Showing posts with label ஆங்கிலப் புதினங்கள். Show all posts
Showing posts with label ஆங்கிலப் புதினங்கள். Show all posts

Saturday, October 23, 2010

ஏழு நிமிடங்கள்! இர்விங் வாலஸ்....!

ஏன் படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம்  என்ற கேள்வியை முந்தைய பதிவொன்றில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஏன், எதற்காக என்பதை விட, எப்படிப் படிக்கிறோம், என்ன படிக்கிறோம், என்ன புரிந்து கொள்கிறோம் என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும் என்ற முத்தாய்ப்போடு அந்தப் பதிவு முடிந்திருந்தது இல்லையா?

இந்தப் பக்கங்களில், பேசப்படும் புத்தகங்கள், கதைகள் வெறும் வாசிப்பு என்ற பொழுது போக்கு அம்சமாக வைத்து மட்டும் பேச முற்பட்டதில்லை. இலக்கியம், திறனாய்வு, விமரிசனம் என்ற ரீதியில் கூட இந்தப் பக்கங்களில் எழுதியதில்லை. வாசித்த ஒவ்வொரு படைப்பும் என்னுள் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியது, சிந்தனையை எந்தெந்த திசைகளில் விரிவுபடுத்திக் கொண்டு போனது என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்.

அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புத்தகத்தைத் தொடர்ந்து மறுபடியும் வாசிப்பதற்காகத் தேடிப் பிடித்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று இர்விங் வாலசின் The Seven Minutes! 


இந்தப் புத்தகத்தின் கதையோட்டம் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஒன்றை அடிப்படையாகக் கொண்ட கோர்ட் ரூம் டிராமா வகை தான் என்றாலும் மறுவாசிப்பு செய்த பிறகு ஆர் டாகுமென்ட் புதினத்தைப் போலவே இந்த நூலும், சில அடிப்படையான கேள்விகளை எழுப்பியதைத் தொடர்ந்து சிந்திக்க முடிந்தது.


ஆர் டாகுமென்ட் புதினத்தைப் பேசும் போது, இந்தியாவில் இந்திராகாந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை, அப்படி ஒரு நிலை அமெரிக்காவிலும்  வந்தால் என்ற ரீதியில் கற்பனை செய்து எழுதப்பட்ட கதை என்பதைப் பார்த்திருக்கிறோம். இங்கே 42 வது அரசியல் சாசனத் திருத்தம் அங்கே அமெரிக்காவில் 35 வது அமெண்ட்மென்ட் என்று கதைக் களத்தை, அமெரிக்க அரசியல் சூழலோடு நகர்த்திக் கொண்டு போனதை ஏற்கெனெவே இங்கே பார்த்திருக்கிறோம்.



இங்கே இந்தியாவில் 1975 களில் இந்திரா காந்தி தனக்கு வந்த சொந்த அரசியல் நெருக்கடியை, ஏதோ தேசத்துக்கே  வந்து விட்ட மாதிரி, அவசர நிலைப் பிரகடனம் செய்த கதை இதைப் படிக்கும் வாசகர்களில் பெரும்பாலானோருக்கு எங்கேயோ  கேள்விப் பட்ட மாதிரித் தான் தோன்றும். பச்சையாகச் சொல்லப் போனால், நெருக்கடி நிலை, அதன் கொடூரமான தன்மை, அதை உறுதியோடு எதிர்த்து ஜெய பிரகாஷ் நாராயணன் மாதிரி காந்தீயவாதிகள் நடத்திய போராட்டம் பற்றி இங்கே எவருக்குமே முழுதாய்த் தெரியாது. இரண்டாவது சுதந்திரப் போர் என்று சொல்லப் படுவதற்கு முழுத் தகுதியும் உள்ள  அந்த நாட்களில் நடந்த போராட்டங்களைப் பற்றி பேசுவாரைக் காணோம். அதை நினைத்துப் பார்த்து, மறுபடியும் அதே மாதிரி சூழ்நிலை உருவாகுமேயானால், அதை எதிர்கொள்ளத் தயார் செய்து கொள்ளும் பக்குவமும், முதிர்ச்சியும் இந்திய ஜன நாயகத்தில் இன்னமும் ஏற்படக் காணோம்!  


மிட்டாய் கொடுத்துக் குழந்தைகள் கழுத்தில், காதில் இருப்பதைத் திருடும் திருடர்களைப் போல, இலவசங்கள், சலுகைகள் என்று கவர்ச்சி மிட்டாய்களைக் கொடுத்து மொத்தத்தையுமே சுருட்டிக் கொண்டு போகிறவர்களாக இங்கே உள்ள அரசியல் வாதிகள், அதைக் கண்டும் காணாமல் ஏமாந்து நிற்கிறவர்களாக ஜனங்கள் என்று இங்கே ஜனநாயகக் கூத்து நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் கூட, அந்த இருபது மாத இருண்ட காலத்தின் நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகள், மூடி மறைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றன. அதைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தோ, அதைப் பற்றிய கருத்துக்களைத் தைரியமாக முன்வைத்தோ புத்தகங்களைத் தேடினால், ஏமாந்து தான் போவீர்கள்! 


அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் இந்திரா ஏதோ சாட்டையை சுழற்றி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைப் பொறுப்போடு செயல் படுத்த வைத்த மாதிரியும் ஒரு வித மாயை ஏற்படுத்தப்பட்டது. கரீபி ஹடோ (வறுமையே வெளியேறு) என்று  கோஷம் எழுப்பிப் போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஓட்டியதும், வறுமை பயந்து வெளியேறிவிட்ட மாதிரி ஒரு தோற்றம் உருவாக்கப் பட்டது. தேசத்துக்கு வந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு, அரசியல் சாசனம் உறுதிப் படுத்திய அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப் பட்டது, கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டது. 

கோயபல்சை மிஞ்சும் வகையில் காங்கிரஸ்காரர்கள் இன்று வரை பரப்பி வரும் பொய்களில் ஒன்று,ஒரு சாம்பிளுக்காக, காங்கிரஸ் ஒன்றினால் தான் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்பது!

நெருக்கடி நிலை பற்றி  இன்னொரு சுவாரசியமான, அதிகம் வெளியில் தெரியாத தகவலும் உண்டு. இந்திரா காந்தி தன்னுடைய சொந்த அரசியல் ஆதாயத்துக்காகக் கொண்டு வந்த நெருக்கடி நிலை நிறையப்பேர் நினைப்பது போல முதலாவது அல்ல! இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலை, இருபது மாதங்களே நீடித்தது! காந்தியவாதியும், வினோபா பாவேயின் சீடருமான ஜெயப் பிரகாஷ் நாராயணன், நெருக்கடி கால சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டத்தைத் தலைமை
ஏற்று நடத்தினார்.

அதற்கும் முன்னால், இந்திய சீனப் போரின் போது 1962 ஆம் ஆண்டிலும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்டது. 1968 ஆம் ஆண்டு ரத்து செய்யப்படும் வரை, ஏறத்தாழ ஐந்தரை ஆண்டு காலம் அமலில் இருந்த இந்த நெருக்கடி நிலையின் பாதிப்பு, சாதாரண ஜனங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சீனாவிடம் அசிங்கமாகத் தோற்ற நேருவின் கோழைத் தனம், வெறும் ஜம்பத்துக்கு மட்டுமே இருந்த ராஜ தந்திரம், போரில் ஏற்பட்ட பின்னடைவுகள், அவமானங்களைப் பற்றிய செய்திகள் மட்டுமே வெளியிடத் தடை இருந்தது. பத்திரிகைகளை முடக்கவில்லை, அடிப்படை உரிமைகள் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் சமயம் ரத்து செய்யப் பட்டிருந்தாலும் கூட, அப்படி ரத்து செய்யப் பட்டதற்கான  எந்த அறிகுறியுமே இல்லாமல் சேதம் இல்லாமல் இருந்த ஐந்தரை ஆண்டுகள்! 

அன்றைக்கு, கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்து, அதில் ஒரு தரப்பு இன்னொரு தரப்பை சீன ஆதரவாளர்களாக முத்திரை குத்தி, அல்லது ஆள் காட்டியதில் சில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள் என்பதைத் தவிர வேறு கைதுகள், கோரங்கள் எதுவுமே இல்லை. 

ஐந்தரை வருடங்கள், நாட்டில் நெருக்கடி நிலை என்று ஒன்று இருந்ததோ, அது எதற்காக இருந்தது என்பதோ ஜனங்களுக்கு தெரியவே இல்லை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், 1962 இல் பிரகடனப்படுத்தப் பட்ட நெருக்கடி நிலைமை, நேரு ஒரு கோழை என்பதை வெளிப்படையாக ஜனங்கள் தெரிந்துகொள்ள முடியாமல், நேருவின் so called புனித பிம்பத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக மட்டுமே இருந்தது. அதிகாரிகளின் கூழைத் தன்மையை எடுத்துச் சொல்வதாக மட்டுமே இருந்தது. முழுக்க முழுக்க சர்வாதிகாரமாக மாறி விடவில்லை.  

ஆனால் இரண்டாவது தரம் பிரகடனப் படுத்தப்பட்ட நெருக்கடி நிலையோ பூனைக்குப் பிறந்த மகள், இந்திரா காந்தி தன்னைப் பாயும் புலியாகக் காட்டிக் கொள்ள நடத்திய வெறியாட்டமாகத் தான். அமலில் இருந்த அந்த இருபது மாதங்கள் இருந்தது. ஆர் டாகுமென்ட் புதினத்தை மறுவாசிப்பு செய்தது,  இதை மறுபடி நினைத்துப் பார்க்க ஒரு கருவியாக இருந்தது.

ஆர் டாகுமென்ட் புத்தகத்தோடு, இன்னும் சில நூல்களுக்கும் ஆர்டர் கொடுத்திருந்ததில், இர்விங் வாலஸ் எழுதிய The Seven Minutes புதினமும் ஒன்று!



காமம், போர்னோ என்றாலே முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு, அதே நேரம் திருட்டுத் தனமாகப் படிக்கும் இயல்பு இங்கே நிறையப் பேருக்கு இருக்கிறது. அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்று காமம், காமக் கதைகள் என்று கூகிளிட்டுப் பார்த்தாலே அந்த இயல்பு புரிந்துவிடும். புத்தகங்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் கூட அம்மா மகன் உறவுக் கதைகள் என்று குறியீட்டுச் சொல்லை வைத்துப் பதிவுகளைத் தேடுகிற "தேடல்களை" நிறையவே பார்த்திருக்கிறேன். 

ஏழு நிமிடங்கள் என்ற இந்தப் புதினம் கூட, அப்படி போர்னோ என்றழைக்கப்படும் ஒரு கதைப் புத்தகம், அதை விற்பனை செய்த ஒரு கடைக்காரர், அதைப் பதிப்பித்த வெளியீட்டாளர், அவருடைய நண்பரான வழக்கறிஞர், அரசியலில் குதிக்க விரும்பும் ஒரு அரசு வழக்கறிஞர், என்று வரிசையாகப் பாத்திரங்களை அறிமுகம் செய்து கொண்டே ஒரு கைது, ஒரு கற்பழிப்பு, ஒரு மரணம், அதைத் தொடரும் வழக்கில், இந்த ஆபாசப் புத்தகம் முக்கிய குற்றவாளியாக ஆக்கப்படும் விந்தையை, ஒரு கோர்ட் ரூம் ட்ராமாவாக எழுதப் பட்டது தான் இர்விங் வாலஸ் எழுதிய ஏழு நிமிடங்கள்!  

1971 இல் இதைத் திரைப்படமாக்கிய இயக்குனர், கதையின் மைய நீரோட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததாலோ என்னவோ, வெறும் சொதப்பலாகிப் போனது தனிக் கதை!


கதை என்று பார்க்கப் போனால், வழக்கமான இர்விங் வாலஸ் பாணியிலான ஒன்று தான்! ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டு, பாத்திரங்களை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டே, கதையை நகர்த்திச் செல்லும் கோர்ட் ரூம் டிராமா தான்!
இப்போது படிக்கும் போது கூட இந்த கோர்ட் ரூம் டிராமா நன்றாகத் தான் இருக்கிறது!

