Monday, September 13, 2010

மீண்டும் எண்டமூரி வீரேந்திரநாத்..!


எண்டமூரி வீரேந்திரநாத் எழுத்தைப் பற்றிப் புதிதாக நான் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை! ஏற்கெனெவே, சிலபதிவுகளில் எழுத்து என்ற தூரிகை கொண்டு வர்ண ஜாலம் செய்யும் இந்த எழுத்தாளர்  என்னை அந்த அளவுக்கு மயக்கி இருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் ஒரு வித்தியாசமான பார்வை, மனித மனங்களில் வெளிப்படும் உணர்வுகளைக் கூர்ந்து கவனித்துத் தன்னுடைய பாத்திரங்களைப் படைக்கும் எண்டமூரியின் கதை சொல்லும் திறமையை நான் ஒரு இருபது  வருடங்களுக்கு முன்னால் ரசித்த மாதிரியே, இன்றைக்கு மறுவாசிப்பு செய்கிற இந்தத் தருணத்திலும் கூட ரசிக்க முடிகிறது, தொய்வில்லாமல் கதையை நகர்த்திக் கொண்டுபோகிற அவருடைய வேகத்தையும், சம்பவங்களைப் பின்னும் லாவகத்தையும்  இப்போது கூட வியப்புடன் தான் பார்க்கிறேன்.

துளசிதளம், மீண்டும் துளசி இரண்டு கதைகள் தான் வார இதழில்  தொடராக வந்தபோது படித்தது. மற்ற எல்லா நாவல்களையும், புத்தக வடிவில் தான் சேகரம் செய்ய ஆரம்பித்தேன். பெரும்பாலானவை  சுசீலா கனகதுர்கா மொழிபெயர்ப்பில் வெளி வந்தவைதான். எண்டமூரியின் சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு, திருமதி கெளரி கிருபானந்தன் எண்டமூரியின் கதைகளை மொழிபெயர்க்க ஆரம்பித்த பிறகு, அதுவும் பெரும்பாலும் திண்ணை இணைய இதழில் வெளிவந்தவைதான், கிடைத்தது.

உடுமலைடாட்காமில் கௌரி கிருபானந்தன் மொழிபெயர்ப்பில் அல்லயன்ஸ் வெளியீடாக பர்ணசாலை,  த்ரில்லர்  என்ற இரண்டு நாவல்களை வாங்கிய பிறகு, நண்பர் ஒருவர் தி பெஸ்ட் ஆப் எண்டமூரி வீரேந்திரநாத் என்ற சிறுகதைத் தொகுதி ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். இதைக் கொண்டு வந்து கொடுக்கும்போதே, அவனவன் போர்ஹே, செகாவ், என்று உலக இலக்கியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறான்! நீ என்னடாவென்றால், லோகல் ஆசாமிகள், மிகச் சாதாரணமான கதைகள், மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாலு ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறாயே என்று கொஞ்சம் அதிருப்தியுடனேயே  ஒரு கேள்வியைக் கேட்டு விட்டுப் போய்விட்டார்.

ஒரு கதை என்பது, அதை வாசிப்பவன் மனதில் என்னென்ன தாக்கத்தை, சிந்தனையைத் தோற்றுவிக்கிறது என்பதை வைத்து மட்டுமே அதன் தரத்தை எடைபோட்டுப் பழகியவன் என்பதால்,நண்பருடைய கேள்விக்கு நேரடியான பதிலைச்  சொல்லவில்லை.சொல்லித் தானாக வேண்டும் என்ற நிர்பந்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை.

இங்கே தமிழ் வலைப்பதிவுகளில், ஆணாதிக்க வக்கிரம், பெண் ஈயம், அப்புறம் சுதந்திரமான அடிமைகள் என்று ஜெயகாந்தன் சொன்னாரா, பதிவுகளில் போட்டுத் தாக்கு என்ற மாதிரியான கலாசாரம் மெல்ல மெல்லப் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஆணோ, பெண்ணோ,எந்த ,ஒரு விஷயத்தையும்  எந்தக் கோணத்தில் இருந்து பார்க்கிறோம் என்பது தான் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பதை மூன்றே  கதாபாத்திரங்களை வைத்து எண்டமூரி வீரேந்திரநாத் படைத்திருக்கும் இந்தச் சிறுகதை எவ்வளவு அழகாக, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது என்பதை நினைத்துப் பார்த்தேன்! 

