Tuesday, May 25, 2010

நாட்டிய தாரா! ஒரு காதல் கதைக்குள் இன்னொரு காதல் கதை!


பொதுவாகக் கலைஞர்களே எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் தான்! உணர்ச்சி வசப்படும்போது விளிம்பு நிலைக்கே போய் விடக் கூடியவர்கள் தான்!
 
வெவ்வேறு கலைகளில் ஆர்வமுள்ள இருவர் காதலில் ஒன்று சேர்கிறார்கள். ஆனால் உணர்ச்சிகள் அவர்களை வெகு தூரத்துக்கு விலக்கி வைக்கின்றன. சந்தியா தேவி! சங்கீதத்தில் புகழ் பெற்றவள்! ஆனாலும் சொந்த வாழ்வில் இழக்கக் கூடாத ஒன்றை இழந்து விட்ட சோகத்தின் தனிமையுடன் வெளி நாட்டில் இருந்து இந்தியாவுக்குத் திரும்புகிறாள். கூடவே அவளது வளர்ப்பு மகனும்!  

வெளியே யாருக்கும் திவாகர் அவளது வளர்ப்பு மகன் தான் என்பது தெரியாது. தான் இறப்பதற்குள் இருக்கிற ஒன்றையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு! அது அவளுடைய மகன்! வெளிநாடு செல்லும்போது, இடைஞ்சலாக இருக்கக் கூடாதென்று சிநேகிதியின் பொறுப்பில் விட்டு விட்டுப் போன மகன்!
 
திவாகருக்கோ, சந்தியா தேவி தன் தாய்க்குச் செய்த துரோகத்திற்கு, அவளை அனலில் வாட்டி எடுக்க வேண்டும் என்ற வெறி! தன்னுடைய தகப்பனைக் கைக்குள் போட்டுக் கொண்டு, இரண்டாவது திருமணமும் செய்து கொண்ட இந்தப் பெண்மணியால் தான் தன்னுடைய தாய் மனம் முறிந்து இறந்துபோனாள் என்கிற வெறி. அதே நேரம், அவளுடைய சொத்துக்களை என்னவோ செய்து, கைக்கெட்டாத தூரத்தில் வைத்திருக்கிறாள், அதையும் கைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்கிற எண்ணம்! சந்தியா தேவி எவ்வளவோ தன்மையாகச் சொல்லிப் பார்த்தும் விரியன் பாம்பாக விஷத்தை மட்டுமே கக்குகிற ஜாதி!
 
இந்துமதி, சந்தியா தேவியின் சிநேகிதி! சந்தியா தேவியின் மகனுக்கு இந்துமதியின் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக எப்போதோ முடிவு செய்திருந்தார்கள்! இந்துமதி, பெரும் செலவாளி! போதாக்குறைக்கு அரசியலிலும் ஈடுபட்டுப் பெரிய தலைவியாகி விடவேண்டுமென்ற கனவும் உண்டு. ஒரே மகள் சுபா என்ற சுபாங்கி! பெரிய நாட்டியத் தாரகையாக்கி விடவேண்டும் என்ற ஆசை! திவாகருக்குத் திருமணம் செய்து வைத்து விட்டால் பணம் பணத்தோடு சேர்ந்து பெரிதாகிவிடும்!
 
சினேகிதிகள் தனியாகச் சந்திக்கிற தருணம் ஒன்று வருகிறது. சந்தியா தேவியின் சோகம் என்னவென்று கொஞ்சம் கொஞ்சமாக கதைக் களம் விரிகிறது. இந்துமதியின் பொறுப்பில் விட்டு விட்டுப் போன உண்மையான மகன் என்ன ஆனான்?  

