Monday, April 5, 2010

சந்தோஷத்திற்கு ஒரு குறுக்குவழி!

 
செய்தி சானல்களை மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் இடையில், ஸ்டார் மூவீஸ் வந்து போனது. சந்தோஷத்திற்கான குறுக்குவழி Shortcut to Happiness ஓடிக் கொண்டிருந்தது. ஏற்கெனெவே இதை ஸ்டார் மூவீஸ் சானலிலேயே  மூன்று நான்கு தரம் பார்த்தது தான்!

இந்த வலைப்பக்கங்களில், வாசிப்பு அனுபவங்களை வைத்து எது நல்ல எழுத்து என்று மூன்று நான்கு பதிவுகளை எழுதியதன் தொடர்ச்சியாக இந்தத் திரைப்படம், ஒரு புதிய பார்வையில்,பார்க்கத் தூண்டியது என்றே சொல்லவேண்டும்!

அல்லது ஏற்கெனெவே, ஆழ்மனதில், இந்தப் படத்தை முதன் முதலில் பார்த்தபோதே தங்கிவிட்டதாகக்  கூட இருக்கலாம்! எப்படியிருந்தாலும், இங்கே தமிழ் எழுத்துலகத்தில் இப்போது நடந்து வரும் சில போக்குகளுக்கு, இந்தத் திரைப்படம், ஒரு அழகான அடித்தளம், தொடர்பு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

Faust, Faustus என்ற லத்தீன் வார்த்தைக்கு அதிர்ஷ்டம் என்று பெயர். இதையே ஜெர்மானிய மொழியில் சொல்லும்போது fist,  அதாவது கைவிரல்களை மடக்கிக் காட்டுகிற முஷ்டி, இது ஜெர்மானிய நாடோடி இலக்கியங்களில் சாத்தானோடு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தைக் குறிப்பதாகவும் இருக்கிறது! இந்த ஜெர்மானிய நாடோடி இலக்கியக் கதை அடிப்படையை வைத்து வாஷிங்டன் இர்விங்  என்பவர் எழுதிய கதைத் தொகுப்பில்(1824) இருந்து சாத்தானும் டாம் வாக்கரும் என்ற கதையை,  தன்னுடைய பாணியில் திரும்பச் சொல்கிற விதமாக சாத்தானும் டேனியல்வெப்ஸ்டெரும்  என்ற  தலைப்பில் 1937 வாக்கில் ஸ்டீபன் வின்சென்ட் பெனெட்  என்ற கதாசிரியர் எழுதினார். எழுத்தாளர்  ஒ ஹென்றி பெயரிலான விருதையும் இந்தக் கதை 1938 ஆண்டு பெற்றது.

1941 இலும், அப்புறம் 2007 இலும் திரைப்படமாக வந்த இந்தக் கதை என்ன தான் சொல்கிறது? 2007 வடிவத்தைப்  பார்ப்போம்! இதில் 1941 வடிவத்தைப் போல அல்லாமல், சாத்தான் ஒரு அழகான பெண்ணாக வருகிறது என்பதற்காக மட்டுமல்ல! முந்தைய வடிவத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை, நம்ப முடிந்தால்நம்புங்கள்!

ஜாபெஸ் ஸ்டோன், ஒரு பிரபலமாகாத எழுத்தாளர். அவருடைய எழுத்துக்களை பதிப்பகங்களுக்கும்,  இலக்கியத் தரகர்களுக்கும் அனுப்பி விட்டுக் காத்திருக்கிறார். வாய்ப்பு வருகிற மாதிரித் தெரியவில்லை. ஒரு நாள், வெறுத்துப் போய்,  தன்னுடைய எழுத்துக்களை சேர்த்து வைத்திருக்கும் லேப்டாப்பை ஜன்னல் வழியாக வீசி எறிகிறார். அது வீதியில் நடந்துபோய்க் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தலைமீது விழுந்து, அந்தப் பெண் உயிரிழக்கிறார்.

