Tuesday, March 23, 2010

தலைமைப் பண்பு! பத்துத் திசைகளிலும்!

தலைமை, தலைமைப் பண்பு என்பது ஏதோ உச்சியில் மட்டுமே இருப்பது அல்ல! எட்டுத்திசைகளோடு, மேலே, கீழே என்று பத்துத் திசைகளிலும் பரவியிருந்தால் மட்டுமே அங்கே ஒரு நல்ல தலைமை இருக்கிறதென்று சொல்ல முடியும். 

தவிர, தலைமைப் பண்பு என்பது ஏதோ ஒரு நபருடன் நின்று விடுவது மட்டும் அல்ல! உடலெங்கும் ரத்தம்பாயும்போது, ஒவ்வொரு திசுவுக்கும் தேவையான பிராண வாயுவையும், க்ளூகொசையும் கொடுத்துவிட்டு, கழிவுகளைக் கொண்டு வந்து அதை அகற்றுகிற இடங்களுக்குக் கொண்டு சேர்க்கிற மாதிரி, ஒரு நல்ல தலைவன், தன்னுடன் பணி புரிபவர்களுக்கு ரத்தமாக இருக்கிறான். 

உயிரோட்டமாக எங்கும் பரவி நிற்பது தான்,  நல்ல தலைமைப் பண்பு!

தலைவர்கள், நிர்வாகிகள்  என்றால் உத்தரவு போடுகிறவர்கள், மேஸ்திரிகள், கங்காணிகள்  மாதிரிப் பழைய நினைப்புக்களிலேயே இங்கே நிறைய நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 


ஒரு புதிய சிந்தனை, ஒரு பண்பாக வளர்ந்து வருவதை, மேலாண்மை, நிர்வாகம், தலைமைப் பண்பு என்ற தலைப்புக்களிலேயே இங்கே எழுதியது தான்! மனித வளம் குறித்த சிந்தனைகளை ஒரே இடத்தில் தொகுத்து வைக்க வேண்டும் என்பதற்காக இங்கே மீள்பதிவாக! எனக்கும், மறுவாசிப்பு, அதைத் தொடர்ந்து எழும் சிந்தனையின் விரிவுக்காக!

ஜான் மாக்ஸ்வெல் என்பவர் எழுதிய , The 360° Leader என்ற புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை ஒரு வலைப்பதிவில் படித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு தலைவனுக்குரிய குணங்களை, தலைமைப் பண்பைப் பற்றிய புத்தகம், அதில்  இருந்து சுவாரசியமான ஒரு பகுதியைப் படிக்க நேர்ந்தது.  

ஆயிரம் உண்மையான நண்பர்களை, பின்தொடர்ந்துவருபவர்களைப் பற்றி, அப்படிப்பட்ட நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்வது வெற்றிக்கான உத்தரவாதமாக எப்படி இருக்கும் என்பதை சேத் கோடின் பதிவைத் தொடர்ந்து எழுந்த சிந்தனையாகச் சொல்லியிருந்தேன் இல்லையா!


வெற்றிக்குப் பல படிகள், ஒன்று மட்டுமே போதுமானது அல்ல என்பதை இன்னொரு கோணத்தில் இந்த நூலில் ஜான் மாக்ஸ்வெல் சொல்கிறார். அவர் சொல்லும் ஒரு கதை இது.ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன.

எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை."

எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!"

வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச்  சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே  அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது.

உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்! காட்டில் வேட்டையாட வந்த ஒருவன்  கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்..

வான் கோழி பணால்! உசரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று!

வான்கோழி படத்தைத் தேடும்போது கிடைத்த ஹோலிஸ்டிக் ஹீலிங் என்ற தலைப்பில் வான்கோழியை பற்றிய இன்னொரு சுவாரசியமான  தகவலைப்   பார்க்க 


உச்சிக்குப்போவது அவ்வளவு பெரிதான விஷயமில்லை! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். 

கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முடிவது தான்!

இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் ஜான் மாக்ஸ்வெல் சொல்லியிருப்பதாகப் படித்த போது, தலைமைப் பண்பு பற்றிய ஒரு சித்திரம் முழுமையடைந்து வருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இங்கே இதை எழுதுவது  தலைவர்களாக எல்லோருமே ஆகிவிட முடியும் என்ற கற்பனையை விதைப்பதற்காக இல்லை!.தலைவனாக இருப்பதற்கு, இன்னொரு அடிப்படையான தேவை, ஒரு குறிக்கோளுடன் கூடிய குழுவை உருவாக்குவது தான்! குழுவாகச் செயல்படும் கூட்டுறவுமே மிகவும் அவசியம். 

ஒரு குழுவில், ஒரு தலைவனுக்குக் கீழே இருக்கும் நிலையிலும், தலைவனாவதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்வதே கூட, ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்துக்குச் செய்கிற மிகப்பெரிய உதவிதான்!

எம்ஜியார் பாட்டில் வருவது போல தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப்பான் என்பது கண்மூடித்தனமாகக் கேள்வியே கேட்காமல் பின் பற்றுவது, கொடி பிடிப்பதும், தீக்குளிப்பதும் அல்ல!

ஒரு சாதாரணமான மனிதனாக இருந்து கொண்டே, நம்மால் நம்பிக்கையை விதைக்க முடியும்! நம்மைச் சுற்றி உள்ளவர்களுடைய வாழ்க்கையில் தேவைப் படுகிற உந்து சக்தியாகவும், மகிழ்ச்சியைத் தருபவர்களாகவும் இருக்க முடியும்!

ஒரு நல்ல தலைவனுடைய தலைமைப் பண்பு அவன் எத்தனை ஆயிரம், லட்சம், கோடி நபர்களுக்குத் தலைமை தாங்குகிறான் என்ற எண்ணிக்கையில் இல்லை. ஜனங்களிடமிருந்து சுரண்டிக் கொழுப்பவன் ஒருபோதும் அவர்களுடைய தலைவனாக முடியாது.

ஒரு நல்ல தலைவன் என்பவன், தன்னிடமிருந்து நம்பிக்கை, எதிர் காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான கனவு, செயல் திட்டம், செயல்படுத்துவதில் உற்சாகம் என்று நல்ல விஷயங்களைக் கொடுக்கிறான். 

சமூகம் அவனிடமிருந்து ஒரு கனவை, ஆதர்சத்தை, நாளைய பொழுது நம்முடையதே என்ற தெளிவைப் பெறும்போது, அங்கே ஒரு நல்ல தலைவன் மட்டுமல்ல, ஒரு நல்ல சமுதாயமும் கூடவே உருவாகிறது! 


Wednesday, March 17, 2010

மனமது செம்மையானால், மந்திரம் செபிக்க வேண்டா !


மனமென்னும் கருவியைக் கூர்மையாக வைத்துக் கொள்ள.....சில குறிப்புக்கள்!

எண்ணங்கள், அதாவது எண்ணுவது அல்லது நினைப்பது மிகவும் எளிது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  

உண்மையில் அப்படித்தானா ?
'நினைப்புத் தானே பிழைப்பைக் கெடுக்குது' என்று அனுபவசாலிகள் பட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்
எதையோ காமாசோமா என்று குழப்பமாக நினைத்துக் கொண்டிருப்பது ஒரு ரகம். தெளிவாக, விவரமாக நினைக்கப் பழகுவது என்பது வேறு ரகம். நினைப்பில் ஓடுவதை ஆராய்ந்து, அதைத் தெளிவாகவும் சொல்லவேண்டும் என்றால், பரீட்சைக்குத் தயாராகிற ஒருவன் பென்சிலைக் கூர்மையாக வைத்திருப்பது போல, மனத்தையுமே கூர்மையாக வைத்திருக்கப் பழக்க வேண்டும். கொஞ்சம் கடினமானது மாதிரித் தெரிந்தாலுமே, பழகப் பழகச் சித்திரம் வரைவது கைவருவது போலவே, மனத்தைக் கூர்மையாக வைத்திருக்க உதவும் கருவி! பயிற்சி என்பது, யானையை அடக்கி வைக்க உதவுகிற அங்குசம் போலமிகவும் சிறிது! உபயோகமோ பெரிது. இப்படி மனத்தை ஆராய்கிற பயிற்சிகள், பழக்கங்கள் எல்லாம், மனத்தைப் போலவே  பரந்து விரிகிறதாகத் தான்  இருக்க வேண்டும் என்பதில்லை, சின்னச் சின்னப் பயிற்சிகள் தான்! தொடர்ந்து ஈடுபாட்டுடன் செய்வது என்பது  இந்த சின்ன அங்குசமே. அடங்க மறுக்கும் மனத்தை அடக்கியாளும் வலிமையான கருவி 

Consistency! Continuity! Concentration!