கதை சொல்கிற போதே, ஆசிரியர் சில கேள்விகளை கதா பாத்திரங்களின் வழியாக எழுப்புகிறார், வாசகர்களை யோசிக்க வைக்கிறார் என்ற வகையில் வித்தியாசப்பட்டு நிற்பதாக சில படைப்புக்கள் இருக்குமல்லவா! அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புதினத்தைத் தொடர்ந்து, இந்த நூலில் எடுத்துக் கொண்ட விஷயம், கருத்து சுதந்திரம்,  இலக்கியங்கள், அதில் ஆபாசம் என்று சமூகத்தால் ஒரு கால கட்டத்தில் நிராகரிக்கப் பட்டு, அப்புறம் ஏற்றுக் கொள்ளப் பட்டவை, எது ஆபாசம், அதை எப்படி, எவர் நிர்ணயிப்பது போன்ற சில கேள்விகள் இந்தப் புத்தகத்தின் மையக் கருவாக இருக்கிறது.

மைகேல் பாரெட், ஒரு திறமையான வழக்கறிஞர். வசதி படைத்த தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தருணம். அந்தத் தொழிலதிபரின் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள முடிவும் செய்து, வழக்கறிஞர் ப்ராக்டிசை நிறுத்திக் கொள்ள உத்தேசித்திருக்கும் தருணத்தில் புத்தகப் பதிப்புத் துறையில் இருக்கும் பழைய நண்பரிடம் இருந்து அவருடைய உதவியைக் கேட்டுத் தொலை பேசியில் அழைப்பு வருகிறது.

நண்பர் வெளியிட்ட  ஏழு நிமிடங்கள் என்ற புத்தகத்தை விற்பனை செய்த கடைக்காரரைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பெண்கள் உரிமை பற்றிக் குரல் எழுப்பும் அமைப்பு ஒன்றின் தலைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் புத்தகம் ஆபாசமானது, விற்றது குற்றம் என்ற ரீதியில் கைது நடந்திருக்கிறது.

நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், அந்த வழக்கை மைகேல் பாரெட் எடுத்துக் கொள்கிறார். டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் (நம்மூர் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவி மாதிரி) பேசி,  குற்றத்தை ஒப்புக் கொள்வதாக ஒரு சமரசம் பேசி, புத்தகக் கடைக்காரரை வெளியில் கொண்டு வந்து விடுவது என்ற யோசனையை முடிவெடுக்கிறார். எல்மோ டங்கன் என்ற டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியும் பாரெட்டின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பரிசீலிப்பதாக உறுதி அளிக்கிறார். ஆனால், அடுத்தடுத்து நிகழும் சில சம்பவங்கள் ஒரு சாதாரணமான கைது விவகாரத்தை வேறு வேறு திசையில் வெகு வேகமாக இழுத்துக் கொண்டு போகின்றன.

இன்னொரு தொழிலதிபர், எல்மோ டங்கனை, அரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்கிறார். எல்மோ டங்கனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு, ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி, வெற்றி வேட்பாளராக அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு இளம்பெண் கற்பழிக்கப் பட்ட நிலையில், மரணமடைகிறாள். அவளைக் கற்பழித்த இளைஞன் காரில், ஏழு நிமிடங்கள் என்ற கதைப் புத்தகம் கிடைக்கிறது. அந்த இளைஞனை அப்படிக் கொடூரமான செயலுக்குத் தூண்டியதே, ஆபாசமான அந்தப் புத்தகம் தான் என்று வழக்கு திசை திரும்புகிறது.

டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் பேசி, புத்தகம் விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டு, மிக லேசான அபராதத்தோடு விடுதலை செய்து விடலாம் என்ற நிலை மாறி, புத்தகம், புத்தகத்தை விற்பனை செய்தவர்  இருவருமே கற்பழிப்பு, கொலைக் குற்றத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. பாரெட்டின் காதலி, அவளுடைய தகப்பனார் இருவரும், பாரெட் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டு, அவர்களுடைய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடென்ட் பொறுப்பை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வழக்கறிஞராகக் கடமையா காதலா என்ற கேள்வியோடு, உத்தரவாதமான வருமானம்,செல்வாக்குடன் கூடிய வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா இல்லை சுதந்திரமாக தொழில் செய்ய முடிவெடுப்பதா என்ற கேள்வியும் எழுகிறது. பாரெட்டின் நண்பர், ஏழு நிமிடங்கள் என்ற அந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தைப் பதிப்பித்தவர், தன்னுடைய இக்கட்டான நிலையை எடுத்து சொல்லி, பாரெட்டைத் தவிர வேறு எவருமே, அந்த வழக்கை எடுத்து நடத்துவதில் தனக்கு நம்பிக்கை இல்லை, தனக்காக இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்.

ஆபாசம், சர்ச்சைக்குரியது, ஒரு இளம்பெண் கொடூரமாகக் கற்பழிக்கப் படத் தூண்டுகோலாக இருந்த அளவுக்கு குற்றம் உள்ளது என்று சொல்லப் படும் "ஏழு நிமிடங்கள்" என்ற அந்தப் புத்தகத்தை மைகேல் பாரெட் படித்துப் பார்க்கிறார். ஒரு இளம் பெண், தான் உடலுறவு கொண்ட  தருணங்களில் உச்சத்தை அடையும் அந்த ஏழு நிமிடங்களைப் பற்றித் தனக்குத் தோன்றும் எண்ணங்களைப் பதிவு செய்கிற விதத்தில் எழுதப் பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில், மற்றவர்கள் குதிப்பது போல ஆபாசமானதோ, குற்றத்தைத் தூண்டுவதாகவோ எதுவுமில்லை என்று அபிப்பிராயப் படும் பாரெட், தன்னுடைய காதலி, காத்திருக்கும் செல்வாக்கான உத்தியோகம் இரண்டையும் துறந்து, அந்தப் புத்தகத்துக்காக, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, வழக்கை எடுத்து நடத்துவது என்று முடிவு செய்கிறார்.

எல்மோ டங்கனை  அரசியலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும் தொழிலதிபரின் செல்வாக்கினால், அரசுத் தரப்புக்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. வாடிகனில் இருந்து திருச்சபையின் ஆதரவையும் தெரிவித்து ஒரு பாதிரியார், சாட்சியமளிக்கவும் முன்வருகிறார்.

இப்படி நீதி மன்ற விசாரணை, தன்னுடைய தரப்புக்கு ஆதரவாக சாட்சியங்களை மைகேல் பாரெட் தேடியலைவது என்று மாறிமாறிக் கதை நகர்கிறது. இதற்குமேல் கதையைப் பற்றி எழுதுவது, மொத்தக் கதையையும் இங்கேயே சொல்லி விடுவது போலாகி விடும் என்பதால் இந்த மட்டோடு நிறுத்திக் கொள்வோம்.

கதையின் முடிவில் தெரிய வரும் ஒரு சஸ்பென்ஸ் முடிச்சு மிக சுவாரசியமாகஇருக்கிறது.

1969 இல் வெளியான இந்தப் புதினத்தை இன்றைக்குப் படிக்கும் போது கொஞ்சம் மெதுவாக நகர்கிற மாதிரி இருக்கிறது என்பதைத் தவிர, இர்விங் வாலசின் கதை சொல்லும் பாணியில் இருக்கும் வழக்கமான சுவாரசியம் இதிலும் இருக்கிறது! கதை சொல்லும் போதே, சில அடிப்படைக் கேள்விகளைப் படிப்பவர்கள் மனதில் விதைத்துக் கொண்டே போகும் இர்விங் வாலசின் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.

இந்தப் புத்தகத்தை, இப்போது மறுவாசிப்பு செய்த பிறகு எனக்குள் எழுந்த சிந்தனை, இந்தக் கதையைப் பற்றியது மட்டுமே அல்ல! ஆபாச எழுத்து, கிளர்ந்தெழச் செய்யும் எழுத்து, கலகத்தை விதைக்கும் எழுத்து என்றெல்லாம் குற்றம் சொல்கிறோமே, அதை எல்லாம்  எதை வைத்து வரையறை செய்வது? கருத்து சுதந்திரம்
என்றெல்லாம் சொல்கிறோமே அது எது வரை? அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறோமே அதற்கு அர்த்தம் என்ன? ஏதோ ஒரு சட்டப் புத்தகத்தில் அல்லது அரசியல் சாசனத்தில் எழுதி வைத்து விடுவதாலேயே நமக்கு அளிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமாகி விடுமா, அல்லது நாம் தான் அவைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?

ஆர் டாகுமென்ட் புதினத்தைப் படித்து முடித்த
கையோடு  இதைப் படித்ததால் மட்டுமே இந்தப் புத்தகம் எனக்குள் இப்படிப்பட்ட யோசனைகளைக் கிளப்பியதா அல்லது தன்னளவிலேயே இந்தப் புத்தகம் இந்தக் கேள்விகளை எனக்குள் எழுப்பியதா?

The Seven Minutes!

இந்தப் புத்தகம், பெங்களூரு வாசன்  பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக, இந்தியப்பதிப்பிலேயே தற்சமயம் கிடைக்கிறது.



 

Friday, August 20, 2010

தி ஆர் டாகுமென்ட்.....! இர்விங் வாலஸ்!

 
இர்விங் வாலஸ் எழுதிய "மனிதன்" என்ற புதினத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுக விமரிசனத்தைப் பார்த்திருக்கிறோம்!

சுதந்திர தினச் சிந்தனைகளாக இன்னொரு வலைப் பக்கங்களில் எழுதிக் கொண்டிருந்ததில், தேடும்போது இர்விங் வாலஸ் எழுதிய தி ஆர் டாகுமென்ட் (The R Document) என்ற புதினத்தைப் பற்றிய இந்த TIF (பட வடிவில்) அந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒரு கட்டுரையின் ஒரு பக்கம் காணக் கிடைத்தது.

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்

இர்விங் வாலஸ் எழுதிய, தி ஆர் டாகுமென்ட்! 1976 ஏப்ரலில் முதல் முறையாகப் புத்தகவடிவில் வெளியானது. 

இந்தப்  புத்தகத்தை 1977 இல் மைக்கேல் ஹெண்டெர்சன் என்பவர் படித்துவிட்டு, தன்னுடைய கருத்தை இப்படிச் சொல்கிறார். அவர் எழுதிய இந்தப் பகுதியின் முதல் பக்கம்(மேலே பட வடிவில் காண்பது), இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப் பட்டு, இருபது மாதங்கள் இந்திய ஜனநாயகம் கழுத்து நெறிக்கப்பட்டுக் கிடந்த அந்த இருண்ட தருணங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. 

ஹெண்டெர்சன் சொல்கிறார்:

"1975-1977 இந்திய நெருக்கடி நிலைப் பிரகடனத்தைப் பற்றி விரிவாகப் படித்து முடித்துவிட்டு, வீடு திரும்புகிற நேரத்தில் படிப்பதற்காக சுவாரசியமான புத்தகத்தைத் தேடிய போது, இர்விங் வாலஸ் எழுதிய தி ஆர் டாகுமென்ட் புதினத்தைப் பார்க்க நேர்ந்தது. அதன் அட்டையில் அதிர்ச்சியூட்டக் கூடிய யதார்த்த நிலை என்று போட்டிருந்ததைப் பார்த்தேன்.

இருபது மாதங்கள் இந்தியாவில் அமலில் இருந்த சர்வாதிகாரத் தன்மையை  அதிரச் செய்யும் அளவிற்கு இந்த நாவல் எதிரொலித்தது என்பது உண்மை. இந்தக் கதையை, 1977 இல் படித்ததற்குப் பதிலாக, 1974 இல் படித்திருந்தால், மிக சுவாரசியமான கற்பனை, ஆனால் எப்போதுமே நடக்க முடியாதது என்று தான் நினைத்திருப்பேன். 

இந்தியாவின் அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 42 வது திருத்தம் மாதிரி, அமெரிக்காவிலும் நடக்கிற மாதிரி ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டது, அங்கே எழுத்தாளரின் வெறும் கற்பனை என்று மட்டும் ஒதுக்கி விட்டுப் போக முடியவில்லை.

நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப் பட்டபோது நாடாளு மன்றம்,ஆட்சியாளர்களின் மனமறிந்து ஒத்து ஊதுகிற ஒரு இடமாக மட்டுமே ஆகிப் போனது,  பத்திரிகைகளின் வாய்கள் கட்டப்பட்டன, நீதித்துறை செயலிழந்து நின்றது........



