Wednesday, August 4, 2010

தி மேன்....! இர்விங் வாலஸ்!



"இர்விங் வாலஸ் எழுதிய The Man என்ற புதினம்! டக்ளஸ் டில்மன் என்ற கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க ஜனாதிபதியாகி விடுகிறார்! புத்தகம் வெளிவந்த காலத்தில், இதைக் கற்பனையாக மட்டுமே, அதுவுமே, தேர்தல் அல்லாத வழியில் என்று தான் சொல்ல முடிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். சமயங்களில், கற்பனை செய்து எழுதுகிற விஷயங்கள், நடப்பு விஷயங்களோடு பொருந்திப் போக முடிகிற விநோதத்தைப் பார்த்துப் பார்த்து, இப்போதெல்லாம் அது எனக்கு அது மிகவும் பழகிப் போய்விட்டது!" 

இப்படி இந்தப்பக்கங்களில் எழுதினேன்  இந்தப் புத்தகத்தைத் தொட்டு, சென்ற வாதம் டிசம்பரில் ஒன்று, இந்த வருடம் ஜனவரியில் ஒன்று என்று லேசாகத் தொட்டு எழுதியிருந்தாலும், முழுமையாக ஒரு புத்தக விமரிசனமாக எழுத இப்போது தான் நேரமும், யோசனையும் பொருந்தி வந்திருக்கிறது. என்னுடைய சேகரத்தில் மறுவாசிப்புக்காகத்  தேடிய போது உடனே கிடைக்கவில்லை  என்பதும் ஒரு காரணம்.

இந்தப்  புத்தகம் முதன் முதலாக என் கையில் கிடைத்தது அனேகமாக 1970 அல்லது 1971 ஆக இருக்கலாம். என் மனதில் இன்றைக்கும் நீங்காத ஒரு இடத்தில் இந்தப் புத்தகம் இருக்கிறது! வெறும் கதைதானே, படித்தோமா பொழுது போனதா அப்புறம் மறந்தும் போனோமா என்ற ரகத்தில் எல்லாப் படைப்பையும் எழுத்தாளர்களையும், சேர்த்துவிட முடியாது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த உதாரணம். தவிர, நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னால், எழுதப்பட்ட ஒரு கற்பனைப் புதினத்தில் சொல்லப் படும் பல சம்பவங்கள், பாத்திரங்களை அப்படியே அச்சு அசலாக இன்றைக்கும், இங்கே கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கும் அரசியலோடு கூடத் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிற விதமாக இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

ஒரு நல்ல எழுத்தாளன் தான் வாழ்கிற சமுதாயத்தை ஊன்றிக் கவனிக்கத் தெரிந்தவனாக இருக்கிறான்!.தன்னுடைய எழுத்தில் சமுதாயத்தின் மூலக் கூறுகளை அப்படியே கொண்டு வந்து விடுகிறான். சிலநேரங்களில் ஜெயகாந்தன்  யதார்த்தத்தை அப்பட்டமாகத் துகிலுரித்துக் காட்டுகிற மாதிரி! சில நேரங்களில், நா.பார்த்த சாரதி, அகிலன் மாதிரி யதார்த்த நிலையைக் கண்டு கொதிக்கும் தன்னுடைய ஆவேசத்தையும் சேர்த்துக் கொட்டுகிற மாதிரி! ஆகக் கதையில் வரும் சம்பவங்கள் கற்பனை என்றாலும், அதன் அடித்தளமாக இருக்கும் சமுதாயத்தைப் பற்றிய கண்ணோட்டம் அல்லது  மூலக் கூறுகள் உள்ளது உள்ளபடியே இருப்பதால், படிக்கும்போது சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு தன்மை அல்லது போக்கும் அப்படியே அச்சு அசலாக வெளிப்படுகிறது. கற்பனை, பொய்க்குக் கூட, உண்மையின் கலப்பு அவசியமாக இருக்கிறது. அல்லது பொய், கற்பனை என்று நாம் சொல்வதே யதார்த்த நிலைமையின் திரிக்கப்பட்ட வடிவம் தான் என்பதைப் புரிந்து கொண்டால், ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை.

