Friday, February 25, 2011

சப்த வசுக்கள்..! ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் சிறுகதை



"மொத மொதல்ல ஒரு தலைச்சன் பொறந்துது. எண்ணி ஏழே நாள்தான் இருந்துது. ...ப்ச்...அப்பறம்...பாவம்...'

அம்மாவின் இந்த வார்த்தையில் பழகித்தான் வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள் போயிருக்கின்றன அவனுக்கு.

தங்களுக்கெல்லாம் முந்தி வந்து மூவிரு நாள் இருந்து சென்று விட்ட அந்த ஜீவன் இன்று எங்கு இருக்கும்?

ஒரு வேளை தங்களிலேயே யாராகவேனும் கூடப் பிறந்திருக்குமோ? ஒரு தடவை எல்லாரையும் கூர்ந்து கவனித்தான். தன்னையும் எதேச்சையாகக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். ஏதோ அப்படி இருந்தாலும் ‘இதோ’ என்று தெரிந்துவிட சாத்தியம் ஏதோ அங்கு இருக்கும் பாவனை.

இருப்பாரைக் கவனி. இல்லாதாரைப் பற்றி என்ன யோசனை?

அவன் குடும்பத்திலேயே பலமுறை அவனுக்கு சொல்லப் பட்டதுண்டு. ஆனாலும் அந்தத் தலைச்சன்.........?

சிறு வயதில் பாச்சுவாத்தில் அவனுக்குத் தங்கை பிறந்திருக்கிறது என்று செய்தி. பாச்சு ஏதோ முக்கியத் தகவல் இவனுக்கு மட்டும் முதல் தகவல் கொடுக்கும் வேகத்தில் வந்து சொல்லிய பின் மூன்று நாள் கழித்து அவர்கள் வீட்டில் ஏதோ தூளி போல் கட்டிப் புறப்பட்டார்கள்.

இவனும் பாச்சுவோடு சேர்ந்து துக்கம் காத்திருக்கிறான்.

ஒரு தடவை, இரண்டு தடவை பொறுத்துப் பார்த்தாள் அம்மா.

"என்னடா இது சும்மா அதைப் பத்தியே பேசிண்டு? வேலையைக் கவனி. அவாளெல்லாம் பெருமாள்ட்ட  சௌக்கியமா போய்ச் சேர்ந்திருப்பா. .."

"இருக்கறவாதான் ஐயோ பாவம்.... போனவா புண்ணியம் செஞ்சவா. அதுவும் பொறந்து கண்ணு முழிக்காம போயிட்றது எல்லாம் கொடுத்துவச்சதுகள்.... என்னமோ அதையே பெனாத்திண்ட்ருக்க..? படிக்கற வேலையைப் பாரு."

அவன் பேசுவதைக் கேட்க அப்பாவுக்குப் பிடிக்கும். சந்திர கதி சூர்ய கதி என்று ஒருவாறு அதன் பயணகதியை ஃபிக்ஸ் பண்ண முயல்வார்.

அதற்குள் அம்மா, ‘போய் கறிகா இல்லை. வாங்கிண்டு வாங்கோ’ என்று துரத்திவிடுவாள்.

ஆனாலும் அந்தத் தலைச்சன் அங்கு எங்கோதான் சுற்றிக் கொண்டு இருக்கும்.

மாலை நேரம். வெளியில் விளையாடி விட்டு வந்து கைகால் அலம்பிக் கொண்டு வீட்டுப் பாடம் படிக்க உட்காரும் வேளையில் அம்மாவுக்குக் கொஞ்சம் ஓய்வு. பழைய நினைவுகள் ஏதேனும் எழுந்துகொள்ளும். அந்த நினைவுகளைக் கொஞ்சம் எடுத்துத் தூசி தட்டி வைக்கும் போது அங்கு எங்கோ இடுக்கில் இந்தத் தலைச்சன் உட்கார்ந்திருக்கும். கொஞ்ச நேரம் அதை லாலனை பண்ணுவாள்.

அவன் பாடத்தை நிறுத்திவிட்டு உற்றுக் கேட்கிறான் என்றதும் பேச்சை மாற்றி விடுவாள்.

எதிர்த்த வீடு கரைவழிச் சோழியர்கள் வீடு. அவர்களாத்து டேச்சு கதை கதையாய்ச் சொல்வான். எந்த மரித்த ஜீவன் தங்காத்தில் பின் எந்த ஜீவனாக வந்து பிறந்தது என்று துல்லியமான விவரம் காட்ட அவனால் முடியும். தயவு அவன் கிராமத்துத் தாத்தா ஒருவர்.

ஏன் ஒரு ஜன்மத்தில் எங்கோ பொறையில் ஒளித்து வைத்துப் போன காதுக் கம்மலை அடுத்த பேத்தியாகப் பிறந்து நினைவாக இங்க இருக்குன்னு எடுத்துத் தந்ததாக டேச்சு சொல்வதைக் கேட்டால்தான் நம்பமுடியும்.

இருந்தாலும் அவர்கள் மீட்டில் மூன்றாவது குழந்தை, நாலு வயசு, அழகான பெண் குழந்தை, அதன் சிரிப்பு என்பது சர்வ ஆகர்ஷணம். காரணம் என்ன என்று தெரியவில்லை. இப்படித்தான் கேள்விக் குறியாகிப் போனது. நேர்த்திக்கடன் பாக்கி. அதுக்குத்தான் வசூல் என்று அப்பொழுதும் டேச்சு ஃபைலைக் க்ளோஸ் பண்ணிவிட்டான்.