இப்படிப் போகிறது ஹென்டர்சனின் வர்ணனை!

இந்திய அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 42 வது திருத்தம், திருத்தம் செய்யப்பட்ட அந்த சில வரிகளில் வாக்கியங்களில், அடிப்படை உரிமைகளைப் பறித்தது. அலங்காரக் கோஷங்கள் சேர்க்கப் பட்டன.  இறையாண்மையுள்ள ஜனநாயகக் குடியரசு என்பது வார்த்தைகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, இறையாண்மையுள்ள, சோஷலிச, மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக ஆகிப் போனது! 

வார்த்தைகளில் மட்டும் தான்என்பதைச் சொல்லித் தான் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன!?

அதிகமான விவரங்கள் வேண்டுமானால் இந்த லின்கில்
கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம்!

எமெர்ஜென்சி அமலில் இருந்த தருணங்களில் வெளியான இந்தப் புத்தகம் இந்தியாவில் தடை செய்யப் பட்டிருந்ததாக ஒரு தகவல் உண்டு. இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் தீய அம்சங்களை தோலுரித்துக் காட்டிய புத்தகம் என்றெல்லாம் சொல்லப் பட்ட இந்தப் புத்தகத்தை, 1985 வாக்கில் தான் படிக்க முடிந்தது. தற்சமயம் பெங்களுர், வாசன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் ரூ.90/- இற்குக் கிடைக்கிறது.

The R Document! 

நீதிமுறையில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ள ஒரு கதாபாத்திரத்தோடு கதை ஆரம்பிக்கிறது! நீதிமுறையைப் பாதுகாக்க முனைகிற அவருடைய உயிருக்கே உலை வைப்பதாகவும்  கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.

கிறிஸ்டோபர் காலின்ஸ்!

அமெரிக்காவின் புதிய அட்டர்னி ஜெனரலாகப்  பதவியேற்கிறார்.  அந்தத் தருணத்தில், அமெரிக்காவில் பெருகி வரும் வன்முறை, குற்றங்களைக் களைவதற்காக, அமெரிக்க அதிபர் அமெரிக்க அரசியல் சாசனத்தில் ஒரு திருத்தம் கொண்டு வர உத்தேசித்திருக்கிறார். 35 வது திருத்தம் என்று அந்த  முயற்சி  அழைக்கப் படுகிறது. தேச நெருக்கடி காலங்களில், உரிமைகள் குறித்த அரசியல் சாசன  உத்தரவாதத்தை அடியோடு ரத்து செய்ய இந்தத் திருத்தம் வகை செய்வதாக இருக்கிறது. எப்போதும் போல ஆதரிக்கிறவர்கள், எதிர்க்கிறவர்கள் என்று இரண்டு தரப்புமே, இந்த உத்தேசத் திருத்தத்தின் மீது சவுண்டு கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

அட்டர்னி ஜெனரலான  காலின்சுக்கோ இந்த உத்தேசத் திருத்தம், அவசியமில்லை என்று பட்டாலும், அதை அடியோடு எதிர்க்கிறவர்கள் கூச்சலிடுகிற மாதிரி,  அதிகார துஷ்ப்ரயோகம் செய்யப் படாது, இருக்காது  என்றே நம்புகிறார். உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

காலின்சுக்கு முன்பு அட்டர்னி ஜெனரலாக இருந்தவர், தன்னுடைய மரணப் படுக்கையில், அவரை அழைத்து, இரகசியமானதும் அபாயமானதுமான ஆர் டாகுமென்ட் என்ற ஒன்றைப் பற்றி எச்சரிக்கை
செய்ய விரும்புகிறார். காலின்சை அழைத்துவரச் சொல்லித் தகவல் அனுப்பி, இவர் அங்கே போய்ச் சேர்வதற்குள்  அவர் மரணமடைந்து விடுகிறார். கடைசித் தருணங்களில் ஒரு பாதிரியாரிடம், பாவ அறிக்கையைச் சொல்கிற தருணத்தில், இந்த விஷயத்தையும் சேர்த்தே சொல்கிறார். ஆனால் அந்தப் பாதிரியார், அது ரகசியமானது என்று காலின்சிடம் மேற்கொண்டு எந்த விவரமும் தர மறுத்து விடுகிறார். அது என்னவாக இருக்கும் என்ற கேள்வி, கிறிஸ்டோபர் காலின்சைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.  இந்த எச்சரிக்கையை காலின்ஸ் தொடர்ந்து ஆராய்கிறார்.  

The R Document!  

அது என்ன ஆர் டாகுமென்ட்? அதற்கும், உத்தேசித்திருக்கும் முப்பத்தைந்தாவது திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?

அமெரிக்க அதிபர் வாட்ஸ் ஒர்த்துக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது! சட்ட அமைச்சகத்துக்கும் எதுவும் தெரியாது! ஆனால், சிலந்தி லாவகமாக வலையைப் பின்னுவது போல, இந்த ஆர் டாகுமெண்டை மையமாக வைத்து என்னென்னமோ நடந்து கொண்டே இருக்கின்றன!

ஒவ்வொரு மாநிலமாக, இந்த சட்டத் திருத்தத்தை அங்கீகரித்து நிறைவேற்றிக் கொண்டிருக்கையில், காலின்ஸ் இந்தத் திருத்தத்தின் தலைமைச் செயலகமாக, மாக்கியவல்லி தனது இளவரசன் என்ற படைப்பில் சொல்கிற மாதிரி, நேர்மைத்திறமில்லாமல்  வஞ்சகமும், சூதும், மோசம் செய்கிற இயல்பும், கொண்டு தனது ஆட்சி அதிகாரத்தை கட்டமைக்கிற விதமாக எப் பி ஐ டைரக்டர் வெர்னான் டி. டினன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். முழுக்க முழுக்க ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்ற டினன் முயற்சிப்பதை அறிகிறார்.தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சாக்காக இந்த சட்டத் திருத்தத்தை ஒவ்வொரு மாநிலமும் நிறைவேற்றித் தர, டினன் கொலை செய்கிறார், ப்ளாக்மெயில் செய்கிறார், தன்னுடைய  முழு சாமர்த்தியத்தையும் பிரயோகிக்கிறார்.

எப்படி இந்தக் கதை முடிச்சை கதாசிரியர் அவிழ்க்கிறார் என்பதைப் புத்தகத்தை வாசித்து அனுபவிப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
முன்னூற்று அறுபது பக்கங்களுக்குள்ளாகவே, மிகவும் விறுவிறுப்பாக கதை நகர்கிறது! அதிகாரம் ஒரே இடத்தில் மையம் கொள்ளும்போது ஏற்படக்  கூடிய விபரீதங்களை இந்த நாவல் மிக அழகாக, விறுவிறுப்பாகச் சொல்கிறது. எச்சரிக்கிறது.

இங்கே இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனம் என்ற ஜனநாயகப் படுகொலையை, ஜெயப் பிரகாஷ் நாராயணன் என்ற காந்தீய வாதி, வினோபா பாவேயின் சீடர் எப்படி  தடுத்து நிறுத்தினார் என்பதை, இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போராகவே கூடச் சொல்ல முடியும்! 


இந்திரா காந்தி என்ற சர்வாதிகாரிக்கு எதிராக, எப்படி இந்த தேசத்தின் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஜெயப்ரகாஷ் நாராயணனுடைய போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றன, காங்கிரஸ் எப்படி பிரிட்டிஷ் குள்ள நரிகளிடமிருந்து கற்றுக் கொண்ட பிரித்தாளும் கலையைப் பயன்படுத்தி அந்த ஒற்றுமையைப் பிளந்தது என்பது கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் சமகால சரித்திரம்!

தி ஆர் டாகுமென்ட்! 


அவசியம் படிக்க வேண்டிய ஒரு புதினமாக நான் பரிந்துரை செய்யக் கூடிய நூல்களில் ஒன்று! வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் அல்ல! நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும் கூட!




Wednesday, August 4, 2010

தி மேன்....! இர்விங் வாலஸ்!



"இர்விங் வாலஸ் எழுதிய The Man என்ற புதினம்! டக்ளஸ் டில்மன் என்ற கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க ஜனாதிபதியாகி விடுகிறார்! புத்தகம் வெளிவந்த காலத்தில், இதைக் கற்பனையாக மட்டுமே, அதுவுமே, தேர்தல் அல்லாத வழியில் என்று தான் சொல்ல முடிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். சமயங்களில், கற்பனை செய்து எழுதுகிற விஷயங்கள், நடப்பு விஷயங்களோடு பொருந்திப் போக முடிகிற விநோதத்தைப் பார்த்துப் பார்த்து, இப்போதெல்லாம் அது எனக்கு அது மிகவும் பழகிப் போய்விட்டது!" 

இப்படி இந்தப்பக்கங்களில் எழுதினேன்  இந்தப் புத்தகத்தைத் தொட்டு, சென்ற வாதம் டிசம்பரில் ஒன்று, இந்த வருடம் ஜனவரியில் ஒன்று என்று லேசாகத் தொட்டு எழுதியிருந்தாலும், முழுமையாக ஒரு புத்தக விமரிசனமாக எழுத இப்போது தான் நேரமும், யோசனையும் பொருந்தி வந்திருக்கிறது. என்னுடைய சேகரத்தில் மறுவாசிப்புக்காகத்  தேடிய போது உடனே கிடைக்கவில்லை  என்பதும் ஒரு காரணம்.

இந்தப்  புத்தகம் முதன் முதலாக என் கையில் கிடைத்தது அனேகமாக 1970 அல்லது 1971 ஆக இருக்கலாம். என் மனதில் இன்றைக்கும் நீங்காத ஒரு இடத்தில் இந்தப் புத்தகம் இருக்கிறது! வெறும் கதைதானே, படித்தோமா பொழுது போனதா அப்புறம் மறந்தும் போனோமா என்ற ரகத்தில் எல்லாப் படைப்பையும் எழுத்தாளர்களையும், சேர்த்துவிட முடியாது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த உதாரணம். தவிர, நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னால், எழுதப்பட்ட ஒரு கற்பனைப் புதினத்தில் சொல்லப் படும் பல சம்பவங்கள், பாத்திரங்களை அப்படியே அச்சு அசலாக இன்றைக்கும், இங்கே கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கும் அரசியலோடு கூடத் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிற விதமாக இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

ஒரு நல்ல எழுத்தாளன் தான் வாழ்கிற சமுதாயத்தை ஊன்றிக் கவனிக்கத் தெரிந்தவனாக இருக்கிறான்!.தன்னுடைய எழுத்தில் சமுதாயத்தின் மூலக் கூறுகளை அப்படியே கொண்டு வந்து விடுகிறான். சிலநேரங்களில் ஜெயகாந்தன்  யதார்த்தத்தை அப்பட்டமாகத் துகிலுரித்துக் காட்டுகிற மாதிரி! சில நேரங்களில், நா.பார்த்த சாரதி, அகிலன் மாதிரி யதார்த்த நிலையைக் கண்டு கொதிக்கும் தன்னுடைய ஆவேசத்தையும் சேர்த்துக் கொட்டுகிற மாதிரி! ஆகக் கதையில் வரும் சம்பவங்கள் கற்பனை என்றாலும், அதன் அடித்தளமாக இருக்கும் சமுதாயத்தைப் பற்றிய கண்ணோட்டம் அல்லது  மூலக் கூறுகள் உள்ளது உள்ளபடியே இருப்பதால், படிக்கும்போது சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு தன்மை அல்லது போக்கும் அப்படியே அச்சு அசலாக வெளிப்படுகிறது. கற்பனை, பொய்க்குக் கூட, உண்மையின் கலப்பு அவசியமாக இருக்கிறது. அல்லது பொய், கற்பனை என்று நாம் சொல்வதே யதார்த்த நிலைமையின் திரிக்கப்பட்ட வடிவம் தான் என்பதைப் புரிந்து கொண்டால், ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை.

எவரும் கற்பனை செய்தே பார்த்திருக்க முடியாத விதத்தில் கதை துவங்குகிறது.

