Showing posts with label எது எழுத்து. Show all posts
Showing posts with label எது எழுத்து. Show all posts

Friday, May 8, 2020

#கொரோனாடைம்ஸ் டைம் பாசுக்கு என்ன செய்வது? டாவின்சி கோட்! விஷ்ணுபுரம்!

கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும்! வீட்டிலேயே இரு என்று அரசின் மிகக்கனிவான வேண்டுகோளை ஏற்று வீட்டிலேயே முடங்கி கிடக்கிற காலம் இது! பொழுதைக் கடத்துவது என்பது வரவர மிகவும் கடினமாகிக் கொண்டே வருவதில் டிவி பார்ப்பது முதலில் கசந்து அதன்பின் நெட்பிலிக்ஸ் முதலானவையும் கசந்ததில் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று என்னிடம் யாரும் வந்து கேட்கவில்லைதான்! அவர்களுக்கும் அதே மாதிரிப் பிரச்சினை தான் போல என்று முடிவு செய்துகொள்ளலாமா என்பது கூட சரியாகத் தெரியவில்லை!  லோகோ பின்ன ருசி! அவரவர் அவஸ்தை அவரவருக்கு என்று வேறு சொல்லியிருக்கிறார்களே!

வலதுபக்கம் சொல்லியிருக்கிறமாதிரி முதல் இரண்டுவாரங்கள் ஓடிப்போயின.  அதற்காக Money Heist  அல்லது Narcos மாதிரிக்கு காவியங்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா? காய்ச்சல் கண்டவனுக்கு வாய்கசந்துபோல வெப் சீரீஸ் பார்ப்பதும் ஆகிவிட்டது . இருக்கவே இருக்கிறது புத்தக வாசிப்பு என்று ஆரம்பித்தால் நம்முடைய ராசிக்கு ஹரிகேசநல்லூர்க்காரர் ஜோசியம் சொல்கிற மாதிரி ஆகிவிடும் என்று கண்டேனா?


டாவின்சி கோட்!  தமிழில் இருக்கிறது வாசிக்கிறாயா என்று நண்பர் பரம கருணையோடு கொடுத்த புத்தகம்! நண்பருக்கு என்மீது தீராதவஞ்சம் எதோ இருக்கப்போய், வசமாகத் தீர்த்துக் கொண்டு விட்ட மாதிரி அப்படி ஒரு கரடு முரடான மொழிபெயர்ப்பு. மேலே பார்த்தீர்களானால் இரா செந்தில், பெரு முருகன் என்று இரண்டுபேர் கூட்டாக முழிபெயர்த்திருக்கிறார்கள். டான் ப்ரவுன் அல்லது அவருடைய பதிப்பாளரிடமிருந்து முறையான அனுமதி பெற்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதான அறிகுறி எதுவும் சொல்லப்படவில்லை. 700+ பக்கங்கள் தானே என்று எடுத்துக் கொண்டதில், என்னுடைய பொறுமை அளவுக்கு மீறியே சோதிக்கப்பட்டதுதான் மிச்சம்.

மதம் மதம் சார்ந்த குறியீடுகள் என்று பேசவரும் அயல்மொழிப் புத்தகங்களை அவை ரொம்ப பிரபலம் என்பதாலேயே  மொழிபெயர்த்து விடுவதில் உள்ள முதல்தடையே வாசிப்பவருக்கு அதைப்பற்றிய பரிச்சயம் ஏதோ கொஞ்சம் இருக்கும் என்று கற்பனை செய்துகொள்வதுதான்! அதேபோல மொழி பெயர்த்தவர்களுக்காவது அப்படிப் பரிச்சயம் இருந்ததா என்றால் அதுவும் படுசுத்தம். ஆக ஆங்கிலத்தில் ஏற்கெனெவே படித்து படமாகவும்  பார்த்த ஒரு  த்ரில்லர் ரக நாவலைத் தமிழில் படித்த அனுபவம் ஒரு சொத்தைக்கடலையைக் கடித்து நேரமானபின்னாலும்கூட ஒரு அடிக்கசப்பு இருக்குமே அதைவிடக் கொடுமையானது.  



தமிழில் டாவின்சி கோட் படித்து முடித்ததில் ஏற்பட்ட தைரியம், மகனுடைய புத்தக சேகரத்தில் இங்கே வந்து  சேர்ந்தவற்றில் ஜெயமோகனுடைய  விஷ்ணுபுரம் நாவலை நேற்றைக்குப் படிக்க எடுத்துக் கொள்கிற அளவுக்கு நெஞ்சுரத்தைக் கொடுத்திருக்கிறது.

கொரோனா சோதனைக்காலத்தை வெல்ல ஜெயமோகனை வாசிப்பது என்றாகியிருக்கிறதே, அது ஒன்று போதாதா?  மீண்டும் சந்திப்போம்.      

Saturday, May 2, 2020

பார்த்தது! கேட்டது! படித்ததில் பிடித்தது!

இன்றைக்குப் பார்த்த செய்திகளில் முக்கியமானதாக எனக்குப் படுவது #MakeChibaPay என்ற ஒற்றை முழக்கத்துடன் சில நாடுகள் முன்னெடுத்திருக்கிற சில விஷயங்கள்தான்! சீனா தன்னுடைய ஆதிக்கவிஸ்தரிப்புக் கனவுகளில்  நிறையவே தப்புக்கணக்குப் போட்டதுதான் மூலகாரணம், nCov 19 வைரஸ் சீனாவின் கனவுகளை மொத்தமாகவே முடமாக்கிவிடும் போலத்தான் நிலவரம் இருக்கிறது.

   

இந்தியா இந்தவிஷயத்தில் மிகவும் நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பது உசிதம்தானா? கேள்வி கேட்கலாம் தான்! ஆனால் பதில் சொல்வாரைத்தான் காணோம்! சீனாவிலிருந்து வளர்ந்த  நாடுகள் பலவும் தங்களுடைய தொழிற்சாலைகளை மூடிவிட்டுவெளியேறத் தயாராகி வருவதில் இந்தியாவுக்கு ஆதாயம் என்று பேசப்பட்டவை கூட வெறும் ஊகங்களாக மட்டுமே நின்று போயின. சீனாவை விட்டு வெளியேறும் உற்பத்திக்கூடங்களில் பெரும்பாலானவை வியட்நாமைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. இன்றைக்கு உலகின் மிக மலிவான 
உற்பத்திக்  கூடமாக இருக்கும் சீனாவை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இந்தியாவை கொண்டுபோய் வைக்கிற அளவுக்கு இந்தியத் தொழிலதிபர்கள் எவரும் தயார் நிலையில் இல்லை. அரசின் வரிச் சலுகைகளில் மட்டுமே ஒட்டுண்ணிகளாக உயிர்வாழப் பழகியவர்களிடம் புது முயற்சிகள், தயாரிப்புக்கள் என்று சந்தைக்குத் தகுந்தபடி மாறுங்கள் என்று சொன்னால் எப்படி? குறைந்தபட்சம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் கூடத் தங்களை புதுப்பித்துக்கொள்ள, உளநாட்டிலேயே தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத்  தயாராக இல்லாத ஒரு தொழில்துறையை என்னவென்று மதிப்பிடுவீர்கள்?  சீனாவும் இன்னும் பல நாடுகளும் முன்னெடுத்த RCEP பிராந்திய அளவிலான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இந்தியா ஒதுங்கி கொண்டது இந்தியத் தொழில்துறை இன்னமும் மாற்றத்துக்குத் தயாராக இல்லை என்பதனால் தான் என்பதைக் கசப்போடு நினைவு படுத்திக்கொள்ள வேண்டி வருகிறது. இப்போது இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியிருக்கிற நெருக்கடி பலபுதிய வாய்ப்புக்களையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது. 


இந்தக்கூத்து பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில்தான்! 

இன்றைக்கு படித்ததில் மிகவும் பிடித்தது: 

குட்டி தமிழ்வாணன்

ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. ஒரு கை கிடையாது. இப்படி.
பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.

’கல்கண்டு’ தமிழ்வாணன் ஒரு pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார். எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார். கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.

கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?

தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’

Worst Arrogance. Thinking too much of oneself. Superiority complex.

அன்று எம்.ஜி.ஆருக்கு இருந்த பிரமாதமான அந்தஸ்து தெரிந்தும் இப்படி ஒரு பீற்றல்.
எம்.ஜி.ஆர் என்ன, எம்.ஜி.ஆர் ரசிகர்களே இதைப்பார்த்து எரிச்சல் படாமல் இருக்க முடியுமா?

கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார்.‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.

“நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார்.

தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஒரு ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது.
அவர் இறந்து நாற்பத்தியொரு வருடங்கள் இப்போது ஓடி விட்டது. நூறு வயதாக இன்னும் எட்டு வருடங்கள் இருக்கிறது.

The advise you tell others is the advice you need to follow.

இவருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கிறது.

’கண்ணதாசன்’ மாதப் பத்திரிக்கையில் ‘அடுத்த இதழில் மாஸ்டர்  ஆஃப் ஆல் ஃப்ராட்ஸ் பற்றி ‘ என்று அறிவித்து ஒரு குறிப்பு இருந்தது.தமிழ் வாணன் தான் அது என்று பரவலாக ஹேஸ்யம்.

அப்போது தமிழ்வாணன் அகால மரணம் .

அடுத்த கண்ண தாசன் இதழில் மாஸ்டர் ஆஃப் ஃப்ராட்ஸ் கட்டுரை எதுவும் வெளியாகவில்லை. கப்சிப்.

வலையெழுத்து எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இன்றும் R P ராஜநாயஹம் எழுத்தே சாட்சி.

மீண்டும் சந்திப்போம்.  
  
   

Sunday, March 29, 2020

புதுமைப்பித்தன் சிறுகதைகள்: குற்றவாளி யார்?

தமிழ் எழுத்தாளர்களில் கொண்டாடப்பட வேண்டியவர் என்று ஒரு லிஸ்ட் எடுத்தோமானால், அதில் முதல் ஐந்து இடங்களுக்குள் புதுமைப்பித்தன் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. மிக அருமையான எழுத்தாளர், ஆனாலும் கல்கிக்கு கிடைத்த புகழும் வெளிச்சமும்  புதுமைப்பித்தனுக்குக் கிடைக்கவே இல்லை என்பது அன்றைய தமிழ் வாசகர்களுடைய ரசனை மட்டம் கொஞ்சம் குறைவுதான் என்பதைக் காட்டியதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

     
பல வருடங்களுக்கு முன் ஒரு கூகிள் வலைக்குழுமத்தில் நண்பர் ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் கதை சிறுத்தாலும்  என்ற தலைப்பில், சிறுகதை, அதன் வடிவம் குறித்து எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் நானும் பின்னூட்டங்களாக எழுதிக் குழப்பிக் கொண்டிருந்தேன்  கதை எழுதத் தெரியாதவன் வேறென்ன தான் செய்ய முடியும்?

