மரத்தினில் நாகம், நிலத்தினில் வேங்கை என்ற நிலையில் தவித்துக் கொண்டிருப்பவர்கள் இடதுசாரிகள். பாஜகவும் எதிரி. காங்கிரசும் எதிரி என்பது மட்டுமல்ல பிரசினை. தேர்தல் அரசியலா? சித்தாந்த அரசியலா என்று தீர்மானிக்க முடியாமல் பலப் பல ஆண்டுகளாகத் திணறிக் கொண்டிருக்கிறார்கள் இடதுசாரி அறிவுஜீவித் தோழர்கள்
மரத்தினில் நாகம் கதையில் வருவது போல இடறி விழுந்தவன் வாயில் தேன் கூட்டடிலிருந்து சிந்திய துளிகள் போல அவர்கள் ஐந்து இடங்களில் வென்றிருக்கிறார்கள். அதில் நான்கு திமுகவால், தமிழகத்தில் கிடைத்தது.
அவர்களின் வலுவான கோட்டைகளான வங்கம், திரிபுராவில் ஓரிடம் கூட அவர்களால் வெல்ல முடியவில்லை.கேரளத்தில் 10474 வாக்கு வித்தியாசத்தில் ஒருவர் வென்றிருக்கிறார். மற்ற மாநிலங்க்களில் ஒரு இடம் கூட இல்லை. ஊடகங்களால் கொண்டாடப்பட்ட இளம் தோழர் கன்னையா குமார் பிகாரில் களம் இறங்கி தோற்றுப் போனார்.
இடதுசாரிகளின் தோல்விகள் அவர்களுக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைத் தக்க வைக்குமா என்ற ஐயத்தை எழுப்பியிருக்கிறது.
இடதுசாரிகளின் தோல்வி அவர்கள் சமூக யதார்த்தங்களிலிருந்து விலகி நிற்கிறார்கள் அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் அல்லது புரிந்து கொண்டாலும் ஏற்க மறுக்கிறார்கள் என்ற மூன்று வகையான கருத்துக்களை நண்பர்கள் சிலர் என்னிடம் தனிப்பட்ட விவாதங்களில் சொன்னார்கள்.
மூன்றுமே காரணமாக இருக்கலாம். ஆனால் நாம் இனி சோஷலிச உலகத்திற்குத் திரும்ப இயலாது என்பதையும், உலகமயமாக்கல் மனிதர்களை வேரற்றவர்களாக ஆக்கும் போது அவர்கள் பாதுகாப்புணர்வின் காரணமாக ஏதேனும் ஓர் அடையாளத்தைப் பற்றிக் கொள்வார்கள் அது இந்தியா போன்ற தொன்மையான கலாசாரத்தில் முதன்மையான அடையாளமான மதமாக இருக்கும் சாத்தியம் அதிகம் என்பதையும் அவர்கள் அறிந்திருப்பார்கள்.
நான் கடந்த ஆண்டு சீனம் சென்றிருந்த போது பெய்ஜிங்க்கில் உள்ள ஒரு ஆலயத்திற்குச் சென்றிருந்தேன்.தாவோ மதப்பிரிவினரின் ஆலயம். அவர்களுக்கும் செல்வம் கொடுக்க, நோய் தீர்க்க, கல்வியில் சிறக்க என்று வெவ்வேறு வித புத்தர்கள் / கடவுளர்கள் உண்டு. இந்துக்களுக்கு தனம் தரும் லட்சுமி போல அவர்களுக்கு தாரா. அவர்களும் இந்துக்களைப்போல நேர்ந்து கொள்ளல், விரதம் இருத்தல், வேண்டிக் கொள்ளல், பெளர்ணமி அன்று சிறப்பு வழிபாடு இவற்றை மேற்கொள்ளுகிறார்கள். மாவோவின் மண்ணிலிருந்து மத நம்பிக்கைகளை கம்யூனிசத்தால் மாற்ற இயலவில்லை. வலதுசாரிப் பாதைக்குத் திரும்பியிருக்கிற இந்தியாவில் மக்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகள், அடையாளங்களை, ஆதரவை எளிதில் விட்டுவிட மாட்டார்கள்.
இடதுசாரிகளின் தோல்விக்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது அவர்களுடைய பலவீனமான அமைப்பு.கூட்ட்ணி இல்லாமல் அவர்களால் எந்தத் தேர்தலிலும் வெல்ல முடியாது. ஆட்சி அமைக்கும் சாத்தியங்கள் இல்லாதவர்களுக்கு கட்சி சாராத வாக்காளர்கள் வாக்களிக்கத் தயங்குவார்கள். இடதுசாரிகளுக்கு அரசு அமைக்கும் வாய்ப்பு (கேரளம் தவிர்த்து) எங்கும் இல்லை.
அவர்கள் பக்க வாத்தியமாகவே தொடர வேண்டிய நிலையில் இருக்கும் அவர்கள் தீட்டிய மரத்திலேயே பதம் பார்த்த வரலாறுகள் உண்டு. அதிமுகவோடு கூட்டணி வைத்தவர்கள் அதிமுகவை எதிர்த்தது உண்டு. இன்று திமுக கூட்டணியில் இருப்பவர்கள் 2016 சட்டமன்றத் தேர்தலில் அதை எதிர்த்தவர்கள். இது பொதுமக்களுக்கு அவர்கள் மீதானநம்பிக்கையைத் தகர்க்கிறதுநான்
மீசையை எடுப்பதா, கூழைத் துறப்பதா என்ற முடிவை அவர்கள்தான் எடுக்க வேண்டும்.
இடதுசாரிகள் பற்றி சரியான புரிதல் இல்லாமலேயே இடதுசாரிகளைப் பற்றி பொத்தாம் பொதுவாக மாலன் எழுதியிருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
உங்களுடைய கருத்து என்ன? விவாதக்களம் திறந்தே இருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்.