இந்தக் கதையில் வரும் விசுவநாதன் பாத்திரம், சொல்வதாக வரும் ஒரே ஒரு பாரா, மனித மனங்களில் தோன்றும் விகாரத்தை, அதை மாற்றிக் கொள்ள ஒரு சின்ன முயற்சியாவது செய்ய வேண்டாமா என்ற கேள்வியை முன்வைக்கிறது பாருங்கள்! அங்கே தான் இருக்கிறது, பிரச்சினையும், அதற்கான  தீர்வும்! பெரும்பாலான தருணங்களில் தீர்வு நம் கண் முன்னால் இருப்பதைப் பார்க்கத் தவறுகிறோம் என்பதை அழகாகச் சொல்லும் சிறுகதை இது.

அதை உங்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா....!வராண்டா பையன்

ராதா ஒல்லியாக, உயரமாய் இருப்பாள். மெல்லிய இடை, ஆரோக்கியத்தை  எடுத்துக் காட்டும் கன்னங்கள். அந்தப் பெண்ணின் அழகு முழுவதும் அவளுடைய சுறுசுறுப்பில் இருந்தது. திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் அந்த உற்சாக குறையவில்லை. மேலும் கூடியது, உடனே குழந்தைகள் வேண்டாமென்று செய்த முடிவினால். கணவன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்துவந்தான். ஏற்கனவே லோன் வாங்கி வீட்டையும் கட்டி முடித்து விட்டார்கள். அழகான வீடு. முன்னால் சின்ன ரோஜா தோட்டம். வராண்டாவுக்கு வலதுபுறம் தனியாக ஒரு அறை.

வீட்டை அழகாக, நேர்த்தியாக வைத்துக்கொள்வது ராதாவின் தனித்தன்மை. கணவன் அலுவலகம் சென்ற பிறகு வீட்டை ஒழுங்குபடுத்தி விட்டு ஏதாவது பத்திரிகையை படித்துக்கொண்டு கட்டிலில் படுத்திருப்பாள். கொஞ்ச நேரம் ரேடியோ கேட்பதும் அவளுடைய பொழுதுபோக்கு. அவளுடைய கணவனுக்கு எந்தவிதமான பொழுதுபோக்கும் கிடையாது. மாலை ஐந்தரை மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவான். பிறகு இருவருமாக சேர்ந்து சினிமா, டிராமா, பீச் என்று கிளம்புவார்கள். பெரும்பாலான இளம் பெண்கள் தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவார்களோ ராதாவின் தற்போதைய வாழ்க்கை அப்படித்தான் இருந்தது.

அன்றும் கணவன் வங்கிக்கு சென்றபிறகு ராதா பத்திரிகையை படித்தபடி கட்டிலில் சாய்ந்திருந்தபோது வாசற்கதவை யாரோ தட்டிய சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள் என்று வியப்படைந்துகொண்டே எழுந்து போய் கதவைத் திறந்தாள்.

வராண்டாவில் இளைஞன் ஒருவன் நின்றிருந்தான். கல்லூரி மாணவன் போல் தென்பட்டான்.

"என்ன வேண்டும்?" ராதா சற்று பயந்துகொண்டே கேட்டாள். அந்த ஏரியாவில் வீடுகள் தள்ளித் தள்ளி இருந்தன. எதிரே நின்றிருந்த இளைஞன் பார்ப்பதற்கு ரவுடியை போல் முரட்டுத்தனமாக இருந்தால். கையில் சிகரெட் இருந்தது.
"உங்கள் வீட்டில் அறை காலியாக இருக்கிறதென்று முரளி சொன்னார்."

