Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Friday, March 27, 2020

கொரோனா காமெடிகள்! இன்றைக்கு வாசிக்க எடுத்த புத்தகம்!

கொரோனா வைரஸ் தொற்று பயம் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற இந்த சமயம் கண்ணில் படுகிற சில வீடியோக்கள் சிரிப்பையும் வரவழைக்கிற மாதிரி! அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்பது ஒருவகையில் நிஜம் தான் போல!



ஊரடங்கின் போது ஏன் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகிறாய் ? என்று கேட்கும் காவலர்களிடம் ..
'ஏன் எதற்கு எப்படி எங்கே எப்போ எப்பொழுது' [ pheww] ..என்று துள்ளிக் குதித்து அடுக்குமொழியில் நரம்பு புடைக்க..'முதலமைச்சரை இங்கு வரச்சொல்லு' என்று பேசும் பொடியன்..
'நீ ஓவரா ஆடிக்கிட்டிருக்க' - பெண் காவலர் 
கடைசியில் காவல்நிலையத்தில் வைத்து கையில் பிரம்பால் அடி வாங்கும் போதும்...
பொடியன் : இனி வெளியில் வந்தால் மாஸ்க் போட்டு வருகிறேன். 
ஊரடங்கு வெளிப்படுத்தும் வேடிக்கைகளில் சிறப்பான ஒன்று...
பொடியனிடம் இருக்கும் எனர்ஜி, துறுதுறுப்பு அனைத்தும்.... அண்ணன்களின் அரசியல் மேடைகளில் இருந்தும், தமிழ் சினிமாக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு .. நேர் மறையாக திருப்பிவிடப்பட்டால் ...சிறப்பானதொரு மனிதனாக உருவாகி வருவார்.
பானு கோம்ஸ் இந்த நாம்தமிழர் சவடால் பையன் வீடியோவை மிகவும் ரசித்து எழுதியிருக்கிறார்போல! ஆனால் இதெல்லாம் தனியாகச் சிக்கிக் கொள்கிற ஏப்பை சாப்பைகள் மீதுமட்டும் தானோ? 

இது கர்நாடகாவில்!
தமிழ்நாட்டில் நினைத்தே பார்க்க முடியாது  


கொஞ்சம் பயனுள்ளதாகப் பொழுதுபோக்க உதவும் புத்தகங்கள்  இன்றைக்கு வாசிக்க எடுத்துக் கொண்ட புதினம்: 

 நீலரதி - சாண்டில்யன் 


தமிழக வரலாற்றின் இருண்ட காலமாக களப்பிரர்கள் ஆண்ட காலம் குறிப்பிடப் படுகிறது. களப்பிரர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள் என்ற செய்திகளே கிடைக்க விடாமல் பிற்கால சைவசமய எழுச்சி இருட்டடிப்பு செய்ததனாலேயே இருண்டகாலமாக சொல்லப்படுகிறது என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. வடுகக் கரு நாடர் என்றே பெரிய புராணம் இவர்களைச் சொல்கிறது. கிபி முதல் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஆறாம் நூற்றாண்டு வரை இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்ததாக, வைதீக மதத்தை எதிர்த்தவர்களாகவும், சமண, பவுத்த மதங்களை ஆதரித்தவர்களாகவும் இருந்தார்கள். தமிழ்மொழியை ஆதரிக்காவிட்டாலும் களப்பிரர் காலத்தில்தான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பிறந்தன என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

கிபி முதலாவது நூற்றாண்டில் தமிழகம் முழுதையும் ஆண்ட அச்சுத விக்கண்டன் என்கிற அச்சுத விக்கிராந்தன் என்கிற அச்சுத விக்கந்தக் களப்பாளன் ஒருவன் மட்டுமே சாண்டில்யனின் நீலரதி கதையில் வரலாற்றுப் பாத்திரம். கதையில் மற்ற எல்லோருமே கற்பனைப் பாத்திரங்கள் என்பதால், இதை சரித்திரக் கதை என்று வகைப்படுத்த முடியுமா என்பது எனக்குப் புரியவில்லை. கதை கடல்கொண்டதுபோக மீதம் இருந்த புகாரில் ஆரம்பிக்கிறது. நாற்பதை ஒட்டிய  இளமாரன், இருபதுவயதே ஆன உதயகுமாரன் என்ற இருவரிடம் வந்து சேர்கிற நீலரதி என்கிற இளம்பெண் அவளைத் துரத்திவருகிற புத்தமடத் துறவிகள், புத்த மடக் காவலர்கள் என்று விறுவிறுப்பாகக் கதை தொடங்குகிறது. மடத்துக்காவலர் தலைவனைக் கொன்றுவிட்டாள் என்ற குற்றச்சாட்டு நீலரதிமீது. புத்தமடத்தில் நடக்கும் விசாரணையில் அடுத்தடுத்து சில சுவாரசியமான ட்விஸ்ட், அச்சுத விக்கண்டனே விசாரணையை நடத்த வந்துசேருகிறான். அவனிடம் பணிபுரிபவனான இளமாரனிடம் நீலரதியை தனது உறையூர் அரண்மனைக்கு அழைத்துவருமாறு சொல்லி விட்டுப் போகிறான்.

சாண்டில்யன் கதை என்றால் வரலாறு கொஞ்சம், வர்ணனைகள் கொஞ்சம், பாத்திரங்களை அறிமுகம் செய்வதிலிருந்தே திருப்பம், அந்தத் திருப்பத்துக்கு இன்னொரு திருப்பம் என்று தொடர்ந்து கொண்டே போவதில் மயங்குகிற வாசகர் கடைசி வரை அந்த மயக்கத்தில் இருந்து விடுபடுவதே இல்லை என்பதை தனியாகச் சொல்லவேண்டியதே இல்லை. இந்தக் கதையும் அப்படித்தான்! என்ன, நீலரதியின் எகிப்திய பின்னணி, ஐசிஸ் (Isis) என்கிற பெண் தெய்வம் காவல் தெய்வமாக கூடவே இருப்பது என்கிற fantasy  சரித்திரக் க்தைக்குப் பொருத்தமாக இல்லையே என்பது படித்து முடித்த பிறகுதான் உறைக்கிறது! அது போலவே வேறு சில விஷயங்களும்! களப்பிரன் நியாயம் என்று கதை சுபமாக முடிவதில், களப்பிரர்களைப் பற்றி எதுவுமே தெரிந்துகொள்ள முடியவில்லை என்பது பெருங்குறை! போதாக்குறைக்கு கொஞ்சம் நெருடலான பாத்திரப் படைப்பும் சேர்ந்து கொள்கிறது.

ஆனால் படித்து முடிக்கிறவரை இந்தமாதிரிக் குறை எதுவுமே தெரியவில்லை என்பது சாண்டில்யனின் கதை சொல்கிற திறம்!       
           
குங்குமம் வார இதழில் தொடராக வெளிவந்த நீலரதி 1985 இல் பாரதி பதிப்பக வெளியீடாகப் புத்தகமாகவும் வந்தது. 57அத்தியாயங்கள். 420+ பக்கங்கள்   

மீண்டும் சந்திப்போம். 

Friday, February 14, 2020

ஒரு புத்தகம்! கொஞ்சம் வரலாறு! மனதில் பட்டவை!

வரலாறு என்பது வெறும் கடிதங்கள் முதலான ஆவணங்களோ அல்லது நாமாகக் கற்பிதம் செய்து கொள்ளும் பிம்பங்களோ அல்ல. வரலாறு என்பது எழுதுகிறவரின் பார்வையில் இருந்து எழுதப்படுவது, அப்படி எழுதுகிறவரின் பார்வைக்கோளாறு, எழுதிய  வரலாற்றிலும் வெளிப்படும் என்பதை மறுபடியும் சொல்ல வேண்டிய விஷயமாக, சமீபத்தில் வெளியான ஒரு புத்தகம், முன்னர் எழுதப்பட்ட கற்பிதங்கள் மீதான சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஜவஹர்லால் நேரு என்கிற புனிதபிம்பம் தொடர்ச்சியாக சமீப நாட்களாக  அடிவாங்குவது ஏன் என்பதும் நேருவின் புனிதபிம்பத்தைக் காப்பாற்றுவதற்கு சிலர் ஓடி வருவது ஏன் என்பதுமாக பின்னணியில் இருக்கும் இரண்டுபக்க அரசியலையும், இந்த சர்ச்சையில் இருந்து, இன்றைய தலைமுறையினர்  புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் போன்றவர்களை   இந்த தேசத்தின் ஆகப்பெரும் ஆளுமைகளாக இளையதலைமுறையினர் தெரிந்து கொள்ள விரும்புகிறார்களா என்பதே புரியாத நிலையில், இப்படிப்பட்ட பழங்கதைகளில் சர்ச்சை என்பது எப்படிப் பார்க்கப்படும்?


இந்தப் புத்தகத்தின் விலை ரூ.799/- அமேசானில் ரூ.583/- என்பதான அச்சுப்புத்தகத்தின் விலை ஒரு தனிநபராக மலைக்க வைக்கிற விஷயம். நம்மூர் நூலகங்களில் இதெல்லாம் எப்போதுமே கிடைக்காது என்பதும் லெண்டிங் லைப்ரரிகளுமே கூட வாசகர் விருப்பத்தை அறிந்து  புத்தகங்களை வாங்குவதில்லை என்ற யதார்த்தம், பேசாமல் கிண்டில் unlimited வாசிப்புக்கு மாறிவிடலாம் என்று என்னை யோசிக்க வைக்கிறது. ஒரு ரிட்டையர்ட் ஆசாமி வேறெப்படி யோசிப்பது? 