இந்தப் பக்கங்களில் கூட எது நல்ல எழுத்து, ன்ன மாதிரி எழுத்தைக் கொண்டாடுவீர்கள் என்று பல பதிவுகளை எழுதிக் கேள்விகளாகக் கேட்க முடிந்ததே தவிர எங்கள்Blog இல் சில நண்பர்கள் துணிச்சலாக சிறுகதைகள் எழுதி அவர்களும் கேட்டுவாங்கிப் போடும் கதை என்றே ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் வெளியிடுவதைப்பார்த்தும் கூட ஒரு சிறுகதை எழுதிப்பார்க்கிற தைரியம் இன்னமும் வரவில்லை. சிறுகதையின் வடிவம், இலக்கணம் பிடிபடவில்லையா அல்லது கற்பனை வறட்சியா என்பதை நண்பர்களே முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான்! ஆனாலும் ஸ்ரீரங்கம் வி, மோகன ரங்கனுடைய கதை சிறுத்தாலும்...! இழை எழுப்பிய கேள்விகள் இன்னமும்  நினைவில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதன் தாக்கத்தில் புதுமைப் பித்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பில் வாசித்துக் கொண்டிருந்தபோது கிடைத்த கதை இது. நீங்களும் வாசித்துவிட்டு ஒரு நல்ல சிறுகதைக்கான கூறுகள் இதில் என்னென்ன என்று சொல்லுங்களேன்! 

குற்றவாளி  யார்? 

கிரௌன் பிராஸிகியூடர் திவான் பகதூர் அமிர்தலிங்கம் பலே ஆசாமி. கேஸ் விவாதிப்பதில் ரொம்பப் பழக்கம். உட்காரும்பொழுது ஜுரர்களுக்கு ஸ்பஷ்டமாக விளங்கும்படி செய்துவிட்டு உட்கார்ந்தார். அவர் சில வக்கீல்கள் மாதிரி கோர்ட்டின் பச்சாதாபத்தையும், இளகிய ஹ்ருதயத்தையும் எதிர்பார்ப்பவர் அல்ல. கைச் சரக்கும் உணர்ச்சி நாடகமும் இல்லாமல் வெறும் விஷயத்தை மட்டும் விளங்க வைத்துவிட்டு உட்கார்ந்தார்.

விஷயம், விஷயம், விஷயம். இதைத் தவிர அமிர்தலிங்கத்திற்கு வேறு கவலை கிடையாது. விஷயமும் தர்க்கமும் கேஸை வாதிப்பதற்கு இருக்கும்பொழுது சோக நாடகம் போட வேண்டியதில்லை என்பது அவர் துணிபு.

அவர் உட்கார்ந்ததும் எதிர்க்கட்சி வக்கீல் திரு. லக்ஷ்மண பிள்ளை குற்றவாளியின் சார்பாக வாதிப்பதற்கு எழுந்தார். திவான் பகதூர் அமிர்தலிங்கத்திற்குப் புன்சிரிப்பு வந்தது. நம்ப முடியாத கதை. ஜுரர்கள், ஆமாம், அவர்கள் எப்படி நம்புவார்கள்? அவருடைய பிரசங்க மழையைச் சிதற அடித்து மாட்சிமை தங்கிய நீதிபதியின் முன் தமது கட்சியை ஸ்தாபிப்பது கஷ்டமல்ல.

அமிர்தலிங்கம் தொழிலில் பழம் பெருச்சாளியானாலும் இந்தக் கேஸில் விவாதிப்பது அவருக்கு மிகவும் உத்ஸாகமாக இருந்தது. இருந்தாலும் அது மிகவும் சிக்கலான கேஸ். ஒரு மோசமான கிரௌன் பிராஸிக்யூடர் கேஸை ஆபாசமாக நடத்திக் குழப்பி விடலாம்.

குற்றவாளிக்குத் தண்டனை நிச்சயம். முக்கால்வாசி அவனுக்குத் தூக்குத் தண்டனைதான். ஆமாம் நியாயம் வழங்கப்படாமல் இருக்க முடியுமா? உணர்ச்சியில் பண்பட்ட உள்ளமில்லையாயினும் குற்றவாளியின் மீது சிறிது பச்சாத்தாபம் ஏற்பட்டது. குற்றவாளி அழகன், படிப்பாளி... சகவாச தோஷம். எதிர்க்கட்சி வக்கீலின் பேச்சில் இது மட்டுந்தான் அமிர்தலிங்கம் கவனித்தார். அதன் பிறகு தனது நீண்ட யோசனையில் கோர்ட்டை மறந்தார். 

எதிர்க்கட்சி வக்கீல் லக்ஷ்மண பிள்ளை பேசி முடித்து உட்கார்ந்தார். அமிர்தலிங்கம் மெதுவாகப் பொடியை உறிஞ்சிவிட்டு கோர்ட்டைக் கவனித்தார். 'லன்ச்'சுக்காகக் கோர்ட்டு ஒத்திவைக்கப்பட்டது. திவான் பகதூர் அமிர்தலிங்கம் பக்கத்து வாசல் வழியாக வெளியே செல்லும்பொழுது, தனது வழியைத் தடை செய்துகொண்டு ஒரு வாலிபப் பெண் இருப்பதைக் கண்டார்.

 "உங்களிடம் சற்று பேசலாமா? ஒரு நிமிஷம்" என்றாள். முகம் இளைத்தவள்; கிழிந்த உடைகளைக் கட்டியிருந்தாலும் அவள் நல்ல அழகி என்று கவனித்தார். அவள் மனம் மிகவும் குழம்பியிருப்பது போல் தோன்றியது.

"என் குமாஸ்தாவைப் பாருங்களேன். உங்களிஷ்டப்படி நடக்க முடியாததற்கு வருந்துகிறேன். நீங்களே பாருங்கள் எனக்குக் கொஞ்சமாவது ஒழிவு இருக்கிறதா என்று."

     "ஆமாம் நீங்கள் டிபன் சாப்பிட வேண்டியதுதான்."

     "ஆமாம் டிபன் சாப்பிடாமல் இருக்க முடியுமா?"

அமிர்தலிங்கம் சற்று வெறுப்புடன் பேசினார். திவான் பகதூருக்கும் வயிறு என்று ஒன்றிருக்கிறது என்று யாராவது ஞாபகப்படுத்தலாமா?

     "கொஞ்ச நேரமாவது என்னுடன் பேச முடியாதா?"

     "நீங்கள்தான் பாருங்களேன். சரி - சரி... காரியத்தையாவது சொல்லுங்கள்."

     "இங்கேயா! இந்தக் கூட்டதிலா, சமாசாரம் மிகவும் முக்கியமானது. அதுவும் கொஞ்சம் இரகசியமானது. உங்களைத் தனியாகக் கண்டு பேச முடியுமா?"

     "அது முடியாது."

     இப்படிச் சொன்னாலும் அவர் மனம் சிறிது இளகியது. அவள் முகம், சோகம் தேங்கிய முகம் கவர்ச்சித்தது. என்னவென்று அறிய ஆவல்.

     "கேஸ் முடிந்ததும் எனது அறைக்கு வாருங்கள். அதாவது நீங்கள் சொல்லப்போகும் விஷயம் அவ்வளவு முக்கியமானது, எனது உதவி அவசியம் என்று பட்டால்" என்று சொன்னார்.

     "நீங்கள் மனம் இரங்கியதற்கு நான் என்ன சொல்லுவது. ஆனால் அப்பொழுது நான் உங்களைச் சந்திப்பதில் பிரயோஜனமில்லை." பிறகு மிகவும் தணிந்த குரலில், "கிட்டுவைப் பற்றி" என்றாள். அவள் முகம் சிவந்து வியர்த்தது. எப்படியிருந்தாலும் ஹிந்துப் பெண் அல்லவா? வேறு வழியில்லை.

     திவான் பகதூர் திடுக்கிட்டார். யாரோ நெஞ்சில் சம்மட்டியால் அடித்தது போல் கலங்கினார்.

     "கிட்டுவைப் பற்றி என்ன? நீ யார்?"

     "நான் அவருடைய... மனைவி" என்றாள்; நாணம், சோகம், அவர் பெயரைக் கூறுவதினால் ஏற்படும் ஒரு இன்பம் அலைபோல் எழுந்து மறைந்தது.

     திவான் பகதூருக்குக் கலக்கம் அதிகமாயிற்று. முகமே அதைக் காண்பித்துவிட்டது.

     "கிட்டுவின் மனைவி!"

     அவள் அவருடைய முகத்தை ஆவலுடன், சோகத்தில் பிறந்த ஆவலுடன் கவனித்தாள்.

     "என் பின்னே வா!" என்று சடக்கென்று கூறினார்.

     திவான் பகதூர் அவளைக் கோர்ட்டில் தனக்கென்றிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். உள்ளே சென்றதும் அவளை ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். அவள் உட்காரவில்லை. மூலையில் ஒதுங்கி நின்றாள். திவான் பகதூருக்கு இருக்கும் உள்ள கலக்கம் அவரைப் பரபரப்புடன் அறையைச் சுற்றி நடக்கச் செய்தது.

     "என் மகனுடைய மனைவி என்று கூறுகிறாய். அது உண்மையா? நீ சொல்லுவது நிஜமாக அப்படித்தானா? நிஜமாக உங்களுக்குள் கலியாணம் நடந்ததா?" என்று கேட்டார்.

     "ஆறு மாசத்துக்கு முன்னே ரிஜிஸ்தர் கலியாணம் செய்துகொண்டோம்" என்றாள் அவள். அவள் வார்த்தையில் அவளது களங்கமற்ற உள்ளம் பிரதிபலித்தது.

     "அப்படியா?"

     "நேற்றுவரை அவர் உங்கள் மகன் என்று எனக்குத் தெரியாது."

     "நிஜமாக!" அவர் வார்த்தைகளில் சந்தேகமும் கேலியும் கலந்திருந்தது.

     "இது ரொம்ப - ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. நீ இந்தப் 'பெரிய' சமாசாரத்தைச் சொல்லாவிட்டால் எனக்குத் தெரிந்தே இருக்காது. புது மருமகள் இருக்கிறாள் என்று தெரியாமல் போயிற்று. இந்தச் 'சந்தோஷ' சமாசாரத்தைக் கேட்ட பிறகு காது குளிர்ந்துவிட்டது. இன்னும் என்னமோ சொல்லவேண்டும் என்று வந்தீர்களே! அதைச் சொல்லுங்கள். கேட்கிறதற்குத் தயார். நேரமும் கொஞ்சம். ஆமாம் நான் டிபன் சாப்பிட வேண்டாமா?" என்று கேலியும் குத்தலுமாக மனதிலுள்ள வெறுப்பை எல்லாம் தமது வக்கீல் வேலையுடன் சேர்த்துக் காண்பித்தார். அமிர்தலிங்கத்திற்கு ஒரு புறம் கோபம், ஒரு புறம் வெறுப்பு. "வீட்டு விலாசம் 6, அய்யப்பன் பிள்ளைத் தெரு, மைலாப்பூர்" என்று சொல்லிக்கொண்டே வெளியே செல்லயத்தனித்தார்.

     "போகாதேயுங்கள். கேட்டுவிட்டுப் போங்கள். இந்தக் கேஸிலிருக்கும் குற்றவாளியைத் தப்பவைக்க முக்கியமான சாட்சியம் அவரிடம் இருக்கிறதென்று சொல்லச் சொன்னார்."

     "குற்றவாளி! எந்தக் குற்றவாளி?" என்றார் அமிர்தலிங்கம்.

     "இப்பொழுது நடக்கிற கேஸில்... அந்தக் குற்றவாளி..."