முதலில் , ஒரு விஷயத்தை உண்மை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

முதலில், உண்மை என்பது ஆரம்ப நிலைகளில், உணர்ச்சிகளால் தேடப்படுவது.
உணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும் போது திரித்துச் சொல்வது அல்லது புரிந்து கொள்வதுமே ஆரம்பமாகிவிடுகிறது. திரித்துத் திரித்துக் கடைசியில் உண்மையை நேரெதிரான திசையில் பார்க்க முயல்கிறோம்.என்பதைவிட உண்மையைத் தவறவிட்டு விடுகிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அடிக்கடி நமக்கு "தெரிந்த" விஷயங்களைக் கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு அதில் எந்த அளவு ஆதாரத்தோடு இருக்கிறது, உணர்ச்சிகள் எந்த அளவுக்கு புகை மூட்டம் போட்டிருக்கிறது என்பதைப் பார்க்கப் பழக வேண்டும்.


அடுத்ததாக, நாம் ஏன் சில விஷயங்களை உண்மையென்று அப்படியே நம்பிவிடுகிறோம்


முதல் பாராவில் சொன்னது போல, நம்முடைய அபிப்பிராயங்கள் பெரும்பாலும் அப்படியே ஸ்வீகரிக்கப்படுவது, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படாதது.மனத்தைக் கூர்மையானதாக்க, நம்முடைய அபிப்பிராயங்களையும், இது இப்படித்தான் என்று ஆராயாமலேயே முடிவு கட்டிவிடுகிறோமே, அதையும் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்குங்கள்!

மூன்றாவதாக, எந்த ஒரு விஷயத்தையுமே, எவ்வளவு சாமர்த்தியமான வாதத்திறமையினால் சொல்லப் பட்டிருந்தபோதிலுமே கூட,அப்படியே  உண்மை என்று எடுத்துக் கொண்டு நம்பி விட வேண்டாம்.வாதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கிற காரணங்கள், உள்நோக்கம்  என்ன என்று தேட முயலுங்கள்உன்னதமான வாதத் திறமையினால், மட்டமான கருத்துக்களைக் கூட உண்மையாக்கிவிட முயற்சி நடக்கிறதா என்பதைப் பாருங்கள்


நான்காவதாக, எங்கே வித்தியாசம் நூலிழை மாதிரி ஆரம்பித்துப் பெரிதாகிறது, எப்படி உண்மையல்லாததும், பொய்களும்  உண்மை போலச் சித்தரிக்கப்படுகிறது என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தவறானசெய்திகள், பிழையான செய்திகள், பொய்யான செய்திகள் என்பதில் இந்தப் பொய்யான செய்தி இருக்கிறதே, இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, திரித்துச் சொல்லப்படுபவை. ஆரம்பத்திலேயே இனம் கண்டு பிரித்து வைக்கத் தெரியாவிட்டால், தடம் பிறழ்ந்து உண்மையை விட்டு வெகுதூரம் விலகி விடுவோம்.இந்த தேசத்தின் வரலாறு, இப்படித் தான் கொஞ்ச கொஞ்சமாகத் திரிக்கப்பட்டு, உண்மையல்லாததெல்லாம் உண்மைகளாகச் சொல்லப் பட்டு வருகிற பரிதாபம் போல ஆகி விடும்.

ஐந்தாவதாக, எந்த ஒரு கருத்தின் தாக்கத்தைப் பற்றியும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் நல்லது. சில விஷயங்கள் மேலோட்டமாக சுவாரசியமாக இருக்கும், ஆனால் சிறிதுகூடப் பயன்படாது. வேறு சில விஷயங்களோ, மிகச் சாதாரணமாக இருக்கும், ஆனால் மிகப் பெரிய உயரத்துக்கு நம்மை இட்டுச் செல்வதாகக் கூட அமைந்துவிடும்.தலைமைப் பண்பு, சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்களை, பதிவுகளைத் தேடிப் படிக்கிற பழக்கம் எனக்குண்டு என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் நண்பர் ஒருவர் மார்க் சன்போர்ன் என்பவர் எழுதிய சுய முன்னேற்றக் குறிப்புக்கள், பதிவுகளில் இருந்து இந்தப் பகுதியை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். சுவாரசியமாக இருந்தது. உபயோகமாகவும் இருந்தது என்பதால் இங்கே, கொஞ்சம் விரிவான மொழிபெயர்ப்பாக, எல்லோருக்கும் பயன் படட்டும்என்பதற்காக!

மனமது செம்மையானால்
, மந்திரம் செபிக்க வேண்டா என்று மனம் தன்னுடைய முழு ஆற்றலையும் நல்லவிதம் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த நிலைக்குமுன்னோட்டமாக  இந்த ஐந்து வழிகளைக் கொஞ்சம் கடைப்பிடிக்க முடிகிறதா, உபயோகமாக இருக்கிறதா என்று சொல்லுங்களேன்
Saturday, March 6, 2010

அன்பே ஆரமுதே! தி ஜானகி ராமன்-ஒரு சொற்சித்திரம்!

 

இணையத்தில் கிடைத்த ஓவியர் சிற்பியின் பென்சில் ஸ்கெட்ச்

ஓவியர் சிற்பி தமிழ் நாட்டின் பிரதானமான கோயில் மூலவர்களைத் தன்னுடைய தூரிகையில் ஓவியங்களாக வடித்திருப்பதை நம்மில் பலரும் அறிந்திருப்போம்! அப்படி அவர், மதுரை கூடல் அழகர் கோவிலில், மூலவரை வரைகிற நாட்களில் என்னுடைய இளம் வயதில் நிறைய நாட்கள் பார்த்திருக்கிறேன்.  

மூலவரைக் கருவறைக்குப் பக்கத்தில் நின்று கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருப்பார், அப்படியே திரும்பி வந்து பென்சில் ஸ்கெட்ச்சில் வரைவார், மறுபடி பக்கத்தில் போய் நின்று  கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்று திரும்பி வந்து, மூலவர் வடிவத்தின் இன்னொரு பகுதி பென்சில் கோடுகளில் ஸ்கெட்ச்சாக முழுமை பெறும். இப்படி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, பல நாட்கள், அவர் அப்படி பென்சில்  ஸ்கெட்ச்சிலேயே கூடல் அழகரைக் கொண்டு வந்ததைப் பக்கத்தில் நின்று பார்த்திருக்கிறேன்! 

கோயில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த  கேசவன் பட்டருடன் மட்டும் சிறிது பேசுவார். அமைதியாகத் தான் உண்டு, கோட்டோவியம் உண்டு என்று வரைவதில் மட்டும் கவனம் செலுத்திய தேர்ந்த ஓவியனை, கலைஞனைப் பக்கத்தில் இருந்து பார்த்து, பிரமித்த அதே சிறுவனாக இப்போதுமே கூட உணர முடிகிறது. கலையின் தாக்கம் அத்தனை வலியது!

பின்னால் வண்ணம் தீட்டப் பட்ட படமாகவும் கல்கி தீபாவளி மலரில் அந்தப் படத்தை முதன் முதலாகப் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் பிரமிப்பு! பென்சில் கோடுகளில் உருவான ஓவியம் ஒரு விதம் என்றால், வண்ணம் தீட்டின பிறகு பார்த்தபோது, நேரில் பார்க்கும் போது தெரிகிற வண்ணங்களை எப்படித் தன் நினைவில் வைத்திருந்து, பொருத்தமாகக் குழைத்து அச்சு அசலாகப் படத்தை  நிறைவு செய்திருந்தார் என்பது இன்றைக்குக் கூட நினைத்துப் பார்க்கையில் மிகவும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது! ஒரு கலைப் படைப்பு  என் கண் முன்னால், எழுந்து நிறைவானதைப் பார்க்கும் அதே பிரமிப்பு., நல்ல எழுத்திலுமே, பாத்திரங்களைச் சமைக்கிற விதத்தில் கொஞ்சம் கூடக் குறையாமல், ஒவ்வொருதரம் படிக்கும்போதும் என்னால் அனுபவிக்க முடிகிறது.

 
வெங்கட் சாமிநாதனுடன்,  தி.ஜானகிராமன்

தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளுமை என்று சொன்னால், உடனடியாக நினைவுக்கு வருவது தி.ஜானகி ராமன் மட்டும் தான்! கல்கி முதலான எத்தனையோ எழுத்தாளர்கள், நல்ல எழுத்தை வாசிக்கும் அனுபவத்தைத் தந்திருக்கிறார்கள் என்றாலுமேகூட, அவர்கள் எவரும் எட்ட முடியாத உயரத்தில் நின்று பாத்திரங்களைப் படைத்தவர் தி.ஜானகிராமன். ஒவ்வொரு பாத்திரமும், அது ஒரே ஒரு பத்தியில் வந்துவிட்டுப் போய் விடுகிற ஒன்றாக இருந்தால் கூட, மறக்க முடியாத சித்திரமாக மனதில் பதிகிற மாதிரி, உயிரோவியமாகப் படைக்கிற திறமை தி.ஜா ஒருவரிடம் மட்டுமே இருந்தது.