The Print தளத்தில் சேகர் குப்தா ஒரு 28 நிமிட வீடியோவில் இந்தப் புத்தக வெளியீட்டை ஒட்டி  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடைய ட்வீட்டர் செய்தியைத் தொடர்ந்து கிளம்பியிருக்கிற சர்ச்சையை, இப்படியும் அப்படியுமாக, பச்சையாகச் சொல்வதானால்,  கொஞ்சம் மழுப்பலாகவே சொல்கிறார், காரணம்  நேரு, படேல், போஸ் இவர்களுக்கிடையில் இருந்த உறவு அப்படிப்பட்டது. வல்லபாய் படேலை காந்தி வேறுகாரணத்துக்காக நம்பவில்லை என்பதும் நேருவுக்கும் படேலுக்கும் பலவிஷயங்களில் கருத்து வேறுபாடு வந்தபோது காந்தி மீதிருந்த அபிமானத்தால் வல்லபாய் படேல் அமைதியாக அமைச்சரவையில் இருந்து விலகி ஒதுங்கிக் கொண்டார் என்ற விவரம் பொதுவெளியில் ஆதாரத்தோடு கிடைப்பதுதான்.  

சர்தார் வல்லபாய் படேல் மட்டுமல்ல, நேருவோடு கருத்து வேறுபாடுகொண்ட ராஜாஜி முதற்கொண்டு நிறைய ஆளுமைகள் காங்கிரசிலிருந்து வெளியேறியதும் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக நேரு இந்திரா என்று ஆரம்பித்து இன்றைக்கு சோனியா & வாரிசுகளுடைய குடும்பக் கம்பனியாகக் குறுகிப்போய்க் கிட ப்பதில், மகாத்மா காந்திக்கு ஏதோ போனால் போகிறதென்று கொஞ்சம் இடம். உண்மையைச் சொல்லப்போனால் நேரு, இந்திரா இருவருமே கூட போஸ்டர்களில்  மட்டுமே  என்றாகிப் போனதில், நேருவின் பிம்பம் வேறு மாதிரித்தான் என்று வெளிப்படுகிற ஒவ்வொரு தருணத்திலும், சோனியா & கோவின்  அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கிற மாதிரி ஆகிவிடுவதால் மட்டுமே இத்தனை பதட்டம்! 

இந்த ஒருகாரணமே, இளைய தலைமுறையினர் இந்த சர்ச்சையைக் கூர்ந்து கவனிப்பதற்குப் போதுமானது, கவனிக்கவேண்டும் என்பது என்னுடைய கருத்து.

மீண்டும் சந்திப்போம்.

Monday, April 8, 2019

புள்ளிராசா வங்கிக்குப் புள்ளி வருமா? ஒரு புத்தக விமரிசனம்!

முந்தைய சில பதிவுகளில், வங்கித் துறையைப் பற்றிய சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட தருணங்களில், நான் வாசகர்களுக்குப் படிக்க வேண்டிய ஒன்றாக ஆர்தர் ஹைலி எழுதிய ஒரு புதினத்தைச் சொல்லியிருக்கிறேன். நினைவிருக்கிறதா? 


இப்போது நாம் அடிக்கடி செய்திகளில் படிக்கிற பொருளாதாரச் சரிவுகள், துபாய்க் காசுக்காக ஏங்கிக் காணுகிற கனவுகள் எல்லாம் கானல் நீராகிப் போய்விடுமோ என்ற கலக்கம், இவைகளுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள இந்தக் கதைப் புத்தகம்  உதவியாக இருக்கும் என்பதையும் மறுபடி நினைவு படுத்துவதற்காகச் சொல்கிறேன்.  ஒரு புத்தக விமரிசனமாகவும்!

வங்கித்துறையைப் பற்றிய ஒரு அருமையான கதைப் புத்தகம்! ஆர்தர் ஹைலி எழுதிய The Moneychangers!  

சிபாரிசு செய்தகையோடு   புத்தகத்தைத் தேடிப் பிடித்து, மறுபடி ஒருமுறை வாசித்தாயிற்று! இந்தப் புத்தகம் வெளிவந்து 
நாற்பத்து நான்கு ஆண்டுகளாகி விட்டது. ஆறரை மணிநேரத் தொலைக்காட்சித் திரைப்படமாக எடுத்து அதை நான்கு பகுதிகளாக CBS டெலிவிஷன் ஒளிபரப்பியபோதும் நல்ல வரவேற்பு இருந்தது என்று தெரிகிறது. 


ஆர்தர் ஹைலி! 14 வருடங்களுக்கு முன்னால் தன்னுடைய 84 ஆம்  வயதில், மறைந்த மிகச் சிறந்த எழுத்தாளர். பிரிட்டனில் பிறந்து, கனடாவுக்குப் போய்க் குடியேறி, அமெரிக்காவும், கனடாவும் எழுதிச் சம்பாதித்த அத்தனையையுமே வரியாகக் கேட்டதனால், அங்கிருந்தும் வெளியேறியவர்.

"அடே! அப்பன் பெயர் தெரியாத பையா!" என்று தமிழில் ரா.கி ரங்கராஜன் மொழி பெயர்ப்பில் அழுத்தம் திருத்தமாகத் திட்டும் ஒரு விமான காப்டன்! திட்டு வாங்கும் ஒரு விமான நிலைய நிர்வாகி! ஏர்போர்ட் என்ற அவரது நாவலைக் குமுதத்தில் தொடராக வெளியிட்டார்கள்! அடுத்து ஹோட்டல் என்று அவர் எழுதிய நாவலும் குமுதத்தில் வந்தது என்ற நினைவு! குமுதம் அவ்வப்போது, கொஞ்சம் உருப்படியான கிறுக்குத்தனம் பண்ணிக் கொண்டு இந்த மாதிரி மொழிபெயர்ப்பு நாவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.
ஆர்தர் ஹைலி எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக என் மனதில் இன்றைக்கும்  இடம் பிடித்திருப்பது The Moneychangers!வங்கித் தொழிலைப் பற்றிய புதினம் அது!

ஏர்போர்ட் நாவலில், ஒரு விமான நிலையத்தைக் கதைக் களமாக வைத்து, அதைச் சுற்றியே கதாபாத்திரங்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ட்ராக், அத்தனையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து சேர்த்து, ஒரு பிரச்சினையை சுவாரசியமாக சொல்ல ஆரம்பித்துக் கடைசியில், கதாநாயகன் எப்படி அவற்றைச் சமாளிக்கிறான் என்று விறுவிறுப்பாகச் சொல்லியிருப்பார்.

அதே மாதிரி, ஹோட்டல் என்று, விடுதிகளை மையமாக வைத்து ஒரு கதை, வீல்ஸ் என்று கார் உற்பத்தித் தொழிற்சாலைகளை களமாக வைத்து ஒரு கதை. இப்படி ஒவ்வொரு தொழில், அல்லது துறையைக் களமாக வைத்து எழுதுவதில் ஆர்தர் ஹைலி ஸ்பெஷலிஸ்ட். எல்லாக் கதையுமே  மேலோட்டமாகப் பார்க்கும் போது, ஒரே மாதிரி இருப்பது போலத் தோன்றினாலும்,  ஒவ்வொரு துறையையும் தொட்டு எழுதுவதற்கு முன்னால், அதைப் பற்றிக் குறைந்தது ஒருவருடமாவது கவனமாக எல்லாத் தகவல்களையும் சேகரித்து, அந்தத் தகவல்களோடு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கோர்த்து, ஒரு பிரச்சினை பூகம்பமாய் உருவாகிறமாதிரிக் கொண்டு வந்து, கடைசியில் அதைத் தீர்த்துவைக்கிற லாவகம் இருக்கிறதே, அது ஆர்தர் ஹைலியின் ஸ்பெஷல் டச்! தனி முத்திரை!

ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன்! ஒரு நடுத்தரமான வங்கி! அதன் தலைமை நிர்வாகி, தன்னுடைய உடல்நலம் நலிந்துகொண்டே இருப்பதை, பொறுப்பை வேறொருவர் விரைவில் ஏற்க வேண்டிவரும் என்று  அறிவிக்கிற தருணத்தில் இருந்து கதை தொடங்குகிறது. அடுத்து, அந்தப் பொறுப்புக்குத் தகுதியான இரண்டுபேர்கள் இருக்கிறார்கள். வங்கித் தொழிலில் காண முடிகிற  நேரெதிரான குணாதிசயம், இந்த இரண்டு பாத்திரங்கள் வழியாக வெளிப்படுத்தப் படுகிறது. அலெக்ஸ் வண்டர்வூர்ட்,ரோஸ்கோ  ஹேவர்ட்!  இந்த இருவரில் ஒருவர் தான், அடுத்துத் தலைமைப் பொறுப்பிற்கு வர முடியும் என்ற நிலையில், பதவியைப் பிடிப்பதற்கான ஆட்டமாகக் கதை விரிகிறது.

அலெக்ஸ்,  வங்கித் தொழிலுக்குண்டான மரபுகளை மீறாத,  செல்வாக்கைத் தேடுவது எப்படி, எதைக் கொடுத்து எதைப் பெறுவது என்ற நுணுக்கமான ஆதரவு திரட்டும் கலை அறியாதவராக! வங்கித் தொழிலை எப்படிக் கண்ணியத்துடனும், கவுரவத்துடனும் நடத்துவது என்பதை அறிந்தவராக, ஒரு நல்ல வங்கியாளராக ஒவ்வொரு கட்டத்திலும் கதை முழுவதும் அறிமுகமாகிறார்.

ரோஸ்கோ, வங்கியின் இயக்குநர்களுடைய ஆதரவைத் திரட்டுவது எப்படி என்ற கலையை அறிந்தவராக, உச்சிக்குப் போகவேண்டும் என்ற நிறைய ஆசை!  அதற்காக சமரசங்கள் செய்துகொள்ளத் தயாராக இருப்பவராக, என்ன ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கத்  தயாராக இருப்பவராக கதை விரிகிறது. வங்கியின் ஆதாயத்தைக் குறுகியகாலத்திலேயே பெருக்கிக் காட்டுவது, இயக்குநர்களுடைய நம்பிக்கையைப் பெறுவது, பெரிய கார்பரேட்களின் கணக்கை கொண்டு வருவது, தானும் பெரிய ஆளாவது என்று ரோஸ்கோவுடைய கனவுகள் வளர்ந்துகொண்டு போகின்றன.


ஒரு பக்கம்,நாணயமான, நிதானமான வங்கியாளர்! இன்னொரு பக்கம் பேராசை பிடித்த வங்கியாளர்!

