Tuesday, August 31, 2010

சரித்திரக்கதைகள் என்றாலே சாண்டில்யன் தான்!

"வாசிப்பு அனுபவம் உள்ள எவருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் பரிச்சயமாகி இருப்பதில்  அதிசயமில்லை!.

கல்கிக்கு  முன்னால் எத்தனை பேர் முயற்சித்தார்கள் என்பதை விட, அவருக்குப் பின்னால் எத்தனைபேர் முயற்சித்தார்கள் என்பதைப் பார்த்தாலே, சரித்திரக் கதை எழுதுவதில் உள்ள கஷ்டங்கள் புரிந்து விடும். சரித்திரக் கதை எழுதுவதற்கு நிறைய ஆதாரங்களைத் தேடிப் படித்திருக்க வேண்டும், குறிப்புக்களை வைத்துக் கொண்டு, முரண்படாமல் கயிற்றின் மேல் நடப்பதுபோல, கவனமாக சம்பவங்கள், கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும்!அதனால் தானோ என்னவோ, நிறைய எழுத்தாளர்கள் சரித்திரத்தின் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்!"


இப்படி இந்தப்பக்கங்களில் வரலாறும் முக்கியம்!

கொஞ்சம் வரலாற்றையும் பார்ப்போமா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு பார்த்திருக்கிறோம்!

ஆனால், ஆடத் தெரியாதவள் தெரு கோணலாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஒதுங்குவதைப் போல, சரித்திரம் என்றால் என்ன, எங்கே நிஜமும், புனைவும் எந்த விகிதத்தில் கலவையாகி ஒரு நல்ல வாசிப்பு அனுபவமாகிறது என்பதையெல்லாம் சிந்திக்காமலேயே, வரலாறு என்பதே புனைவுகள் தான்! என்று அலட்சியமாகப் பேசி விட்டு, ஆட்டையில் கலந்து கொள்ளாமல் நழுவிக் கொள்ளும் நபர்களை நிறையப் பார்த்திருக்கிறேன்!

வரலாற்றுப் புதினங்கள் என்றாலே ஏனோ இங்கே நிறையப் பேருக்குக் கல்கி தான் முதலில் நினைவுக்கு வருகிறார். அதற்கு
டுத்தாற்போல என்று தேடினால், எவர் எவர் பெயரையோ கொஞ்சம் தயங்கித் தயங்கி சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

தமிழில் சரித்திரக் கதைகளின் தன்னிகரற்ற சக்கரவர்த்தி, பேரரசு என்று எவரையாவது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் அது சாண்டில்யன் ஒருவராகத் தான் இருக்க முடியும்! ஏன் என்பதை இந்தப் பதிவில் கொஞ்சம் விவரமாகவே

சொல்லியிருக்கிறேன்.

வரலாறு என்பது வாழ்ந்த மக்களின் அனுபவத் திரட்டு. அதை எவர் எந்தக் கோணத்தில் இருந்து, எப்படி எடுத்துக் கொள்கிறார் என்பதில்  வேண்டுமானால்  வேறுபடலாமே தவிர, மொத்த வரலாற்றையுமே புனைவு என்று ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போய்விட முடியாது! அந்த வகையில் சாண்டில்யன், சொல்ல விரும்பும்  கதையைத் தேர்ந்தெடுக்கும் விதமே அலாதி! சாண்டில்யனைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே, அவரது படைப்புக்களின் விமரிசனத்தோடு, இங்கே தொடர்ந்து எழுத ஆசை இருக்கிறது.

அதற்கு முன்னால் வரலாறு என்பதே வெறும் புனைவுகளால் ஆனது தானா என்பதைக் கொஞ்சம் பார்த்து விடலாம்!

புறநானூற்றில், வரிசையாக ஆறுபாடல்கள்! இரண்டு வெவ்வேறு புலவர்கள் பாடியது, ஆளுக்கு மூன்று பாடல்களைப் பாடி
ருக்கிறார்கள். இவர்கள் வாழ்ந்த காலம் என்ன, பாட்டுடைத் தலைவனுக்கு வேறு என்ன ஆதாரம் என்றெல்லாம் தேடிப் பிடிக்க முனைபவர்கள் முனையலாம்! சோம்பல் கொள்கிறவர்கள், இதெல்லாம் கதைக்கு ஆகாது, முழுக்க முழுக்க புனைவு தான் என்று சொல்லி அபீட்டாயிக்கலாம்!

இந்த ஆறுபாடல்களிலும், சாத்தந்தையார் என்ற புலவர் எழுதிய முதல் பாடலில் மட்டும் தான் ஒரு குறிப்புக் கிடைக்கிறது. மற்ற ஐந்திலும் வேறு பெரிதாக விவரமேதும் கிடைப்பதில்லை. அதனால் முதற்பாடலை இங்கு பார்க்கலாம்! மற்ற ஐந்தையும் பார்க்க வேண்டுமானால், புறநானூற்றின் 81 முதல் 85 வரையிலான பாடல்களை Project Madurai தளத்தில் இருந்து பார்க்கலாம்.




இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே

புற நானூறு பாடல் எண்: 80 பாடியவர் சாத்தந்தையார், தும்பைத் திணை, எருமை மறத் துறை, பாடல் தலைவன் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி

இந்தப் பாடலில் சரித்திரம், புனைவு ஏதேனும் தென்படுகிறதா என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்! சாண்டில்யன் மாதிரி, திறமையான எழுத்தாளரின் கைகளில் எப்படி ஒரு அற்புதமான சித்திரம் வெளிப் படுகிறது என்பதை அடுத்துப் பார்க்கலாம்! 




Friday, August 27, 2010

நெருப்புக் கோழி....! ந.பிச்சமூர்த்தி

 

பூவனம் வலைப்பதிவில் ஜீவி சார் எழுத்தாளர்களைப் பற்றிய தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு வருகிற விதத்தில், சென்ற மாதம், ந.பிச்சமூர்த்தியை பற்றிய ஒரு சித்திரத்தை அழகாக வரைந்திருந்தார். 


"அசப்பில் தாகூர் மாதிரி ஒரு தோற்றம். போதாக்குறைக்கு 'காபூலிக் குழந்தைகள்' என்று கதையொன்றும் எழுதியிருக்கிறார். அவரது பல கதைகள் பொறி போன்ற ஒரு வெளிச்சத்தைத் தாங்கி கொண்டிருக் கும். அந்தப் பொறி எதுவொன்றையும் உன்னிப்பாகப் பார்த்து ரசித்த அவர் மனத்தின் வெளிப்பாடாக இருக்கும்; அவராகப் புனைவாக ஒரு விஷயத்தை நீட்டி முழக்கிச் சொல்லாமல் அவர் பார்த்த காட்சி பற்றிய அதிசயப் படப்பிடிப்பாய் இருக்கும். சில அன்றாடம் நாம் பார்க்கக் கூடியவை தான் என்றாலும், 'அடடா! இந்த மனிதர் இதை இப்படி நோக்கியிருக்கி றாரே. அவருக்குத் தோன்றியது நமக்குத் தோன்றவில்லையே' என்று அவர் பார்த்த பார்வையை ரசிக்கவும் தோன்றும். அடுத்த தடவை அப்படியான ஒரு காட்சி நமக்கு எதிர்ப்படும் பொழுது ந.பி.யின் நினைவு நிச்சயம் நினைவுக்கு வந்து விட்டுப் போகும்."


இந்த வார்த்தைகளே, ந. பிச்சமூர்த்தியின் எழுத்து எப்படிப்பட்ட தாக்கத்தை, படிப்பவர் மீது ஏற்படுத்தியது என்பதைச் சொல்வதற்குப் போதுமானது என்று நினைக்கிறேன்!அன்றாடம் பார்க்கக் கூடியவைதான், பார்த்துக் கொண்டிருப்பவைதான்! பார்ப்பவர் கண்ணுக்கு வித்தியாசமாகத் தெரிவது ஏன் என்பதெல்லாம், பார்த்ததை எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டோம் என்பதில் தான் இருக்கிறது!  

"நெருப்புக் கோழி" 

என்ற இந்தச் சிறுகதையில் கூட, எப்படி, சாதாரணமாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் இருந்து, வாழ்க்கையின் யதார்த்தத்தைச் சொல்கிறார் என்று பாருங்கள்!

"நினைத்தால் வியப்பாய் இருக்கிறது.

லயன் கரையின் மேல் நந்தியைப் போல் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் நேரும்பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், அதைப் பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது; நம்முடைய முட்டாள் தனத்தையோ துயரத்தையோ எண்ணி வியப்படைகிறேன்.

வாலிபத்தில் ஒரு ஆற்றங்கரை வழியாகப் போவது வழக்கம். லயன் கரையின் புருவத்தில் கொய்யா மரங்கள் நெடுக இருந்தன. 'கனி வர்க்கத்தில் கொய்யா அப்படி ஒன்றும் சிறந்ததல்ல' என்று இப்பொழுது தானே தெரிகிறது? நாட்டு வைத்தியருடன் கறி, பழ வகைகளின் குண தத்துவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வது நடு வயதிற்கப்பால் தானே!

பால்யத்தில் கொய்யா என்றால், அலாதி மோகம். கொய்யா மரத்தின் வழவழப்பான உடலே இந்தக் கவர்ச்சிக்குக் காரணமாய் இருக்கலாம்; அல்லது கிட்டுப்புள்ளுக்குக் கொய்யாக் கழியை விடச் சிறந்ததொன்றில்லை என்ற நினைப்பாய் இருக்கலாம். தவிர, கை எட்டக் கூடிய தூரத்தில் கொய்யா தொங்கிக் கொண்டிருந்தால், நாளைக்கு வரும் பலாக்காயை விட இன்றைக்குக் கிடைக்கும் கிளாக்காய் மேல் என்று தோன்றாதா? கருவேப்பிலைப் பழத்தைக் கூட ருசித்துச் சாப்பிடக்கூடிய வயதாயிற்றே!

ஆனால், எவ்வளவு ஆசைப் பட்டாலும் மரத்து நிழலைக் கூட மிதிக்க முடியாது. ஏனென்றால், தோட்டக் காவல்காரன் லயன் கரையின் மேல் நந்தியைப் போல் எப்பொழுதுமே உட்கார்ந்து கொண்டிருப்பான். ஆகையால், தினம் கொய்யா மரத்தின் தரிசனத்துடன் திருப்தி அடைந்தேன்.

நரி முகத்தில் விழிப்பது என்பது மெய்யாகக் கூட இருக்கலாம். இல்லாவிட்டால் நானும், என் நண்பர்களும் லயன் கரைப் பக்கம் போன பொழுது தோட்டக்காரன் இல்லாமல் இருப்பானேன்? எங்கள் கொண்டாட்டத்தை எப்படி வர்ணிப்பது! வேகமாகச் சென்று, ஆளுக்கொரு பக்கம் கொய்யாவைக் கொய்து கொண்டிருந்தோம். 'மளக்'கென்று ஏதோ குச்சி ஒடியும் சத்தம் கேட்டது. மரத்தின் மேலிருந்த நான், உஷாரடைந்து இறங்கத் துவங்கினேன். மறுபடி இலைகளில் நடப்பது போன்ற சலசலப்பின் ஓசை காதில் விழுந்தது. தொடர்ந்து புதரை விலக்கிக் கொண்டு ஒரு கையும், முண்டாசும் தெரிந்தது. தோட்டக்காரன்! அவ்வளவுதான்; என் நண்பர்கள் சிட்டாய்ப் பறந்து விட்டனர்; நான் பாதி மரத்திலிருந்து குதித்தேன். அதற்குள் தோட்டக்காரன் என்னண்டை வந்துவிட்டான். நான் அலங்கமலங்க விழித்தேன்.

"ஏம்பா கொய்யாக்காய் பறித்தாய்?"

நான் மௌனம் சாதித்தேன். வெறும் துண்டை மட்டும் நான் போட்டுக் கொண்டிருந்ததால், அவன் வெடுக்கென்று சவுக்கத்தைப் பிடுங்கிக் கொண்டான். இதுதான் சாக்கென்று நான் நடந்து செல்ல ஆரம்பித்தேன்.

"என்ன தம்பி, கொய்யாக்காயைத் திருடிவிட்டு, டம்பமாய் கம்பி நீட்டுகிறாயே?"

"திருட்டென்னப்பா? வேணுமென்றால் கொய்யாக்காய்க்குக் காசு வாங்கிக்கொண்டு போயேன். சின்னப் பையன் என்றுதானே சவுக்கத்தைப் பிடுங்கிக் கொண்டாய். அதை எடுத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே முறைப்பாய் நின்றேன். மனதிற்குள் உதைப்பு தான்.

"சவுக்கத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லுகிறாயோ... போ... போ" என்று அவன் கருவினான்.

இதுதான் சாக்கென்று நான் நடையைக் கட்டினேன்.

இந்த சம்பவம் நடந்தபொழுது என் மனம் பட்ட பாட்டைப்பற்றிப் பின்னர் எண்ணும் போது வெற்றி உணர்ச்சிதான் தலைதூக்கி நின்றது.