"தமிழின் வாசிக்கப் படவேண்டிய எழுத்தாளர் யார் எவர் என்று கேட்டால், தயங்காமல் முதலில் தி.ஜானகிராமன் தான் என்று சொல்லுவேன்!"

இப்படிப் போன பதிவில் சொல்லியிருந்தது வெறும் முகஸ்துதியாகவோ, அல்லது கண்மூடித்தனமான அபிமானத்திலோ அல்ல என்பதை மறுபடியும் சொல்வதற்காகத் தான், ஓவியர் சிற்பி ஓவியம் வரைந்ததைப் பார்த்த அனுபவத்தை இங்கே சொன்னது!

இதை தி.ஜானகிராமனுடைய வார்த்தைகளிலேயே கொஞ்சம் பார்ப்போம்!

" இலக்கியப் பணி என்று எதைச் சொல்வது?

என் ஆத்மா எதிரொலிப்பாக,   நான் வாழும் வாழ்க்கையின் ரசனையை எனக்கு எளிதாகக் கை வரும் எழுத்தின் மூலம் வெளிக் காட்டுகிறேன்.
இதில் சேவை என்பதோ, பணி என்பதோ இடமே பெறவில்லை.

என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகிறேன். சுற்றிலும் உலகம்சிறியதும் பெரியதுமாக, சாதாரண அசைவுகளில் கூட,  வியப்புக்கள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம் தான்!

அதைத் தான் நான் பகிர்ந்து கொள்கிறேன் -- எழுத்து மூலம்! "

இந்த வாசகங்களை, அன்பே ஆரமுதே புதினத்தின் பின் அட்டையில் படித்தபோது, எதற்காக எழுதுவது, எப்படி எழுதுவது என்ற கேள்விகளுக்கு
விடை சொல்கிற மாதிரி,  எது நல்ல எழுத்து என்பதை அடையாளம் காட்டுகிற மாதிரி இருப்பதை, உணர்ந்து  அனுபவித்தே எழுதுகிறேன்!

தி.ஜானகிராமனைப் பற்றி பேசும் போது, கொஞ்சம் ஃபிராய்டியம் கலந்து பேசுகிறவர், கதையே இல்லாமல் தளுக்கான வார்த்தைகளில் சம்பவங்களைக் கோர்த்து எழுதுகிறவர், காமம் கனிந்த பெண்களைப் பேசுகிறவர், பால குமாரன்கள் முளைக்கிற நாற்றங்கால் என்றெல்லாம் மேம்போக்காக விமரிசித்து ஒதுக்கி வைத்துவிட முயற்சிக்கிற சில உத்தமத் தமிழ் எழுத்தாளர்கள், புத்தகத்தைப் படிக்காமலேயே, யாரோ சொன்னதைக் கேட்டு விட்டு அதையே கிளிப்பிள்ளை மாதிரிச் சொல்கிற பதிவர்கள், எதோ ஒரு பதிவின் பின்னூட்டமாக இனிமேல் தான் படிக்க வேண்டும் என்று  பல காலமாகச் சொல்லிக் கொண்டிருப்பதையே பெருமையாகப் பேசுகிறவர்களைப் பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது! 

லோகோ பின்ன ருசி என்று, இந்த உலகத்தில் ரசனைகள், அளவீடுகள், ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம் மாறிக் கொண்டே இருப்பவை என்பதைப் புரிந்துகொண்டபோது அந்த ஆச்சரியமும் போய் விட்டது!

ஆனாலும் காக்கைப் பொன்னெல்லாம் தங்கத்தை விமரிசிக்கும்போது ......?

எப்படி இவர்களால் இன்னது என்றே  தெரியாத ஒரு விஷயத்தை,  புரிந்துகொள்ள முயற்சிக்காத ஒரு அனுபவத்தைப் பற்றி  இவ்வளவு  விமரிசிக்க முடிகிறது? தி.ஜானகிராமனை கொஞ்சம்  ஃபிராய்டியம் கலந்து பேசுகிறவர் என்று எதை  வைத்துச் சொல்கிறார்கள்? மோக முள்ளில் ஒரே ஒரு வரியா மட்டும் வைத்துக் கொண்டு என்னவோ தகாத உறவுக் கதை எழுதுகிறவர் என்று எப்படி முடிவு செய்கிறார்கள்? இதயம் பேசுகிறது மணியன் மாதிரி சனாதனக் காவலர் வேஷத்தில், எல்லாவற்றையும் நாசமாக்கவந்தவர், அதனால் இவரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூக்குரல் இடுகிறார்கள்?

மனித மனங்களைத் தொட்டு, மனதின் வீச்சைத் தொட்டு, உணர்வுகளைத் தொட்டு  எழுதுகிற எல்லாமே ஃபிராய்டியம் தான் என்றால், அப்போது அது சரி! ஆனால், ஃபிராய்டியம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் தி.ஜாவைப் பற்றி அப்படி விமரிசிக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.

தி.ஜானகிராமனுடைய எழுத்து எப்படிப் பட்டது, எதை அஸ்திவாரமாகக் கொண்டு எழுந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் அன்பே ஆரமுதே புதினத்தையோ, அல்லது உயிர்த்தேன் புதினத்தையோ படித்துப் பார்க்கட்டும்! இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியுமானால், குறைந்தபட்சம் திறந்த மனதோடு படிக்க முடியுமானால், நளபாகம் புதினத்தைப் படித்துப் பார்த்தால், முழுக்க முழுக்க சக மனிதர்களைப் புரிந்து கொள்கிற இங்கிதம், எவரையும் குறை சொல்லாமல், அன்பு வெளிப்படும் வெவ்வேறு நிலைகளைச் சொல்வதாகவே அவருடைய பாத்திரங்கள் ஒவ்வொன்றும் நுட்பமாகச் செதுக்கப் பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மோக முள் புதினம் என்னவோ, தன்னை விட வயதில் மூத்தவளைக் காதலிப்பது, நிராதரவாக நின்ற நிலையில் அந்தப் பெண்ணே தன்னை அவனுக்குக் கொடுப்பது "இதுக்குத்தானே?" என்ற ஒரு வார்த்தையை வைத்து மொத்தக் கதையுமே இவ்வளவுதான் என்று  இப்படியே சிந்தித்துக் கொண்டு போகிற போது, நாவலுக்கான விரிவும் அக ஆராய்ச்சியும் இல்லை  என்று தான் இங்கே சில உத்தமத் தமிழ் எழுத்தாளர்களாலேயே சொல்ல முடிகிறது என்பதை  ஏற்கெனெவே இங்கே பார்த்திருக்கிறோம்.  

அவர்களை வைத்து எந்த எழுத்தையும், படைப்பையும் அதனதன் தராதரத்தில் அறிய முடியாது! அறிந்துகொண்டுவிடக் கூடாதே என்பதற்காகத் தான் இப்படி விமரிசனங்களைத் தூவி விட்டுப் போகிறார்களோ என்னவோ?

ஓவியர் சிற்பி படம் வரையும் விதத்தை  முதலில் பார்த்தோமல்லவா, அதே விதமாக தி.ஜா மாதிரித் தேர்ந்த கலைஞரிடமிருந்து ரசனையோடு ஒரு கோட்டோவியமாக! ஒரு குணச்சித்திரம்! இந்தப் பாத்திரம் கதை போகிற போக்கில் ஒரு இருபது வரிகளில் சொல்லப் படுவது, கதைக்கு அவசியமானது இல்லை, இந்த இருபது வரிகளைத் தாண்டிக் கதையில் மறுபடி வருவதுமில்லை! 

ஆனாலும்  கதையைக் கதையாக அல்லாமல், பாத்திரங்கள் அத்தனை பெரும் நம் கண் முன்னால் உயிரோடு நடமாடுகிற மாதிரிச் சித்தரிக்க உதவும் ஒரு உத்தியாக, குதிரைக்குக் கண்ணைக் கட்டி விட்டு பார்க்கிற மாதிரி இல்லாமல், கதை விரியும் களத்தை முழுமையாகப் பார்க்கும் விதத்தில் இருப்பதை ரசனை உள்ள வாசகன் எவனுமே புரிந்துகொள்ளக் கூடியதாக!

அன்பே ஆரமுதே புதினத்தின் நாயகன் அனந்தசாமி, ஒரு துறவி!  தேடிச் சென்று வைத்தியம் பார்க்கிறவர்! உடம்புக்குத் தான் மருந்து என்று இல்லை, காயப் பட்டுப் போன, அல்லது ஏங்கித் தவிக்கும் மனங்களுக்கு இதமான வார்த்தைகள், பரிவினாலும் வைத்தியம் செய்கிறவர். இரண்டு பெண்டாட்டிகளைக் கட்டிக் கொண்டு குடித்தனம் நடத்தும் ஒரு ரிக்ஷாக் காரனுடைய மனைவிக்கு வைத்தியம் பார்த்து விட்டுத் திரும்பும்போது அனந்த சாமிக்கு, நுங்கம்பாக்கம் முதலியார் தன்னுடைய வேலைக்காரன் ஏழுமலையைப் பற்றிச் சொன்னது நினைவு வருகிறது.