     "இந்தக் கேஸில் என் மகனுமா! உளறாதே. பயப்படாமல் சொல்லு. என்ன சொல்லுகிறாய்?"

     "என்னுடைய அண்ணனை அவர் சாட்சியம் தப்புவிக்கும் என்று."

     "உன் அண்ணன்!" திவான் பகதூருக்குப் புதிருக்கு மேல் புதிராக சமாசாரங்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

"உன் அப்பா பெயரென்ன?"

     "ஜம்புநாத அய்யர்."

     இந்த குற்றவாளியின் தகப்பனாரும் அவர்தான். உள்ளத்தில் ஏற்பட்ட குழப்பத் திரையை விலக்க முயல்வதுபோல் அமிர்தலிங்கம் முகத்தை, நெற்றியை, துடைத்தார்.

     "அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்."

     இந்த வார்த்தைகள் வக்கீலைக் கோபமூட்டின.

     "அப்படியா! கிட்டு, பிறகு எங்கே ஒளிந்து இருக்கிறான். அவன் ஏன் மனிதன் மாதிரி வெளியில் வரக்கூடாது?"

அவள் கலங்கிய கண்களைக் கவனித்தார். அவர் கோபம் விலகியது. அவளுடைய பதிலை அவர் உள்ளம் எதிர்பார்த்தது போல் இருந்தது. அவர் உள்ளமும் உடைந்து உடலும் சோர்ந்தார்.

"அவர் பாயும் படுக்கையுமாய்... மிகவும் அபாயத்திலிருக்கிறார். டாக்டர் பிழைப்பதுகூட..." என்று சொல்லி விம்மி விம்மி ஏங்கினாள். உள்ளத்தின் கஷ்டம் பொருமிக்கொண்டு வெளிப்பட்டது.

"நாம் இருவரும் என்ன கனவு காண்கிறோமா?" என்றார் அமிர்தலிங்கம்.
"டாக்டர் அன்று வந்துவிட்டுப் போன பிறகு உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இன்னும் ரொம்ப நேரங்கூட... இருக்கமாட்டார் என்று டாக்டர் சொன்னார். அவர் எங்கள் அண்ணனைக் காப்பாற்ற முடியுமாம். நீங்கள் தான் அதை முதலில் கேட்க வேண்டுமாம். எங்கள் அண்ணனுக்குத் தெரிந்த வக்கீல் ஒருத்தரையும் கூப்பிடச் சொன்னார். அதை உங்களால் செய்ய முடியுமா? என் அண்ணாவுக்காக இல்லை. அவர் கஷ்டப்படுவதைப் பார்க்க சகிக்கவில்லை. அதுதான் அவரது மனதை வாட்டிக் கொண்டு இருக்கிறது. அந்த வக்கீலைப் பார்க்கும்வரை நெஞ்சு வேகாது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அண்ணன் உயிரை அவர் காப்பாற்ற முடியுமாம். அது முடியுமா?"

     அமிர்தலிங்கம் அவள் சொன்னதைக் கேட்கவேயில்லை.

     "நான் அவனைப் பார்க்கவேண்டும். இரு, இதோ வருகிறேன். யாரையும் உள்ளே வரவிடாதே இரண்டு நிமிஷம்."

     அவருடைய ஜுனியர் பக்கத்தறையில் டிபன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

     "கேஸை நீ பார்த்துக்கொள். நான் ஒரு நோட் வேண்டுமானால் ஜட்ஜிற்கு அனுப்பி வைக்கிறேன்."

     ஜுனியரும் நல்ல பழகின ஆசாமிதான்.

     அமிர்தலிங்கம் தமது வக்கீல் சட்டையைக் கழற்றிவிட்டு, ஜட்ஜிற்கு ஒரு 'நோட்டும்' எழுதி அனுப்பிவிட்டுத் திரும்பி வந்து அவளையழைத்துக் கொண்டு பின்புற வழியாக ஒரு வாடகை மோட்டாரில் மகனுடைய வீட்டிற்குச் சென்றார்.

     திவான் பகதூர் அமிர்தலிங்கம் தனது மகன் இருக்கும் வீட்டைக் கண்டதும் திடுக்கிட்டார். சென்னையில் பணமில்லாவிட்டால் நல்ல வீடு எங்கு கிடைக்கும்? ஒண்டுக்குடித்தனம்; இருட்டறை; சமையலும் அதற்குள்தான். மகன் கிழிந்த ஓலைப்பாயில் படுத்திருந்தான். அவள் உள்ளே சென்றதும் மாமனாரைப் பற்றிக் கவனிக்கவில்லை. கிட்டுவின் தலை, தலையணையைவிட்டுச் சற்று விலகியிருந்தது. அவனை மெதுவாக எடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டு தலையணையில் அதை உயரமாக வைத்துச் சாய வைத்தாள்.

     "அப்பா வாருங்கள்" என்றான் கிட்டு ஹீனஸ்வரத்தில். "உங்களால் வரமுடியும் என்று நினைக்கவேயில்லை. இருக்கிறதைப் பார்த்தால் இன்னம் கொஞ்ச நேரம் இருப்பேன்."

     அமிர்தலிங்கத்திர்கு ஈட்டியால் குத்தியது மாதிரி இருந்தது.

     "ஏன் உடம்பிற்கு குணமில்லை என்று முன்னமே சொல்லிவிடக் கூடாது?" என்றார்.

     "உங்களை இதுவரை தொந்திரவு செய்தது போதாதா? மங்களத்தைப் பற்றி உங்களிடம் சொல்ல எனக்குக் கொஞ்சம் பயம். நான் சொல்லுவது உங்களுக்கு அர்த்தமாகாது. ஏதாவது கோபமாக சொல்லுவீர்கள்" என்று சொன்னான்.

     மங்களம் அவன் பக்கத்திலிருந்து அவனுக்குப் பால் ஆற்றிக்கொண்டிருந்தாள். தனது வாடிய கைகளால் அவளது கரத்தை மெதுவாகத் தடவிக் கொண்டு, அவள் கண்களில் நோக்கினான். ஒரு சோகம் கலந்த அன்பு தவழ்ந்தது. மங்களத்தின் கண்களில் கண்ணீர் பொங்கியது.

     "எனது வாழ்க்கையில் மங்களம் இடம் பெற்றவுடன் எனது வாழ்க்கையே மாறிவிட்டது. ஆனால் கடவுளுக்குக்கூட பொறுக்கவில்லை."

     அவன் குரலில் ஒரு புதிய சக்தி பிறந்தது.

     "இவளுடைய அண்ணனின் வக்கிலை அழைத்து வந்தீர்களா?" என்றான்.

     "அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார்."

     "இன்னும் கொஞ்ச நேரத்திலா? கொஞ்ச நேரம் கழித்து எதற்கு?"

     "நான் தான் உன்னை முதலில் பார்ப்பது நல்லது என்று நினைத்தேன். கிட்டு, என்மீது உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?"

     "உங்களை நம்பாமலா? ஆனால் எவ்வளவு நேரம் இருப்பேனோ?"

     "இந்தக் கேஸில் உனக்கு என்ன சம்பந்தம், முதலில் இருந்து சொல்லு."

     கிட்டு மறுபடியும் களைத்துவிட்டான். மிகவும் கஷ்டப்பட்டு பேச வேண்டியிருந்தது.

     "எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறேன். டாக்டர் அன்றைக்குச் சொல்லிவிட்டுப் போன பிறகு எல்லாவற்றையும் எழுதி வைத்தேன். இவளுடைய அண்ணன் வக்கீல் வந்ததும் கை எழுத்துப் போட்டுவிடுகிறேன். இத்தனை நாள் தாமதியாமல் இருந்தால்... மங்களம் நீ கொஞ்சம் வெளியே போய்விட்டு வா. அப்பாவிடம் பேச வேண்டியிருக்கிறது.

     "அவரைக் களைத்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்" என்றாள் மங்களம்.

     அமிர்தலிங்கம் தலையை அசைத்தார்.

     "மங்களத்திற்கு நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரியாது. அவளுக்கும் உங்களுக்கும் திடுக்கிடும்படியாகத்தான் இருக்கும்."

     தலையணையின் கீழ் இருந்த காகிதத்தை எடுத்தான்.

     "எல்லாம் இதில் இருக்கிறது. அவர் வந்ததும் கை எழுத்துப் போட்டுவிடுகிறேன்."

     அமிர்தலிங்கம் அதை வாங்கி, கண்ணாடியைப் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். அதை வாசித்து முடித்த பிறகும் அவர் குரல் மாறவில்லை.

     "இந்த கேஸில் புதிய விஷயங்களைச் சொல்லியிருக்கிறாய். இதனால் உன் குடும்பத்திற்கு என்ன நேரும் என்பதை யோசித்திருப்பாய் என்று நம்புகிறேன். ஆனால் இதைத் தவிர வேறு வழியில்லை. உனது தாய் நல்ல காலமாக இது எல்லாம் கேட்காமல் இறந்து போகக் கொடுத்து வைத்தவள். நீ உனது மனைவியின் பேரில் மிகவும் பிரியம் வைத்திருக்கிறாய். உனக்கு என் பேரில் கொஞ்சமாவது பிரியம் கிடையாது என்று எனக்குத் தெரியும்."

     "அப்படியல்ல அப்பா. உங்கள் பேரில் எனக்கு எவ்வளவு பிரியம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்களும் எனக்கு எவ்வளவோ செய்து பார்த்தீர்கள். அது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்று எனக்குத் தெரியும். என் குணத்தில் எங்கோ ஒரு கோளாறு இருந்திருக்க வேண்டும். மங்களம் இதற்கு முன்பு என்னைச் சந்தித்திருந்தால் எனது வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும். மங்களம் எனது வாழ்க்கையில் வரும்பொழுது நான் பலவீனமாகிவிட்டேன். எல்லாம் சீக்கிரம் முடிந்துவிடும்" என்றான். அமிர்தலிங்கம் முகத்தை மூடிக்கொண்டார்.

கிட்டுவிற்கு அர்த்தமாகவில்லை.      "கொலை கொலைதான். நீ எனது வாழ்க்கையின் ஏமாற்றம். எனது புகழையும் பட்டத்தையும் தேடும் அவசரத்தில் உன்னை மறந்தேன்."

     "அப்பா அதற்காக வருத்தப்பட வேண்டாம்."

     "கை எழுத்தைப் போடு."

     கிட்டு கையெழுத்திட்டான்.

     "கவலைப்படாதே. அரை மணி நேரத்தில் இதை கோர்ட்டிற்குக் கொண்டு போய் விடுகிறேன்."

     பத்திரத்தைப் பைக்குள் வைத்துக் கொண்டார்.

     "என்னை நம்பு. உம்! உன்னிடம் சில விஷயங்கள் கேட்க வேண்டும். கேஸில் சில விளங்கவில்லை. நீ கேஸைப் பேப்பரில் பார்த்தாயா?"

     "ஆமாம் நேற்றுவரை அவன் தப்பித்துக் கொள்ளுவான் என்று நம்பியிருந்தேன்."

     "இதிலிருந்து கேஸென்றால் உனக்கு ஒன்றுமே தெரியாது என்று தெரிகிறதே. இறந்தவன் எப்படி இருப்பான் என்று சொல் பார்ப்போம்."

     "அப்படி ஒன்றுமில்லையே."