TC, The Chief  என்று மட்டுமே அழைக்கப் படும் அமெரிக்க ஜனாதிபதி பாரிஸ் நகரத்தில் ஒரு சர்வதேசப் பேச்சுவார்த்தைக்குப் போயிருக்கும் தருணத்தில், கட்டடம் இடிந்து உயிரிழக்கிறார். அடுத்து இங்கே துணை ஜனாதிபதி ஏற்கெனெவே உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற நிலையில், பதவியேற்பதைத்  தீர்மானிக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக அவரும் இறந்து விடும் செய்தி வருகிறது. அரசியல் சட்டப்படி, எஞ்சியுள்ள காலத்திற்கு ஜனாதிபதி பொறுப்பை ஏற்க வேண்டியது யார் என்ற கேள்வி எழ, senate pro tempore என்று பதில் வருகிறது. அமெரிக்கத் துணை அதிபர்  அமெரிக்க செனேட் சபையின் தலைவராகவும்  இருப்பவர். அவர் சபைக்குத் தலைமைதாங்க முடியாத  சமயங்களில் சபைக்குத் தலைமை தாங்குகிற பொறுப்பு இது. பெரிய அளவில் முக்கியத்துவமில்லாத இந்தப் பொறுப்பில், கறுப்பரான டக்ளஸ் டில்மானை TC யின் டீம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. இங்கே, ஜாதிக்கொரு பிரதிநிதித்துவம், முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி, டம்மியாக சில பேருக்குப் பதவி கொடுத்து அலங்கார பொம்மைகளாக, பப்ளிசிட்டி ஸ்டண்டாக வைத்திருக்கிற மாதிரி!

சமத்துவம் கண்டுவிட்டோம் என்று சொல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்கிற மாதிரி  டம்மிப் பொறுப்பில் வைக்கப் பட்டிருந்தாலும் பதவி வரிசைப் படி எவரும் ஊகிக்க முடியாத விதத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக, ஒரு கறுப்பர்! என்று சுவாரசியமாக, ஒரு இக்கு வைத்து ஆரம்பிக்கும் இந்த நாவல், அமெரிக்க ஜனநாயகம் இயங்கும் விதத்தை, மிக நுணுக்கமாக விவரித்துச் சொல்கிறது.
 
ஒரு கறுப்பரை அமெரிக்க அதிபராக, அவருடைய கட்சி, மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அரசியல் முதிர்ச்சி, பரஸ்பர நம்பிக்கை பிறந்து விட்டதா என்ற கேள்விக்கெல்லாம் விடை தேட, முந்தைய அதிபரின் டீம் கவலைப் படவில்லை. பெயரளவுக்கு டக்லஸ் டில்மன் அதிபர்! ஆனால் பின் சீட்டில் இருந்து முந்தைய அதிபரின் அணுக்கக் குழு, ஆட்சியை வழிநடத்த நினைக்கிறது.


கொஞ்சம் நம்மூர்  நிலவரத்தையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போம். நேரு மறைவுக்குப் பின்னால், சாஸ்திரி மறைவுக்குப் பின்னால் எழுந்த  இடைவெளியை நிரப்ப குல்ஜாரிலால் நந்தா என்ற காந்தீய வாதியைப் பயன் படுத்திக் கொண்ட  காங்கிரஸ், இந்திரா காண்டியை  பிரதமராக்கி, பேக் சீட் டிரைவிங் செய்ய முயன்ற போது, இந்திரா, நேரு குடும்பத்தில் துணிச்சல் கூட இருக்கும் என்று   எவருமே ஊகித்திருக்க முடியாத துணிச்சலுடன் கட்சியை உடைத்தார்.

ஆர்தர் ஈட்டன்! அதிபருக்கு அடுத்தபடியாக அமெரிக்க அரசியலில் அதிக அதிகாரம் கொண்ட பதவியாகக் கருதப்படும் Secretary of State! டக்ளஸ் டில்மன் தங்கள் வழியில், கன்றுக் குட்டி போல நடப்பார் என்று, முந்தைய அதிபரின் அணுக்கக் குழுவுக்கு உறுதி அளிக்கிறார். அதிபரின் கட்சியும், ஈட்டனைத் தான் நம்புகிறது. எல்லோரையும் விட, இந்த டீம் பதவிக்கு வருவதற்காகத் தேர்தல் செலவுகளில் பெரும் பங்கை ஏற்றுக் கொண்ட ஒரு பகாசுர நிறுவனமும் ஈட்டனைத் தான் நம்புகிறது. ஜெயிக்கிற குதிரை மேல் பணம் கட்டியவர்கள், லாபத்தை அள்ளிக் கொண்டு போகக் காத்திருப்பதைப் போல, தங்களுக்குச் சாதகமான ஆட்கள் பதவிக்கு வருவதற்குப் பண உதவி செய்து விட்டு, சாதகமான விஷயங்களுக்காகக் காத்திருக்கிறது.

மேலோட்டமாக, வம்புதும்புக்குப் போகாத அமைதியான மனிதராக அறிமுகமாகும் டக்லஸ் டில்மன் மனைவியை இழந்தவர். இடதுசாரிகள் என்று சந்தேகிக்கப் படும் உரிமைக்குரல் எழுப்பும் குழுக்களுடன் தொடர்புள்ளவர் என்று சந்தேகிக்கப் படும் ஒரு பெண் வழக்கறிஞர், டில்மனுக்கு நெருங்கிய தோழியாக! விடலைத் தனமான, உணர்ச்சி வசப்படுகிறவனாக ஒரு மகன்,  கறுப்பினத் தம்பதிகளுக்கு எப்போதோ ஒரு முறை அதிசயமாகப் பிறக்கும் முழு வெள்ளைத் தோலுடன்! தன்னுடைய நதிமூலம் கறுப்பரினம் என்பதை மறைத்து, போலியான ஒரு அடையாளத்தில் தகப்பன், சகோதரனை விட்டு விலகி வாழும் ஒரு மகள்.

செனேட்டர் ஒருவரின் மகள் சாலி வாட்சன்! நடுவில் கொஞ்சம் மன நிலை பாதிக்கப் பட்டு குணமாகி வந்தவள், அதிபருக்கு சோஷல் செக்ரெடரியாக. ஆர்தர் ஈட்டன் மீது ஈர்க்கப் படுகிறவளாக. ஈட்டன் தம்பதிகளுக்குள் கொஞ்சம் கருத்து வேறுபாடு, அனேகமாக மணமுறிவு வரை போகலாம் என்று தெரிந்த நிலையில், அந்த இடத்தில் தன்னை வைத்துக் கற்பனை செய்து கொள்கிற பெண்ணாக.அமெரிக்க அதிபருக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் சீக்ரெட் சர்வீஸ் ஏஜன்டாகப் பணிபுரியும் வெள்ளையர் ஒருவர் அடுத்த பதவி உயர்வுக்காகக் காத்திருக்கிறார். கருப்பு இனத்தைச் சேர்ந்தவருக்குப் பாதுகாப்புக் கொடுப்பதில் கறிப்பறை ஒதுக்கி வைத்தால் அது நன்றாக இருக்காது என்பதால்,ஒரு கறுப்பருக்கு அந்தப் பதவி உயர்வு போகிறது.

இப்படி, எதிர்பாராதவிதத்தில் அதிபராகப் பதவியேற்க வேண்டி வரும் டக்லஸ் டில்மானை சுற்றி, பாத்திரங்கள் வரிசையாக அறிமுகமாகிறார்கள். பாத்திரங்கள் அறிமுகம் செய்து வைக்கப்படும் நேரத்திலேயே, அதிபர் மாளிகையை பற்றிய விவரங்கள், முந்தைய அமெரிக்க அரசியல் நிகழ்வுகளைத் தொட்டுக் கொண்டே கதை நகர்கிறது. படித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், நமக்கும் அமெரிக்க அரசியல், அரசு இயந்திரம் இயங்கும் விதம் அறிமுகமாகிக் கொண்டே வருகிறது.

முந்தைய அதிபர் தேர்தலில் ஜெயித்து வருவதற்கு, அமெரிக்க பகாசுர நிறுவனம் ஒன்று எக்கச் சக்கமாக செலவு செய்திருக்கிறது. அவர்களுக்கு ஆதாயம் தரும் வகையில், கறுப்பர்களுடைய நலன்களை மேம்படுத்துவது போல ஒரு திட்டம்  ஏராளமான செலவில் தயாராக இருந்து, சட்டவடிவம் கொண்டு வரும் நேரத்தில், பகாசுர நிறுவனம் ஆதரித்த அதிபர் காலமாகி விடுகிறார். அடுத்து வரும் டில்மன் இதை  ஒப்புக்குச் செயல்படுத்தப் படும் திட்டம், கறுப்பின மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது  என்று நிராகரித்து விடுகிறார்!

அதிபருக்கும், அரசு இயந்திரத்தின் ஆதிக்கம் செலுத்திவரும் இதர பகுதிகளுக்கும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கிறது
.அரசியலில் யுத்தம் என்று வந்து விட்டால் சாக்கடைதான்! சேற்றை வாரி வாரி வீசுவது தான்! தங்களோடு ஒத்துப் போக மறுக்கும் அதிபரை, அவருடைய சொந்த வாழ்க்கையைத் தொட்டு கேவலப் படுவதுடன், எதிர்காலமே இல்லாமல் செய்துவிடமுடியும் என்று பலவிதத்திலும் நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால், இந்த அதிபரோ, பணிந்து கொடுக்க மறுக்கிறார். ஒரு அதிபராகத் தன்னுடைய கடமையில் இருந்து கொஞ்சம் கூடப் பிறழ மாட்டேன் என்கிறார். போலித்தனமான நிவாரணங்களைக் கொடுத்து, ஒரு சமுதாயம் முன்னேறிவிடும் என்ற மாயையை எதிர்க்கிறார். சலுகைகள், இலவசங்களினால், தன்னுடைய மக்களுக்கு உண்மையான விடுதலையும் சமத்துவமும் கிடைக்காது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
 

இலவசங்கள், மானியங்கள், நலத்திட்டங்கள் என்ற போர்வையில், தங்களுடைய கல்லாவை நிரப்பிக் கொள்வதிலேயே குறியாக இருக்கும் கார்பரேட்டுகள், கார்பரேட்டுக்களின் தயவில் சொகுசாகத் தங்கள் பைகளையும் நிரப்பிக் கொள்ளும் அரசியல்வாதிகள் விரோதத்தை சம்பாதித்துக் கொள்வதற்கு இவ்வளவு  போதாதா? இன்னமும் இருக்கிறது, மீன்களுக்குத் தூண்டிலில் வைத்துக் கொடுக்கப்படும் புழுக்கள் எதற்காக என்பதை அறியாதவர்களாக, தங்களுக்கு கொடுக்கப் படும் இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் எல்லாம் வெறும் கண்துடைப்புத்தான் என்பதைப் புரிந்து கொள்ளாத ஜனங்களும் வெறுக்க வேண்டுமே! அதுவும் நடக்கிறது.

உள்ளூர் கறுப்பின வெள்ளையர் பிரச்சினையோடு, அமெரிக்க ரஷ்ய பனிப்போர் விவகாரமும் கதையின் கடைசியில் புகுந்து கொள்கிறது. உள்ளூர் மிட்டலுக்கு அஞ்சாத மாதிரியே, வெளியே இருந்து வரும் மிரட்டலையும் டில்மன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும் கதையோடு சேர்ந்து வருகிறது..

அதிபர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. டக்லஸ் டில்மனுக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன ஒன்று, நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னாலேயே பதவியை ராஜினாமா செய்து விடுவது! அல்லது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, எதிர்கொள்வது! இரண்டில் எதைத் தீர்மானிப்பது என்பதில், ஜட்ஜ் என்று அழைக்கப்படும் ஒரு முன்னாள் அமெரிக்க அதிபர்  வழிகாட்டுகிறார். டில்மன், அதிபர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை சந்திப்பது என்று முடிவெடுக்கிறார்.


இந்தப் பதவி நீக்கக் கோரும் தீர்மானம், இம்பீச்மென்ட் பற்றி மிக விரிவாகத் தகவல்களைசொல்லிக் கொண்டே கதைக்களம், டக்லஸ் டில்மன், கறுப்பு நிறம் ஒன்றினாலேயே இளப்பமாக, இரண்டாந்தரமாக நடத்தப் படுகிறநிலையை எதிர்த்து  எப்படி ஒரு மனிதனாக, ஆண்மையுடன் எதிர் கொள்கிறார் என்பது மிக சுவாரசியமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. மேன் என்று சொல்லும் போது ஆண் என்று மட்டுமல்ல ஆண்மையுள்ளவன் என்றும் ஒரு பொருள் இருக்கிறதல்லவா?