"நம்ம ஏழுமலையை என்னான்னு நினைக்கிறீங்க? உங்களுக்கு சன்யாசம் தொழில், வைத்தியம் பொழுதுபோக்கு. எனக்கு கட்டட காண்ட்ராக்ட் தொழில், பிரசங்கம் கேட்கிறது பொழுதுபோக்கு. நம்ம வீட்டிலே ஏழுமலைக்கு வேலை, கலியாணம் பண்ணிக்கறது பொழுதுபோக்கு! ஆமாங்க!

---என்ன சிரிக்கிறீங்க? நான் சொன்னா நம்ப மாட்டீங்க, அவனையே வேணாக் கேட்டுப் பாருங்க! திடீர்னு நினைச்சுக்கிட்டு ஒரு கலியாணத்தைப் பண்ணிக்கிட்டு வந்துடுவான். 

வில்லிவாக்கத்துலேயிருந்து புடிச்சா அடையாறு வரைக்கும் அவனுக்கு ஒன்பது  பொஞ்சாதி இருக்கு. கடக்கரை ஓரமாகக் குப்பத்திலே வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கான். ஆனால் எல்லாம் கட்டின பசுவாட்டம் இருக்கும். ஒரு தம்பிடிக் காசு கேட்காது! அதது ரோடு வேலை, வீட்டு வேலை, கொல்லத்து வேலைன்னு சாப்பிட்டுப் பொளைச்சிட்டிருக்கு!

ஐயா இப்பிடிப் போவாரு.....பஜ்ஜி என்ன 'பன் ' என்ன டீ என்ன---அப்படி உபசாரம் அவருக்கு நடக்கும். தலைப்பிலே ரண்டு மூணு இருந்தா அதையும் வாங்கி முடிச்சுக்கிட்டு வருவாரு. அப்படித் தானேய்யா!" என்பார்.

பெரிய மீசை சரிந்து தொங்க நாணத்துடன் சிரிப்பான் ஏழுமலை. 

"ஏன்யா, நான் சொல்றது சரிதானேய்யா ?" என்று ஏழுமலையை அதட்டுவார் முதலியார்.

"ஆமாங்க..தம்மாத்தூண்டுன்னா, ஐயா இம்மாப்பெரிசாத்தான் சொல்லுவாங்க.."

"ஏய், உனக்கு ஒன்பது பொஞ்சாதி இருக்கா, இல்லையாடா?"

"இருக்கு"

"யாருக்காவது ஒரு மிட்டாய் வாங்கிக் கொடுத்திருப்பியா? அல்லது ஒரு இட்டிலித் துண்டு....?"

"வாங்கிக் கொடுக்காம....சும்மாவா..ஐயாவுக்கு என்னை சதாய்ச்சுக்கினே இருக்கணும்" என்று சிரித்து மழுப்பிக் கொண்டே போய்விடுவான் அவன்.

"பாத்தீங்களா, நிக்கிறானா பாத்தீங்களா, ஒரு பொஞ்சாதியைக் கட்டிக்கிட்டு ஒம்பதாயிரம் கவலையைத் தான்கிட்டுக் குந்தியிருக்கிறோம், அவனுக்குக்  கல்யாணம் பொழுது போக்காயிடிச்சு!" என்று கூறி முதலியார் சிரிக்கிற வழக்கம்.

இவ்வளவு வேடிக்கை நிறைந்த உலகத்தைத் துறந்து, காட்டிலும் மடத்திலும் உட்கார்ந்து எதைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டார் அனந்தசாமி.

இங்கே அனந்தசாமி மட்டுமே வேடிக்கைகள் நிறைந்த இந்த உலகத்தை ஆச்சரியத்தோடு பார்க்கவில்லை! வாசித்துக் கொண்டிருக்கும் நாமுமே, கண்முன்னால் விரிகிற இந்த உலகத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் பார்க்கிறோம்!

ஆச்சரியம் எழுதிய விவரணையில்  மட்டுமே இல்லை. இந்த மாதிரியான மனிதர்களை, நாம் நம்முடைய  வாழ்க்கையிலுமே பார்த்துக் கொண்டு அல்லது கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். 

தி.ஜானகிராமனுடைய பாத்திரப் படைப்புக்களில் நம்மைச் சுற்றி உள்ள  உலகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அவர்களுடைய ஆசாபாசங்கள், பரிதவிப்புக்கள் அப்படியே கண்முன்னால் விரிவதைப் பார்க்கும்போது, ஒரு கதையைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அங்கே தலைதூக்குவதில்லை.

கோட்டோவியங்கள், வண்ணம் தீட்டப்பட்ட பிறகு முழுமையடைவதைப் பார்க்கும் அதே அனுபவம்!


அது தான் எழுத்தின் முழுமையான வெற்றி! ஆளுமை!  


Thursday, March 4, 2010

அம்மா வந்தாள்! --தி.ஜானகிராமன்
"அம்மா வந்தாளைப் பற்றி நான் ரகசியங்கள் ஏதும் சொல்ல இல்லை. நூல் தான் முக்கியம். எப்படி, என் எழுதப்பட்டது என்பது யாருக்குமே முக்கியமில்லை என்பது என் துணிபு. கலைப்படைப்பு என்ற ஒரு நோக்கோடு அதைப் பார்ப்பது நல்லது. பலர் அதைத் தூற்றி விட்டார்கள். நான் 'பிரஷ்டன்'  என்றும் சொல்லி விட்டார்கள். நம்முடைய நாட்டில் கலை ப்ரஷ்டர்களிடமிருந்து தான் பிறந்து வருகிறது என்று கூற விரும்புகிறேன்.

"அம்மா வந்தாள்" நான் கண்ட, கேட்ட சில மனிதர்கள், வாழ்க்கைகள், பாத்திரங்கள் இவற்றிலிருந்து வடிக்கப் பட்ட ஒரு முயற்சி மனத்துக்குள் ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள், பலவற்றைப் பார்த்து ஊறி வெகு காலமாக அனுபவித்த சில உணர்வுகள் கடைசியில் எப்படியோ உருவம் பெறுகின்றன. நம் உருவம் கொடுப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அம்மா வந்தாளின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், நான் பார்த்த ஏழெட்டுப் பாத்திரங்களின் சேஷ்டைகள் ஒருமித்து இருக்கின்றன.

அந்த அம்மாள் நான் கண்ட ஐந்தாறு பெண்களின் கலவை. அகண்ட காவேரி, வேத பாட சாலை, சென்னையின் பெரிய மனிதர்கள், சம்ஸ்க்ருதமும் வேதாந்தமும் படிப்பது, தஞ்சை மாவட்டத்துப் பெரிய மிராசுதார்களின் லௌகீக அடாவடிகள் இப்படி எத்தனையோ சேர்ந்து எப்படியோ ஒரு உருவமாக வந்தன.

மையக் கருத்தைப் பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்? இது நடக்குமா, நடக்காதா என்று விமரிசகர்கள் கூறுவார்கள். அவர்களைப் பற்றி நான் எப்போதுமே கவலைப் படுவதில்லை. இரண்டு மூன்று அளவுகோல்களை வைத்துக் கொண்டு படைப்பாளியின் விசித்திரமான அனுபவங்களை அளக்க முற்படுகிற பேதை விமரிசகன், அவனுக்குப் பலம் பழங்காலம்.

கலை, அமைதி பற்றி ரசிகனுக்குத் தான் தெரியும். கலை உலகம் ஒரு மாய லோகம். அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ளக் கூடாது."

இது தி.ஜானகிராமன்  அம்மா வந்தாள் புதினத்தைப் பற்றிய தன்னுடைய கருத்தாக சொன்னது.. கதையைப் பற்றி ஏகப்பட்ட தாறுமாறான விமரிசனங்கள் கிளம்பிக் கொண்டிருந்த நேரம் அது.

அவருடைய அபிப்பிராயம் என்ன என்பதை கல்கி வார இதழில்,  அவர்கள் கேட்டதற்குப் பதிலாகச் சொன்னது தான் மேலே நீங்கள் பார்த்தது!

1968 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தக் கருத்தை, ஐந்திணைப் பதிப்பகம் தனது சமீபத்திய பதிப்பில் (ஆகஸ்ட் 2008) முன்னுரை  மாதிரி  வெளியிட்டிருக்கிறது.

அம்மா வந்தாள் புதினம் 1967 இல் வெளியானபோது ஏகப்பட்ட கண்டனங்கள்! புழுதிவாரித் தூற்றுகிற மாதிரி விமரிசனங்கள்! இதற்குத் தலைமை வகித்து நடத்தியவர், அந்த நாளில் ஆனந்த விகடனிலும் அப்புறம் 'இதயம் பேசுகிறது' என்று சொந்தமாகவும் பத்திரிகை நடத்திய   மணியன்!

