Tuesday, May 25, 2010

நாட்டிய தாரா! ஒரு காதல் கதைக்குள் இன்னொரு காதல் கதை!


பொதுவாகக் கலைஞர்களே எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் தான்! உணர்ச்சி வசப்படும்போது விளிம்பு நிலைக்கே போய் விடக் கூடியவர்கள் தான்!
 
வெவ்வேறு கலைகளில் ஆர்வமுள்ள இருவர் காதலில் ஒன்று சேர்கிறார்கள். ஆனால் உணர்ச்சிகள் அவர்களை வெகு தூரத்துக்கு விலக்கி வைக்கின்றன. சந்தியா தேவி! சங்கீதத்தில் புகழ் பெற்றவள்! ஆனாலும் சொந்த வாழ்வில் இழக்கக் கூடாத ஒன்றை இழந்து விட்ட சோகத்தின் தனிமையுடன் வெளி நாட்டில் இருந்து இந்தியாவுக்குத் திரும்புகிறாள். கூடவே அவளது வளர்ப்பு மகனும்!  

வெளியே யாருக்கும் திவாகர் அவளது வளர்ப்பு மகன் தான் என்பது தெரியாது. தான் இறப்பதற்குள் இருக்கிற ஒன்றையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு! அது அவளுடைய மகன்! வெளிநாடு செல்லும்போது, இடைஞ்சலாக இருக்கக் கூடாதென்று சிநேகிதியின் பொறுப்பில் விட்டு விட்டுப் போன மகன்!
 
திவாகருக்கோ, சந்தியா தேவி தன் தாய்க்குச் செய்த துரோகத்திற்கு, அவளை அனலில் வாட்டி எடுக்க வேண்டும் என்ற வெறி! தன்னுடைய தகப்பனைக் கைக்குள் போட்டுக் கொண்டு, இரண்டாவது திருமணமும் செய்து கொண்ட இந்தப் பெண்மணியால் தான் தன்னுடைய தாய் மனம் முறிந்து இறந்துபோனாள் என்கிற வெறி. அதே நேரம், அவளுடைய சொத்துக்களை என்னவோ செய்து, கைக்கெட்டாத தூரத்தில் வைத்திருக்கிறாள், அதையும் கைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்கிற எண்ணம்! சந்தியா தேவி எவ்வளவோ தன்மையாகச் சொல்லிப் பார்த்தும் விரியன் பாம்பாக விஷத்தை மட்டுமே கக்குகிற ஜாதி!
 
இந்துமதி, சந்தியா தேவியின் சிநேகிதி! சந்தியா தேவியின் மகனுக்கு இந்துமதியின் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக எப்போதோ முடிவு செய்திருந்தார்கள்! இந்துமதி, பெரும் செலவாளி! போதாக்குறைக்கு அரசியலிலும் ஈடுபட்டுப் பெரிய தலைவியாகி விடவேண்டுமென்ற கனவும் உண்டு. ஒரே மகள் சுபா என்ற சுபாங்கி! பெரிய நாட்டியத் தாரகையாக்கி விடவேண்டும் என்ற ஆசை! திவாகருக்குத் திருமணம் செய்து வைத்து விட்டால் பணம் பணத்தோடு சேர்ந்து பெரிதாகிவிடும்!
 
சினேகிதிகள் தனியாகச் சந்திக்கிற தருணம் ஒன்று வருகிறது. சந்தியா தேவியின் சோகம் என்னவென்று கொஞ்சம் கொஞ்சமாக கதைக் களம் விரிகிறது. இந்துமதியின் பொறுப்பில் விட்டு விட்டுப் போன உண்மையான மகன் என்ன ஆனான்?  

அவனுக்காக அனுப்பிய பணத்தையெல்லாம், இந்துமதி தன்னுடைய சொந்த உபயோகத்திற்கே எடுத்துக் கொண்டாள் என்பது தெரிந்தும், சுபாங்கிக்காகக் கொடுத்ததாக வைத்துக் கொள் என்று சொன்னவள், இப்போது சுபாங்கியைத் திவாகருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்கிறாள். இந்துமதிக்கு, திவாகர் சந்தியா தேவியின் உண்மையான மகன் அல்ல என்பது தெரியும். தெரிந்துமே, சுபாங்கியைத் திவாகருடன் பழக விட்டு, அவன் தான் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் என்ற எண்ணத்தை மகள் மனத்தில் விதைத்தாயிற்று. இப்போது வேண்டாமென்றால்...?
 

வளர்ப்புமகனின் சாமர்த்தியமான வலையில் சிக்கிக் கொண்டு சந்தியா தேவி மறுகுகிறாள். சினேகிதியோ, சொல்வதைக் காத்து கொடுத்துக் கேட்க மாட்டேன் என்கிறாள். பிறந்த மகனோ, தாயின் முகத்தைப் பார்க்கக் கூட விருப்பமில்லாமல், ஒரு குக்கிராமத்தில் அப்பன் வழித் தாத்தா, அத்தை இவர்களே போதுமென்று, ரகசியமாகத் தாய் டிரைவர் வழியாகக் கொடுத்தனுப்பும் கடிதங்களை உதாசீனப் படுத்திக்கொண்டிருக்கிறான்.
 

திவாகர், சுபாங்கியை இந்துமதியின் பிடியில் இருந்து, தன்னுடைய முழுக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர சாமர்த்தியமாகக் காய் நகர்த்துகிறான். சுபாங்கி பெரிய நாட்டிய தாரகையாக வேண்டுமென்று திவாகர் மிகவும் அக்கறை இருப்பது போலக் காட்டிக் கொள்ள நாட்டிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறான். அப்படி அதிக டாம்பீகமாக நடத்தும் முதல் நிகழ்ச்சியிலேயே அரங்கத்தின் கொள்ளளவுக்கு மேலேயே டிக்கெட்டை விற்று விட்டு, காசுகொடுத்து டிக்கெட் வாங்கின ஜனங்கள் எல்லாம் வெளியே நிற்கும் நிலை, கோபாவேசமான கொந்தளிப்பை உருவாக்குகிறது. ஜனங்களின் கோபத்தில் இருந்து ராஜா என்ற இளைஞன் அவளைக் காப்பாற்றுகிறான். நாட்டியக் குழுவில் பதம் பாடும் பெண் ஜானகியின் கணவன் கோபாலனும் ராஜாவும் சிநேகிதர்கள். அவர்கள் வற்புறுத்தலின் பேரிலேயே ராஜா அந்த நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க வந்தான் என்பதை சுபா பிறகு தெரிந்து கொள்கிறாள்.
 