இரண்டு விதமான போக்குகளைத்  தெரிவு செய்தாயிற்று! போட்டி என்று வரும்போது, இந்த இரண்டு நேரெதிரான தன்மைகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ சம்பவங்கள் நிகழவேண்டுமே! வரிசையாக ஆரம்பிக்கின்றன!

இங்கே நம்மூர் வங்கிகளில் பார்ப்பது போல 'வாங்க வேண்டுமானால்'  பத்துப் பெர்சென்ட்  'கொடுக்கவேண்டும்' என்ற மாதிரி வெகு சீப்பான கற்பனைக்கெல்லாம் போய் விடாதீர்கள்! அமெரிக்க வங்கிகள் இயங்கும் விதமே வேறு! அங்கே பேராசை, முதலீட்டாளர்களுக்கு நிறைய ஆதாயம் தேடித் தருவது என்ற போர்வையில் ஆரம்பிக்கிறது. ஆதாயம் தேடித் தருகிறேன் என்ற சாக்கில் தாங்களும் ஆதாயம் அடைந்துகொள்ளும் நபர்களால், ஏற்பட்ட சரிவை, நாற்பத்து  நான்கு வருடங்களுக்கு முன்னால் எழுதினது தான், ஆனால், இன்றைக்கும் பொருந்தி வருகிற உண்மைகளாக ஆர்தர் ஹைலி கதையை முன்னெடுத்துச் செல்கிறார்.

ராஜா ராணி கதையாக இருந்தால், கத்திச் சண்டை போட நம்பியார், வீரப்பா மாதிரி வில்லன்களை எதிர்பார்க்கலாம். இதுவோ வங்கித்துறையைப் பற்றியதாயிற்றே! வில்லன் எப்படி இருப்பான்?

கார்பரேட், மெகா கார்பரேட் வடிவத்தைத் தவிர வேறு பொருத்தமான வில்லன் எது? சுனாட்கோ என்ற வடிவத்தில் ஒரு கார்பரேட் வில்லன் கதையில் நுழைகிறது! ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கியின் இயக்குனர்களில் ஒருவர், சுனாட்கோ நிறுவனத் தலைவரை அறிமுகம் செய்து வைக்கிறேன், சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் வளமான எதிர்காலம் கிடைக்கும் என்று ரோஸ்கோவுக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவிப்பதோடு, சேர்த்துச் சொல்கிறார்.  

சொன்னபடியே அந்த இயக்குனரும், ரோஸ்கோவும், சுனாட்கோ நிறுவனத் தலைவரை அவரது சொகுசு விமானத்தில் சந்திக்கிறார்கள். பலமான உபசாரம் நடக்கிறது. அமெரிக்க செனேட்டர்  ஒருவரும் (நம்மூர் எம் பி மாதிரி) விமானத்தில் இருக்கிறார்.  ரோஸ்கோ  பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்கு முன்னரே, ஐந்து கோடி டாலர் கடன் வசதி செய்ய ஏற்பாடு செய்ய ரோஸ்கோவுக்கு  அதிகாரம் இருக்கிறதா, இல்லையென்றால் கூட  பரவாயில்லை என்ற கொக்கி விழுகிறது. 

சுனாட்கோ நாடறிந்த  மிகப் பெரிய நிறுவனம்! அதனுடன் வியாபாரத் தொடர்பு என்பது, லோகல் வங்கியாக மட்டுமே அறியப்பட்டிருக்கும் ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கி, நாடறிந்த வங்கிகள் வரிசைக்கு வந்து விடும்! கடன் மீது பெறும் வட்டி,  வங்கிக்குப் பேராதாயமாக இருக்கும் என்ற கணக்குகளை ரோஸ்கோ மனதிலேயே போட்டுப் பார்த்து விட்டு, தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கும் சந்தர்ப்பம் இது தான் என்று முடிவு செய்கிறார். இயக்குனர் குழுவில், பேசி விட்டு, முடிவைச் சொல்வதாக அந்த உல்லாசப் பயணம் அடுத்த திருப்பத்திற்குத் தயாராகிறது!.

உல்லாசப் பயணத்திற்கு நினைவுப் பரிசாக, அழகான பெண்களும், சுனாட்கோ நிறுவனத்தின் பங்குப் பத்திரங்களும் ரோஸ்கோவுக்கு அளிக்கப் படுகின்றன. ரோஸ்கோவுக்கு, கொஞ்சம் குற்ற உணர்வு தலைதூக்கினாலும், மிக அருமையான வாய்ப்பைத் தனது வங்கிக்காக சாதித்திருப்பதாகப் பெருமிதமும்,  தலைமைப் பொறுப்புக்குத் தன்னைத் தவிர வேறு போட்டியே இல்லாத உச்சத்திற்கு, இந்த டீலிங் கொண்டுபோய்விடும் என்ற சந்தோஷமும் மறைத்து விடுகின்றன.

இயக்குனர்  குழுவின் முன் இந்தக் கடன் விண்ணப்பத்தை ரோஸ்கோ  எடுத்து வைத்து, அது வரை சிறிய அளவில் மட்டுமே அறியப் பட்டிருக்கும் ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கி எப்படி பெரிய வங்கிகளுக்குச்சமமாக வந்துவிடும், எவ்வளவு பெரிய ஆதாயம் கிடைக்கும் என்று எடுத்துச் சொல்லும் போது, அலெக்ஸ் ஒருவர் மட்டுமே, அதை எதிர்த்துக் கருத்துச் சொல்லுகிறார்.
இந்த இடத்தில், ஒரு நேர்மையான, திறமையான வங்கியாளன் எப்படியிருக்கவேண்டும் என்பதை அலெக்ஸ் பாத்திரத்தின் வழியாகக் கதாசிரியர் சொல்கிறார். அடிப்படைக் கோட்பாடுகளை மறந்து விடாமல், போதுமான எச்சரிக்கையோடு, மரபுவழியிலான வங்கித் தொழிலைச்  செய்து வந்தாலே ஆதாயம் தானே வரும், கொஞ்சம் காத்திருக்கவும் தெரிய வேண்டும் என்ற  ethical banker வெளிப்படும் தருணம் இது.

ரோஸ்கோவுக்கு,  எல்லாமே இன்ஸ்டன்ட்- இப்போதே தான்! வங்கித் தொழிலின் மரபுகள், அனுபவப் பாடங்கள் எல்லாவற்றையும் தூரத் தள்ளி வைத்து விட்டு, கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுத்தால் மட்டுமே அதிக ஆதாயத்தைப் பெற முடியும்!  உச்சிக்கு வரத் துடிக்கும் ஒருவன், அதற்காக, எல்லாக் கோட்பாடுகளையும் இழந்துவிடத் தயாராக இருக்கும் நிலை மிக நுணுக்கமாக வெளிப்படும் தருணமாகவும் இருக்கிறது. இயக்குனர் குழு, இருவருடைய கருத்தையும் கேட்டுக் கொண்டு, பேராசையால் உந்தப் படும் ஒரு கூட்டம் எப்படி முடிவு செய்யும் என்பதும் அங்கேயே  தீர்மானிக்கப் பட்டும் விடுகிறது.
கார்பரேட் நிறுவனத்திற்குக் கடன் கொடுப்பதென்று முடிவாகி விட்டது, சரி! எங்கே இருந்து? அங்கே தான் கதையின், இன்னொரு சுவாரசியமான பக்கம் இருக்கிறது. ஏற்கெனெவே, சிறிய நடுத்தர வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க ஒப்புக் கொண்ட தொகையில் கை வைப்பதில் இருந்து தானே ஆரம்பிக்கும்! அந்த சிறிய நகரத்தின் ஜனங்களுக்குத் துணையாக இருந்த வங்கி, திடீரென்று, அவர்களைக் கைகழுவி விடுகிறது. அந்த மக்கள், வங்கி நிர்வாகத்திற்குத் தங்களது எதிர்ப்பை, மிக அமைதியாகத் தெரிவிக்கிறார்கள்.

இந்தப் பகுதியைப் படிக்கும் போது, இதே மாதிரி  ஒரு அனுபவத்தை  இங்கே ஒரு பொதுத்துறை வங்கி 1980 களில் சந்தித்தது. ஆனை அம்பானைக்குக்  கடன் கொடுக்க ஆரம்பித்த அந்த வங்கி, தன்னுடைய மற்ற வாடிக்கையாளர்களுக்குக் கடன்  கொடுக்க முடியாமல், கிட்டத் தட்ட ஐந்தாண்டுகள் credit freeze செய்து வைத்திருந்ததும், மற்ற வங்கிகளிடமிருந்து கொள்ளை வட்டிக்குக் கடன் வாங்கி (call  rates were very high, then), அம்பானைக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்த வேடிக்கையும், ஒரு கட்டத்தில் இந்த ஒரு வங்கி கொடுத்த ஊட்டச் சத்துப் போதவில்லை என்று, அம்பானை ஏழெட்டு வங்கிகளுக்குப் போய் அங்கேயும் கரும்புத் தோட்டத்தில் யானை புகுந்த கதையாக ஆனதும், நேற்றைய வரலாறு!

இப்படி, ஒவ்வொரு கதாபாத்திரமும், ஒவ்வொரு கட்டத்திலும், ஒரு திருப்புமுனை, கதைக்குள் விரியும் இன்னொரு கதை என்று அழகாகப் பின்னப்பட்டிருக்கும் போதே, வங்கிகளைப் பற்றிய ஏராளமான தகவல்கள், அமெரிக்க டாலர் உருவான விதம், கள்ள நோட்டுக்கள், அவற்றைக் கண்டுபிடிக்கவும் தயார் செய்யவும்  உதவும் புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள், தங்கத்திற்கும் டாலருக்குமான உறவு, கீனிஷியன் எகனாமிக்ஸ்(Keynesian economics) என்று வங்கிகள் தொடர்பான தகவல் சுரங்கமாகவும் இருக்கிறது. அரசியலும் வங்கித்துறையும் எப்படி ஒன்றோடொன்று "லட்சிய"  உறவு கொண்டிருக்கிறது என்பதையும்  சொல்கிறது.

வங்கிகளில், அதன் செயல்பாடுகளில்  நிறையக் குறைகள் சொல்லிக் கொண்டே போகலாம் தான்! ஆனாலும் வளர்ச்சியடைந்த சமுதாயத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதை இந்தக் கதை, அனாயாசமாகச் சொல்லிக் கொண்டே போகிறது.