காஞ்சி சங்கர மடத்தின்  மூத்த பீடாதிபதி  அனுஷ்டித்த கடுமையான நெறிமுறைகளையும், அதை ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டு உண்மையில் ஆஷாடபூதிகளாகவும் இருந்த மடத்தின் சீடர்களையும், தி.ஜானகிராமன் வெளிப்படையாகவே கண்டித்திருக்கிறார். 

மணியன் மாதிரி சனாதனக் காவலர்களுக்கு அப்பொழுதே எரிச்சல், புகைச்சல்! அம்மா வந்தாள் கதை வெளியானதும் கம்பளிப் பூச்சி ஊர்வது போல விமரிசனமாக எழுதிக் குவித்து விட்டார்கள்.

தி.ஜா சொன்ன மாதிரி, ஒரு நல்ல எழுத்தாளன், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை, அதன் இயல்புகளைக் கூர்ந்து கவனிக்கிறான். அதன் தாக்கம் ஏற்படுத்திய விதத்தில் பாத்திரங்கள் உருவாகின்றன.

தி.ஜானகிராமனுடைய கதைகளில் இருக்கும் ஒரு பொதுவான அம்சம், அங்கே கதையை எழுத்தாளன் முன்கூட்டியே தீர்மானித்து எழுதிய மாதிரி எதுவுமிருப்பதில்லை; அதற்குப் பதிலாக, ஒவ்வொரு பாத்திரமும் கதையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்கிறது. படிக்கிற நாமும் அந்தப் பாத்திரங்களோடு, கூடவே வாழ்ந்து கொண்டு, நம் கண்முன்னாலேயே நிகழ்வதைப் பார்க்கிற விதத்திலேயே கதை அங்கே நிகழ்கிறது!

தி.ஜானகிராமனுடைய எழுத்தின் வசீகரம், இன்றைக்குக் கூடக் கொஞ்சமும் குறையாமல் இருப்பதற்குக் காரணம், கதாபாத்திரங்களுக்கும், நமக்கும் நடுவே எழுத்தாளன் குறுக்கே வருவதில்லை. பாத்திரங்களைக் குறித்த முன்கூட்டிய அபிப்பிராயங்களை சொல்வதில்லை! பாத்திரங்கள் நம்மோடு வாழ்கிறார்கள், அவர்களே அவர்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை நமக்குள் வரைந்துவிட்டு, நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள்.

கால இடைவெளி கூட, அந்த வசீகரமான  எழுத்தின் வீரியத்தைக் குறைப்பதில்லை. நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னால்   அவர் பார்த்து அனுபவித்துப் பழகிய மனிதர்களைப் பற்றிய சித்திரம், இன்றைக்கும் அப்படியே உயிரோவியமாக அப்படியே நிற்கிறது. படிக்கும்போது, இது அந்தக் காலம் என்ற நினைவே வராமல், கால இடை வெளியையும் தாண்டி நிற்கிறது.

அம்மா வந்தாள் கதையின் நாயகன்  அப்பு காவிரிக் கரையில், ஒரு நிமிஷமாக ஓடிவிட்ட பதினாறு ஆண்டுகளை நினைத்துப்பார்த்து ஆச்சரியப் பட்டு உட்கார்ந்திருக்கிறான். வேத பாட சாலையில் படிக்க வந்தது இப்போது போலத் தான் இருக்கிறது, இதோ சிக்ஷை முடிந்து வீட்டுக்குத்   திரும்பும் நேரமும் வந்தாயிற்று. வேத பாடசாலையை நிறுவின பவானி அம்மாள் ஊருக்குப் போயிருக்கிறாள். அவள் திரும்பி வந்தவுடன் ஊருக்குப் புறப்பட வேண்டியது தான்! இப்படி நினைவுகளில் முழுகியிருக்கும் அவனுக்கு, இந்து தனியாக இருப்பாளே என்ற  நினைவும் வர பாட சாலைக்குத் திரும்புகிறான்.

இந்து பவானியம்மாளின் உறவுப் பெண், விதவை. சம வயது. அவளிடம் அப்புவுக்கு ரகசியமாக ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதே மாதிரி  இந்துவுக்கும் அப்புவிடம் ஒரு வெறித்தனமான ஈர்ப்பு இருக்கிறது.  ஆற்றங்கரைக்குப் போனவன் வெகு நேரம் கழித்துத் திரும்புகிறான், பவானி அம்மாள் இல்லாத தனிமை, இந்துவுக்கு அசாத்திய தைரியத்தைக் கொடுக்கிறது. அப்புவைக் கட்டித் தழுவுகிறாள். அப்பு, தயங்குகிறான், உதறுகிறான். மறுநாள் கிளம்பும் போதும் இந்து அவனிடம் நெருக்கமாக இருக்க முயற்சிக்கிறாள்.

.....வந்த வேகத்தில், எதிர் பாராமல் சிக்கின திகைப்பில், அப்பு ஒரு கணம் மூச்சுத்  திணறி விட்டான். பின்னால் சற்றுத் தள்ளாடினான். மறுகணம் சமாளித்துக் கொண்டான். "சீ, என்ன இது அசுரத்தனம்! அம்மாவை கட்டிக்கறாப்பல ......எனக்கு என்னமோ பண்றது"  என்று வேகமாகத் தள்ளினான். இந்து பின்னால் தள்ளாடினாள். சுவரில் தலை முட்டிக் கொள்ளும் போலிருந்தது. "செத்துத் தொலையாதே!"என்று நகர்ந்தான்.

"அம்மாவாம் அம்மா! உங்கம்மா ரொம்ப ஒழுங்குன்னு நினைச்சுக்காதே. நானாவது உன்னியே நினைச்சுண்டு சாகறேன். உங்கம்மா யாரையோ நினைச்சுண்டு சாகாம இருக்கா பாரு. நான் உங்கம்மா இல்லை. நான் உன்னைத்தவிர யாரையும் நினைச்சதில்லேடா பாவி, அம்மா அம்மான்னு என்னை அவளோட சேர்க்காதே. எனக்கு ஏமாத்தத் தெரியாது!"

"என்ன சொன்னே?"

"சொன்னதைத்தான். உங்கப்பா அவ நல்லவள்னு ஏமாந்திருக்கார். நீ நான், பொல்லாதவள்னு ஏமாந்து கிடக்கே."

இந்த ஒரு இடத்திலேயே இரண்டு பெண்கள், இரண்டுவிதமான குணாதிசயங்களைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைத்து விடுகிறது.

அப்பு அவன் அம்மாவை இதயத்தில் ஒரு சிம்மாசனத்தில் வைத்திருக்கிறான். அவளுடைய கம்பீரமான தோற்றம் மட்டுமே அவனுக்கு எல்லாமாகவும் இருக்கிறது. எங்க அம்மா எங்க அம்மா என்று ஒரு குழந்தை தன்னுடைய தாயைப் பற்றிப் பெருமிதமாக எண்ணிக் கொள்வதைத் தவிர இங்கே வேறு எந்தவிதமான ஈடிபஸ் சிக்கலும் இல்லை.  எப்படி இந்த மாதிரி ஒரு விகாரமான கற்பனை அல்லது விமரிசனம் எழுந்தது என்று எனக்குப் புரியவில்லை. இந்துவுடைய நேசிப்பில் விரகதாபம் இருக்கிறது, உண்மையான காதலும் இருக்கிறது.

அப்பு, தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் இரண்டு சக்தியின் ஆளுமைகள், ஒரு பக்கம் அம்மா! இன்னொரு பக்கத்தில் இந்து!

கதை, அப்பு ஊருக்குத் திரும்புவதைப் போல அடுத்த திருப்பத்திற்குத் திரும்புகிறது. அம்மாவைப் பார்க்கிறான். கூடவே, சங்கடமான கேள்விகளை எழுப்பும் சிவசுவையும்!

அப்பா தண்டபாணி, வேதாந்தம் சொல்லிக் கொடுக்கிறவர். ஆனாலும், அம்மா அலங்காரத்துக்கு முன்னாடி, அவள் உத்தரவுக்குக் காத்திருக்கிற சேவகன் மாதிரித் தான்!  அவனுடைய உடன்பிறந்தவன் மனைவி, சிவசுவைப் பற்றி அப்பு கேட்கும் கேள்விகளுக்கு தெரியாது என்று ஒரே வார்த்தையில் எல்லாம் தெரியும் என்கிற மாதிரிப் பதில் சொல்கிறாள். தகப்பனிடமே பேசுகிற தருணத்தில், அவர் நான் என்ன செய்ய முடியும், வேடிக்கை பார்க்கத் தான் முடியும் என்று வேதாந்தம் பேசுகிறார். தண்டபாணி  கையாலாகாத மனிதர் இல்லை, அலங்காரத்தம்மாளின் ஆளுமைக்கு முன்னால் அவர் ஒன்றுமே இல்லை என்பது தண்டபாணி பாத்திரத்தின் வழியாகவே நுட்பமாகச் சொல்லப் பட்டிருக்கிறது.  