திவாகருடைய வலை விரிவாகிறது.சுபாங்கியும் அவளது குழுவும் வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடுகிறான். சந்தர்ப்பம் கிடைக்கும் தருணங்களில் எல்லாம், தனக்கும் சுபாங்கிக்கும் திருமணம் நடக்க இருப்பதைப் பத்திரிகையாளர்களிடம், சுபாங்கியையே சொல்ல வைக்கிறான். இந்துமதிக்கு, திவாகர் செய்வது எல்லாமே மகளை சாமர்த்தியமாகத் தன்னிடமிருந்து பிரிப்பது தான் என்பது ஒருவாறாகப் புரிய வருகிறது.
 
மகள் மீதிருந்த பிடிமானத்தை, திவாகர் இப்படி அதிரடியாகக் கைக் கொள்ள முயற்சிப்பது இந்துமதிக்குப் பிடிக்கவில்லை. போதாக் குறைக்கு ஒரு மொட்டைக் கடிதம் வேறு திவாகரைப் பற்றி என்னென்னமோ சொல்லி... ! திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று காரில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது எழும் வாக்கு வாதத்தில் மகளை எச்சரிக்கிறாள்.  

எப்போதுமே அம்மா பேச்சை மீறாத சுபாங்கி எரிச்சல் அடைகிறாள். நீயாகத் தானே இவனைத் தான் நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய், அவனுடன் சினிமாவுக்குப் போ அங்கே போ இங்கே போ என்றெல்லாம் சொல்லிவிட்டு இப்போது அவன் அயோக்கியன் திருமணம் வேண்டாம் நிறுத்திவிடுவேன் என்றால் என்ன அர்த்தம்? நீ சாவி கொடுக்கும்போதெல்லாம் ஆட வேண்டிய பொம்மையா நான் என்று தாயிடம் குமுறுகிறாள். பயணம் செய்து கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகிறது. தாய், தந்தை இருவரும் விபத்தில் உயிரிழக்க, சுபாங்கி மட்டும் கால் முறிந்து உயிர் தப்புகிறாள்.
 
தாய் தகப்பன் இருவரும் இறந்தபிறகுதான், இந்துமதி எவ்வளவு பெரிய கடனாளியாக இருந்திருக்கிறாள் என்பது சுபாங்கிக்குத் தெரிய வருகிறது. எனக்கு எந்த சம்பந்தமுமில்லை என்று சொல்லிவிடு, கடன்காரர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறான் திவாகர். என்ன இருந்தாலும் என் தாய் என் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவள், செய்ததெல்லாம் எனக்காகவே, அதனால் கடனை அடைக்க வேண்டியதும் நானே என்கிறாள் சுபாங்கி! நாட்டிய நிகழ்ச்சி நடத்தக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றவர்கள் கடனை அடைத்து விடுவேன் என்று மறுத்து விடுகிறாள்..கால் முறிந்த நிலையில், அவளால் இனிமேல் நாட்டியம் ஆடவே முடியாது என்பதை அறியாதவளாக!
 
சொத்துமில்லை, ஆடிச் சம்பாதித்துக் கொடுக்கக் கால்களும் இல்லை! இனிமேலும் சுபாங்கியைக் கட்டியழ திவாகருக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? அவளை உறவுக்காரர்களிடம் தள்ளி விட்டு, வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு வேறு ஒரு நாட்டியக் காரியை ஏற்பாடு செய்துகொண்டு போய்விடுகிறான். உறவினர் வீட்டில் சுபாங்கி உதாசீனப்படுத்தப் படுகிறாள். ஆனாலும், திவாகரின் சுயரூபத்தை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
 
ஜானகியின் மூலம் நடந்ததைத் தெரிந்துகொள்ளும் ராஜா, சுபாங்கியைத் தன்னுடைய கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறான். பாசமுள்ள மனிதர்களைக் கொண்ட அந்த கிராமத்தில், சுபாங்கிக்குப் புதியதோர் உலகத்தின் தரிசனம் கிடைக்கிறது. ராஜா அவளிடம் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், நெருங்கிப் போனாலோ மிதியுண்ட நாகம் போல அவளிடமிருந்து விலகிப் போவதும்!  

என்னவென்று சொல்ல முடியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அவன் வசம் ஈர்க்கப் படுவதைப் புரிந்துகொள்கிறாள். விட்ட குறை, தொட்ட குறை என்பது போலத் தான்! இந்த கிராமத்தில் உள்ள அத்தனை பேருக்கும் அவள் அம்மாவைப் பற்றி, அவளைப் பற்றித் தெரிந்திருக்கிறது! ஆனாலும் எவரும் எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்!
 
கிராமத்து வைத்தியம், அன்பான மனிதர்கள், ராஜா கொடுக்கும் தன்னம்பிக்கை எல்லாம் சேர்ந்து சுபாங்கியின் கால்களைக் குணப் படுத்துகிறது. அணியவே முடியாதோ என்று மறந்துபோன சலங்கைகளைக் கட்டிக் கொண்டு ஆடும் திறமும் திரும்புகிறது! கூடவே திவாகரும்!
 
அப்புறம் கதை எப்படி அதிரடித் திருப்பங்களோடு முடிகிறது என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்களேன்!
 