முரளி கணவனின் அலுவலகத்தில் வேலை பார்க்கிறவர். முன் அறையை, அதற்கு அடுத்து இருந்த அறையை யாராவது புது தம்பதிகளுக்கு வாடகைக்கு விட்டால் நல்ல பொழுதாக போகும் என்று நினைத்து ராதா கணவனிடம் சொல்லியிருந்தாள். முரளி இப்படி சின்னப் பையனை அனுப்புவார் என்று எதிர்பார்க்கவில்லை.

"அறை எதுவும் காலியாக இல்லை." ராதா கடினமான குரலில் சொன்னாள்.

அவன் நகரவில்லை. "அப்படி என்றால் முரளி சார் பொய் சொல்லி இருக்கிறாரா?" என்றான்.

அவன் தன்னை எதிர்க் கேள்வி கேட்டதும் ராதாவுக்குக் கோபம் வந்தது.

"அறைகள் இல்லை, போர்ஷன் இருக்கு" என்றாள்.

"பரவாயில்லை. போர்ஷன் முழுவதையும் நானே எடுத்துக்கொள்கிறேன்" என்றான்.

"தனியாக இருப்பவர்களுக்கு தரமாட்டோம்."

"நான் தனியாக இருக்கிறேன் என்று யார் சொன்னார்கள்?"

"அப்போ .... உங்களுக்கு திருமணமாகிவிட்டதா?"

"திருமணம் ஆகாதவர்கள் எல்லாம் இந்த உலகில் தனியாட்கள்தானா?" என்று சொன்னவன் கடைசியாக சிரிப்பை சேர்த்தான். அந்தச் சிரிப்பு 'நீ சொன்னதற்கு பதிலடி கொடுத்து விட்டேன் பார்த்தாயா' என்பது போல் இருந்தது.

"சாரி" என்று சொல்லிவிட்டு ராதா கதவைச் சாத்திக்கொண்டாள். அன்று மாலை கணவன் வந்தபிறகு விஷயத்தைச் சொல்லி முரளிக்கு நன்றாக டோஸ் கொடுக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் கணவன் வரும் போதே அந்த இளைஞனை உடன் அழைத்து வந்ததை பார்த்து வாயடைத்துப் போய் நின்றுவிட்டாள். கணவனை தனியாக உள்ளே அழைத்து ஏதோ சொல்ல நினைக்கும் முன்பே அந்த இளைஞனுக்கு அந்த இரண்டு அறைகளைக்  காண்பித்தது, அவன் தலையை அசைத்துவிட்டு அட்வான்ஸ் கொடுத்தது ... எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.

மறுநாள் சாமான்களை எடுத்து வருவதாகச் சொல்லிவிட்டு அந்த இளைஞன் கிளம்பிப்போன பிறகு கணவனுடன் சண்டை போட்டாள். "இதுபோன்ற கல்லூரி இளைஞர்களுக்கு கொடுப்பதற்கு இது என்ன லாட்ஜிங் ஹவுஸ் என்று நினைத்து விட்டீர்களா?"

விஸ்வநாதன் திகைத்து விட்டான். " என்ன ராதா? இத்தனை பெரிய வீட்டில் பொழுதே போகவில்லை என்று சொன்னது நீதானோ?"

"அதற்காக கல்லூரி இளைஞனை கொண்டு வந்து குடிவைப்பார்களா? யாராவது பெண்கள் இருந்தால் நீங்க அலுவலகம் சென்ற பிறகு பேசிக் கொண்டு இருக்கலாமே என்று நினைத்தேன்" என்றாள்.