     "அவன் கையிலிருந்த மோதிரம் அதைப் பற்றி..."

     கிட்டு தலையை அசைத்தான்.

     "போலீஸார் வரும்பொழுது பிணத்தின் மீது அது இல்லை. ஒரு சாட்சி அதைப் பற்றிச் சொன்னான். கொலை செய்யப்பட்டவன் அதை அவனிடம் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காட்டியிருக்கிறான்."

     "ஆமாம்."

     "அதைப் பற்றி உனக்குத் தெரியுமா? ஞாபகப் படுத்திப் பார்; அது ஒரு மலையாளப் பெண் கொடுத்தது என்று உனக்குச் சொல்லி இருக்கிறானா?"

     "ஆமாம் சொன்ன மாதிரி ஞாபகம் இருக்கிறது."

     "அதைப் பிணத்தின் மீது காணோமே! நீ எடுத்தாயா?"

     "ஆம்! நான் தான் எடுத்தேன்" என்றான் கிட்டு.

     ஒரு மௌனம். அமிர்தலிங்கம் விரல்களைச் சுடக்கிக் கொண்டார். "அதை எங்கே வைத்தாய்?"

     "அப்பா நீங்கள் என்னை இந்த ஸ்திதியில் இப்படி 'கிராஸ் எக்ஸாமினேஷன்' செய்தால்! மிகவும் களைப்பாக இருக்கிறது. மங்களத்தைக் கூப்பிடுங்கள்..."

     "கிட்டு அப்படி ஒன்றுமில்லை. தெரிந்தவரை சொன்னால் அனாவசியமாக நேரம் கழியாது..."

     "அந்த மோதிரத்தை எடுத்து நானே எறிந்துவிட்டேன். எங்கே போட்டேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை."

     "மனம் குழம்பியிருந்திருக்கும். ஞாபகப்படுத்திப் பார்."

     "பிரயோஜனமில்லை" என்றான் கிட்டு சற்றுநேரம் கழித்து.

     "நீதான் அவனுடைய புஸ்தகத்திற்குப் பின் ஒளித்துவைத்தாயா?" என்றார்.

     கிட்டுவின் முகம் மலர்ந்தது. "ஆமாம் இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. அங்கேதான் வைத்தேன்" என்றான்.

     "அப்படியா நன்றாக அர்த்தமாகிவிட்டது. சின்ன விஷயம். குழப்பத்தை விளக்கிவிட்டாய்."

     "போய் வாருங்கள் அப்பா! நீங்கள் வந்ததற்கு... மங்களத்தைப் பார்த்துக் கொள்ளுவீர்களா?"

     அமிர்தலிங்கத்தின் கண்களில் நீர் துளித்தது.

     "இன்னும் சந்தேகமா?" என்றார்.

     அமிர்தலிங்கம் வெளியே வந்து மோட்டாரில் ஏறினார். உள்ளிருந்து விம்மியழும் அழுகைக் குரல் கேட்டது.

     அந்தக் கேஸில் அமிர்தலிங்கம் கடைசியாகப் பேசும்பொழுது மோசமாக இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவரே குற்றவாளிக்குப் பரிந்து பேசுவது போல பட்டது.

     அவர் தமது மகனுடைய கடிதத்தை வெளியில் எடுக்கவேயில்லை.

     ஜுரர்கள் அவனைக் குற்றவாளி என்று அபிப்பிராயப் பட்டார்கள். தீர்ப்புக் கூற நீதிபதி கருப்புக் குல்லாவை அணிந்து கொண்டார். திவான் பகதூர் அமிர்த லிங்கமும் ஜுனியரும் வெளியே வந்தார்கள்.

     "கேஸ்தான் முடிந்துவிட்டதே இவன் தான் குற்றவாளி என்று நீர் திட்டமாக நினைக்கிறீரா?" என்றார்.

     ஜுனியர் ஆச்சரியப்பட்டு விழித்தார்.

     "கேள்வி அதிசயமாக இருக்கலாம். உமக்குச் சந்தேகம் இருக்கிறதா?"

     "சந்தேகம் இல்லை."

     தனது மகன் கொடுத்த கடிதத்தைக் கொடுத்தார்.

     "இதை வாசியும். இதற்காகத்தான் மத்தியானம் சென்றிருந்தேன்."

     அவர் வாசித்து முடிக்கும்வரை காத்திருந்தார்.

     "அப்புறம்?" என்றார் ஜுனியர் ஆச்சரியத்துடன்.

     "எனது மகனைச் சில கேள்விகள் கேட்டேன். செத்தவன் போட்டிருந்த மோதிரத்தைப் பற்றிக் கூறினான்."

     ஜுனியருக்கு இன்னும் ஆச்சரியம் அதிகரித்தது.

     "அவன் அதை எடுத்துவிட்டானாம். அது அவன் மீது இருக்க அவனுக்குப் பிடிக்கவில்லையாம்."

     "அப்படியா?"

     "அவன் தான் அதை புஸ்தகத்தின் பின்புறம் ஒளித்தானாம்."

     "ஆமாம் ஸார். கேஸில் மோதிரத்தைப் பற்றியே பேச்சில்லையே!"

     "ஆமாம். அது தான் செத்தவன் மோதிரம் வைத்திருந்ததே கிடையாது. அதைப் பற்றி என் மகனுக்கு எப்படித் தெரியும்? அவன் அங்கிருந்தால்தானே!" என்றார்.


கொஞ்சம் நீளமாக இருப்பதால் சிறுகதை இல்லை எனச் சொல்லிவிடமாட்டீர்கள் என்று நம்புகிறேன். 

மீண்டும் சந்திப்போம்  

Thursday, February 20, 2020

கோழைச் சோழன்....! சாண்டில்யன் #குறுங்கதை

"கோழைச் சோழன் சங்க கால சரித்திரம். அதில் கண்ட சம்பவங்கள் அனைத்தும் அப்படியே நடந்தவை. கோழைச் சோழன் மூலமாக ஒரு வீர சரித்திரத்தை இந்தக் கதைகளில் படிக்கிறீர்கள். இதில் வரும் பாத்திரங்கள் அனைவரும் சங்க நூல்களில் இருக்கிறார்கள். சில உரையாடல்கள், சம்பவங்களைப் பற்றிய "ஜிகினா" வேலைகள், இவைதான் என் கற்பனை" என்று சாண்டில்யன் இந்தக் கதையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இனி, கோழைச்  சோழனைப் பார்ப்போமா?


கோழைச் சோழன்


ஆதித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன் தித்தன் தனது அரண்மனை வாயிலில் புகுமுன்பு நான்கு திக்குகளிலும் தனது வீர விழிகளைச் செலுத்தினான். அரண்மனையிருந்த அரச வீதியிலும் கூட வாட்போர் வீச்சும் வேலெறிப் பந்தயமும், விற்போரும் மற்போருமாகப்  பல வீர விளையாட்டுகள் அன்று நடந்து கொண்டிருந்ததைக் கண்ட தித்தன் மனத்தில் மட்டும் அவ்விளையாட்டுகள் எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. இந்திர விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் புகாரில் போலவே உறையூரிலும் நடந்து வந்த அந்தக் கோலாகலக் காட்சிகள், தூரத்தே காவிரிக் கரையில் அந்த நள்ளிரவிலும் நடந்து வந்த கேளிக்கைக் கூத்துக்கள் இவையனைத்தின் ஒலிகள் கூட அவன் காதில் விழுந்தும் வீரனான தித்தன் மனம் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. உலகெலாம் தன வீரப்புகழ் பாட, உறையூரை ஆண்ட தித்தன் அன்று 'நாம் என் இந்தப் பிறவி எடுத்தோம்?' என்று ஏங்கினான் உள்ளூர. ஏங்கியவன் கனத்த மனத்துடன் அரண்மனைக்குள் நுழைந்து காவலர் செலுத்திய வணக்கத்தையும் கவனிக்காது படிகளில் ஏறி முதல் உப்பரிகையை அடைந்தான். அங்கொரு திடீர் சிரிப்பொலி! பகடைகள் உருளும் சத்தம்! இவற்றைக் காதில் வாங்கிய தித்தன் தனது மடியில் இருந்த குறுவாளை எடுத்துக் கொண்டு அந்த ஒலிகள் எழுந்த இடத்தை நாடிச் சென்றான்.

அங்கு தலையில் பட்டுச் சீலையால் முக்காடிட்டுக் கொண்டு தோழியர் பலருடன் பகடைகளை உருட்டிக் கொண்டிருந்தான் அவன் ஒரே மகனான நற் கிள்ளி. அரசன் வந்ததை அவன் கவனிக்கவில்லை ஆயினும் தோழிகளுள் ஒருத்தி கவனித்ததால் பகடையிடத்திலிருந்து சரேலென்று எழுந்திருக்க அவள் முயல, அவள்  சேலை முந்தானையைப் பிடித்துக் கொண்ட நற் கிள்ளி, "எங்கே ஓடுகிறாய் பாதி ஆட்டத்தில்? உட்கார்" என்று அவளை வலிய இழுத்தான்.

முந்தானையை நற் கிள்ளி பிடித்ததால் மீதி ஆடையை மார்பில் பிடித்துக் கொண்டதோழி, "விடுங்கள் இளவரசே!" என்று கெஞ்சினாள்.

"வெற்றி கிடைக்கும் சமயத்தில் யார் விடுவான்? உட்கார்." என்று அதட்டினான் நற் கிள்ளி.

"இளவரசே! விடுங்கள்! பகடை வெற்றி ஒரு வெற்றி அல்ல. உங்கள் வெற்றி, வீரத்தில் இருக்க வேண்டும்" என்றாள் தோழி.

நற் கிள்ளி வேகமாக நகைத்தான். "அடி தோழி! பகடை வெற்றியிடம் வீரத்தின் வெற்றி பலிக்காது. சகுனி பகடையால் வெற்றி கொல்லவி;ல்லை பாண்டவரை? நாடு கடத்தவில்லை அவர்களை?" என்று கூறி மீண்டும் பகடையை உருட்டினான். தலையில் இருந்து நழுவ இருந்த பட்டாடையையும் மீண்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

இந்தச் சமயத்தில் தித்தன் குரல் கூரிய வாளென நுழைந்தது, அந்த உரையாடலுக்குக் குறுக்கே." "டேய் நற் கிள்ளி! விடு அவள் முந்தானையை" என்றான் தித்தன் சினம் பீரிட்ட குரலில்.

தித்தன் குரலைக் கேட்டதும் நடுங்கிய நற்கிள்ளி பகடையை அவசர அவசரமாக எடுத்து மடியிற் செருகிக் கொண்டு போர்வையை நன்றாகப் போர்த்திக் கொண்டு எழுந்து நின்றான். "தந்தையே! தாங்களா!" என்று வினவினான் நற் கிள்ளி நடுக்கம் ஒலித்த குரலில்.

"நான் தான்! ஆனால் உன் தந்தையல்ல" என்றான் தித்தன்.

நற்கிள்ளியின் கண்களில் அச்சம் தெரிந்தது. "நீங்கள் என் தந்தை இல்லையா?" என்று வினவினான் மெல்ல.

"இல்லை! சகுனிக்கு ஒரு தந்தை இருந்ததாகப் புராணங்களில் குறிப்பிடவில்லை"

"நான்...."

