Pages

Thursday, November 26, 2020

26/11 மும்பை மீதான தாக்குதல்! #12வதுஆண்டுநிறைவு பாடம் கற்றுக்கொண்டோமா?

 2008 நவம்பர் இதே நாளில் மும்பை மீது கடல்வழியாக  10 பாகிஸ்தானி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களின் 12வது ஆண்டு நிறைவு. டாட்டாக்களின் தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டதால் மட்டுமே மீடியாக்களால் பரபரப்புச் செய்தியாக்கப்பட்ட பழைய கதை நினைவிருக்கிறதா? டாட்டாக்களுக்கு ஏற்பட்ட இழப்பை காப்பீடு நிறுவனங்கள் ஈடு செய்துவிட்டன. ஆனால் சத்ரபதி சிவாஜி,டெர்மினலில், மற்றும் வேறு சில இடங்களில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப் பட்ட அற்ப நிவாரணம் கூட இன்றும் கிடைக்கவில்லை என்பதையாவது நினைத்துப் பார்க்கிறோமா?

மும்பைத் தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் மரணம் என்றால் மூன்றுலட்சம், வெறும் காயமென்றால் ஐம்பதாயிரம் தான்! இந்த அற்பத் தொகையுமே கூடப் பெரும்பாலானவர்களுக்கு, தாக்குதல்கள் நடந்து ஓராண்டாகியுமே கூட  வழங்கப் படவில்லை என்பது எப்போதும் போல் நடக்கிற கூத்துத் தான்! அதே நேரம், தாஜ் ஹோட்டலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக, இன்ஷ்யூரன்ஸ் தொகை ரூ.167 கோடி வழங்கப்பட்டு விட்டது என்ற செய்தியோடு சேர்த்துப் பார்த்தால் தான், பிரச்சினையைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும்.இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியில் உள்ள நிவாரணம் வேண்டி வந்த மனுக்கள் எண்ணிக்கைக்கும், எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அதே செய்தியை வெளியிட்டதில் வந்திருக்கும் எண்ணிக்கைக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது.

வெளியே எல்லாத் திசைகளிலும், இந்தியாவுடன் பகைமை பாராட்டும் நாடுகள், ஒவ்வொரு நாட்டிடமிருந்தும் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள் என்று ஒருபக்கம், உறுதியான அரசியல் முடிவுகளை எடுக்கத் தைரியமில்லாத, ஆண்மையற்ற அரசியல் தலைவர்கள், ஊழல் மயமாக இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும், முன்னெச்சரிக்கை என்றால் என்ன என்று கேட்கும் அரசு நிர்வாகம், காவல்துறை இத்தியாதிகள் இதெல்லாம் ஒருபுறம் என்றால், ஜனங்களுடைய அலட்சிய மனோபாவம், கையறுநிலை, அல்லது தட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கேட்பதும், குட்ட வேண்டிய நேரத்தில் குட்டுவதும் நம் கைகளிலேயே இருக்கிறது என்பதை உணராத பொறுப்பற்ற தன்மையும் சேர்ந்து, இந்த மாபெரும் தேசத்தைத் தலை குனிய வைத்துக் கொண்டிருக்கிறது.


பாராளுமன்றத்திற்கு வெளியே பிஜேபி கட்சியைச் சேர்ந்த அலுவாலியா, ஐந்து நட்சத்திர ஹோட்டல் தாக்கப் பட்டதினாலேயே, இந்தத் தீவீர வாதிகளுடைய தாக்குதல் பற்றிய செய்தி, மீடியாக்களினால் பரபரப்புச் செய்தியாக்கப் பட்டதாக வருத்தப் பட்டிருக்கிறார்.

பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "காஷ்மீர், சாட்டிஸ்கார், ஆந்திரா, ஒரிசா என்று நிறைய இடங்களில் இந்த மாதிரித் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.ஆனால், மும்பையில் நடந்ததை மட்டும் நீங்கள் பெரிதுபடுத்திப் போடுகிறீர்கள்! காரணம் அது ஐந்துநட்சத்திர ஹோட்டல் தாஜ் மீது நடந்தது என்பதால் தானே?"

அலுவாலியா உண்மையைத் தான் பேசியிருக்கிறார்! தாஜ் ஹோட்டல் மீது அல்லாமல், அன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினலில் (ரயில் நிலையம்) மட்டுமே தாக்குதல் நடந்திருந்தால், பத்திரிகையாளர்களும், தொலைக் காட்சி ஊடகங்களும் இவ்வளவு பெரிதாக, கோரசாக, ஊது ஊதென்று ஊதியிருப்பார்களா என்பது சந்தேகம் தான்! மும்பையில், ஐபிஎன் அலுவலகம் தாக்கப் பட்டதற்கு ஹிந்து என் ராம் கொதித்தெழுந்தார்!  உள்ளூரில், வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் தாக்கப்பட்ட போதோ அல்லது வேறு அராஜகங்கள் நடந்தபோதோ இதே  கனவான் எல்லாவற்றையும் பொத்திக் கொண்டு  வேறு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்!    


இப்படி 2009 நவம்பரில் இந்தப்பக்கங்களில் எழுதியது 

இது எந்த அளவுக்கு மாறியிருக்கிறது? இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகியிருக்கும் செய்தி நம்முடைய மனசாட்சியை உலுக்குவதாக இருக்கிறது. குற்றவாளி கசாபுக்குச் நான்கு வருடம் சிறையில் வைத்து ஊட்டி வளர்க்கச் செலவழிக்கப்பட்ட தொகை 29.5 கோடி ரூபாயாம்!  இது ஹிந்து செய்தி. அதே நேரம் மஹாராஷ்டிர அரசு செல்வழித்தது 53 கோடி ரூபாய்.


   


என்ன செய்யப்போகிறோம்? எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்?  

No comments:

Post a Comment