கதைக்குள் கதை என்று சொன்னேன் அல்லவா? இந்தக் கதைக்குள் இரண்டு காதல் கதைகள்! சந்தியா தேவி-தேவி பிரசாத் ஒருவர் சங்கீதத்திலும், மற்றொருத்தர் ஓவியம், சிற்ப வேலைகளிலும் கலைஞர்கள்! காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற போதிலுமே கூட, இருவருடைய குடும்பச் சூழ்நிலைகளும் வெவ்வேறாக, உணர்ச்சிவசப்பட வைத்து உறவையும் சுனாமி மாதிரிப் புரட்டிப் போட்டு விட, ஆண் தற்கொலை செய்து கொள்கிறான்.

ஆசையாய்ப் பிறந்த மகன் தாயிடம் ஓட்ட முடியாத சூழ்நிலை உருவாகிறது. தன்னிடம் செயலாளராக இருந்தவரையே மறுமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்குப் போய் சங்கீதத்தில் புகழ் பெற்றவளாகத் தாய் அங்கே! ஆசையாய்ப் பிறந்த மகன், சிநேகிதியின் பொறுப்பில்! சினேகிதியோ, பொறுப்பில்லாமல், தாய்க்காக ஏங்கித் தவிக்கும் பிள்ளையைப் புறக்கணிக்கிறாள். தந்தை வழிப் பாட்டன் பிள்ளையை எடுத்துச் செல்கிறார். அங்கே கிராமத்தில் வளரும் இளைஞன், திறமை சாலியாக இருக்கிறான். மிகவும் ரோஷக் காரனாகவும் இருக்கிறான். புறக்கணித்து விட்டுப் போன தாய், எவ்வளவோ மன்றாடியும், அவளைப் பார்க்க விருப்பமில்லை என்று நிராகரிக்கிறான்.
 
தோல்வியில் முடிந்த காதலில் பிறந்த பிள்ளை! அவனுக்கும் காதல் வருகிறது! ஆனால் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான். ஒரு சிறு குறிப்புத் தெரிந்தால் கூடப் போதும்! அந்தப் பெண் அவன் வாழ்க்கையில் பிரிக்க முடியாதவளாகி விடுவாள்!  

ஆனால் இரண்டு பேருடைய சுய கவுரவம், ரோஷம் குறுக்குச் சுவராக இருக்கிறது! குறுக்குச் சுவராக இருந்து கொண்டே இருவருடைய ஆத்மார்த்தமான காதலையும் வளர்த்தும் கொண்டிருக்கிறது.
காதலில் பெண் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது மிகவும் தாமதமாகத் தான் என்றாலுமே கூட, பெண் தான் காதலை வெளிப்படுத்துவதில் உறுதியுடனுமிருக்கிறாள்

இங்கே கதைக்குள் கதையாக, காதலுக்குள் காதலாக வெளிப்படும் வெளிப்படும் இரண்டு கதைகளில் முதலாவதில், பெண் தான் தேடியது என்ன, எது பிரதானம் என்பதில் தெளிவில்லாமல் இருந்ததால் தோல்வியும் சோகத்தையுமே சந்திக்கிறாள்.
 
இரண்டாவதிலோ, சுபாங்கி என்ற வெகுளிப் பெண்ணுக்கு முதலில் தன்னுடைய உலகம், தன்னுடைய தேவை எதுவென்று ஆரம்பத்தில் தெரிந்து கொள்ளாமல், அம்மா சொல்வது சரி என்று இருந்த நிலையில் இருந்து விடுபட்ட தருணத்தில், தன்னுடைய உலகத்தைக் கண்டு கொண்ட தருணத்திலேயே, அவளுடைய காதல் உறுதியாகிறது! அவளுடைய அந்த உறுதி தான், அவளுடைய காதலை ஜெயிக்க வைக்கிறது!

எண்டமூரி வீரேந்திர நாத்! அடுத்த வீடான தெலுங்கு தேசத்தின் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்! கதை சொல்வதில், கதைக்களம், கதாபாத்திரங்களை உருவாக்குவதில், ஒவ்வொரு அத்தியாயத்திலும் வித்தியாசமான திருப்பங்களை வைத்து, அந்தத் திருப்பங்களிலேயே அதிரடித் திருப்பமாக, நாம் எதிர்பார்க்காத திசையில் நகர்த்திச் செல்வதில் வல்லவர். அதிரடி,ஆக்ஷன் கதைகளில் மட்டுமில்லை, சாதாரணமான காதல் கதைகளில் கூட இந்தத் திறமை பளிச்சிடுவதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்!
நீங்களும் படித்துத் தான் பாருங்களேன்!
 
நாட்டிய தாரா 

எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழில்: சுசீலா கனக துர்கா
 

நர்மதா பதிப்பக வெளியீடாக
முதற்பதிப்பு வந்த வருடம் நவம்பர் 1994

Saturday, May 22, 2010

The Fever..! சுரம்! ஒரு விமரிசனப் பார்வை!

பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட என்னை அதிகமாக மிரட்டிய ஒரே எழுத்தாளர் ராபின் குக் தான்!

நீண்ட நாட்களுக்கு
முன்னால் நண்பர் டாக்டர் சுந்தரவடிவேல் இதைப் படியுங்கள் சார் என்று சிபாரிசு செய்து கொடுத்த புத்தகம், மருந்துக் கம்பனிகளின் தில்லுமுல்லு வேலைகளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியே கொடுத்த புத்தகம் தி ஃபீவர்!  (The Fever by Dr.Robin Cook)

ப்போது படிக்கிற மாதிரிக் கற்பனை செய்தாலே கூட சுரம் வந்து விடும்! அயன் ராண்ட் முதல், லியோன் யூரிஸ், போரிஸ் பாஸ்டர்நாக் இப்படி எத்தனையோ எழுத்தாளர்களை சகித்துக் கொள்ள முடிந்தவனை, படிக்கப் படிக்க வெறுப்பேற்றிய புத்தகம் அது

ழுதியவர் ஒரு மருத்துவர்! நிறைய தொழில்நுட்ப விவரங்களை, சாதாரணமாகப் படிக்க வருகிறவர்களுக்குக் கொஞ்சமும் புரியாத வகையில் அடுக்கிக் கொண்டே போனது தான் கோளாறு! தவிர, விவரங்களைச் சொல்லிவிட்டு நாசூக்காகத் தன்னுடைய தரப்பை எடுத்துச் சொல்வதற்குப் பதிலாக நேரடியாகவே ஒரு பிரச்சாரம் மாதிரி இருந்ததும் ஆரம்பநிலை வாசகருக்குப் புரிவதும், பிடிப்பதும் மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது.

