Saturday, October 30, 2010

கவிதை! இது கவிதை!


ஒரு புத்துணர்ச்சிக்காக, கொஞ்சம் மாறுதலுக்காகவும் சில கவிதைகள்!

முதலில் சூஃபி கவிஞரான முகமது ஜலாலுதீன் ரூமியின் கவிதைகள் இரண்டு!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமேயானால், இந்த கவிதை வரிகளுக்குள் இருக்கும் ஆன்மீக அனுபவத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமாக இல்லை என்பதோடு, இதே விஷயத்தை நம்மூர் ஞானிகளுமே தங்கள் அனுபவத்தில் கண்டு சொல்லி
ருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடியும்! இறைவன், இறையனுபவம் என்பது ஒன்றே! மதங்கள், மதவாதிகள்  பிரித்துச் சொல்வது போல, அவர்கள் குறிப்பிடும் பாதையில் போனால் தான் தரிசனம் கிடைக்கும் என்பதெல்லாம் வெறும் புருடா என்பதையும் சேர்த்தே பார்க்க முடியும்! ரூமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா?

நீ!

உயிராய்ப்  பூமியில் தோன்றிய தருணமே
ஏறிச் செல்லவோர் ஏணியும் வந்தது!
ஏறிவருவாய் என!
மண்ணிலிருந்து தாவரமானாய்!
தாவர நிலையே மிருகமும் ஆனது.
அதன்பின் மனிதனுமானாய்.
அறிவும், அறிந்ததில் தெளிவும், நம்பிக்கையும்
கூடவே வந்தது உனக்காக.

மண்ணில் பிறந்த உடலைப்பார்!
எப்படி முழுமையாய் ஆனதென்று!
மரணம் குறித்தேன்  பயம் கொள்ள வேண்டும்?
மரணம்  உன்னைக் குறுக்கியதா?
உடல்நிலை கடந்தே போகும் போது
தேவதை  ஆவாய் ஐயமில்லை!
தேவர்கள் உலகுக்கு உயர்வதிலும் ஐயமில்லை

அங்கேயே தேங்கிவிடாதே! தேவர்களுக்கும் மூப்புண்டு
தேவநிலையைக் கடந்து மறுபடியும் விழிப்பின்
பெருங்கடல் நிலைக்குள் மூழ்கி மூழ்கிப் பரந்திடுவாய்
சிறு துளியாய் நீ! விரிந்து பரந்து நூறு கடல் ஆகிடுவாய்!
சிறு துளி மட்டுமே கடலென்று எண்ணிவிடாதே!
பெருங்கடல் கூட, சிறு துளியாய் ஆனதைப்பார்!

 
முகமது ஜலாலுதீன் ரூமி என்ற இந்த பெர்ஷிய  சூஃபி கவிஞருடைய கவிதைகளில், காதலையும் தொட்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்! ஆன்ம நேயம் வெளிப்படும் சூ ஃபி கவிதை வரிகள் அவை! வெறும் உடல்களின் மீதான இச்சை என்பதையும் தாண்டி, கொஞ்சம் பரவசமான நிலையில்!காதல் கவிதை மாதிரித் தோன்றினாலும் உயர்ந்த ஆன்மீகத் தேடலோடு கூடிய உயிரின் வேட்கையாக இந்தக் கவிதை வரிகளைப் பாருங்கள்!

காதல் என் காதோடு வந்து சொன்னது:

"வேடனாக இராதே! எதிர்க்கச் சக்தியில்லாதவனாக இரு!
எனக்குப் பிரியமானவனாக ஒரு முட்டாளாகவே இருந்துவிடு!
செந்தழல் இரவியாக வேண்டாமே! ஒரு புள்ளியே கூடப் போதும்.
எனது இல்லத்தில் அண்டியிருந்து  வீடற்றவனாக இரு
எரியும் விளக்காக வேண்டாம், விட்டில் பூச்சியாக இரு! போதும்!
இருந்தால்  வாழ்க்கையை அனுபவித்து சுவைக்க முடியும்
அடங்கிப் பணி செய்வதன் பலம் என்னவென்று அப்போது தெரியும்!"
ஆங்கில மூலம், மற்றும் விரிவாகப் படிப்பதற்கு இங்கே
மற்றும் இங்கே  

**********
இயற்கையிடமிருந்து வெகுதூரம்  விலகி வாழுகிற இயந்திரத் தனமான வாழ்க்கை, இயல்பான, இயற்கையான சில விஷயங்களைக் கூட ரசிக்கத் தெரியாமல், வாழுகிற போலித் தனமான அவலம் இவைகளை முன்னேற்றம் என்கிற பெயரில் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்! 

சின்னச் சின்ன சந்தோஷங்கள் கூட, இயல்பாக, இயற்கையோடு ஒட்டியிராமல், மிகவும் செயற்கைத் தனமாக ஆகிவிட்ட காலம் இது!
நாற்பது வருடங்களுக்கு முன்னால், ஆங்கிலப் பாடமாகப் படித்த கவிதை வரிகள், இன்றைக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும் வினோதத்தை நினைவு படுத்திக் கொண்டே, இங்கேயும் ஒரு மீள் பார்வையாக!  உள்ளிருந்து வெளிப்படும் ஏக்கமாக....!

வில்லியம் ஹென்றி டேவிஸ் என்ற இந்தக் கவிஞனுடைய இந்த வாரத்தைகளைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்!


What is this life if, full of care,

We have no time to stand and stare.

No time to stand beneath the boughs

And stare as long as sheep or cows.

No time to see, when woods we pass,

Where squirrels hide their nuts in grass.

No time to see, in broad daylight,

Streams full of stars, like skies at night.

No time to turn at Beauty's glance,

And watch her feet, how they can dance.

No time to wait till her mouth can

Enrich that smile her eyes began.

A poor life this if, full of care,

We have no time to stand and stare.

கிட்டத் தட்ட இதே உணர்வுகளைச் சொல்கிற மாதிரி வில்லியம் ஒர்ட்ஸ்ஒர்த் கவிதை வரிகளைக் கொஞ்சம் அனுபவித்துத் தான் பாருங்களேன்! தயாசுரபி என்ற பெயரில் யாகூ! 360 தளத்தில் எனக்கு அறிமுகமான மாதிரி இலக்கிய ரசனையும் விமரிசனத் திறமும் கொண்ட வாசகர்கள் எவரேனும் இங்கே இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள ரகசியமாய் ஒரு ஆசை இருக்கிறது!