எல்லாவற்றையும் விட, மிக முக்கியமானது, டாலரில் முதலீடு செய்வதை விடத் தங்கத்தில் முதலீடு செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதையும் சொல்வது தான்! சொன்னது நாற்பத்து  நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

சதாம் ஹுசேனை அமெரிக்கா விரட்டி விரட்டிக் கடைசியில் தூக்கு மாட்டித் தொங்க விட்டது, சதாம் ஏதோ பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தார் என்பதனால் அல்ல! ரசாயன ஆயுதங்களை வைத்திருந்தார் என்பது கூட அமெரிக்க அண்டப் புளுகுகளில் ஒன்றாக இருக்கலாம். எல்லாவற்றையும் விட, பெட்ரோல் விற்பனையை  டாலரை வைத்து நடத்தாமல், வேறு செலாவணிக்குத் தயாரானார், மற்றவர்களையும் மாறும்படி தூண்டிக் கொண்டிருந்தார் என்பதே ஈராக் மீது அமெரிக்கா நடத்திய யுத்தத்தின் காரணம்.

ஆர்தர் ஹைலி இந்தக் கதையில், ஒரு சிறிய நகரத்தின் வங்கி, அந்த நகரத்து மக்களின் சேமிப்பையும், நம்பிக்கையையும் பெற்ற வங்கியாகக் களத்தைத் தேர்ந்தெடுத்து, கதாபாத்திரங்களின் வழியாக, வங்கிகளின் பேராசை, கார்பரேட் அரசியல்கள் ஒன்று சேரும் போது  எப்படி அழிவின் கருவிகளாக மாறிவிடுகின்றன என்பதைச் சொல்கிறார்.

கதைதான்! 44 வருடங்களுக்கு முன்னால் எழுதினது தான்! இன்றைக்கும் அமெரிக்க வங்கிகள், நிதித்துறையில் பிரதிபலிக்கும் பேராசை, தானும் கெட்டு, ஊரையும் கெடுப்பது என்ற அம்சங்களை வெளிப்படுத்துவதாக இருப்பது தான் இந்தக் கதையின் பெரும்வலிமை!

The Moneychangers! அடிப்படைகளைப் புரிந்துகொள்ள விரும்புகிற எவருக்குமே, அவசியமாக நான் சிபாரிசு செய்யும் புத்தகங்களுள் ஒன்று! 

நேற்றைய வரலாறு! நமக்குத் தான் முந்தின நிமிடத்தில் நடந்தது என்ன என்பதே தெரியவில்லை, இதில் நேற்றைய வரலாறு எதற்கு என்று கேட்கத் தோன்றினால்,  நிச்சயமாக இந்தப் பதிவு உங்களுக்கானது இல்லை!

ஆர்தர் ஹைலியின் பாணியைப் பின்பற்றி தமிழிலும், சில சுவாரசியமான ஆரம்பங்கள் இருந்தன!  பி.வி.ஆர் என்ற எழுத்தாளர் கல்கி வார இதழில் "சென்ட்ரல்" என்ற கதையை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பின்புலமாக வைத்து, ஒரு தொடர்கதையை எழுதினார்.  கங்கை புத்தக வெளியீடாக, புத்தகமாகவும் வந்தது என்று நினைவு!

அது என்னவோ, தமிழில் பரபரப்பாகப் பிராண்டுகிற தலைப்போடு வருகிற புத்தகங்கள் தான், எழுத்தாளர்கள் தான் அதிகம் கவனிக்கப் படுகிறார்கள்! தினத்தந்தி அல்லது தினமலர் படிக்கிற வாசக நிலையிலேயே வைத்திருக்கும் போக்கு என்றைக்கு மாறும்? 

ஜனவரி 2010 இல் இன்னொரு வலைப்பக்கங்களில் எழுதியதன் மீள்பதிவு 

Saturday, April 6, 2019

ஆலிவர் ட்விஸ்டும் ஏய்ப்பதில் கலைஞனும்...!

இந்தப் பக்கங்களுக்கு வாசிக்க வருகிறவர்களிடம் பொருளாதாரம், வங்கிகள், அரசியலைத் தொட்டு எழுதிய சில பதிவுகளில், சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் கதையைப் படிக்கும்படி சிபாரிசு செய்வது உண்டு. 


முக்கியமான காரணம், அந்தக் கதையின் தொடக்கமே இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி எப்படி கிராமங்களில் இருந்து மக்களை நகர்ப்புறத்துக்கு, சேரிகளில் கூலித் தொழிலாளர்களைக் கொண்டு வந்து தள்ளியது என்பதை விவரிக்கும், காலத்தின் கண்ணாடியாக இருப்பதை அறிந்து கொள்வதற்காகத் தான்.

ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் காலத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறான். அவனைப் பாதித்த விஷயங்கள், சமூகத்தில் அவன் பார்த்த, அவனைப் பாதித்த நிகழ்வுகள், அவனுடைய ஆதங்கத்தோடு சேர்ந்தோ, அல்லது அவன் புரிந்து  கொண்ட விதத்தை ஒட்டியோ தான் அவன் படைப்புக்கள் இருக்கும். மனிதனை நேசிக்கத் தெரிந்த எழுத்தாளர்கள் அனைவரிடத்திலும் காணக் கிடைக்கிற பொதுவான பண்பு இது.

தமிழில் மட்டுமல்ல, பொதுவாகவே வலைப் பதிவுகளைப் படிக்க வருபவர்கள், மேலோட்டமாகவே பார்த்து விட்டுப்போய் விடுகிறார்கள்.அவர்களைக் குறை சொல்லியும் பயனில்லை. இன்றைக்கு எழுத்து என்பது, அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு  ஓட வைக்கிற  ஃபாஸ்ட் ஃபுட் சமாச்சாரமாகவே ஆகிப்போன நிலையில், ஆழ்ந்த வாசிப்பு என்பது மிகவும் அரிதாகிப்போன விஷயமாகவே படுகிறது.

இப்படிக் காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டு,அவஸ்தையோடு  பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை ஆரம்பித்து வைத்த தொழிற்புரட்சியின் பக்க விளைவுகளில் எழுந்த கதை ஆலிவர் ட்விஸ்ட்! சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய இரண்டாவது கதை இது. ஒரு சிறுவனை மையமாக வைத்து எழுதிய கதை என்று பார்த்தால், அவருக்கு இது முதலாவது முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். உலகமெங்கும் பரவியதாக இருக்கும் இரண்டு சுவாரசியமான வாக்கியங்கள், உங்களுக்கும் கூடத் தெரிந்தது தான்,  இந்தக் கதையில் தான் இருக்கிறது!

ஒன்று, 
"சட்டம் ஒரு கழுதை!" 
கிட்டத் தட்ட  நூற்றெண்பது வருடங்களுக்கு முன்னால் டிக்கென்ஸ் எழுதிய  இந்த வார்த்தை, இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!
n
இன்னொன்று, "தயவு செய்து ஐயா, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்!"
சாதாரண ஜனங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடர்ந்து, இன்றைக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் கெஞ்சல்!

தொழிற்புரட்சியின் முக்கியமான அம்சம், தேவை இருக்கிறதோ இல்லையோ, உற்பத்தி செய்து அதை நுகர்வோர் தலையில் கட்டி விடுவது! கிராமப் பொருளாதாரத்தின் வலிமை இருப்பதைப் பகிர்ந்து கொண்டு, வளர்ச்ச்சி இல்லை என்றாலும் தேய்மானமாவது இல்லாமல் இருந்தது. தொழிற்புரட்சி அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டதையும், ஏழைகளையும் உற்பத்தி செய்ததையுமே, அதன்  ஆரம்ப காலத்தைத் தொட்டுச் செல்லும் கதை ஆலிவர் ட்விஸ்ட்.
Bentley's Miscellany என்ற பத்திரிகையில். 1837 பெப்ருவரியில் தொடங்கி, 1839 ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக வெளிவந்த தொடர்கதையாகத் தான், பிரிட்டிஷ்  வாசகர்களுக்கு அறிமுகமானது.

சட்டம் ஒரு கழுதைஎனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்என்று சில வாக்கியங்களை அறிமுகப் படுத்திப் பிரபலப் படுத்தியது மட்டுமல்ல, அந்த நாளைய சரித்திரக் குறிப்பேடுகளில் கூடப் பதிவு செய்யப் படாமல் இருந்த ஏழை மக்களின் துயரங்களை விரிவாகப் பதிவு செய்த, சமூகப் பிரக்ஞையோடு  வெளிவந்த  முதல் ஆங்கிலப் புதினம் இது தான்
 

மற்ற எழுத்தாளர்கள், பணம் படைத்தவர்களைப் பற்றியே எழுதி எழுதி மாய்ந்துகொண்டிருந்த நேரத்தில், வெளிவந்த வித்தியாசமான எழுத்து இது.

கதை ஆலிவர் ட்விஸ்ட் என்ற சிறுவனைச் சுற்றியே ஆரம்பிக்கிறது. இவனைப் பெற்றுப்  போட்டதும் தாய் இறந்து விடுகிறாள். தந்தை யார் என்று தெரியவில்லை. ஏழைகளுக்கான சட்டம் என்ற ஒன்றின் கீழ் நிர்வகிக்கப் படும் ஒரு விடுதியில் முதல் ஒன்பது வருடங்கள்! இல்லாதவர்கள் அனுபவிக்கும் கொடுமை, பசியுடன் அந்த ஒன்பது வருடங்கள் இருப்பதை,கானா காப்பீடு, சமூகக் காப்பீடு என்று இப்போதுகூடச் சொல்லப் படுவதில் உள்ள ஓட்டைகளை, அந்தக் காலத்திலேயே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்! காப்பீடுகள், சமூகப் பாதுகாப்பு என்ற வார்த்தை ஜாலங்கள், வாக்குறுதிகள்  எல்லாம் இன்னும் அதிகமாகச் சுரண்டுவதற்காகவே!

