Monday, April 8, 2019

புள்ளிராசா வங்கிக்குப் புள்ளி வருமா? ஒரு புத்தக விமரிசனம்!

முந்தைய சில பதிவுகளில், வங்கித் துறையைப் பற்றிய சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட தருணங்களில், நான் வாசகர்களுக்குப் படிக்க வேண்டிய ஒன்றாக ஆர்தர் ஹைலி எழுதிய ஒரு புதினத்தைச் சொல்லியிருக்கிறேன். நினைவிருக்கிறதா? 


இப்போது நாம் அடிக்கடி செய்திகளில் படிக்கிற பொருளாதாரச் சரிவுகள், துபாய்க் காசுக்காக ஏங்கிக் காணுகிற கனவுகள் எல்லாம் கானல் நீராகிப் போய்விடுமோ என்ற கலக்கம், இவைகளுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள இந்தக் கதைப் புத்தகம்  உதவியாக இருக்கும் என்பதையும் மறுபடி நினைவு படுத்துவதற்காகச் சொல்கிறேன்.  ஒரு புத்தக விமரிசனமாகவும்!

வங்கித்துறையைப் பற்றிய ஒரு அருமையான கதைப் புத்தகம்! ஆர்தர் ஹைலி எழுதிய The Moneychangers!  

சிபாரிசு செய்தகையோடு   புத்தகத்தைத் தேடிப் பிடித்து, மறுபடி ஒருமுறை வாசித்தாயிற்று! இந்தப் புத்தகம் வெளிவந்து 
நாற்பத்து நான்கு ஆண்டுகளாகி விட்டது. ஆறரை மணிநேரத் தொலைக்காட்சித் திரைப்படமாக எடுத்து அதை நான்கு பகுதிகளாக CBS டெலிவிஷன் ஒளிபரப்பியபோதும் நல்ல வரவேற்பு இருந்தது என்று தெரிகிறது. 


ஆர்தர் ஹைலி! 14 வருடங்களுக்கு முன்னால் தன்னுடைய 84 ஆம்  வயதில், மறைந்த மிகச் சிறந்த எழுத்தாளர். பிரிட்டனில் பிறந்து, கனடாவுக்குப் போய்க் குடியேறி, அமெரிக்காவும், கனடாவும் எழுதிச் சம்பாதித்த அத்தனையையுமே வரியாகக் கேட்டதனால், அங்கிருந்தும் வெளியேறியவர்.

"அடே! அப்பன் பெயர் தெரியாத பையா!" என்று தமிழில் ரா.கி ரங்கராஜன் மொழி பெயர்ப்பில் அழுத்தம் திருத்தமாகத் திட்டும் ஒரு விமான காப்டன்! திட்டு வாங்கும் ஒரு விமான நிலைய நிர்வாகி! ஏர்போர்ட் என்ற அவரது நாவலைக் குமுதத்தில் தொடராக வெளியிட்டார்கள்! அடுத்து ஹோட்டல் என்று அவர் எழுதிய நாவலும் குமுதத்தில் வந்தது என்ற நினைவு! குமுதம் அவ்வப்போது, கொஞ்சம் உருப்படியான கிறுக்குத்தனம் பண்ணிக் கொண்டு இந்த மாதிரி மொழிபெயர்ப்பு நாவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.
ஆர்தர் ஹைலி எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக என் மனதில் இன்றைக்கும்  இடம் பிடித்திருப்பது The Moneychangers!வங்கித் தொழிலைப் பற்றிய புதினம் அது!

ஏர்போர்ட் நாவலில், ஒரு விமான நிலையத்தைக் கதைக் களமாக வைத்து, அதைச் சுற்றியே கதாபாத்திரங்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ட்ராக், அத்தனையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து சேர்த்து, ஒரு பிரச்சினையை சுவாரசியமாக சொல்ல ஆரம்பித்துக் கடைசியில், கதாநாயகன் எப்படி அவற்றைச் சமாளிக்கிறான் என்று விறுவிறுப்பாகச் சொல்லியிருப்பார்.