"சகுனி பகடையில் வல்லவன். பெண்களிடை பழகுபவன்,  குதிரை ஏற்றம் பயில வேண்டிய காலத்தில் குலாவுகிறாய் அரண்மனைச்   சேடிகளிடம் ! வில்லையும், வாளையும் பிடிக்க வேண்டிய கைகள் பகடையையும் கழங்குகளையும் பிடிக்கின்றன." என்ற மன்னன் "டேய் நற்கிள்ளி! உன்னை அரண்மனைத் தோழிகள் என்னவென்று அழைக்கிறார்கள் தெரியுமா?" என்று வினவினான்.

"என்னவென்று..?" நற்கிள்ளி அக்கம் பக்கத்திலிருந்த தோழியரை நோக்கினான். அவர்கள் தலைகள் தாழ்ந்து கிடந்தன. கமலக் கண்கள் தரையை நோக்கின!

"மடையா! எப்பொழுதும் பெண்களைப் போல உடலைப் பட்டாடை கொண்டு போர்த்தியிருக்கிறாய் அல்லவா?"

"ஆம்."

"அதனால் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி என்று அழைக்கிறார்கள்.  உன் கோழைத்தனத்துக்கு அரண்மனைத் தோழிகள் சூட்டியுள்ள பட்டம் அது."
என்று வெறுப்புடன் சொன்னான் மன்னவன்.

நற்கிள்ளி பக்கத்திலிருந்த தோழியரை நோக்கினான், "பட்டத்து இளவரசனான என்னையா அப்படிப் பழிக்கிறீர்கள்?" என்று வினவினான் அவர்களை நோக்கி. இந்த சமயத்தில் சுரீலென வாளைப் பாய்ச்சுவது போலக் கேட்டான் தித்தன். "நீ பட்டத்து இளவரசனென்று யார் சொன்னது?"

நற்கிள்ளியின் கண்கள் சலனத்தைக் காட்டின."யார் சொல்ல வேண்டும்? நான் உங்களுக்கு ஒரே மகன்...." என்ற  நற்கிள்ளியின் சொற்களை, "நீ என் மகனல்ல என்று முன்னமேயே சொன்னேன்." என்று பாதியிலேயே வெட்டினான் தித்தன்.

"அப்படியானால்.....?" நற்கிள்ளியின் குரல் நடுங்கியது.

"நீ நாடு கடத்தப் பட்டாய். நாளைக்குப் பிறகு உறையூரில் நீ தலை காட்டினால் தலை கொய்யப் படும். ஒரு கோழையை மகனாகத் தினம் காண்பதை விடக் காணாதிருத்தல் நன்று" என்ற மன்னன் அவ்விடத்தை விட்டு வேகமாக அகன்றான். தோழியரும் பறந்தனர், பட்டத்தரசியிடம் அச் செய்தியைச் சொல்ல.

அரண்மனை உப்பரிகைக் கூடத்தில் தனியே நின்ற போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது. அவன் அழகிய கண்களும் சிரித்தன. போர்வையை நன்றாகப் போர்த்திக் கொண்டு அரண்மனையை அடுத்திருந்த புறக்காட்டை நோக்கிச் சென்றான்.

கோழைச் சோழன், போர்வைக்கோ என்ற அடைமொழி எதைக் குறிக்கிறது என்பதை  சுவாரசியமாகச் சொல்லி ஆரம்பித்தும் ஆயிற்று !  அப்புறம்....!

காட்டுக்குள் புகுந்து சிறிது தூரம் நடந்ததும் தூரத்தே தெரிந்த ஒரு விளக்கை நோக்கிச் சென்று அங்கிருந்த சிருவீட்டின் கதவைத் தட்டினான் மும்முறை! கதவைத் திறந்து தலையை வெளியே நீட்டினான் பிரம்மாண்டமான ஒரு மனிதன். அவன் உடற்கூறு இரும்பாய் இருந்தது. சதைகள் கெட்டிப்பட்டுக் கிடந்தன.கன்னக் கதுப்புகள் பெரியதாயிருந்தமையால் கண்கள் சிறிதாகத் தெரிந்தன.இளவரசனைக் கண்டது, "வாருங்கள் உள்ளே" என்று அழைத்துச் சென்றான். வீட்டிற்குள் கூடத்தை அடைந்ததும் கேட்டான். "எங்கே வந்தீர்கள் இங்கே?"என்று.

"நல்ல சேதி சொல்ல வந்தேன்" என்றான் நற்கிள்ளி.

"என்ன சேதி இளவரசே?"

"என் தந்தை என்னை நாடு கடத்தி விட்டார்."

இதைக் கேட்ட அந்த மனிதன் சிறிதும் பதறவில்லை. பெருமூச்சு மட்டும் விட்டான். "நீங்கள் நினைத்தது நடந்து விட்டது?" எண்டு வினவினான் அந்த மனிதன்.

"ஆம்!" என்றான் நற்கிள்ளி மகிழ்ச்சியுடன்.

"இது சரியல்ல இளவரசே!" என்றான் அந்த மனிதன்.

"பெருஞ்சாத்தனாரே! என் ஆசானான நீருமா இதை ஏற்க மறுக்கிறீர்? என் ஆசையை ஏன் தடை செய்கிறீர்?" என்று கேட்டான் நற்கிள்ளி.

"நீங்கள் உறையூரை விட்டுப் போவதால்......?" என்று பெருஞ்சாத்தான் வாசகத்தை முடிக்காமல் விட்டான்.

"ஒரு கோழையை உறையூர் இழக்கிறது!"

"ஆனால் உலகம் ஒரு........"

"நிறுத்துங்கள் சாத்தனாரே! காலம் புதிரை அவிழ்க்கட்டும் நான் வருகிறேன்" என்ற நற்கிள்ளி ஆசானை வணங்கி விடைபெற்று வெளியே சென்றான்.

பாட்டுடைத் தலைவன் போர்வைக்கோ பெரு நற்கிள்ளி அறிமுகம் ஆயிற்று! அவன் சோழ இளவல் என்பதும் காலம் புதிரை அவிழ்க்கட்டும் என்ற வார்த்தைகளுக்கு உள்ளேயே கதையின் சஸ்பென்ஸ் முடிச்சும் வைத்தாயிற்று! சரி, கதையை நகர்த்திச் செல்ல அடுத்த கதாபாத்திரங்கள் வரிசையாக வர வேண்டுமே! வருகிறார்கள்! அடுத்தது யாராக இருக்கும்? இதில் சந்தேகம் வேறு உண்டா?

முக்காவல் நாட்டின் சிறப்புற்ற சிற்றூரான ஆமூருக்கு ஆண்டுதோறும் ஒரு அதிர்ஷ்டமுண்டு! அந்த ஊர் முருகவேல் கோட்டத்தின் பெருந்திருநாளன்று அந்த நாட்டின் பல பகுதிகளினின்று வணிகரும் வீரரும் கூடி முருக வேளைத் தொழுது மறு ஆண்டைப் பயனுற்றதாகச் செய்து கொள்ளும் வழக்கம் இருந்ததால், பெருங்கோழியூர் நாய்கன் என்ற வீரர் பெருமானும் தனது நெடுநாளையக் குறை ஒன்றைப் போக்கிக் கொள்ள, தனது மகள் நக்கண்ணையுடன் ஆமூருக்கு வெளியே உள்ள தோப்பு வீட்டில் தங்கியிருந்தான்.

பெருந்திருநாளின் மாலைப் பூசை நடந்து தம் குறி சொல்லும் பூசாரி கர்ப்பக் கிரகத்தை அடுத்த மண்டபத்தில் குழுமியிருந்த கூட்டத்தைக் கற்பூரத் தட்டுடன் அணுகிக் கூட்டத்தின் மீது கண்களை ஓட விட்டான் ஒரு வினாடி. பிறகு தூரத்தே தோழியருடன் ஒரு தூணுக்கருகில் நின்றுகொண்டிருந்த நக்கண்ணையைக் கை காட்டி அழைத்து, "பெண்ணே! முருகவேள் அருள் உனக்குக் கிட்டி விட்டது. இன்னும் பத்து நாள் இங்கே இருந்து, கொட்டக் குளத்தில் நீராடி அவனை வணங்கு. பத்தாவது நாள் உன்னை மணப்பவன் உன் இல்லம் தேடி வருவான்." என்று கூறித் தட்டை நீட்டினான்.

நக்கண்ணையும் தட்டில் இருந்த விபூதியையும், குங்குமத்தையும் எடுத்து நெற்றியில் தீட்டிக் கொண்டாள். பிறகு தோழியருடன் தோப்பு வீட்டுக்குத் திரும்பினாள்.

கோட்டத்தில் நடந்ததைத் தோழியர் எடுத்துக் கூற, பெருங்கோழியூர் நாய்கன் இரும்பூதெய்தி முருகவேளை மனத்துள் துதித்தான். "என் குறை தீர்ந்தது அப்பனே!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு பெண்ணின் தலையைக் கோதி விட்டு "நக்கண்ணை! உன் புலமைக்கேற்ற புருஷன் நிச்சயம் கிடைப்பான்" என்றும் ஆறுதல் கூறினான் அவளுக்கு.

நக்கண்ணை தனது நளினமான அழகிய விழிகளை நிலத்தில் ஓட்டினாள். போன கோட்டங்கள் கணக்கில்லை. செய்த வழிபாடுகள் குறைவில்லை. "இரண்டு ஆண்டுகளாக நடக்காதது இப்பொழுது எங்கே நடக்கப் போகிறது?" என்று நினைத்தாள் நக்கண்ணை. இருப்பினும் தந்தையிடம் பதில் பேசாது இடை துவள அழகு நடை நடந்து உள்ளே சென்றாள்

ஆனால் பூசாரி சொன்னது போல அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் முருகவேளின் கோட்டத்திற்குச் சென்றாள். வாவியில் நீராடினாள். அங்கிருந்த செங்கழுநீர்ப் பூவை பறித்துத் தலையில் சூட்டிக் கொண்டு சந்நிதானம் சென்று வழிபாடு  செய்தாள். எட்டுநாட்கள் இப்படி ஓடியும் பயனேதுமில்லை என்றாலும் தந்தையைத் திருப்தி செய்ய விரதத்தை விடாமல் தொடர்ந்து செய்து கொண்டு வந்தாள். ஒன்பதாம் நாள் ஒரு விதமாக வழி பிறந்தது. ஆனால் அது நல்வழியல்ல.

சரித்திரக்கதைகள் என்றாலே சாண்டில்யன் தான்!

பதிவைக் கவனித்திருந்தால் போர்வைக்கோ பெருநற் கிள்ளியைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடியவர் இருவர்! சாத்தந்தையார் முதல் மூன்று பாடல்கள், பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் அடுத்த மூன்று பாடல்களைப் பாடிய விவரம் நினைவுக்கு வரும்! முதல்வர், இங்கே கதையில் ஆசானாகி விட்டார்! அடுத்தவரோ, கைக்கிளை, பழித்தல் என்று காதல் திணையில் பாட்டைப் பாடியதால், கதையின் நாயகியாகவே ஆகிவிட்டார்! 

வரவேண்டிய நபர் இன்னும் ஒருவர் தான்! ஆமூர் மல்லன்! ஆக வில்லனும், இதோ வந்தாயிற்று!