Tne Man! ஆண்மையுள்ளவன் மட்டுமே ஆணாக இருக்க முடியும்!அந்த ஆண்மை இங்கே மிக அழகாக ஒரு கதையாக விரிகிறது.

அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் என்று ஒரு பட்டியல் எழுதினால், இந்தப்புத்தகத்துக்கு முதல் வரிசையில் இடமுண்டு!




Saturday, July 31, 2010

தி லாஸ்ட் சிம்பல்...! டான் பிரவுன் !




இது சென்ற வருடம் அக்டோபரில் எழுதப்பட்டு இன்னொரு வலைத் தளத்தில் வெளியானதன் மீள்பதிவு தான்! புத்தகங்களைக் குறித்த எனது எண்ணங்களை ஒரே இடத்தில் தொகுத்து வைக்க வேண்டும் என்பதற்காக இங்கே இப்போது.

டான் பிரவுன் எழுதி
, சமீபத்தில் வெளியாகியிருக்கும் புத்தகம், தி லாஸ்ட் சிம்பல். 
ஏஞ்செல்ஸ் அண்ட் டெமன்ஸ், டாவின்சி கோட், வரிசையில் மூன்றாவது. குறியீடுகளில் வல்லுனரான ராபர்ட் லாங்டன் பாத்திரத்தை மையமாக வைத்து வந்திருக்கும் இந்தப் புதினம் கைக்குக் கிடைத்துச் சில நாட்களாகிறது. ஆனாலும், வெறும் அறுபது பக்கங்களைக் கூடத் தாண்டி தொடர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை, என்னென்னவோ வேலைகள்!


இந்த நிலையில் "மரண மொக்கை ஃப்ரம் டான் பிரவுன்" என்ற வெண்பூவின் வலைப்பதிவைப் படித்த போது, ச்சே அப்படியெல்லாம் இருக்காது, கதைக்களத்தை திறம்படச் செய்கிற கலையில் வல்லுனரான கதாசிரியர் அந்த அளவுக்கெல்லாம் மோசம் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில், இப்படி ஒரு பின்னூட்டமும் போட்டாயிற்று!


"ஏமாற்றம் டான் பிரவுன் எழுதினதில் இல்லை.முந்தைய கதைகளை வைத்து, எக்கச்சக்கமாக எதிர்பார்த்துப் படிக்க ஆரம்பிப்பதில் வரும் கோளாறு இது!"



வெண்பூ கொஞ்சம் பொறுமையாகவே பதிலும் சொன்னார். அப்போதாவது சுதாரித்திருக்க வேண்டும்!


"வாங்க கிருஷ்ணமூர்த்தி.. நீங்க சொல்றது ரொம்ப சரி. ஆனா அந்த எதிர்பார்ப்பை கிளப்புறது அவங்களேதானே. டாவின்சி கோடுக்கு அடுத்ததா வர்ற புத்தகத்துல இது மாதிரி எதிர்பார்ப்புகள் தவறில்லையே. அந்த எதிர்பார்ப்பு இருந்ததாலதானே முதல் பிரிண்டே 6.5 மில்லியன் ஆகுது. நம்ம எதிர்பார்ப்பை அவங்க காசாக்கும்போது, அதை பூர்த்தி செய்யுற கடமையும் அவங்களுக்கு இருக்குன்னு நான் நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி."


மருதைக்காரங்க கிட்ட ஒரு கெட்ட பழக்கம், எப்பவுமே முன் வச்ச காலைப் பின் வைக்க மாட்டோம்லன்னு கொஞ்சம் அலட்டலாகவே சொல்லிக்கிறது! நானும் அப்படித் தான் கொஞ்சம் அலட்டலா, மறுபடியும் ஒரு பின்னூட்டம் எழுதினேன்.


"/நம்ம எதிர்பார்ப்பை அவங்க காசாக்கும்போது, அதை பூர்த்தி செய்யுற கடமையும்/


இந்த இடத்துல தான் பிரச்சினையே வருது. ஏற்கெனெவே நாம் ஒரு மாதிரி கற்பனை செய்து வைத்திருக்கும் எதிர்பார்ப்பின்படி இல்லை என்றால், உடனே வருவது ஏமாற்றம் தான் இல்லையா?



இந்தப் புத்தகம் கைக்கு வந்தாயிற்று. ஆனால், படிக்க ஆரம்பிக்க- வில்லை. இவரது புத்தகங்கள்,மற்ற எல்லாவற்றையும் படித்த அனுபவத்தில் தான் சொல்கிறேன், எதையும் கொஞ்சம் திறந்த மனதோடு,கதைக்களமாக எடுத்துக் கொண்டிருப்பதைக் கொஞ்சம் புரிந்து கொள்கிற விதத்தில் படிக்க ஆரம்பித்தால் இத்தனை ஏமாற்றம் இருக்காது.


எடுத்துக் கொண்ட கதைக் களத்தை, ஏகப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புக்களின் அடிப்படையில், ஒரு புதினமாகச் சொல்ல முனைந்திருக்கிறார். அடுத்தடுத்து ஒரே மாதிரிப் பார்க்க, படிக்க நேரிடும்போது இந்த மாதிரி சலிப்பு ஏற்படுவது இயற்கைதான்.


கொஞ்ச நாள் கழித்து நிதானமாக இன்னொருதரம் படித்துப்பாருங்கள், நிச்சயமாக, வேறு விதமாக உணர்வீர்கள்!" 

இது நான் சொன்னது.


அவரும், இன்னும் பொறுமையாச் சொன்னப்பவே தெரிஞ்சிருக்கணும்! அப்ப அது உறைக்கவில்லை. என்ன சொன்னாருன்னா....


"மறுவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி கிருஷ்ணமூர்த்தி.. புத்தகத்தைப் படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தையும் சொல்லுங்கள்."


பதிவர் வெண்பூ அவர்களே! பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன்! இந்தப் புத்தகம் படு மொக்கைதான்! மரண மொக்கை என்றெல்லாம் சொல்ல மாட்டேன், நான் படித்து நொந்து நூடுல்சான ஒரே புத்தகம் ராபின் குக் எழுதிய தி ஃபீவர்! அதை விட மரண மொக்கையான ஒரு புத்தகத்தை, இன்னமும் நான் படிக்கவில்லை.


ஒப்புதல் வாக்கு மூலம் ஆயிற்று! சரி புத்தகம் எப்படியெல்லாம் ஏமாற்றியது, எதனால் மொக்கை என்று விமரிசனம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதையும் பார்த்து விடலாமா?


ராபர்ட் லாங்டன் கதாபாத்திரத்தை சிம்பாலாஜி துறைப் பேராசிரியராக மையப்படுத்தி, முதல் இரண்டு புதினங்கள், முதலில் ஏஞ்செல்ஸ் அண்ட் டெமன்ஸ், ஒன்பது வருடங்களுக்கு முன்னால் வந்தது;  

மூன்று வருடம் கழித்து டாவின்சி கோட்! புத்தகமாக வந்த போது ஏகப்பட்ட சர்ச்சைகள்! கிறித்தவத்தை இழிவு படுத்தி விட்டார், அவர் கதையில் என்னென்னவெல்லாம் திரித்துச் சொல்லியிருக்கிறார் என்பதைக் கிறித்தவக் காவலர்கள் நிறையப் பேர் ஏராளமான வலைத் தளங்களை ஆரம்பித்து, டான் பிரவுன் சொன்னது உண்மையாக இருக்குமோ என்ற அளவுக்கு எதிர் பிரச்சாரம், இலவச விளம்பரம் செய்தது,  இப்போது மிஸ்ஸிங்!


டாவின்சி கோட் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது, வாடிகன் நகரில் படமெடுக்க அனுமதித்த திருச்சபை, தங்களைப் பற்றிய பிம்பம் சரிந்து விழுவதைக் கண்டு, அடுத்த படமான ஏஞ்செல்ஸ் அண்ட் டெமன்ஸ் படத் தயாரிப்பின் போது,ரோம் டயசீஸ் சீப்பை ஒளித்து வைத்துக் கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று கணக்குப் போட்டது. படப் பிடிப்புக்கு வழங்கியிருந்த அனுமதியை மூன்று நாட்களுக்கு முன்னால் ரத்து செய்தது.  

படத்தின் இயக்குனர் ரான் ஹோவார்ட், அனுமதி மறுக்கப் பட்ட நிலையிலும், ரகசிய காமெராக்கள் வழியாக அதிரடியாக சில இடங்களில் படமெடுத்ததோடு, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் செட், சிமுலேஷன் என்று பல விதங்களிலும், படப்பிடிப்பை நடத்தினார் என்பது ஒரு சுவாரசியமான தகவல். படமெடுத்த விதத்தில், திட்டமிடுவதில் இருந்த சுவாரசியம், படத்திலும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?


மறுத்துப் பேசிப் பேசியே, கவிழ்த்துவிடலாம் என்று செயல்பட்ட போது, அதுவே டான் பிரவுன் புத்தகத்திற்கும், படத்திற்கும் பெரிய விளம்பரமாகிப் போன அதிர்ச்சியில் ஏற்கெனெவே கையைச் சுட்டுக் கொண்ட வாடிகன் திருச்சபை, ஏஞ்செல்ஸ் அண்ட் டெமன்ஸ் படம் வெளியானபோது கொஞ்சம் கவனமாகவே இருந்தது.


"Church dignitaries diplomatically praised its “dynamic director,” "splendid photography" and "magnificent" studio and computer simulations of the Vatican, Sistine Chapel and St. Peter's Basilica. An Italian daily quoted the L'Osservatore Romano editor Gian Maria Vian “(it) only confirms the centuries-old fascination with our faith and our symbols,” adding a who-cares, “If only all anti-Catholic operations were like this."


திருச்சபையின் பிரமுகர்கள் ராஜதந்திரமாகப் படத்தின் இயக்குனரை பாராட்டியதைப் படிக்கும் போது தெனாலி ராமன் கதையில், பாலைப் பார்த்தவுடனேயே பயந்து ஓடும் பூனை ஒன்றின் கதை நினைவுக்கு வருகிறதா?


இப்படியெல்லாம் நிறையக் கேள்விப்பட்டு, வாசித்துப் பழகினதால், டான் பிரவுன் கொஞ்சம் விவரமாகவே எழுதியிருப்பார் என்ற நம்பிக்கையில் வெண் பூ வலைப்பதிவில் கொஞ்சம் அவசரப்பட்டு, என்னுடைய பின்னூட்டங்களைப் பதிவு செய்தேன்! முழுவதும் கதையைப் படித்தபிறகு அல்லவா தெரிகிறது!!


பொறுங்கள்! நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை நான் சொல்ல வருவது!

கிறித்தவம் ஒரு நிறுவனப் படுத்தப்பட்ட மதம் என்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தாலும், நிறுவனப் படுத்தப்பட்டது எவ்வளவு தூரம் ஜோடிக்கப் பட்ட அல்லது மாற்றி எழுதப் பட்ட வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டது என்பது ஒரு சராசரி வாசகனுக்குத் தெரியாத விஷயம்!  

அந்த ஒரு களத்தை எடுத்துக் கொண்டு இல்யூமினாடி
, ஓபஸ் தேய் என்று அதிகம் வெளியில் தெரியாத விஷயங்களில் கவனத்தை ஈர்த்து, சரித்திரம் இப்படிக் கூட இருந்திருக்கலாம் என்ற ஊகத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தபோது, அடுத்தடுத்த சிக்சர்களாக ஆட்டம் இருந்தது!


அடுத்த பந்தில் சிக்சரா, பவுண்டரியா இல்லை விக்கெட் போய்விடுமா என்ற எதிர்பார்ப்போடு படிக்க ஆரம்பிக்கும் வாசகனை முழுக்க முழுக்க ஏமாற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்! முதலிரண்டு நாவல்களில், வாடிகனின், மறைக்கப்பட்ட அல்லது அதிகம் வெளியே தெரியாத விஷயங்களைத் தொட்டவர், மூன்றாவதில் அப்படியே ஒரு சோமெர்சால்ட் அடித்து, கிறித்தவ நம்பிக்கையை முன்னிறுத்திக் கதையை முடித்திருப்பதைப் படிக்கும்போது, முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே கதாசிரியர் டான் பிரவுன் தெரிகிறார்.