அதே மாதிரி, ஹோட்டல் என்று, விடுதிகளை மையமாக வைத்து ஒரு கதை, வீல்ஸ் என்று கார் உற்பத்தித் தொழிற்சாலைகளை களமாக வைத்து ஒரு கதை. இப்படி ஒவ்வொரு தொழில், அல்லது துறையைக் களமாக வைத்து எழுதுவதில் ஆர்தர் ஹைலி ஸ்பெஷலிஸ்ட். எல்லாக் கதையுமே  மேலோட்டமாகப் பார்க்கும் போது, ஒரே மாதிரி இருப்பது போலத் தோன்றினாலும்,  ஒவ்வொரு துறையையும் தொட்டு எழுதுவதற்கு முன்னால், அதைப் பற்றிக் குறைந்தது ஒருவருடமாவது கவனமாக எல்லாத் தகவல்களையும் சேகரித்து, அந்தத் தகவல்களோடு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கோர்த்து, ஒரு பிரச்சினை பூகம்பமாய் உருவாகிறமாதிரிக் கொண்டு வந்து, கடைசியில் அதைத் தீர்த்துவைக்கிற லாவகம் இருக்கிறதே, அது ஆர்தர் ஹைலியின் ஸ்பெஷல் டச்! தனி முத்திரை!

ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன்! ஒரு நடுத்தரமான வங்கி! அதன் தலைமை நிர்வாகி, தன்னுடைய உடல்நலம் நலிந்துகொண்டே இருப்பதை, பொறுப்பை வேறொருவர் விரைவில் ஏற்க வேண்டிவரும் என்று  அறிவிக்கிற தருணத்தில் இருந்து கதை தொடங்குகிறது. அடுத்து, அந்தப் பொறுப்புக்குத் தகுதியான இரண்டுபேர்கள் இருக்கிறார்கள். வங்கித் தொழிலில் காண முடிகிற  நேரெதிரான குணாதிசயம், இந்த இரண்டு பாத்திரங்கள் வழியாக வெளிப்படுத்தப் படுகிறது. அலெக்ஸ் வண்டர்வூர்ட்,ரோஸ்கோ  ஹேவர்ட்!  இந்த இருவரில் ஒருவர் தான், அடுத்துத் தலைமைப் பொறுப்பிற்கு வர முடியும் என்ற நிலையில், பதவியைப் பிடிப்பதற்கான ஆட்டமாகக் கதை விரிகிறது.

அலெக்ஸ்,  வங்கித் தொழிலுக்குண்டான மரபுகளை மீறாத,  செல்வாக்கைத் தேடுவது எப்படி, எதைக் கொடுத்து எதைப் பெறுவது என்ற நுணுக்கமான ஆதரவு திரட்டும் கலை அறியாதவராக! வங்கித் தொழிலை எப்படிக் கண்ணியத்துடனும், கவுரவத்துடனும் நடத்துவது என்பதை அறிந்தவராக, ஒரு நல்ல வங்கியாளராக ஒவ்வொரு கட்டத்திலும் கதை முழுவதும் அறிமுகமாகிறார்.

ரோஸ்கோ, வங்கியின் இயக்குநர்களுடைய ஆதரவைத் திரட்டுவது எப்படி என்ற கலையை அறிந்தவராக, உச்சிக்குப் போகவேண்டும் என்ற நிறைய ஆசை!  அதற்காக சமரசங்கள் செய்துகொள்ளத் தயாராக இருப்பவராக, என்ன ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கத்  தயாராக இருப்பவராக கதை விரிகிறது. வங்கியின் ஆதாயத்தைக் குறுகியகாலத்திலேயே பெருக்கிக் காட்டுவது, இயக்குநர்களுடைய நம்பிக்கையைப் பெறுவது, பெரிய கார்பரேட்களின் கணக்கை கொண்டு வருவது, தானும் பெரிய ஆளாவது என்று ரோஸ்கோவுடைய கனவுகள் வளர்ந்துகொண்டு போகின்றன.


ஒரு பக்கம்,நாணயமான, நிதானமான வங்கியாளர்! இன்னொரு பக்கம் பேராசை பிடித்த வங்கியாளர்!

இரண்டு விதமான போக்குகளைத்  தெரிவு செய்தாயிற்று! போட்டி என்று வரும்போது, இந்த இரண்டு நேரெதிரான தன்மைகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ சம்பவங்கள் நிகழவேண்டுமே! வரிசையாக ஆரம்பிக்கின்றன!

இங்கே நம்மூர் வங்கிகளில் பார்ப்பது போல 'வாங்க வேண்டுமானால்'  பத்துப் பெர்சென்ட்  'கொடுக்கவேண்டும்' என்ற மாதிரி வெகு சீப்பான கற்பனைக்கெல்லாம் போய் விடாதீர்கள்! அமெரிக்க வங்கிகள் இயங்கும் விதமே வேறு! அங்கே பேராசை, முதலீட்டாளர்களுக்கு நிறைய ஆதாயம் தேடித் தருவது என்ற போர்வையில் ஆரம்பிக்கிறது. ஆதாயம் தேடித் தருகிறேன் என்ற சாக்கில் தாங்களும் ஆதாயம் அடைந்துகொள்ளும் நபர்களால், ஏற்பட்ட சரிவை, நாற்பத்து  நான்கு வருடங்களுக்கு முன்னால் எழுதினது தான், ஆனால், இன்றைக்கும் பொருந்தி வருகிற உண்மைகளாக ஆர்தர் ஹைலி கதையை முன்னெடுத்துச் செல்கிறார்.