அவளைச் சமாதானப்படுத்துவதற்கு அவன் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருந்தது. அரைமனதுடன் அவள் ஒப்புக்கொள்ளும்போது இரவு பதினோரு மணியாகிவிட்டது. சாதாரணமாக எந்த விவகாரமாக இருந்தாலும் ராதாவின் பிடிவாதம்தான் ஜெயிக்கும். அதற்காக மூர்க்கமாக பிடிவாதம் பிடிக்கும் பெண் இல்லை அவள். ரொம்ப உற்சாகமாக இருப்பாள். அதிலும் இரவு வேளைகளில் ரொம்பத்தான். சிலசமயம் அவள் வேகத்திற்கு அவனால் ஈடு கொடுக்க முடியாது. கணவனை திருப்திப்படுத்துவதன் மூலமாக டாமினேட் செய்யும் மனைவி மற்ற எல்லா விஷயங்களிலிலும் அவனைவிட ஒரு படி உயரத்தில் இருக்க முடியும். பெண் ·ப்ரிஜிட் ஆக இருக்க இருக்க கணவன் சுயநலம் பிடித்தவனாக, தான் சொன்னதுதான் நடந்தாக வேண்டும் என்று வீம்பு கொண்டவனாக மாறுவான். ஒரு தடவை இல்லற வாழ்க்கையில் அவனுக்கு திருப்தி கிடைக்க ஆரம்பித்தபிறகு தனக்குத்தானே அதிகாரத்தை மனைவியிடம் ஒப்படைத்து விடுவான். இந்த சின்ன சைகலாஜிகல் பாயிண்ட் அந்தக் கணவன் மனைவிக்கு தெரியாவிட்டாலும் அதுதான் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதனால் கஷ்டம் எதுவும் இல்லை என்பதோடு அந்த தம்பதிகள் மேலும் சந்தோஷமாக இருந்தார்கள். தனிமையில் இருக்கும்போது அவள் கணவனை "என்னடா!" என்று அழைப்பாள். சந்தோஷம் அதிகமாகி விட்டால் சில விஷயங்களில் அவளே உரிமை எடுத்துக் கொள்வாள். அந்த விவரங்கள் எல்லாம் இங்கே தேவையில்லை என்பதால் விட்டு விடுவோம்."நீங்க எவ்வளவு வேண்மானாலும் சொல்லுங்கள். எனக்கு அந்த ஹிப்பி பையனை கொஞ்சம்கூட பிடிக்கவில்லை" என்றாள். அவள் வார்த்தைகளில் முன்பு இருந்த கடினம் இல்லாதது கண்டு விஸ்வநாதன் மகிழ்ச்சி அடைந்தான் அவன் முரளிக்கு முதல் நாளே ரொம்ப பெருந்தன்மையோடு வாக்குக் கொடுத்து விட்டிருந்தான்.

மறுநாள் சரியாக பதினோரு மணிக்கு அந்த இளைஞன் வந்துவிட்டான். வாசலில் நாய் ஒன்று வள் வள் என்று குலைத்த சத்தம் கேட்டது. காம்பவுன்ட் சுவரைத் தாண்டி நாய் எப்படி உள்ளே வந்திருக்குமுடியும் என்று வியப்பு அடைந்தவளாய், படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை பக்கத்தில் வைத்தவிட்டு கதவைத் திறந்து பார்த்தாள்.

அவனை வராண்டாவில் பார்த்ததும் தன்னையும் அறியாமல் ஓரடி பின்னால் வைத்தாள்.

"ஹலோ!" என்றான் அவன். அவள் அவனைப் பார்க்கவில்லை. கையில் பிடித்திருந்த சங்கிலியை அறுத்துக் கொள்ளும் அளவுக்கு முன்னங் கால்களில் குதித்துக் கொண்டிருந்த சடைநாய் குட்டியை, மற்றும் அவன் பின்னாடி இருந்த சாமான்களை பார்த்துக்கொண்டிருந்தாள். அத்தனை சாமான்களுடன் நான்கு குடும்பங்கள் தாராளமாய் குடும்பம் நடத்தலாம். ஆனால் அந்த சாமானில் எதுவும் குடித்தனம் நடத்த பயன் படும் பொருட்கள் இருக்கவில்லை. அவன் இடுப்பு உயரத்திற்கு வரும் அளவுக் பெரிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருந்தன. கிடார் உருவத்தில் பெரிய பெட்டி ஒன்று இருந்தது. நான்கைந்து பெரிய பெரிய ·போட்டோக்கள் இருந்தன. பெரிய மரப் பெட்டி. துணிமூட்டையிலிருந்து இரண்டு மூன்று ஜீன்ஸ் உடைகள் வெளியே தொங்கிக் கொண்டிருந்தன.
திறந்த வாயை மூடாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் குரலைக் கேட்டு திடுக்கிட்டு இந்த உலகத்திற்கு வந்தாள்.