ஒரு நாள் டேச்சு, இவன், கண்ணாமணி, விச்சு எல்லாரும் சேர்ந்து இரவு 8 மணி வரையில் துளசிங்கத்தாத்துத் திண்ணையில் இருட்டுப் புறை ஒட்டுத் திண்ணையில் சீரியஸான டிஸ்கஷன்.ஆவி இருக்கா இல்லையா?

வழக்கம் போல் டேச்சுதான் ஆவிக்குக் குலம் கோத்திரம், சயனம் சஞ்சாரம் எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டான். ஒரு நாள் காலை 2 மணிக்குத் தெரு வழியாகவே ஓர் ஆவி போனதையும், அது இவன் முழித்திருக்கிறான் என்று உணர்ந்து இவாத்துக் குறட்டை உற்றுப் பார்த்து முழித்ததாகவும், உடனே டேச்சு சம்யோசிதமாகக் குறட்டை விடும் சப்தத்தை அபிநயிக்கவே அது சரிதான் என்று சாந்தமாகி டேச்சுவாத்து லைட் கம்பம் வழியாகப் பிடித்துக் கொள்ளாமலேயே ஏறி மாடிப் பக்கம் எங்கோ போய் விட்டதாகவும் கூறினான்.

"இவன் வுட்டா ரீலு உடுவாண்டா இவன்" என்று கண்ணாமணி கடுப்பாகிக் கத்தியதற்கு, டேச்சு முனீஸ்வரன் மேலயே சத்யம் செய்து விட்டான். அதற்கப்புறம்தான் ஆவி என்பது மறுக்க முடியாத உண்மை கிவிட்டது இவனுக்கு.

விச்சுவுக்கு ஏன் திடீரென்று தோன்றியதோ, கட்டைக் குரலில், "ஏய்! நாம சுடுகாட்டில சத்தம் போடாம ஒரு மந்திரம் சொல்றேன் அதைச் சொல்லிண்டே போய் நின்னா நிச்சயம் இதெல்லாம் அங்கதாண்டா வரும். அப்ப பார்த்துடலாம். ஆனா இந்த டேச்சுவைக் கூட்டிக்கிட்டுப் போகக் கூடாதுடா. சமயம் பார்த்து டமார்க் குசுவை விட்டான்னா அவ்வளவுதான் அதெல்லாம் கடுப்பாயிடும். துரத்த ஆரம்பிச்சுடும் அப்பறம்....."

டேச்சு உத்தரவாதம் தந்ததன் பேரில் உளவுப்படை மறுநாளே புறப்பட்டுப் போய்ப் பதுங்கிப் பதுங்கிச் சுடுகாட்டை அடைந்தது.

கொஞ்சம் முன்னாடியே வந்து விட்டதாக அலுத்துக் கொண்டான் டேச்சு. இரவு 11.45 மணி இருக்கும்.

இவனுக்கு அந்தத் தலைச்சன் அங்குதான் எங்காவது தென்படும் என்ற நிச்சயம் அதிகப்பட்டது.

டேச்சுவுக்கு முழிகள் முகத்தைவிட்டுத் தனியே வந்துவிட்டன என்பது போலத்தான். உளவுத்துறைக்கு வெளிப்படையாகவே உதறல். எல்லாம் டேச்சுவால் என்று பொதுப் பழி.

‘நான் என்னடா பண்ணட்டும். விச்சுதாண்டா சொன்னான்’ என்று தொண்டையோடு தொண்டையாக ரகசியமாக அரைத்தான். ஆவிகளின் காதில் விழுந்திருக்காது.

ஒண்ணரை, இரண்டு மணி இருக்கும் மண்டபத்தை ஒட்டிய இருட்டுத் திட்டு திடீரென எழுந்துகொண்டது. எவ்வளவு கைகள் என்று நிச்சயமாகத் தெரியவில்லை. அப்படியும் இப்படியும் நகர்வு.

ஐயய்யோ...! இந்தக் கூட்டம் இருப்பது பார்த்துவிட்டதா? இந்தப் பக்கம் நோக்கியே வருகிறது.

கண்ணாமணிக்கு அடக்க முடியவில்லை. வாய் தந்தி!! 'முதலில் வாங்கடா' என்று ஓட ஆரம்பித்தவன். கூட்டமே அவன் பின்னால் மந்திரித்து விட்டால் போல்.

‘ஏய் இங்க என்னடா இம்மா நேரத்துல பண்றீகளூ?’ என்று அது கேட்கிறது. இவனுக்கு அந்தக் குரல் ஆரடிக் குரல் போல் இருக்கிறது.

‘ஆரடி?’ ஆரடி?’ என்று ஒரு பைத்தியம். பாவம் வாழ்ந்து பின் கெட்டு, துரத்தப்பட்டு, ஜீவனம் பிடுங்கப்பட்டு, நிம்மதியாகத் தூங்க சுடுகாடு புகலிடம்.

ஒரு வேளை இதனிடமே கேட்கலாமோ அந்தத் தலைச்சன் பற்றி........ 