எவரும் கற்பனை செய்தே பார்த்திருக்க முடியாத விதத்தில் கதை துவங்குகிறது.

TC, The Chief  என்று மட்டுமே அழைக்கப் படும் அமெரிக்க ஜனாதிபதி பாரிஸ் நகரத்தில் ஒரு சர்வதேசப் பேச்சுவார்த்தைக்குப் போயிருக்கும் தருணத்தில், கட்டடம் இடிந்து உயிரிழக்கிறார். அடுத்து இங்கே துணை ஜனாதிபதி ஏற்கெனெவே உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற நிலையில், பதவியேற்பதைத்  தீர்மானிக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக அவரும் இறந்து விடும் செய்தி வருகிறது. அரசியல் சட்டப்படி, எஞ்சியுள்ள காலத்திற்கு ஜனாதிபதி பொறுப்பை ஏற்க வேண்டியது யார் என்ற கேள்வி எழ, senate pro tempore என்று பதில் வருகிறது. அமெரிக்கத் துணை அதிபர்  அமெரிக்க செனேட் சபையின் தலைவராகவும்  இருப்பவர். அவர் சபைக்குத் தலைமைதாங்க முடியாத  சமயங்களில் சபைக்குத் தலைமை தாங்குகிற பொறுப்பு இது. பெரிய அளவில் முக்கியத்துவமில்லாத இந்தப் பொறுப்பில், கறுப்பரான டக்ளஸ் டில்மானை TC யின் டீம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. இங்கே, ஜாதிக்கொரு பிரதிநிதித்துவம், முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி, டம்மியாக சில பேருக்குப் பதவி கொடுத்து அலங்கார பொம்மைகளாக, பப்ளிசிட்டி ஸ்டண்டாக வைத்திருக்கிற மாதிரி!

சமத்துவம் கண்டுவிட்டோம் என்று சொல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்கிற மாதிரி  டம்மிப் பொறுப்பில் வைக்கப் பட்டிருந்தாலும் பதவி வரிசைப் படி எவரும் ஊகிக்க முடியாத விதத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக, ஒரு கறுப்பர்! என்று சுவாரசியமாக, ஒரு இக்கு வைத்து ஆரம்பிக்கும் இந்த நாவல், அமெரிக்க ஜனநாயகம் இயங்கும் விதத்தை, மிக நுணுக்கமாக விவரித்துச் சொல்கிறது.
 
ஒரு கறுப்பரை அமெரிக்க அதிபராக, அவருடைய கட்சி, மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அரசியல் முதிர்ச்சி, பரஸ்பர நம்பிக்கை பிறந்து விட்டதா என்ற கேள்விக்கெல்லாம் விடை தேட, முந்தைய அதிபரின் டீம் கவலைப் படவில்லை. பெயரளவுக்கு டக்லஸ் டில்மன் அதிபர்! ஆனால் பின் சீட்டில் இருந்து முந்தைய அதிபரின் அணுக்கக் குழு, ஆட்சியை வழிநடத்த நினைக்கிறது.


கொஞ்சம் நம்மூர்  நிலவரத்தையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போம். நேரு மறைவுக்குப் பின்னால், சாஸ்திரி மறைவுக்குப் பின்னால் எழுந்த  இடைவெளியை நிரப்ப குல்ஜாரிலால் நந்தா என்ற காந்தீய வாதியைப் பயன் படுத்திக் கொண்ட  காங்கிரஸ், இந்திரா காண்டியை  பிரதமராக்கி, பேக் சீட் டிரைவிங் செய்ய முயன்ற போது, இந்திரா, நேரு குடும்பத்தில் துணிச்சல் கூட இருக்கும் என்று   எவருமே ஊகித்திருக்க முடியாத துணிச்சலுடன் கட்சியை உடைத்தார்.