"கொஞ்சம் என்னுடைய அறையின் கதவை உள் பக்கத்திலிருந்து திறக்கறீங்களா?" என்று கேட்டான்.

"ப்ளீஸ் கோ! வி ஆர் நாட் இன்டரெஸ்டெட் இன் லெட்டிங்" என்று கத்த நினைத்தவள் வலுக்கட்டாயமாக அடக்கிக்கொண்டு உள்ளே போனாள்.

படுக்கை அறைக்குள் சென்று அதற்கு அடுத்த அறையின் வழியாக போய்க் கதவைத் திறந்தாள். அவன் உள்ளே வந்தான். அந்த அறையிலிருந்து அவன் தங்களுடைய படுக்கை அறையை பார்த்துவிடக் கூடாது என்று நினைத்தவளாய் வேகமாக சென்று கதவுகளை படாரென்று சாத்தினாள். ரோஷமும், யார் மீது  என்று தெரியாத கோபமும் ஒன்று சேர அவள் விழிகளில் கிர்ரென்று நீர் சுழன்றது. தன்னுடைய சுதந்திரத்தை யாரோ பறித்துக் கொண்டு விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

பக்கத்து அறையில் அவன் சாமான்களை எடுத்து வைக்கும் சத்தம்கேட்டது. தெளிவாக ... ஒவ்வொன்றும். அப்படி என்றால் தங்களுடைய அறையில் ஏற்படும் சத்தமும் அந்த அறையில் இருப்பவர்களுக்கு ஸ்பஷ்டமாக கேட்கும். அப்படித்தானே.

டேபிள் லேம்பை வீசியெறிய வேண்டும் என்ற அளவுக்குக் கோபம் வந்து. அதற்குள் வெளியில் கதவைத் தட்டிய சத்தம் கேட்டது. அவள் படுக்கை அறையை விட்டு வெளியில் வந்தாள்.அந்த இளைஞன்தான்!

"எக்ஸ்க்யூஸ் மி. குடிக்க கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா?"

"முடியாது" என்று சொல்லிவிட்டு முகத்தின் மீதே கதவைச் சாத்த வேண்டும் என்ற விருப்பத்தை அடக்கக்கொண்டு உள்ளே போய் டம்ளரில் தண்ணீரை கொண்டு வந்தாள். அவன் கையை நீட்டுவதற்குள் டம்ளரை டீபாய் மீது வைத்தாள்.

அவன் தண்ணீரை குடித்துக் கொண்டே "என் பெயர் சங்கர், ரவிசங்கர்" என்றான். அவன் டம்ளரை திருப்பிக் கொடுக்கும் சாக்கில் மறுபடியும் கதவைத் தட்டும் வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று நினைத்துக் கையோடு டம்ளரை வாங்கிக் கொள்ளும் எண்ணத்துடன் நின்றிருந்தாள்.

"உங்கள் பெயர்?" என்று கேட்டான்.

"மிஸஸ் வி.விஸ்வநாதன்." கடினமான குரலில் சொன்னாள்.

தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தவன் புரையேறும் அளவுக்கு சிரித்தான்.

"கங்கிராட்சுலேஷன்ஸ் ·பர் யுவர் சென்ஸ் ஆ·ப் தி பார்ட் மிஸஸ் வி.வி.நாதன்."
பாராட்டுவது போல் சொல்லி விட்டு தன் அறைக்குச் சென்று ராதாவின் கண்களுக்கு முன்னாலேயே கதவைச் சாத்திக் கொண்டுவிட்டான்.

அதற்குப்பிறகு ஐந்து நிமிடங்கள்கூட ஆகவில்லை. அவன் அறையிலிருந்து ஸ்பீக்கர்ஸ் வழியாக கிடார் சத்தம் கேட்கத் தொடங்கியது. ரொம்ப நல்ல ட்யூன்.  அவள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் இளம் பெண்களை ஒரு ஆட்டம் ஆட்டிய பாட்டு அது. அந்த பாட்டை இந்த இளைஞன் இவ்வளவு இனிமையாக ...........

இந்த தொல்லையை தாங்க முடியாது.