'ஏய் சீக்கிரம் வாடா..... '

மற்ற எல்லாரும் பக்குவமாகப் போய் செட்டில் ஆகி விட்டார்கள். இவன் தான் கொஞ்சம் கவனப் பிசகில் சத்தம் வர, ஏய் யாரது? என்பதைத் தொடர்ந்து லைட்டுகள் போடப்பட்டு, இவன் என்னமோ நிதானமாக விளக்குபவன் போல் ‘நான் தான் கதவைத் திறந்துண்டு வந்தேன்’ என்று சொல்ல, பிறகு பெரிய இன்வெஸ்டிகேஷன், எதிர்வீட்டு மாமா, வீட்டில் உள்ளவர்கள், வாசலில் ஒண்ணுக்குப் பெய்ய வந்த கிழவர் -- ஐம்பேர் ஆயம், எண்மர் குழுவாக ஆகி, தெருச் சட்ட சபை ஆக இருந்தது. 

நல்ல வேளை. யாருடைய குரலோ ‘எல்லாம் நாளை காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற தீர்ப்பில் கலைந்து போனது.

மறுநாள் இவனின் தகப்பனாரும், தாயும் துயரக் காட்சியாய் அழாக் குறையாகக் கேட்டார்கள். டேச்சு, கண்ணாமணி இன்னும் மற்றவர்களின் வீட்டுப் பெரியவர்களும் இவன் வீடு தேடி வந்து விட்டனர்.


‘இந்தப் பசங்க போக்கே ஒன்னும் சரியில்லை’

"என்ன சார்! ராத்திரி எழுந்து சுடுகாட்டுக்குப் போயிருக்கானுக...."

"என்னடா என்ன குறை வைச்சோம் உங்களுக்கு..."

"வந்து பொறந்துருக்கு பார் போன ஜன்ம கர்மம்!?".

"ஏண்டா நீயாவது இவாளுக்குச் சொல்லக் கூடாதோ? நீயும் சேர்ந்து போனியா?"

"என்ன அம்மக்கள்ளனாட்டம் உம்முனு இருக்காத. சொல்லு".

"இல்ல.... அந்தத் தலைச்சன் அங்க இருக்குமான்னு பார்க்கப் போனேன்...."

"அதான் அதான்! இவனுக்கு அதே பல்லவிதான்!. என்ன கர்மாந்திரமோ.....பெத்தவ நானே மறந்துட்டு ஒக்காந்திருக்கேன். உனக்கு என்னடா வழுச நாயி...தலைச்சன்.....மண்ணாங்கட்டின்னு. எங்க பாவத்தைக் கொட்டிக்கறதுக்குன்னே வந்து தொலைச்சிருக்கியா? "

"அது பாருங்கோ....சுடுகாட்டுக்குப் போயிட்டு வந்துருக்கா,,,பசங்க...ஏதாவது சாங்கியம் பண்ணிடுங்கோ .....ஏன் சொல்றேன்னா..... "

ஓய் சும்மா இதான் சாக்குன்னு ஏதாவது கதை பண்ணாதீர் சாங்கியம் அது இதுன்னு...வேலையைப் பாரும்.... நீர் ராத்திரி ஆச்சுன்னா அப்பப்ப அங்க சுடுகாட்டுப் பக்கம் தானே ரகசியமாப் போயிட்டு வரீர். உமக்கு என்ன சாங்கியம் பண்து.............?

"சூ ....பேசாம....எதாவது கிண்டியாய நமன்னு சொல்லிவுட்றீரே..... "

எந்தச் சம்பவமும் போன்றே சுடுகாட்டுச் சம்பவமும் சூடு தணிந்து அன்றைய பொழுது மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தது.

மாலையில் தெருமுக்கில் கதாகாலட்சேபம் ஆரம்பம். இவனையும் கூட்டிக் கொண்டு இவன் தந்தை அங்கு போகும் சமயத்தில் சந்தனு கங்கை கெட்டம். அஷ்ட வசுக்கள். சாபத்தால் பிறந்து, உடனே அவளால் கொல்லப் பட்டு, எட்டாவது மிஞ்சியது.

மிஞ்சின வசு பீஷ்மர்.........

இவனுக்கு மீண்டும் தலைச்சன் பிரச்சனை.

ஆம் அந்தத் தலைச்சன்கள் ஏழு பேர் என்ன ஆனார்கள்? அந்த எட்டாவது பீஷ்மனுக்கு இந்தக் கேள்வி எழுந்திருந்திருக்குமா?

இப்படி அங்கங்கே பிறந்து உடனே பதிவு இல்லாமலேயே இறந்து மறையும் இந்த மாதிரியான ஸப்த வசுக்கள் என்ன ஆகின்றார்கள்?
தலைச்சனும் ஸப்த வசுக்களாய் ஆகியிருக்குமோ?

கதையிலிருந்து திரும்பி வரும் போது ஆரடிப் பைத்தியம் கத்திக் கொண்டு இருந்தது கந்தன் கடையின் பக்கம்....


"அந்தக் கெட்ட பசங்களோட சேராத...."

******
சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதை குறித்து ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஒரு அற்புதமான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். சில நுணுக்கமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார். 

இந்தச்சிறுகதையில் நீங்கள் புரிந்து கொள்வதென்ன என்பதைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன், கேட்கலாம்!



Friday, February 18, 2011

நீ.....! ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் சிறுகதை!

நீ.....

ன்று காலையிலிருந்தே தான் ஆகிய ஜெனி ஏதோ எங்கோ மறந்து வைத்துவிட்டவளைப் போல்தான் பொருந்தாமல் இருக்கிறாள்.