முந்தின இரண்டு நாவல்களிலும், மத நம்பிக்கைகள் சம்பந்தமான சில கேள்விகளை, அது தொடர்பான ஊகங்களை முன்வைத்தவர், இந்த மூன்றாவது புத்தகத்தில், சில முடிவுகளை முன்வைக்கிறார்.  

அந்த முடிவுகளாவது, ஏற்கெனெவே அவர் சொல்லிப் போன விதத்தோடு பொருந்துகிறதா என்று பார்த்தால், இல்லை, இல்லவே இல்லை என்பதே விடையாக வரும்போது, படிப்பவர் தான் ஏமாற்றப் பட்டதாகவே உணருகிற தருணத்தில், மொக்கை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வதாம்?


நிகோலஸ் கேஜ் நடித்து வெளியான "நேஷனல் ட்ரெஷர்" படத்தை ஏற்கெனெவே பார்த்து விட்டரசிகர்களுக்கு (நான் பார்த்து விட்டேன்) இந்தக் கதையைப் படிக்கும் போது, கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கதைக் களத்தை ஏற்கெனெவே பார்த்திருக்கிறோமே என்று தோன்றும் அளவுக்கு இருக்கும் இந்தக் கதையில் அப்படி என்னதான் இருக்கிறது?


ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில், குறியீடுகள் குறித்த துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் கதா நாயகன் ராபர்ட் லாங்டனுக்குப் பழைய நண்பர் பீடர் சாலமனிடமிருந்து வாஷிங்டனுக்கு வருமாறு ஒரு அவசர அழைப்பு வருகிறது. நண்பரின் அழைப்பை ஏற்று வாஷிங்டன் வரும் கதாநாயகனுக்கு அப்புறம் தான் அந்த அழைப்பே போலியானது என்று தெரிய வருகிறது.


பன்னிரண்டு மணி நேரத்திற்குள் மொத்தக் கதையும் நடப்பதாக, ஒரு விறுவிறுப்போடு கதை ஆரம்பிக்கிறது. போலியான அழைப்பை விடுக்கும் வில்லன், நண்பரைத் தான் கடத்தி வைத்திருப்பதாகவும், ஃப்ரீ மேசன்ஸ் எனப்படும் ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பீடர் சாலமனை விடுவிக்க வேண்டுமானால், லாங்டன் ஒரு புதிரை விடுவிக்க வேண்டும் என்று சொல்கிறான்.


அமெரிக்க உளவுத்துறையான சி ஐ ஏ வின் ஒரு பிரிவின் டைரக்டர் சாடோ, லாங்டனிடம், பீடர் சாலமன் காப்பாற்றப் படுவது முக்கியமில்லை, புதிரை விடுவித்து வில்லனிடம் அவன் கேட்கிறபடி கொடுத்து விட்டால் நல்லது என்று குறுக்கே வருகிறார்.


பீடர் சாலமனின் தங்கை, காதரின் சகோதரனுடைய வழிகாட்டுதலின் பேரில் ஒரு விஞ்ஞானக் கூடத்தை நிறுவி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். வில்லன் அவரிடமும், நம்பவைத்து, ஆராய்ச்சிக் கூடத்திற்குள் ஊடுருவுகிறான். வில்லனிடமிருந்து தப்பி லாங்டனுடன் சேர்வது, புதிரைச் சேர்ந்து விடுவிக்க முயல்வது, முந்தின கதைகளில் வருவது மாதிரியே ஒரு ஸ்டாண்டர்ட் பாட்டர்ன் தான்! மாறுதலுக்காக, லாங்டனையே மூழ்கடித்துச் சாகடிப்பதாக ஒரு ட்விஸ்ட் வேறு!


மலாக் என்ற அந்த வில்லனுடைய கடந்த காலம் ஃபிளாஷ் பேக் முறையில் சிறிது சிறிதாகச் சொல்லப் படுகிறது. பீடர் சாலமனுடைய அன்னையைக் கொலை செய்தது முதல், அந்தக் குடும்பத்தையே கருவறுக்கச் சூளுரைத்துச் செயல் படும் வன்மம் அங்கங்கே சொல்லப்படுகிறது. வாஷிங்டன் நகரில் காபிடல் கட்டடத்திற்குள் எங்கேயோ புதையுண்டு கிடக்கும் "அது" என்ன? வில்லனுக்கு பீடர் சாலமனுடைய குடும்பத்தையே கருவறுக்கும் அளவுக்கு வன்மம் ஏன்?  

எது எப்படிப்போனாலும் சரி, மறைந்து கிடக்கும் புதிரை விடுவித்து வில்லனிடம் அவன் கேட்கிறபடி கொடுத்து, வேறுபிரச்சினையில் இருந்து தேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று உளவுத் துறை டைரக்டர் சாடோ முனைப்புதான் இருப்பது ஏன், அப்புறம் டான் பிரவுன் கதைகளில் வழக்கமாக வருகிற மாதிரி குறியீடுகள், அவை மேலோட்டமாகச் சொல்வது ஒன்றாகவும், உண்மையில் சொல்வது வேறாகவும் இருப்பதை கதாநாயகன் எப்படி விடுவிக்கிறார் என்பது எல்லாம், சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கின்றன.


அதையும் தாண்டி, முந்தின இரண்டு நாவல்களில், கிறித்தவத்தின் மீதே சந்தேகம் வருகிற மாதிரி, வாடிகனை மையப்படுத்திக் களம் அமைத்ததற்கு மாறாக, இந்தக் கதையில் இல்யூமினாடி,வாடிகன், சர்ச்,  இவைகளெல்லாம் இல்லை. சரித்திரத்தில் மறைக்கப் பட்டதாக அல்லது திரிக்கப் பட்டதாகத் தேடும் எதுவும் இல்லை.  

ஃப்ரீ மேசன்கள் என்று அழைக்கப்படும் குழுவினரைப் பற்றி மட்டுமே! நொயெடிக் சயன்ஸ், எண்ணங்களின் ஆற்றல் இந்த விஷயங்கள் ஏதோ புதிதாகச் சொல்லப் படும் விஷயம் போல அங்கங்கே வந்து போகிறது.


கதையை டான் பிரவுன் தான் எழுதினாரா அல்லது ஏதோ கிறித்தவ விசுவாசக் குழு, தன்னுடைய பிரச்சாரத்தை வித்தியாசமாக ஒரு கதைக்குள் வைத்துக் கொடுத்திருக்கிறதோ என்ற சந்தேகம். அப்புறம், எனக்குக் கிடைத்த புத்தகம் ஒரிஜினல் தானா இல்லை புருடாவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்!

கொஞ்சம் மொக்கைதான்!  அதுகூட கதைசொன்ன விதத்தில் இல்லை, முன்பு சொன்னதோடு முரண் பட்டுப் போன போது, நம்பகத் தன்மையை இழந்து விட்டதால் தான் என்று தோன்றுகிறது.

டான் பிரவுனுக்கு இந்தப் புத்தகம் ஹாட்ரிக் இல்லை!

தயிர்வடையை ஆசையாகச் சாப்பிட்டுக் கொண்டே தத்துவம் பேசும் தோழர்  வரதராஜன் அடிக்கடி ஆசையோடு மேற்கோள் காட்டுவது இது:

"நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டின் மீதேறிக் கூட ஒருவன் நரகத்துக்குப் போக முடியும்!"

டான் பிரவுன் இந்தக் கதையில், சில முடிவுகளுக்கும் வருகிறார் என்று சொன்னே
ன் அல்லவா!அது கூட இப்படித்தான் இருக்கிறது!!

It is true that the words "Laus Deo" [under God] are inscribed on the east face of the Washington monument in Washington DC. It is also true that all the four sides bear some inscriptions.


டான் பிரவுனின் இந்தக் கதையில் வரும் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தில் கிழக்கு முகமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் கடவுளுக்குக் கீழ்ப்படிதல் உள்ள என்று பொருள் படும் வாசகம், ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவுக்காக எழுதிய பிரார்த்தனை,  இவற்றைப்பற்றிய விவரங்களை, அமெரிக்க  வரலாற்றுப் பெருமிதங்களாகக் குறிப்பிடும் இந்தப் பக்கங்களில்  இன்னும் கொஞ்சம் விரிவாகப் படிக்க முடியும்.

வெறும் கதையாக மட்டும் படிக்க முனைபவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. இதயம் பேசுகிறது மணியன் தனது முதல் அமெரிக்கப் பயணத்தின் போது பார்த்த ஒரு விசித்திரமான அனுபவத்தைச் சொல்லியிருப்பார். 


இவர் பயணித்துக் கொண்டு இருந்த போது, அருகில் இருந்த ஒருவர் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டே, படித்த  பக்கங்களைக் கிழித்து ஒவ்வொன்றாகக் குப்பைத் தொட்டியில் போட்டுக் கொண்டிருப்பார். மணியன் ஆச்சரியப்பட்டு அது என் என்று கேட்டபோது, அந்தநபர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இப்படிச் சொன்னாராம். 

"படித்தாயிற்று! இன்னொரு தரம் படிக்கப் போவதில்லை, அப்புறம் எதற்காக அதை வைத்துக் கொள்ள வேண்டும்"

அந்த மாதிரியோ, அல்லது நூலகத்திலோ எடுத்துப் படிக்கலாம்!



Saturday, June 12, 2010

ராபர்ட் லட்லம்..! The Hades Factor..! வெறும் கற்பனை தானா....?

ராபர்ட் லட்லமின் The Hades Factor கதை, மூன்று ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத, வெவ்வேறு இடங்களில் நடந்த மரணங்கள், அதைத் தொடர்ந்து எழும் கேள்விகளில் இருந்து தொடங்குகிறது.

சவப் பரிசோதனையில், அதுவரை அடையாளம் காணப் படாத ஒரு வைரசின் தாக்குதல் இருப்பதாகத் தெரிய வரவும், பிரச்சினை என்ன என்பதை ஆராய்வதற்காக  The U.S. Medical Research  Institute for Infectious Diseases(USAMRIID) மற்றும் Center for Disease Control(CDC)  என்ற இரண்டு அமைப்புக்களுக்கும் இறந்தவர்களுடைய உடலில் இருந்து எடுக்கப் பட்ட சாம்பிள் அனுப்பிவைக்கப் படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் தொற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவில் (USAMRIID) பணியாற்றும் லெப்டினன்ட் கர்னல்  டாக்டர் ஜோனாதன் ஸ்மித் லண்டனில் ஒரு மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, நாடு திரும்பி தன்னுடன் பணிபுரியும், தன்னுடன் காதலி சோபியா ரஸ்ஸலைச் சந்திப்பதை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் தருணத்தில், ஜோனாதன் ஸ்மித்தின் பால்ய  நண்பன் பில்லிடமிருந்து. லண்டனின்  ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் சந்திக்க வருமாறு சங்கேதச் செய்தி வருகிறது. சந்திக்கும்போது, ஸ்மித், மற்றும் சோபியாவின் உயிருக்குப் பெரும்  ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக அமெரிக்கா திரும்பி, சோபியாவையும் காப்பாற்றிக் கொள்ளுமாறு அந்த நண்பன் சொல்லிவிட்டு ஸ்மித் என்ன ஏது என்று கேட்கும் முன்னரே, தன்னுடன் அழைத்து வந்திருந்த நாயுடன் மறைந்து விடுகிறார்.

என்ன ஏது என்று புரியாமல் ஸ்மித் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்புகிற வழியில் அவரைத் தீர்த்துக் கட்ட ஒரு முயற்சி நடக்கிறது.  அவரைக் கொல்ல முயற்சி செய்தவர்களில் ஒருவனைக் கொன்றுவிட்டு ஸ்மித் தப்பித்துவிடுகிறார், ஃபோர்ட் டெட்ரிக்கில் இருக்கும் USAMRIID ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் தனது காதலியைக் காப்பாற்ற ஸ்மித் விரைகிறார்.