ஆர்தர் ஈட்டன்! அதிபருக்கு அடுத்தபடியாக அமெரிக்க அரசியலில் அதிக அதிகாரம் கொண்ட பதவியாகக் கருதப்படும் Secretary of State! டக்ஸ் டில்மன் தங்கள் வழியில், கன்றுக் குட்டி போல நடப்பார் என்று, முந்தைய அதிபரின் அணுக்கக் குழுவுக்கு உறுதி அளிக்கிறார். அதிபரின் கட்சியும், ஈட்டனைத் தான் நம்புகிறது. எல்லோரையும் விட, இந்த டீம் பதவிக்கு வருவதற்காகத் தேர்தல் செலவுகளில் பெரும் பங்கை ஏற்றுக் கொண்ட ஒரு பகாசுர நிறுவனமும் ஈட்டனைத் தான் நம்புகிறது. ஜெயிக்கிற குதிரை மேல் பணம் கட்டியவர்கள், லாபத்தை அள்ளிக் கொண்டு போகக் காத்திருப்பதைப் போல, தங்களுக்குச் சாதகமான ஆட்கள் பதவிக்கு வருவதற்குப் பண உதவி செய்து விட்டு, சாதகமான விஷயங்களுக்காகக் காத்திருக்கிறது.

மேலோட்டமாக, வம்புதும்புக்குப் போகாத அமைதியான மனிதராக அறிமுகமாகும் டக்லஸ் டில்மன் மனைவியை இழந்தவர். இடதுசாரிகள் என்று சந்தேகிக்கப் படும் உரிமைக்குரல் எழுப்பும் குழுக்களுடன் தொடர்புள்ளவர் என்று சந்தேகிக்கப் படும் ஒரு பெண் வழக்கறிஞர், டில்மனுக்கு நெருங்கிய தோழியாக! விடலைத் தனமான, உணர்ச்சி வசப்படுகிறவனாக ஒரு மகன்,  கறுப்பினத் தம்பதிகளுக்கு எப்போதோ ஒரு முறை அதிசயமாகப் பிறக்கும் முழு வெள்ளைத் தோலுடன்! தன்னுடைய நதிமூலம் கறுப்பரினம் என்பதை மறைத்து, போலியான ஒரு அடையாளத்தில் தகப்பன், சகோதரனை விட்டு விலகி வாழும் ஒரு மகள்.

செனேட்டர் ஒருவரின் மகள் சாலி வாட்சன்! நடுவில் கொஞ்சம் மன நிலை பாதிக்கப் பட்டு குணமாகி வந்தவள், அதிபருக்கு சோஷல் செக்ரெடரியாக. ஆர்தர் ஈட்டன் மீது ஈர்க்கப் படுகிறவளாக. ஈட்டன் தம்பதிகளுக்குள் கொஞ்சம் கருத்து வேறுபாடு, அனேகமாக மணமுறிவு வரை போகலாம் என்று தெரிந்த நிலையில், அந்த இடத்தில் தன்னை வைத்துக் கற்பனை செய்து கொள்கிற பெண்ணாக.அமெரிக்க அதிபருக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் சீக்ரெட் சர்வீஸ் ஏஜன்டாகப் பணிபுரியும் வெள்ளையர் ஒருவர் அடுத்த பதவி உயர்வுக்காகக் காத்திருக்கிறார். கருப்பு இனத்தைச் சேர்ந்தவருக்குப் பாதுகாப்புக் கொடுப்பதில் கறிப்பறை ஒதுக்கி வைத்தால் அது நன்றாக இருக்காது என்பதால்,ஒரு கறுப்பருக்கு அந்தப் பதவி உயர்வு போகிறது.

