நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வது, படித்ததில் பெற்ற அனுபவங்களை, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையில் இந்தப் பக்கங்களில் சில புத்தகங்கள், எழுத்தாளர்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தமிழில் கவிதை, சிறுகதை, வசன கவிதை, தேசீய கீதங்கள், கேலிச் சித்திரங்கள், பத்திரிக்கை நடத்திய அனுபவம் என்று எதைப் பேச முனைந்தாலும் அதன் முன்னோடியாக மஹாகவி சுப்ரமணிய பாரதியார் இருப்பதைப் பார்க்க முடியும். புத்தகங்களைப் பற்றி எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் பாரதியை மறத்தல் ஆகுமோ?!
பாரதியைத் தமிழகம் முழுமையாக அறிந்திருக்கிறதா?
பாரதியைப் பற்றி அவதூறாக விமரிசித்து வரும் நிறையக் கட்டுரைகளை இணையத்திலும் அச்சிலும் பார்க்கும்போது, பாரதியைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது மிகக் குறைவு தான் என்பது புலனாயிற்று. ஒரு நல்ல நூலைப் படித்து, அதை விமரிசனம் செய்யும்போது, படித்தவர் பரிந்துரையாக நாலு வார்த்தை சொல்லுவோமில்லையா?
அப்படிப் "படித்தான் பரிந்துரை" என்ற தலைப்பில் ஸ்ரீ ரங்கம் திரு. வி. மோகன ரங்கன் அவர்கள் மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் எழுதிய நூல் அறிமுகத்தை இங்கேயும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. இதோ ஸ்ரீ ரங்கம் வி மோகன ரங்கன் அவர்களின் மோகனத் தமிழில், படித்தான் பரிந்துரையாக......
சீனி.விசுவநாதன்
"பாரதி ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்" நூல் 640 பக்கங்கள் கொண்ட ஹார்ட் பௌண்ட் புத்தகம். முன்னரே சிக்கல்கள் மட்டும் பற்றிச் சிறு நூலொன்று இவரால் எழுதப்பட்டு வந்தது. ஆனால் இந்த நூல் மிக விரிந்ததும், கிட்டத்தட்ட அனைத்துக் குளறு படிகளையும், பாரதி நூல்கள், வாழ்க்கைச் செய்திகள், சரித நூல்கள், மூன்றாம் மனிதர் தகவல், சக காலத்து அறிஞர்கள் பின்னிட்டுப் பாரதியின் பெருமை உணரத் தலைப் பட்ட பின் புது ஊக்கம் கொண்டு தாங்கள் பழக நேர்ந்த பாரதி நாட்களைப் பற்றிய நேரடி வர்ணனைகளின் சான்றாண்மை என்று மிக விரிவாகச் செய்திருக்கிறார் ஆசிரியர்.
10 வால்யூம்கள் கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி நூல்கள் இது வரை வந்துவிட்டன. மேற்கொண்டு ஓரிரு வால்யூம்கள் வர இருக்கின்றன. அந்த நூல்களில் எல்லாம் ஆசிரியரின் உழைப்பைப் பூரணமாகப் பார்வையிடும் பொழுது எனக்குத் தோன்றிய கருத்து இந்த ஆசிரியருக்கு உண்மையில் இந்த வேலைக்காக இரண்டு பட்டங்கள் தரவேண்டும் என்பதுதான். ஏனெனில் பாரதியின் எழுத்துக்களைத் தேடிப்பிடித்து வந்து கால நிரல் படுத்தி ஊர்ஜிதம் செய்து போடுவது ஒரு பெரும் பணி.
அதோடு நிற்காமல் பாரதி ஒரு கட்டுரை எழுதுகிறார் என்றால் அந்தக் கட்டுரை வேறு ஏதோ நிகழ்ச்சிகளையோ, அல்லது மற்றவர் எழுதிய இதழ்க் கட்டுரைகளையோ குறிப்பிட்டால் அந்த நிகழ்ச்சிகள் பற்றிய தகவல், அந்தக் கட்டுரைகள் பற்றிய தகவல், முடிந்த இடத்தில் எல்லாம் அந்தக் கட்டுரைகளின் நகல், மற்றும் அதன் தமிழாக்கம் (ஆங்கிலமாய் இருப்பின்) என்று அந்தக் காலக் கட்டத்தையும் சேர்த்து ஆவணப் படுத்திவிட்டார் ஆசிரியர்.
இவ்வளவு நெடிய உழைப்பில் பழுத்த, பாரதி வித்தையை வளர்க்கும் பெரியவர் இப்பொழுது கொண்டு வந்திருக்கும் நூல் ‘பாரதி ஆய்வில் சிக்கல்களும் தீர்வுகளும்’. இந்த நூல் எந்த அளவிற்குச் சான்றாண்மை மிக்கதாய் இருக்கும் என்று நீங்களே ஊகிக்கலாம்.
நூலாசிரியரின் ’படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை’ என்ற அறிமுகம், 32 தலைப்புகளில் நெடுங்கட்டுரைகள், 6 பின்னிணைப்புகள் என்று நூல் பரந்துபட்டு பாரதி ஆய்வுலகின் சிக்கல்களையும், தீர்வுகளையும் விளக்குகிறது.