கைவிரல் நகங்கள் கச்சிதமாகக் கடிக்கப்பட்டுவிட்டன. முன்னத்தி மயிர்ச்சுருள் இறுக்கி, நெகிழ்த்தி, இறுக்கிப் பல ஆவ்ருத்தி ஆகிவிட்டது.

பிரபாகரன் அவளுக்குக் காலையில் காப்பிப் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தவனைப் பார்த்து, “நீ...” என்றவள்தான் பிறகு ஒன்றும் பேசவில்லை.  பிரபாகரன் நயமறியும் ஜீவன். ஏதோ எண்ண ஓட்டம் என்று எடுத்துக்கொண்டு அவள் செய்யும் வழக்கமான வேலையை எல்லாம் தானே முடித்துவிட்டான். தெரியும் அவனுக்கு. அவளை இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வேலை செய்யத் தொணப்பினால் பல குளறுபடிகள் நடக்கும்.

வன் சுறு சுறுவென்று வேலை செய்வதை நெட்டுக்குத்தினால் போல் பார்த்துக்கொண்டிருந்தாள் என்றும் சொல்லலாம். ஏதும் அவள் அறியாள் என்பதும் உண்மை. ஆனால் அவன் தடுமாடும் போது தன்னிச்சையாக அவள் வாயும் பழக்கமும் சில உதவிக் குறிப்புகள் கொடுப்பதை வைத்து அவள் மனத்தில் பதிந்திருக்கும் இதெல்லாம் என்பது சொல்ல முடியாது.

பிரபாகரனுக்குப் புதிதில்லை. ஆயினும் அவனுக்கு இது புரிபடவில்லை.
பெரிய அக்கா ஒரு சமயம் அலுத்துக்கொண்ட போதும் அவனிடமிருந்து எந்த உடன்பாட்டுப் பதிலும் இல்லை --- ‘இதுக்குத்தான் வீட்டுல பெரியவா பார்த்துப் பண்ணி வைக்கணும்ங்கறது’

ந்தச் சொல் ஜெனியின் மனத்தில் எப்படி தைத்தது என்று அவனுக்குப் புரியவில்லை. பின்னொரு சமயம் அவள் கேட்டாள் அவனை -- பெரியவா பார்த்து ஒரு பெண்ணை நீ பண்ணிக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா?

பெரிய அக்கா கிடக்கிறா விடு!

ன் பெரிய அக்காவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

வள் சொன்னதைத்தானே நீ கேட்கிறாய்?

ல்லை. எனக்குத் தெரியாது அவள் சொன்னாளா என்று. ஏதோ எனக்குத் தோன்றியது.

வள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்வது சரி என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் பிரபாகரன்.

ன்? இவ்வளவு மாவு இருக்கிறதே. எதற்கு இப்பொழுது மீண்டும் ஊறப்போட்டாய்?’

'ல்லை. மிகவும் புளித்துப் போய்விட்டது. அது வேண்டாம். '

வனோடு ஏற்பட்ட முதல் சந்திப்பு. பால் பூத்திலா? இல்லை எதாவது நிச்சயம் ஏதோ கடையில்தான். என்னமோ ஒரு துள்ளல். இவனே வேறு மாதிரிதான் தெரிந்தான். அதுதான் இவனா? அல்லது இவன் தான் அதுவா? இது ஒன்றும் புரிந்து கொள்ள சுளுவாய்த் தெரியவில்லை. அக்கறை அன்பு கடமை பொறுப்பு இதில் எல்லாம் ஒன்றும் குறைவு இல்லை.
லட்சியக் கணவனா என்பது அநாவசியக் கேள்வி. நம்முடைய வாழ்க்கையை  வேறு எங்கோ மாட்டிவைத்து ஒப்பிடுவது. ஆனால் அன்று நம் கண்ணுக்குப் பட்ட அந்தக் காதலன்...என்ன ஆனான்? அல்லது நாமும்தான் அவன் கண்ணுக்கு அப்படித்தானோ?

ரொம்பப் பண்ணாத! தலைமுடி உதிரும் பார்த்து......

ரி காதல் என்பதுதான் என்ன? உடல் இச்சைக்கு உள்ளம் பூசும் சாயமா? அப்படி என்றால் உடலோடு போய்த் தொலையாமல் உள்ளத்தை இந்தப் பாடு படுத்துவானேன். அன்று தேவ குமாரனாய்க் காட்சி தந்தவன் இன்று ஏன் மடைப்பள்ளி பரிசாரகன் போன்று ஆகிவிட்டான்? அவனுக்குத் தான் செய்யும் எந்தப் பணிவிடையிலும் அவன் தனக்குச் செய்ய என்றும் சளைத்தவனில்லை என்றாலும் அந்தக் காதல் மனிதன் மறைந்தவன் தான். காணவில்லை.

த்தனைக்கும் அன்று, காதல் காலத்தில் பேசிய பேச்சு எல்லாம் பிதற்றல். இன்றோ உளறாமல், தடுமாறாமல் எந்தச் சூழலையும் சமாளிக்கும் நேர்த்தி மிக்கவன். ஆனாலும் அந்தப் பிதற்றலில் திகழ்ந்த வாழ்வின் ஆழம் அடிமண் இட்டுப்போய் வாழ்வே கணுக்கால் அளவு ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

'சாப்பிட்டுவிடு. ஆறுகிறது பார். மறுபடியும் கொஞ்சம் சூடு பண்ணிவிடவா?'