The world is too much with us; late and soon,
    Getting and spending; we lay waste our powers:
    Little we see in Nature that is ours;

    
We have given our hearts away, a sordid boon!
    This Sea that bares her bosom to the moon;
    The winds that will be howling at all hours,
    And are up-gathered now like sleeping flowers;
    For this, for everything, we are out of tune;
    It moves us not. — Great God! I’d rather be
    A Pagan suckled in a creed outworn;
    So might I, standing on this pleasant lea,
    Have glimpses that would make me less forlorn;
    Have sight of Proteus rising from the sea;
    Or hear old Triton blow his wreathèd horn.

   The Sonnet by William Wordsworth, 
Miscellenous sonnets 33

கவிதைகளைப் படித்துவிட்டு, அவை தந்த அனுபவங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன்! கேட்போம்!


 

Wednesday, October 27, 2010

நான் என்பதென்ன? நாம் என்பதென்ன?



Self what ? 

இப்படி மார்க் சன்பார்ன்  ஒரு பகிர்வில் எழுப்பி ருந்த கேள்வி, கொஞ்சம் யோசிக்க வைக்கிறது!

இந்தப் பதிவில் மார்க் சன்பார்ன் ஒரு முக்கியமான உளவியல் சார்ந்த கேள்வியை முன்வைக்கிறார். தன்னை மையப்படுத்தித் தன்னிலேயே மூழ்கிக் கிடப்பதும் (Self absorption), தன்னைப் பற்றிய சிந்தனையும் (Self reflection) ஒன்றாகிவிடுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

தன்னைப் பற்றிய யோசனைகளிலேயே மூழ்கிக் கிடப்பது என்பது ன்ன? தன்னைத் தவிர அது வேறெதையும் கணக்கில் எடுத்துக் கொள்வது ல்லை. எல்லாமே தான், தனது என்ற ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே முடிந்து போய் விடுகிறது! ஒரு பாயைச் சுருட்டி வைத்திருப்பது  போல சுருண்டு குறுகிக் கிடப்பது தான் என்கிறார். 

ஒரு உதாரணமாக,பயணம் செய்யும்போது, எவரும் அடுத்தவருக்கு இடைஞ்சலாக இருக்குமோ என்றெல்லாம் கவலைப்படாமல், அல்லது அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய சௌகரியங்களை மட்டும் நீட்டிக் கொள்ள முயற்சிப்பது போலத் தான்! இப்படிப்பட்ட மனோபாவம் சுருக்கமாகச் சொல்வதானால், தன்னுடைய சுயநலத்தை மட்டும் எல்லா வகையிலும் முன்னிறுத்திக் கொள்வது தான்!

சுற்றிக் கவனித்துப் பார்த்தோமேயானால், நம்மில் பெரும் பாலானோரிடம் இப்படிக் குறுக்கிக் கொள்கிற குணம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். கொஞ்சம் தன்னையே கவனிக்கப் பழகினோம் என்றால், இப்படிக் குறுக்குவதில் இருந்து விடுபடவும் முடியும்.

தன்னைக் கவனிப்பது, தன்னைப் பற்றிய சிந்தனை என்பது இந்த சுருண்டு விடுகிற அல்லது குறுக்கிக் கொள்கிற மனோ நிலைக்கு நேர் எதிரானது. தன்னை, மற்றவற்றோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க முடிகிற விசாலமான பார்வையாக, புரிந்துகொள்ள முயற்சிக்கிற விதமாகத் தன்னைக் கவனித்தல், தன்னைப் பற்றிச் சிந்தனை செய்தல் என்பது பரந்து விரிகிறது.  

தன்னை மையப் படுத்தித் தனக்குள்ளேயே சுருண்டு அல்லது குறுகிப் போய் விடுவதற்குச் சரியான மாற்றாக, தன்னை மற்றவற்றோடு சம்பந்தப்படுத்தி பார்க்கப் பழகிக் கொள்வது என்பது ஒரு விசாலமான பாதையை ஏற்படுத்துகிறது இல்லையா? 

இப்படி மார்க் சன்பார்ன் முத்தாய்ப்பாக இன்னொரு கேள்வியை முன்வைக்கிறார்.

சுயநலம் என்பது உயிர் வாழ்வதற்கு அடிப்படையான தேவையாக இருந்தது என்னவோ  வாஸ்தவம் தான்! ஆனால், தங்களுடைய சுயநலத்திலேயே ஒவ்வொருவரும் கண்ணாய் இருந்துவிட்டால் எவருமே ஜீவிக்க முடியாது. 

தனித் தீவுகளாகத் தங்களை மட்டுமே முழு உலகமாக நினைத்துக் கொண்டிருந்தோம் என்றால் தீவுகளிலேயே முழுகிப்போய் விட வேண்டியதுதான்! எல்லோரும் பிழைத்திருக்க வேண்டுமானால், கொஞ்சம் பொதுநலம் கலந்த சுயநலமாக உயர்ந்தால் தான் உண்டு.

ஆனால், நம்மைச் சுற்றி நடப்பதென்ன? கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்! நாமே எப்படி நடந்து கொள்கிறோம் என்பதையும் சேர்த்து யோசித்துப் பாருங்கள்!சுயநலம் ஒன்றை மட்டும் குறிவைத்துச் செயல்படுவதில், இருப்பதையும் பறிகொடுத்து விட்டு நிற்கவேண்டி வருகிற நிலைமையும் வருகிறதா என்பதையும் பாருங்கள்!

மிருகங்களைப் போல தனியாக வாழ மனிதன் படைக்கப் படவில்லை. அதனால் தான், மனிதனை ஒரு சமூகப் பிராணி என்கிறோம். மண்ணில் பிறந்த தருணம் முதல், கடைசி வரை, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைச் சார்ந்தே, ஒரு சமுதாயமாக இயங்கும் வகையில் தான், மிருக நிலையில் இருந்து உயர்ந்து மனிதனாக மாறிய பரிணாமம் இருக்கிறது. ஒரு கூட்டமாக, கூட்டத்தின் நலன் தன்னுடைய நலனை விட முக்கியமானதாக உணரப்படும், செயல் படுத்தப்படும் தருணங்களில் எல்லாம், அந்தக் கூட்டமும் ஜெயித்திருக்கிறது, அதில் இருந்த தனி மனிதனுமே ஜெயித்திருக்கிறான்.