ஒன்பது வயது நிறைந்ததும், திருமதி மான் நிர்வகித்து வரும் அமைப்பில் இருந்து, வேலை செய்வதற்கு வேறோர் இடத்திற்கு அனுப்பப் படுகிறான் ஆலிவர் ட்விஸ்ட்! அங்கே தான், பசி தாங்க முடியாமல், "தயவு செய்து ஐயா! இன்னும் கொஞ்சம்!" என்று உணவுக்குக் கெஞ்சுகிறான்.
போனால் போகிறதென்று கொஞ்சம் சோறு போட்டால் இன்னும் கொஞ்சம் என்று கேட்பாயா என்று அங்கே இவன் மீது கோபம் வருகிறது ஐந்து பவுண்ட் கொடுக்கும் எவர் வேண்டுமானாலும் இவனை அழைத்துச் செல்லலாம் என்று முடிவாகிறது. 
அந்த நாளைய பிரிட்டிஷ் சமூக அமைப்பு, தங்களுடைய சொந்த ஜனங்களையே எப்படி நடத்தியது, ஆதரவற்ற, கைவிடப்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் எப்படி, வீட்டு அடிமைகளாக விற்கப்பட்டார்கள் என்பதைக் கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக, ஆழ்ந்து யோசிக்க வைக்கிற பகுதி இது. பணம் படுத்தும் பாடு எப்படிப் பட்டது என்பதைப் போகிற போக்கிலேயே சொல்கிற இடமாகவும் இந்தப் பகுதி இருக்கிறது.

உள்ளூர் பாரிஷில் (ஒரு சர்ச் அமைப்பு) இருக்கும்  சோவெர்பெரி என்பவர்,  வேறு ஒரு மோசமான நபரிடம் தள்ளிவிட இருந்த நிலையில் தலையிட்டுத் தன வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த மனிதர் நல்லவர் தான்! ஆனால், அவர் மனைவிக்கு, இந்தச் சிறுவனைப் பிடிக்கவில்லை. அங்கே இருந்த வேலையாட்களுமே கூட இவனைக் கொடுமைப் படுத்துகிறார்கள். அதில் ஒருவனைத் திருப்பித் தாக்கியதால், தண்டிக்கப் படுகிறான். ஆலிவர். கொடுமை தாங்காமல், அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடுகிறான்! பசியும், துயரமும் தொடர்ந்து துரத்துகிறது.

லண்டனை நோக்கிப் பயணப்படும் நேரத்தில்,  ஜாக் டாகின்ஸ் என்ற சம வயதுள்ள ஒருவனைச் சந்திக்கிறான்.

ஏய்ப்பதில் கலைஞன் (the artful dodger) என்றே அவனைத் தெரிந்து வைத்திருந்த வட்டாரத்தில்  அழைக்கப்படுவதில் காரணமில்லாமல் இல்லை. பிக் பாக்கெட் அடிப்பதில் கலைஞன் மட்டுமில்லை, ஆலிவர் மாதிரி ஆதரவற்ற சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய கூட்டத்தில் சேர்க்கும் வலைஞனும் கூட! தன்னுடைய குரு ஃபாகின்சிடம் அழைத்துப் போகிறான். எளிதாகச் சம்பாதிக்கலாம், சுகமாக வாழலாம் என்ற கனவுகளைத் தந்திரமாக இப்படிப்பட்ட ஆதரவற்றவர்களிடம் விதைத்து, அவர்களை உபயோகிக்கும் ஒரு கொடூரமான கும்பல் அது.

கைக்குட்டை விற்கிற சாக்கில் தங்களைப் பிக்பாக்கெட் அடிப்பதற்குத் தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரிந்து, ஆலிவர் இந்தக் கும்பலை விட்டு விலக முனைகிறான். பிக்பாகெட் அடிக்கிற முயற்சியில் டாகின்ஸ் அம்பலப்பட்டு, ஆலிவரும் இன்னொருவனுமாக டாகின்சுடன் தப்பித்து ஓடுகிறார்கள். மற்ற இருவரும் தப்பித்து விட, ஆலிவர் மட்டும் போலீசிடம் சிக்கிக் கொள்கிறான். நடந்ததைப் பார்த்த சாட்சிகளில் ஒருவர், ஆலிவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை எடுத்துச் சொல்லவும், விடுவிக்கப் படுகிறான். பிரவுன்லோ என்ற முதியவர் இவன் மேல் இரக்கப் பட்டுத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

ஆனால், அதுவும் நிலைக்காமல் போகிறது. கும்பல் தலைவன்  ஃபாகின்ஸ், தன்னுடைய கையாளான நான்சி என்ற பெண்ணை அனுப்பித் தந்திரமாக ஆலிவரை மறுபடி கும்பலுக்குள் கொண்டு வந்து விடுகிறான். வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் முயற்சி ஒன்றில் ஆலிவர் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப் படுகிறான். எதிர்பாராத விதமாக அந்த முயற்சி தோற்றுவிடுகிறது, ஆலிவர் சுடப்படுகிறான். அந்த வீட்டில் இருப்பவர்களால், 
ஆலிவர் காப்பாற்றப் பட்டு, அவர்களுடைய அரவணைப்பும் கிடைக்கிறது.

இவனை மறுபடி கும்பலுக்குள் சிக்க வைத்த நான்சி, இவன் மீது இரக்கம் கொள்கிறாள். ஆலிவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தவிக்கிறாள். அதே கும்பலில் இருக்கும் இவளது காதலன் சைக்ஸ் எதிராக இருக்கிறான். திருட்டுக் கும்பலுக்குள்  மோன்க்ஸ் என்ற புது நபர் வந்து சேர்கிறான். ஆலிவரைத் தீர்த்துக் காட்டுவதில் அவன்  அதிக அக்கறை காட்டுகிறான். தொடர்ந்து நிகழும் மோதல்களில் சைக்ஸ் தன் காதலி நான்சியைக் கொன்று விட்டு, தப்பியோட முயலும்போது தானும் கொல்லப் படுகிறான்.

மோன்க்ஸ் ஏன் ஆலிவரைத் தீர்த்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறான் என்ற மர்மமும் உடைகிறது. அவன் ஆலிவருக்கு சகோதரன் முறையானவன்.  ஆலிவர் ஒரு பணக்காரனின் வாரிசு என்றெல்லாம் தெரிய வருகிறது. ஃபாகின்ஸ் கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் படுகிறது. அப்புறம், பிரிந்திருந்த உறவுகள் எல்லாம் சேர சுபம் சுபமே என்று கதை முடிகிறது.

புத்தக விமரிசனம் என்று முழுக்கதையுமே சொன்னால் எப்படி என்று கேட்கிறீர்களா?

இங்கே கதையில்  பெரிதாக ஒன்றுமே இல்லை.தமிழில்அனாதை ஆனந்தன் என்ற பெயரில் ஏவிஎம் தயாரிப்பில்,  ஏவிஎம் ராஜன், ஜெயலலிதா, மாஸ்டர் சேகர் நடித்து, இதே கதை படமாகவும் வந்தது. இப்போது சொன்ன அவுட்லைனை வைத்து படமாக வந்திருந்தாலும், முக்கியமான ஒன்று மிஸ்ஸிங்! அது தான், எழுத்தாளன், தான் வாழ்ந்த காலத்தை எழுத்தில் பிரதிபலித்துக் காட்டியிருந்த விஷயங்கள்!  அதை விட்டு விட்டு படமாக எடுத்தபோது, அங்கே எதுவுமே இல்லை!

எழுத்தில் தெரியும் ஜீவனை, வாசிப்பின் வழியாக உணர முடிவது போல, மாற்று ஊடகமாகப் பார்க்கும் போது அவ்வளவாக எடுபடுவதுமில்லை. முக்கியமான காரணமாக எனக்குப் படுவது என்னவென்றால் மாற்று ஊடகத்தில் கொண்டு வரும்போது, எழுத்தின் ஜீவனைப் புரிந்துகொண்டு சொல்ல இங்கே எவரும் முனைவதில்லை என்பது தான்!

கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தீர்களானால், ஏழாவது உலகம் கதை, (இன்னமும் படிக்கவில்லை) நான் கடவுள் படம் (பார்த்தாயிற்று) இவற்றில் பேசப்படும் பிச்சை எடுப்பவர்களின் நதி மூலம் இங்கே ஆலிவர் ட்விஸ்ட் கதையில் ஃபாகின்ஸ் கும்பலை வைத்து ஆரம்பிப்பதையுமே பார்க்க முடியும். இந்த அவலங்கள்,  பிரிட்டிஷ்காரர்கள் நாட்டை அடிமைப் படுத்தியவுடன் செய்த முதல் காரியம், கிராமங்கள் அழிக்கப் பட்டு, மக்கள் நகர்ப்புரங்களுக்குக் கூலிகளாக விரட்டப் பட்டதில் இருந்து ஆரம்பித்தது தான்! அதற்கு  முன்னால் இத்தகைய அவலங்கள்  இந்திய சமூகத்தில் இருந்ததே இல்லை! இந்திய கிராமப் பொருளாதாரம், சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரமாக, பகிர்ந்து கொள்கிற தன்மையில் இருந்தது, அங்கும் இங்குமாக சில கொடூரமானவர்கள் இருந்தாலும், ஒட்டு மொத்த சமுதாயமும் ஒரு தர்மகர்த்தா இயல்பில், எளியவர்களையும் அரவணைத்துச் சென்றதைக் கொஞ்சம் வரலாறு படித்தவர்களுமே தேடித் தெரிந்து கொள்ள முடிகிற விஷயம். இன்றைக்குக் குறிவைத்துத் தாக்கப் படுகிற இந்தியக் கலாசாரம், எளியவர்களுக்கு ஆதரவாகவே இருந்தது.

ஆலிவர் ட்விஸ்ட்! நூற்றெண்பது வருடங்களுக்கு முன்னால் எழுதிய கதை தான்! இன்றைக்கும் கூட, சமூகம், பொருளாதாரம் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு ஊற்றுக் கண் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு சொன்ன படைப்பாகவும் இருப்பது தான் இதன் சிறப்பு.
நாவலை முழுதாகப் படித்துப் பாருங்கள்! எழுத்தின் ஜீவனை அங்கே தான் கண்டு கொள்ள முடியும்!
 