ராஜா ராணி கதையாக இருந்தால், கத்திச் சண்டை போட நம்பியார், வீரப்பா மாதிரி வில்லன்களை எதிர்பார்க்கலாம். இதுவோ வங்கித்துறையைப் பற்றியதாயிற்றே! வில்லன் எப்படி இருப்பான்?

கார்பரேட், மெகா கார்பரேட் வடிவத்தைத் தவிர வேறு பொருத்தமான வில்லன் எது? சுனாட்கோ என்ற வடிவத்தில் ஒரு கார்பரேட் வில்லன் கதையில் நுழைகிறது! ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கியின் இயக்குனர்களில் ஒருவர், சுனாட்கோ நிறுவனத் தலைவரை அறிமுகம் செய்து வைக்கிறேன், சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் வளமான எதிர்காலம் கிடைக்கும் என்று ரோஸ்கோவுக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவிப்பதோடு, சேர்த்துச் சொல்கிறார்.  

சொன்னபடியே அந்த இயக்குனரும், ரோஸ்கோவும், சுனாட்கோ நிறுவனத் தலைவரை அவரது சொகுசு விமானத்தில் சந்திக்கிறார்கள். பலமான உபசாரம் நடக்கிறது. அமெரிக்க செனேட்டர்  ஒருவரும் (நம்மூர் எம் பி மாதிரி) விமானத்தில் இருக்கிறார்.  ரோஸ்கோ  பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்கு முன்னரே, ஐந்து கோடி டாலர் கடன் வசதி செய்ய ஏற்பாடு செய்ய ரோஸ்கோவுக்கு  அதிகாரம் இருக்கிறதா, இல்லையென்றால் கூட  பரவாயில்லை என்ற கொக்கி விழுகிறது. 

சுனாட்கோ நாடறிந்த  மிகப் பெரிய நிறுவனம்! அதனுடன் வியாபாரத் தொடர்பு என்பது, லோகல் வங்கியாக மட்டுமே அறியப்பட்டிருக்கும் ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கி, நாடறிந்த வங்கிகள் வரிசைக்கு வந்து விடும்! கடன் மீது பெறும் வட்டி,  வங்கிக்குப் பேராதாயமாக இருக்கும் என்ற கணக்குகளை ரோஸ்கோ மனதிலேயே போட்டுப் பார்த்து விட்டு, தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கும் சந்தர்ப்பம் இது தான் என்று முடிவு செய்கிறார். இயக்குனர் குழுவில், பேசி விட்டு, முடிவைச் சொல்வதாக அந்த உல்லாசப் பயணம் அடுத்த திருப்பத்திற்குத் தயாராகிறது!.

உல்லாசப் பயணத்திற்கு நினைவுப் பரிசாக, அழகான பெண்களும், சுனாட்கோ நிறுவனத்தின் பங்குப் பத்திரங்களும் ரோஸ்கோவுக்கு அளிக்கப் படுகின்றன. ரோஸ்கோவுக்கு, கொஞ்சம் குற்ற உணர்வு தலைதூக்கினாலும், மிக அருமையான வாய்ப்பைத் தனது வங்கிக்காக சாதித்திருப்பதாகப் பெருமிதமும்,  தலைமைப் பொறுப்புக்குத் தன்னைத் தவிர வேறு போட்டியே இல்லாத உச்சத்திற்கு, இந்த டீலிங் கொண்டுபோய்விடும் என்ற சந்தோஷமும் மறைத்து விடுகின்றன.

