Pages

Thursday, March 5, 2020

ச்சும்மா ஜாலிக்கு! கொஞ்சம் சினிமா! கொஞ்சம் உரத்த யோசனை!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்! துல்கர் சல்மான் படம்! அவருக்கு இது 25வது படமாம்! ஒரு படு அபத்தமான கதைக்களம். படம் பார்த்த மோசமான அனுபவத்தை விட, மிகக் கொடுமையாக  துல்கர் சல்மான் இந்தப்படத்தைப் பற்றிப் பேசிய இந்த 14 நிமிட வீடியோ இருந்தது! துல்கர் ரொம்ப எமோஷனலாகப் பேசினார் என்கிறது வீடியோவுக்குக் கொடுத்திருக்கிற தலைப்பு! துல்கர் சல்மானுக்கு மட்டுமல்ல, அப்பா மம்மூட்டிக்குமே கூட கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தெரியவில்லை. அவருடைய சமீபத்தைய படமான ஷைலக் மிகப்பெரிய சொதப்பல்! ஒருகாலத்தில் மம்மூட்டி எனக்குப் பிடித்த நடிகராக இருந்தார். இப்போதோ அவர்  கௌரவமாக ரிடையர் ஆகியிருக்கலாம் என்று தோன்றுகிற மாதிரியான படங்களில் நடித்துத்தள்ளிக் கொண்டிருக்கிறார்! 


கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கருக்கு ஜோடி ரிது வர்மா! இவரையும், விஜய் தேவரகொண்டாவையும் பெள்ளி சூப்புலு தெலுங்கு ஹிட்  படத்தில் பார்த்ததற்கு அப்புறம் சரியான படங்கள் எதுவும் அமையவில்லை. இந்தப்படமும் சேர்த்துத் தான்! இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கும் நிரஞ்சனா அகத்தியன் கதாபாத்திரம் கொஞ்சம் மனதில் நிற்கிறது என்று நினைத்ததாலோ என்னவோ முகநூலில் இவருடைய பக்கம் suggestion இல் அடிக்கடி வருகிறது! இனிமேல் சினிமா பார்த்த கொஞ்ச நாட்களுக்கு முகநூல் பக்கம் போகாமல் இருக்க வேண்டுமோ?  அவ்வளவு படுத்துகிறார்கள்!  

லாலேட்டனின் பிக் பிரதர் ட்ரெய்லர் 


   
பாமரன் பக்கங்கள்  வலைப்பதிவர்தான்! கூகிள் ப்ளஸ் போனதில் தொடர்பு சுத்தமாக விடுபட்டுப்போன பல அருமையான இணைய நண்பர்களில் ஒருவர். இப்போது முகநூலில் கலக்கிக் கொண்டிருக்கிறார்! நாலுவரியில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்துக்கு இத்தனை கனகச்சிதமாக விமரிசனம் எழுதிவிட முடியுமா என்ன? சரியாகத்தான் எழுதியிருக்கிறார் என்றாலும் ஒரு ஆவலாதிக்குப் படம் பார்த்தாயிற்று! மம்மூக்கா, மகன் துல்கர் இருவருடைய சமீபத்தைய திரைக்காவியங்களைப் பார்த்தபிறகு, பார்த்ததாலோ என்னவோ அவைகளுக்குக் கொஞ்சம் தேவலை என்று தான் தோன்றியது! மல்லுதேசத் திரைப்படங்களுக்கு  என்ன ஆகிக் கொண்டிருக்கிறது என்றே புரியவில்லை! மல்லுத் திரையோரம் என்று மல்லுப் படங்களுக்காகவே ரசனையோடு  புத்தகம் எழுதிய பண்பாளர் ஆசீப் மீரான் ஐயாவிடம் கேட்கலாமென்றால் கூகிள் ப்ளஸ்ஸோடு விடுபட்டுப் போன தொடர்புகளில் அவரும் ஒருவர்! 

,  

ஆகக் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் சமீபத்தில் பார்த்த படங்களில்  அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடித்து வெளி வந்த  ஓ மை கடவுளே! தான் கொஞ்சம் சகித்துக் கொள்கிற மாதிரி நல்ல படமாக இருந்தது என்று ஒருமனதாக முடித்து விடலாமா? விஜய் சேதுபதி இந்தப்படத்தில் தேவையே இல்லாத எக்ஸ்டரா லக்கேஜ் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து விட்டு, அப்படியே சொல்லியும் விடலாம்! ஒருபேச்சுக்காகக் கேட்கிறேன், இந்தப்படம் எத்தனை நாட்கள் தியேட்டரில் ஓடியதாம்!!

மீண்டும் சந்திப்போம்.                

6 comments:

  1. பாமரன் பக்கங்கள் வலைப்பதிவர்தான்! கூகிள் ப்ளஸ் போனதில் தொடர்பு சுத்தமாக விடுபட்டுப்போன பல அருமையான இணைய நண்பர்களில் ஒருவர். இப்போது முகநூலில் கலக்கிக் கொண்டிருக்கிறார்! நாலுவரியில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்துக்கு இத்தனை கனகச்சிதமாக விமரிசனம் எழுதிவிட முடியுமா என்ன? சரியாகத்தான் எழுதியிருக்கிறார்

    உண்மை. நறுக் சுறுக் பட்டாசு. எல்லாவிசயங்களையும் இப்படித்தான் எழுதுவார்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதி ஜி!

      உங்களுக்கு முகநூல் அறிமுகம் இருக்கும் என்று நினைக்கிறேன்! எனக்குப் பெயரளவு முகநூல் கணக்கு இருந்தாலும் அங்கே எழுதிப்புழங்க இன்னமும் மனதில்லை! கூகிள் ப்ளஸ் போனதில் இவர்மாதிரி நிறையப்பேர் தொடர்பும் விடுபட்டுவிட்டது.

      Delete
  2. கொஞ்சம் தெலுங்கு படம் பக்கம் வாருங்கள். Brochevarevaarevaruraa படம் பாருங்கள்.. எவ்வளவு திறமையாக படம் எடுக்கிறார்கள் என்று வியப்பீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. தெலுங்குப்படங்களும் நிறையப் பார்ப்பதுண்டுதான்! மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், நானி, விஜய் தேவரகொண்டா படங்கள் மிகவும் பிடிக்கும். விஜய் தேவரகொண்டா, ரிது வர்மாவை முதலில் பார்த்ததே பெள்ளி சூப்புலு படத்தில் தானே!

      Tollywoodதமிழ்த் திரைப்பட உலகைவிட மிகப்பெரியது. பட்ஜெட் அதிகம். ஒப்பீட்டளவில் மல்லுத்திரை மிகச் சிறியதுதான்! அந்தச் சின்னதுக்குள்ளும் ஏகப்பட்ட மெகா ஸ்டார் சுப்ரீம் ஸ்டார் போட்டிகள் நாங்களும் ஹாலிவுட்டை காப்பி அடிப்போம்ல ரேஞ்சிலான படங்கள்!

      சிவராஜ்குமார் புனீத்குமார் அலட்டல் கன்னடப்படங்களையும் அவ்வப்போது பார்ப்பதுதான்!

      Delete
  3. இந்த்க் கொடுமைகளுக்கும் நமக்கும் வெகுதூரம்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவும் நிம்மதி துரை செல்வராஜூ சார்! :-)))

      Delete