உதாரணத்திற்கு மூன்று சொல்கிறேன். ‘சத்தியப் போர்’ என்பது பாரதி பாடலா? சங்கு சுப்பிரமணியன் தம் இதழில் போட்டது. அது பாரதி பாடல் இல்லை என்று பாரதியின் தம்பி திரு சி விஸ்வநாதனும், திரு சிதம்பரம் ரகுநாதனும் கருத்து தெரிவித்தனர். திருமதி செல்லம்மா பாரதி வெளியிட்ட சுதேச கீதங்கள் பதிப்பில் இருந்ததாகத் திரு சிதம்பரம் ரகுநாதனின் கருத்து. பாரதியின் தம்பி கருதியது சொற்கள் பாரதியின் சொல்லாட்சியாக இல்லை என்பது. பாரதி பிரசுராலயம் வெளியிட்ட பதிப்பில் இந்தப் பாடல் இடம் பெறவில்லை. நூல் இந்தச் சிக்கலை விளக்கி, தீர்வும் தருகிறது.
அடுத்து பாப்பா பாடல். பாரதி பிரசுராலயத்தாரின் பதிப்பில் பல பிழைகள் என்று வாசகர்களின் சார்பாக நியாயக் குரல் எழுப்பினார் புதுமைப் பித்தன் மணிக்கொடியில். ஆனால் அவர் சுட்டிக்காட்டிய தவறுகள் பாரதி காலத்திலேயே பதிப்பிக்கப்பட்ட தொகுப்புகளில் ஏறியிருந்தால். அப்பொழுது அவை தவறுகள் அல்லவே.
கிடைத்ததைக் கொண்டு பாரதியின் ஆகச்சிறந்த உண்மையான பாடம் என்றுதானே ஆகும். இவை எல்லாம் பாரதி பற்றிய ஆவணங்களை பல பத்தாண்டுகளாகத் தேடித் திரட்டி வரும் ஆசிரியர் சுட்டிக் காட்டி உண்மை நிலவரங்களைத் தெளியப் படுத்துவது எத்தகைய ஆக்க பூர்வமான பணி!
அடுத்து, திலகர் மறைந்த போது ஏன் பாரதியார் அவரைபற்றி எதுவும் பாடவில்லை? எங்கிருந்தார்? கடலூரில் எழுதிக்கொடுத்த வாசகங்கள் அவரைப் பாட விடாமல் கையைக் கட்டிப் போட்டதா? கிடைத்த தகவல்களுக்கிடையிலும், அந்தத் தகவல்களையும் அணுகும் முறையில் ஆர்வம், ஆர்வமின்மை காரணமாகவும் பலரும் பெரும் கேள்விகள் எழுப்பி, தம் கேள்விகளையே முடிவுகளாகவும் ஆக்கிச் செய்திருக்கும் குழப்பத்தின் இடையே இந்தச் சிக்கல் என்ன? அதன் தீர்வு யாது? என்பது எவ்வளவு பெரிய விஷயம்?
பாரதிதாசன் நோக்கில் பாரதியார் என்னும்படி ஒரு நூலில் திரு மணிகண்டன் தொகுத்த பாரதி பற்றிய பாரதிதாசன் பாடல்களில் ஒன்று அன்றொரு நாள் என்று 1907 ஆம் ஆண்டைப்பற்றிக் குறிப்பிட்டு பாரதியார், வவெசு ஐயர், அரவிந்தர் ஆகியோரைப் பற்றிப் பாண்டிச்சேரி சூழலில் விவரிக்கிறது. ஆசிரியர் திரு சீனி. விசுவநாதன் ’பாரதிதாசன் ஆய்வாளர்கள் இந்தப் பாடலை மீள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார். ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா?
இதுபோல் 640 பக்கங்களும் பாரதி ஆய்வாளர்கள், மாணவர்கள், நேசர்கள் ஆகியோருக்கு அருமையான பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை.
பின்னிணைப்புகளில் தலைப்புகளே அவற்றின் முக்கியத்வத்தைக் கூறும்.
1)பாரதி காலத்தில் பத்திரிக்கைகளில் பிரசுரமான பாடல்கள்
2)பாரதி காலத்தில் நூல் வடிவம் பெறாத பாடல்கள்
3)பாரதி காலத்திய நூல்களில் மறுபிரசுரம் செய்யப்பட்ட பாடல்களுக்கான விவரம்
4)பிரிட்டிஷ் அரசு ஆட்சிக்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாரதி பாடல்கள்.
பாரதி இயலை கற்பனைகளின் மைதானமாக ஆக்கிவிடும் நிலையிலிருந்து மீட்டு, ஆரோக்கியமான ஆய்வுகள் மிகுவதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியதில் பெரும் பங்கு திரு சீனி. விசுவ நாதனுடையது.
பாரதி ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்
ஆசிரியர் --சீனி.விசுவநாதன்
முதற் பதிப்பு -- 31 டிசம்பர் 2009
நூல் கிடைக்குமிடம்
சீனி. விசுவநாதன்
2, மாடல் ஹவுஸ் லேன்,
சி ஐ டி நகர்,
சென்னை நகர் -- 600035
தொலைபேசி: 044-24315757
விலை ரூ 275 --00
மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தின் இழை ஒன்றில் இருந்து நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப் படுகிறது.


