகுல் காண்டி  அவரையே பிடித்து இன்னமும்  தொங்கிக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சி இந்த இரண்டை விட்டால் வேறேது?  சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.  

2 comments:

  1. கிடப்பதெல்லாம் கிடக்கட்டு..
    கிழவனைத் தூக்கி மனையில் வை!...

    - என்றொரு சொல்வழக்கு தாங்கள் அறியாததா!...

    இந்த ராட்சசர்களிடம் இருந்து தப்பிக்க வேணும் என்றால்
    கேபிள் இணைப்பைப் பிடுங்கிப் போட்டு விட வேண்டியது தான்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்! Creature of habits மனிதன் பழக்கங்களின் அடிமையாகவே இருக்கிறான் என்று ஸ்ரீஅரவிந்த அன்னை சொல்வது எத்தனை உண்மை என்பதை என் சொந்த அனுபவத்திலேயே பார்த்துக் கொண்டே வருகிறேன்!

      என் உறவினர் வீட்டில் பசங்கள் டிவியையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இரண்டு வருடம் கேபிளைக் கட் பண்ணி வைத்திருந்ததில் ஒரு புண்ணியமுமில்லை. செல் போனிலேயே விரும்புகிற எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாமல் இப்போது டாடா ஸ்கை வந்து விட்டதாம்!

      Delete