அன்று காலை வழக்கம் போல வாவியில் நீராடி, கரையில் தோழியர் தன்னைச் சுற்றித் திரைபோல் பிடித்த பட்டாடைக்குள் ஈர ஆடையைக் களைந்து புத்தாடை சுற்றிக் கச்சையணிந்து தலையில் செங்கழுநீர் மலர் சூடி வாவிப் படிகளில் ஏறினாள். அங்கு நின்று அவள் வழியை மறித்தான் திடகாத்திரமான ஒரு மனிதன். அவனை ஏற இறங்கத் தீ விழி கொண்டு நோக்கினாள் நக்கண்ணை. "யார் நீங்கள்?" என்றும் வினவினாள்.

"ஊரில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்" என்ற அவன் பதிலில் தற் பெருமையும் இருந்தது.

"அத்தனை போக்கிரியா நீ?" இம்முறை மரியாதையைக் கைவிட்டுக் கேட்டாள் நக்கண்ணை.

"போக்கிரியா?" வியப்பிருந்தது அவன் கேள்வியில்.

"பெண்ணை வழிமறிக்கும் ஆடவருக்கு வேறு  பெயர் ஏதாவது இருக்கிறதா?"

"எதற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு."

"இது அப்படி ஒரு விலக்கு?"

"ஆம். உன் அழகு, ஆமூர் மல்லனையும் இவ்வழிக்கு இழுத்தது."

"இவ்வூர்ப் பெரு மல்லரா நீங்கள்?"

"ஆம்!" இதைப் பெருமையாகச் சொன்னான் மல்லன். அத்துடன் விடவில்லை அவன். "உனக்கு மணாளனைத் தேட, இரண்டு ஆண்டுகளாக உன்தந்தை முயலுவதாகக் கேள்வி. அந்தக் கஷ்டம் இனி இல்லை என்று அவரிடம் சொல். உன்னைப் பெண் கேட்க இன்று மாலை வருகிறேன்." என்று கூறி வழியினின்று விலகினான்.

அன்று பெருஞ் சீற்றத்துடன் முருகவேளை நோக்கினாள் நக்கண்ணை. "இவன் தான் நீ தரும் மணாளனா?" என்றும் வினவினாள் மனத்துள்.

முருகவேளின் வதனத்தில் புன்சிரிப்பு இருந்தது. கண்களில் அருள் இருந்தது. அந்தச் சிலை அவளுக்குப் பதில் சொல்லவில்லை தான். ஆனால், அவனுக்குப் பேச்செதற்கு? விழிகள் போதுமே!

இதை உணராத நக்கண்ணை ஆத்திரத்துடன் வீட்டை எய்தினாள்.  தந்தையிடம் நடந்ததைச் சொன்னாள். பெருங்கோழியூர் நாய்கன் மனம் எரிமலையாய் இருந்தது. அன்று மாலை ஆமூர் மல்லன் வந்தபோது வாயிலிலேயே நின்று விடை பகர்ந்தான்: "வல்லூறு புறாவை மணக்க முடியாது" என்று.

"நாய்கரே! ஆமூர் மல்லனை அவமதிப்பவர் செய்ய வேண்டிய கடமை ஒன்றிருக்கிறது!" என்றான் மல்லன்.

"தெரியும்! உன்னுடன் மற்போர் புரிய வேண்டும்." என்றான் நாய்கன்.

"ஆம்! நீயோ உன்னிடமுள்ள மல்லரோ இன்றிலிருந்து மூன்றாவது நாள் ஆமூர் மற்போர்க் கூடத்துக்கு வாருங்கள்!" என்று கூறி விட்டு அகன்றான் மல்லன். இதைக் கேட்ட நாய்கன் தன உயிர் இன்னும் இரண்டு நாட்கள் தான் என்று தீர்மானித்துக் கொண்டான். ஆமூர் மல்லன் கிழித்தெறிந்த உடல்கள் பல என்பதை அறிந்த நக்கண்ணை அன்று முழுதும் உறங்கவில்லை.

பத்தாவது நாளும் பிறந்தது.தோப்பு வீடு துன்பத்தில் ஆழ்ந்து கிடந்தது. அன்றும் முருகவேல் கோட்டத்திற்குக் கிளம்பிய நக்கண்ணை வெறுப்புடனேயே கிளம்பினாள். தமிழ்ப் புலமையை அன்று முருகவேளிடமே காட்டி இகழ்ப்பா பாடினாள் உள்ளூர. முருகன் முகத்தில் அதைக் கேட்டும் முறுவல் இருந்தது. அன்று கடைசித் தினமானதால் மாலையிலும் கோட்டம் வந்து விரதம் முடித்துத் தோழியருடன் வீடு திரும்பினாள்.

வரிசையாக, கதையின் நாயகன் கோழையாக அறிமுகமாகி, தந்தை அவனை நாடு கடத்த, சந்தோஷத்துடன் வெளியேறுகிறான் கதாநாயகி அறிமுகம் ஆகிறாள்..   அவளைத் தொடர்ந்து வில்லன் தொந்தரவு செய்கிறான்.. கதாநாயகன் என்டர் ஆகவேண்டிய இடம் வந்து விட்டது இல்லையா?

ஒரு ஃபைட்  சீன, அப்புறம் க்ளைமாக்ஸ், மறுபடி ஓபனிங் சீனுடன் கதையைக் கோர்த்தாக வேண்டுமே! எல்லாக் கதைகளும் மொத்தம் 43  கதைக்களம் (Plots)  பார்முலாக்களுக்கு உட்பட்டது தானாமே! சரித்திரக் கதை மட்டும் என்ன விதி விலக்கா?

......விரதம் முடித்துத் தோழியருடன் வீடு திரும்பினாள்.

வீட்டின் திண்ணையில் தூணுக்கருகில் முக்காடிட்டு ஓர் உருவம் பதுங்கி இருந்தது. உடல் முழுவதும் பட்டுப் புடவை மூடிக் கிடந்தது. "யார்?" என்று வினவினாள் நக்கண்ணை. பதில் கிடைக்காததால், பக்கத்திலிருந்த ஒரு மரக்கிளையில் சிறிது உடைத்து அதன் உதவி கொண்டு முக்காட்டைத் தூக்கிப் பார்த்தாள். கரிய இரு விழிகள் அவளை நோக்கின.முகம் சந்திர பிம்பமாக இருந்தது. அது ஆடவன் என்பதற்கு ஒரே அறிகுறி உதட்டின் மீது மிக அழகாக வளர்ந்திருந்த அரும்பு மீசை.

"எழுந்திரு" என்று அதட்டினாள் நக்கண்ணை.

எழுந்திருந்தான் முக்காட்டுக் காளை! அவன் இடையில் ஒரு வாளும் இருந்ததை அவள் கண்டாள். அவன் எழுந்ததில் ஒரு கம்பீரமும் இருந்தது அவளுக்குப் புலனாயிற்று. "யார் நீ?" என்று மீண்டும் வினவினாள் நக்கண்ணை.

அவளுடைய அழகிய விழிகளுடன் அந்த வாலிபன் தனது கண்களைக் கலந்தான் ஒரு வினாடி. அந்த வினாடியில் அந்தப் பார்வை மூலம் அவன் தன்னுள் புகுந்து விட்டானென்பதை  உணர்ந்து நக்கண்ணை நாணமெய்தினாள். "தோழி! அவர் யாரென்று கேள்!" என்று இம்முறை தோழியை ஏவினாள். தோழி திகைத்தாள். என்றும் யாரிடமும் நேராகப் பேசும் நக்கண்ணை அன்று தன்னைப் பேசச் சொன்னது திகைப்பாகவும் இருந்தது, வியப்பாகவும் இருந்தது அவளுக்கு. இருப்பினும் திகைப்பையும் வியப்பையும் உதறிக் கேட்டாள் "யார் நீ?" என்று.

"கோழைச் சோழன்!" என்று பதில் கூறினான் அவன்.

"கோழைச் சோழனா?!" வியப்புடன் வினவினாள் தோழி.

"ஆம். நான் பட்டாடைப் போர்வையுடன் முக்காடிட்டிருக்கவில்லை?" என்று வினவினான் அவன்.

"இருந்தாய்"

"அப்படிப்பட்டவன் தென்புலத்தில் ஒருவன் தானுண்டு. அவன்...."

"போர்வைக்கோ பெரு நற்கிள்ளி" என்று இடைப்புகுந்து வாசகத்தை முடித்த நக்கண்ணை அதிர்ச்சி வசப்பட்டாள். "சோழ இளவல் இங்கு ஏன் வந்தார்?"  என்று வினவினாள்.

"நாடு கடத்தப் பட்டேன்." என்றான் இளவல்.

"கேள்விப் பட்டோம்" என்றாள் நக்கண்ணை.

"கோழைத் தனத்திற்காக" என்று சொன்னான் இளவல்.

நக்கண்ணையின் மனம் குழம்பியது. அவன் முகம் கோழையின் முகமாகத் தெரியவில்லை அவளுக்கு. கண்களும் கோழையின் கண்களல்ல என்பது அவள் புலமை உள்ளத்திற்குப் புலனாயிற்று. ஆகவே "உள்ளே வாருங்கள்" என்று அழைத்துச் சென்றாள். உள்ளே பெருங்கோழியூர் நாய்கன் சோழ இளவலைத் தக்க மரியாதையுடன் எதிர் கொண்டான். மஞ்சத்தில் உட்கார வைத்து எதிரில் நின்று கொண்டான். "என்ன ஆணை?" என்றும் கேட்டான்.

"நாய்கரே! ஒரு உதவி வேண்டும்" என்றான் சோழ இளவல்.

"உத்தரவிடுங்கள்."

"நாளைக் காலையில் நீர் ஆமூர் மல்லனிடம் செல்லுங்கள்."

"உம்"

"சென்று நான் அவனுடன் மற்போர் புரிய விரும்புவதாகச் சொல்லுங்கள்."

இதைக் கேட்ட நாய்கன் திகிலடைந்தான்."இளவரசே இது வேண்டாம். இது வேண்டாம்" என்றான்.

"ஏன்?"

"அவன் உங்களைக் கிழித்துப் போட்டு விடுவான்."

"நாய்கரே!"

"இளவரசே"

"வீரர்கள் போரில் மரிப்பது நல்லதா? கோழையாக வாழ்வது நல்லதா?"

இதற்கு நாய்கன் பதில் சொல்லவில்லை. "ஏன் மரிக்க இஷ்டப் படுகிறீர்கள்?" என்று முடிவில் கேட்டான்.

"நக்கண்ணையின் நளின விழிகளுக்காக. அவளை நேற்று வாவிக் கையில் அவமதித்தான் மல்லன்."

"ஆம். நேற்று என்னையும் போருக்கு அழைத்தான்."

"உங்களுக்குப் பதில் நான் செல்கிறேன்." நற்கிள்ளியின் பதில் உறுதியாயிருந்தது.


