Saturday, March 6, 2010

அன்பே ஆரமுதே! தி ஜானகி ராமன்-ஒரு சொற்சித்திரம்!

 

இணையத்தில் கிடைத்த ஓவியர் சிற்பியின் பென்சில் ஸ்கெட்ச்

ஓவியர் சிற்பி தமிழ் நாட்டின் பிரதானமான கோயில் மூலவர்களைத் தன்னுடைய தூரிகையில் ஓவியங்களாக வடித்திருப்பதை நம்மில் பலரும் அறிந்திருப்போம்! அப்படி அவர், மதுரை கூடல் அழகர் கோவிலில், மூலவரை வரைகிற நாட்களில் என்னுடைய இளம் வயதில் நிறைய நாட்கள் பார்த்திருக்கிறேன்.  

மூலவரைக் கருவறைக்குப் பக்கத்தில் நின்று கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருப்பார், அப்படியே திரும்பி வந்து பென்சில் ஸ்கெட்ச்சில் வரைவார், மறுபடி பக்கத்தில் போய் நின்று  கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்று திரும்பி வந்து, மூலவர் வடிவத்தின் இன்னொரு பகுதி பென்சில் கோடுகளில் ஸ்கெட்ச்சாக முழுமை பெறும். இப்படி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, பல நாட்கள், அவர் அப்படி பென்சில்  ஸ்கெட்ச்சிலேயே கூடல் அழகரைக் கொண்டு வந்ததைப் பக்கத்தில் நின்று பார்த்திருக்கிறேன்! 

கோயில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த  கேசவன் பட்டருடன் மட்டும் சிறிது பேசுவார். அமைதியாகத் தான் உண்டு, கோட்டோவியம் உண்டு என்று வரைவதில் மட்டும் கவனம் செலுத்திய தேர்ந்த ஓவியனை, கலைஞனைப் பக்கத்தில் இருந்து பார்த்து, பிரமித்த அதே சிறுவனாக இப்போதுமே கூட உணர முடிகிறது. கலையின் தாக்கம் அத்தனை வலியது!

பின்னால் வண்ணம் தீட்டப் பட்ட படமாகவும் கல்கி தீபாவளி மலரில் அந்தப் படத்தை முதன் முதலாகப் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் பிரமிப்பு! பென்சில் கோடுகளில் உருவான ஓவியம் ஒரு விதம் என்றால், வண்ணம் தீட்டின பிறகு பார்த்தபோது, நேரில் பார்க்கும் போது தெரிகிற வண்ணங்களை எப்படித் தன் நினைவில் வைத்திருந்து, பொருத்தமாகக் குழைத்து அச்சு அசலாகப் படத்தை  நிறைவு செய்திருந்தார் என்பது இன்றைக்குக் கூட நினைத்துப் பார்க்கையில் மிகவும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது! ஒரு கலைப் படைப்பு  என் கண் முன்னால், எழுந்து நிறைவானதைப் பார்க்கும் அதே பிரமிப்பு., நல்ல எழுத்திலுமே, பாத்திரங்களைச் சமைக்கிற விதத்தில் கொஞ்சம் கூடக் குறையாமல், ஒவ்வொருதரம் படிக்கும்போதும் என்னால் அனுபவிக்க முடிகிறது.

 
வெங்கட் சாமிநாதனுடன்,  தி.ஜானகிராமன்

தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளுமை என்று சொன்னால், உடனடியாக நினைவுக்கு வருவது தி.ஜானகி ராமன் மட்டும் தான்! கல்கி முதலான எத்தனையோ எழுத்தாளர்கள், நல்ல எழுத்தை வாசிக்கும் அனுபவத்தைத் தந்திருக்கிறார்கள் என்றாலுமேகூட, அவர்கள் எவரும் எட்ட முடியாத உயரத்தில் நின்று பாத்திரங்களைப் படைத்தவர் தி.ஜானகிராமன். ஒவ்வொரு பாத்திரமும், அது ஒரே ஒரு பத்தியில் வந்துவிட்டுப் போய் விடுகிற ஒன்றாக இருந்தால் கூட, மறக்க முடியாத சித்திரமாக மனதில் பதிகிற மாதிரி, உயிரோவியமாகப் படைக்கிற திறமை தி.ஜா ஒருவரிடம் மட்டுமே இருந்தது.

"தமிழின் வாசிக்கப் படவேண்டிய எழுத்தாளர் யார் எவர் என்று கேட்டால், தயங்காமல் முதலில் தி.ஜானகிராமன் தான் என்று சொல்லுவேன்!"