அலெக்சாண்டர் டூமா என்ற பிரெஞ்சுக் கதாசிரியர் எழுதிய The Three Musketeers கதையில் ஒரு முழக்கம்! All for one! One for all! என்று ஒரு கோஷம் வரும்! ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்த நாட்களில், தொழிற்சங்கத்தின் நோக்கமே இப்படித் தனிநபருக்காக அமைப்பும், அமைப்புக்காகத் தனிநபரும் என்ற அஸ்திவாரம் இருந்தால் தான் அந்த நோக்கமே நிறைவேறும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். 

ஒவ்வொரு தனி மனிதனுக்காகவும் அனைவரும்! அனைவருக்குமாக ஒவ்வொரு தனி மனிதனும்!

இப்படி இருவழிப் பாதையாக உயரும்போது  அது ராஜ பாட்டையாகிறது! மாறாக ஒருவழிப் பாதையாகக் குறுக்கிக் கொண்டே போனால், சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் முட்டுச் சந்தாகி முடங்கி விடுகிறது!

சுயநலம் வேண்டியது தான், பொதுநலத்தில் கலந்த சுயநலத்துக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல் படும்போது, அங்கே வெற்றிக்கான பாதை திறக்கிறது.

அப்புறம் என்ன! 

குறுகிய பார்வையைத் தவிர்த்து, ஜெயிக்கலாம் வாருங்கள்!



Saturday, October 23, 2010

ஏழு நிமிடங்கள்! இர்விங் வாலஸ்....!

ஏன் படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம்  என்ற கேள்வியை முந்தைய பதிவொன்றில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஏன், எதற்காக என்பதை விட, எப்படிப் படிக்கிறோம், என்ன படிக்கிறோம், என்ன புரிந்து கொள்கிறோம் என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும் என்ற முத்தாய்ப்போடு அந்தப் பதிவு முடிந்திருந்தது இல்லையா?

இந்தப் பக்கங்களில், பேசப்படும் புத்தகங்கள், கதைகள் வெறும் வாசிப்பு என்ற பொழுது போக்கு அம்சமாக வைத்து மட்டும் பேச முற்பட்டதில்லை. இலக்கியம், திறனாய்வு, விமரிசனம் என்ற ரீதியில் கூட இந்தப் பக்கங்களில் எழுதியதில்லை. வாசித்த ஒவ்வொரு படைப்பும் என்னுள் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியது, சிந்தனையை எந்தெந்த திசைகளில் விரிவுபடுத்திக் கொண்டு போனது என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்.

அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புத்தகத்தைத் தொடர்ந்து மறுபடியும் வாசிப்பதற்காகத் தேடிப் பிடித்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று இர்விங் வாலசின் The Seven Minutes! 


இந்தப் புத்தகத்தின் கதையோட்டம் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஒன்றை அடிப்படையாகக் கொண்ட கோர்ட் ரூம் டிராமா வகை தான் என்றாலும் மறுவாசிப்பு செய்த பிறகு ஆர் டாகுமென்ட் புதினத்தைப் போலவே இந்த நூலும், சில அடிப்படையான கேள்விகளை எழுப்பியதைத் தொடர்ந்து சிந்திக்க முடிந்தது.


ஆர் டாகுமென்ட் புதினத்தைப் பேசும் போது, இந்தியாவில் இந்திராகாந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை, அப்படி ஒரு நிலை அமெரிக்காவிலும்  வந்தால் என்ற ரீதியில் கற்பனை செய்து எழுதப்பட்ட கதை என்பதைப் பார்த்திருக்கிறோம். இங்கே 42 வது அரசியல் சாசனத் திருத்தம் அங்கே அமெரிக்காவில் 35 வது அமெண்ட்மென்ட் என்று கதைக் களத்தை, அமெரிக்க அரசியல் சூழலோடு நகர்த்திக் கொண்டு போனதை ஏற்கெனெவே இங்கே பார்த்திருக்கிறோம்.



இங்கே இந்தியாவில் 1975 களில் இந்திரா காந்தி தனக்கு வந்த சொந்த அரசியல் நெருக்கடியை, ஏதோ தேசத்துக்கே  வந்து விட்ட மாதிரி, அவசர நிலைப் பிரகடனம் செய்த கதை இதைப் படிக்கும் வாசகர்களில் பெரும்பாலானோருக்கு எங்கேயோ  கேள்விப் பட்ட மாதிரித் தான் தோன்றும். பச்சையாகச் சொல்லப் போனால், நெருக்கடி நிலை, அதன் கொடூரமான தன்மை, அதை உறுதியோடு எதிர்த்து ஜெய பிரகாஷ் நாராயணன் மாதிரி காந்தீயவாதிகள் நடத்திய போராட்டம் பற்றி இங்கே எவருக்குமே முழுதாய்த் தெரியாது. இரண்டாவது சுதந்திரப் போர் என்று சொல்லப் படுவதற்கு முழுத் தகுதியும் உள்ள  அந்த நாட்களில் நடந்த போராட்டங்களைப் பற்றி பேசுவாரைக் காணோம். அதை நினைத்துப் பார்த்து, மறுபடியும் அதே மாதிரி சூழ்நிலை உருவாகுமேயானால், அதை எதிர்கொள்ளத் தயார் செய்து கொள்ளும் பக்குவமும், முதிர்ச்சியும் இந்திய ஜன நாயகத்தில் இன்னமும் ஏற்படக் காணோம்!  


மிட்டாய் கொடுத்துக் குழந்தைகள் கழுத்தில், காதில் இருப்பதைத் திருடும் திருடர்களைப் போல, இலவசங்கள், சலுகைகள் என்று கவர்ச்சி மிட்டாய்களைக் கொடுத்து மொத்தத்தையுமே சுருட்டிக் கொண்டு போகிறவர்களாக இங்கே உள்ள அரசியல் வாதிகள், அதைக் கண்டும் காணாமல் ஏமாந்து நிற்கிறவர்களாக ஜனங்கள் என்று இங்கே ஜனநாயகக் கூத்து நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் கூட, அந்த இருபது மாத இருண்ட காலத்தின் நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகள், மூடி மறைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றன. அதைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தோ, அதைப் பற்றிய கருத்துக்களைத் தைரியமாக முன்வைத்தோ புத்தகங்களைத் தேடினால், ஏமாந்து தான் போவீர்கள்! 


அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் இந்திரா ஏதோ சாட்டையை சுழற்றி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைப் பொறுப்போடு செயல் படுத்த வைத்த மாதிரியும் ஒரு வித மாயை ஏற்படுத்தப்பட்டது. கரீபி ஹடோ (வறுமையே வெளியேறு) என்று  கோஷம் எழுப்பிப் போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஓட்டியதும், வறுமை பயந்து வெளியேறிவிட்ட மாதிரி ஒரு தோற்றம் உருவாக்கப் பட்டது. தேசத்துக்கு வந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு, அரசியல் சாசனம் உறுதிப் படுத்திய அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப் பட்டது, கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டது. 

கோயபல்சை மிஞ்சும் வகையில் காங்கிரஸ்காரர்கள் இன்று வரை பரப்பி வரும் பொய்களில் ஒன்று,ஒரு சாம்பிளுக்காக, காங்கிரஸ் ஒன்றினால் தான் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்பது!

நெருக்கடி நிலை பற்றி  இன்னொரு சுவாரசியமான, அதிகம் வெளியில் தெரியாத தகவலும் உண்டு. இந்திரா காந்தி தன்னுடைய சொந்த அரசியல் ஆதாயத்துக்காகக் கொண்டு வந்த நெருக்கடி நிலை நிறையப்பேர் நினைப்பது போல முதலாவது அல்ல! இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலை, இருபது மாதங்களே நீடித்தது! காந்தியவாதியும், வினோபா பாவேயின் சீடருமான ஜெயப் பிரகாஷ் நாராயணன், நெருக்கடி கால சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டத்தைத் தலைமை
ஏற்று நடத்தினார்.

அதற்கும் முன்னால், இந்திய சீனப் போரின் போது 1962 ஆம் ஆண்டிலும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்டது. 1968 ஆம் ஆண்டு ரத்து செய்யப்படும் வரை, ஏறத்தாழ ஐந்தரை ஆண்டு காலம் அமலில் இருந்த இந்த நெருக்கடி நிலையின் பாதிப்பு, சாதாரண ஜனங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சீனாவிடம் அசிங்கமாகத் தோற்ற நேருவின் கோழைத் தனம், வெறும் ஜம்பத்துக்கு மட்டுமே இருந்த ராஜ தந்திரம், போரில் ஏற்பட்ட பின்னடைவுகள், அவமானங்களைப் பற்றிய செய்திகள் மட்டுமே வெளியிடத் தடை இருந்தது. பத்திரிகைகளை முடக்கவில்லை, அடிப்படை உரிமைகள் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் சமயம் ரத்து செய்யப் பட்டிருந்தாலும் கூட, அப்படி ரத்து செய்யப் பட்டதற்கான  எந்த அறிகுறியுமே இல்லாமல் சேதம் இல்லாமல் இருந்த ஐந்தரை ஆண்டுகள்! 

அன்றைக்கு, கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்து, அதில் ஒரு தரப்பு இன்னொரு தரப்பை சீன ஆதரவாளர்களாக முத்திரை குத்தி, அல்லது ஆள் காட்டியதில் சில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள் என்பதைத் தவிர வேறு கைதுகள், கோரங்கள் எதுவுமே இல்லை. 

ஐந்தரை வருடங்கள், நாட்டில் நெருக்கடி நிலை என்று ஒன்று இருந்ததோ, அது எதற்காக இருந்தது என்பதோ ஜனங்களுக்கு தெரியவே இல்லை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், 1962 இல் பிரகடனப்படுத்தப் பட்ட நெருக்கடி நிலைமை, நேரு ஒரு கோழை என்பதை வெளிப்படையாக ஜனங்கள் தெரிந்துகொள்ள முடியாமல், நேருவின் so called புனித பிம்பத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக மட்டுமே இருந்தது. அதிகாரிகளின் கூழைத் தன்மையை எடுத்துச் சொல்வதாக மட்டுமே இருந்தது. முழுக்க முழுக்க சர்வாதிகாரமாக மாறி விடவில்லை.  

ஆனால் இரண்டாவது தரம் பிரகடனப் படுத்தப்பட்ட நெருக்கடி நிலையோ பூனைக்குப் பிறந்த மகள், இந்திரா காந்தி தன்னைப் பாயும் புலியாகக் காட்டிக் கொள்ள நடத்திய வெறியாட்டமாகத் தான். அமலில் இருந்த அந்த இருபது மாதங்கள் இருந்தது. ஆர் டாகுமென்ட் புதினத்தை மறுவாசிப்பு செய்தது,  இதை மறுபடி நினைத்துப் பார்க்க ஒரு கருவியாக இருந்தது.

ஆர் டாகுமென்ட் புத்தகத்தோடு, இன்னும் சில நூல்களுக்கும் ஆர்டர் கொடுத்திருந்ததில், இர்விங் வாலஸ் எழுதிய The Seven Minutes புதினமும் ஒன்று!



காமம், போர்னோ என்றாலே முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு, அதே நேரம் திருட்டுத் தனமாகப் படிக்கும் இயல்பு இங்கே நிறையப் பேருக்கு இருக்கிறது. அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்று காமம், காமக் கதைகள் என்று கூகிளிட்டுப் பார்த்தாலே அந்த இயல்பு புரிந்துவிடும். புத்தகங்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் கூட அம்மா மகன் உறவுக் கதைகள் என்று குறியீட்டுச் சொல்லை வைத்துப் பதிவுகளைத் தேடுகிற "தேடல்களை" நிறையவே பார்த்திருக்கிறேன். 