'இல்லை. இப்படியே இருக்கட்டும். '

ல்லாப் பெண்களின் வாழ்விலும் இப்படித்தானோ? காதலன் ஒரு தோற்ற மயக்கம் தானோ?

ண்ணுக்கு மையிட்டுக் காணும் மயல் காட்சியோ? முன்னொரு முறை இதைப் பற்றி வினவியபொழுது வாழ்க்கை வேறு, கற்பனை வேறு என்று சொல்லிப் போய்விட்டான். ஆனால் அந்தக் காதலனை விரும்பித்தானே நான் இவனை மணந்தேன். அவன் மறைந்து போன இவனின் மிச்ச வடிவத்தை வைத்து வாழ்வு ஓடுவதை எப்படிச் சீரணித்துக்கொள்வது? எல்லாப் பெண்களுமே இப்படிக் காதலனை இழந்து இப்படிக் கொடுப்பினை இருந்தால் பரிசாரகனுடனோ அல்லது துரதிருஷ்டம் என்றால் பாதகனுடனோ தான் காலம் தள்ளுவர் போலும்.

தியிலிருந்தே அப்படித்தானோ? அதனால்தான் வாழ்வின் முடை நாற்றங்களில் சிக்காத நித்திய கற்பனையாக, கற்பனைக்கும் எட்டாத நிதய காதலனாக கிருஷ்ணனை வைத்தார்களோ? ஆம் !

வன் ஒருவன் தான் காதலனாக இருக்க முடியும். மனிதர்கள் எப்படிக் காதலர்களாக இருத்தல் கூடும்? இங்குதான் நடைமுறை என்னும் தரைமட்டப் பிசாசு அனைத்துக் காதல்களையும் துடைத்துவிடுகிறதே. ராதையும் உலகத்தைச் சேர்ந்தவள் இல்லை. கிருஷ்ணனும் உலகத்தைச் சேர்ந்தவன் இல்லை. காதல் என்பதே உலக சமாச்சாரம் இல்லை.

கையை அலம்பிண்ட்ரேன், காயறது பாரு.....  ஹலோ....ஜெயபத்மாசினி...

ஹாங்....

ப்ப காதல் என்பதை யார் தமக்குள் நிரந்தரமாகக் குடிகொள்ள வைத்து விடுகிறார்களோ அவர்களிடத்தில் கிருஷ்ண பிரஸன்னம் என்று கொள்ளலாமா?  ராதையின் லீலை என்று சொல்லலாமா? ஆனால் பாவம், இந்த ஆண்பிள்ளைகள் அச்சுப் பிச்சுக்கள் பாவம்!

மக்காவது காதல் என்பதற்குக் காதலன் தெய்வம் இருக்கிறது. இதுகளுக்குக் காதலி தெய்வம் எங்கிருக்கிறது? எல்லாம் அம்மா அம்மா என்று சொல்லிக் காதலியைத் தெய்வமாக்குவதில் கோட்டை விட்டுவிட்டதுகள். ஏதோ பாரதியே கஷ்டப்பட்டுக் கண்ணம்மா என்றெல்லாம் சொன்னாலும் மரபில் வரவில்லையே! ஒரு வேளை காதலி தெய்வம் ஏற்படாத காரணம்தானோ இதுகள் எல்லாம் கல்யாணத்திற்குப் பிறகு மண்ணாந்தைகளாய் ஆகி விடுகின்றன. ச ... ரொம்ப பாவம்... !

ன்ன ஒரே யோசனை? இப்படியேவா உட்கார்ந்துண்ட்ருக்கப் போற?

'ம் இல்லல்ல........... நீ.... சாப்பிட்டாயா? '

ரிதான். இவ்வளவு நேரம் நீதானே பரிமாறினே..... சரி வா தூங்கு. ராத்திரி கண் முழிக்காத.

....................................

ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்!  என்னுடைய இரண்டு வலைப்பதிவுகளிலும் இவரைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறேன். மோகனத்தமிழை வியந்து கொண்டாடி இருக்கிறேன்.

"கதைசிறுத்தாலும்..." சிறுகதை எப்படி உருவாகிறது என்பதை  தமிழ் வாசல் கூகிள் வலைக் குழுமத்தில் ஒரு அட்டகாசமான ஒரு விவாத இழையாகத் தொடங்கினார். இதை ஏற்கெனெவே ஒருபதிவில் சொல்லியிருந்தேன். அந்தத்தருணத்தில் விவாத இழைகளைக் குழும உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்று இருந்தது, இன்று முன்னிரவு முதல் எவரும் பார்க்கலாம்,  படிக்கலாம் என்று பொதுவெளியில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது சிறு கதை என்ற இழையைத்தொடங்கி....மூன்று  சிறுகதைகள்! மனிதன் கலக்கிக் கொண்டிருக்கிறார்! அதில் முதல் சிறுகதை இது!

சிறுகதை வடிவம் பொருந்தி வந்திருக்கிறதா? என்ன சொல்கிறீர்கள்?


Wednesday, February 16, 2011

மக்களை ஈர்த்த மகராசர்....! தி. ஜானகிராமன்

மக்களை ஈர்த்த மகராசர்

தி. ஜானகிராமன்



விமானம் தரை தட்டிற்று. ஓடி நின்றது. 'இங்கு ஐம்பது நிமிஷம் நிற்கும். தொடர்ந்து பிரயாணம் செய்பவர்கள் இறங்கி, ட்ரான்ஸிட் கூடத்தில் இளைப்பாறி திரும்பி வரலாம். ' என்று பெண் குரல் அறிவித்தது. அவர் வெள்ளைகாரர் படிக்கட்டில் இறங்கினார். நடந்து 'ட்ரான்ஸிட் ' கூடத்திற்குப் போனார்.