சந்தர்ப்பம் கிடைத்தவுடன், சாத்தான், ஒரு அழகிய பெண்ணாக உள்ளே நுழைகிறது! வெறுப்பு, குற்றவுணர்வுடன் தவிக்கும் எழுத்தாளனோடு, பேரம் ஆரம்பிக்கிறது. நாம் இருவரும்  கூட்டு சேர்ந்து கொண்டால் புகழ், பணம் எல்லாம் கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறாள் அந்த அழகான ராட்சசி! பதிலுக்கு உன்னுடைய ஆத்மாவை எனக்கு விற்றுவிடு என்கிறாள்.

கதாநாயகன் ஒத்துக் கொள்கிறான். கீழே லேப்டாப் விழுந்து தலையில் அடிபட்டு இறந்த பெண்மணி உட்பட, சிக்கல்கள், வேறு விதமாக மாறி, கதாசிரியனைத் தேடி, இது வரை அவன் பார்த்திருக்காத அங்கீகாரம், புகழ் பணம் எல்லாமே கிடைக்கிறது. அந்த அழகான ராட்சசி, அவனோடு சல்லாபித்துக் கொண்டே, வாக்களித்தபடி எல்லாவற்றையும் தந்தாலும், ஜாபெஸ் ஸ்டோன் ஒரு வெறுமையை உணர்கிறார். தான் எதிர்பார்த்தது இது இல்லை, இதிலிருந்து விடுபட்டால் தேவலை என்று தவிக்கிறார்!


தான் முன்னால் சந்திக்கத் தவமிருந்த ஒரு பதிப்பாளரைச் சந்தித்து, தனக்கு உதவும்படி வேண்டுகிறார்.

வழக்கு ஆரம்பிக்கிறது! உண்மையிலேயே ஒரு நீதிமன்ற விசாரணை மாதிரித் தான் களம் விரிகிறது.
ஒரு நீதி மன்ற விசாரணை போல நடக்கும் இந்தப் பகுதி மிக அருமையாக எடுக்கப் பட்டிருக்கிறது.

கதாநாயகன் தரப்பில், டேனியல் வெப்ஸ்டர் வழக்கறிஞராகவும், சாத்தான் அழகிய பெண்வடிவத்தில் எதிர்த்தரப்பு வழக்கறிஞராகவும்  வழக்கு நடக்கிறது. ஜாபெஸ் ஸ்டோன் தன்னிடம் ஒப்புக் கொண்டபடி ஆத்மாவைத் தர மறுத்து மோசடி செய்ததாக சாத்தான் குற்றம் சாட்ட, பதிலுக்கு டேனியல் வெப்ஸ்டர் வாதங்கள் என்று கதை மிகவும் சுவாரசியமான தளத்தில் விரிகிறது!

அந்தோணி ஹாப்கின்ஸ், பதிப்பாளர், கதாநாயகனின் வழக்கறிஞரான  டேனியல் வெப்ஸ்டராகவும், அலெக் பால்ட்வின்  கதாநாயகன் ஜாபெஸ் ஸ்டோன் ஆகவும், ஜெனிஃபர் லவ் ஹெவிட் . அழகான சாத்தானாகவும் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம், ஒரு எழுத்தாளன் ஏங்குவது எதற்காகவெல்லாம் என்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. நல்ல எழுத்தாளனாக வரஆசையில் முனைகிறவன்,  திசை மாறிப்போய் புகழ், பணம், அங்கீகாரம் என்பது போதையாகிக் கடைசியில் தன்னுடைய ஆத்மாவையே இழந்து நிற்கிற அவலத்தைத் தொட்டுச் சொல்கிறது.

சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில், மிக வித்தியாசமான அணுகுமுறை, வழக்கு, வாதங்கள் என்று சுவாரசியமான திரைக்கதை இது!
ஆனால் திரையரங்குகளைப் பார்க்காத படம் என்று சொல்கிறார்கள்! நேரடியாகத் தொலைக் காட்சியில் ரிலீஸ்!
ஸ்டார் மூவீஸ் சானலில் இந்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில்,  குறைந்தது நான்கு முறையாவது போட்டிருப்பார்கள்! இன்னும் ஒரு பத்துத் தரமாவது போடுவார்கள் என்று தான் நினைக்கிறேன்! பார்க்க முடிந்தால் பாருங்கள்!

எது நல்ல எழுத்து, எதற்காக எழுதுவது, யாருக்காக என்ற மாதிரியான அடிப்படைக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிற மாதிரி ஒரு நல்ல திரைப் பட வடிவம் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை!

 

7 comments:

 1. இன்னும் பார்க்க வில்லை.. பார்த்து விட வேண்டிதான்.. நன்றி :)

  ReplyDelete
 2. என்னாச்சுங்க தளமே வித்தியாசமா இருக்கு!

  --

  நானும் இப்படம் பார்க்கவில்லை. பார்த்துடரேன்.:)

  ReplyDelete
 3. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரவில்லை. டிவிடி, விசிடிக்களாகக் கிடைக்கிறதா என்பதும் தெரியவில்லை. ஸ்டார் மூவீஸ் சானலில் மட்டும் இந்தப் படத்தை இது வரை ஐந்து தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். இன்னும் குறைந்தது பத்துத் தரமாவது இந்த வருடத்திற்குள் ஒளிபரப்புவார்கள் என்றும் எதிர் பார்க்கிறேன். எத்தனை தரம் ஒளிபரப்பினாலும், இந்தத் திரைப்படத்தின் அடிப்படை ஸ்டீபன் வின்சென்ட் பென்னெட் ஒரு ஜெர்மானிய நாடோடிக் கதையைத் திரும்பச் சொல்கிற வடிவமாக, ஆசை என்னும் சாத்தானுக்கு இடம் கொடுத்தால் ஆத்மாவையே பறிகொடுக்க வேண்டியிருக்கும் என்பதுதான்.

  விக்கிபீடியாவில் தேடினால் கீழே கடைசியில் ரெபரென்ஸ் பகுதியில், இதன் ஒரிஜினல் வடிவத்தை டெக்ஸ்ட் ஆகப் பார்க்க முடியும்.

  ReplyDelete
 4. நல்ல திரைப்படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 5. இதை வெறும் திரைப்படமாக, திரை விமரிசனமாக மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை. மனிதர்களின் ஏக்கம், தேடல் , எதிர்பார்ப்பு, கிடைத்ததில் அதிருப்தி இப்படி ஏதோ ஒன்று அவர்களை இன்னும், இன்னும் என்று உந்திக் கொண்டே இருக்கிறது. அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் குறுக்கு வழியையே தேடுகிற போக்கில் தன்னையே, தன்னுடைய சுயம், சுதந்திரத்தையே இழந்து விட வேண்டியிருக்கும் என்ற நல்ல பாடம், ஜெர்மானிய நாடோடிக் கதைகளில், சாத்தானோடு செய்து கொள்கிற ஒரு ஒப்பந்தமாக ஒரு கதையில் வருகிறது.

  1937 இல் அதை பென்னெட், அமெரிக்கச் சூழலை வைத்துக் கொஞ்சம் மாற்றி எழுதினார். இந்தக் கதை இரண்டு முறை படமாக்கப் பட்டிருக்கிறது.

  மனித வளம் பற்றிப் பேசும்போது, நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து இந்தக் கதையில் இருப்பதாகவே எனக்குப் படுகிறது

  ReplyDelete
 6. நல்ல அறிமுகம்...
  பார்க்கலாம்..

  மதுரையில்தான் இருக்கிறீர்களா?பணியில் இருக்கிறீர்களா? உங்கள் தளம் வித்தியாசமாக இருக்கிறது..

  ReplyDelete
 7. திரு. அறிவன்!
  வருகைக்கு நன்றி! தற்சமயம் மதுரைவாசிதான்!

  ReplyDelete