பொதுவாகவே துறை சார்ந்த கதைகளை எழுதுவதில் ஆங்கில எழுத்தாளர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். மிகக் கடுமையான உழைப்பு, ஆராய்ச்சி, அடிப்படை விவரங்களைச் சேகரித்துக் கொண்டு, புறம் அதில் இருந்து ஒரு கதைக் களம், கதாபாத்திரங்கள் உருவாக்குவது என்பது மேற்கே கதை எழுத முனையும் அத்தனை எழுத்தாளர்களுக்குமே உரித்தான ஒரு பொதுவான பண்பாக இருக்கிறது.  

ர்தர் ஹெய்லி எழுதிய The Moneychangers புதினத்தைப் பற்றி இந்தப் பக்கங்களில் எழுதும்போது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வங்கிகள், இயங்கும் விதம், நடைமுறைகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அப்புறம் கதைக் களத்தை உருவாக்கிய விதத்தைச் சொல்லியிருக்கிறேன். புத்தகத்தைப் படிக்கும்போதே, ஒரு கதையைப் படிப்பதோடு, வங்கித் துறை சார்ந்த நிறைய விஷயங்களை தெரிந்துகொள்கிற மாதிரி இன்றைக்கும் பொருத்தமாக அந்தப் புதினம் இருப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் சொல்ல முடிகிறது!

முதலாவதாக, கதாசிரியர் வெறும் கதைதானே என்று அலட்சியமாக நம்மூர் பாலகுமாரன்கள் மாதிரி சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகாமல், எழுத  எடுத்துக் கொண்ட துறையைப் பற்றிய விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு, கதையோட்டத்தில் பொருத்தமான இடங்களில் அந்தத் தகவல்களை வாசகர்களும் தெரிந்து கொள்கிற மாதிரிக் கொடுத்திருந்தது!

ரண்டாவதாக, அவர் அந்தப் புதினத்தில் எடுத்துக் கொண்ட வங்கித் துறையின் பேராசை, நிர்வாகக் குளறுபடிகள், அதனால் பாதிப்புக்கு உள்ளாகும்  சாதாரண மக்கள் என்பது இன்றைக்கும் மாறாமல் அச்சு அசலாக அப்படியே திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருப்பது!

க, அறிவியல் அல்லது ஏதாவது ஒரு துறை சார்ந்த புதினத்தை எழுதும் கதாசிரியருக்கு வெறும் கற்பனை மட்டுமே இருந்தால் போதாது! அவருக்கு அந்தத் துறையை பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்! தெரிந்து கொண்ட அத்தனை விஷயத்தையும் கதையில் அப்படியே கோர்த்து விட முடியாது,  துறை சார்ந்த விஷயங்களை மைஒயமாக வைத்து ஒரு சுவாரசியமான கதைக் களத்தை எடுத்துக் கொண்டு, கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிற கதா பாத்திரங்களை உருவாக்கவேண்டும், உடலுக்கு ரத்த ஓட்டம் எவ்வளவு அவசியமோ, அதேமாதிரி, துறை சார்ந்த தகவல்களைக் கதையின் ஓட்டமாகவும் அவசியமாகக் கலந்து படைக்க வேண்டும். அதில் வெற்றி காணும் போது, துறைசார்ந்த ஒரு புதினம் வெற்றிகரமாக, வாசகர்களால் கொண்டாடப் படுகிற விதத்தில் உருவாகிறது.

வாசகருக்குப் புரிய வேண்டும் என்பதையே மறந்து விட்டு எழுதிய மாதிரியிருக்கும் இந்தப் புதினத்தில், இந்த அடிப்படைக் கோளாறை மறந்து விட்டு வாசித்தால், உண்மையிலேயே மிடவும் அருமையான புத்தகம் தான்! சொல்லப் பட்ட விதம், உபயோகிக்கப் பட்ட தொழில் நுட்பச் சொற்கள், ரசாயனப் பெயர்கள் அதிகமாக இருப்பது, இன்னும் கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது.

The Fever கதையின் நாயகன்,  சார்லஸ் மார்டெல் ஒரு மருத்துவர். லுகேமியா என்ற ரத்தப் புற்றுநோய்க்குத் தனது மனைவியை பறிகொடுத்தவர். அதை அடுத்து புற்றுநோய்க்கு மருந்து கண்டு  பிடிக்கும் ஆராய்ச்சியில்  தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.  மருத்துவருடைய மகளுக்கும்அதே மாதிரியான மிக அரிதான புற்று நோய் இருப்பதைக் கண்டறிகிறார். 

சாயனக் கழிவை சுத்திகரிக்கிறேன் என்ற பெயரில் அந்த சிறுமி விளையாடும் இடத்தின் அருகே இருந்த சிறு குட்டையில் பென்சைன் என்ற புற்றுநோயைத் தூண்டுகிற காரணியாக இருக்கும் நஞ்சை, ஒரு மருத்துவக் கழிவை சுத்திகரிக்கும் ரசாயனக் கம்பனி தொடர்ந்து கொட்டிக் கொண்டிருப்பது தான் காரணம் என்று தெரிய வருகிறது.

ன் மகளை மருத்துவமனையின் அனுமதியில்லாமல் வெளியே கொண்டு வந்து மாற்று மருத்துவ முறையில் சிகிச்சையைத் தொடருகிறார். மருந்து ஒன்றையுமே கூடக் கண்டுபிடித்து விடுகிறார்.வில்லனாக, ஒரு மருந்துக் கம்பனி வந்து குறுக்கிடுகிறது. மருத்துவர் என்ற தகுதியையும், மகளுடைய உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக முயற்சிகளைச் செய்வதில்  பேராசை பிடித்த அந்த மருந்துக் கம்பனியின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்கிறார்.  