இன்று என்ன விசேஷம் இந்த ஊரில் ? ஏன் இவ்வளவு இரைச்சல். ' ஏன் இத்தனை கூட்டம் ?

கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்தார் வெள்ளைக்காரர். தலை, தலை, எங்கும் தலைகள் 'பத்தாயிரம் தலைகள். ஆமாம் பத்தாயிரம் பேருக்குக் குறையாது. மேலும் மேலும் கார்கள் வந்து கொண்டிருந்தன. சின்னக்கார்கள், பெரிய கார்கள், உள்நாட்டு கார்கள். வெளிநாட்டு கார்கள் கதவுகள் திறந்தன. மனிதர்களைக் கொட்டிவிட்டு அப்பால் கார் கூட்டத்தோடு சேர்ந்து நின்றன. 

பத்தாயிரம் பேர் கூட்டத்தின் முன் வரிசையில் ஒரு முந்நூறு பேர் ரோஜா மாலைகளும் கைகளுமாக நிற்கிறார்கள். ஒரு மொத்தமான மனிதரின் கழுத்தில் மாலையைப் போட்டு கும்பிடுகிறார்கள். பின்னே போகிறார்கள். மாலைகளுக்குள் உடல் மறைந்தது, முகம் மறைந்தது, சுமை தாங்காமல் போனதும், மொத்தமான மனிதர் மாலைகளை ஒவ்வொன்றாக கழற்றுகிறார். பக்கத்திலிருப்பவர்களிடம் பார்க்காமலேயே கொடுக்கிறார். பக்கத்திலிருப்பவர் இன்னொருவர். மாலைகளை மூன்று அல்லது நான்காகச் சேர்த்துக் கழற்றிக் கழற்றி உதவுகிறார். இன்னொரு குழு முன்னால் வருகிறது. மாலைகளைப் போடுகிறது. மீண்டும் மாலைகளுக்குள் உடல் மறைகிறது. தோள் தாங்க முடியவில்லை. மொத்தமான மனிதர் தானாகவும், பக்கத்திலிருப்பவர்கள் உதவியுடனும் மாலைகளை எடுத்து கொடுக்கிறார். அவர் முகத்தில் மாறாத புன்னகை, கை குலுக்கல், கும்பிடுகள். சிலர் குழந்தைகளிடம் மாலையைக் கொடுத்து, குழந்தைகளையே உயரத் தூக்கி மாலைகளை அணி விக்கச் செய்கிறார்கள். போலீஸ்காரர்கள் தடியும் கையுமாகக் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறார்கள். எம்பிஎம்பியும் குதித்துக் குதித்தும் கூட்டத்தின் நடுவில் உள்ளவர்கள் மொத்தமான மனிதரைப் பார்க்க முயலுகிறார்கள். 

மாலைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. போட்ட வண்ணமும் கழன்ற வண்ணமும் இத்தனை மாலைகளையும் போட இன்னும் இரண்டு மணி நேரமாவது ஆகுமே என்று கணக்குப் போடுகிறார் வெள்ளைக்காரர். அரைமணி ஆகிவிட்டது. அவர் கைக் கடிகாரத்தைப் பார்க்கிறார். படபட வென்றும் சடசட வென்றும் விறுவிறு வென்றும் கூட்டம் நகர்ந்து நகர்ந்து வேகமாக, விரைவாக, நொடிக்கொன்றாக மாலைகளைப் போட்டுவிட்டது.

'உலகம் காணும் உத்தமனே சென்று வா. '

'திருமகனே வெற்றி கொண்டு திரும்பி வா '

'அயல் நாடு காணும் ஆண்டகையே
புயல் பிரயாணம் கண்டு வா '

நாடு போற்றும் நாயகா
நீடு புகழ் பரப்பி வா. '

இப்படி நூற்றுக் கணக்கான வெவ்வேறு வகை கோஷங்கள் விமான நிலைய வெளியை நிரப்ப, போலீஸ்காரர்கள் பாதை விலக்க மக்கள் கூட்டம் முண்டி முண்டிப் பின் தொடர, மொத்தமான மனிதர், காக்கி உடை பாதுகாப்பாளர் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிவிடும் பரிசோதனையினின்றும் விலக்குப் பெற்று விமானத்தை நோக்கி நடந்தார். அவர் பின்னால் போக ஐந்தாறு பேர்தான் அனுமதிக்கப்பட்டார்கள்.

வெள்ளைக்காரரும் மற்றவர்களும் உடலைத் தடவும் பாதுகாப்பாளரிடம் உடலைக் காட்டி அனுமதி பெற்று விமானத்திற்குத் திரும்பினார்கள். அதே கோஷங்கள் விமானம் வரையில் வானைப் பிளந்தன. மொத்தமான மனிதர் உடல் முழுதும் ரோஜா இதழ்கள். கோட்டு கால் சட்டை தலை--முகம்--காது மேல் இமை தோள்--எங்கும் ரோஜா இதழ்கள். இரண்டு மாலைகளை மட்டும் கழற்ற விடாமல் அணிந்து கொண்டே இருக்குமாறு கூட்டம் வற்புறுத்திற்று.