இயக்குனர்  குழுவின் முன் இந்தக் கடன் விண்ணப்பத்தை ரோஸ்கோ  எடுத்து வைத்து, அது வரை சிறிய அளவில் மட்டுமே அறியப் பட்டிருக்கும் ஃபர்ஸ்ட்  மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கி எப்படி பெரிய வங்கிகளுக்குச்சமமாக வந்துவிடும், எவ்வளவு பெரிய ஆதாயம் கிடைக்கும் என்று எடுத்துச் சொல்லும் போது, அலெக்ஸ் ஒருவர் மட்டுமே, அதை எதிர்த்துக் கருத்துச் சொல்லுகிறார்.
இந்த இடத்தில், ஒரு நேர்மையான, திறமையான வங்கியாளன் எப்படியிருக்கவேண்டும் என்பதை அலெக்ஸ் பாத்திரத்தின் வழியாகக் கதாசிரியர் சொல்கிறார். அடிப்படைக் கோட்பாடுகளை மறந்து விடாமல், போதுமான எச்சரிக்கையோடு, மரபுவழியிலான வங்கித் தொழிலைச்  செய்து வந்தாலே ஆதாயம் தானே வரும், கொஞ்சம் காத்திருக்கவும் தெரிய வேண்டும் என்ற  ethical banker வெளிப்படும் தருணம் இது.

ரோஸ்கோவுக்கு,  எல்லாமே இன்ஸ்டன்ட்- இப்போதே தான்! வங்கித் தொழிலின் மரபுகள், அனுபவப் பாடங்கள் எல்லாவற்றையும் தூரத் தள்ளி வைத்து விட்டு, கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுத்தால் மட்டுமே அதிக ஆதாயத்தைப் பெற முடியும்!  உச்சிக்கு வரத் துடிக்கும் ஒருவன், அதற்காக, எல்லாக் கோட்பாடுகளையும் இழந்துவிடத் தயாராக இருக்கும் நிலை மிக நுணுக்கமாக வெளிப்படும் தருணமாகவும் இருக்கிறது. இயக்குனர் குழு, இருவருடைய கருத்தையும் கேட்டுக் கொண்டு, பேராசையால் உந்தப் படும் ஒரு கூட்டம் எப்படி முடிவு செய்யும் என்பதும் அங்கேயே  தீர்மானிக்கப் பட்டும் விடுகிறது.
கார்பரேட் நிறுவனத்திற்குக் கடன் கொடுப்பதென்று முடிவாகி விட்டது, சரி! எங்கே இருந்து? அங்கே தான் கதையின், இன்னொரு சுவாரசியமான பக்கம் இருக்கிறது. ஏற்கெனெவே, சிறிய நடுத்தர வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க ஒப்புக் கொண்ட தொகையில் கை வைப்பதில் இருந்து தானே ஆரம்பிக்கும்! அந்த சிறிய நகரத்தின் ஜனங்களுக்குத் துணையாக இருந்த வங்கி, திடீரென்று, அவர்களைக் கைகழுவி விடுகிறது. அந்த மக்கள், வங்கி நிர்வாகத்திற்குத் தங்களது எதிர்ப்பை, மிக அமைதியாகத் தெரிவிக்கிறார்கள்.

இந்தப் பகுதியைப் படிக்கும் போது, இதே மாதிரி  ஒரு அனுபவத்தை  இங்கே ஒரு பொதுத்துறை வங்கி 1980 களில் சந்தித்தது. ஆனை அம்பானைக்குக்  கடன் கொடுக்க ஆரம்பித்த அந்த வங்கி, தன்னுடைய மற்ற வாடிக்கையாளர்களுக்குக் கடன்  கொடுக்க முடியாமல், கிட்டத் தட்ட ஐந்தாண்டுகள் credit freeze செய்து வைத்திருந்ததும், மற்ற வங்கிகளிடமிருந்து கொள்ளை வட்டிக்குக் கடன் வாங்கி (call  rates were very high, then), அம்பானைக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்த வேடிக்கையும், ஒரு கட்டத்தில் இந்த ஒரு வங்கி கொடுத்த ஊட்டச் சத்துப் போதவில்லை என்று, அம்பானை ஏழெட்டு வங்கிகளுக்குப் போய் அங்கேயும் கரும்புத் தோட்டத்தில் யானை புகுந்த கதையாக ஆனதும், நேற்றைய வரலாறு!

இப்படி, ஒவ்வொரு கதாபாத்திரமும், ஒவ்வொரு கட்டத்திலும், ஒரு திருப்புமுனை, கதைக்குள் விரியும் இன்னொரு கதை என்று அழகாகப் பின்னப்பட்டிருக்கும் போதே, வங்கிகளைப் பற்றிய ஏராளமான தகவல்கள், அமெரிக்க டாலர் உருவான விதம், கள்ள நோட்டுக்கள், அவற்றைக் கண்டுபிடிக்கவும் தயார் செய்யவும்  உதவும் புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள், தங்கத்திற்கும் டாலருக்குமான உறவு, கீனிஷியன் எகனாமிக்ஸ்(Keynesian economics) என்று வங்கிகள் தொடர்பான தகவல் சுரங்கமாகவும் இருக்கிறது. அரசியலும் வங்கித்துறையும் எப்படி ஒன்றோடொன்று "லட்சிய"  உறவு கொண்டிருக்கிறது என்பதையும்  சொல்கிறது.