பெரும்பகுதிக் கதையில்  சார்லஸ் மார்டெல் எதன் மீதோ, எவர் மீதோ கோபத்தைக் கக்கிக் கொண்டிருப்பவராகவே சித்தரிக்கப் படுவதும், நிறைய ரசாயனக் கூட்டுப் பெயர்கள், விளைவுகள் என்று அடிக்கடி குறிப்பிடப் படுவதால், அடிப்படை ரசாயனம் அறியாதவர்களுக்குக் கொஞ்சம் கூடப் புரியாத வகையிலும், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை, பக்கத்திலேயே ஒரு அகராதியை வைத்துக் கொண்டு பொருள் தெரிந்துகொண்டு படிக்க வேண்டியதாக இருந்ததும் , இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கையில் எடுத்த அந்த நாட்களில் மிகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும், சோர்வடையச் செய்வதாகவும் இருந்தது.

ராபின் குக் மருத்துவராக இருந்து கொண்டே தன்னுடைய துறையில் நடக்கும் கொஞ்சம் அதீதமான அக்கிரமங்களை அம்பலப் படுத்துகிற வகையில் பல புதினங்களை எழுதியிருக்கிறார்.

ந்தப் பக்கங்களில்  போலி மருந்து, கலப்படம் செய்யப்பட மருந்துகளை அரசு மருத்துவ மனைகளிலேயே வழங்கப்பட்டதை மத்தியப் புலனாய்வுத் துறை திடீர் சோதனை நடத்தியதில் கண்டுபிடித்த விவரத்தைப் பற்றிய  பதிவாக எழுதிய பிறகு, சேகரத்தில் இருந்த ராபின் குக் எழுதிய  The Fever  புதினத்தை தேடியெடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

யிர் காக்கும் மருந்துகள் என்று நம்பித்தான், மருத்துவர்கள், மருந்துக் கடைக் காரர்கள் சொல்வதை நம்பித்தான், என்னவென்றே தெரியாத ரசாயனக் கலவைகளை வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். கலப்படம் செய்யப் படாத சுயம்பிரகாசமாக இருக்கும் நிலையிலேயே, இந்த ரசாயனக் கலவைகள், ஒரு
வலியைக் குணப் படுத்தி வேறு பல திருகுவலியைக் கொண்டு வந்து சேர்ப்பதாகத் தான் இருக்கின்றன.

தாரணமாக, இதய நோய்க்குப் பரிந்துரை செய்யப் படும் மருந்துகளில் பெரும்பாலானவை, காலப் போக்கில் சிறுநீரகத்தைக் காலி செய்து விடுவதாகத் தான் இருக்கின்றன. மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்காகக் கொடுக்கப் படும் ஆஸ்பிரின், வயிற்றில் ஓட்டை போட்டு விடுவது  சர்வ சாதாரணமான பக்க விளைவு. 

ப்படி அலோபதி மருத்துவத்தில், ரசாயன மருந்துகளின் பக்க விளைவுகளைப் பற்றி எந்த மருந்துக் கம்பனியும், பரிந்துரை செய்யும் மருத்துவரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் எச்சரிக்கை, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை, தடுப்பு வழிகளைச் சொல்வதே பெரும் பாலான தருணங்களில் இல்லை. மாறாக  கொசு அடிக்க பீரங்கி மாதிரி, ஓவர் டோஸ் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதே நிறைய இடங்களில் நடக்கிறது.

ந்த லட்சணத்தில், இந்தத் திருநாட்டில், அரசின் அலட்சியத்தால், காலாவதியான மருந்துகளை மறுபடி தேதி பேக்கிங் மாற்றி மறுவிற்பனைக்கு அனுப்புவதும், மருந்துகளிலுமே கூடக் கலப்படமும், போலி லேபிள்களும் நிறையவே புழக்கத்தில் இருப்பதை ஏதோ அந்த நேரத்துத் தலைப்புச் செய்தியாக மட்டும் படித்துவிட்டுப் போய்விடாமல் எச்சரிக்கையாக இருக்கக் கற்றுக் கொள்ளப் போகிறோமா?

மைச் சனங்களாகவே இருந்துவிடுவது தான் சௌகரியமாக இருக்கிறது என்று  இலவச டீவீக்களில், காசு கொடுத்துக் கேபிள் கனெக்ஷன் வாங்கி, மானாட மங்கையர்கள் மார்பாடப் பார்ப்பதிலேயே பிறவிப் பயனை அடைந்து விட்ட திருப்தியில் இருந்துவிடப் போகிறோமா?

ன்ன செய்யப் போகிறோம்? ங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 

 

Saturday, May 8, 2010

மின்னுவதெல்லாம்...நட்சத்திரமாகிவிடுமா?

ப்போதெல்லாம்  இணையத்தில், தமிழ் வலைப் பதிவுகளில் சிறுகதை அல்லது சிறுகதை மாதிரியான முயற்சியை நிறையவே பார்க்க முடிவதில் சந்தோஷமாக இருக்கிறது.

வார, மாத இதழ்களில் தொடர்கதை, குறுநாவல் வருவது அனேகமாக நின்றே போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்! வாசகர்களுக்குப் பொறுமை இல்லையா, அல்லது தொடர்ந்து எழுதத் தெரிந்தவர்கள் இல்லையா என்பதை ஒரு பட்டி மண்டபமே நடத்தி விடையைத் தேடலாம்!

ந்த நாளில் பத்திரிகைகளில் தவறாமல் ஒரு விளம்பரத்தைப் பார்க்க முடியும்! 777 கணேஷ் ராமின் திடீர் சாம்பார் மிக்ஸ், திடீர் புளியோதரை மிக்ஸ்  இப்படி இன்ஸ்டன்ட் சமாச்சாரங்கள்! இப்போது டூ மினிட்ஸ் மாகி  நூடில்சுக்கெல்லாம் முன்னோடி! அந்த மாதிரி சிறுகதைகளும் கூடச் சிறுத்துக் கொண்டே வந்து ஒரு பக்கம், ஒண்ணேகால் பக்கம் என்று கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போன கதைதான்!