இப்படிப் போன பதிவில் சொல்லியிருந்தது வெறும் முகஸ்துதியாகவோ, அல்லது கண்மூடித்தனமான அபிமானத்திலோ அல்ல என்பதை மறுபடியும் சொல்வதற்காகத் தான், ஓவியர் சிற்பி ஓவியம் வரைந்ததைப் பார்த்த அனுபவத்தை இங்கே சொன்னது!

இதை தி.ஜானகிராமனுடைய வார்த்தைகளிலேயே கொஞ்சம் பார்ப்போம்!

" இலக்கியப் பணி என்று எதைச் சொல்வது?

என் ஆத்மா எதிரொலிப்பாக,   நான் வாழும் வாழ்க்கையின் ரசனையை எனக்கு எளிதாகக் கை வரும் எழுத்தின் மூலம் வெளிக் காட்டுகிறேன்.
இதில் சேவை என்பதோ, பணி என்பதோ இடமே பெறவில்லை.

என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகிறேன். சுற்றிலும் உலகம்சிறியதும் பெரியதுமாக, சாதாரண அசைவுகளில் கூட,  வியப்புக்கள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம் தான்!

அதைத் தான் நான் பகிர்ந்து கொள்கிறேன் -- எழுத்து மூலம்! "

இந்த வாசகங்களை, அன்பே ஆரமுதே புதினத்தின் பின் அட்டையில் படித்தபோது, எதற்காக எழுதுவது, எப்படி எழுதுவது என்ற கேள்விகளுக்கு
விடை சொல்கிற மாதிரி,  எது நல்ல எழுத்து என்பதை அடையாளம் காட்டுகிற மாதிரி இருப்பதை, உணர்ந்து  அனுபவித்தே எழுதுகிறேன்!

தி.ஜானகிராமனைப் பற்றி பேசும் போது, கொஞ்சம் ஃபிராய்டியம் கலந்து பேசுகிறவர், கதையே இல்லாமல் தளுக்கான வார்த்தைகளில் சம்பவங்களைக் கோர்த்து எழுதுகிறவர், காமம் கனிந்த பெண்களைப் பேசுகிறவர், பால குமாரன்கள் முளைக்கிற நாற்றங்கால் என்றெல்லாம் மேம்போக்காக விமரிசித்து ஒதுக்கி வைத்துவிட முயற்சிக்கிற சில உத்தமத் தமிழ் எழுத்தாளர்கள், புத்தகத்தைப் படிக்காமலேயே, யாரோ சொன்னதைக் கேட்டு விட்டு அதையே கிளிப்பிள்ளை மாதிரிச் சொல்கிற பதிவர்கள், எதோ ஒரு பதிவின் பின்னூட்டமாக இனிமேல் தான் படிக்க வேண்டும் என்று  பல காலமாகச் சொல்லிக் கொண்டிருப்பதையே பெருமையாகப் பேசுகிறவர்களைப் பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது! 

லோகோ பின்ன ருசி என்று, இந்த உலகத்தில் ரசனைகள், அளவீடுகள், ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம் மாறிக் கொண்டே இருப்பவை என்பதைப் புரிந்துகொண்டபோது அந்த ஆச்சரியமும் போய் விட்டது!

ஆனாலும் காக்கைப் பொன்னெல்லாம் தங்கத்தை விமரிசிக்கும்போது ......?

எப்படி இவர்களால் இன்னது என்றே  தெரியாத ஒரு விஷயத்தை,  புரிந்துகொள்ள முயற்சிக்காத ஒரு அனுபவத்தைப் பற்றி  இவ்வளவு  விமரிசிக்க முடிகிறது? தி.ஜானகிராமனை கொஞ்சம்  ஃபிராய்டியம் கலந்து பேசுகிறவர் என்று எதை  வைத்துச் சொல்கிறார்கள்? மோக முள்ளில் ஒரே ஒரு வரியா மட்டும் வைத்துக் கொண்டு என்னவோ தகாத உறவுக் கதை எழுதுகிறவர் என்று எப்படி முடிவு செய்கிறார்கள்? இதயம் பேசுகிறது மணியன் மாதிரி சனாதனக் காவலர் வேஷத்தில், எல்லாவற்றையும் நாசமாக்கவந்தவர், அதனால் இவரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூக்குரல் இடுகிறார்கள்?

மனித மனங்களைத் தொட்டு, மனதின் வீச்சைத் தொட்டு, உணர்வுகளைத் தொட்டு  எழுதுகிற எல்லாமே ஃபிராய்டியம் தான் என்றால், அப்போது அது சரி! ஆனால், ஃபிராய்டியம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் தி.ஜாவைப் பற்றி அப்படி விமரிசிக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.