இந்த விநோதத்தைக் கேட்டு, மறுநாள் ஆமூரே  நகைத்தது. "போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி மாள ஆமூருக்கா வரவேண்டும்?" என்று ஊர்ப் பெரியவர்கள் நகைத்தார்கள். பெண்கள் கூட நகைத்தார்கள்.'இந்த மற்போர் நடைபெறாது.சமயத்தில் நற்கிள்ளி ஓடிவிடுவான்' என்று பலரும் சொன்னார்கள். ஆனால். குறிப்பிட்ட நேரத்தில் போர்வையைப் போர்த்திக் கொண்டு ஊர் மத்தியிலிருந்த மற்போர்க் கூடத்துக்கு வந்து சேர்ந்தான் நற்கிள்ளி. மக்கள் அவனை வியப்புடன் பார்த்தார்கள். ஆமூர் மல்லன் எல்லோரும் கேட்கக் கூவினான்" "ஐயோ! சோழன் மகனே! விதி உன்னைப் பிடர் பிடித்து உந்த இங்கு வந்தனை. வேண்டுமானால் ஓடிவிடு," என்று.

பெருநற்கிள்ளி மெல்லப் போர்வையை எடுத்தெறிந்தான். தனது உடலின் மீதிருந்து. உள்ளே சல்லடம் மட்டுமே தரித்திருந்த அவன் தேக காந்தி, இளமை, விழிகளில் இருந்த அசட்டை இவற்றைக் கண்ட மக்கள் "இந்த வயதில் இவனுக்கு ஏன் இந்த விதி?" என்று கேட்டார்கள்.

சிலர் பெருங்கோழியூர் நாயகனைத் தூற்றினார்கள். "இந்தச் சிறு பிள்ளையை இவன் ஏன் காவு கொடுக்கிறான்?" என்று. இவையனைத்தும் சற்று எட்ட இருந்த பனைமரத்தில் சாய்ந்திருந்த நக்கண்ணையின் காதில் விழ, அவள் தனது நளின நயனங்கள் பனிப்ப நின்றாள். ஆனால், மற்போர் துவங்கியதும் விழிகளைத் துடைத்துக் கொண்டாள். வேதனை இருந்த இடத்தில் வியப்பு ஆட் கொண்டது. ஆமூர் மல்லன் மும்முறை இளவலைப் பிடித்தான் தனது முரட்டுப் பிடியில் மும்முறையும் மிக லாவகமாக நழுவினான் நற்கிள்ளி. நான்காம் முறை இருவரும் அணுகிய போது பிடித்தவன் ஆமூர் மல்லனல்ல. நற்கிள்ளியின் மெல்லிய கரங்கள் மல்லன் கரங்களைப் புதுப் பாணியில் சுழற்றி மடக்கிப் பிடித்தன. திடீரென அக்கைகள் திரும்பிய வேகத்தில் மல்லன்  இரு முறை சுழன்றான்.

இந்தப் புதுப் பிடியைக் கண்டிராத மல்லன் இதயத்தில் சந்தேகம் எழுந்தது. "இவன் உண்மையில்கோழை தானா? சோழன் மகன் தானா?"என்ற கேள்விகள் சித்தத்தில் பிறந்தன. ஆகவே தனது வலிமையை  எல்லாம் உபயோகிக்க நெருங்கினான் இளவலை. இளவலும் தயாராக நின்றான். இம்முறை காலுதைப்பில் ஈடுபட்டான் மல்லன். அதை எதிர்பார்த்த நற்கிள்ளி சற்று விலகித் தனது காலால் அவன் கணுக் காலுக்கு மேல் உதைக்க, மல்லன் மண்ணில் புரண்டான். அடுத்த வினாடி யானை மீது பாயும் சிங்கம் போலப் பாய்ந்த இளவரசன், மல்லன் மார்பில் தன காலை ஊன்றி அவன் தலையை எடுத்துப் பிடித்து, "இது உன் மமதைக்கு, இது ஏன் வீரத்துக்கு, இது நக்கண்ணையை வழி மறித்ததற்கு," என்று மும்முறை தரையில் மோதிவிட்டு எழுந்தான்.. மல்லன் வாயில் ரத்தம் வந்தது. அத்துடன் ஒரு பெருமூச்சு, அவன் உயிரும் பிரிந்தது.

ஆமூர் மக்கள் பிரமை பிடித்து நின்றனர். ஏதும் நடவாதது போல சல்லடத்துடனும் உடம்பில் புழுதியுடனும் நக்கண்ணை நின்றிருந்த பனை மரத்தை நோக்கி நடந்தான் நற்கிள்ளி. அத்தனை புழுதியுடன் அவளைத் தழுவியும் கொண்டான். நக்கண்ணை மறுக்கவில்லை. ஊர் மக்கள் காண அவன் உடற்புழுதிகளைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்தாள்.

இப்போது கதை ஆரம்பித்த இடத்துடன் போய்ச் சேர வேண்டும் இல்லையா? வாருங்கள், நாமும் கூடப் போய்ப் பார்ப்போம்!

மகன் நாடு கடத்தப்பட்ட ஓராண்டுக்குப் பின்னர் பெருஞ்சாத்தன் இல்லத்தை அடைந்த சோழ மன்னன் தித்தன், "பெருஞ்சாத்தனாரே! என் மகன் ஆமூர் மல்லனைக் கொன்று விட்டானாம்." என்றான்.

"ஆம்" என்றார் பெருஞ்சாத்தனார்..

"அப்படியானால் அவனுக்கு மற்போர் கற்றுக் கொடுத்தது யார்?" என்று வினவினான் மன்னன்.

"நான் தான்!"

"விற்போரும் தெரியுமா?"

"சகலமும் தெரியும்!"

"அப்படியானால் அவன் கோழையல்லவே?"

"சிங்கத்தின் வயிற்றில் நரி எப்படிப் பிறக்கும்?"

பெருஞ்சாத்தனாரின் இந்தக் கேள்வி மன்னனைத் திகைக்க வைத்தது. "பிறகு, கோழையாக வேடந்தான் போட்டானா நற்கிள்ளி?" என்று வினவினான்.

"ஆம்! உலகத்தைத் தனிப்படப் பார்க்க விரும்பினார் இளவரசர். ஒரே மகனானதால் நீங்கள் அனுமதிக்க மாட்டீர்களென்று  எண்ணினார். ஆகையால்....!"

"நாடகமாடினான்?"

"ஆம்!"

"அதற்கு நீரும் உடந்தை?"

பெருஞ்சாத்தனார் பதில் கூறவில்லை. வாயிலில் எதையோ கண்டு விழித்தார். "என்ன விழிக்கிறீர்?" எனச் சீறினான் மன்னன்.

வாயிலைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் நற்கிள்ளி. " தந்தையே! சாத்தனாரிடம் குற்றம் காணாதீர்கள்! குற்றம் என்னுடையது." என்றான்.

தித்தன் ஒரு வினாடி தாமதித்தான். பிறகு மைந்தனை அணைத்துக் கொண்டு "நற்கிள்ளி! இன்று நான் புத்திரப் பேறு பெற்றேன்." என்று கூறிவிட்டு, "இனி அந்தப்புரம் சென்று விளையாடுவதில்லை என்று உறுதி சொல்" என்று கையை நீட்டினான்.

"அந்த உறுதி சொல்ல முடியாது."

"அப்படியானால்...?"

"இப்பொழுதே அந்தப்புரம் போக வேண்டும்!"

"காரணம்?"

"இவள்" என்ற இளவல் "இதோ உங்கள் மருமகள்!" என்று வாயிலை நோக்க, நக்கண்ணை அன்ன நடை நடந்து வந்து மன்னனை வணங்கினாள்.

மன்னன் நகைத்தான்! " சரி, சரி! போ அந்தப் புரத்துக்கு!" என்றான்.

அன்றிரவு மணவறையிலும் நற்கிள்ளி போர்வை போர்த்தி வந்தான். "புடவையை எடுத்து எறிகிறீர்களா, நான் எறியட்டுமா?" என்றாள் நக்கண்ணை.

"அது உன் தொழில் அல்ல! என் தொழில்!" என்று சீலையை நீக்கிப் பஞ்சணையை அணுகினான் நற்கிள்ளி.

சரி நண்பர்களே! முழுக் கதையையும் சொல்லி முடித்தாகி விட்டது. இப்போதாவது அந்தப் பாடலைப் படித்து விட்டு, எந்த அளவுக்கு சரித்திரம்,. எந்த அளவுக்குப் புனைவு இருக்கிறது என்று சொல்ல முடியுமா?!


இந்தச் சிறுகதை 1960  களில் அமுதசுரபி மாத இதழில் வெளியானது. இன்னும் மூன்று சிறுகதைகளுடன், 1969 வாக்கில் புத்தக வடிவாகவும் வெளி வந்தது. வானதி வெளியீடு. என்னிடமிருப்பது 1988  இல் வந்த ஐந்தாவது பதிப்பு,  -விலை வெறும் ஐந்தே ரூபாய் தான்!

காசு கொடுத்து வாங்கிப் படிக்க நிறைய வாசகர்கள் தயாராக இருக்கும்  இந்தத் தருணத்தில்,  பதிப்பகங்கள் கொள்ளை விலை வைத்துப் புத்தகங்களை விற்கும் நிலை அநேகமாகத் தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது. இதை இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம், இல்லையா?

மீண்டும் சந்திப்போம். 

Sunday, October 20, 2019

எழுத்தாளர் தொ மு சிதம்பர ரகுநாதன் பிறந்தநாள் இன்று!

கூகிள் ப்ளஸ் மூடப்பட்டபிறகு இங்கே நிறைய நண்பர்களைத் தொலைத்து விட்டமாதிரியான உணர்வு இன்னமும் என்னை விட்டுப் போகவில்லை என்பதை, BKR என்று அழைக்கப்படும் திரு.ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய வலைப் பக்கங்களில் இரண்டுநாட்களாக அவரது பதிவுகளை வாசித்த பிறகு இன்னும் அதிகமாக உணர முடிந்தது. நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுடைய பிற்ந்த நாள், இன்று அக்டோபர் 20 தொ மு சிதம்பர ரகுநாதனுடைய பிறந்த நாள் என்று அன்றன்றைய நாளின் சிறப்புச் செய்தியாக, அவருடைய பதிவுகளில் பகிர்ந்திருந்ததை இங்கேயும்!   


தோற்றம் 20/10/1923
மறைவு 31/12/2001

எழுத்தாளர் தொ மு சிதம்பர ரகுநாதன் பிறந்தநாள் - இன்று அக்டோபர் 20

தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுதுகிறவர்களானாலும் சரி, தமிழின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்துப் போடுகிறவர்களானாலும் சரி, இணையத்தில் சிறுகதைகளைப் பதிவேற்றம் செய்யும் இணையதளக்காரர்களானாலும் சரி, ஞாபகமாகத் தவிர்த்துவிடும் ஒரு பெயர் தொ.மு.சி. ரகுநாதன். சாகித்ய அகாடெமி விருது பெற்ற அந்தப் படைப்பாளியின் பிறந்தநாள் இன்று. 

இவருடைய தாத்தா சிதம்பரத் தொண்டைமான், புகழ்பெற்ற ஒரு தமிழறிஞர். `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' போன்ற நூல்களை எழுதியவர். ரகுநாதனின் அப்பா தொண்டைமான் முத்தையா, சிறந்த ஓவியர்; புகைப்படக் கலைஞர். அவருக்கும் அவருடைய இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக 1923 அக்டோபர் 20 அன்று  பிறந்தவர் ரகுநாதன். அவருக்கு ஓர் அண்ணன், மூன்று தமக்கையர், ஒரு தங்கை.