யிரத்துக்கும் மேலான பக்கங்களில் ஒரு கதையை எழுதி விட முடியும். ஆனால், ஒரு சிறுகதையாக அதே கருத்தைச் சொல்வது மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாலேயே பலநேரங்களில் முடியாமல் போகும் விஷயம்! 


உதாரணத்துக்கு, பாலகுமாரன் மாதிரி எழுத்தாளர்களால்  உடையார் மாதிரி ஆறு என்ன அறுபது பாகங்களாகக் கூடச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி எழுதி விட முடியும். அதே மையக் கருத்தை, ஒரு சிறுகதையாக அல்லது குறுங்கதையாகச் சொல்ல முடியுமா என்றால் ஞே என்று முழித்துக் கொண்டு நிற்பதைத் தவிர, வேறு ஒன்றுமே செய்ய முடியாது!

சிறுகதையின் பலமே, அது சொல்லவருவதைச் சுற்றி வளைக்காமல், நேரடியாகச் சொல்லி விடுவதுதான்! இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால், வீணையின் தந்தியை  மீட்டி முடித்த பின்னாலும், அதன் நாதம் கொஞ்ச நேரத்துக்கு அதிர்வலைகளாக சுற்றி வருவதைப் போல, ஒரு நல்ல சிறுகதையைப் படித்த தாக்கம், படித்து முடித்த வெகுகாலத்துக்குப் பின்னாலும் இருக்க முடியும்! 


அப்படி நினைவில் நின்ற ஒரு சிறுகதையை இந்தப் பக்கங்களிலேயே பார்த்திருக்கிறோம்!

சிறுகதைகளைப் பற்றிக் கொஞ்சம் எழுதவேண்டும் என்று நினைத்த போது, எப்போதோ படித்த கதைகள் பல நினைவுக்கு வந்தன.

ப்படி நினைவுக்கு வந்த கதைகளில் இரண்டைப் பற்றி சுருக்கமாக இங்கே!  கதையின் தலைப்போ, கதாசிரியரின் பெயரோ நினைவில் இல்லையென்றாலும்  கதை மட்டும் நினைவுக்கு வருகிறது.கதையின் மையக்கருத்து, நினைவில் இருப்பதை அப்படியே தருகிறேன்.


** நட்சத்திரம் **

வள், புகழ் பெற்ற சினிமா நட்சத்திரம். அவன், அவளையே கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று பிடிவாதமாக இருந்த அவளுடைய பரம ரசிகன்!
அவனுடைய பிடிவாதம், காதல் ஜெயித்து, திருமணமாகி அவர்களுக்கு அது முதல் இரவு!

ன்னுடைய கனவுக் கன்னியாக இருந்தவள், இன்று மனைவியாய்...! ஒரு படத்தில், இதே மாதிரி முதலிரவுக் காட்சியில் எவ்வளவு அழகாக, நளினமாகக் கதாநாயகனைப் பார்ப்பாள்! அதே மாதிரி இன்று என்னையும்..! இன்னொரு படத்தில், ஒரு பாடல் காட்சியில் அவள் நடந்து வரும் ஒய்யாரம்..! இப்படிக் கனவுகளோடு, எதிர் பார்ப்புக்களோடு, அவளை முதலிரவில் சந்திக்கிறான்.

வளோ, சினிமாத்தனம் இல்லாத இயல்போடு வருகிறாள். சினிமாவில் பல திருமணக் காட்சிகளில் நடித்திருந்தாலும், நிஜமாகவே திருமணம் என்பது புதிய அனுபவம் தானே! கணவன் ஆசையோடு, அவள் நடித்த திரைப்படக் காட்சிகளைச் சொல்லி, அப்படி நீ என்னைப் பார்க்கவேண்டும், பேச வேண்டும் என்கிற மாதிரித் தன்னுடைய விருப்பத்தைச் சொல்லும் போது தடுமாறுகிறாள்.

தெல்லாம் வசனம் பேசச் சொல்லி, எப்படி நடிக்கவேண்டும் என்று நடித்துக் காட்டிய இயக்குனர்கள் உதவியால் தான், அது இல்லாமல் இப்போது எப்படி என்று உண்மையைச் சொல்கிறாள்.

னதில் கற்பனை செய்து வைத்திருந்த நட்சத்திரம் உதிர்வதைப் பார்த்தமாதிரி சோகத்தில் அவன் ஆழ்கிறான் என்ற மாதிரியாகக் கதை முடிகிறது.

ந்தக் கதையை படித்தது குமுதத்திலா, ஆனந்தவிகடனிலா என்பது இன்னமும் நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது. குமுதம் அந்த நாட்களில், கொஞ்சம் கிருத்திருவம் பிடித்த மாதிரிக் கதைகளை நிறைய வெளியிட்டுக் கொண்டிருந்த நேரம். 


அவற்றில் யதார்த்தத்துக்கும், கனவுக்கும் உள்ள இடைவெளியைச் சொல்லும் அழகான கதைக் களத்துடன்  இப்படி ஒன்றிரண்டு கதைகளும் வந்திருக்க வாய்ப்பு உண்டு.மின்னுவதெல்லாம்.....!

து நிச்சயமாக ஆனந்த விகடனில் படித்தது தான்!

ரு ஏழை ஆசிரியர்! கையில் நாலணா தான் இருக்கிறது.
பசியும் இருக்கிறது. எதிரே ஒரு மேனாமினுக்கி ஹோட்டல்! விதவிதமான விளக்குகள், வித்தியாசமான மெனுக்களை விளம்பரப் படுத்தும் மெனு போர்டுகள். உள்ளே அவ்வளவு கூட்டம்!

ருநாளாவது இந்த மாதிரிப் பிரபலமான ஹோட்டலில் சாப்பிட்டுப் பார்க்கவேண்டுமென்று ஆசிரியருக்கு நீண்ட நாட்களாகவே ஒரு ஆசை! உள்ளே நுழைந்துவிட்டார். சர்வர் வந்து, ஆசிரியருடைய அழுக்குப் படிந்த கோலத்தைப் பார்த்து விட்டு  அலட்சியமாக  என்ன வேண்டுமென்று விசாரிக்கிறான். அவருக்கோ, எது என்ன விலை என்று தெரியாமல் என்ன சாப்பிட ஆர்டர் கொடுப்பது?