என் வாக்கின் திறமையல்லவா வெற்றி கொண்டது. அதை மனத்திற்குள் பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. இல்லாவிட்டால் கன்னம் பழுத்திருக்காதா? இதைப் போலவேதான் மற்றொரு நிகழ்ச்சியும். எங்கள் வீட்டில் நான்கு குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் நிறையக் குழந்தைகள்! தினந்தோறும் வீட்டில் ஒரு தமாஷ்! குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடத்தை விட்டு வரும். எதுவோ வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொண்டு, பிறகு எல்லாமாகக் கொல்லைக் கட்டு திண்ணையில் வந்து கூடிவிடும். 1-ம் நம்பர் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு திண்ணையில் உட்காரும். 2, 3, 4 குடும்பத்துக் குழந்தைகள் எதிர்த்தாற் போல் வந்து நிற்கும்.

"உட்கார். வாய்மேல் கை வை" என்றதும், குழந்தைகள் உட்காரும்.

"பிரார்த்தனை கீதம்", "அருள் புரிவாய் கருணைக் கடலே" என்று குழந்தைகள் ஆளுக்கொரு ஸ்தாயில் கத்தும். காமாட்சி வந்து கை நீட்டியதும், அதில் இரண்டடி விழும். வாங்கிக்கொண்டு, தன் இடத்திற்குத் திரும்பி விடுவாள். இதற்கிடையில் வாத்தியார் பிள்ளைகளை அடித்தால், கசமுசவென்று பேசுவார்களே, அதே மாதிரி இந்தக் குழந்தைகள் பேசிக் கொண்டிருக்கும்.

"பேசாதே, அடிச்சூடுவேன்."

கப்சிப் என்ற மௌனம். இம்மாதிரி மாலைக் காட்சி ஒன்று தினம் வீட்டில் நடைபெறுகிறது. வாத்தியார் அடித்து விட்டார் என்று பள்ளிக் கூடம் போன உடனே திரும்பும் குழந்தைகளும், வாத்தியார் அடிப்பார் என்று பள்ளிக்கூடம் போக முரண்டு செய்யும் குழந்தைகளும் சேர்ந்து இந்த மாலைப் பள்ளிக் கூடத்தை நடத்துவது வியப்பல்லவா?  


எந்த அடியைப் பள்ளிக்கூடத்தில் வாங்க இஷ்டப் படவில்லையோ, அந்த அடியை இங்கே வாங்குவதில் அவர்கள் இன்பம் காணுகிறார்கள்! எந்தக் கட்டுப்பாடு பள்ளிக் கூடத்தில் வேம்பாக இருக்கிறதோ, அதற்கு இங்கே அளவு கடந்த மதிப்பு!

இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த துறை ஒன்றிருக்கிறது. நாடகங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். வாழ்க்கையில் காணும் வெற்றி தோல்விகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டுவதுதானே நாடகம்? வாழ்க்கையில் தாங்க முடியாத இன்பம் ஒன்று மனத்தில் பிறக்கிறதே, அது ஏன்?

இவைகளை எல்லாம் நினைக்கும் பொழுது ஒரு இயற்கை நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது.

சூரியன் தினம் நம்மைப் பொசுக்குகிறான். சூரியனிடமிருந்து சக்தியைக் கடன் வாங்கும் சந்திரன், நமக்கு ஒளியையும், குளுமையையும் தான் தருகிறான். சூரியனின் வெப்பத்தைச் சந்திரன் என்ன செய்தான்?

இந்த அதிசயத்தின் ரகசியம் தான் என்ன? இப்படி இருக்கலாமோ?

உண்மை என்று ஒன்றிருக்கிறது. காலம் என்று மற்றொன்று  இருக்கிறது. உண்மைக்கும் நமக்கும் இடையே காலம் குறுக்கிடுகிறது. காலம் ஒரு மந்திரவாதி. நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, அவைகளுக்குப் புதிய வர்ணத்தைக் காலம் பூசிக்கொண்டே இருக்கிறது.
அதன் விளைவாகத்தான் செத்தவன் கண் போல் மனத்தில் காட்சி அளிக்கிறான். அடிபட்ட பள்ளிப் பிள்ளைகள் போலிப் பள்ளிக் கூடம் நடத்தி இன்பம் அடைகிறார்கள். ஒரு வேளைச் சோற்றுக்குத் தாளம் போடுகிறவன், நாடகத்தில் ராஜாவாக நடைபோடுகிறான். சூரியனின் கிரணம் சந்திரனை வந்து அடையும்பொழுது, காலம் கடந்து விடவில்லையா? வெப்பத்தை மாற்றிக் குளுமை அளிப்பது காலத்தின் மாய ஜாலமா?

அல்லது,

சூரிய வெப்பத்தை விழுங்கிவிட்டு அமுத ஒளி பொழியும் மாயவித்தை ஏதேனும் சந்திரனிடத்தில் இருக்குமோ?

சந்திரனிலிருந்து மனம் உண்டாகிறதென்று உபநிஷதம் கூறுகிறது. ஜோதிடத்திலும் சந்திரனைக் கொண்டு மனத்தின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள். ஆகையால், சந்திரனுக்குள்ள மாய சக்தி மனத்திற்கும் இருக்கலாம் அல்லவா? இரும்பாணியையும், மண்ணையும் தின்னும் நெருப்புக் கோழி மென்மையான அழகிய சிறகுகளைப் போர்த்திக் கொள்கிறதல்லவா? இந்த மாதிரி அற்புத சக்தி மனத்திற்கும் இருக்குமோ? இந்த சக்தியிலிருந்து பிறப்பதுதான் கலையோ?

அல்லது வினையை விளையாட்டாக்குவது தான் கலையோ?"



கதை சொல்லிக் கொண்டு போகிற போக்கில் வரும் கேள்விகள் என்னவோ மிக சாதாரணமாகத் தான் இருக்கின்றன! விடைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தால்......?!

விடை தேட வேண்டுமென்ற உந்துதல் எழுந்தால்....?!



Thursday, August 26, 2010

பாரதி ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்! சீனி.விசுவநாதன்



நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வது,  படித்ததில் பெற்ற அனுபவங்களை, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையில் இந்தப் பக்கங்களில் சில புத்தகங்கள், எழுத்தாளர்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தமிழில் கவிதை, சிறுகதை, வசன கவிதை, தேசீய கீதங்கள், கேலிச் சித்திரங்கள், பத்திரிக்கை நடத்திய அனுபவம் என்று எதைப் பேச முனைந்தாலும்  அதன் முன்னோடியாக மஹாகவி சுப்ரமணிய பாரதியார் இருப்பதைப் பார்க்க முடியும். புத்தகங்களைப் பற்றி எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் பாரதியை மறத்தல் ஆகுமோ?!

பாரதியைத் தமிழகம் முழுமையாக அறிந்திருக்கிறதா?

பாரதியைப் பற்றி அவதூறாக விமரிசித்து வரும் நிறையக் கட்டுரைகளை  இணையத்திலும் அச்சிலும் பார்க்கும்போது, பாரதியைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது மிகக் குறைவு தான் என்பது புலனாயிற்று. ஒரு நல்ல நூலைப் படித்து, அதை விமரிசனம் செய்யும்போது, படித்தவர் பரிந்துரையாக நாலு வார்த்தை சொல்லுவோமில்லையா?

அப்படிப் "படித்தான் பரிந்துரை" என்ற தலைப்பில் ஸ்ரீ ரங்கம் திரு. வி. மோகன ரங்கன் அவர்கள் மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில்  எழுதிய நூல் அறிமுகத்தை இங்கேயும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. இதோ ஸ்ரீ ரங்கம் வி மோகன ரங்கன் அவர்களின் மோகனத் தமிழில், படித்தான் பரிந்துரையாக......

சீனி.விசுவநாதன் 

"பாரதி  ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்"  நூல்  640 பக்கங்கள்  கொண்ட ஹார்ட் பௌண்ட் புத்தகம்.   முன்னரே சிக்கல்கள்  மட்டும் பற்றிச்  சிறு நூலொன்று   இவரால்   எழுதப்பட்டு  வந்தது.   ஆனால் இந்த  நூல்   மிக  விரிந்ததும்,   கிட்டத்தட்ட  அனைத்துக் குளறு படிகளையும், பாரதி  நூல்கள்,  வாழ்க்கைச்  செய்திகள்,  சரித நூல்கள், மூன்றாம் மனிதர் தகவல்,   சக  காலத்து  அறிஞர்கள்  பின்னிட்டுப் பாரதியின் பெருமை  உணரத் தலைப் பட்ட பின் புது ஊக்கம் கொண்டு தாங்கள் பழக நேர்ந்த பாரதி நாட்களைப் பற்றிய நேரடி வர்ணனைகளின் சான்றாண்மை என்று மிக விரிவாகச் செய்திருக்கிறார் ஆசிரியர். 

பாரதி இயலின் பெரும் உபகாரி இந்த ஆசிரியர் என்பது பலருக்கும் மேன்மேலும் தெரிந்துகொண்டு வரும் விஷயம்.


10 வால்யூம்கள் கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி நூல்கள் இது வரை வந்துவிட்டன. மேற்கொண்டு ஓரிரு வால்யூம்கள் வர இருக்கின்றன. அந்த நூல்களில் எல்லாம் ஆசிரியரின் உழைப்பைப் பூரணமாகப் பார்வையிடும் பொழுது எனக்குத் தோன்றிய கருத்து இந்த ஆசிரியருக்கு உண்மையில் இந்த வேலைக்காக இரண்டு பட்டங்கள் தரவேண்டும் என்பதுதான். ஏனெனில் பாரதியின் எழுத்துக்களைத் தேடிப்பிடித்து வந்து கால நிரல் படுத்தி ஊர்ஜிதம் செய்து போடுவது ஒரு பெரும் பணி. 

அதோடு நிற்காமல் பாரதி ஒரு கட்டுரை எழுதுகிறார் என்றால் அந்தக் கட்டுரை வேறு ஏதோ நிகழ்ச்சிகளையோ, அல்லது மற்றவர் எழுதிய இதழ்க் கட்டுரைகளையோ குறிப்பிட்டால் அந்த நிகழ்ச்சிகள் பற்றிய தகவல், அந்தக் கட்டுரைகள்   பற்றிய தகவல், முடிந்த இடத்தில் எல்லாம் அந்தக் கட்டுரைகளின் நகல், மற்றும் அதன் தமிழாக்கம் (ஆங்கிலமாய் இருப்பின்) என்று அந்தக் காலக் கட்டத்தையும் சேர்த்து ஆவணப் படுத்திவிட்டார் ஆசிரியர்.

இவ்வளவு நெடிய உழைப்பில் பழுத்த, பாரதி வித்தையை வளர்க்கும் பெரியவர் இப்பொழுது கொண்டு வந்திருக்கும் நூல் ‘பாரதி ஆய்வில் சிக்கல்களும் தீர்வுகளும்’. இந்த நூல் எந்த அளவிற்குச் சான்றாண்மை மிக்கதாய் இருக்கும் என்று நீங்களே ஊகிக்கலாம்.

நூலாசிரியரின் ’படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை’ என்ற அறிமுகம், 32 தலைப்புகளில் நெடுங்கட்டுரைகள், 6 பின்னிணைப்புகள் என்று நூல் பரந்துபட்டு பாரதி ஆய்வுலகின் சிக்கல்களையும், தீர்வுகளையும் விளக்குகிறது.


உதாரணத்திற்கு மூன்று சொல்கிறேன். ‘சத்தியப் போர்’ என்பது பாரதி பாடலா? சங்கு சுப்பிரமணியன் தம் இதழில் போட்டது. அது பாரதி பாடல் இல்லை என்று பாரதியின் தம்பி திரு சி விஸ்வநாதனும், திரு சிதம்பரம் ரகுநாதனும் கருத்து தெரிவித்தனர். திருமதி செல்லம்மா பாரதி வெளியிட்ட சுதேச கீதங்கள் பதிப்பில் இருந்ததாகத் திரு சிதம்பரம் ரகுநாதனின் கருத்து. பாரதியின் தம்பி கருதியது சொற்கள் பாரதியின் சொல்லாட்சியாக இல்லை என்பது. பாரதி பிரசுராலயம் வெளியிட்ட பதிப்பில் இந்தப் பாடல் இடம் பெறவில்லை.  நூல் இந்தச் சிக்கலை விளக்கி, தீர்வும் தருகிறது.

அடுத்து பாப்பா பாடல். பாரதி பிரசுராலயத்தாரின் பதிப்பில் பல பிழைகள் என்று வாசகர்களின்  சார்பாக நியாயக் குரல் எழுப்பினார் புதுமைப் பித்தன் மணிக்கொடியில். ஆனால் அவர் சுட்டிக்காட்டிய தவறுகள் பாரதி காலத்திலேயே பதிப்பிக்கப்பட்ட தொகுப்புகளில் ஏறியிருந்தால். அப்பொழுது அவை தவறுகள் அல்லவே. 

கிடைத்ததைக் கொண்டு பாரதியின் ஆகச்சிறந்த உண்மையான பாடம் என்றுதானே ஆகும். இவை எல்லாம் பாரதி பற்றிய ஆவணங்களை பல பத்தாண்டுகளாகத் தேடித் திரட்டி வரும் ஆசிரியர் சுட்டிக் காட்டி உண்மை நிலவரங்களைத் தெளியப் படுத்துவது எத்தகைய ஆக்க பூர்வமான பணி!