'யார் இந்த ஜென்டில்மேன் ? ' என்று பக்கத்தில் நடந்து வருபவரிடம் கேட்டார் வெள்ளைக்காரர்.

'தெரியவில்லை யாராவது மந்திரியாக இருக்கலாம். '

'என்ன தெரியவில்லை ? இவர் ரொம்ப பெரிய வி.ஐ.பி. போலிருக்கிறதே ? ' என்று கேட்டார் வெள்ளையர்.

'அதான் சொன்னேனே. மந்திரியாக இருக்கலாம் ' என்று.

'மந்திரி என்றால் நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டுமே '

'இந்த நாட்டில் பல ராஜ்யங்கள் உள்ளன. சில ராஜ்யங்களில் முப்பது நாற்பது மந்திரிகள் உண்டு. மொத்தம் கணக்குப் பார்த்தால் ஐந்நூறு மந்திரிகளுக்கு மேல் இருக்கலாம். நான் எண்ணியதில்லை. அந்தக் காலத்தில் படிப்பு முடிந்ததும் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சைகள் எழுதுவதற்காக காபினெட் மந்திரிகள், ராஜ்ய மந்திரிகள், உதவி மந்திரிகள், ஏழு உலக அதிசயங்கள் ---என்றெல்லாம் பெயர்களை மனப்பாடம் பண்ணியதுண்டு. இப்போது யார் எதற்கு மந்திரி என்றெல்லாம் தெரிந்து கொள்ள நேரம் இல்லை. '

'வாஸ்தவம், இந்தியா மிகப் பெரிய நாடுதான். '

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஐயாயிரம் ஜனங்கள் போலீஸ் பந்தோ பஸ்துகளை மீறி உள்ளே திமுதிமுவென்று ஓடி வந்தார்கள்.

'செல்வமே சென்று வா '

'பாரதத்தின் திருமணீ '
வான் ரதம் ஏறிவா '

என்றெல்லாம் கூட்டம் மீண்டும் கோஷங்கள் எழுப்பிற்று. இளைஞர்கள் குரல் கம்ம, கழுத்து புடைக்க உரக்க உரக்க கோஷமிட்டனர். சில இளைஞர்கள் பூமியிலிருந்து எம்பி எம்பிக் குதித்து கோஷம் எழுப்பினார்கள்.

வெள்ளையர் படிக்கட்டில் ஏறி தன் இருக்கையில் அமர்ந்தார். ஜன்னல் வழியாகப் பார்த்தார். விமான நிலைய அதிகாரிகள் கூட்டத்துக்கு நல்ல வார்த்தை சொல்லி விமானம் புறப்பட வசதி செய்து கொடுக்குமாறு வேண்டிக் கொள்வதைப் பார்த்தார். கடைசியில் ஒருவழியாக மொத்தமான மனிதர் மூன்று மாலைக் கழுத்தும் மேனிமுழுதும் பூவிதழ்களுமாக உள்ளே வந்தார். விமான அழகி, வழிகாட்டி இடம் காட்ட இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.
வெள்ளையருக்கு ஆச்சரியமாகி விட்டது. அவருக்குப் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து கொண்டார் மொத்தமான பிரமுகர்.

விமானம் புறப்பட்டது. தரையை விட்டு எழும்பிற்று.

'ரொம்ப அழகான மணமான ரோஜாக்கள் ' என்று பூமணத்தை முகர்ந்து பாராட்டினார் வெள்ளையர். இந்தியப் பிரமுகர் சிரித்தார். தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.

'நான் பசுபதிநாத். பாலிடிக்ஸில் பதிமூன்று வருஷமாக இருக்கிறேன். தேசிய உளுந்து வாரியத்தின் தலைவனாக சென்ற வாரம் நியமித்தார்கள் என்னை '

'உளுந்து ? '

'உளுந்து என்பது ஒருவகைப் பருப்பு, கறுப்பு நிறம் ' என்று ப்ரீஃப்கேஸைத் திறந்து ஏழெட்டு பொட்டலங்களைக் காண்பித்தார் பசுபதிநாத். ஒரு பொட்டலத்தை கிழித்து ஒரு தேக்கரண்டியளவு உளுந்தை வெள்ளையர் கையில் போட்டு வாயில் போட்டு மெல்லச் சொன்னார். வெள்ளையர் மென்றார்.

'மொட்டுக் மொட்டுக்.... ப்சப் சப்சப்சப் ' என்று ருசி பார்த்தார். 'ம்...குட் ' என்றார்.

'இது அப்படியே ப்ரோட்டீன்  கோழி, முட்டை, மாமிசத்தில் உள்ள புரதம் எல்லாம் இதில் உண்டு. தோசை, இட்லி, வடை, அடை, கொழுக்கட்டை என்ற பெயர்களைக் கேட்டிருக்கிறீர்களா ? '

'அப்படி என்றால் ? '

'பரவாயில்லை ' என்று உளுந்து தேன் குழல் ஒன்றை ஒரு பையை கிழித்து எடுத்துக் கொடுத்து சாப்பிடச் சொன்னார் பத்ரிநாத்.

'கரக், கரக் கரக் கரக் ப்சப் சப்சப் ? ' என்று வெள்ளையர் ருசி பார்த்தார். 'நைஸ், தாங்க்யூ ' என்றார்.