அவனுக்காக அனுப்பிய பணத்தையெல்லாம், இந்துமதி தன்னுடைய சொந்த உபயோகத்திற்கே எடுத்துக் கொண்டாள் என்பது தெரிந்தும், சுபாங்கிக்காகக் கொடுத்ததாக வைத்துக் கொள் என்று சொன்னவள், இப்போது சுபாங்கியைத் திவாகருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்கிறாள். இந்துமதிக்கு, திவாகர் சந்தியா தேவியின் உண்மையான மகன் அல்ல என்பது தெரியும். தெரிந்துமே, சுபாங்கியைத் திவாகருடன் பழக விட்டு, அவன் தான் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் என்ற எண்ணத்தை மகள் மனத்தில் விதைத்தாயிற்று. இப்போது வேண்டாமென்றால்...?
 

வளர்ப்புமகனின் சாமர்த்தியமான வலையில் சிக்கிக் கொண்டு சந்தியா தேவி மறுகுகிறாள். சினேகிதியோ, சொல்வதைக் காத்து கொடுத்துக் கேட்க மாட்டேன் என்கிறாள். பிறந்த மகனோ, தாயின் முகத்தைப் பார்க்கக் கூட விருப்பமில்லாமல், ஒரு குக்கிராமத்தில் அப்பன் வழித் தாத்தா, அத்தை இவர்களே போதுமென்று, ரகசியமாகத் தாய் டிரைவர் வழியாகக் கொடுத்தனுப்பும் கடிதங்களை உதாசீனப் படுத்திக்கொண்டிருக்கிறான்.
 

திவாகர், சுபாங்கியை இந்துமதியின் பிடியில் இருந்து, தன்னுடைய முழுக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர சாமர்த்தியமாகக் காய் நகர்த்துகிறான். சுபாங்கி பெரிய நாட்டிய தாரகையாக வேண்டுமென்று திவாகர் மிகவும் அக்கறை இருப்பது போலக் காட்டிக் கொள்ள நாட்டிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறான். அப்படி அதிக டாம்பீகமாக நடத்தும் முதல் நிகழ்ச்சியிலேயே அரங்கத்தின் கொள்ளளவுக்கு மேலேயே டிக்கெட்டை விற்று விட்டு, காசுகொடுத்து டிக்கெட் வாங்கின ஜனங்கள் எல்லாம் வெளியே நிற்கும் நிலை, கோபாவேசமான கொந்தளிப்பை உருவாக்குகிறது. ஜனங்களின் கோபத்தில் இருந்து ராஜா என்ற இளைஞன் அவளைக் காப்பாற்றுகிறான். நாட்டியக் குழுவில் பதம் பாடும் பெண் ஜானகியின் கணவன் கோபாலனும் ராஜாவும் சிநேகிதர்கள். அவர்கள் வற்புறுத்தலின் பேரிலேயே ராஜா அந்த நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க வந்தான் என்பதை சுபா பிறகு தெரிந்து கொள்கிறாள்.
 

திவாகருடைய வலை விரிவாகிறது.சுபாங்கியும் அவளது குழுவும் வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடுகிறான். சந்தர்ப்பம் கிடைக்கும் தருணங்களில் எல்லாம், தனக்கும் சுபாங்கிக்கும் திருமணம் நடக்க இருப்பதைப் பத்திரிகையாளர்களிடம், சுபாங்கியையே சொல்ல வைக்கிறான். இந்துமதிக்கு, திவாகர் செய்வது எல்லாமே மகளை சாமர்த்தியமாகத் தன்னிடமிருந்து பிரிப்பது தான் என்பது ஒருவாறாகப் புரிய வருகிறது.
 
மகள் மீதிருந்த பிடிமானத்தை, திவாகர் இப்படி அதிரடியாகக் கைக் கொள்ள முயற்சிப்பது இந்துமதிக்குப் பிடிக்கவில்லை. போதாக் குறைக்கு ஒரு மொட்டைக் கடிதம் வேறு திவாகரைப் பற்றி என்னென்னமோ சொல்லி... ! திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று காரில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது எழும் வாக்கு வாதத்தில் மகளை எச்சரிக்கிறாள்.  