இந்திய ஆட்சிப்பணியில் இருந்த எழுத்தாளர் பாஸ்கர தொண்டைமான் இவரின் உடன்பிறந்த சகோதரர். சாகித்ய அகாடமி விருது பெற்ற பேராசிரியர் அ சீனிவாச ராகவன் தொ மு சியின் ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் அமைந்தார். தொமுசியின் முதல் சிறுகதை பிரசன்ன விகடன் என்ற பத்திரிகையில் வெளியானது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு தொமுசி சிறைத்தண்டனை அனுபவித்தார். பின்னர் தினமணி மற்றும் முல்லை என்ற இலக்கிய பத்திரிகைகளிலும் பணியாற்றினார். 

பத்திரிகைத் துறையில் சலிப்பேற்பட்டு சென்னையிலிருந்து மீண்டும் நெல்லைக்குத் திரும்பி, 1954-ல் `சாந்தி' என்ற இலக்கிய இதழை அவரே தொடங்குகிறார்.இரண்டு ஆண்டுகள் இலக்கியத்தில் சமரசமின்றி தரமான படைப்புகளுடன் அந்த இதழ் வெளிவருகிறது. தமிழ் ஒளி, ரகுநாதன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் உள்ளிட்ட பலரும் தங்கள் படைப்புகளை அதில் வெளியிட்டனர். பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே அந்த இதழ் நின்றுபோனது.

1939-ம் ஆண்டிலிருந்தே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய ரகுநாதனின் கதைகள், 1949-ம் ஆண்டில் தொகுப்பாக வெளியானது. அந்தத் தொகுப்பில் இருந்த `நீயும் நானும்' என்ற கதை, வாத பிரதிவாதங்களை இலக்கிய உலகில் உருவாக்கிப் பரபரப்பாகப் பேசியது. படைப்புலகில் இப்படி நுழையும்போதே பரபரப்பாகவும் அதிர்வெடிகளுடனும் நுழைந்தவரான ரகுநாதன், சாகும்பரியந்தம் வலுக்குறையாமல் அப்படியே இயங்கினார் என்பது வியப்பான செய்தி. நீயும் நானும் (1949), ஷணப்பித்தம் (1952), சேற்றிலே மலர்ந்த செந்தாமரை (1955), ரகுநாதன் கதைகள் (1957) ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளில் அவருடைய சிறுகதைகள் வந்தன. ஆனால், சோகம் என்னவெனில் அவர் தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் நிறுத்திக்கொண்டார். 1957-க்குப் பிறகு அவர் சிறுகதைகள் எழுதவில்லை. ஆய்வுகளின் மீது கவனம் செலுத்தி அந்தத் துறையில் சாதனைகள் படைத்தார்.

அவரது `பாரதி:காலமும் கருத்தும்' நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. இளங்கோவடிகள் யார் என்னும் ஆய்வு நூல், அதுகாறும் சேரன் செங்குட்டுவனின் தம்பிதான் இளங்கோவடிகள் என திராவிட இயக்கத்தார் கட்டியெழுப்பியிருந்த கற்பிதங்களை உடைத்து நொறுக்கி `இளங்கோ, மன்னர் வம்சத்தைச்  சேர்ந்தவரே அல்ல. அவர் ஒரு தனவணிகச் செட்டியார்' என்ற ஆதாரங்களுடன் நிறுவினார். 


1951-ம் ஆண்டில் ரகுநாதன் எழுதிய `பஞ்சும் பசியும்' நாவல்தான் அயல்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல். செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நாவல் 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையானது. மாக்ஸிம் கார்க்கியின் படைப்பான தாய் என்ற புகழ்பெற்ற புதினத்தை தமிழில் இவர் மொழிபெயர்த்தார். 


தன் இறுதிக்காலத்தை அவர் திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் கழித்தார். 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் நாள் ரகுநாதன் காலமானார். 

தொ.மு.சி. ரகுநாதனுடைய படைப்புக்கள் அனைத்தும்  நாட்டுடைமை ஆக்கப்பட்டு இங்கே இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளவும்  கிடைக்கின்றன என்பது கூடுதல் தகவல். தமிழில் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரின் படைப்புக்களை கொஞ்சம் வாசித்துத் தான் பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம். 
  
  

Saturday, October 19, 2019

எது நல்ல எழுத்து? வாசிப்பின் படிநிலைகள்! கொஞ்சம் பார்க்கலாமா?

என்ன மாதிரி எழுத்தைக் கொண்டாடுவீர்கள்? எதற்காக?  என்ற கேள்விகளோடு நான்கு நாட்களுக்கு முன்னால் இந்தப்பக்கங்களில் ஆரம்பித்த ஒரு விஷயத்தை தினத்தந்தி கன்னித்தீவு படக்கதை மாதிரி இழுத்துக் கொண்டே போகாமல் ஒரு கட்டத்தோடு ஒன்றிரண்டு பதிவுகளோடு முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது! 

ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் கதையைத் தழுவி 1960 வாக்கில் கறுப்பு வெள்ளைப்படமாக 2வது பக்கத்தில் வெளியாக ஆரம்பித்த படக்கதை இன்னும் தொடர்கிறது என்று தான் நினைக்கிறேன்! தினத்தந்தி பேப்பர் படித்து இருபத்தைந்து முப்பதாண்டு காலத்துக்கும் மேலேயே ஆகி இருக்கும். நாடோடி மன்னனில் வருகிற கன்னித்தீவு பெயரையே இதற்கும் வைத்துவிடலாம் என்று சி பா ஆதித்தன் யோசனை சொன்னதாகத் தகவல் இருக்கிறது.   

   
2013 இல் தான் கன்னித்தீவு வண்ணத்துக்கு மாறியதாம்! இதைக் கூட விடாமல் பார்த்தவர்கள் ஏராளம்! (வாசித்தவர்கள் என்று சொன்னால் அது நெம்ப ஓவரு!! வலைப் பூவுக்கு க்ளிக் செய்து வந்து சும்மா 20 செகண்ட் 30 செகண்ட் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுப் போவதை எல்லாம் வாசித்ததாக எடுத்துக் கொள்ள முடியுமா? தினத்தந்தி தான் தமிழில் வாசிக்கும் வழக்கத்தையே வளர்த்தது என்று சொல்வதுகூட அந்த ரகத்தில் சேர்க்கக் கூடிய ஒன்றுதான்! வாசிப்பு நிலையில்  LKG லெவல் என்று கூடச் சொல்ல முடியாது.

ராஜேஷ் குமாரோ, ரமணி சந்திரனோ இருவேறு பிரிவில் வரும் வாசகர்களுக்காக எழுதினார்கள் என்றால் பாலகுமாரன் வணிக எழுத்தின் உச்சம்! எண்பது தொண்ணூறுகளில் இளசுகளைக் கிறங்க அடித்த எழுத்து. காதலோடு, பெண்ணியமும் கலந்து பேசிய விசித்திரமான கலவை! இளம் பெண்களுடைய விடலைத்தனத்தைத் தட்டிக் கொடுத்து தைரியம் சொன்ன எழுத்தாகவே நிறையப் பெண் வாசகர்கள் பார்த்தார்கள் என்பது மறுக்க முடியாத விஷயம். ஊக்கம் தருகிற எழுத்தாக எழுதிக் கொண்டிருந்தவர் தன்னைத் தானே உலகின் புதிய ஆன்மீக குருவாகக் காட்டிக் கொள்ள ஆரம்பித்ததில் சறுக்க ஆரம்பித்ததாக ஒருதரப்பு சொல்லிக் கொண்டே இருக்கையில் இன்னொரு தரப்பு தேவனுடைய மகிமைக்கு சாட்சியம் சொல்ல முற்படும் கிறித்தவத்தைப் போலே, பாலகுமாரனுடைய பேச்சு எழுத்து கண்ணசைவு எல்லாவற்றுக்குமே சாட்சியம் சொல்கிறதாக இன்றும் இருக்கிறது. இப்படி ஏதோ ஒன்றில் மயங்கி அங்கேயே தேங்கிப் போய்விடுகிற வாசகர்களின் நிலையை என்னவென்று சொல்வீர்கள்? ஜெமோ கூட  அதுமாதிரி இல்லாத ஒளிவட்டத்துடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ளப் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும்  புரிந்து கொள்ள முடிகிறதா?

எது ஒரு நல்ல எழுத்தாளனை உருவாக்குகிறது? சராசரி வாசக மனநிலையிலிருந்து ஒரு தேர்ந்த வாசகனாக்கும் எழுத்து எது? இப்படி   முந்தைய பதிவில் சில  கேள்விகளோடு முடித்திருந்தேன் இல்லையா? 

கேள்வியிலேயே பதிலுக்கான திறவுகோலும் இருக்கிறதே! அது என்ன  என்பதைப் பேசுவதற்கு முன்னால்  ஒரு எழுத்தாளர் என்னென்ன செய்யக் கூடாது என்பதற்கொரு நல்ல உதாரணமாக Robin Cook எழுதிய Fever நாவலைப் பற்றி இங்கே எழுதியிருந்ததைப் படித்தீர்களா? அதே ஜானரில் ஒரு தேர்ந்த எழுத்தாளன் எழுதும்போது எப்படி வாசகர்கள் விரும்பும் கதைக்களமாக மாறுகிறதென்ற அதிசயத்தையும் பார்த்து விடலாமே!    
  
டிஸ்கி ! கீழே கௌதமன் சார் பின்னூட்டத்துக்குப் பதில் சொல்கிற மாதிரியும் இந்தப் பதிவை இதற்குமேலும் வளர்த்துக் கொண்டே போகாமல் முடிப்பதற்காகவும் முந்தைய பதிவில் தி ஜானகிராமன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை மறுபடியும் பார்த்துவிடலாம்! கௌதமன், எழுத்தாளர் தேவனை உதாரணமாகச் சொன்னது ஒருவகையில் பொருத்தம் தான்!  

"நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும் போது மனிதக் குரல்களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கேல்லாமோ ஆசைப் பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக் கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

மனித முகங்கள் வேறுபடுவதைப் போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும்.தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியோர்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் நிறைந்து கிடக்கும். தன்னுடைய முயற்சியில் நம்பிக்கையும்தான் கண்டது உண்மை என்ற திட நம்பிக்கையும் (பிறர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி) எழுத்துக்கும் அடிப்படையாக இருக்கும்பொழுது அது கட்டாயம் நல்ல சிருஷ்டி இலக்கியமாகத்  தான் இருக்கும்."   

தி.ஜா. சொல்கிற மாதிரி   , தான் கண்ட  உண்மையை    வாசகருக்கும் கடத்திவிடுகிறமாதிரியான எழுத்துடன் சில  நல்ல எழுத்தாளர்களும் இங்கே தமிழ்நாட்டில் இருக்கத் தான் செய்தார்கள். உதாரணத்துக்கு ஜெகசிற்பியன்! கல்கியில் தொடர்கதையாக வெளிவந்த ஜெகசிற்பியனுடைய  ஜீவ கீதம் நாவலைப் படித்திருக்கிறீர்களா? வாசகர்களுக்கு ஒரு நல்ல கருத்தை, தன்னுடைய நம்பிக்கையைச் சொன்ன வேறு எவராவது உங்கள் நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்!  
   
மீண்டும் சந்திப்போம்.             
       

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)