வங்கிகளில், அதன் செயல்பாடுகளில்  நிறையக் குறைகள் சொல்லிக் கொண்டே போகலாம் தான்! ஆனாலும் வளர்ச்சியடைந்த சமுதாயத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதை இந்தக் கதை, அனாயாசமாகச் சொல்லிக் கொண்டே போகிறது.

எல்லாவற்றையும் விட, மிக முக்கியமானது, டாலரில் முதலீடு செய்வதை விடத் தங்கத்தில் முதலீடு செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதையும் சொல்வது தான்! சொன்னது நாற்பத்து  நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

சதாம் ஹுசேனை அமெரிக்கா விரட்டி விரட்டிக் கடைசியில் தூக்கு மாட்டித் தொங்க விட்டது, சதாம் ஏதோ பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தார் என்பதனால் அல்ல! ரசாயன ஆயுதங்களை வைத்திருந்தார் என்பது கூட அமெரிக்க அண்டப் புளுகுகளில் ஒன்றாக இருக்கலாம். எல்லாவற்றையும் விட, பெட்ரோல் விற்பனையை  டாலரை வைத்து நடத்தாமல், வேறு செலாவணிக்குத் தயாரானார், மற்றவர்களையும் மாறும்படி தூண்டிக் கொண்டிருந்தார் என்பதே ஈராக் மீது அமெரிக்கா நடத்திய யுத்தத்தின் காரணம்.

ஆர்தர் ஹைலி இந்தக் கதையில், ஒரு சிறிய நகரத்தின் வங்கி, அந்த நகரத்து மக்களின் சேமிப்பையும், நம்பிக்கையையும் பெற்ற வங்கியாகக் களத்தைத் தேர்ந்தெடுத்து, கதாபாத்திரங்களின் வழியாக, வங்கிகளின் பேராசை, கார்பரேட் அரசியல்கள் ஒன்று சேரும் போது  எப்படி அழிவின் கருவிகளாக மாறிவிடுகின்றன என்பதைச் சொல்கிறார்.

கதைதான்! 44 வருடங்களுக்கு முன்னால் எழுதினது தான்! இன்றைக்கும் அமெரிக்க வங்கிகள், நிதித்துறையில் பிரதிபலிக்கும் பேராசை, தானும் கெட்டு, ஊரையும் கெடுப்பது என்ற அம்சங்களை வெளிப்படுத்துவதாக இருப்பது தான் இந்தக் கதையின் பெரும்வலிமை!

The Moneychangers! அடிப்படைகளைப் புரிந்துகொள்ள விரும்புகிற எவருக்குமே, அவசியமாக நான் சிபாரிசு செய்யும் புத்தகங்களுள் ஒன்று! 

நேற்றைய வரலாறு! நமக்குத் தான் முந்தின நிமிடத்தில் நடந்தது என்ன என்பதே தெரியவில்லை, இதில் நேற்றைய வரலாறு எதற்கு என்று கேட்கத் தோன்றினால்,  நிச்சயமாக இந்தப் பதிவு உங்களுக்கானது இல்லை!

ஆர்தர் ஹைலியின் பாணியைப் பின்பற்றி தமிழிலும், சில சுவாரசியமான ஆரம்பங்கள் இருந்தன!  பி.வி.ஆர் என்ற எழுத்தாளர் கல்கி வார இதழில் "சென்ட்ரல்" என்ற கதையை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பின்புலமாக வைத்து, ஒரு தொடர்கதையை எழுதினார்.  கங்கை புத்தக வெளியீடாக, புத்தகமாகவும் வந்தது என்று நினைவு!

அது என்னவோ, தமிழில் பரபரப்பாகப் பிராண்டுகிற தலைப்போடு வருகிற புத்தகங்கள் தான், எழுத்தாளர்கள் தான் அதிகம் கவனிக்கப் படுகிறார்கள்! தினத்தந்தி அல்லது தினமலர் படிக்கிற வாசக நிலையிலேயே வைத்திருக்கும் போக்கு என்றைக்கு மாறும்? 

ஜனவரி 2010 இல் இன்னொரு வலைப்பக்கங்களில் எழுதியதன் மீள்பதிவு 

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)