இது 2010 இல் இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதியதன் மீள்பதிவு 

Thursday, March 21, 2019

10 சீட் வாங்கியென்ன? யாரைக் களமிறக்குவது? விழிக்கும் காங்கிரஸ்!

இங்கே பிஜேபிக்கு அஞ்சுசீட்டா என்று வெந்தவர்கள் ஏராளம்! 10 சீட் வாங்கிய காங்கிரஸ் என்னபாடு படுகிறது என்று தெரிந்தால் இன்னும் நொந்து போவீர்கள் என்று நக்கலாக ஒரு செய்தியை இந்து தமிழ் திசை நாளிதழ் இப்போது வெளியிட்டிருக்கிறதோ?


தொகுதியை கேட்டு வாங்கிவிட்டு விழிக்கும் காங்கிரஸ்: இடியாப்ப சிக்கலால் குஷ்பு, ஈவிகேஎஸ்ஸூக்கு அடிக்கிறது ஜாக்பாட்?

காங்கிரஸ் கட்சியில் தொகுதியை வாங்கிவிட்டு வலிமையான வேட்பாளரை தேடும் குழப்பத்தால் வேட்பாளர் அறிவிக்க  தாமதமாகிறது என்று கூறப்படுகிறது. கரூர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை முடிவு செய்வதில் குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்குப்பின் காங்கிரஸை மிகவும் மதித்து கேட்டதொகுதிகளை கொடுத்தார் ஸ்டாலின். கரூர், கிருஷ்ணகிரி, திருச்சி, விருதுநகர், தேனி உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸுக்கு கொடுத்ததில் திமுகவினருக்கு ஏக வருத்தம். ஆனாலும் ஏற்றுக்கொண்டார்கள்.
கரூர், கிருஷ்ணகிரியில் காங்கிரஸுக்கு வலுவான வேட்பாளர் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் பிடிவாதமாக இந்த தொகுதிகளை கேட்டு வாங்கியதாக காங்கிரஸ் வட்டாரத்திலேயே பேசப்பட்டது.
ஜோதிமணிக்காக கரூர் தொகுதியையும், டாக்டர் செல்லக்குமாருக்காக கிருஷ்ணகிரி தொகுதியையும் கேட்டு வாங்கியது டெல்லி தலைமை என்கிறார்கள். இதில் மாநில தலைமையை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் கிருஷ்ணகிரியில் ஏற்கெனவே தோற்றுப்போன டாக்டர் செல்லக்குமார், இந்த முறை அதைவிட வலுவான கே.பி.முனுசாமியை எதிர்கொள்ள முடியாது என்றும், கரூரில் தம்பிதுரையை எதிர்த்து நிற்கும் அளவுக்கு ஜோதிமணி பலம் இல்லாதவர் என்ற கருத்தும் காங்கிரஸுக்குள் ஓங்கி உள்ளது.
இதனால் தொகுதிகளை சண்டைப்போட்டு வாங்கிய காங்கிரஸார் இப்போது கரூரில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என யோசித்து வருவதாக கூறப்படுகிறது. பழையபடி ஈவிகேஎஸ் இளங்கோவனை கேட்க அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கரூரில் செல்வாக்குமிக்க தம்பிதுரைக்கு எதிராக குஷ்புவை களமிறக்க யோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று தேனியில் ஜே.எம்.ஹாரூண் வேண்டாம் என்பதில் அங்குள்ளவர்கள் உறுதியாக இருக்க அந்த இடத்தில் சிறுபான்மை பிரிவு அஸ்லம்பாஷா கேட்கிறார். அஸ்லம் பாஷாவை நிறுத்துவதா? அல்லது அங்கும் குஷ்புவை நிறுத்துவதா? அல்லது ஹாருணுக்கே கொடுக்கலாமா? என்கிற கடும் குழப்பம் ஓடுகிறதாம்.
அதேபோன்று சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் வாய்ப்பு வழக்கு காரணமாக குறைந்து வருவதால்   விருதுநகரில் போட்டியிட உள்ள மாணிக் தாகூரை அவரது தொகுதியான சிவகங்கையில் நிறுத்தலாம் என எண்ணுகிறார்களாம்.அங்கு சுதர்சன நாச்சியப்பனும் கேட்கிறார், சிவகங்கையில் மாணிக்தாகூர் நிறுத்தப்பட்டால் ஈவிகேஎஸ் இளங்கோவனை விருதுநகரில் நிறுத்தலாம் என எண்ணுவதாகவும் தகவல்.

வெற்றி வாய்ப்புள்ள கன்னியாகுமரியிலும் ராபர்ட் புரூஸ் மீது சிஎஸ்ஐ வாக்காளர்கள்கோபத்தில் இருப்பதால் பழைய காங்கிரஸ் எம்.பி.மறைந்த டென்னிஸ் குடும்பத்தில் ஒருவரை நிறுத்தலாம் என்று பேசி வருவதாக கூறப்படுகிறது. ரூபி மனோகரனும் திருநாவுக்கரசர ்மூலம் முயல்வதாகவும் அதற்கு வாய்ப்பு குறைவு என்கின்றனர்.
இடியாப்பச்சிக்கலைவிட மிகப்பெரிய சிக்கலாக காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு உள்ளது. வேட்புமனு தாக்கல் இறுதி நாளுக்கு முன் வேட்பாளர் பட்டியல் வெளியாகுமா? என்று கேட்டபோது இன்றுதான் ராகுல் பட்டியலை பார்வையிடுகிறார், நாளை கட்டாயம் வெளியாகும் என தெரிவித்தனர்.
இறுதியாக கரூரில் குஷ்புவுக்கும், கிருஷ்ணகிரியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், சிவகங்கையில், விருதுநகரில், தேனியிலும், கன்னியாகுமரியிலும் மாற்றம் வரலாம் என்கின்றனர்.
பேசாமல் கிருஷ்ணகிரியையும், கரூரையும் திமுகவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு கௌரவமாக 7 தொகுதிகளில் நிற்கலாம் என காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அரசியலில் எதுவும் நடக்கலாம்.
பொதுவாக எந்தவொரு செய்தித்தளத்திலிருந்தும் அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிற வழக்கமில்லாத என்னையும் கூட  அப்துல் முத்தலீப் எழுதியிருக்கிற இந்த writeup, உள்ளே இழையோடும் நகைச்சுவை அறுந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வைத்திருக்கிறது  நன்றி! கரூர் காங்கிரசார் போர்க்கொடி 
காங்கிரசுக்கு விழுகிற ஓட்டுக்களை விட, இருக்கிற கோஷ்டிகள் அதிகம்!  

தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் வாயைப்பார்த்தால் சட்டி சுட்டதடா! கை  விட்டதடா! என்று அழுகிற மாதிரியே தோன்றுவது எனக்கு மட்டும் தானா?  
இந்தவார ஜுனியர்விகடன்! எது நிஜம் எது புருடா என்று எடிட்டருக்கே புரியாமல் செய்திகளை முந்தித்தருகிற குப்பைற்தொட்டியாக மாறி நீண்டகாலமாகிவிட்டதே!  
இதெல்லாம் அநியாயம்! கருணாநிதி அந்த வசனம் பேசியபோது, தேர்தலா வந்தது? இந்தப்படத்தைத் தயார் செய்தவர் ஓட்டு வாங்கக்  காலில் கூட விழுகிற பகுத்தறிவுக் கலாசாரம் தெரியாத ஆளாய் இருப்பாரோ?
முகநூலில் KG கள்ளபிரான் காஷ்மீர் பண்டிட்டுக்களைப் பற்றிய ஒரு புத்தகத்தையும், அங்கே தற்போதைய நிலைமைக்கு காரணமென்ன என்பதையும் கொஞ்சம் சுருக்கமாகப் பகிர்ந்திருக்கிறார். தெரிந்துகொள்வோமே!    
“ஹிந்து காஷ்மீர்” என்றொரு புத்தகம் உள்ளது. எழுதியவர் எஃப்.எம்.ஹஸ்னைன் ( F.M. Hassnain). இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியவர் அப்போது ஜம்மு காஷ்மீரின் முதல்வராக இருந்த ஷேக் அப்துல்லா. இவரே ஃபரூக் அப்துல்லாவின் தந்தையும் ஓமர் அப்துல்லாவின் தாத்தாவும் ஆவார்.
இந்த முன்னுரையில் ஷேக் அப்துல்லா மிகவும் விஸ்தாரமாக காஷ்மீரத்தில் இருந்த வேத கலாசாரத்தைப் பற்றியும், அங்கிருந்த சைவ தத்துவங்களைப் பற்றியும், பரம்பரை பரம்பரையாக எடுத்துச் செல்லப்பட்ட ஹிந்து ரிஷிகளின் அமைப்புகளையும் புகழ்ந்து தள்ளியுள்ளார். அதுவே உண்மையும் கூட..!
பல ஹிந்துக்களுக்கும் பாரதீயர்களுக்கும் காஷ்மீர் என்பது காஷ்யப முனிவரின் இடம் என்பதும், அது ஒரு அதி முக்கியமான ஹிந்து பூமி என்பதும், தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக அங்கு சைவம் தழைத்தோங்கியது என்பதும் தெரியவே தெரியாது.
தற்போது அங்குள்ள காஷ்மீரிகள் கடந்த 400 வருடங்களுக்கு முன்னால் கட்டாயப்படுத்தி முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டவர்களே. இவர்களுடைய குடும்பப் பெயர்கள் அல்லது பட்டப் பெயர்களான வானி, ஃபட், பண்டிட் (Wani, Bhatt, Pandit) போன்றவைகளிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவின் மற்ற பாகங்களைப் போல் இல்லாமல் இங்கிருந்த மதம் மாறிய காஷ்மீரி முஸ்லீம்கள் தங்கள் குடும்பப் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை.
காஷ்மீரி முஸ்லீம்கள் தங்களின் சகோதரர்களான ஹிந்து காஷ்மீரி பண்டிட்களுடன் மிகவும் மரியாதையுடனும், ஒற்றுமையுடனும்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவையனைத்தும் இந்திரா காந்தி ஷேக் அப்துல்லாவின் பெரும்பான்மை அரசை கலைக்கும் வரை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆட்சி கலைந்த பிறகு... இந்த நிலமையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தானியர்கள், காஷ்மீரில் ரத்த களரியை உண்டாக்கி மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தினர்.
தற்போது காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத சிந்தனை 40 ஆண்டுகளுக்கு முன்னால் பொறுக்கித்தனமான காங்கிரஸ் கயவர்களால் ஏற்படுத்தப்பட்டதே. இதே காங்கிரஸ்தான் அஸ்ஸாமிலும், பஞ்சாபிலும் பிரிவினைவாதத்தை விதைத்தது. அஸ்ஸாமிலும், பஞ்சாபிலும் அதன் பிறகு தொடர்ந்த அரசால் பிரிவினைவாதம் பெருமளவு ஒடுக்கப்பட்டாலும் இந்திரா காந்தியால் பற்ற வைக்கப்பட்ட பிரிவினைவாத, தீவிரவாத நெருப்பு இன்னமும் காஷ்மீரில் மட்டும் எரிந்து கொண்டே இருக்கிறது.
சர்வாதிகாரத்தனமான, பொறுக்கித்தனமான, ஒரே குடும்பம் மட்டுமே அதிகாரம் செலுத்த வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட இந்திரா கால்கிரஸ் கட்சி இது நாள் வரை இந்தியர்களை தங்கள் அடிமைகளாக மட்டுமே எண்ணியிருந்தார்கள். பாரதத்தைக் கொள்ளையடித்து, இங்கிருக்கும் ஜனநாயக முறையை தவறாகக் கையாண்டதன் விளைவே தற்போது காஷ்மீரில் உள்ள பிரச்னைகளுக்கு மூலக் காரணம்.
நாம் ஒன்றை மட்டும் மறக்கவே கூடாது. இந்திராகாந்தி தனக்கு அடங்காத மாநிலத்தில் ஆர்டிகிள் 356 ஐ அமுல்படுத்தி பெரும்பான்மை பலமுடைய மாநில அரசைக் கூட கலைக்கத் தயங்காத ஒரு சர்வாதிகாரப் பெண்மணி. அதோடு தன் தவறுகளை மூடி மறைக்க, தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஒட்டு மொத்த தேசத்திலும் அவசரநிலையைப் பிரகடனம் செய்தவர் என்பதையும் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது... முதன்முதலில் ஓட்டுப் போடப் போகும் இளைய தலைமுறையினர் நம் சரித்திரத்தை நன்றாகப் புரிந்து, அறிந்து கொண்டு ஓட்டளிக்க வேண்டும். ஏனெனில்.. காங்கிரஸுக்கு அளிக்கும் ஓட்டு கொள்ளிக் கட்டையால் நம் தலையை சொறிந்து கொண்டதற்குச் சமம்.
நடக்காது.. இருந்தாலும்... காங்கிரஸ் கட்சி ஒருவேளை ஆட்சியைப் பிடிக்குமானால்.. வளர்ச்சி என்பதை முழுமையாக நாம் மறந்து விடலாம்.அதோடு இன்றைய காங்கிரஸ் தலைமையில் இருப்பவர்களுக்கும் இந்திய தேசத்திற்கும் எந்தசம்பந்தமும் இல்லை. நம் தேசத்தவர்களே இல்லாத அந்த கட்சிக்கும் நம் கலாசார பாரம்பரியத்திற்கும் ஸ்னானப் ப்ராப்தி கூடக் கிடையாது.
எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாக காங்கிரஸை விரட்டி அடிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பாரதத்திற்கும் அதன் மக்களுக்கும் நன்மையுண்டாகும்..!
“ஹிந்து காஷ்மீர் “புத்தகத்தின் லிங்க் 👇👇இங்கு இணைத்துள்ளேன்.
நன்றி - Narenthiran PS ஜி பதிவின் மொழிபெயர்ப்பு
படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை
    

Friday, March 15, 2019

கொஞ்சம் வரலாறு! சீனா, நேரு, நட்வர் சிங்!

கே நட்வர் சிங், இந்திய வெளியுறவுத் துறைப் பணியில்,முப்பத்தோரு வருட காலம் பணி புரிந்து விட்டுஒய்வு பெற்றபிறகு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர். 1956-1958கால கட்டங்களில் சீனாவில் இந்திய தூதரகப் பணியில் இருந்தவர்பிறகுஅமெரிக்காயுனிஸெஃப் என்று பல இடங்களில் பணியாற்றிய பிறகுகடைசியாக 1984 இல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர்

இங்கே சாகும் தருவாயில் காசி நகரில் கங்கைக்கு அருகில் ஒண்டினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கைபணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியில் ஒண்டிக் கொள்வது எதற்காக, காங்கிரஸ் கட்சிக்கும் அவர்கள் தேவைப்படுவது எதற்காக என்பதை நான் விலாவாரியாகச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை அல்லவா!

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்நேருவின் காலத்தில் நட்வர் சிங் வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்திருக்கிறார்சீனாவிலும் பணியாற்றியிருக்கிறார்அந்த நேரத்து அதிகாரபூர்வமான நிலையைநிலவரத்தை அறிந்தவர் என்பது தான். மற்ற அரசியல் வியாதிகளைப் போல ஒரு தகுதியுமில்லாமலேயேவாய்க்கு வந்ததைப் பேசி அதுவே இலக்கியம்மொழிக்கு இலக்கணம் என்றெல்லாம் பிலாக்கணம் பாடுகிற கூட்டத்தோடு சேர்த்து விட முடியாது.

சீனா டயரி என்று நட்வர் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.ரூபா அண்ட் கோ வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் மீதான விவாதங்களில் பேசும்போது இந்திய சீன யுத்தத்தைப் பற்றிய சில கருத்துக்களை முன்வைத்தார்.அது கீழே உள்ள சுட்டியில்! 


Former External Affairs Minister K Natwar Singh on Tuesday regretted that India has not yet comprehensively analysed the reasons behind the 1962 war with China, saying such an exercise was "really necessary."

Speaking at a discussion on his recent book 'My China Years -- 1956-88, he touched upon various phases of Sino-India relationship in the last 60 years and felt things would have been different had Rajiv Gandhi won the 1989 elections.

"Why 1962 happened. No serious analysis of it took place on our side," Singh said indirectly criticising Government's secretive policy in revealing details of the war.

About the war with China, he said "Mao-Tse Tung decided to teach India a lesson after they felt that we were encroaching on their land."

India missed an opportunity to resolve the issues with China in 1960 as the country "did not understand the power game", the former minister said, without elaborating on his observation.

On the border dispute, he said Tawang did not figure in the map of India in 1953.

திரு நட்வர் சிங் சில அடிப்படையான கேள்விகளை முன்வைக்கிறார்1962 யுத்தம் ஏன் நிகழ்ந்ததுநம்முடைய தரப்பில் பிரச்சினையை ஒரு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தத் தவறியது ஏன்?

அடுத்து நட்வர் சிங் எழுப்பும் ஒரு முக்கியமான பிரச்சினை 1960இல் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை அன்று நிலவிய பலப்பரீட்சையை புரிந்து கொள்ளாமல் இந்தியா தவற விட்டு விட்டது என்பது தான்.இதைப் பற்றி மறந்து கூட இந்திய அரசோகாங்கிரஸ் கட்சியோ இன்றுவரை எதுவும் பேசுவது இல்லைநட்வர் சிங்கும் இதைப் பற்றி விலாவாரியாக எதுவும் கூறாமல் வாய்ப்பை நழுவ விட்டு விட்டோம் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்
படத்தின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கி படிக்கலாம்
இந்திய சீன உறவில்திபெத்திய பிரச்சினை பெரும் விரிசலை ஏற்படுத்தியது போகபிரிடிஷ்காரர்கள்இந்திய சீன எல்லைகளை நிர்ணயிப்பதில் மாற்றி மாற்றிக் குழப்பிக் கொண்டிருந்ததும் அடுத்த பிரச்சினைக்கான விதையாக வீரியத்தோடு கிளம்பியது.

1960 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்த சீனப்பிரதமர் சூ என் லாய் பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்துஅதாவது அக்சாய் சின் பகுதியை இந்தியா விட்டுக் கொடுப்பதுபதிலுக்கு சீனா அருணாச்சல பிரதேசம் என்று தற்போது அழைக்கப் படும் பகுதி மீது உரிமை கொண்டாடாமல் இருப்பது என்ற மாதிரி எல்லைப் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்தபோது,நேரு அதில் அதிக ஆர்வம் காட்டவில்லைஅப்படிச் செய்தால்,நான் இங்கே பிரதமராக இருக்க முடியாது என்று சொன்னதாகவும் ஒரு குறிப்பு உண்டுநேருவின் அணுகுமுறை,தங்களை அவமதிப்பதாக சீனா கருதியதும்நேருவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே யுத்தம் தொடங்கப் பட்டதாகவும் தகவல்கள் மெல்ல மெல்லக் கசிய ஆரம்பித்தன 

இதைத் தான்நட்வர்  சிங்என்னவென்று விவரித்துக் கூறாமல்1960 வாக்கிலேயே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு வந்ததைத் தவற விட்டு விட்டது என்று மட்டும் சொல்கிறார்.

(இதே மாதிரி 1948 இல் பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த நேரம், அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், நேருவிடம் பரஸ்பரம் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளலாம் என்று வேண்டிய போது,  "joint defence..! against whom?" என்று நக்கலாக நேரு நிராகரித்ததாகவுமே கூட ஒரு செய்தி உண்டு. அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே, பாகிஸ்தான் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. அன்று முதல், இன்று வரை ராணுவம் நேரடியாகவோ, அல்லது தங்களது பொம்மை அரசை வைத்தோ தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது)

ஐம்பத்தேழு ஆண்டுகள் ஆனபின்னாலும் கூட இந்திய சீன எல்லைப் பிரச்சினை ஒரு போரில் முடிந்தது ஏன் என்பதைப் பற்றியோஅரசு இயந்திரம் மரத்துப்போன ஜடமாகஅரசியல்,ராணுவ ரீதியாகராஜதந்திர ரீதியாக தயாராக இல்லாமல் இருந்த கேவலத்தைப் பற்றியோ இன்றைக்கும் கூட ஒரு சரியான விமரிசன அணுகுமுறை இல்லைஇந்திய அரசும் சரிகாங்கிரஸ் கட்சியும் சரி இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு மூடு மந்திரமாக வைத்திருக்க முடியுமோஅந்த அளவு மூடி வைக்கவே விரும்புவது வெளிப்படை.