யங்கித் தயங்கி, இட்டிலி என்ன விலை என்று கேட்கிறார்! ஒரு இட்டிலி இரண்டணா என்று அலட்சியமாகப் பதில் வருகிறது.பஸ்சுக்கு இரண்டணா வேண்டும், அதனால்  ஒரே ஒரு இட்டிலி என்று ஆர்டர் கொடுக்கிறார்! சர்வர் ஒரே ஒரு இட்டிலிக்குத் தான் இந்தப்பாடா என்கிற மாதிரிக் கேவலமாகப் பார்த்துவிட்டு, தட்டில் ஒரே ஒரு இட்டிலியைக் கொண்டு வைத்துவிட்டுப் போய்விடுகிறான்.


சாப்பிட்டு விட்டுக் கையைக் கழுவிவிட்டுக் கல்லாவில் காசைக் கொடுக்கும்போதும் அதே மாதிரி ஏளனப் பார்வை, கேள்வி!

சைக்கு உள்ளே நுழைந்து எதையோ சாப்பிட்டோம் என்று பெயர்பண்ணிவிட்டு வந்தாயிற்று! வயிறு கேட்கிறதா? பசி, பசி என்று பொருமுகிறது. எதிரே ஒரு பிளாட்பாரக் கடை,அங்கே ஒரு வயதான பெண்மணி இட்டிலி சுட்டு விற்றுக் கொண்டிருக்கிறாள். இட்டிலி அரையணா தான்! அங்கே போய் நான்கு இட்டிலியை சாப்பிடலாம், வீட்டுக்கு நடந்தே போய்க் கொள்ளலாம் என்று அங்கே போகிறார்,

சூடாக இட்டிலியை அவித்து அந்தப் பெண்மணி தட்டில் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாள். மேனாமினுக்கி ஹோட்டலில் இருந்து ஒருவன் யாரோ கஸ்டமர் இட்டிலிக்கு ஆர்டர் கொடுத்தாராம், அங்கே தீர்ந்து போய்விட்டதாம்! அத்தனை இட்டிலியையும் மொத்தக் கொள்முதல் செய்து எடுத்துக் கொண்டு போய்விடுகிறான்! எல்லாம் தீர்ந்துபோய்விட்டதே என்று அந்தப் பெண்மணி, பசியுடன் நிற்கும் ஆசிரியரைப் பார்த்துப் பரிதாபப் படுகிறாள்.

வீண் பகட்டுக்கு அலைந்தோமே என்று ஆசிரியர் தன்னைத் தானே நொந்து கொண்டு பசியோடும், வலியோடும் நடக்கிறார்.

சிறுகதைகளில் கட்டாயம் ஒரு மெசேஜ் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதான்! ஊருக்கு உபதேசம் செய்வதுகூட கதாசிரியனுடைய வேலை இல்லைதான்! ஆனால், தான் வாழுகிற சமூகத்தில், அவன் பார்க்கிற அத்தனை விஷயங்களுமே அவனைப் பாதிக்கிறது.கதையாகவும் பரிணமிக்கிறது.

வாழ்க்கையின் யதார்த்தத்தை விட்டு விலகாமல் இருப்பது, ஒரு நல்ல கதைக்கு முதல் அடிப்படை!

கூடு மாறுதல் என்ற தலைப்பில் விதூஷ் என்கிற வித்யா தன்னுடைய பதிவில் எழுதியிருந்த கதையைப் படித்தபோது, சிறுகதைகளைப் பற்றிய சிந்தனையும், இந்தக் கதைகளைப் பற்றிய நினைவும் சேர்ந்தே வந்தது இங்கே ஒரு பதிவாக!Friday, May 7, 2010

முன்னேற வேண்டுமா அல்லது இலவசங்களே போதுமா? "நான் அப்படியே சாப்பிடுவேன்" "ஐ யாம் எ காம்ப்ளான் பாய்"

இந்த மாதிரிக் குழந்தைகளை மையமாக வைத்து விளம்பரப்படங்கள் நிறைய வளர்ந்திருக்கின்றன.குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப் பட்டவை என்றாலும், டார்கெட் ஆடியன்ஸ் நாம் எல்லோருமே தான். அதுவும் தவிர மார்க்கெட்டிங் துறையில், ஒரு குறிப்பிடத் தகுந்த ஆராய்ச்சி முடிவு, குழந்தைகள் எதை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் முக்கியமான பங்காற்றுவதாகத் தெரிவிக்கிறது. இந்த வலிமையான செக்மெண்டை கவர்வதற்காகவே இன்றைய விளம்பரங்களில் மிகப் பெரும்பாலானவை, வெற்றி பெற்றவைகளாகவுமே இருப்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
நம்முடைய முடிவுகளை, தீர்மானங்களை, எண்ணங்களை, வேறு யாரோ தான் எப்போதுமே தீர்மானிக்கிறார்கள்!  
கொஞ்சம் நாசூக்காகச் சொல்வதானால், influences, influences all the way! இவைகள் இல்லாமல் நம்மால் சுதந்திரமாக முடிவெடுக்கவே முடியாதா? அப்படி என்ன முடிவை நாம் சமீபத்தில் எடுத்திருக்கிறோம் என்று நமக்குள்ளேயே கேட்டுக் கொண்டு விடை தேடினோமேயானால், எப்போதுமே நாம் நமது முடிவுகளை அடுத்தவரைச் சார்ந்தே எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வரும்.

இந்த அடிப்படை உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க முனைந்து விட்டீர்கள் என்றால், முதலில் ஒரு சபாஷ்!

இந்தப் பதிவு உங்களுக்காகத் தான்! அடுத்தது என்ன என்பதைக் கொஞ்சம் பேசுவதற்காகத் தான்!சரி! அப்படி எடுக்கப் படும் முடிவுகள் எல்லாமே, சிறந்தவை தானா? அல்லது, 'ஏதோ பத்துக்கு ஒண்ணு பழுதாகாம இருந்தாலே போதும்' ரகம் தானா?