அடுத்து, திலகர் மறைந்த போது ஏன் பாரதியார் அவரைபற்றி எதுவும் பாடவில்லை? எங்கிருந்தார்? கடலூரில் எழுதிக்கொடுத்த வாசகங்கள் அவரைப் பாட விடாமல் கையைக் கட்டிப் போட்டதா? கிடைத்த தகவல்களுக்கிடையிலும், அந்தத் தகவல்களையும் அணுகும் முறையில் ஆர்வம், ஆர்வமின்மை காரணமாகவும் பலரும் பெரும் கேள்விகள் எழுப்பி, தம் கேள்விகளையே முடிவுகளாகவும் ஆக்கிச் செய்திருக்கும் குழப்பத்தின் இடையே இந்தச் சிக்கல் என்ன? அதன் தீர்வு யாது? என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

பாரதிதாசன் நோக்கில் பாரதியார் என்னும்படி ஒரு நூலில் திரு மணிகண்டன் தொகுத்த பாரதி பற்றிய பாரதிதாசன் பாடல்களில் ஒன்று அன்றொரு நாள் என்று 1907 ஆம் ஆண்டைப்பற்றிக் குறிப்பிட்டு பாரதியார், வவெசு ஐயர், அரவிந்தர் ஆகியோரைப் பற்றிப் பாண்டிச்சேரி சூழலில் விவரிக்கிறது. ஆசிரியர் திரு சீனி. விசுவநாதன் ’பாரதிதாசன் ஆய்வாளர்கள்  இந்தப் பாடலை மீள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்.  ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா?

இதுபோல் 640 பக்கங்களும் பாரதி ஆய்வாளர்கள், மாணவர்கள், நேசர்கள்  ஆகியோருக்கு அருமையான பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை.

பின்னிணைப்புகளில் தலைப்புகளே அவற்றின் முக்கியத்வத்தைக் கூறும்.  

1)பாரதி காலத்தில் பத்திரிக்கைகளில் பிரசுரமான பாடல்கள்  

2)பாரதி காலத்தில் நூல் வடிவம் பெறாத பாடல்கள் 

3)பாரதி காலத்திய நூல்களில் மறுபிரசுரம் செய்யப்பட்ட பாடல்களுக்கான விவரம்  

4)பிரிட்டிஷ் அரசு ஆட்சிக்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாரதி பாடல்கள்.

பாரதி இயலை கற்பனைகளின் மைதானமாக ஆக்கிவிடும் நிலையிலிருந்து மீட்டு, ஆரோக்கியமான ஆய்வுகள் மிகுவதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியதில் பெரும் பங்கு திரு சீனி. விசுவ நாதனுடையது.


--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

பாரதி  ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்


ஆசிரியர் --சீனி.விசுவநாதன்


முதற் பதிப்பு -- 31 டிசம்பர் 2009 

நூல் கிடைக்குமிடம்


சீனி. விசுவநாதன்
2, மாடல்  ஹவுஸ் லேன்,
சி ஐ டி நகர்,
சென்னை நகர் -- 600035
தொலைபேசி:  044-24315757


விலை ரூ 275 --00

மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தின் இழை ஒன்றில் இருந்து நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப் படுகிறது.


Monday, August 23, 2010

யுக சந்தி ....! ஜெயகாந்தன் சிறுகதை

 

ஒரு நல்ல எழுத்தாளனுடைய வேலை உபதேசம் பண்ணுவதல்ல! உபதேசத்தை அள்ளித் தெளிக்கிறவன் உண்மையானவனும் அல்ல! ஆனால், தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நல்ல எழுத்தாளனைப் பாதிக்கிறது, அவனுள் ஒருவித ஆவேசத்தைத் தோற்றுவிக்கிறது. தான் வாழும் சமூகத்தைப் பற்றிய முழுப் பிரக்ஞை அவனுடைய ஒவ்வொரு எழுத்திலும், வரியிலும் வெளிப் படுகிறது. ஆக, ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் காலத்தின் கண்ணாடியாக இருக்கிறான்!

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களுக்குள்  ஜெயகாந்தனுக்கு ஒரு தனி அரியாசனம் உண்டு.

இந்தச் சிறுகதையைப் படித்துப்பாருங்களேன்!

பழமைக்கும், யதார்த்தத்துக்கும் இடைப்பட்ட காலத்தின் பிரதிநிதியாக கௌரிப்பாட்டியை ஜெயகாந்தன் உருவாக்கியிருக்கும் விதத்தைக் கவனித்தால், அவள் இரண்டு காலத்துக்கும் இடைப்பட்ட இடத்தில்,  பழமையும் புதுமையும் சந்திக்கும் இடமாக இருப்பது புரியும். கொஞ்சம் கூட மிகைப்படுத்தப் பட்ட வார்த்தைகளோ, உரைநடை வீச்சோ இல்லாமல், எவ்வளவு அனாயாசமாக ஒரு கருத்தை கௌரிப்பாட்டியை வைத்துக் கதை சொல்கிறார் என்பதை உணர முடிய வேண்டுமென்றால், இந்தக் கதையின் கடைசி வரியைத் தான் சொல்ல வேண்டியிருக்கும்!
ஓ ' அதற்கு ஒரு பக்குவம் தேவை '

யுக சந்தி- ஜெயகாந்தன்

கெளரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள்.

எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள்.

'பாட்டி...பாட்டி ' பையைத் தூக்கியாரட்டா ? ஓரணா குடு பாட்டி. '

'வண்டி வேணுங்களா அம்மா ? '

'புதுப்பாளையம் வக்கீல் குமாஸ்தா ஐயர் வீடுதானுங்களே....வாங்க, போவோம் ' ---என்று பல்வேறு வரவேற்புக் குரல்களுடன் அவளை இறங்க விடாமல் தடுத்து நின்ற வண்டிக்காரர்களையும், கூலிக்காரச் சிறுவர்களையும் பார்த்துக் கனிவோடு சிரித்து விட்டுப் பாட்டி சொன்னாள்:

'எனக்கு ஒண்ணும் வேண்டாம்பா..சித்தே வழியை விட்டேள்னா நான் மெள்ள நடந்தே போயிடுவேன்.... ஏண்டாப்பா, வீட்டெக் கூடத் தெரிஞ்சு வெச்சிருக்காய்... நான்தான் மாசம் ஒருதடவை வர்றேனே, என்னிக்கு வண்டியிலே போனேன் ? ' என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி, அவர்களை விலக்கி வழியமைத்துக் கொண்டு தணலாய்த் தகிக்கும் வெயிலில், முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, இடுப்பில் ஏற்றிய சுமையுடன் வறுத்துக் கொட்டிய புழுதி மண்ணை அழுந்த அழுந்த மிதித்தவாறு ஒரு பக்கமாய்ச் சாய்ந்து சாய்ந்து நடந்தாள் பாட்டி.


பாட்டிக்கு வயது எழுபது என்றாலும் சரீரம் திடமாய்த்தான் இருக்கிறது. மூப்பினால் ஏற்பட்ட ஸ்தூலமும், அதனால் விளையும் இளைப்பும் வீட்டுக்குப் போன பின்தானே தெரியும் ?...

அவள் கணிப்பில் நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து பரந்து ஓடுகிறார்கள்.

மழையும் வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக் கொண்டாள்.

அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா ? வெள்ளமாய்ப் பெருகி வந்திருந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென  வரண்ட பாலையாய் மாறிப் போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? என்ன செய்தால்தான் என்ன ?

தகிக்கின்ற புழுதியில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் புதைய, அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள் பாட்டி.

வழியில் சாலையோரத்தில் --- நான்கைந்து மனிதர்கள் நின்று சுகம் காண வாகாய் முளைத்த பெருங்குடைபோல் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது ஒரு சிறிய வேப்பமரம்.

அந்த நிழலில் ஒற்றையாய்ச் சற்றே நின்றாள் பாட்டி.

எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் --சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்-- காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங் குழைகள் சிலிர்த்தன.

'என்னப்பனே மகாதேவா ' ' என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்தக் குளுமையை அனுபவித்தாள் பாட்டி.

பாட்டியின் முக்காடிட்ட வட்டமான முகத்தில் ஒரு குழந்தைக்களை குடிகொண்டிருந்தது. இந்த வயதிலும் அவள் சிரிக்கும் போது வரிசைப் பற்கள் வடிவாய் அமைந்திருந்தது ஓர் ஆச்சரியமே ' அவள் மோவாயின் வலதுபுறத்தில் ஒரு மிளகை விடவும் சற்றுப் பருத்த அழகிய கறுப்பு மச்சம்; அதன்மீது மட்டும் கருகருவென இரண்டு முடி-- இவ்வளவையும் ஒருசேரப் பார்த்தவர்கள், இவள் இளவயதில் எப்படி இருந்திருப்பாள் என்று எண்ணாமல் இருக்க முடியாது.

பாட்டியின் பொன்னிறமான மேனியில் அதிக நிற பேதம் காட்டாத நார்ப்பட்டுப் புடவை காற்றில் படபடத்து; புடவையிலிட்ட முக்காட்டின் விளிம்பெல்லாம் குத்துக் குத்தாய் லேசாகத் தலைகாட்டும்-- மழித்து நாளாகிவிட்டதால் வளர்ந்திருக்கும்-- வெள்ளி முடி. கழுத்தில் ஸ்படிக மாலை. நெற்றியில் வியர்வையால் கலைந்த விபூதிப் பூச்சு. புடவைத் தலைப்பால் முகத்தையும், கைகளையும், மார்புக் குவட்டின் மடிப்புகளையும் அழுந்தத் துடைத்துவிட்டுக் கொண்டாள். அப்போது வலது விலாப் புறத்தில் இருந்த சிறிய பவழம் போன்ற சிவப்பு மச்சம் வெளித் தெரிந்தது.

---மீண்டும் நிழலிலிருந்து வெயிலுக்கு வந்து புழுதி மண்ணிலிருந்து, பழுக்கக் காய்ந்த கெடிலநதிப் பாலத்தின் கான்கிரீட் தள வரிசையில் பாதங்களை அமைதியாகப் படிய வைத்து, அசைந்து அசைந்து அவள் வரும்போது.....

பாலத்தின்மீது கிராதியின் ஓரமாக, பாட்டியம்மாள் மீது பட்டுவிடக் கூடாதே என்ற பய உணர்வோடு ஒதுங்கி நின்று கையிலுள்ள சிறு தகரப்பெட்டியுடன் கும்பிட்டான் ஒரு பழைய பழகிய ---நாவிதன்.
'பாட்டியம்மா....எங்கே, நெய்வேலியிலிருந்தா ? ' என்று அன்புடன் விசாரித்தான்.

'யாரு வேலாயுதமா ?....ஆமா ' ....உன் பெண்டாட்டி குளி குளிச்சுட்டாளா ? ' என்று ஆத்மார்த்தமாய் விசாரித்தாள் கிழவி.

'ஆச்சுங்க...ஆம்பளைப் பையன்தான். '

'நல்லாயிருக்கட்டும்....பகவான் செயல்.... ' இது மூணாவது பையனா ? '

'ஆமாமுங்க ' என்று பூரித்துச் சிரித்தான் வேலாயுதம்

'நீ அதிர்ஷ்டக்காரன்தான்...எந்தப் பாடாவது பட்டுப் படிக்க வச்சுடு, கேட்டியா ? ' என்றதும் வேலாயுதம் குடுமியைச் சொறிந்தவாறு சிரித்தான்.
 
'அட அசடே, என்ன சிரிக்கிறாய் ? காலம் வெகுவாய் மாறிண்டு வரதுடா; உன் அப்பன் காலமும் உன் காலமும் தான் இப்படிப் பொட்டி தூக்கியே போயிடுத்து... இனிமே இதொண்ணும் நடக்காது.... புருஷாள் எல்லாம் ஷாப்புக்குப் போறா... பொம்மனாட்டிகள்லேயும் என்னை மாதிரி இனிமே கெடையாதுங்கறது தான் இப்பவே தெரியறதே....ம் ...எல்லாம் சரிதான்; காலம் மாறும்போது மனுஷாளும் மாறணும்.... என்ன, நான் சொல்றது ? ' என்று கூறி ஏதோ ஹாஸ்யம் பேசிவிட்ட மாதிரி பாட்டி சிரித்தாள். பதிலுக்கு அவனும் சிரித்தான்.

'இந்தா, வெயிலுக்கு ரெண்டைக் கடிச்சிண்டு போ ' என்று இடுப்பிலிருந்த பையில் பிதுங்கி நின்ற இரண்டு வெள்ளிரிப் பிஞ்சுகளை எடுத்து அவனது ஏந்திய கைகளில் போட்டாள்.

'பஸ்லே வரச்சே அணாவுக்கு நாலுன்னு வித்தான்.... கொழந்தைங்களுக்கு ஆகுமேன்னு ஒரு நாலணாவுக்கு வாங்கினேன் ' என்று அவள் சொன்னதும், வேலாயுதம் ஒரு கும்பிடு போட்டுவிட்டு ---தன்னை அவள் கடக்கும்வரை நின்று பின்னர் தன் வழியே நடந்தான்.


சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த கெளரியம்மாள், தனது பத்து வயதில் இந்தக் கடலூரில் நன்கு செயலில் இருந்த ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டாள். பதினாறு வயதில் கையிலொரு குழந்தையுடன் கைம்மைக் கோலம் பூண்ட பின், இத்தனை காலமாய்த் தன் மகனையும், தன் புருஷன் பங்கில் கிடைத்த வீட்டையும் விட்டு எந்த ஊருக்கும் சென்றதில்லை.