அம்மா அலங்காரத்தைப் பற்றிய சித்திரத்தை,  பெற்ற மகன், கட்டிய கணவன் இருவரது பார்வை வழியாகவும் அருமையாகச் செதுக்கியிருக்கிறார் தி.ஜா. அலங்காரத்தின் கம்பீரத்துக்கு முன்னால், தண்டபாணி மண்டிபோட்டுக் கிடக்கிறவர் என்று ஒரு புறம். என்னத்தைக் கண்டு மயங்கினாள் என்று விவரிக்காமலேயே, சிவசு-அலங்காரம் இருவருக்குமிடையிலான உறவு, பிறந்த குழந்தைகள் என்று சுருக்கமாகவே கதை பேசிவிட்டு நகர்கிறது.

அலங்காரத்துக்கு உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு, அல்லது ஒரு குற்ற உணர்வு. செய்த தவறைத் தீயில் பொசுக்கிப் புடம் போடுவதற்காகத் தான் பெற்ற பிள்ளை அப்பு, வேத பண்டிதனாகித் தன்னைக் கரை சேர்ப்பான் என்று ஆசைப்பட்டு, அவனை வேத பாடசாலையில் சேர்க்கிறாள். இதோ மகனும் வீடு வந்து சேர்ந்து விட்டான்.

பவானியம்மாளுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் வருகிறது. அப்பு வேத பாடசாலைக்குத் திரும்புகிறான். பவானி அம்மாள் உடல் நலம் மெதுவாகத் தேறுகிறது.இந்துவின் மனதைப் படித்தவளாக,  பவானி அம்மாள் முதிர்ச்சியோடு பேசுகிறாள்.

"அதுக்குத் தான் சாசனத்தை மாத்தி எழுதிவிடலாம்னு பாக்கிறேன். முடிஞ்சா வேதத்தைச் சொல்லிக் கொடு. இல்லாட்டா பத்துப் பிள்ளைகளுக்குச் சாப்பாடு போட்டு வச்சிண்டு தமிழ்ப்பள்ளிக் கூடத்துக்கோ இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துக்கோ அனுப்பிச்சிண்டிரு. அதுகளோட இஷ்டம் அது. வேதம் படிச்சா என்ன? வாதம் படிச்சா என்ன? இல்லாததுகள் வயித்திலே ரண்டு சாதம் விழனும். பசி தான் சுவாமி, அதுக்கு நைவேத்யம் பண்ணினாக் கூடப் போதும்...அது கூட அகம்பாவம் தான், நாம் எத்தனை பேருக்கு நைவேத்யம் பண்ண முடியும்?.......பசி ரூபத்திலேதானே இருக்கான் அவன்..இதை நீ ஞாபகம் வச்சிண்டாப் போறும்...எனக்காக."

அப்பு இந்துவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள. தன்னுடைய வாழ்நாள் கனவான வேத பாடசாலை தடையாக இருக்குமானால், அதைக் கூட உதறத் தயாராயிருக்கும் பவானியம்மாளின் விசாலமான மனசு வெளிப்படும் நெகிழ்ச்சியான இடம் இது.  அப்பு அழுகிறான்.பவானி அம்மாள் அவனைத் தேற்றுகிறாள்.  நீ ஒரு தவறுமே செய்யவில்லையடா! இந்து கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு சகித்துக் கொண்டிருக்க முடியாது அதற்காகத் தான் இது என்று அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள்.

அன்பு, காதல்  இவைகளுக்கு முன்னால் நெறிகள், சாத்திரங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை அழகாகக் கோடிட்டுக் காட்டும் இடம் இது.

அலங்காரம் அப்புவைத் தேடிக்கொண்டு வேதபாடசாலைக்கே வருகிறாள். இந்துவும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். மகன் தன்னோடு திரும்பப் போவதில்லை என்பதைத் தெரிந்து கொண்டதும் அம்மா ஊருக்குக் கிளம்புகிறாள். காசிக்குப் போகப் போவதாக அப்புவிடம் சொல்கிறாள்.

அலங்காரம் சொல்கிறாள்: " நீ ஒண்ணுதான் என் பிள்ளைன்னு நினைச்சுண்டிருந்தேன். நீ ரிஷியாயிட்டே, உன் காலில் விழுந்து எல்லாத்தையும் பொசுக்கிண்டு விடலாம்னு நினைச்சேன். நீயும் அம்மா பிள்ளையாவே இருக்கே. இப்பக் காசிக்குப் போய் இருக்கப் போறேன்."

"எனக்கு வேற வழியே தெரியலே. எத்தனை பாட்டிகள் அங்கே செத்துப் போகரதுக்காகப் போய்க் காத்துண்டேயிருக்கா! நானும் போய் காத்துண்டிருக்கப் போறேன்."


பெண்கள் சக்தியின் வடிவங்கள்!. கட்டுப் படவும் செய்யும்!, கட்டை உடைத்து மீறவும் துணியும்! 

சக்தியாகவும், காணுகின்ற அனைத்தையும் உருவாக்கும் சகதியாகவும் பெண்மையின் எல்லாமுமாகி  நிற்கிற விதத்தை புரிந்துகொள்ள பெரிய நுட்பம், அறிவு எல்லாம் வேண்டாம். மனம் திறந்து நம் வாழ்வில் காண முடிகிற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தாலே போதும்! 

ஜெயமோகன்கள், சிலாகித்து ஏழெட்டு வரி சொல்லி விட்டு, அப்புறம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி, தி.ஜானகிராமனின் கதைகள் அனைத்திலும் 'காமம் முதிர்ந்த பெண்கள்' என்ற மாதிரி பொதுமைப் படுத்தி, சிறுமைப் படுத்தும் வேலைக்கு அவசியமே இருக்காது!

இப்படிப்  பெண்மைக்குள் இருக்கும் இந்த சக்தி விநோதத்தை, இந்து, அலங்காரம் என்ற இரண்டு கதாபாத்திரங்கள் வழியாக, ஒரு முற்றுப் பெறாத சித்திரமாக, படிப்பவர்களே மிச்சத்தைப் பூர்த்தி செய்துகொள்ளட்டும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியாது! இந்துவிடமிருந்து விலகிப் போக எத்தனிக்கிற அப்பு மறுபடியும் இந்துவிடமே வந்து சேருகிறான். ஜெயமோகன் தனது அவதானிப்பில் சொன்ன படிக்கு அலங்காரத்தம்மாள் இதைப் புரிந்து கொண்டதால் தான் "நீயும் அம்மா பிள்ளையாவே இருக்கே" என்று சொல்கிறாளோ என்னவோ!

தி.ஜானகிராமன் எழுத்தில் என்னை மிகக் கவர்ந்தவை உயிர்த்தேன், அன்பே ஆரமுதே, மோக முள் என்று சொன்னால், என்னை அதிகம் யோசிக்க வைத்தவை அம்மா வந்தாள் மற்றும் மரப்பசு இரண்டும் தான்!

"நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும் போது மனிதக் குரல்களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கேல்லாமோ ஆசைப் பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக் கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

மனித முகங்கள் வேறுபடுவதைப் போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும்.தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியோர்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் நிறைந்து கிடக்கும். தன்னுடைய முயற்சியில் நம்பிக்கையும்தான் கண்டது உண்மை என்ற திட நம்பிக்கையும் (பிறர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி) எழுத்துக்கும் அடிப்படையாக இருக்கும்பொழுது அது கட்டாயம் நல்ல சிருஷ்டி இலக்கியமாகத்  தான் இருக்கும்."

அம்மா வந்தாள் புதினத்தின் பின் அட்டையில் தி.ஜானகிராமன் எழுதிய வேறொரு கட்டுரையில் இருந்து எடுத்துப் போட்டிருந்த வாசகங்களைப் படித்தபோது, (மேலே நீங்கள் படித்தது) எது நல்ல எழுத்து என்பதற்கு ஒரு அடையாளம், ஒரு தெளிவு இருப்பதைக் கண்டேன்.

இங்கே வலைப்பதிவுகளில், நிறையப் பதிவுகள், புத்தகம் படித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாக வருவதைப் பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதே நேரம், தி.ஜாவைப் படிக்காமலேயே, மேம்போக்கான விமரிசனங்களை வைத்து மட்டும் பேசுகிற சில பதிவுகளையும் படிக்க நேர்ந்தபோது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது

வாசகன் என்பவன் வெறுமே படித்து விட்டு போகிறவன் அல்ல! எழுதுகிறவனைப் போலவே அவனும் ரசிகன்! 

ரசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே நல்ல எழுத்து, இலக்கியம் உருவாகிறது! அவர்களால் மட்டுமே அது ஜீவிக்கிறது!


தமிழின் வாசிக்கப் படவேண்டிய எழுத்தாளர் யார் எவர் என்று கேட்டால், தயங்காமல் முதலில் தி.ஜானகிராமன் தான் என்று சொல்லுவேன்!

மற்றவர்கள் புனைந்து  சொன்னார்கள். அனுபவம் இல்லாமலேயே, உபதேசம் செய்கிற மாதிரிச் சொன்னார்கள்! தி.ஜானகிராமன் மனிதர்களை, அவர்களுக்குள் பெருகும் உணர்வுகளைப் படித்துவிட்டு, தன்னுடைய பாத்திரங்களைப் படைத்தார். அவரே சொன்ன மாதிரி, ஒவ்வொரு பாத்திரமும் அவர் நேரில் பார்த்து உணர்ந்த மனிதர்களின் எழுத்துக் கலவை. அதனால் தான் இன்னமும் உயிரோட்டத்துடன் இருக்கிறார்கள்.

அம்மா வந்தாள்
ஐந்திணைப் பதிப்பக வெளியீடு
பக்கங்கள் 172+6 விலை ரூ.90/- 
 

Monday, March 1, 2010

சத்திய வெள்ளம்!

எழுத்தாளர் ஜீவி, தன் பூவனம் பதிவில்,  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய எழுத்தாளர்களைப் பற்றிச் சின்னச் சின்ன அறிமுகமாக எழுதிக் கொண்டிருக்கிறார். தற்சமயம் பதிவில் வெளி வந்திருப்பது அகிலனைப் பற்றிய பதிவு!

"பாவை விளக்கு" அகிலன்
என்று தனித்து அடையாளம் காட்ட வேண்டிய நிலை வந்து விட்டதா என்ன?

அகிலாண்டம் என்ற அகிலனை வாசித்தவர்கள், அவரை அவ்வளவு எளிதாக மறந்துவிடவோ, ஒதுக்கி வைத்து விடவோ முடியாது! தமிழில், முப்பத்தைந்து, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் லட்சிய வேகம், அதன் சத்தியத்தில் வெளிவரும் ஆவேசம் என்று தாங்கள் கண்ட சமூக அவலங்களைக் குறித்த கோபம், மாற்ற வேண்டும் என்ற ஆவேசத்தோடு எழுதுகிற எழுத்தாளர்களும் இருந்தார்கள் என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்ள முடிகிறபோது உடனே நினைவுக்கு வருகிற சில எழுத்தாளர்கள் அகிலன், நா.பார்த்தசாரதி, தி.சா.ராஜு, ஜெயகாந்தன்! இவர்கள் எழுத எடுத்துக் கொண்ட களம் என்னவாக இருந்தாலும், அதில் ஒரு லட்சிய வேட்கை கொண்ட போக்கு, லட்சியத்தை  நோக்கி முன்னேறுகிற ஆவேசம்,  லட்சியத்துக்குக் குறுக்கே நிற்கும் சக்திகள், லட்சியத்திற்கும் அலட்சியத்திற்கும் இடையில் நிகழும் மோதல்கள்  என்றே கதா பாத்திரங்கள் வழியாக ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்கிற தன்மை இருக்கும். இதில் தி.சா.ராஜு, ஒரு காந்தீயச் சிந்தனை கொண்டவர். சரித்திரக் கதைக் களத்தை, நான் வாசித்தவரை எடுத்துக் கொண்டதே இல்லை.

அகிலன்  சரித்திரக் களத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். நா.பாவும் சரித்திரக் களத்தைத் தொட்டு சில புதினங்களை எழுதியிருக்கிறார். யதார்த்த நிலையைத் தொட்டு  இருவருமே எழுதியிருக்கிறார்கள்! சமுதாயத்தில் கண் முன்னே தெரிகிற அவலங்களைக் கண்டு கதாபாத்திரங்கள் வழியாகக் கொதித்திருக்கிறார்கள்.. எழுத்தாளனை உதாசீனப் படுத்துகிற சிலபோக்குகளைச் சாடியிருக்கிறார்கள்.

ஆனாலும்  நா பார்த்த சாரதி, அதை இன்னும் கொஞ்சம் பட்டவர்த்தனமாகவே, கதையை படிக்கும்போதே, நடப்பு அரசியலில், நிகழ்வில்  இது எந்தப் புள்ளியைக் குறிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் விதத்தில் எழுதிய புதினம் சில  உண்டு.

சமுதாய வீதி புதினத்தில் வருகிறஅதிகம் அலட்டிக் கொள்கிற   சினிமாக் கதாநாயகன் கோபால் பாத்திரப் படைப்பு  சிவாஜி கணேசனை  மனதில் வைத்துக் கொண்டு தான் உருவானது என்பது  அதைப் படிக்கும்போதே வாசகர்களுக்குப்  புரியத் தான் செய்தது.

அதே மாதிரி, ஒரு அரசியல் அவலம், அதைத் தொடர்ந்தெழுந்த மாணவர் போராட்டம் உண்மையிலேயே நடந்த ஒரு  பின்புலத்தில் எழுந்தது தான் சத்திய வெள்ளம்! கல்கி வார இதழில் தொடர்கதையாக வந்தது. இன்றைக்குத் தமிழக முதல் அமைச்சருக்கு தினமொரு பாராட்டு விழா வேண்டியிருக்கிறது! சுயநலத்திலேயே ஊறி வளர்ந்தவர்கள் சிலர், தங்களுடைய ஆதாயத்திற்காக, ஒரு தனிமனிதனின் விளம்பர வெறியை வைத்து ஆடுகிற ஆட்டத்தில், அப்பாவி ஜனங்கள்  சிக்கிக் கொண்டு  படுகிற அவஸ்தை இருக்கிறதே...அதை வெறும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது! நா. பார்த்த சாரதி மாதிரி, ஒரு லட்சிய ஆவேசம் கொண்ட எழுத்தாளர்கள் கைகளில்  அந்த மாதிரியான வக்கிரங்கள்,  அவலங்கள் கூட படிப்பினை தருகிற ஒரு புதினமாக உருவாகி விடுகிறது!

வெறுமே படித்துவிட்டுப் பொழுது போக்குபவனாகத் தன்னுடைய வாசகனைக் குறுக்கிவிடாமல், ஒரு  சத்திய ஆவேசத்தோடு தன்னுடன் சேர்த்தழைத்துச் செல்கிற எழுத்து நா. பார்த்தசாரதியுடையது!  தனியாக ஒரு சிற்றிதழை, தீபம் என்ற பெயரில் நா.பா நடத்திய அந்த நாட்களை  தீபம் யுகம் என்று வல்லிக் கண்ணன் வியந்து சொன்னாரென்றால் அதில் காரணமில்லாமல் இல்லை! கல்கி, விகடன், குமுதம் என்று அன்றைக்கு வணிக ரீதியிலான பத்திரிகைகள் நிறுவன பலத்தோடு இருந்த நிலையில், அவைகளின் அசுர பலத்தை மீறி, ஒரு எழுத்தாளன் தன்னுடைய தன்மானத்தையும், கௌரவத்தையும்  காப்பாற்றிக் கொண்ட விதம் அது!

இன்றைக்குத் தினமொரு பாராட்டு விழா, மானாடி மயிலாடி நடப்பதற்கெல்லாம்  அண்ணாமலைப் பல்கலைக் கழகம், ஒரு அரசியல்வாதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தான் பிள்ளையார் சுழியாக ஆரம்பித்தது. மாணவர்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். மிகக் கொடூரமான அடக்குமுறைக்கு  ஆளாக்கப் பட்டார்கள். எந்த மாணவர்களுடைய போராட்டத்தை வைத்து 1967 இல் ஆட்சியை பிடித்தார்களோ, அந்த ஆதரவெல்லாம் அனாவசியமாகப் போய்விட்டது. 

திருச்சியில், தெப்பக் குளம் அருகே ஒரு மந்திரிக்கு 'வேணுங்கப்பட்டவளை' கிளைவ் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் கிண்டல் செய்தார்களாம்! கண்மூடித் தனமான  தாக்குதலில், சில மாணவர்கள் பிணமாக திருச்சி மலைக்கோட்டை தெப்பக் குளத்தில் மிதந்தார்கள்!  கேள்விஎழுந்தபோது, வயிற்று வலி தாங்க முடியாமல் தெப்பக் குளத்தில் விழுந்து செத்திருப்பார்கள் என்று கேலியான பதில் வந்தது.

டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்த மாணவர்களில் உதயகுமார் என்ற மாணவன் இறந்து போனான். அவனுடைய பெற்றோர்களே, பிணத்தைப் பார்த்து விட்டு இது எங்கள் மகனில்லை என்று சொல்ல வைக்கப் பட்ட அவலமும் நடந்தது. இந்தக் கொடூரமான நிகழ்வின் பின்புலத்தில் உருவானது தான் நா.பா எழுதிய சத்திய வெள்ளம் புதினம்.