ஏழு நிமிடங்கள் என்ற இந்தப் புதினம் கூட, அப்படி போர்னோ என்றழைக்கப்படும் ஒரு கதைப் புத்தகம், அதை விற்பனை செய்த ஒரு கடைக்காரர், அதைப் பதிப்பித்த வெளியீட்டாளர், அவருடைய நண்பரான வழக்கறிஞர், அரசியலில் குதிக்க விரும்பும் ஒரு அரசு வழக்கறிஞர், என்று வரிசையாகப் பாத்திரங்களை அறிமுகம் செய்து கொண்டே ஒரு கைது, ஒரு கற்பழிப்பு, ஒரு மரணம், அதைத் தொடரும் வழக்கில், இந்த ஆபாசப் புத்தகம் முக்கிய குற்றவாளியாக ஆக்கப்படும் விந்தையை, ஒரு கோர்ட் ரூம் ட்ராமாவாக எழுதப் பட்டது தான் இர்விங் வாலஸ் எழுதிய ஏழு நிமிடங்கள்!  

1971 இல் இதைத் திரைப்படமாக்கிய இயக்குனர், கதையின் மைய நீரோட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததாலோ என்னவோ, வெறும் சொதப்பலாகிப் போனது தனிக் கதை!


கதை என்று பார்க்கப் போனால், வழக்கமான இர்விங் வாலஸ் பாணியிலான ஒன்று தான்! ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டு, பாத்திரங்களை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டே, கதையை நகர்த்திச் செல்லும் கோர்ட் ரூம் டிராமா தான்!
இப்போது படிக்கும் போது கூட இந்த கோர்ட் ரூம் டிராமா நன்றாகத் தான் இருக்கிறது!

கதை சொல்கிற போதே, ஆசிரியர் சில கேள்விகளை கதா பாத்திரங்களின் வழியாக எழுப்புகிறார், வாசகர்களை யோசிக்க வைக்கிறார் என்ற வகையில் வித்தியாசப்பட்டு நிற்பதாக சில படைப்புக்கள் இருக்குமல்லவா! அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புதினத்தைத் தொடர்ந்து, இந்த நூலில் எடுத்துக் கொண்ட விஷயம், கருத்து சுதந்திரம்,  இலக்கியங்கள், அதில் ஆபாசம் என்று சமூகத்தால் ஒரு கால கட்டத்தில் நிராகரிக்கப் பட்டு, அப்புறம் ஏற்றுக் கொள்ளப் பட்டவை, எது ஆபாசம், அதை எப்படி, எவர் நிர்ணயிப்பது போன்ற சில கேள்விகள் இந்தப் புத்தகத்தின் மையக் கருவாக இருக்கிறது.

மைகேல் பாரெட், ஒரு திறமையான வழக்கறிஞர். வசதி படைத்த தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தருணம். அந்தத் தொழிலதிபரின் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள முடிவும் செய்து, வழக்கறிஞர் ப்ராக்டிசை நிறுத்திக் கொள்ள உத்தேசித்திருக்கும் தருணத்தில் புத்தகப் பதிப்புத் துறையில் இருக்கும் பழைய நண்பரிடம் இருந்து அவருடைய உதவியைக் கேட்டுத் தொலை பேசியில் அழைப்பு வருகிறது.

நண்பர் வெளியிட்ட  ஏழு நிமிடங்கள் என்ற புத்தகத்தை விற்பனை செய்த கடைக்காரரைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பெண்கள் உரிமை பற்றிக் குரல் எழுப்பும் அமைப்பு ஒன்றின் தலைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் புத்தகம் ஆபாசமானது, விற்றது குற்றம் என்ற ரீதியில் கைது நடந்திருக்கிறது.

நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், அந்த வழக்கை மைகேல் பாரெட் எடுத்துக் கொள்கிறார். டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் (நம்மூர் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவி மாதிரி) பேசி,  குற்றத்தை ஒப்புக் கொள்வதாக ஒரு சமரசம் பேசி, புத்தகக் கடைக்காரரை வெளியில் கொண்டு வந்து விடுவது என்ற யோசனையை முடிவெடுக்கிறார். எல்மோ டங்கன் என்ற டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியும் பாரெட்டின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பரிசீலிப்பதாக உறுதி அளிக்கிறார். ஆனால், அடுத்தடுத்து நிகழும் சில சம்பவங்கள் ஒரு சாதாரணமான கைது விவகாரத்தை வேறு வேறு திசையில் வெகு வேகமாக இழுத்துக் கொண்டு போகின்றன.

இன்னொரு தொழிலதிபர், எல்மோ டங்கனை, அரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்கிறார். எல்மோ டங்கனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு, ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி, வெற்றி வேட்பாளராக அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு இளம்பெண் கற்பழிக்கப் பட்ட நிலையில், மரணமடைகிறாள். அவளைக் கற்பழித்த இளைஞன் காரில், ஏழு நிமிடங்கள் என்ற கதைப் புத்தகம் கிடைக்கிறது. அந்த இளைஞனை அப்படிக் கொடூரமான செயலுக்குத் தூண்டியதே, ஆபாசமான அந்தப் புத்தகம் தான் என்று வழக்கு திசை திரும்புகிறது.

டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் பேசி, புத்தகம் விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டு, மிக லேசான அபராதத்தோடு விடுதலை செய்து விடலாம் என்ற நிலை மாறி, புத்தகம், புத்தகத்தை விற்பனை செய்தவர்  இருவருமே கற்பழிப்பு, கொலைக் குற்றத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. பாரெட்டின் காதலி, அவளுடைய தகப்பனார் இருவரும், பாரெட் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டு, அவர்களுடைய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடென்ட் பொறுப்பை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வழக்கறிஞராகக் கடமையா காதலா என்ற கேள்வியோடு, உத்தரவாதமான வருமானம்,செல்வாக்குடன் கூடிய வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா இல்லை சுதந்திரமாக தொழில் செய்ய முடிவெடுப்பதா என்ற கேள்வியும் எழுகிறது. பாரெட்டின் நண்பர், ஏழு நிமிடங்கள் என்ற அந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தைப் பதிப்பித்தவர், தன்னுடைய இக்கட்டான நிலையை எடுத்து சொல்லி, பாரெட்டைத் தவிர வேறு எவருமே, அந்த வழக்கை எடுத்து நடத்துவதில் தனக்கு நம்பிக்கை இல்லை, தனக்காக இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்.