எனினும் தன் மகன் வயிற்றில் பிறந்த மூத்தமகள் கீதா, மணக்கோலம் பூண்டு பத்தே மாதங்களில், தரித்திருந்த சுமங்கலி வேடத்தை, நாடகப் பூச்சைக் கலைப்பது போல் கலைத்துவிட்டுக் குடும்பத்தை அழுத்தும் பெருஞ் சோகமாய்க் கதறிக் கொண்டு தன் மடியில் வந்து வீழ்ந்து குமுறியழுத நாள் முதல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கடைசி சோகமாய் அவளைத் தாங்கிக் கொண்டாள் கெளரிப் பாட்டி. தன் அரவணைப்பில், தன் அன்பில், தனது கண்ணீரில், தனது ஒட்டுதலில் அவளை இருத்திக் கொள்வதையே தன் கடமையாக ஏற்றுக் கொண்டாள். அதுவரை கீதாவின்மீது, மகன் பெற்ற குழந்தை என்ற பாசம் மட்டுமே கொண்டிருந்த பாட்டி--- கணவன் இழந்த நாள் முதல் தன் உயிரையே மகன் மீது வைத்திருந்த அந்தத் தாய்---அதை மாற்றிக் கொண்டது கீதாவுக்கு வெறும் ஆறுதல் தரும் பொருட்டன்று.
கெளரிப் பாட்டி தனது இறந்த காலத்தின் நிகழ் காலப் பிரதிநிதி யெனத் தன்னையே அவளில் கண்டாள்.

பாட்டியின் மகன் கணேசய்யர் தந்தையின் மரணத்தை--- அதனால் விளைந்த அத்யந்த சோகத்தை உணராதவர் அவரது மனைவி பார்வதி அடிக்கடி ரகசியமாகக் கடிந்து கொள்வதற்கு ஏற்ப அவர் ஒரு 'அம்மா பிள்ளை ' தான்.

விதவையாகிவிட்ட கீதாவைப் பற்றிப் பலவாறு குழம்பிக் குழம்பிப் பின்னொரு நாள் ஹைஸ்கூல் படிப்போடு நின்றிருந்த அவளை, உபாத்திமைப் பயிற்சிக்கு அனுப்ப யோசித்து, தயங்கித் தயங்கித் தன் தாயிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவரது முடிவை வெகுவாகப் பாராட்டி அவள் ஏற்றுக் கொண்டதும், கெளரிப் பாட்டியை அவரால் அளக்கவே முடியவில்லை.

---பாட்டியம்மாள், மாறிய காலத்தில் பிறந்த கீதாவின் பாக்கியத்தை எண்ணி மனத்துள் பூரித்தாள்...

பயிற்சி முடித்துப் பல காலம் உள்ளூரிலே பணியாற்றி வந்த கீதாவுக்குப் போன வருஷம்-- புதிதாகப் பிறந்து வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகிய--- நெய்வேலிக்கு உத்தியோக மாற்றல் வந்தபோதும் கணேசய்யர் குழம்பினார்.

'அதற்கென்ன ? நான் போகிறேன் துணைக்கு.... ' என்று. பாட்டியம்மாள் இந்தத் தள்ளாத காலத்தில் மகனையும் குடும்பத்தையும் துறந்து தனிமைப்பட தானே வலிய முன் வந்ததற்குக் காரணம், எங்கே முப்பது வயதைக்கூட எட்டாத தன் கீதா வைதவ்ய இருட் கிடங்கில் அடைப்பட்டுப் போவாளோ என்ற அச்சம்தான்.

இந்த ஒரு வருஷ காலத்தில், நீண்ட விடுமுறைகளின் போது இருவரும் வந்து தங்கிச் செல்வது தவிர, சனி--ஞாயிறுகளில் நினைத்தபோது புறப்பட்டு வந்துவிடுவாள் பாட்டி. அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவளது வாடிக்கையான நாவிதன் வேலாயுதத்தையும், அதற்கு முன் அவன் அப்பனையும் தவிர, வேறு எவரிடமும் பாட்டியம்மாள் தலை மழித்துக் கொள்ளப் பழக்கப் படாததுமாகும்.

இப்போது வழியில் எதிர்ப்பட்ட வேலாயுதம், நாளைக் காலை அவள் வீட்டில் வந்து நிற்பான் என்று பாட்டிக்குத் தெரியும். வர வேண்டும் என்பது அவனுக்கும் தெரியும் அது வாடிக்கை.


ஒரு மைலுக்கு குறைவான அந்தத் தூரத்தை அரை மணி நேரமாய் வழி நடந்து அவள் வீட்டருகே வந்தபோது கணேசய்யர் முகத்தில் தினசரிப் பத்திரிக்கையைப் போட்டுக் கொண்டு முன் கூடத்து ஈஸிச்சேரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் திறந்து வைத்த தகர டின்னும் முறத்தில் கொட்டிய உளுத்தம் பருப்புமாய், மூக்குத்தண்டில் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொண்டு கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் மருமகள் பார்வதி அம்மாள். கம்பி அழி வைத்து அடைத்த முன்புறக் குறட்டின் ஒரு மூலையில், வெயிலுக்கு மறைவாய்த் தொங்கிய தட்டியோரமாய்ச் செருப்புகள் இறைந்து கிடக்க, வாய்க்குள் ஏதேதோ பொருளற்ற சம்பாஷணைகளைத் தான் மட்டும் ராகமிழுத்து முனகியவாறு குடும்ப விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தாள் கடைசிப் பேத்தியான ஆறு வயது ஜானா.
-- பாட்டி வந்து நின்றதை யாருமே கவனிக்காதபோது, கம்பிக் கதவின் நாதாங்கியை லேசாக ஓசைப்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சிறு ஒலியில் விளையாட்டு சுவாரஸ்யத்தோடு திரும்பிப் பார்த்த ஜானா, அன்பில் விளைந்த ஆர்வத்தோடு 'பாட்டி ' என்ற முனகலுடன் விழிகளை அகலத் திறந்து முகம் விகஸித்தாள்.

'கதவெத் தெறடி ' என்று பாட்டி சொல்வது காதில் விழுமுன், 'அம்மா அம்மா... பாட்டி வந்துட்டாம்மா, பாட்டி வந்துட்டா '... ' என்று கூவியவாறு உள்ளே ஓடினாள் ஜானா.


கதவைத் திறக்காமல் தன் வரவை அறிவித்தவாறு உள்ளே ஓடும் குழந்தையைக் கண்டு பாட்டி சிரித்தாள்.

கணேசய்யர், முகத்தின் மேல் கிடந்த பத்திரிகையை இழுத்துக் கண் திறந்து பார்த்தார். குழந்தையின் உற்சாகக் கூப்பாட்டால் திடீரென்று எழுந்து சிவந்த விழிகள் மிரண்டு மிரண்டு வெறிக்க ஒரு விநாடி ஒன்றும் புரியாமல் விழித்தார் அவர். அதற்குள் 'ஏண்டி சனியனே இப்படி அலறிண்டு ஓடிவறே ' ' என்று குழந்தையை வைதுவிட்டு 'வாங்கோ... வெயில்லே நடந்தா வந்தேள்...... ஒரு வண்டி வெச்சுக்கப்படாதோ ? ' என்று அங்கலாய்த்தவாறே மரியாதையோடு எழுந்தோடி வந்து கதவைத் திறந்தாள் பார்வதி.

'இதோ இருக்கிற இடத்துக்கு என்ன வண்டியும் வாகனமும் வேண்டிக் கெடக்கு ? அவனானா பத்தணா குடு, எட்டணா குடும்பான்... ' என்று சலித்துக் கொண்டே படியேறி உள்ளே வந்த தாயைக்க ண்டதும் 'நல்ல வெயில்லே வந்திருக்கயே அம்மா, பார்வதி '... அம்மாவுக்கு மோர் கொண்டு வந்து கொடு ' என்று உபசரித்தவாறே ஈஸிசேரியிலிருந்து எழுந்தார் கணேசய்யர்.

'பாவம். அசந்து தூங்கிகொண்டிருந்தே... இன்னும் செத்தே படுத்திண்டிறேன்... ' என்று அவரைக் கையமர்த்தியவாறே, ஈஸிசேரின் அருகே கிடந்த ஸ்டூல் மீது பையை வைத்து விட்டு முற்றத்திலிறங்கித் தொட்டித் தண்ணீரை அள்ளிக் கை கால் முகம் அலம்பி, தலையிலும் ஒரு கை வாரித் தெளித்துக் கொண்டாள் பாட்டி, பிறகு முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு கூடத்து ஸ்டாண்டிலிருந்த சம்புடத்தை எடுத்து 'என்னப்பனே... மகாதேவா ' என்று திருநீற்றை அணிந்துக்கொண்டு திரும்பி வரும் வரை, கணேசய்யர் ஈஸிசேரின் அருகே நின்று கொண்டிருந்தார்.

அந்த ஈஸிசேர் பாட்டிக்கு மட்டுமே உரிய சிம்மாசனம். அவள் வீட்டிலில்லாத போதுதான் மற்ற யாரும் அதில் உட்காருவது வழக்கம். அவள் ஈஸிசேரில் வந்து அமர்ந்த பின் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டு விசிறினார் கணேசய்யர். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள்போல் பாட்டி உட்கார்ந்ததும் அவள் மடியில் வந்து ஏறினாள் ஜானா.

'பாட்டி வெயில்லே வந்திருக்கா...சித்தே நகந்துக்கோ... வந்ததும் மேலே ஏறிண்டு... ' என்று விசிறிக் கொண்டிருந்த விசிறியால் ஜானாவைத் தட்டினார் கணேசய்யர்.

'இருக்கட்டும்டா....கொழந்தை ' நீ உக்காந்துக்கோ.... என்று குழந்தையை மடிமீது இழுத்து இருத்திக் கொண்டாள் பாட்டி.

'இப்ப என்ன பண்ணுவியாம் ' என்று நாக்கைக் கடித்து விழித்துத் தந்தைக்கு அழகு காட்டினாள் ஜானா.

ஜானாவை மடியில் வைத்துக் கொண்டே பக்கத்தில் ஸ்டூலின் மேலிருந்த பையை எடுத்து அதனுள்ளிருந்த வெள்ளிரிப் பிஞ்சுகளை வரிசையாகத் தரையில் வைத்து ஜானாவின் கையில் ஒன்றைத் தந்தாள். முறுக்கிச் சுருட்டி வைத்திருந்த மாற்றுப் புடவையை கொடியில் போடுவதற்காகப் பக்கத்தில் சற்று தள்ளி வைத்தாள். பிறகு பையைத் தலை கீழாகப் பிடித்து அதனுள்ளிருந்த மூன்று படி பச்சை வேர்க் கடலையைக் கொட்டியபோது, அதனூடே ஒரு கவர் விழுந்தது.
'ஆமா, மீனாவும், அம்பியும் எங்கே ? காணோம் ? ' என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு 'இதெ உங்கிட்டே குடுக்கச் சொன்னா கீதா ' என்று கவரை நீட்டினாள் பாட்டி.

இருபது வயது நிறைந்த பெண்ணை அம்பியின் துணையோடு மாட்டினி ஷோ பார்க்க என்னதான் பக்கத்திலிருந்தாலும் ---எப்படி சினிமாவுக்கு அனுப்பலாம் என்று தாய் கோபித்துக் கொள்வாளோ என்ற அச்சத்தோடு கவரை வாங்கியவாறே, 'ஏதோ அவள் படிச்ச நல்ல நாவலாம். படமா வந்திருக்குன்னு காலையிலிருந்து உசிரை வாங்கித்து ரெண்டு சனியன்களும். மாட்டினி ஷோ தானே.... போகட்டும்னு அனுப்பி வெச்சேன் ' என்றார் கணேசய்யர்.

'ஓ ' தொடர் கதையா வந்துதே....அந்தக் கதை தானா அது ?... பேரைப் பார்த்தேன்... ' என்று ஒரு பத்திரிக்கையின் பெயர், ஓர் எழுத்தாளரின் பெயர் முதலியவற்றைக் குறிப்பாகக் கேட்டாள் பாட்டி. 'இதுக்காகப் போய் ஏன் கொழந்தைகளை சனியன்னு திட்டறாய்? நோக்கும் எனக்கும் சினிமான்னா என்னன்னே தெரியாது.... இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. நம்ம கொழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனச்சிக்கோ... ' என்று மகனுக்குப் புத்தி சொல்லி விட்டு, 'கவர்லே என்ன சொல்லு-- அவளைக் கேட்டப்போ, 'அப்பா சொல்லுவா ' ன்னு பூடகமா குடுத்து அனுப்பிச்சாள் ' என விளக்கினாள் பாட்டி.
கவரை உடைத்து, கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு அதனுள்ளிருந்த ஒரே காகிதத்தில் சுருக்கமாக எழுதியிருந்த வாசகங்களை படிக்க ஆரம்பித்ததும் --- கணேசய்யரின் கைகள் நடுங்கின; முகமெல்லாம் 'குப் 'பென வியர்த்து உதடுகள் துடித்தன. படித்து முடித்ததும் தலை நிமிர்ந்து எதிர்ச் சுவரில் தொங்கிய கீதாவின் மணக் கோல போட்டோவை வெறித்துப் பார்த்தார்....