தி.ஜானகிராமனுடைய எழுத்து எப்படிப் பட்டது, எதை அஸ்திவாரமாகக் கொண்டு எழுந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் அன்பே ஆரமுதே புதினத்தையோ, அல்லது உயிர்த்தேன் புதினத்தையோ படித்துப் பார்க்கட்டும்! இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியுமானால், குறைந்தபட்சம் திறந்த மனதோடு படிக்க முடியுமானால், நளபாகம் புதினத்தைப் படித்துப் பார்த்தால், முழுக்க முழுக்க சக மனிதர்களைப் புரிந்து கொள்கிற இங்கிதம், எவரையும் குறை சொல்லாமல், அன்பு வெளிப்படும் வெவ்வேறு நிலைகளைச் சொல்வதாகவே அவருடைய பாத்திரங்கள் ஒவ்வொன்றும் நுட்பமாகச் செதுக்கப் பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மோக முள் புதினம் என்னவோ, தன்னை விட வயதில் மூத்தவளைக் காதலிப்பது, நிராதரவாக நின்ற நிலையில் அந்தப் பெண்ணே தன்னை அவனுக்குக் கொடுப்பது "இதுக்குத்தானே?" என்ற ஒரு வார்த்தையை வைத்து மொத்தக் கதையுமே இவ்வளவுதான் என்று  இப்படியே சிந்தித்துக் கொண்டு போகிற போது, நாவலுக்கான விரிவும் அக ஆராய்ச்சியும் இல்லை  என்று தான் இங்கே சில உத்தமத் தமிழ் எழுத்தாளர்களாலேயே சொல்ல முடிகிறது என்பதை  ஏற்கெனெவே இங்கே பார்த்திருக்கிறோம்.  

அவர்களை வைத்து எந்த எழுத்தையும், படைப்பையும் அதனதன் தராதரத்தில் அறிய முடியாது! அறிந்துகொண்டுவிடக் கூடாதே என்பதற்காகத் தான் இப்படி விமரிசனங்களைத் தூவி விட்டுப் போகிறார்களோ என்னவோ?

ஓவியர் சிற்பி படம் வரையும் விதத்தை  முதலில் பார்த்தோமல்லவா, அதே விதமாக தி.ஜா மாதிரித் தேர்ந்த கலைஞரிடமிருந்து ரசனையோடு ஒரு கோட்டோவியமாக! ஒரு குணச்சித்திரம்! இந்தப் பாத்திரம் கதை போகிற போக்கில் ஒரு இருபது வரிகளில் சொல்லப் படுவது, கதைக்கு அவசியமானது இல்லை, இந்த இருபது வரிகளைத் தாண்டிக் கதையில் மறுபடி வருவதுமில்லை! 

ஆனாலும்  கதையைக் கதையாக அல்லாமல், பாத்திரங்கள் அத்தனை பெரும் நம் கண் முன்னால் உயிரோடு நடமாடுகிற மாதிரிச் சித்தரிக்க உதவும் ஒரு உத்தியாக, குதிரைக்குக் கண்ணைக் கட்டி விட்டு பார்க்கிற மாதிரி இல்லாமல், கதை விரியும் களத்தை முழுமையாகப் பார்க்கும் விதத்தில் இருப்பதை ரசனை உள்ள வாசகன் எவனுமே புரிந்துகொள்ளக் கூடியதாக!

அன்பே ஆரமுதே புதினத்தின் நாயகன் அனந்தசாமி, ஒரு துறவி!  தேடிச் சென்று வைத்தியம் பார்க்கிறவர்! உடம்புக்குத் தான் மருந்து என்று இல்லை, காயப் பட்டுப் போன, அல்லது ஏங்கித் தவிக்கும் மனங்களுக்கு இதமான வார்த்தைகள், பரிவினாலும் வைத்தியம் செய்கிறவர். இரண்டு பெண்டாட்டிகளைக் கட்டிக் கொண்டு குடித்தனம் நடத்தும் ஒரு ரிக்ஷாக் காரனுடைய மனைவிக்கு வைத்தியம் பார்த்து விட்டுத் திரும்பும்போது அனந்த சாமிக்கு, நுங்கம்பாக்கம் முதலியார் தன்னுடைய வேலைக்காரன் ஏழுமலையைப் பற்றிச் சொன்னது நினைவு வருகிறது.