'எங்கள் ஊரில் தென்னாட்டு சைவர்கள் வட நாட்டு வைஷ்ணவர்கள் என்ற சாகபட்சிணிகள் இதைத் தான் புரதத்துக்காக உண்பார்கள். இந்த உளுந்தை எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று பார்க்கத்தான் நான் இப்போது பல மேல் நாடுகளுக்குப் பயணம் தொடங்கியிருக்கிறேன். '

'நல்லது. அதிருக்கட்டும், நீங்கள் மிகமிகப் பெரிய பிரமுகர் என்பதை அறிந்து கொண்டேன் பல்லாயிரக்கணக்கில் வந்து மக்கள் வழி அனுப்புகிறார்களே ' என்ன கூட்டம் என்ன கூட்டம் ' எத்தனை நூறு மாலைகள். '

'ஹி ஹி ஹி. என்ன பிரயோசனம் ? பதிமூன்று வருஷம் ஆச்சு, அரசாங்கம் இதைப் புரிந்து கொள்ள. பத்து லட்சம் தேர்தலுக்கு கொடுத்தேன். ஒன் மிலியன் டாலர். இல்லாவிட்டால் இந்த உளுந்து போர்டு தலைமை கூடக் கிடைத்திராது. '
'ஓ....வாட் எ பிட்டி ' '

எட்டு மணி நேரம் இறங்காமல் பறந்தது விமானம். பிறகு இறங்கிற்று. 

இறங்குகிற வரையில் ஷாம்ப்பேன் விஸ்கி பீர் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டார் பசுபதிநாத். வெள்ளையருக்கும் உபசாரம் செய்தார். ஒரு பெக் விஸ்கி சாப்பிட்டு நன்றி கூறி விட்டுத் தூங்கினார்.

பசுபதிநாத் இன்னும் தொடர்ந்து பறக்க வேண்டும். வெள்ளைக்காரர் 'நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. ' என்று விடை பெற்றுக் கொண்டார்.
பசுபதிநாத் 'நானும் ட்ரான்ஸிட் லெளஞ்சிலிருந்தே உங்கள் நாட்டை பார்க்கிறேன் ' என்று இறங்கி கூடவே வந்தார். 

திடீரென்று 'நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? பிஸினஸா. சர்க்கார் வேலையா ஒன்றும் கேட்கவில்லை. கேட்கலாம் என்றிருந்தேன். தூங்கிவிட்டீர்கள் ஸாரி. நீங்கள்.... ? '

'நான் இந்நாட்டின் உதவிப் பிரதம மந்திரி '

'ஆ ' இந்த நாட்டுக்கு உதவிப் பிரதம மந்திரியா ? '

'ரொம்ப ஆச்சரியப் படாதீர்கள். உங்கள் இந்தியாவில் எட்டில் ஒரு பங்குதான் எங்கள் நாடு. ஜனங்கள் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இராது. '

'அது சரி. நீங்கள் உதவி பிரதமர் என்கிறீர்கள்: உங்களை யாரும் வரவேற்க வரவில்லையா ? '

'அதோ என் மனைவி -- அதோ பாருங்கள் --- அப்புறம் என் செக்ரட்டரி. பக்கத்தில் நிற்கிறார் பாருங்கள் '

'போலீஸ் கீலீஸ் ஒன்றும் வர வில்லையா ? '

'போலீஸ் எதற்கு ? -- வரவேற்கவா ? '

'உங்கள் நாடு ஜனநாயகம் இல்லையா ? '

'ஜனநாயகம் தான் '

'பின்னே மக்கள் யாரும் வரவேற்க வரவில்லையா ? '

'ஜனநாயக நாடல்லவா ? அதனால்தான் யாரும் வரவேற்க வரமாட்டார்கள்.... நான் வருகிறேன். ஹாப்பி லாண்டிங்க்ஸ்... அப்புறம் மறுமடியும் ஒரு தாங்க்ஸ். உங்களோடு டிரிங்ஸ் சாப்பிடும் வாய்ப்பை அளித்ததற்கு. ஓ ' இவர் என்னுடைய பர்சனல் அஸிஸ்டண்ட் -- இவர் மிஸ்டர் பசு..... ' என்று விமானத்தின் பின்பக்கத்திலிருந்து இறங்கி பின்னால் வந்த ஒரு இளைஞனை அறிமுகப் படுத்தி விட்டு மறுபடியும் 'ஹாப்பி ' லாண்டிங்ஸ் மிஸ்டர் பசு ' சொல்லி விட்டு நடந்தார் வெள்ளையர் '

'ஜனநாயகமா.... பூ ' என்று மனதுள் சிரித்துக் கொண்டு ட்ரான்ஸிட் கூடத்துக்குள் நுழைந்தார் ' தேசீய உளுந்து வாரியத்தலைவர். 

...................................

ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்  மே மே என்று கனைத்துக் கொண்டு, ஜனங்களை இலவசங்களுக்குக் கையேந்துகிற வெறும் மந்தைகளாக ஆக்கும் சடங்குக்கான ஆயத்தம், அறிவிப்பு எல்லாம் வரும் நேரம். மக்களை ஈர்த்த மகராசர்கள் எப்படி இருந்தார்கள், என்ன செய்தார்கள் என்பதைக் கொஞ்சம் "பின்னோக்கிப் பார்க்க" வைத்த கதை இது.

தி.ஜாவுடைய கைவண்ணத்தில்......! 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)