தாயினருகே அமர்ந்து இனிமையான சூழ்நிலையில் மகிழ்ச்சியுடனிருந்த கணேசய்யரின் முகம் திடீரென  இருளடைந்தது ' நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டு தாயின் முகத்தை வெறித்துப் பார்த்தார். அவர் கையிலிருந்த கடிதம் கீழே நழுவியதைக் கூட அவர் கவனிக்கவில்லை.

'என்ன விபரீதம் ' ' என்று துணுக்குற்ற பாட்டியம்மாள், தரையில் விழுந்த அக்கடிதத்தை வெளிச்சத்தில் பிடித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்; அவளால் கண்ணாடியில்லாமலே படிக்க முடியும் '

'என் அன்பிற்குரிய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோருக்கு....

இந்த கடிதத்தை எழுதுகையில் ஆறு மாதங்கள் தீர்க்கமாய் யோசித்து தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தபின் தெளிந்த மனத்தோடு தான் எழுகிறேன். இந்தக் கடிதத்திற்குப் பிறகு உங்களுக்கும் எனக்கும் கடிதப் போக்கு வரத்தோ, முகாலோபனமோ கூட அற்றுப் போகலாம் என்பதும் தெரிந்தே எழுதுகிறேன்.


என்னோடு பணி புரியும் ஹிந்தி பண்டிட் திருராமச்சந்திரன் என்பவரை வருகின்ற ஞாயிறன்று நான் பதிவுத் திருமணம் செய்து கொள்ள நிச்சயித்து விட்டேன். நான் விதவை என்பது அவருக்குத் தெரிந்தது தான். ஆறுமாத காலமாய் நான் எனது உணர்ச்சிகளோடு-- இது பாபகரமான காரியம் என்ற ஓர் அர்த்தமற்ற உணர்ச்சியோடு-- போராடித்தான் இம் முடிவுக்கு வந்தேன். உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்துக்கு ஆட்படமுடியாமல் வேஷங்கட்டித் திரிந்து, பிறகு அவப் பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்த முப்பது வயதில்-- இவ்வளவு சோதனைகளைத் தாங்காமல்-- இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பின் இதே முடிவுக்கு வர நேரிடுமோ என்ற அச்சமும் பிறந்தே-- இப்போதே செய்தல் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...

என் காரியம் என் வரைக்கும் சரியானதே '

நான் தவறு செய்வதாகவோ, இதற்காக வருந்த வேண்டுமென்றே, உங்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென்றே கூட எனக்குத் தோன்றவில்லை. எனினும் உங்கள் உறவை, அன்பை இழந்து விடுகிறேனே என்ற வருத்தம் சில சமயங்களில் அதிகம் வாட்டுகின்றது... இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வெளிச்சத்தைப் பெற்று, ஒரு புது யுகப்பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற லட்சிய நிறைவேற்றத்தில் நான் ஆறுதலும் மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன்.

இந்தக் காலத்தில் யார் மனம் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது. ஒரு வேளை நீங்கள் என் முடிவை ஆதரித்தா... இன்னும் ஒரு வாரமிருக்கிறது... உங்களை, உங்கள் அன்பான வாழ்த்தை எதிர் பார்க்கிறேன். இல்லையெனில் உங்களைப் பொறுத்தவரை 'கீதா செத்துவிட்டாள் ' என்று தலை முழுகி விடுங்கள்.

ஆமாம்; ரொம்பச் சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து 'தியாகம் ' செய்துவிட்டார்கள் ? ஏன் செய்யவேண்டும் ?

உங்கள் மீது என்றும்
மாறாத அன்பு கொண்டுள்ள

கீதா '

'என்னடா.. இப்படி ஆயிடுத்தே ? ' என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவோ செய்யவோ சக்தியிழந்தவளாய் ஏக்கம் பிடித்து வெறித்து விழித்தாள் பாட்டி.

'அவ செத்துட்டா...தலையெ முழுகிட வேண்டியது தான் ' என்று நிர்த்தாட்சண்யமான குரலில் உறுதியாகச் சொன்னார் கணேசய்யர்.
பாட்டி திகைத்தாள் '


--தாயின் யோசனைக்கோ, பதிலுக்கோ, கட்டளைக்கோ, உத்தரவுக்கோ காத்திராமல் அந்த 'அம்மா பிள்ளை ' முதன் முதலில் தானே ஒரு தீர்மானத்துக்கு வந்தது இது தான் முதல் தடவை.

'அப்படியாடா சொல்றே ? ' என்று கண்களிரண்டும் நீர்க் குளமாக, வயோதிக நெஞ்சு பாசத்தால் துடிக்க, நெஞ்சில் கை வைத்துக் கேட்டாள் பாட்டி.

'வேறே எப்படியம்மா சொல்லச் சொல்றே ?...நீ பிறந்த வம்சத்திலே இந்தக்குடும்பத்திலே... ஐயோ... ' ' என்று இந்த அவலத்தைக் கற்பனை செய்ய முடியாமல் பதறினார் கணேசய்யர்.
 
'நான் பிறந்த யுகமே வேறேடா ' என்ற வார்த்தை பாட்டிக்கு வாயில் வந்து நின்றது. அப்பொழுது தான் பாட்டிக்கு ஓர் அரிய உண்மை இவ்வளவு காலத்திற்குப் பின் புரிந்தது:

'என் மகன் எனது சொல்லுக்கும் எனது உத்தரவுக்கும் காத்திருந்தது வெறும் தாயன்பால் மட்டுமல்ல; நான் ஒரு யுகத்தின் பிரதிநிதி. அது ஆசாரமான யுகம்; நான் பிறந்தது சாஸ்திரத்துக்கு அஞ்சி நடந்த குடும்பத்தில்... அதுபோல் தன் குடும்பமும் நடக்க -- நடத்தி வைக்கத் தன்னால் ஆகாவிடினும் என்னால் ஆகும் என்ற நம்பிக்கையில்-- அந்த யுகத்தை அந்த ஆசார ஜீவிதத்தைக் கெளரவிப்பதன் பொருட்டே என் சொல்லே, என் வார்த்தையை அவன் எதிர்பார்த்திருந்தான்... ' என்று தன்னைப்பற்றியும், தன் மகனின் மூர்க்கமான தீர்மானம் பற்றியும், தனித்துப்போன அன்பிற்குரிய கீதாவைப்பற்றியும் எண்ணி மெளனமாய் வாயடைத்து உட்கார்ந்தாள் பாட்டி.

அப்போது அங்குவந்து அவர்களை விபரீதச் சூழ்நிலைக்கு ஆட் படுத்தியிருக்கும் அந்தக் கடிதத்தை எடுத்து படித்த பார்வதி 'அடி, பாவி மகளே...என் தலையிலே தீயை வெச்சுட்டியேடி ' ' என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.

பாட்டி, தன் இயல்புக்கேற்ற நிதான புத்தியுடன் அந்தக் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்து அந்தக் கடைசி வரிகளைப் படித்தாள்....

'ரொம்ப சுய நலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப்-பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து, 'தியாகம் ' செய்து விட்டார்கள் ? ' --பாட்டிக்குச் 'சுருக் ' கென்றது.....உதட்டைக் கடித்துக் கொண்டாள்....
 
இந்த வார்த்தைகளின் அர்த்தம் மற்றவர்களுக்குப் புரியாது. பாட்டிக்குப் புரியும்.

கீதா, பதினெட்டு வயதில் நெற்றியிலிடும் திலகத்தை மறந்தது போல், கூந்தலில் சூடும் பூவைத் துறந்தது போல்-- 'அது அவள் விதி யென்று சொல்லி அவள் சோகத்தையே மறந்து விடவில்லையா, அவளைப் பெற்ற தாயும் தந்தையும் ?... கீதா இப்படியாகி வந்த பிறகுதானே பார்வதி, அம்பியையும் ஜானாவையும் பெற்றெடுத்தாள் '...

--அதற்கென்ன? அது தான் வாழ்கின்றவர்களின் வாழ்க்கை இயல்பு.

வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து சிதைந்து, மக்கி மண்ணாகிப் பூச்சி அரிப்பது போல் அரித்து அரித்துப் புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை, கனவுகளை அவர்கள் அறிவார்களா ?

ஆனால்...

கீதாவைப் போல் அவளை விடவும் இள வயதில் அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஹிந்து சமூகத்தின் வைதவ்யக் கொடுந் தீயில் வடுப்பட்டு வாழ்விழந்து, அந்த நினைவுகளையெல்லாம் கொண்டிருந்த, அந்தக் கனவுகளை யெல்லாம் கண்டிருந்த, அந்த ஆசைகளை எல்லாம் கொன்றிருந்த கெளரிப் பாட்டி, அவற்றையெல்லாம் கீதாவிடம் காணாமலா, கண்டுணராமலா இருந்திருப்பாள்?

அதனால்தான் கணேசய்யரைப் போலவோ, பார்வதி அம்மாளைப் போலவோ... கீதா இப்படி நடந்து கொள்ளப் போவதைப் அறிந்து.. அவளை வெறுத்து உதறவோ, தூஷித்துச் சபிக்கவோ முடியாமல் 'ஐயோ ' என்ன இப்படி ஆய்விட்டதே '... என்ன இப்படியாய் விட்டதே ' என்று கையையும் மனசையும் நெறித்துக் கொண்டு தவியாய்த் தவிக்கிறாள் பாட்டி.

பொழுது சாய்ந்து விளக்கு வைக்கும் நேரத்தில் மாட்டினி ஷோவுக்குப் போயிருந்த மீனாவும் அம்பியும் வீடு திரும்பினார்கள். வாசற்படியில் கால் எடுத்து வைத்த அம்பி, கூடத்து ஈஸி சேரில் சாய்ந்து படுத்து ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்திருக்கும் பாட்டியைக் கண்டதும் சட்டென்று நின்று திரும்பிப் பின்னால் வரும் மீனாவிடம்,
'பாட்டிடா... ' என்று ரகசியமாக எச்சரித்தான்.

'எங்கே ? உள்ளே இருக்காளா, கூடத்தில் இருக்காளா ? ' என்று பின் வாங்கி நின்றாள் மீனா.

'சிம்மாசனத்தில்தான் சாஞ்சிண்டு தூங்கறா... ' என்றான் அம்பி.

மீனா தோள் வழியே 'ஸ்டைலாக ' கொசுவித் தொங்கவிட்டிருந்த தாவணியை ஒழுங்காய்ப் பிரித்து, இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, மேலாடை ஒழுங்காக இருக்கிறதா என்று ஒரு முறை கவனித்த பின் தலையைக் குனிந்து சாதுவாய் உள்ளே நுழைந்தாள்.

உள்ளே வந்த பின்தான் பாட்டி தூங்கவில்லை என்று தெரிந்தது. அப்பா ஒரு பக்கம் நாற்காலியிலும் அம்மா ஒரு பக்கம் முகத்தில் முந்தானையைப் போட்டுக் கொண்டு விம்மியவாறு ஒரு மூலையிலும் விழுந்து கிடப்பது என்ன விபரீதம் என்று புரியாமல் இருவரும் திகைத்து நின்றனர்.

அப்போது ஜானா சிரித்துக் கொண்டே அம்பியிடம் ஓடி வந்தாள். 'பாட்டி வெள்ளரிப் பிஞ்சு வாங்கியாந்தாளே... ' என்ற ஜானாவின் குரல் கேட்டுப் பாட்டி திரும்பிப் பார்த்தாள் மீனாவை.

'எப்ப வந்தேள் பாட்டி ? ' என்ரு கேட்டுவிட்டு 'என்ன விஷயம்-- இதெல்லாம் என்ன ? ' என்று சைகையால் கேட்டாள் மீனா.

பாட்டியின் கண்கள் குளமாயின.
 
மீனாவைப் பார்க்கும்போதுதான் அவளுக்கு இன்னொரு விஷயமும்-- கணேசய்யர் கீதாவைத் தலை முழுகச் சொல்வதன் காரணம், பார்வதியம்மாள் கீதாவைச் சபிப்பதன் நியாய ஆவேசம் இரண்டும்--புரிந்தது பாட்டிக்கு.

அங்கே கிடந்த அந்தக் கடிதத்தை மீனா எடுத்துப் படித்தாள்.
'அதை நீ படிக்க வேண்டாம் ' என்று தடுக்க நினைத்தாள் பாட்டி. பிறகு ஏனோ 'படிக்கட்டுமே ' என்று எண்ணி மீனாவின் முகத்தையே உற்றுக் கவனித்தாள்.

மீனாவின் முகம் அருவருப்பால் சுளித்தது.

'அடி நாசமாப் போக ' என்று அங்கலாய்த்தவாறே தொடர்ந்து கடிதத்தைப் படித்தாள். அவள் தோள் வழியே எக்கி நின்று கடிதத்தைப் படித்த அம்பி கூட விளக்கெண்ணெய் குடிப்பது போல் முகத்தை மாற்றிக் கொண்டான்.

வீடே சூன்யப் பட்டது. ஊரெல்லாம் பிளேக் நோய் பரவிக்கிடக்கும் போது வீட்டில் ஒரு எலி செத்து விழக்கண்டவர்கள் போல் ஒவ்வொருவரும் மிகுந்த சங்கடத்தோடு இன்னொருவர் முகத்தைப் பார்த்தனர்.