இங்கே லண்டனில் ஸ்மித்தைக் கொலை செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் அதே நேரம், அங்கே ஆராய்ச்சி மையத்தில் டாக்டர் சோபியா ரஸ்ஸல், அந்த இனம் தெரியாத வைரசை அடையாளம் காணும் முயற்சியில் தீவீரமாக இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னால், சோபியாவும் இன்னும் சில மருத்துவர்களும் பெரு நாட்டுக்குச் சென்றிருந்த தருணத்தில், அதே மாதிரி சிம்ப்டங்களுடன் பாதிக்கப் பட்ட உள்ளூர் மக்கள், ஒரு வகைக் குரங்கின் ரத்தத்தை மருந்தாக எடுத்துக் கொண்ட போது நோயில் இருந்து விடுபட்டதாகக் கேள்விப்பட்டது திடீரென நினைவுக்கு வருகிறது. அப்போது, அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த டாக்டர் விக்டர் ட்ரேமான்ட்  என்ற விஞ்ஞானியைச் சந்தித்ததும், குரங்கு ரத்தத்தில் இருந்த ஒருவகை ஆண்டி பாடீஸ் தான் அதற்கு மருந்தாக இருக்க வேண்டுமென்றும் பேசியது நினைவு வரவே,அவரைத் தொடர்பு கொள்ள முயற்ச்சிக்கிறாள். அந்த முயற்சியே, அவளது உயிரைக் கொள்ளை கொண்டுபோகும் என்பதையோ, காதலன் ஜோனாதன் ஸ்மித்துடைய உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை அறியாதவளாக!

ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் என்ற புகழ் பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உபதலைவராக  இருக்கும் விக்டர்  ட்ரேமான்ட், சோபியாவுடன் பேசுகையில் தனக்கு எதுவும் நினைவு இல்லை என்று மறுத்தாலும், டாக்டர் சோபியாவின் ஞாபக சக்தியைக் கண்டு கலக்கமுறுகிறார். தீர்த்துக் கட்டுவதைத் தவிர வேறு வழியே இல்லை! நாடல் ஹசன் என்ற தேர்ந்த கொலையாளியிடம் சோபியாவையும், ஸ்மித்தையும் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஃபோர்ட் டெட்ரிக்கின் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, சோபியாவுக்கு ஆராய்ச்சிக் கூடத்திலேயே, அந்த கொடும் வைரஸ் ஊசி வழியாகச் செலுத்தப் பட்டு ஒரு விபத்து மாதிரி செட்டப் செய்யப் படுகிறது. சோபியாவின் தொலைபேசி உரையாடல்கள், ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எல்லாமே சுத்தமாக அழிக்கப் படுகிறது.

நோயின் தாக்கத்தோடு வீடு திரும்பும் ஜோனாதன் ஸ்மித் மருத்துவ மனையில் சேர்த்தும், அந்த இனம் தெரியாத வைரஸ் அவளது உயிரைக் கொள்ளை கொள்கிறது. காதலியை  இழந்த சோகத்தில், திசை தெரியாமல் தடுமாறும் ஸ்மித்துக்கு, சவப்பரிசோதனையில், சோபியாவின் உடலில் ஊசி போடப்பட்ட இடம் அது கொலை தான் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது. தன்னுடைய மேலதிகாரி ஜெனரல் கீல்பர்கரிடம், தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் சொல்லி, ஸ்மித் சோபியாவின் மரணத்துக்குப் பழிவாங்கியே தீரவேண்டும் என்று அனுமதி கோருகிறார். ஆனால், அனுமதி கொடுப்பதற்கு முன்னாலேயே கீல்பர்கரும், அந்த வைரசுக்குப் பலியாகிறார். அது கொலை தானென்றும், அதை செய்தது ஸ்மித் தானென்றும் வேட்டையாடப் படுகிற நிலைக்கு ஸ்மித் தள்ளப் படுகிறார்.   

பீட்டர் ஹோவெல், மார்டிஜெல்லர் பாக் என்ற இரண்டு நண்பர்களுடைய உதவியோடு ஜோனாதன் ஸ்மித், இந்த வைரஸ் கோளாறு ஈராக்கில் பரிசோதிக்கப் பட்டதென்பதை அறிகிறார். ரகசியமாக ஈராக்கிற்குப் பயணமாகிறார். சி ஐ ஏ அதிகாரியாக பணியாற்றும் சோபியாவின் சகோதரி ராண்டி ரஸ்ஸலை எதிர்பாராத விதமாக அங்கே சந்திக்க நேரிடுகிறது. சோபியாவின் மரணத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் ராண்டி கோபப்படுகிறாள். பிறகு சேர்ந்து செயல்படுகிறாள். தேவையான விவரங்களைத் தெரிந்து கொண்டு ஸ்மித் அமெரிக்காவுக்குத் திருபுவதற்குள், உலகின் பல பகுதிகளிலும் ஒரு இனம் தெரியாத வைரஸ் தாக்குதலுக்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகிறார்கள்.

அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தாக்குதல் ஆரம்பிக்கலாம் என்ற நிலையில், இதற்கான மருந்தை ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் வேறு ஒரு ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருந்தபோது தற்செயலாக இந்த வைரஸ் தாக்குதலுக்கும்நிவாரணமாக  இருப்பதைக் கண்டறிந்ததாகவும், அமெரிக்க அரசு ஆர்டர் கொடுத்தால் லட்சக் கணக்கான தடுப்பு ஊசி  மருந்தைத் தயாரிக்கும் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது. அமெரிக்க மக்களைக் காப்பதற்காக, கோடிக்கணக்கான டாலர்களைக் கொடுத்து அமெரிக்க அரசு இந்த மருந்துகளை வாங்க ஆர்டர் கொடுக்கிறது. அத்தோடு விடாமல், இந்த மருந்தைக் கண்டுபிடித்ததற்காக, டாக்டர் விக்டர் ட்ரேமான்ட்டிற்கு, அமெரிக்க அதிபரே நேரடியாக சுதந்திரத்திற்கான பதக்கம் என்ற உயர்ந்த விருதை வழங்கி கௌரவப் படுத்துவதற்கும்  ஏற்பாடாகிறது.

கதையின் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழும் தருணங்கள் மிக சுவாரசியமாகக் கையாளப் பட்டிருக்கின்றன.

பெருவில் ஏற்படும் ஒருவிதமான காய்ச்சலுக்கு, மருந்தாக ஒருவகைக் குரங்கின் ரத்தத்தில் இருக்கும் ஆண்டிபாடீஸ் பயன்படுவதைக் கண்டறியும் டாக்டர் ட்ரேமான்ட், நோயை உண்டாக்கும் காரணியையும், நோயைக் குணப்படுத்து
ம் ஆண்டி பாடீசையும் தயாரித்து, நோயை பரப்பி அதற்குப் பிறகு அதற்கு மருந்தையும் கண்டுபிடித்துக் கோடிக்கணக்கில் காசாக்குகிற சதியை ஹேட்ஸ் ப்ராஜக்ட் என்ற பெயரில், அமெரிக்க அரசின் மிகப் பெரிய பதவியில் இருப்பவர்களுடைய கூட்டணியோடு உருவாக்குகிறார். ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் என்ற பழமையான நிறுவனத்தின் உரிமையாளருக்குத் தெரியாமலேயே, மிக நவீனமான ஆய்வுக் கூடம், மருந்து தயாரிப்பு எல்லாம் நடக்கின்றன.

நோயை உருவாக்கும் வைரஸ்,  குறிப்பிட்ட சிலருக்கு மருத்துவ உதவி என்ற பெயரில் செலுத்தப் படுகிறது. மாற்று மருந்து ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப் பட்டு, மருந்து சரியாக வேலை செய்கிறது என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. மற்றவர்கள், பெரும் அவஸ்தையுடன், இன்னதென்று நிர்ணயிக்கமுடியாத காரணத்தால் சாக விடப் படுகிறார்கள். நோயை உருவாக்குவதற்காக  ஆண்டிபயாடிக்ஸ் மருந்து என்ற போர்வையில், நோயைப் பரப்பும் மருந்துகள் ஏராளமாக சந்தையில் விடப் படுவதும், சரியான விலை கிடைத்ததும் மாற்று மருந்தும் கிடைக்கச் செய்வதுமான மருந்துத் தயாரிப்பு  நிறுவனத்தின் சதி மோசடி இப்படியாக அம்பலமேறுகிறது.

கதாநாயகன் ஜோனாதன் ஸ்மித், ஈராக்கில் இருந்து திரும்புகிற சமயம், அவரது நண்பர்களில் ஒருவரான மார்டி எதிரிகளிடம் சிக்கிவிடுகிறார். ஆரம்பத்தில் அவரை எச்சரித்த பால்ய நண்பர் பில், இந்த சதிகாரர்களுடைய கூட்டத்தில் ஒருவர் என்பதும், தன்னுடைய நண்பனைக் காப்பாற்ற முயற்சிப்பது தெரிந்த நிலையில் அவரை வைத்தே ஸ்மித்தை வலையில் சிக்க வைக்கிற முயற்சியும் நடக்கிறது. நண்பனைக் காப்பாற்றுகிற முயற்சியில் பில் தன்னுடைய உயிரைக் கொடுக்கிறார். அதற்குப் பிறகு, ஜோனாதன் ஸ்மித் எதிரிகளை எப்படி சமாளிக்கிறார் என்பது விறுவிறுப்பான க்ளைமாக்சில் வந்து முடிகிறது.


துறை சார்ந்த புதினமாக ராபர்ட் லட்லம், இன்னொரு எழுத்தாளருடன் சேர்ந்து எழுதிய கவர்ட் ஒன் தொடர் புதினங்களாக எழுதியதில் இது முதலாவது! இதற்கடுத்த கதைகள் எல்லாம் 2001 இல் ராபர்ட் லட்லம் மரணமடைந்த பிறகு, அவர் எழுதி வைத்திருந்த குறிப்புக்களின் அடிப்படையில் இன்னொரு எழுத்தாளரும் சேந்து எழுதி வெளிவந்தவை என்பது தகவல் தான்.

இந்தக் கதைகளில் முக்கியமாக, ஒரு விஷயம் எப்படி நடக்கிறது என்பதை விட அது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்பதில் தான் மனிதனின் கவனம் இயல்பாக இருக்கிறத் தன்மை வெளிப்படுவதைப் பார்க்கலாம். இந்த முதல் கதை அமெரிக்காவில்  கவர்ட் ஒன் என்ற ரகசிய அமைப்பு ஏற்படுத்தப் படுவதன் பின்புலமாக இருக்கிறது. இந்த அமைப்பு, கதாநாயகனுக்கு இதில் எதனால் ஒரு பிடிப்பு அல்லது லட்சிய வெறி ஏற்படுகிறது என்பதை, இந்தக் கதையில், கதாநாயகனுக்கு ஏற்படும் சொந்த இழப்பு வலுவான மோடிவாக  ஆரம்பித்து, தன் உயிரையே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய  சர்வைவல்,அப்புறம் இப்படியெல்லாம் அலைய, அழ வைக்கிறவர்களின் மீது வருகிற கோபம் என்று நாடகத்தனமான லாஜிக்குடன் கதை நகர்கிறது.

இப்படி நாடகத்தனமான லாஜிக் இருந்தால் தான் ஜனங்களிடம் இன்றைக்கு எடுபடுகிறது என்பது தான் மிகப் பெரிய சோகம்!

ராபின் குக் எழுதிய சுரம் புதினத்தில் இருந்த பலவீனம் இது தான்! ஊர்க் குளத்தில் ரசாயனக் கழிவைக் கொட்டிய நிறுவனம் வேண்டுமென்றே கான்சர் நோயைப் பரப்புவதற்காக அதைச் செய்யவில்லை என்று தானே சாதாரணமாகப் படிப்பவருக்குத் தோன்றும்! ராபர்ட் லட்லமின் இந்தக் கதையை எடுத்துக் கொள்ளுங்கள்! கதாநாயகனுடைய சொந்த இழப்பு இங்கே மிகப் பலமான மோடிவாக இருக்கிறது.

போபால் விஷவாயு வழக்கில் கூட நடந்த படுகொலையை நீதிமன்றம் திட்டமிட்ட படுகொலை அல்லது, அங்கே ஜனங்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்ததும், லட்சக் கணக்கானோர் பாதிக்கப் பட்டிருப்பது கண்கூடாக இருந்த போதிலும், சட்டம் அதைக் கொலையாகவோ, ஒரு பெரும் குற்றமாகவோ  பார்க்க முடியவில்லை என்பது தெரியும் தானே!