எப்போதுமே அம்மா பேச்சை மீறாத சுபாங்கி எரிச்சல் அடைகிறாள். நீயாகத் தானே இவனைத் தான் நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய், அவனுடன் சினிமாவுக்குப் போ அங்கே போ இங்கே போ என்றெல்லாம் சொல்லிவிட்டு இப்போது அவன் அயோக்கியன் திருமணம் வேண்டாம் நிறுத்திவிடுவேன் என்றால் என்ன அர்த்தம்? நீ சாவி கொடுக்கும்போதெல்லாம் ஆட வேண்டிய பொம்மையா நான் என்று தாயிடம் குமுறுகிறாள். பயணம் செய்து கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகிறது. தாய், தந்தை இருவரும் விபத்தில் உயிரிழக்க, சுபாங்கி மட்டும் கால் முறிந்து உயிர் தப்புகிறாள்.
 
தாய் தகப்பன் இருவரும் இறந்தபிறகுதான், இந்துமதி எவ்வளவு பெரிய கடனாளியாக இருந்திருக்கிறாள் என்பது சுபாங்கிக்குத் தெரிய வருகிறது. எனக்கு எந்த சம்பந்தமுமில்லை என்று சொல்லிவிடு, கடன்காரர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறான் திவாகர். என்ன இருந்தாலும் என் தாய் என் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவள், செய்ததெல்லாம் எனக்காகவே, அதனால் கடனை அடைக்க வேண்டியதும் நானே என்கிறாள் சுபாங்கி! நாட்டிய நிகழ்ச்சி நடத்தக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றவர்கள் கடனை அடைத்து விடுவேன் என்று மறுத்து விடுகிறாள்..கால் முறிந்த நிலையில், அவளால் இனிமேல் நாட்டியம் ஆடவே முடியாது என்பதை அறியாதவளாக!
 
சொத்துமில்லை, ஆடிச் சம்பாதித்துக் கொடுக்கக் கால்களும் இல்லை! இனிமேலும் சுபாங்கியைக் கட்டியழ திவாகருக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? அவளை உறவுக்காரர்களிடம் தள்ளி விட்டு, வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு வேறு ஒரு நாட்டியக் காரியை ஏற்பாடு செய்துகொண்டு போய்விடுகிறான். உறவினர் வீட்டில் சுபாங்கி உதாசீனப்படுத்தப் படுகிறாள். ஆனாலும், திவாகரின் சுயரூபத்தை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
 
ஜானகியின் மூலம் நடந்ததைத் தெரிந்துகொள்ளும் ராஜா, சுபாங்கியைத் தன்னுடைய கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறான். பாசமுள்ள மனிதர்களைக் கொண்ட அந்த கிராமத்தில், சுபாங்கிக்குப் புதியதோர் உலகத்தின் தரிசனம் கிடைக்கிறது. ராஜா அவளிடம் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், நெருங்கிப் போனாலோ மிதியுண்ட நாகம் போல அவளிடமிருந்து விலகிப் போவதும்!  

என்னவென்று சொல்ல முடியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அவன் வசம் ஈர்க்கப் படுவதைப் புரிந்துகொள்கிறாள். விட்ட குறை, தொட்ட குறை என்பது போலத் தான்! இந்த கிராமத்தில் உள்ள அத்தனை பேருக்கும் அவள் அம்மாவைப் பற்றி, அவளைப் பற்றித் தெரிந்திருக்கிறது! ஆனாலும் எவரும் எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்!
 
கிராமத்து வைத்தியம், அன்பான மனிதர்கள், ராஜா கொடுக்கும் தன்னம்பிக்கை எல்லாம் சேர்ந்து சுபாங்கியின் கால்களைக் குணப் படுத்துகிறது. அணியவே முடியாதோ என்று மறந்துபோன சலங்கைகளைக் கட்டிக் கொண்டு ஆடும் திறமும் திரும்புகிறது! கூடவே திவாகரும்!
 