இப்படி, எதிர்பாராதவிதத்தில் அதிபராகப் பதவியேற்க வேண்டி வரும் டக்லஸ் டில்மானை சுற்றி, பாத்திரங்கள் வரிசையாக அறிமுகமாகிறார்கள். பாத்திரங்கள் அறிமுகம் செய்து வைக்கப்படும் நேரத்திலேயே, அதிபர் மாளிகையை பற்றிய விவரங்கள், முந்தைய அமெரிக்க அரசியல் நிகழ்வுகளைத் தொட்டுக் கொண்டே கதை நகர்கிறது. படித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், நமக்கும் அமெரிக்க அரசியல், அரசு இயந்திரம் இயங்கும் விதம் அறிமுகமாகிக் கொண்டே வருகிறது.

முந்தைய அதிபர் தேர்தலில் ஜெயித்து வருவதற்கு, அமெரிக்க பகாசுர நிறுவனம் ஒன்று எக்கச் சக்கமாக செலவு செய்திருக்கிறது. அவர்களுக்கு ஆதாயம் தரும் வகையில், கறுப்பர்களுடைய நலன்களை மேம்படுத்துவது போல ஒரு திட்டம்  ஏராளமான செலவில் தயாராக இருந்து, சட்டவடிவம் கொண்டு வரும் நேரத்தில், பகாசுர நிறுவனம் ஆதரித்த அதிபர் காலமாகி விடுகிறார். அடுத்து வரும் டில்மன் இதை  ஒப்புக்குச் செயல்படுத்தப் படும் திட்டம், கறுப்பின மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது  என்று நிராகரித்து விடுகிறார்!

அதிபருக்கும், அரசு இயந்திரத்தின் ஆதிக்கம் செலுத்திவரும் இதர பகுதிகளுக்கும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கிறது
.அரசியலில் யுத்தம் என்று வந்து விட்டால் சாக்கடைதான்! சேற்றை வாரி வாரி வீசுவது தான்! தங்களோடு ஒத்துப் போக மறுக்கும் அதிபரை, அவருடைய சொந்த வாழ்க்கையைத் தொட்டு கேவலப் படுவதுடன், எதிர்காலமே இல்லாமல் செய்துவிடமுடியும் என்று பலவிதத்திலும் நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால், இந்த அதிபரோ, பணிந்து கொடுக்க மறுக்கிறார். ஒரு அதிபராகத் தன்னுடைய கடமையில் இருந்து கொஞ்சம் கூடப் பிறழ மாட்டேன் என்கிறார். போலித்தனமான நிவாரணங்களைக் கொடுத்து, ஒரு சமுதாயம் முன்னேறிவிடும் என்ற மாயையை எதிர்க்கிறார். சலுகைகள், இலவசங்களினால், தன்னுடைய மக்களுக்கு உண்மையான விடுதலையும் சமத்துவமும் கிடைக்காது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
 

இலவசங்கள், மானியங்கள், நலத்திட்டங்கள் என்ற போர்வையில், தங்களுடைய கல்லாவை நிரப்பிக் கொள்வதிலேயே குறியாக இருக்கும் கார்பரேட்டுகள், கார்பரேட்டுக்களின் தயவில் சொகுசாகத் தங்கள் பைகளையும் நிரப்பிக் கொள்ளும் அரசியல்வாதிகள் விரோதத்தை சம்பாதித்துக் கொள்வதற்கு இவ்வளவு  போதாதா? இன்னமும் இருக்கிறது, மீன்களுக்குத் தூண்டிலில் வைத்துக் கொடுக்கப்படும் புழுக்கள் எதற்காக என்பதை அறியாதவர்களாக, தங்களுக்கு கொடுக்கப் படும் இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் எல்லாம் வெறும் கண்துடைப்புத்தான் என்பதைப் புரிந்து கொள்ளாத ஜனங்களும் வெறுக்க வேண்டுமே! அதுவும் நடக்கிறது.