எவரோ செய்த முட்டாள்தனத்துக்கு எவரையோ பலிகடா ஆக்கி விடுவது காங்கிரஸ் கட்சி அன்றையிலிருந்து இன்றைக்கும் செய்து கொண்டிருக்கும் உத்திசீனாவிடம் கேவலமாக அடிவாங்கியதில் மக்களிடம் எழுந்த கோபத்திற்கு பலிகடாவாக வி கே கிருஷ்ண மேனன் ஆக்கப் பட்டுஅவரும் பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்

நேருவுடைய பிரம்மாண்டமான சமாதானப் புறா இமேஜ் வெறும் காற்றடைத்த பலூன் தான் என்பதை ஒரு சின்ன ஊசிக் குத்திலேயே சீனா நிரூபித்த பரிதாபத்தை எடுத்துச் சொல்ல, நேருவுக்குப் பக்கத்தில் எவருமே இல்லை.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பாரிலானுங் கெடும்

தவறு செய்யும் பொது அதை இடித்துரைத்துசரியான பாதையைக் காட்டுபவரைத் துணைக் கொள்ளாத அரசன்,கெடுப்பதற்கென்று எவருமில்லாமலேயே கெடுவான் என்ற வள்ளுவர் கூறும் வாழ்வியல் உண்மைக்கு நேருவுடைய அன்றைய கையைப் பிசைந்து கொண்டு நின்ற நிலையே சரியான சமீப காலத்து உதாரணம் 

அதைவிடக் கேவலம்சீனப்போர் முடிந்து ஒரு வருடம் ஆன பின்னாலும் கூடஅவர் சரியாகப் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு "The efficacy of nonviolence is not entirely convincing" என்று ஒரு பேட்டியில் சொன்னதே சரியான நிரூபணம்.

ஆயுத பலமோஎதிரியை இனம் கண்டுகொள்ளும் பக்குவமோ இல்லாத பாமர மக்களைசுதந்திர வேட்கை கொள்ளச் செய்வதற்கும்அந்நியர் ஆட்சியை எதிர்த்து உறுதியாக நிற்பதற்கும்அப்பாவி ஜனங்களை ஆயுத பலம் கொண்ட மிருகத்தனமான அரசு இயந்திரத்தை செயலற்றுப்போகச் செய்யமகாத்மா காந்தி சாமர்த்தியமாகக் கையிலெடுத்த ஆயுதம் சாத்வீக மறுப்பு எனும் சத்தியாக்கிரகம்தடியால் அடித்து மண்டையை பிளந்து ரத்தம் கொட்டிய போதிலும்எந்த எதிர்ப்பும் இல்லாமல் போராட்டத்தைத் தொடர்ந்த சத்தியாகிரகிகளைக் கண்டு தடியெடுத்தவன் பயந்தான்அந்த சூழ்நிலையே வேறு!

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் பார்த்த நினைவு வருகிறதாபாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு முன்னால் பீரங்கிகளோடு முற்றுகை இட்ட வெள்ளையர் படையை எதிர்த்து வெற்றிவேல்வீர வேல் என்று உணர்ச்சி கொப்பளிக்க போர் புரிய வந்த படை,நவீன ஆயுத பலம், பழக்கமில்லாத போர்முறைக்கு முன்னால்   பீரங்கி குண்டுகள் முழங்கவுமே காணாமல் போகும் காட்சி நினைவுக்கு வருகிறதா?

ஒரு அரசைத் தலைமை ஏற்று நடத்துபவன்அதே மாதிரி நின்றால்இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு போய்ச் சமாதானம் பேசும்போதுதியாகு காறித் துப்புவது போலத் தான் நடக்கும்அப்படித்தான் நடந்தது!

ஆக காந்தியோடு நீண்ட காலம் இருந்தும் நேருவுக்கு காந்தியின் மிக எளிமையானநேர்மையான உத்திகளும்காந்தீயமோ அகிம்சைப் போராட்டம் என்றால் என்ன என்பதோ புரியவில்லைஐரோப்பிய நாகரீகத்தில் மிகவும் ரசிகராக இருந்துவெள்ளையர்களோடு உறவாடின போதிலும்,அவர்களிடமிருந்து தந்திரத்தையும் நவீன உத்திகளையும் கற்றுக் கொள்ளவும் தெரியவில்லைஇந்த லட்சணத்தில்உலக சரித்திரத்தை வெறும் ஏட்டளவில் கரைத்துக் குடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டுஅதைத் தன் மகளுக்கும் கடிதங்களில் கற்றுக் கொடுக்க முனைந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது?

இதே மாதிரி லண்டனிலேயே பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்துஆங்கிலம் பேசும் மக்களிடம் உணர்ச்சி பொங்க இந்திய விடுதலைக்காக ஆதரவுப் பிரசங்கங்கள் மட்டுமே நிகழ்த்துவதில் வல்லவராக இருந்த விகே கிருஷ்ண மேனன்.இன்னொரு ஆங்கிலேய நாகரிக ரசிகர்நேருவுக்கு ஏற்றார்போலசரியான ஜாடிக்கேற்ற மூடியாக வந்து அமைந்ததை என்னவென்று சொல்வது?

இந்த இரண்டு நபர்கள்தங்களுடைய ஐரோப்பிய ஞானத்தைக் கொண்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானித்தார்கள்ஆங்கிலேயர்கள் விட்டுப்போன ஐசிஎஸ் எச்சங்களுடைய உதவியுடன்இந்தியாவைச் சுற்றியிருந்த சூழ் நிலைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலேயே கொள்கைகளை வகுத்தார்கள்முதல் சோதனை 1948 இல் பாகிஸ்தானிய காஷ்மீர் ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்தது

அங்கிருந்தாவது சரிசெய்துகொள்ளும் போக்கு தொடங்கியிருந்தால்நேரு என்ற ஷோக்குப்பேர்வழிகாந்தியின் அபிமானத்துக்குப் பாத்திரமாகி அரசியல் வாதியும் ஆன மாதிரி,ஒரு ராஜதந்திரியாக உயர்ந்த நிலையாகவும் மாறியிருக்கும்

1951 இல் திபெத்தை சீன ராணுவம் கைப்பற்றிய நிலையில் இரண்டாவது அக்கினிப் பரீட்சைக்குநேருவின் அயலுறவுக் கொள்கைஉள்ளானதுதலாய் லாமா தன்னுடைய ஆதரவாளர்களோடு இந்தியாவுக்கு ஓடி வருகிறார்ஒரு மதத் தலைவர் என்ற முறையில்மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்திருப்பதாக முடிவெடுத்திருந்தால் அது,சோதனையாக இல்லாமல்சாதனையாகவும் மாறியிருக்கும்!திபெத் சீனாவின் ஒரு பகுதிதான் என்று வெளிப்படையாக இந்திய அரசு ஒப்புக் கொள்வதற்கே அடுத்து பதினேழு வருடங்கள் தேவைப்பட்டனஅப்போது கூடஇரட்டை நாக்குடனேயே திபெத் பிரச்சினை அணுகப்பட்டது

நேருவின் கண்களை அந்த கால கட்டத்தில்கண்முன்னால் தெரிந்த யதார்த்த உலகைப் பார்க்க விடாமலும்புரிந்துகொள்ள விடாமலும்வெறும் கற்பனாவாதியாகவே இருக்கச் செய்தது எது என்று இன்னமும் எனக்குப் புரியவே இல்லை 

சோஷலிசக் கனவுகளைத் தேக்கி வைத்துக் கொண்டு கனவு காண ஆரம்பித்த நேருவிழித்துக் கொள்ளவே இல்லையோ என்றுகூட சமயங்களில் அவரைப் பற்றி அங்கேயும் இங்கேயும் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புக்களைப் படிக்கையில் எனக்குத் தோன்றுவதுண்டு.

தன்னுடைய பகல் கனவு குரூரமாகக் கலைக்கப் பட்டு,சமாதானப் புறா இமேஜும் பறிபோய்மனமுடைந்த நிலையில் நேருவின் மரணம் நேர்ந்தது.

தயிர்வடையை விரும்பி சாப்பிட்டுக் கொண்டே தோழர் வரதராஜன் அடிக்கடி சொல்லும் வார்த்தை, "நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்கள் மீதேறி நரகத்துக்குக் கூடப் போகலாம்!" இந்த வார்த்தை நினைவுக்கு வரும் போதெல்லாம்நேருவின் கதை சொல்லும் பாடம் தான் எனக்கு நினைவுக்கு வரும்.

அப்புறமாவது காங்கிரஸ் கட்சியும்இந்திய அரசும் சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டார்களா என்று பார்த்தால்இன்று வரை அதற்கான அறிகுறி ஒன்றுமே புலப்படவில்லை!. 


இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை எந்த அர்த்தமுமில்லாமல் போனதைப் பற்றிய ஒரு கட்டுரையை இங்கே படிக்கலாம்சுப்ரமணிய சாமி என்றாலே ஒரு கோமாளி,ரீல் மன்னன்முட்டையடி வாங்குவதற்கே பிறந்தவர் என்றமாதிரி நக்கலான எண்ணம் உங்களுக்கு இருந்தால்அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை 

ஆனாலும்சீனப் பிரச்சினையில்இங்குள்ள அரசியல்வாதிகள் எவரையும் விட அதிகம் அறிந்தவர் என்ற முறையில் அவர் எழுதிய கட்டுரைகள் இங்கே மற்றும் இங்கே.

பிரச்சினையை இன்னமும் விரிவாகப் புரிந்துகொள்ள அவை உதவும்.

திரு.நட்வர் சிங், அவருடைய புத்தகம் குறித்து எழுதிய  இந்தப் பகுதிகள் ஏற்கெனெவே எழுதியதன் மீள் பதிவு தான்! கேள்விகள் அப்படியே இருக்கின்றன என்பதால்!

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)