அப்புறம் கதை எப்படி அதிரடித் திருப்பங்களோடு முடிகிறது என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்களேன்!
 
கதைக்குள் கதை என்று சொன்னேன் அல்லவா? இந்தக் கதைக்குள் இரண்டு காதல் கதைகள்! சந்தியா தேவி-தேவி பிரசாத் ஒருவர் சங்கீதத்திலும், மற்றொருத்தர் ஓவியம், சிற்ப வேலைகளிலும் கலைஞர்கள்! காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற போதிலுமே கூட, இருவருடைய குடும்பச் சூழ்நிலைகளும் வெவ்வேறாக, உணர்ச்சிவசப்பட வைத்து உறவையும் சுனாமி மாதிரிப் புரட்டிப் போட்டு விட, ஆண் தற்கொலை செய்து கொள்கிறான்.

ஆசையாய்ப் பிறந்த மகன் தாயிடம் ஓட்ட முடியாத சூழ்நிலை உருவாகிறது. தன்னிடம் செயலாளராக இருந்தவரையே மறுமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்குப் போய் சங்கீதத்தில் புகழ் பெற்றவளாகத் தாய் அங்கே! ஆசையாய்ப் பிறந்த மகன், சிநேகிதியின் பொறுப்பில்! சினேகிதியோ, பொறுப்பில்லாமல், தாய்க்காக ஏங்கித் தவிக்கும் பிள்ளையைப் புறக்கணிக்கிறாள். தந்தை வழிப் பாட்டன் பிள்ளையை எடுத்துச் செல்கிறார். அங்கே கிராமத்தில் வளரும் இளைஞன், திறமை சாலியாக இருக்கிறான். மிகவும் ரோஷக் காரனாகவும் இருக்கிறான். புறக்கணித்து விட்டுப் போன தாய், எவ்வளவோ மன்றாடியும், அவளைப் பார்க்க விருப்பமில்லை என்று நிராகரிக்கிறான்.
 
தோல்வியில் முடிந்த காதலில் பிறந்த பிள்ளை! அவனுக்கும் காதல் வருகிறது! ஆனால் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான். ஒரு சிறு குறிப்புத் தெரிந்தால் கூடப் போதும்! அந்தப் பெண் அவன் வாழ்க்கையில் பிரிக்க முடியாதவளாகி விடுவாள்!  

ஆனால் இரண்டு பேருடைய சுய கவுரவம், ரோஷம் குறுக்குச் சுவராக இருக்கிறது! குறுக்குச் சுவராக இருந்து கொண்டே இருவருடைய ஆத்மார்த்தமான காதலையும் வளர்த்தும் கொண்டிருக்கிறது.
காதலில் பெண் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது மிகவும் தாமதமாகத் தான் என்றாலுமே கூட, பெண் தான் காதலை வெளிப்படுத்துவதில் உறுதியுடனுமிருக்கிறாள்

இங்கே கதைக்குள் கதையாக, காதலுக்குள் காதலாக வெளிப்படும் வெளிப்படும் இரண்டு கதைகளில் முதலாவதில், பெண் தான் தேடியது என்ன, எது பிரதானம் என்பதில் தெளிவில்லாமல் இருந்ததால் தோல்வியும் சோகத்தையுமே சந்திக்கிறாள்.
 
இரண்டாவதிலோ, சுபாங்கி என்ற வெகுளிப் பெண்ணுக்கு முதலில் தன்னுடைய உலகம், தன்னுடைய தேவை எதுவென்று ஆரம்பத்தில் தெரிந்து கொள்ளாமல், அம்மா சொல்வது சரி என்று இருந்த நிலையில் இருந்து விடுபட்ட தருணத்தில், தன்னுடைய உலகத்தைக் கண்டு கொண்ட தருணத்திலேயே, அவளுடைய காதல் உறுதியாகிறது! அவளுடைய அந்த உறுதி தான், அவளுடைய காதலை ஜெயிக்க வைக்கிறது!