உள்ளூர் கறுப்பின வெள்ளையர் பிரச்சினையோடு, அமெரிக்க ரஷ்ய பனிப்போர் விவகாரமும் கதையின் கடைசியில் புகுந்து கொள்கிறது. உள்ளூர் மிட்டலுக்கு அஞ்சாத மாதிரியே, வெளியே இருந்து வரும் மிரட்டலையும் டில்மன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும் கதையோடு சேர்ந்து வருகிறது..

அதிபர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. டக்லஸ் டில்மனுக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன ஒன்று, நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னாலேயே பதவியை ராஜினாமா செய்து விடுவது! அல்லது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, எதிர்கொள்வது! இரண்டில் எதைத் தீர்மானிப்பது என்பதில், ஜட்ஜ் என்று அழைக்கப்படும் ஒரு முன்னாள் அமெரிக்க அதிபர்  வழிகாட்டுகிறார். டில்மன், அதிபர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை சந்திப்பது என்று முடிவெடுக்கிறார்.


இந்தப் பதவி நீக்கக் கோரும் தீர்மானம், இம்பீச்மென்ட் பற்றி மிக விரிவாகத் தகவல்களைசொல்லிக் கொண்டே கதைக்களம், டக்லஸ் டில்மன், கறுப்பு நிறம் ஒன்றினாலேயே இளப்பமாக, இரண்டாந்தரமாக நடத்தப் படுகிறநிலையை எதிர்த்து  எப்படி ஒரு மனிதனாக, ஆண்மையுடன் எதிர் கொள்கிறார் என்பது மிக சுவாரசியமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. மேன் என்று சொல்லும் போது ஆண் என்று மட்டுமல்ல ஆண்மையுள்ளவன் என்றும் ஒரு பொருள் இருக்கிறதல்லவா?

Tne Man! ஆண்மையுள்ளவன் மட்டுமே ஆணாக இருக்க முடியும்!அந்த ஆண்மை இங்கே மிக அழகாக ஒரு கதையாக விரிகிறது.

அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் என்று ஒரு பட்டியல் எழுதினால், இந்தப்புத்தகத்துக்கு முதல் வரிசையில் இடமுண்டு!




5 comments:

  1. பொருத்தமான நாளில் பொருத்தமான நூலின் விமர்சனம் தோழர் ...

    இன்று ஒபாமாவின் பிறந்த நாள் !

    ReplyDelete
  2. இந்தப் புத்தகம் எனக்கும் மி்கப் பிடித்த புத்தகங்கள் வரிசையில் உள்ளது. மிகவும் ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  3. @திருமதி.சித்ரா!

    நன்றி!

    @நியோ!
    ஒபாமா பிறந்த நாளை மனதில் வைத்துக் கொண்டு இந்தப் பதிவை எழுதவில்லை என்பது தான் உண்மை! தவிர, இந்தப் பக்கங்களில் பேசப் படும் புத்தகங்கள் அனுபவங்கள் எல்லாமே, நடப்பு நிகழ்வோடு, வெறும் கதையோடு நின்றுவிடாமல் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டுவதற்காகவே தேர்ந்தெடுக்கப் படுபவை என்பதைக் கவனித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

    @விஜய்!

    பிடித்த புத்தகங்களில் இதுவும் இருப்பது குறித்து மிகவும் சந்தோஷம்! உங்களை மாதிரி இளைஞர்கள், இப்படிப் பழைய எழுத்தாளர்களுடைய புத்தகங்களையும் படிக்கிறீர்கள் என்பதே ஒரு நல்ல விஷயமாக எனக்குப் படுகிறது.

    ReplyDelete

  4. புத்தகத்தை படிப்பதை விட் அதன் சுருக்கமான உங்களை பதிவை படித்து அந்த புக்கில் சொல்லவரும் விஷயம் என்னவென்று புரிந்து கொள்ள முடிகிறது... இது போன்ற பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)