இரவு முழுதும் கெளரிப் பாட்டி தூங்கவில்லை. சாப்பிடவில்லை; கூடத்து ஈஸி சேரை விட்டு எழுந்திருக்கவும் இல்லை.
மகனைப் பார்த்தும் மருமகளைப் பார்த்தும், மற்றப் பேரக்குழந்தைகளைப் பார்த்தும், கீதாவை நினைத்தும் பெருமூச் செறிந்து கொண்டிருந்தாள்.

'வழக்கத்துக்கு விரோதமாய் என்னை வழியனுப்ப பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, பஸ் புறப்படும் போது முந்தானையால் கண்களைக் கசக்கிக் கொண்டாயடி கீதா ? இப்போதல்லவா தெரிகிறது... பாட்டியை நிரந்தரமாப் பிரியறமேன்னுட்டு, பாவம் கொழந்தெ கண்கலங்கி நின்னுருக்கேன்னு... இப்பன்ன புரியறது... கண்ணிலே தூசு விழுந்திருக்கும்னு நினைச்சேனே பாவி '--

'என்னடி இப்படி பண்ணிட்டியே ' ' என்று அடிக்கடி தன்னுள் குமுறிக் குமுறிக் கேட்டுக் கொண்டாள் பாட்டி.


விடிகின்ற நேரத்துக்குச் சற்று முன்பு தன்னையறியாமல் கண்ணயர்ந்தாள். கண்மூடிக் கண் விழித்தபோது மாயம் போல் விடிவு கண்டிருந்தது.

தெருவாசற்படியின் கம்பிக் கதவோரமாக கைப் பெட்டியுடன் வந்து காத்திருந்தான் வேலாயுதம்.

கண் விழித்த பாட்டி-- நடந்த தெல்லாம் கனவாகி விடக்கூடாதா என்று நினைத்து முடிக்கு முன் 'இது உண்மை ' என்பது போல் அந்தக் கடிதம் ஸ்டூலின் மீது கிடந்தது.

அந்த கடிதத்தை எடுத்து மீண்டும் படித்தாள் பாட்டி. அப்போது அறைக்குள்ளிருந்து வந்த கணேசய்யர், இரவெல்லாம் இதே நினைவாய்க் கிடந்து மறுகும் தாயைக் கண்டு தேற்ற எண்ணி 'அம்மா வேலாயுதம் வந்திருக்கான்... அவள் செத்துட்டானு நெனைச்சித் தலையை செரைச்சி தண்ணிலே போயி முழுகு... ' என்றார்.

'வாயை மூடுடா... ' என்று குமுறி எழுந்தாள் பாட்டி. காலங் கார்த்தாலே அச்சான்யம் பிடிச்ச மாதிரி என்னபேச்சு... இப்ப என்ன நடந்துட்டுதுன்னு அவளைச் சாகச் சொல்றே ?... ' என்று கேட்டு விட்டு, தாங்க முடியாத சோகத்துடன் முகமெல்லாம் சிவந்து குழம்பக் கதறியழுதாள் பாட்டி. பிறகு சிவந்த கண்களைத் திறந்து ஆத்திரத்துடன் கேட்டாள்.

'என்னடா தப்புப் பண்ணிட்டா அவ ?... என்ன தப்புப் பண்ணிட்டா, சொல்லு, ' என்று தன் தாய் கேட்பதைக் கண்டு, கணேசய்யருக்கு ஒரு விநாடி ஒன்றுமே புரியவில்லை.

'என்ன தப்பா ?...... என்னம்மா பேசறே நீ ? உனக்குப் பைத்தியம் புடிச்சிடுத்தா ? ' என்று கத்தினார் கணேசய்யர்.


அடுத்த விநாடி தன் சுபாவப்படி நிதானமாக மகனின் முகத்தைப் பார்த்தவாறு, அமைதியாக யோசித்தாள் பாட்டி. தன் மகன் தன்னிடம் இப்படிப் பேசுவது இதுவே முதல் தடவை.

பாட்டி மெல்லிய குரலில் நிதானமாய்ச் சொன்னாள்: 'ஆமாம்டா... எனக்குப் பைத்தியந்தான் ... இப்பப் பிடிக்கலைடா... இது பழைய பைத்தியம் ? தீரமுடியாத பைத்தியம்... ஆனால் என்னோட பைத்தியம்-- என்னோட போகட்டும் அந்தப் பைத்தியம் அவளுக்குப் 'படார் ' னு தெளிஞ்சிருக்குன்னு அதுக்கு யார் என்ன பண்றது ?...... அவதான் சொல்லிட்டாளே-- என் காரியம் என் வரைக்கும் சரி, வேஷம் போட்டு ஆடி அவப்பேரு வாங்காம விதரணையா செஞ்சிருக்கேன்னு..'

'அதனாலே சரியாகிடுமா அவ காரியம் ? ' என்று வெட்டிப் பேசினார் கணேசய்யர்.

'அவ காரியம் அவ வரைக்கும் சரிங்கறாளே அவதான்... அதுக்கென்ன சொல்றே ? ' என்று உள்ளங் கையில் குத்திக் கொண்டாள் பாட்டி.

'சாஸ்திரம் கெட்ட மூதேவி. ஆசாரமான குடும்பத்துப் பேரைக் கெடுத்த சனி -- செத்துத் தொலைஞ்சுட்டானு தலையை முழுகித் தொலைன்னு சொல்றேன் ' என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினார் கணேசய்யர். பாட்டியம்மாள் ஒரு விநாடி தன்னையும் தன் எதிரே நிற்கும் மகனையும் வேறு யாரோ போல் விலகி நின்று பார்த்துவிட்டு, ஒரு கைத்த சிரிப்புடன் கூறினாள்.

'நம்ம சாஸ்திரம்...ஆசாரம் ' அப்படீன்னா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா ? என்னை என்ன பண்ணித்து தெரியுமா அந்த சாஸ்திரம் ?....அப்போ நீ பால் குடிக்கிற கொழந்தையடா...எனக்குப் பதினைஞ்சி வயசுடா ' என் கொழந்தை, என் மொகத்தெப் பார்த்துப் பேயைப் பார்த்ததுபோல் அலறித்தேடா.... ' பெத்த தாய் கிட்டே பால்குடிக்க முடியாத குழந்தை கத்துவே; கிட்டே வந்தா மொட்டையடிச்ச என்னைப் பார்த்து பயத்துலே அலறுவே.... அப்படி என்னை, என் விதிக்கு மூலையிலே உட்காத்தி வெச்சாளேடா ' அந்த கோரத்தை நீ ஏண்டா பண்ணலே கீதாவுக்கு ?.....ஏன் பண்ணலே சொல்லு ' என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்கும் போது, கணேசய்யரும் கண்களை பிழிந்து விட்டுக் கொண்டார் ' அவள் தொடர்ந்து பேசினாள்.
 
'ஏண்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர் புடவைக் கட்டிக்கச் சொல்லித்தோ ? தலையைப் பின்னிச் சுத்திண்டு பள்ளிக்கூடம் போய் வரச் சொல்லித்தோ ? தன் வயித்துக்குத் தானே சம்பாத்திச்சுச் சாப்பிடச் சொல்லித்தோ ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான் சரின்னேன், ஏன் ?.... காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான் ' நான் பொறந்த குடும்பத்தலேன்னு சொல்றயே.... எனக்கு நீ இருந்தே ' வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும் அப்படி இருந்தது. கீதா பண்ண காரியத்தை மனசாலே கூட நெனக்க முடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாவும் இருந்தது. இப்போ முடியலியேடா.... எனக்கு உன் நிலைமையும் புரியறது---அவளும் புரிஞ்சுதானே எழுதி இருக்கா....உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாடா ? அவளுக்கு அது வேண்டாம்னுட்டா....ஆனா, டேய் கணேசா.... என்னெ மன்னிச்சுக்கோடா... எனக்கு அவ வேணும் ' அவதாண்டா வேணும்.... எனக்கு இனிமே என்ன வேண்டி இருக்கு ' என் சாஸ்திரம் என்னோடேயே இருந்து இந்தக் கட்டையோட எரியும்.... அதனாலே நீங்க நன்னா இருங்கள்.... நான் போறேன்.... கீதாவோடேயே போயிடறேன்.... அது தான் நல்லது. அதுக்காக நீ உள்ளூரத் திருப்திப் படலாம்---யோசிச்சுப் பாரு இல்லேன்னா அவளோட சேத்து எனக்கும் ஒரு முழுக்குப் போட்டுடு ' நான் வர்ரேன் ' என்று கூறியவாறே மாற்றுப் புடவையைச் சுருட்டிக் காக்கிப் பைக்குள் திணித்தவாறு எழுந்தாள் பாட்டியம்மாள்.

'அம்மா ' ஆ.... ' என்று கைகளைப் கூப்பிக்கொண்டு தாரை தாரையாய்க் கண்ணீர் வடித்தார் கணேசய்யர்.

'அசடே....எதுக்கு அழறே ? நானும் ரொம்ப யோசிச்சுத் தான் இப்படி முடிவு பண்ணினேன்... என்ன பண்ணினாலும் அவ நம்ம கொழந்தேடா ' என்று மெதுவாய்ச் சொல்லிவிட்டு உட்புறம் திரும்பிப் பார்த்தாள். 

'பார்வதி நீ வீட்டெச் சமத்தாப் பார்த்துக்கோ... ' என்று எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள் பாட்டி.

'எனக்கு உடனே போயி கீதாவைப் பார்க்கணும் ' என்று தானே சொல்லிக் கொண்டு திரும்பும்போது, வாசற்படியில் நின்றிருந்த வேலாயுதத்தைக் கண்டாள் பாட்டி.

'நீ போடாப்பா....நான் அவசரமாப் போறேன் நெய்வேலிக்கு ' என்று அவனிடம் நாலணாவைத்தந்து அனுப்பினாள்.

'இனிமேல் இவனுக்கு இங்கு வேலை இல்லை---அதற்கென்ன ? உலகத்தில் என்னென்னமோ மாறுகிறது ' நான் ஒரு நாவிதனைக் கூட மாற்றிக் கொள்ளக் கூடாதா ? ' என்று எண்ணிச் சிரித்துக்கொண்டாள். 

இடுப்பில் பையை வைத்துக் கொண்டு வாசற்படியில் இறங்கிய பாட்டி, ஒரு முறை திரும்பி நின்று 'நான் போயிட்டு வரேன் ' என்று மீண்டும் விடை பெற்றுக்கொண்டாள்.
 
அதோ, காலை இளவெயிலில், சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்து கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்.....

வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக் கொள்ளப் பயணப் படுவதென்றால்?

ஓ ' அதற்கு ஒரு பக்குவம் தேவை ' 


Saturday, August 21, 2010

இது என் குற்றமா....? டாக்டர் மு.வரதராசன்



ஆயிரம் பக்கங்களுக்கு மேல், நூற்றுக்கணக்கான பாத்திரங்களை  வைத்துக் கதை பண்ணிவிடலாம்! அது கூட அவ்வளவு கஷ்டமான ஒன்றில்லை! ஆனால், நாலைந்து அல்லது ஒன்றிரண்டு பக்கங்கள் கூடுதலாகக் கூட இருக்கலாம், அதற்குள், ஒரு மையக் கருவைக் குழப்பமில்லாமல் ஒரு நல்ல சிறுகதையாகப் படைப்பதற்கு அதிகத் திறமை இருக்க வேண்டும்! சிறுகதை, வடிவத்தில் தான் சின்னது!  சின்னஞ்சிறுவனாக வாமன மூர்த்தியாய் வந்தவன்,  தன் காலடி மூன்றினால்  மூவுலகையும் அளந்தது போல, ஒரு நல்ல சிறுகதையின் கீர்த்தியும் கூடப் பெரியது தான் என்று எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு! இந்தப் பக்கங்களில், சிறுகதை என்று பேச முனைகிறபோதே, இந்த வாமன மூர்த்தியை நினைத்துக் கொண்டு தான், ஒரு சிறுகதைக்குள் எப்படி ஒரு அழுத்தமான கருத்தை கதாசிரியரால் படைக்க முடிகிறது என்று ஆச்சரியப்படுவதுண்டு!


தூய தமிழில், பிறமொழிக் கலப்பு இல்லாமல் கதை எழுதியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் டாக்டர். மு.வரதராசன்! பள்ளிப் பருவத்தில், அந்த நல்ல தமிழுக்காகவே,  அவருடைய புதினங்களை ஆசையோடு படித்திருக்கிறேன். அகல் விளக்கு, கரித்துண்டு, கள்ளோ காவியமோ என்று அவருடைய புதினங்களைப் படிக்க, மதுரை சுப்ரமணியபுரத்தில் இருந்த பொது நூலகம் தான் அந்த நாட்களில் உதவியிருக்கிறது. என்னுடைய வாசிப்பு அனுபவத்தைப் பரந்ததாக மாற்றத் தூண்டுதலாகவும் உதவியாகவும்  இருந்த இரண்டு, மூன்று நூலகர்களை இப்போது கூட நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்!

இந்தக் காதல் இருக்கிறதே, இது தான் எப்படிப் பட்ட பெருமிதத்தை அல்லது ஏமாற்றத்தைத் தருவதாக இருக்கிறது!

காதல் வசப்பட்டவன், வேறெதையும் நினைத்துப் பார்க்க முடியாத பரவசத்தில் ஆழ்ந்து விடுகிறான்! அதனால் தானோ என்னவோ ஷேக்ஸ்பியர் உலகம் முழுவதுமே காதலர்களை நேசிக்கிறது என்று சொன்னார்! காதல் தோற்றுவிட்டால், சொல்லவே வேண்டாம், இந்த வானமே இடிந்து தலைமீது விழுந்து விட்டதைப் போல, அப்படி ஒரு சோர்வு, ஏமாற்றம்!