ஆபாசம், சர்ச்சைக்குரியது, ஒரு இளம்பெண் கொடூரமாகக் கற்பழிக்கப் படத் தூண்டுகோலாக இருந்த அளவுக்கு குற்றம் உள்ளது என்று சொல்லப் படும் "ஏழு நிமிடங்கள்" என்ற அந்தப் புத்தகத்தை மைகேல் பாரெட் படித்துப் பார்க்கிறார். ஒரு இளம் பெண், தான் உடலுறவு கொண்ட  தருணங்களில் உச்சத்தை அடையும் அந்த ஏழு நிமிடங்களைப் பற்றித் தனக்குத் தோன்றும் எண்ணங்களைப் பதிவு செய்கிற விதத்தில் எழுதப் பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில், மற்றவர்கள் குதிப்பது போல ஆபாசமானதோ, குற்றத்தைத் தூண்டுவதாகவோ எதுவுமில்லை என்று அபிப்பிராயப் படும் பாரெட், தன்னுடைய காதலி, காத்திருக்கும் செல்வாக்கான உத்தியோகம் இரண்டையும் துறந்து, அந்தப் புத்தகத்துக்காக, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, வழக்கை எடுத்து நடத்துவது என்று முடிவு செய்கிறார்.

எல்மோ டங்கனை  அரசியலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும் தொழிலதிபரின் செல்வாக்கினால், அரசுத் தரப்புக்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. வாடிகனில் இருந்து திருச்சபையின் ஆதரவையும் தெரிவித்து ஒரு பாதிரியார், சாட்சியமளிக்கவும் முன்வருகிறார்.

இப்படி நீதி மன்ற விசாரணை, தன்னுடைய தரப்புக்கு ஆதரவாக சாட்சியங்களை மைகேல் பாரெட் தேடியலைவது என்று மாறிமாறிக் கதை நகர்கிறது. இதற்குமேல் கதையைப் பற்றி எழுதுவது, மொத்தக் கதையையும் இங்கேயே சொல்லி விடுவது போலாகி விடும் என்பதால் இந்த மட்டோடு நிறுத்திக் கொள்வோம்.

கதையின் முடிவில் தெரிய வரும் ஒரு சஸ்பென்ஸ் முடிச்சு மிக சுவாரசியமாகஇருக்கிறது.

1969 இல் வெளியான இந்தப் புதினத்தை இன்றைக்குப் படிக்கும் போது கொஞ்சம் மெதுவாக நகர்கிற மாதிரி இருக்கிறது என்பதைத் தவிர, இர்விங் வாலசின் கதை சொல்லும் பாணியில் இருக்கும் வழக்கமான சுவாரசியம் இதிலும் இருக்கிறது! கதை சொல்லும் போதே, சில அடிப்படைக் கேள்விகளைப் படிப்பவர்கள் மனதில் விதைத்துக் கொண்டே போகும் இர்விங் வாலசின் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.

இந்தப் புத்தகத்தை, இப்போது மறுவாசிப்பு செய்த பிறகு எனக்குள் எழுந்த சிந்தனை, இந்தக் கதையைப் பற்றியது மட்டுமே அல்ல! ஆபாச எழுத்து, கிளர்ந்தெழச் செய்யும் எழுத்து, கலகத்தை விதைக்கும் எழுத்து என்றெல்லாம் குற்றம் சொல்கிறோமே, அதை எல்லாம்  எதை வைத்து வரையறை செய்வது? கருத்து சுதந்திரம்
என்றெல்லாம் சொல்கிறோமே அது எது வரை? அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறோமே அதற்கு அர்த்தம் என்ன? ஏதோ ஒரு சட்டப் புத்தகத்தில் அல்லது அரசியல் சாசனத்தில் எழுதி வைத்து விடுவதாலேயே நமக்கு அளிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமாகி விடுமா, அல்லது நாம் தான் அவைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?

ஆர் டாகுமென்ட் புதினத்தைப் படித்து முடித்த
கையோடு  இதைப் படித்ததால் மட்டுமே இந்தப் புத்தகம் எனக்குள் இப்படிப்பட்ட யோசனைகளைக் கிளப்பியதா அல்லது தன்னளவிலேயே இந்தப் புத்தகம் இந்தக் கேள்விகளை எனக்குள் எழுப்பியதா?

The Seven Minutes!

இந்தப் புத்தகம், பெங்களூரு வாசன்  பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக, இந்தியப்பதிப்பிலேயே தற்சமயம் கிடைக்கிறது.



 

Saturday, October 16, 2010

சகல காரிய சித்தியும், மங்களமும் அருளும் சகலகலாவல்லி மாலை!


துர்க்கா லக்ஷ்மி சரஸ்வதி என்று நவராத்திரி நாயகியரை ஒன்பது நாட்களில் ஒன்பதுவிதமாக வழிபட்டு வருவதில், ஒன்பதாவது நாளான இன்று கலைமகளான சரஸ்வதியை, அறிவின்மை, அஞ்ஞானமாகிய இருளை, அறிவின்மையோடு சேர்ந்து எழும் அகந்தையை வதம் செய்து அகற்றியபின் வரும் வெளிச்சமாக, வழிபடும் நாள்.

பெண்மையைத் தாயாகக் கொண்டாடிய தேசம் இது! தாயாக அருள்பாலிக்க வேண்டும் அம்மா என்று எல்லோருக்குமாகப் பிரார்த்தனை செய்யும் நாளாக இன்றும், நாளை வெற்றித் திருநாளாக விஜயதசமியாகவும் கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், வாசிப்பு, வாசித்ததைப் பகிர்ந்துகொள்ளும் இந்தத் தளத்திலும் கலைமகளை வழிபடுவதுதானே முறை!

குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலையை இந்த நன்னாளில் பகிர்ந்து கொண்டு, நான்மறை அறங்கள் ஓங்கவும், நற்றவம் வேள்வி மல்கவும் தீமைசெய் இழிநிலையைப்  புறந்தள்ளி  வெற்றி மேல் வெற்றியை பாரதத் திருநாடு பெறவும் ஸ்ரீ அன்னையை இறைஞ்சுவோம்! கலைமகளுடைய அருளைப் பெற, குமரகுருபரர் சகலகலாவல்லி மாலையைப் பாடிய கதையும் கூட கொஞ்சம் அற்புதம் தான்!


குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது ஷா ஜஹான் டில்லியில்  முகலாய பாதுஷாவாக இருந்தார்.

அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக ஆளுனராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வேண்டிய  உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமர குரு பரருக்கோ  ஹிந்துஸ்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி 'சகலகலாவல்லி மாலை'யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது.

தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்து கொண்டு தாரா ஷிக்கோஹ்வைக் காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா ஷிக்கோஹ் மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார்.

அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால் தான் குமரகுருபரர் தாரா ஷிக்கோஹ்விடம் விசேஷ அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் 'காசிமடம்' என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது.

சகலகலாவல்லி மாலை பத்துப் பாடல்களைக் கொண்டது, கட்டளைக் கலித் துறையில் இயற்றப் பட்டது. கலைமகளுடைய அருளால், தடைகள் நீங்கிக் காரிய சித்தி பெறத்துணை  செய்வதாக இருந்ததைச் சொல்வதாக இந்த நிகழ்வு இருக்கிறது. 

க்ஷிப்ரப்ரசாதின்யை நம: வேண்டத்தக்கது அறிபவளும் வேண்டுவ முழுதும் தருபவளுமாக அன்னை மகாசக்தி நம் எல்லோருடைய ஹ்ருதயத்திலும் நிறைந்து அருள் பாலிப்பாளாக!

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
இயற்றிய
சகலகலாவல்லி மாலை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6


பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10



Monday, October 11, 2010

ஏன் படிக்கிறோம்? எதற்காகப் படிக்கிறோம்?

புத்தகங்களை ஏன் படிக்கிறோம்? எதற்காகப் படிக்கிறோம்?

இந்தக் கேள்வியை வைத்துக் கொண்டு "கூட்டாஞ்சோறு" ஆர்வி புத்தகங்களுக்கான தன்னுடைய தனி வலைப்பதிவில் ஒரு தொடர் பதிவாக எழுதியிருக்கிறார்.

இந்தக் கேள்வியே எனக்குக் கொஞ்சம் வினோதமாகத் தான் தெரிகிறது. என்னுடைய சிறுவயதில் இருந்தே என்னுடைய அண்ணன்மார்கள் இடமிருந்து புத்தகம் படிக்கும் பழக்கத்தை எனக்கும் தொற்றி விட்டதால் இந்தக் கேள்வி விநோதமாக இருக்கலாம். ஆனால் புத்தகம் படிப்பது மட்டும் இல்லை, எந்த ஒரு பழக்கத்திற்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களே முன்னோடிகளாக ஆரம்பித்துக் கொடுக்கிறார்கள், நாம் நமது சூழ்நிலை, ஆர்வத்திற்குத் தகுந்த மாதிரி இந்தப் பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறோம் அல்லது மறந்து விடுகிறோம் என்பது தான் சரியான பதிலாக இருக்கும் என்று தோன்றுகிறது.


புத்தகங்கள் வாசிக்கும் வழக்கத்தை கைக் கொண்டிருப்பவர்களிடம், அந்த வாசிப்பு அனுபவத்தைப் பற்றிக் கேட்டால் எல்லோராலும் ஒரேமாதிரி சொல்ல முடிவதில்லை, ஆனாலும் வாசிப்பில் லயிப்பது போல ஒரு சுகானுபவம் வேறில்லை என்பதை அத்தனை பெரும் ஒருமித்துச் சொல்லுவார்கள்.

"உயிர் வாழ மூச்சு மிகவும் அவசியம்தான் இல்லையா?

அப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வாசிப்பு அனுபவம் தான்! சிலர் வாழ்க்கையைப் படித்தே அறிந்து கொள்கிறார்கள்! வேறு பலருக்கோ, புத்தகங்களை வாசித்தே வாழ்க்கையை அறிந்து கொள்கிற அனுபவம் வாய்க்கிறது. வாசிப்பதில் ஆழ்ந்து லயிக்கும்போது அதை யாருடனாவது பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பு, மடி கனத்துப் போன பசுவைப் போல, எழுதத் தூண்டுகிறது.

வாசித்ததும், நேசித்ததுமான சில அனுபவங்கள் இந்தப்பக்கங்களில்!

புத்தகங்கள், கவிதைகள் என்று மட்டுமல்ல, மன வளம் பெருக உதவியாகக் கிடைக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் சுவாசக் காற்றாக! 


புத்தகங்கள், கவிதை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எதில் வேண்டுமானாலும், படித்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இன்னும் அதிக விஷயங்களைத் தெரிந்து கொள்ளவுமான நுழைவாயில் இது! "

இப்படி ஒரு அறிமுகத்துடன் தான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்து வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன். வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிற வலைப் பதிவுகள் மிகக் குறைவாகவே இருந்தாலும் கூட, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து, தான் அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதாக இருக்கின்றன. தமிழில் விமரிசனக்கலை, விமரிசனத்துறை  சரியாக வேர்பிடித்து வளரவில்லை என்று சிலர் குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.அப்படிச் சொல்பவர்களே தங்களைப் பற்றிய விமரிசனங்களை சகித்துக் கொள்வதில்லை. இங்கே தமிழில் படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் உள்ள குறைகளை விமரிசிப்பதை, தங்களையே தனிப்பட விமரிசிப்பதுபோல எடுத்துக் கொண்டு ஒருவிதமான விரோதத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்த்தால் ஏன் விமரிசனத்துறை இங்கே வேர் பிடிக்கவில்லை என்பதுமே புரியும்.

இங்கே தமிழில் இலக்கிய விவாதங்கள் என்று பார்த்தால், புத்தக மதிப்பீடு என்று பார்த்தால், பெரும்பாலும் தனிநபர் துதியாகவோ அல்லது தனிநபர் வசைபாடலாகவோ இருப்பது இன்னும் போதிய முதிர்ச்சியை, படைப்பாளிகளே அடையவில்லை என்பது தெளிவாகவே புரிய வைத்த சில விஷயங்களை சமீபத்தில் பார்த்தேன்.

ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், எழுத்தாளர் ஜெயமோகன் போகிற போக்கில் கல்கியை ராஜேஷ் குமார் ரேஞ்சுக்குக் கீழே தள்ளிவிட்டுப் போய் விடுகிறார். சுஜாதாவுக்கும் அதே கதிதான்! கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால்,  இலக்கிய விமரிசன
ம் கட்டும், இலக்கியம் படைப்பதிலாகட்டும்,தன்னைத் தவிர வேறு யாருமே இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது மட்டுமே மிச்சம் என்பது தெரியும். 
தி.ஜானகிராமனுடைய எழுத்துக்களில், "காமம் முதிர்ந்த பெண்களை" மட்டுமே இவர்களால் பார்க்க முடிகிறது  என்பது எழுதியவரின் குறையா அல்லது பார்ப்பவரின் குறையா? 

தி.ஜானகிராமனை படிப்பவர்களுக்கு, அவர் பெண்மையை வியந்து தலைமேல் வைத்துக் கொண்டாடிய அந்த அற்புதம் நன்றாகவே புரியும். புரியாதவர்கள், உயிர்த்தேன், அன்பே ஆரமுதே, நளபாகம் இந்த மூன்று புதினங்களில் ஏதாவது ஒன்றைப் படித்துவிட்டு அப்புறமாக அபிப்பிராயம் சொல்லட்டும்!

ஜெயமோகன் செய்யும் மொத்த விமரிசனமுமே இப்படித் தான் என்று முத்திரை குத்திவிட்டுப் போய்விட முடியாதபடிக்கு, அவருடைய வாசிப்பு அனுபவம், அவர் புரிந்து கொள்ள முயற்சிக்கும் விதம் இவற்றைப் பார்க்கும்போது, அவருடைய வாசிப்பின் பரந்த தளம் நன்றாகவே தெரிகிறது. ஆனால், முடிவுகளை முன்வைக்கும் விதம், சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. முக்கியமாக, ஒரு எழுத்தாளர் எழுதிய காலச் சூழலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இன்றைய அளவீடுகளின் படி விமரிசிப்பது கொஞ்சம் சரியில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

வாசிப்பது எதற்காக? ஆரம்பிப்பது என்னவோ பொழுதுபோக்குக்காக  என்று தான் ஆரம்பிக்கும்! அப்புறம், வாசிக்கும்போதே, எழுத்தாளரின் எழுத்துக்களின் வழியாக ஒரு புதிய உலகத்தைப் பார்க்க முடிகிற அனுபவம் வரும்போது, வாசிப்பு, வெறும் பொழுதுபோக்கு என்ற நிலையில் இருந்து உயர்ந்து, தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியாகப் பரிணமிக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களைப் பார்த்து எழும் கோபம், கதையில் வரும் ஏதோ ஒரு கதாபாத்திரத்தோடு ஒன்றி, அந்தப்பாத்திரம் கதையில் ஆவேசப் படும்போது, போராடும்போது தன்னையே அந்தப் பாத்திரத்தில் வைத்துப் பார்க்க ஆரம்பிக்கும் நிலை  என்று வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது.

ஒரு உதாரணத்துக்காக, இர்விங் வாலஸ் எழுதிய தி ஆர் டாகுமென்ட்  புதினம், இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டதை வைத்து, அதே மாதிரி அமெரிக்காவிலும் நடந்தால் என்ற ரீதியில் கற்பனை விரிகிறது. சம்பவங்கள் என்னவோ கற்பனை தான், ஆனால் சாத்தியங்கள் என்று பார்க்கும்போது உண்மை கற்பனையை விட விசித்திரமானது என்ற கூற்றுக்குத் தெளிவான விளக்கம் கிடைக்கிறதே! 

ஆர் டாகுமென்ட் புத்தகம் 1976 இல் வெளி வந்த போது அது இந்தியாவில் தடைசெய்யப் பட்டிருந்ததாக மட்டும் தெரியும். 1985 வாக்கில் தான் புத்தகத்தை முதன்முதலாக வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இப்போது அந்தப் புத்தகத்தை மறுபடியும் வாசித்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது. கற்பனையை விட நிஜம் மிகவும் விசித்திரமானது என்பதை மறுபடியும் கண்டு கொண்டேன்!

இப்போது கூட இந்தியாவில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இந்திரா காந்தி கொண்டுவந்த எமெர்ஜென்சி நாட்கள், அந்த இருபத்தொரு மாதங்கள் நீடித்த இருண்ட காலத்தைப் பற்றி முழு விவரங்களும் வெளியே வரவில்லை. இந்திய சீனப்போர் 1962 இல் நடந்ததைப் பற்றிய முழுவிவரங்களும் இன்னமும் வெளியே வரவில்லை. நேரு குடும்பத்தினர் பெருமையைக் குலைக்கிற எதையும் வெளியே விடுவதில்லை என்று என்னதான் பூட்டி வைத்தாலும், அத்தனை தணிக்கை, தடைகளையும் மீறி விஷயங்கள் வெளியே கசிந்துகொண்டுதானிருக்கின்றன.

இந்தப்பதிவுகளில் அறிமுகமான புத்தகங்களை எடுத்துக் கொண்டால், வெறும் புத்தக மதிப்புரை, அல்லது திறனாய்வு என்ற ரகத்தில் எதையுமே தொட்டுப் பேசவில்லை. ஒவ்வொரு புத்தகமும் எனக்குள் எழுப்பிய சிந்தனை, அல்லது தாக்கத்தை மட்டுமே பதிவு செய்து வந்திருக்கிறேன் என்பது எனக்கே தெரிகிறது. வாசிப்பவை எல்லாம் இலக்கியங்களாகத் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அதைப் பேசுவதும் இலக்கிய விமரிசனமாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்றெல்லாம் அடைமொழியிட்டு அல்லது பிற்போக்கு முத்திரை குத்தி ஒதுக்கிவிட்டு போய்விட வேண்டிய அவசியமும் இல்லை.

அப்புறம் வாசிப்பது என்பதுதான் எதற்காக?

நம்முடைய முகத்தை அவ்வப்போது கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறோமே, அது போலத்தான்!

நம்மைச் சுற்றியுள்ள சமுதாயம், அதைப் பற்றிய பிரக்ஞை அல்லது கற்பனையில் பார்க்க முயற்சிப்பதைத் தவிர வாசிப்பு என்பது வேறென்னவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?



இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)