எண்டமூரி வீரேந்திர நாத்! அடுத்த வீடான தெலுங்கு தேசத்தின் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்! கதை சொல்வதில், கதைக்களம், கதாபாத்திரங்களை உருவாக்குவதில், ஒவ்வொரு அத்தியாயத்திலும் வித்தியாசமான திருப்பங்களை வைத்து, அந்தத் திருப்பங்களிலேயே அதிரடித் திருப்பமாக, நாம் எதிர்பார்க்காத திசையில் நகர்த்திச் செல்வதில் வல்லவர். அதிரடி,ஆக்ஷன் கதைகளில் மட்டுமில்லை, சாதாரணமான காதல் கதைகளில் கூட இந்தத் திறமை பளிச்சிடுவதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்!
நீங்களும் படித்துத் தான் பாருங்களேன்!
 
நாட்டிய தாரா 

எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழில்: சுசீலா கனக துர்கா
 

நர்மதா பதிப்பக வெளியீடாக
முதற்பதிப்பு வந்த வருடம் நவம்பர் 1994

5 comments:

 1. எண்டமூரியின் ஆக்கங்களைக் குங்குமம் வார இதழில் வாசித்த அனுபவம் உள்ளது. அவர் எழுதிய பணம் என்ற நாவல் மிகவும் பிடிக்கும்.

  ReplyDelete
 2. எங்கோ கேள்விப்பட்ட பெயர் என்று வந்து பார்த்த போது தான் ஞாபகம் வருகிறது. இவரது புத்தகங்கள் வாசித்து இருக்கிறேன். ஆனால் எதுவும் ஞாபகத்தில் இல்லை.

  ReplyDelete
 3. ஆழமான படைப்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நினைவுகளில் அமிழ்ந்து ​கொண்டிருக்கிற படைப்பாளியையும் படைப்பையும் மீட்டெடுக்கும் சீரிய முயற்சி உங்கள் இடுகை.
  நன்றியும் வாழ்த்துக்களும் கிருஷ்ணா சார்!

  ReplyDelete
 4. இந்த நாவலை தெலுங்கில் எழுதியவர் பிரபல நாவல் ஆசிரியை, திருமதி யத்தனபூடி சுலோசனாராணி. தெலுங்கு நாவலின் பெயர், KEERTHI KIREETAALU,ஆந்திர மானிடத்தின் சாகித்ய அவார்ட் பெற்ற நாவல்.

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பதிவை எழுதி ஐந்தரை வருடங்களுக்கு மேலாகிறது இப்போ-தாவது சரியான் தகவலைத் தெரிந்து கொள்ள முடிந்ததே! தங்களுடைய திருத்தத்துக்கு கிகவும் நன்றி

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

தென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று!

பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி,  கட்டாந்...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அனுபவம் (146) அரசியல் (140) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (66) புத்தகங்கள் (32) எண்ணங்கள் (30) மனித வளம் (30) செய்திகள் (21) சிறுகதை (18) எது எழுத்து (13) Change Management (11) புத்தக விமரிசனம் (11) விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) தேர்தல் சீர்திருத்தங்கள் (9) தொடரும் விவாதம் (9) ரங்கராஜ் பாண்டே (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (7) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) செய்திகளின் அரசியல் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) திராவிட மாயை (5) தேர்தல் முடிவுகள் (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) காமெடி டைம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சமூக நீதி (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) புத்தகம் (4) புனைவு (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அக்கம் பக்கம் என்ன சேதி (3) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) பதிவர் வட்டம் (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) காஷ்மீர் பிரச்சினை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சம நீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) படித்ததில் பிடித்தது (2) பானாசீனா (2) பிரியங்கா வாத்ரா (2) பேராசையின் எல்லை எது (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)