இந்தக் கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், முதலில்,

யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?

அல்லது, இதையே வேறு விதமாகச் சொல்வதானால்,

யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?


இந்த இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டு பிடிப்பதில் கூட அவ்வளவு சிரமம் இல்லை! அதில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொண்டு, செயல்பட ஆரம்பித்து விட்டீர்களேயானால், உங்களை வெல்ல யாருமே இல்லை!

யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
சந்தையில் பொருட்களை வாங்குவதில், பெரியவர்களை விட குழந்தைகள் எடுக்கும் முடிவே அதிகமாக இருக்கிறது என்பதை சர்வே எடுத்துத் தெரிந்து கொண்ட விளம்பர நிறுவனங்கள், தங்களுடைய பொருட்களை, குழந்தைகளை, இளம் வயதினரை மையமாகக் குறிவைத்தே விளம்பரம் செய்யப் பழகிக் கொண்டு விட்டன. இதை, உங்களுடைய வீட்டில், பல தருணங்களில், சொந்த அனுபவமாகவுமே பார்த்திருக்கலாம்!

இப்படியே, இந்தக் கேள்வியை இன்னமும் விரிவுபடுத்திப் பாருங்கள்! நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், யாராலேயோ தீர்மானிக்கப் படுகிறது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் அதை உணர்வதே இல்லை, ஆனாலும் பழக்கப் பட்டுப் போய்விட்டது! கொஞ்சம் வேடிக்கையாக இல்லை?

ஆனால் அது தான் உண்மை! பிறர் சொல்வதை கேட்க வேண்டாம் என்பதற்காக இல்லைஎதையும் சுயமாக ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறோம் பாருங்கள், அதைச் சொல்வதற்காகத் தான் இது
 
மந்தைத்  தனம் என்பது இது தான்! ஆறாவது அறிவு, பகுத்தறிவு என்பதெல்லாம் பெயருக்குத் தான்! அதனால் தான் வறுமையே வெளியேறு! சிங்காரச் சென்னை மாதிரி வெற்று வார்த்தைகளிலேயே பெரும்பாலான ஜனங்களை நீண்ட காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்க இங்குள்ள அரசியல் வாதிகளால் முடிகிறது.

ஆறாவது அறிவு, பகுத்து அறிவது என்பதெல்லாம், கொஞ்சம் சுயசிந்தனை, சுய முயற்சியோடு, எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கி, கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றறியேன் என்ற அளவோடு நின்று விடாமல், விடைகளையும் தேட முயற்சிப்பவர்களுக்கு மட்டும்தான்!


அடுத்து, யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?  

இந்த கேள்வியோடு சேர்த்துப் பார்க்கும் போது தான் நம்முடைய உழைப்பு, முயற்சிகள் எந்த அளவுக்கு கடலில் கரைத்த பெருங்காயம் போல வீணாகிக்  கொண்டிருக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியும். மறுபடியும், புள்ளிராசா வங்கியையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்! அங்கே எல்லோரையும் திருப்திப் படுத்தக் கடுமையாக செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.  

எல்லோரையும் திருப்திப்படுத்த முயன்று தோற்று, எல்லோருடைய எரிச்சல், வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது மட்டுமே அங்கே நடந்தது. வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று எவரையுமே திருப்திப் படுத்த முடியாமல், ஒரு தலைமை நிர்வாகி புலம்பினாரே, "எல்லாமே இங்கே கம்மி தான்! ஆனாலும் வாங்க யாருமே வர மாட்டேன் என்கிறார்களே" அந்தக் கதைதான்!

எல்லோருக்கும் எல்லாமும்! சோஷலிசம்! கேட்பதற்கும், பேசுவதற்கும் மிகவுமே நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் நடைமுறையில்....?  

கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் நெய் ஒழுகுமாம்! இது அனுபவத்தில் கண்டு சொன்னவர்கள் சொலவடை! கேள்வி கேட்காமல், ஆராய்ந்து பார்க்காமல், எவரோ எதற்காகவோ சொன்னதை அப்படியே நம்பிவிடுவதும் அப்படித்தான்!


ப்ரீத்திக்கு நான் காரண்டீ என்று அழகாகச் சிரித்துக் கொண்டு ஒரு பெண் சொல்வதை கேள்வி கேட்காமல் பார்ப்பவர் ஏற்றுக் கொண்டு விட வேண்டும் என்கிற மாதிரித் தான் இங்கே எல்லாமும் இருக்கும்.  
விளம்பரம் என்ற அளவில் சரிதான்! விளம்பரத்தை நம்பி வாங்குகிறவர் அளவில் ....?
சொல்லப் பட்ட மாதிரியே இருந்துதானாக வேண்டும் என்பதில்லையே!
சொல்லோ, பொருளோ,அரசியலோ, பதிவுகளில் படிக்கும் விஷயங்களோ எதுவானாலும் சோதித்துப் பாருங்கள்!
யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
இந்தக் கேள்விகளோடு, இன்னொரு கேள்வியையும் சேர்த்துக் கேட்டுக் கொள்ளுங்கள்!
இவையெல்லாம் உண்மை தானா? நம்புகிறமாதிரிச் சொல்லப்படுபவை எல்லாமே நம்பத் தகுதியானவைதானா?
ஏன், எப்படி, எதற்கு, எதனால், எதற்காக இப்படிக் கேள்வி மேல் கேள்வி கேட்காதவர்களுக்கு வாழ்க்கை இல்லை! வாழ்க்கையில் வெற்றியும் இல்லை!

உங்களுக்குக் கிடைக்கிற யோசனைகள் கூட சமயங்களில்
யாரோ ஏதோ உள்நோக்கத்தோடு எதற்காகவோ போடுகிற 'இலவசங்கள்' தான்! இங்கே சிருஷ்டியில் எதுவுமே இலவசம் இல்லை! இலவசமாக வருவதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்! 

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா அல்லது இந்த இலவசங்களே போதுமா? 

உங்களுக்கு என்ன வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அல்லது என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?


 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)