இந்தச் சிறுகதையில் கூட, ஒருவன் தன்னுடைய காதலைப் பற்றிப் பேசுகிறான். காதல் தோற்றபின், அந்த ஏமாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாதவனாகத் தான் துவளுகிறான்! அப்படித்  துவளுகிற எல்லோருமே தேவதாஸ் மாதிரி 'துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே' என்று சோகமான பாட்டைப் பாடிக் கொண்டு, காதல் ஏக்கத்திலேயே மரணத்தைத் தழுவுவதில்லை!  


யாருக்காக, இது யாருக்காக என்று பாட்டுப் பாடித் தன்னையும் பிறரையும் தொந்தரவு செய்வதில்லை. வாழ்க்கை அதன் போக்கில் அது பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறது!

இந்த யதார்த்தத்தைச் சொல்கிற கதை ..கதை சொல்கிறவன் தன்னுடைய பெயரைச் சொல்வதில்லை! காதலித்து ஏமாற்றம் தந்தவளுடைய பெயரோ, வாழ்க்கையில் இணைந்து கொண்டவளுடைய பெயரோ கூட ஒற்றை எழுத்திலேயே நின்று விடுகிறது.கதையைப் படித்து முடிக்கும்போது, இது உங்களுடைய சொந்தக் கதையாகவுமே கூட இருக்கலாம் என்று நினைக்க வைக்கிறார் பாருங்கள், அங்கே தான் மு.வ எழுத்தின் வசீகரம் இருக்கிறது! படித்துப் பாருங்கள்!



எவர் குற்றம்? டாக்டர் மு.வரதராசன்

"வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்கள் வந்து வந்து போகின்றன. ஆனால் இத்தகைய கொடிய ஏமாற்றத்தை - எதிர்த்து நின்று என்னோடு போராடும் ஏமாற்றத்தை இது வரையில் கண்டதில்லை. மற்ற ஏமாற்றங்கள் வரும் போது பெருமூச்சு விட்டுத் தெளிவேன்; போகும்போது பெருமூச்சு விட்டுக் கலங்குவேன்; இந்த ஏமாற்றமோ வரும்போதே என் உயிரைப் பணயமாக வைத்துக் கொண்டு வந்தது. என் உயிரைப் பணயமாகப் பெற்றுக் கொண்டே செல்லும் போல் இருந்தது.

பரந்த உலகம் என்று சொல்கின்றார்கள். இருக்கலாம். உணவுத்துறையிலே பரந்த உலகம் தான். விருப்பான உணவை அல்லது விருப்பான உடையை வேண்டிய இடத்தில் வேண்டிய போது ஒருவன் பெற முடியும். நாளுக்கு நாள் மாறும் உடையா? வாழ்க்கையிலே ஒரு முறை தோன்றி எந்நாளும் நிலைத்து நின்று வாழ்க்கையோடு முடிந்துபோகும் உணர்வு. இந்த உணர்வுத் துறையிலே, உலகத்தைப் பரந்த உலகம் என்று சொல்ல மனம் இல்லை. இது மிக மிகக் குறுகின உலகம். ஒரு சிறு வீடு அல்லது ஒரு சிறு கூடு எனலாம்.

இந்த உணர்வுத் துறையிலே எனக்கும் ஒருத்திக்கும் தான் இடம் உண்டு. அந்த 'ஒருத்தி' யார்? இதுதான் பெருங் கலக்கத்தின் வித்து; ஏமாற்றத்தின் காரணம்; என் உயிரைப் பணயமாகக் கேட்ட போர்.

ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் பழகிய எனக்கு ஒரு சிலரே நண்பர்களாகக் கிடைத்திருக்கின்றார்கள். இரண்டாயிரம் பேருடன் பழகினேன். அவர்களும் என்னைப் பொறுக்க முயன்றார்கள், நானும் அவர்களில் பலரைப் பொறுக்க முயன்றேன். இது பரந்த உலகம் என்று தவறாக எண்ணியதால் அவ்வாறு முயன்றேன். முயற்சியின் பயனாக நண்பர்கள் இருவரே கிடைத்தனர். நட்புத் துறையிலும் இது குறுகிய உலகமே என்ற உண்மை உணர்ந்தேன். ஆம் நட்பும் உணர்ச்சிதானே? 'உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்' என்ற திருவள்ளுவரைக் கேட்டிருந்தால், அவரும் இது குறுகின உலகம் தான் என்று உடன்பட்டிருப்பார். அப்போது 'மாயிரு ஞாலம்' என்று இதனை வாழ்த்தியிருக்கமாட்டார்!

இந்த இரண்டு நண்பர்களும் எனக்குத் துணை செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். உள்ளத்தையெல்லாம் ஒளிக்காமல் எடுத்துரைத்தேன். இரவெல்லாம் பேசினேன். வைகறையில் வாய் திறந்து அவர்கள் கருதியதை எடுத்துச் சொல்லிவிட்டார்கள். மருந்து இல்லாமலே என் மனப் புண்ணை ஆற்ற முயன்றார்கள். அது ஆறவில்லை.

 "வாழ்க்கை என்பது ஒரு கலை. அதற்கு அனுபவம் உடையவர்களின் துணை வேண்டும். ஏட்டுக் கல்வியைக் கொண்டு அதனை எட்ட முடியாது. நாங்கள் சொல்வதைக் கேள். நீ விரும்பிய காதல் நல்லதுதான். விரும்பியபடி நீ அதைப் பெற்று வாழலாம். விருப்பத்தை மறந்து விட்டும் வாழலாம். ஆனால் எது நல்லது என்பதை எண்ண வேண்டாவா? உலகத்தை ஒட்டிச் செல்லாமல் சுற்றுப் புறத்தை புறக்கணித்து, எவரையும் பொருட் படுத்தாமல் ஒதுங்கி நீ அவளை மணந்து கொண்டு வாழ்ந்தால் அந்த வாழ்க்கை இன்பமான வாழ்க்கை ஆகுமா? காதல் வாழ்க்கை கட்டற்று விளங்குவது கற்பனை உலகத்தில் தான்! நீ நினைப்பதுபோல உலகத்தை மறந்து சுற்றுப் புறத்தைப் புறக்கணித்து ஒருத்தியோடு வாழ்க்கை நடத்த முடியாது".

இவ்வாறு நண்பர்கள் உரைத்த உபதேசம் என் மனத்தை ஓரளவு மாற்ற முயன்றது; மாற்றியது என்று சொல்வதற்கில்லை. மாற்ற முயன்றது, அவ்வளவு தான்!

அந்த அழகிய முகத் தோற்றத்திற்கு நான் அடிமையாகவில்லை. அவளுடைய புன்முறுவலில் விளங்கும் கலைக்கதிருக்கு நான் அடிமை ஆகவில்லை. அவளுடைய இனிய பேச்சில் மிதக்கும் அறிவொளிக்கு நான் அடிமையாகவில்லை. அந்த அழகையும், நகையொளியையும், கூரிய அறிவையும் நான் மதிக்கிறேன். ஆனால் இவற்றிற்கு நான் அடிமையாகவில்லை. அழகும், சிரிப்பும், அறிவும் நான் எங்கெங்கும் காண்கின்றேன். நான் அவற்றைத் தேடித் திரியும் இளைஞனாயிருத்தால் இன்று இவ்வளவு கவலைப்பட வேண்டியதில்லையே! அழகையும் சிரிப்பையும் அறிவையும் கடந்து அவள் உள்ளத்தில் வாழும் உணர்வு, நான் எங்கும் காணாத உணர்வு; இதனை நினைக்கும்போது இந்த உலகத்தில் நானும் அவளும் தவிர வேறொன்றும் இல்லை என்று தோன்றுகின்றது. இதை அந்த நண்பர்கள் அறிந்தே இருக்கின்றார்கள். அறிந்தும் என்னைத் திருத்த வேண்டும் என்று எண்ணி என்னவோ சொல்கின்றார்கள்.

இந்த உலகில் நான் வாழவேண்டும். வாழ்வதற்கு உணர்வு வேண்டும். என் உணர்வுக்கு ஒரு துணை வேண்டும். அதற்குத்தான் அவளை நாடினேன். உணர்வுலகத்தில் பழகிய நண்பர்களும் அதைத் தடுக்கிறார்கள். உணர்வை விட உலகம் பெரியது என்கிறார்கள். நான் உலகம் சிறியது என்கிறேன்.

எங்களுக்குத் தனித் தனி மனங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் உள்ளத்தில் உணர்வது போலவே நான் உணர்கின்றேன். நான் உணர்வது போலவே அவளும் உணர்கின்றாள். எங்கள் வாழ்வு ஒரு மனத்தின் வாழ்வாக இருக்கிறது. அத்தகைய வாழ்விற்கு இடம் இல்லையா? இரண்டு வேறு பட்ட மனங்கள் இடையறாமல் போர் செய்து கொண்டு வாழும் வாழ்க்கையே வேண்டும் என்பது படைத்தவன் நோக்கமா?

"அவளை மறந்து வாழ்வதனால்-" இப்படி மூன்று மாதங்களுக்கு முன் நான் எண்ணியிருந்தால், அந்த எண்ணமே எமனாய் மாண்டிருப்பேன். எண்ணிய எண்ணம் அடுத்த நொடியிலே என்னை மாய்த்திருக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று இந்த எண்ணத்தை எண்ணவும் முடிகின்றது. ஏமாற்றம் விளையுமே என்று நடுங்கவும் முடிகின்றது. அவளை மறந்துவிட்டு இன்னொருத்தியை மணந்து கொள் என்று நண்பர்கள் சொல்லும் சொல்லைக் கேட்கவும் முடிகின்றது.

 இன்னொருத்தியும் - அவளும் அழகிதான்; கலை வல்லவள்தான்; அறிவு நிரம்பியவள் தான். ஆனால் என் மனம் நடுங்குகிறது. அவளுடைய உள்ளம் எப்படிப்பட்டதோ? அறிவார் யார்? அறிவது எப்படி? அறியாமல் துணிவது எவ்வாறு? கரவற்ற பார்வை, அடக்கமான நடை, ஒழுக்கமான வாழ்வு... இந்தச் சிறந்த பண்புகள் காண்கின்றேன். ஆயினும்-.........


oooOooo
நான் எங்கோ நடந்து போய்க் கொண்டிருந்தேன். அழகான பாதையாக இருந்தது.

என் கையில் திருக்குறளோ வேறு எதுவோ இருந்தது, அதை ஊர்ப்பயணம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் என் நடையிலே ஒருவகை ஊக்கம் இருந்தது. ஊக்கத்திற்குக் காரணமாக என்னை அடுத்தாற்போல் க---  நடந்து வந்து கொண்டிருந்தாள். என் பக்கத்தில் என்னோடு கைகோத்து நடந்துவர வேண்டும் என்று விரும்பினேன். அவள் அதற்கு இணங்கவில்லை. என் பின்னே மெல்ல நடந்து வந்தாள். நான் முன்னே சென்றேன். அந்தப் பாதையில் நடப்பதில் ஓர் இடையூறும் இல்லை என்பது என் எண்ணம். ஆனால் என்ன காரணத்தாலோ அவள் பின் வாங்கினாள். எனக்கு முன்னும் செல்லாமல், என் பக்கத்திலும் வராமல், பின்னே நடந்து வந்தாள். அதுவே போதும் என்று மகிழ்ந்து நான் ஊக்கத்துடன் நடந்தேன். திரும்பித் திரும்பி அவளைப் பார்த்துக் கொண்டே சென்றேன். நெடுந்தூரம் நடந்தேன். நின்றேன். திரும்பி நோக்கியபோது அவள் நெடுந்தொலைவில் காணப்பட்டாள்.

அப்போது என் பின்னே சிறிது தொலைவில் அடக்கத்தோடு அச்சத்தோடு இன்னொருத்தி நடந்து வருவதைக் கண்டேன். அவள் தான் த------

இந்தக் கனவு எவ்வளவு பொருளுடைய கனவு என்பதை நான் அன்று உணரவில்லை. கனவு கண்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. கனவு கண்ட அன்று விடியற் காலையில் என் நெஞ்சம் பட்டபாடு சொல்ல முடியாது. அந்தக் கனவை இன்று நினைத்துப் பார்க்கின்றேன். அமைதியோடு நினைக்கின்றேன். அவள் எனக்கு முன்னே சென்றிருப்பாளானால், என்னை ஒருவரும் தடுத்திருக்க முடியாது. அவள் எவ்வளவு வேகமாகச் சென்றிருந்தாலும் நான் அவளை விடாமல் தொடர்ந்திருப்பேன். என்னை ஒருவரும் இழுத்துப் பிடித்திருக்க முடியாது. அல்லது, அவள் என்னுடன் கைகோத்துப் பக்கத்தே நடந்துவந்திருந்தாலும் நாங்கள் பிரிந்திருக்க மாட்டோம். நண்பர்களின் உபதேசம் எங்களுக்குத் தடையாக இருந்திருக்க முடியாது.