நாம் கூட அந்த நீதிபதியைப் போல, இவ்வளவுபேர் மடிந்த விவகாரத்தை செய்தித் தாளின் ஒரு ஓரத்தில் நாலைந்து நாட்களுக்கு வந்து அப்புறம் மறந்து போய் விடுகிற சமாசாரமாகத் தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம், இல்லையா!



Saturday, May 22, 2010

The Fever..! சுரம்! ஒரு விமரிசனப் பார்வை!

பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட என்னை அதிகமாக மிரட்டிய ஒரே எழுத்தாளர் ராபின் குக் தான்!

நீண்ட நாட்களுக்கு
முன்னால் நண்பர் டாக்டர் சுந்தரவடிவேல் இதைப் படியுங்கள் சார் என்று சிபாரிசு செய்து கொடுத்த புத்தகம், மருந்துக் கம்பனிகளின் தில்லுமுல்லு வேலைகளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியே கொடுத்த புத்தகம் தி ஃபீவர்!  (The Fever by Dr.Robin Cook)

இப்போது படிக்கிற மாதிரிக் கற்பனை செய்தாலே கூட சுரம் வந்து விடும்! அயன் ராண்ட் முதல், லியோன் யூரிஸ், போரிஸ் பாஸ்டர்நாக் இப்படி எத்தனையோ எழுத்தாளர்களை சகித்துக் கொள்ள முடிந்தவனை, படிக்கப் படிக்க வெறுப்பேற்றிய புத்தகம் அது! 

எழுதியவர் ஒரு மருத்துவர்! நிறைய தொழில்நுட்ப விவரங்களை, சாதாரணமாகப் படிக்க வருகிறவர்களுக்குக் கொஞ்சமும் புரியாத வகையில் அடுக்கிக் கொண்டே போனது தான் கோளாறு! தவிர, விவரங்களைச் சொல்லிவிட்டு நாசூக்காகத் தன்னுடைய தரப்பை எடுத்துச் சொல்வதற்குப் பதிலாக நேரடியாகவே ஒரு பிரச்சாரம் மாதிரி இருந்ததும் ஆரம்பநிலை வாசகருக்குப் புரிவதும், பிடிப்பதும் மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது.

பொதுவாகவே துறை சார்ந்த கதைகளை எழுதுவதில் ஆங்கில எழுத்தாளர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். மிகக் கடுமையான உழைப்பு, ஆராய்ச்சி, அடிப்படை விவரங்களைச் சேகரித்துக் கொண்டு, புறம் அதில் இருந்து ஒரு கதைக் களம், கதாபாத்திரங்கள் உருவாக்குவது என்பது மேற்கே கதை எழுத முனையும் அத்தனை எழுத்தாளர்களுக்குமே உரித்தான ஒரு பொதுவான பண்பாக இருக்கிறது.  

ஆர்தர் ஹெய்லி எழுதிய The Moneychangers புதினத்தைப் பற்றி இந்தப் பக்கங்களில் எழுதும்போது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வங்கிகள், இயங்கும் விதம், நடைமுறைகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அப்புறம் கதைக் களத்தை உருவாக்கிய விதத்தைச் சொல்லியிருக்கிறேன். புத்தகத்தைப் படிக்கும்போதே, ஒரு கதையைப் படிப்பதோடு, வங்கித் துறை சார்ந்த நிறைய விஷயங்களை தெரிந்துகொள்கிற மாதிரி இன்றைக்கும் பொருத்தமாக அந்தப் புதினம் இருப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் சொல்ல முடிகிறது!

முதலாவதாக, கதாசிரியர் வெறும் கதைதானே என்று அலட்சியமாக நம்மூர் பாலகுமாரன்கள் மாதிரி சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகாமல், எழுத  எடுத்துக் கொண்ட துறையைப் பற்றிய விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு, கதையோட்டத்தில் பொருத்தமான இடங்களில் அந்தத் தகவல்களை வாசகர்களும் தெரிந்து கொள்கிற மாதிரிக் கொடுத்திருந்தது!

இரண்டாவதாக, அவர் அந்தப் புதினத்தில் எடுத்துக் கொண்ட வங்கித் துறையின் பேராசை, நிர்வாகக் குளறுபடிகள், அதனால் பாதிப்புக்கு உள்ளாகும்  சாதாரண மக்கள் என்பது இன்றைக்கும் மாறாமல் அச்சு அசலாக அப்படியே திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருப்பது!

ஆக, அறிவியல் அல்லது ஏதாவது ஒரு துறை சார்ந்த புதினத்தை எழுதும் கதாசிரியருக்கு வெறும் கற்பனை மட்டுமே இருந்தால் போதாது! அவருக்கு அந்தத் துறையை பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்! தெரிந்து கொண்ட அத்தனை விஷயத்தையும் கதையில் அப்படியே கோர்த்து விட முடியாது,  துறை சார்ந்த விஷயங்களை மைஒயமாக வைத்து ஒரு சுவாரசியமான கதைக் களத்தை எடுத்துக் கொண்டு, கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிற கதா பாத்திரங்களை உருவாக்கவேண்டும், உடலுக்கு ரத்த ஓட்டம் எவ்வளவு அவசியமோ, அதேமாதிரி, துறை சார்ந்த தகவல்களைக் கதையின் ஓட்டமாகவும் அவசியமாகக் கலந்து படைக்க வேண்டும். அதில் வெற்றி காணும் போது, துறைசார்ந்த ஒரு புதினம் வெற்றிகரமாக, வாசகர்களால் கொண்டாடப் படுகிற விதத்தில் உருவாகிறது.

வாசகருக்குப் புரிய வேண்டும் என்பதையே மறந்து விட்டு எழுதிய மாதிரியிருக்கும் இந்தப் புதினத்தில், இந்த அடிப்படைக் கோளாறை மறந்து விட்டு வாசித்தால், உண்மையிலேயே மிடவும் அருமையான புத்தகம் தான்! சொல்லப் பட்ட விதம், உபயோகிக்கப் பட்ட தொழில் நுட்பச் சொற்கள், ரசாயனப் பெயர்கள் அதிகமாக இருப்பது, இன்னும் கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது.

The Fever கதையின் நாயகன்,  சார்லஸ் மார்டெல் ஒரு மருத்துவர். லுகேமியா என்ற ரத்தப் புற்றுநோய்க்குத் தனது மனைவியை பறிகொடுத்தவர். அதை அடுத்து புற்றுநோய்க்கு மருந்து கண்டு  பிடிக்கும் ஆராய்ச்சியில்  தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.  மருத்துவருடைய மகளுக்கும்அதே மாதிரியான மிக அரிதான புற்று நோய் இருப்பதைக் கண்டறிகிறார். 

ரசாயனக் கழிவை சுத்திகரிக்கிறேன் என்ற பெயரில் அந்த சிறுமி விளையாடும் இடத்தின் அருகே இருந்த சிறு குட்டையில் பென்சைன் என்ற புற்றுநோயைத் தூண்டுகிற காரணியாக இருக்கும் நஞ்சை, ஒரு மருத்துவக் கழிவை சுத்திகரிக்கும் ரசாயனக் கம்பனி தொடர்ந்து கொட்டிக் கொண்டிருப்பது தான் காரணம் என்று தெரிய வருகிறது.

தன் மகளை மருத்துவமனையின் அனுமதியில்லாமல் வெளியே கொண்டு வந்து மாற்று மருத்துவ முறையில் சிகிச்சையைத் தொடருகிறார். மருந்து ஒன்றையுமே கூடக் கண்டுபிடித்து விடுகிறார்.வில்லனாக, ஒரு மருந்துக் கம்பனி வந்து குறுக்கிடுகிறது. மருத்துவர் என்ற தகுதியையும், மகளுடைய உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக முயற்சிகளைச் செய்வதில்  பேராசை பிடித்த அந்த மருந்துக் கம்பனியின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்கிறார்.  

பெரும்பகுதிக் கதையில்  சார்லஸ் மார்டெல் எதன் மீதோ, எவர் மீதோ கோபத்தைக் கக்கிக் கொண்டிருப்பவராகவே சித்தரிக்கப் படுவதும், நிறைய ரசாயனக் கூட்டுப் பெயர்கள், விளைவுகள் என்று அடிக்கடி குறிப்பிடப் படுவதால், அடிப்படை ரசாயனம் அறியாதவர்களுக்குக் கொஞ்சம் கூடப் புரியாத வகையிலும், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை, பக்கத்திலேயே ஒரு அகராதியை வைத்துக் கொண்டு பொருள் தெரிந்துகொண்டு படிக்க வேண்டியதாக இருந்ததும் , இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கையில் எடுத்த அந்த நாட்களில் மிகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும், சோர்வடையச் செய்வதாகவும் இருந்தது.

ராபின் குக் மருத்துவராக இருந்து கொண்டே தன்னுடைய துறையில் நடக்கும் கொஞ்சம் அதீதமான அக்கிரமங்களை அம்பலப் படுத்துகிற வகையில் பல புதினங்களை எழுதியிருக்கிறார்.

இந்தப் பக்கங்களில்  போலி மருந்து, கலப்படம் செய்யப்பட மருந்துகளை அரசு மருத்துவ மனைகளிலேயே வழங்கப்பட்டதை மத்தியப் புலனாய்வுத் துறை திடீர் சோதனை நடத்தியதில் கண்டுபிடித்த விவரத்தைப் பற்றிய  பதிவாக எழுதிய பிறகு, சேகரத்தில் இருந்த ராபின் குக் எழுதிய  The Fever  புதினத்தை தேடியெடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

உயிர் காக்கும் மருந்துகள் என்று நம்பித்தான், மருத்துவர்கள், மருந்துக் கடைக் காரர்கள் சொல்வதை நம்பித்தான், என்னவென்றே தெரியாத ரசாயனக் கலவைகளை வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். கலப்படம் செய்யப் படாத சுயம்பிரகாசமாக இருக்கும் நிலையிலேயே, இந்த ரசாயனக் கலவைகள், ஒரு
வலியைக் குணப் படுத்தி வேறு பல திருகுவலியைக் கொண்டு வந்து சேர்ப்பதாகத் தான் இருக்கின்றன.

உதாரணமாக, இதய நோய்க்குப் பரிந்துரை செய்யப் படும் மருந்துகளில் பெரும்பாலானவை, காலப் போக்கில் சிறுநீரகத்தைக் காலி செய்து விடுவதாகத் தான் இருக்கின்றன. மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்காகக் கொடுக்கப் படும் ஆஸ்பிரின், வயிற்றில் ஓட்டை போட்டு விடுவது  சர்வ சாதாரணமான பக்க விளைவு. 

இப்படி அலோபதி மருத்துவத்தில், ரசாயன மருந்துகளின் பக்க விளைவுகளைப் பற்றி எந்த மருந்துக் கம்பனியும், பரிந்துரை செய்யும் மருத்துவரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் எச்சரிக்கை, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை, தடுப்பு வழிகளைச் சொல்வதே பெரும் பாலான தருணங்களில் இல்லை. மாறாக  கொசு அடிக்க பீரங்கி மாதிரி, ஓவர் டோஸ் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதே நிறைய இடங்களில் நடக்கிறது.

இந்த லட்சணத்தில், இந்தத் திருநாட்டில், அரசின் அலட்சியத்தால், காலாவதியான மருந்துகளை மறுபடி தேதி பேக்கிங் மாற்றி மறுவிற்பனைக்கு அனுப்புவதும், மருந்துகளிலுமே கூடக் கலப்படமும், போலி லேபிள்களும் நிறையவே புழக்கத்தில் இருப்பதை ஏதோ அந்த நேரத்துத் தலைப்புச் செய்தியாக மட்டும் படித்துவிட்டுப் போய்விடாமல் எச்சரிக்கையாக இருக்கக் கற்றுக் கொள்ளப் போகிறோமா?

ஊமைச் சனங்களாகவே இருந்துவிடுவது தான் சௌகரியமாக இருக்கிறது என்று  இலவச டீவீக்களில், காசு கொடுத்துக் கேபிள் கனெக்ஷன் வாங்கி, மானாட மங்கையர்கள் மார்பாடப் பார்ப்பதிலேயே பிறவிப் பயனை அடைந்து விட்ட திருப்தியில் இருந்துவிடப் போகிறோமா?

என்ன செய்யப் போகிறோம்? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 

 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)