இந்தக் கதையை எழுதியபோது, நா பார்த்தசாரதி எழுதிய கதைமுகம்!
ஒரு சிறு அறிமுகமாக! இது எழுதப் பட்டு முப்பத்தெட்டு ஆண்டுகளாகி விட்டன. ஆனால், அந்த வார்த்தைகளில் இருந்த சத்தியம் மாறவே இல்லை என்பது இந்த தேசத்து அரசியலின் பரிதாபம்! சாபக் கேடு!

 நாவலை இணையத்திலேயே இங்கே படிக்கலாம்.


கதை முகம்

     இன்னும் சில நாட்களில் நம்முடைய இந்திய சுதந்திரத்திற்கு இருபத்தைந்து வயது நிறையப் போகிறது. அந்நியர்களிடமிருந்து விடுதலைப் பெற்றுக் கால் நூற்றாண்டு முடியப் போகிறது என்றாலும் நமக்காக நம்மிடையில் நம்மவர்களிடம் இருந்தே நாம் பெற வேண்டிய விடுதலைகள் இன்னும் பல உள்ளன. மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும், சுபாஷ் சந்திர போஸும் தொடங்கிய போராட்டங்கள் முடிந்து விட்டது போல் தோன்றுகின்றன. ஆனால், இன்னும் அவை முடியவில்லை. அதிகாரம், ஆணவம், பதவி வெறி, சுயநல நஞ்சு, வறுமைப் பிடி ஆகியவற்றிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இங்கே இன்னும் விடுதலை பெறத் துடித்துக் கொண்டிருப்பது உண்மை.

     பணமே அதிகாரமாகவும் செல்வமாகவும் இருந்த காலம் மாறி அதிகாரமே பணமாகவும் செல்வமாகவும் இருக்கிற காலம் இப்போது கண்ணெதிரே மிகவும் பச்சையாகத் தெரிகிறது. இவற்றை எதிர்த்து, நேற்றும் இன்றும் போராட்டங்கள் நிகழ்ந்தன. நிகழ்கின்றன. நாளையும் நிகழலாம். அதிர்ஷ்ட வசமாக இன்றைய போராட்டங்கள் இளைஞர்களின் கரங்களில் வந்து விட்டன. தொழிலாளிகளின் கரங்களிலும் விவசாயிகளின் கரங்களிலும் அறிவாளிகளின் நினைவிலும் அவை வந்திருப்பதே ஒரு பெரிய மாறுதலாகும். 'மூத்த பொய்கள் யாவும் தகர்ப்போம்' - என்று மகாகவி பாரதி வேறோர் இடத்தில் கூறியபடி மூத்த பொய்களை எல்லாம் தகர்க்கும் தார்மீகக் கோபமும் ஆவேசமும் செயல் திறனுமுள்ள இளைஞர்களை இன்று நாம் மாணவ சமூகத்தில் தான் பார்க்கிறோம்.

     இது இளைஞர்களின் காலம். இளைஞர்கள் எதையும் ஆற்றவும், மாற்றவும் முடிந்த காலம். இளைஞர்களும் மாணவர்களும் தான் இன்று தீமைகளை எதிர்த்து, உள்நோக்கம் இன்றி நியாயங்களுக்காகப் போராடுகிற அளவற்ற யுவசக்தியைப் பெற்றிருக்கிறார்கள். அதிகார ஆசை, பதவிப் பித்து, சுரண்டல், ஆதிக்க வெறி, ஆகியவை நான்கு புறமும், பூத கணங்களைப் போல சூழும் போதெல்லாம் அவற்றை எதிர்த்துப் பொங்கும் சத்தியப் பெருக்கின் முதல் ஊற்றுக் கண் இன்று மாணவர் உலகிலும், கல்லூரிப் பல்கலைக் கழகங்களின் எல்லையிலும் தான் இருக்கிறது. அப்படித் தற்காலப் பல்கலைக்கழக எல்லையில் நடைபெறும் மாணவ வாழ்வைப் பற்றிய சமூக நாவல் இது. இந்த மண்ணில் எப்போதோ யுகயுகாந்தரங்களுக்கு முன் குருட்சேத்திரப் போர்க்களத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடுவே பாண்டவர்களுக்காகச் சத்திய வெள்ளம் பொங்கித் தணிந்தது. பின்பு நம் காலத்தில் அந்நிய ஆதிக்கத்துக்கும், மகாத்மா, நேரு போன்ற தேச பக்தர்களுக்கும் நடுவே மற்றொரு சத்திய வெள்ளம் பொங்கி வடிந்து சுதந்திரப் புதுமை பூத்தது. இதோ இன்னொரு சத்திய வெள்ளத்தைத் தான் துடிப்பும், துணிவும், நெஞ்சுரமும், நேர்மையும், மிக்க மாணவ சமூகம் இந்த நாவலில் பொங்கச் செய்கிறது.

     இன்றைய இளைஞர்கள் எதையும் சுற்றி வளைத்து நினைப்பதில்லை. நேராக நினைக்கிறார்கள். நேராகப் புரிந்து கொள்கிறார்கள். நேராகப் பேசுகிறார்கள். 1940-க்கும் 52க்கும் இடையே இங்கு இருந்த இளைஞர்களின் மனநிலை வேறு. 52க்கும் 67க்கும் இடையே இருந்த இளைஞர்களின் மனநிலை வேறு. 67க்குப் பின்னர் வரும் இன்றைய இளைஞர்களின் மனநிலை வேறு. 

இன்றைய இந்திய இளைஞன் தன் நாட்டை விஞ்ஞான, சமூக, பொருளாதார வளர்ச்சி பெற்ற உலக நாடுகளோடு ஒப்பிட்டுச் சிந்திக்கும் வாய்ப்புக்களை அதிகமாகப் பெற்றிருக்கிறான். நேற்றைய மாணவன் ஒருவேளை தன் சொந்த எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய மாணவன் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்பட வேண்டி இருக்கிறது. சிந்திக்க வேண்டியிருக்கிறது. தன் எதிர்காலம் நாட்டின் எதிர்காலத்தையும் அதன் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையும் பொறுத்ததாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் அளவு கூட அறிவும் சிந்தனையும் விசாலமடையாத எந்த அரசியல்வாதியும் இன்று அவனை ஏமாற்றி விட முடியாது. தங்கள் வசதிக்காக அவனைக் கிணற்றுத் தவளையாகவே இருக்கச் செய்ய இப்போது யார் முயன்றாலும் அது பலிக்காது. தலைமுறை இடைவெளி (ஜெனரேஷன் கேப்) கிணற்றுத் தவளை மனப்பான்மையை எதிர்க்கும் குணம், வேலையில்லாத் திண்டாட்டம், இவை இன்றைய இந்திய இளைஞனின் பிரச்சினைகள்.

     இந்த மாணவருலகப் பிரச்சினைகளோடு வெகு நாட்களுக்கு முன் நீங்கள் எனது 'பொன் விலங்கு' நாவலில் கண்ட அதே மல்லிகைப் பந்தலைச் சில மாறுதல்களோடும், பல வளர்ச்சிகளோடும் இந்த நாவலில் மறுபடியும் காண்கிறீர்கள்.

    இன்றைய மாணவர்கள் கற்கிறார்கள். பலவற்றை அவர்களே கற்பிக்கவும் செய்கிறார்கள். ஆசிரியர்களும், அரசாங்கங்களும், சமூகமும், பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும், இன்றைய இளைஞர்களுக்குத் தெரிவிப்பை தவிர இன்றைய இளைஞர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியவையே அதிகமாக இருக்கும் என்ற நினைவோடு இந்த நாவலைப் படிக்க வேண்டுகிறேன்.

நா.பார்த்தசாரதி

9, ஜூலை 1972

அகிலன், நா.பா இவர்களுக்குப் பின்னால், இப்படி ஒரு லட்சிய முனைப்போடு எழுத வந்தவர்கள், அநேகமாகத் தமிழில் இல்லாமலேயே போனார்கள் என்பது மிகப் பெரிய சோகம். இத்தனைக்கும் எழுதுவது என்பது இன்றைக்கு லாபகரமான தொழிலாகவே ஆன நிலையில்!

பழைய தலைமுறை எழுத்தாளர்கள், பழைய கதைகள் தானே  என்று தோன்றுகிறதா? இன்றைக்கும் பொருந்துவதான எழுத்து, விஷயம் அவர்களிடம் இருக்கிறது!

இன்றைய இளைஞர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய எழுத்தாளர்கள், அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று பரிந்துரைக்கும் போதே தீபம் நா பார்த்தசாரதி, அடுத்து அகிலன் என்று முன்னால் வருகிறார்கள்!

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)