ஆனால், நல்ல பாதை என்று அறிந்தும், இல்லாத இடையூறுகளை நினைந்து அஞ்சி, பின்வாங்கி, என்னை முன்னே நடக்க விட்டுத் தான் பின்னே வந்து கொண்டிருந்தாள். நான் திரும்பிப் பார்த்தபோது என் கண்ணுக்கு எட்டாத் தொலைவில், என் வாழ்க்கைக்கு எட்டா நிலையில் தனித்து, நின்று விட்டாள்.

இது என் குற்றமா?

oooOooo

இன்று .....................


இந்த மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகு, இந்தக் கனவை அமைதியாக எண்ணும் வாய்ப்புக் கிடைத்த போது, என் வாழ்க்கைத் துணைவியாக விளங்குகின்றாள், த-----. இந்தக் கூட்டில் நான் எதிர்பார்த்த கிளி என்னோடு இல்லை. அது கூட்டினுள் புகுவதற்கு அஞ்சி இன்னும் பறந்து திரிந்து கொண்டிருக்கிறது. இந்த அமைதியான கிளி த....... என்னுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அன்று அவள் இல்லாத குறையால் என் நெஞ்சமே வெடித்து விடும் போல் தோன்றியது; என் உயிர் வாழ்வு முறிந்து போகும் போல் இருந்தது.

ஆனால் இன்று இவளோடு நானும் வளமாகத்தான் வாழ்கின்றேன், என் நெஞ்சமும் அமைதியாகத்தான் இருக்கின்றது."


மு.வ படைத்த இந்த சொற்சித்திரம் எப்படி இருக்கிறது என்பதைக் கொஞ்சம் பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்!

பின்னூட்டத்தில்; திரு ராஜு மு.வ பற்றி விக்கிபீடியா பக்கங்களில் எதுவும் கிடைக்கவில்லை என்று முதலிலும், அப்புறம் வேறு இரண்டு பக்கங்களின் தொடுப்பையும் கொடுத்திருந்தார்.சென்னை லைப்ரரி டாட் காமில் டாக்டர் மு.வரதராசன் எழுதிய அகல் விளக்கு புதினமும், வேறு பல சிறுகதைகளும் இணையத்திலேயே படிக்கக் கிடைக்கிறது.
 
 கொஞ்சம் விரிவான விக்கி பக்கம் இங்கே.


Friday, August 20, 2010

தி ஆர் டாகுமென்ட்.....! இர்விங் வாலஸ்!

 
இர்விங் வாலஸ் எழுதிய "மனிதன்" என்ற புதினத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுக விமரிசனத்தைப் பார்த்திருக்கிறோம்!

சுதந்திர தினச் சிந்தனைகளாக இன்னொரு வலைப் பக்கங்களில் எழுதிக் கொண்டிருந்ததில், தேடும்போது இர்விங் வாலஸ் எழுதிய தி ஆர் டாகுமென்ட் (The R Document) என்ற புதினத்தைப் பற்றிய இந்த TIF (பட வடிவில்) அந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒரு கட்டுரையின் ஒரு பக்கம் காணக் கிடைத்தது.

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்

இர்விங் வாலஸ் எழுதிய, தி ஆர் டாகுமென்ட்! 1976 ஏப்ரலில் முதல் முறையாகப் புத்தகவடிவில் வெளியானது. 

இந்தப்  புத்தகத்தை 1977 இல் மைக்கேல் ஹெண்டெர்சன் என்பவர் படித்துவிட்டு, தன்னுடைய கருத்தை இப்படிச் சொல்கிறார். அவர் எழுதிய இந்தப் பகுதியின் முதல் பக்கம்(மேலே பட வடிவில் காண்பது), இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப் பட்டு, இருபது மாதங்கள் இந்திய ஜனநாயகம் கழுத்து நெறிக்கப்பட்டுக் கிடந்த அந்த இருண்ட தருணங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. 

ஹெண்டெர்சன் சொல்கிறார்:

"1975-1977 இந்திய நெருக்கடி நிலைப் பிரகடனத்தைப் பற்றி விரிவாகப் படித்து முடித்துவிட்டு, வீடு திரும்புகிற நேரத்தில் படிப்பதற்காக சுவாரசியமான புத்தகத்தைத் தேடிய போது, இர்விங் வாலஸ் எழுதிய தி ஆர் டாகுமென்ட் புதினத்தைப் பார்க்க நேர்ந்தது. அதன் அட்டையில் அதிர்ச்சியூட்டக் கூடிய யதார்த்த நிலை என்று போட்டிருந்ததைப் பார்த்தேன்.

இருபது மாதங்கள் இந்தியாவில் அமலில் இருந்த சர்வாதிகாரத் தன்மையை  அதிரச் செய்யும் அளவிற்கு இந்த நாவல் எதிரொலித்தது என்பது உண்மை. இந்தக் கதையை, 1977 இல் படித்ததற்குப் பதிலாக, 1974 இல் படித்திருந்தால், மிக சுவாரசியமான கற்பனை, ஆனால் எப்போதுமே நடக்க முடியாதது என்று தான் நினைத்திருப்பேன். 

இந்தியாவின் அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 42 வது திருத்தம் மாதிரி, அமெரிக்காவிலும் நடக்கிற மாதிரி ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டது, அங்கே எழுத்தாளரின் வெறும் கற்பனை என்று மட்டும் ஒதுக்கி விட்டுப் போக முடியவில்லை.

நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப் பட்டபோது நாடாளு மன்றம்,ஆட்சியாளர்களின் மனமறிந்து ஒத்து ஊதுகிற ஒரு இடமாக மட்டுமே ஆகிப் போனது,  பத்திரிகைகளின் வாய்கள் கட்டப்பட்டன, நீதித்துறை செயலிழந்து நின்றது........



இப்படிப் போகிறது ஹென்டர்சனின் வர்ணனை!

இந்திய அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 42 வது திருத்தம், திருத்தம் செய்யப்பட்ட அந்த சில வரிகளில் வாக்கியங்களில், அடிப்படை உரிமைகளைப் பறித்தது. அலங்காரக் கோஷங்கள் சேர்க்கப் பட்டன.  இறையாண்மையுள்ள ஜனநாயகக் குடியரசு என்பது வார்த்தைகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, இறையாண்மையுள்ள, சோஷலிச, மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக ஆகிப் போனது! 

வார்த்தைகளில் மட்டும் தான்என்பதைச் சொல்லித் தான் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன!?

அதிகமான விவரங்கள் வேண்டுமானால் இந்த லின்கில்
கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம்!

எமெர்ஜென்சி அமலில் இருந்த தருணங்களில் வெளியான இந்தப் புத்தகம் இந்தியாவில் தடை செய்யப் பட்டிருந்ததாக ஒரு தகவல் உண்டு. இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் தீய அம்சங்களை தோலுரித்துக் காட்டிய புத்தகம் என்றெல்லாம் சொல்லப் பட்ட இந்தப் புத்தகத்தை, 1985 வாக்கில் தான் படிக்க முடிந்தது. தற்சமயம் பெங்களுர், வாசன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் ரூ.90/- இற்குக் கிடைக்கிறது.

The R Document! 

நீதிமுறையில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ள ஒரு கதாபாத்திரத்தோடு கதை ஆரம்பிக்கிறது! நீதிமுறையைப் பாதுகாக்க முனைகிற அவருடைய உயிருக்கே உலை வைப்பதாகவும்  கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.

கிறிஸ்டோபர் காலின்ஸ்!

அமெரிக்காவின் புதிய அட்டர்னி ஜெனரலாகப்  பதவியேற்கிறார்.  அந்தத் தருணத்தில், அமெரிக்காவில் பெருகி வரும் வன்முறை, குற்றங்களைக் களைவதற்காக, அமெரிக்க அதிபர் அமெரிக்க அரசியல் சாசனத்தில் ஒரு திருத்தம் கொண்டு வர உத்தேசித்திருக்கிறார். 35 வது திருத்தம் என்று அந்த  முயற்சி  அழைக்கப் படுகிறது. தேச நெருக்கடி காலங்களில், உரிமைகள் குறித்த அரசியல் சாசன  உத்தரவாதத்தை அடியோடு ரத்து செய்ய இந்தத் திருத்தம் வகை செய்வதாக இருக்கிறது. எப்போதும் போல ஆதரிக்கிறவர்கள், எதிர்க்கிறவர்கள் என்று இரண்டு தரப்புமே, இந்த உத்தேசத் திருத்தத்தின் மீது சவுண்டு கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

அட்டர்னி ஜெனரலான  காலின்சுக்கோ இந்த உத்தேசத் திருத்தம், அவசியமில்லை என்று பட்டாலும், அதை அடியோடு எதிர்க்கிறவர்கள் கூச்சலிடுகிற மாதிரி,  அதிகார துஷ்ப்ரயோகம் செய்யப் படாது, இருக்காது  என்றே நம்புகிறார். உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

காலின்சுக்கு முன்பு அட்டர்னி ஜெனரலாக இருந்தவர், தன்னுடைய மரணப் படுக்கையில், அவரை அழைத்து, இரகசியமானதும் அபாயமானதுமான ஆர் டாகுமென்ட் என்ற ஒன்றைப் பற்றி எச்சரிக்கை
செய்ய விரும்புகிறார். காலின்சை அழைத்துவரச் சொல்லித் தகவல் அனுப்பி, இவர் அங்கே போய்ச் சேர்வதற்குள்  அவர் மரணமடைந்து விடுகிறார். கடைசித் தருணங்களில் ஒரு பாதிரியாரிடம், பாவ அறிக்கையைச் சொல்கிற தருணத்தில், இந்த விஷயத்தையும் சேர்த்தே சொல்கிறார். ஆனால் அந்தப் பாதிரியார், அது ரகசியமானது என்று காலின்சிடம் மேற்கொண்டு எந்த விவரமும் தர மறுத்து விடுகிறார். அது என்னவாக இருக்கும் என்ற கேள்வி, கிறிஸ்டோபர் காலின்சைத் துரத்திக் கொண்டே இருக்கிறது இந்த எச்சரிக்கையை காலின்ஸ் தொடர்ந்து ஆராய்கிறார்.  

The R Document!  

அது என்ன ஆர் டாகுமென்ட்? அதற்கும், உத்தேசித்திருக்கும் முப்பத்தைந்தாவது திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?

அமெரிக்க அதிபர் வாட்ஸ் ஒர்த்துக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது! சட்ட அமைச்சகத்துக்கும் எதுவும் தெரியாது! ஆனால், சிலந்தி லாவகமாக வலையைப் பின்னுவது போல, இந்த ஆர் டாகுமெண்டை மையமாக வைத்து என்னென்னமோ நடந்து கொண்டே இருக்கின்றன!

ஒவ்வொரு மாநிலமாக, இந்த சட்டத் திருத்தத்தை அங்கீகரித்து நிறைவேற்றிக் கொண்டிருக்கையில், காலின்ஸ் இந்தத் திருத்தத்தின் தலைமைச் செயலகமாக, மாக்கியவல்லி தனது இளவரசன் என்ற படைப்பில் சொல்கிற மாதிரி, நேர்மைத்திறமில்லாமல்  வஞ்சகமும், சூதும், மோசம் செய்கிற இயல்பும், கொண்டு தனது ஆட்சி அதிகாரத்தை கட்டமைக்கிற விதமாக எப் பி ஐ டைரக்டர் வெர்னான் டி. டினன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். முழுக்க முழுக்க ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்ற டினன் முயற்சிப்பதை அறிகிறார்.தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சாக்காக இந்த சட்டத் திருத்தத்தை ஒவ்வொரு மாநிலமும் நிறைவேற்றித் தர, டினன் கொலை செய்கிறார், ப்ளாக்மெயில் செய்கிறார், தன்னுடைய  முழு சாமர்த்தியத்தையும் பிரயோகிக்கிறார்.

எப்படி இந்தக் கதை முடிச்சை கதாசிரியர் அவிழ்க்கிறார் என்பதைப் புத்தகத்தை வாசித்து அனுபவிப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
முன்னூற்று அறுபது பக்கங்களுக்குள்ளாகவே, மிகவும் விறுவிறுப்பாக கதை நகர்கிறது! அதிகாரம் ஒரே இடத்தில் மையம் கொள்ளும்போது ஏற்படக்  கூடிய விபரீதங்களை இந்த நாவல் மிக அழகாக, விறுவிறுப்பாகச் சொல்கிறது. எச்சரிக்கிறது.

இங்கே இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனம் என்ற ஜனநாயகப் படுகொலையை, ஜெயப் பிரகாஷ் நாராயணன் என்ற காந்தீய வாதி, வினோபா பாவேயின் சீடர் எப்படி  தடுத்து நிறுத்தினார் என்பதை, இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போராகவே கூடச் சொல்ல முடியும்! 


இந்திரா காந்தி என்ற சர்வாதிகாரிக்கு எதிராக, எப்படி இந்த தேசத்தின் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஜெயப்ரகாஷ் நாராயணனுடைய போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றன, காங்கிரஸ் எப்படி பிரிட்டிஷ் குள்ள நரிகளிடமிருந்து கற்றுக் கொண்ட பிரித்தாளும் கலையைப் பயன்படுத்தி அந்த ஒற்றுமையைப் பிளந்தது என்பது கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் சமகால சரித்திரம்!

தி ஆர் டாகுமென்ட்! 


அவசியம் படிக்க வேண்டிய ஒரு புதினமாக நான் பரிந்துரை செய்யக் கூடிய நூல்களில் ஒன்று! வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் அல்ல! நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும் கூட!




இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)