"நம்ம ஏழுமலையை என்னான்னு நினைக்கிறீங்க? உங்களுக்கு சன்யாசம் தொழில், வைத்தியம் பொழுதுபோக்கு. எனக்கு கட்டட காண்ட்ராக்ட் தொழில், பிரசங்கம் கேட்கிறது பொழுதுபோக்கு. நம்ம வீட்டிலே ஏழுமலைக்கு வேலை, கலியாணம் பண்ணிக்கறது பொழுதுபோக்கு! ஆமாங்க!

---என்ன சிரிக்கிறீங்க? நான் சொன்னா நம்ப மாட்டீங்க, அவனையே வேணாக் கேட்டுப் பாருங்க! திடீர்னு நினைச்சுக்கிட்டு ஒரு கலியாணத்தைப் பண்ணிக்கிட்டு வந்துடுவான். 

வில்லிவாக்கத்துலேயிருந்து புடிச்சா அடையாறு வரைக்கும் அவனுக்கு ஒன்பது  பொஞ்சாதி இருக்கு. கடக்கரை ஓரமாகக் குப்பத்திலே வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கான். ஆனால் எல்லாம் கட்டின பசுவாட்டம் இருக்கும். ஒரு தம்பிடிக் காசு கேட்காது! அதது ரோடு வேலை, வீட்டு வேலை, கொல்லத்து வேலைன்னு சாப்பிட்டுப் பொளைச்சிட்டிருக்கு!

ஐயா இப்பிடிப் போவாரு.....பஜ்ஜி என்ன 'பன் ' என்ன டீ என்ன---அப்படி உபசாரம் அவருக்கு நடக்கும். தலைப்பிலே ரண்டு மூணு இருந்தா அதையும் வாங்கி முடிச்சுக்கிட்டு வருவாரு. அப்படித் தானேய்யா!" என்பார்.

பெரிய மீசை சரிந்து தொங்க நாணத்துடன் சிரிப்பான் ஏழுமலை. 

"ஏன்யா, நான் சொல்றது சரிதானேய்யா ?" என்று ஏழுமலையை அதட்டுவார் முதலியார்.

"ஆமாங்க..தம்மாத்தூண்டுன்னா, ஐயா இம்மாப்பெரிசாத்தான் சொல்லுவாங்க.."

"ஏய், உனக்கு ஒன்பது பொஞ்சாதி இருக்கா, இல்லையாடா?"

"இருக்கு"

"யாருக்காவது ஒரு மிட்டாய் வாங்கிக் கொடுத்திருப்பியா? அல்லது ஒரு இட்டிலித் துண்டு....?"

"வாங்கிக் கொடுக்காம....சும்மாவா..ஐயாவுக்கு என்னை சதாய்ச்சுக்கினே இருக்கணும்" என்று சிரித்து மழுப்பிக் கொண்டே போய்விடுவான் அவன்.

"பாத்தீங்களா, நிக்கிறானா பாத்தீங்களா, ஒரு பொஞ்சாதியைக் கட்டிக்கிட்டு ஒம்பதாயிரம் கவலையைத் தான்கிட்டுக் குந்தியிருக்கிறோம், அவனுக்குக்  கல்யாணம் பொழுது போக்காயிடிச்சு!" என்று கூறி முதலியார் சிரிக்கிற வழக்கம்.

இவ்வளவு வேடிக்கை நிறைந்த உலகத்தைத் துறந்து, காட்டிலும் மடத்திலும் உட்கார்ந்து எதைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டார் அனந்தசாமி.

இங்கே அனந்தசாமி மட்டுமே வேடிக்கைகள் நிறைந்த இந்த உலகத்தை ஆச்சரியத்தோடு பார்க்கவில்லை! வாசித்துக் கொண்டிருக்கும் நாமுமே, கண்முன்னால் விரிகிற இந்த உலகத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் பார்க்கிறோம்!

ஆச்சரியம் எழுதிய விவரணையில்  மட்டுமே இல்லை. இந்த மாதிரியான மனிதர்களை, நாம் நம்முடைய  வாழ்க்கையிலுமே பார்த்துக் கொண்டு அல்லது கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். 

தி.ஜானகிராமனுடைய பாத்திரப் படைப்புக்களில் நம்மைச் சுற்றி உள்ள  உலகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அவர்களுடைய ஆசாபாசங்கள், பரிதவிப்புக்கள் அப்படியே கண்முன்னால் விரிவதைப் பார்க்கும்போது, ஒரு கதையைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அங்கே தலைதூக்குவதில்லை.

கோட்டோவியங்கள், வண்ணம் தீட்டப்பட்ட பிறகு முழுமையடைவதைப் பார்க்கும் அதே அனுபவம்!


அது தான் எழுத்தின் முழுமையான வெற்றி! ஆளுமை!  


No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)