கணவன் வந்ததும் சொல்லி வீட்டைக் காலிசெய்யச் சொல்லவேண்டும். இது வீடு என்று நினைத்தானா இல்லை நைட்கிளப் என்று நினைத்தானா?

டாமிட்!இந்த இக்கட்டிலிருந்து அவளைக் காப்பாற்றுவதுபோல் அவன் கதவை பூட்டிக் கொண்டு வெளியில் சென்றுவிட்டான். அவள் நிம்மதியாக மூச்சை விட்டுக் கொண்டாள்.அப்போது  கிளம்பிப் போனவன் மாலை ஐந்து மணி வரையிலும் வராமல் இருந்ததும் இனி அவனைப் பற்றி தற்காலிகமாக மறந்து விட்டாள். இதுபோன்ற இளைஞர்கள் இரவு பதினோரு மணிக்குக் குறைந்து வீடு திரும்புவார்களா என்ன?

ஐந்தரை மணிவரையிலும் கணவனுக்காக எதிர்பார்த்து, வாசற்கதவை வெறுமே சாத்திவிட்டு குளிக்கச் சென்றாள். இரண்டு நிமிடங்கள் கழித்து கணவன் வந்த அரவம் கேட்டது.


"இதோ வந்துவிட்டேன். நான் வந்து காபி கலந்து தருகிறேன். சமையல் அறைக்குப் போய் ரகளை எதுவும் செய்யாதீங்க" என்று குரல் கொடுத்தாள்.

விஸ்வநாதன் ரொம்ப நல்லவன். ரகளை எதுவும் செய்யமாட்டான். அவளுக்கு ஏனோ கணவனை கலாட்டா செய்யவேண்டும் என்று குறும்புத் தனமான எண்ணம் வந்தது. புடவை கொசுவங்களை சொருகிக் கொண்டே குளியலறை கதவைத் திறந்தாள்.

"நீங்க செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் என்னை செய்யச் சொல்லி பிடிவாதம் பிடித்தீங்களே. இப்போ பாருங்கள், உடம்பெல்லாம் ஒரே வலி" என்று சொல்லிக் கொண்டே வெளியில் வந்தாள். இப்படி கலாட்டா செய்வது அவளுக்கு பழக்கம்தான். விஸ்வநாதனுக்கும் பிடிக்கும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாய் முன் அறையில் இருந்தது அவளுடைய கணவன் இல்லை. சற்றுமுன் அவள் கேட்ட அரவம் சங்கருடையது. அவன் கையில் கூஜா இருந்தது.

நிலம் இரண்டாகப் பிளந்து, தான் அதில் புதைந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு. முன்பின் கவனிக்காமல் தான் அப்படி பேசி விட்டதற்கு தன்மீதே தனக்குக் கோபம் வந்தது. அவன் முகத்தில் மறை முகமாய் தெரிந்த அந்தச் சிரிப்பு அவளுடைய கோபத்தை, ரோஷத்தை மேலும் தூண்டி விட்டது. ஏதோ தன்னுடைய சொந்த வீடு என்பதுபோல் நேராக உள்ளே வந்து உட்கார்ந்துகொள்வதாவது? மேலும் தன்னுடைய ரகசியத்தைக்  கண்டு பிடித்து விட்டது போல் அந்தச் சிரிப்பு வேறு! இடியட்!

அன்று முழுவதும் அவளுக்கு வேலை எதுவும் ஓடவில்லை. யார்மீது என்று தெரியாமல் கோபம் கோபமாய் வந்தது. எப்படியாவது அந்த இளைஞனை அறையை காலி செய்ய வைக்க வேண்டுமென்ற விருப்பம் நிமிடத்திற்கு நிமிடம் பலமாக வளர்ந்த கொண்டிருந்தது. முடிந்தால் இன்று உண்ணா விரதம் இருக்கப் போவதாக கணவனிடம் சொல்ல வேண்டும் என்றுகூட நினைத்தாள்.

அவளுடைய கோபத்தை மேலும் அதிகரிப்பது போல் ரவிசங்கர் அன்று அறையைவிட்டு வெளியில் போகவில்லை. அது போதாது என்பது போல் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தான். அந்த சத்தம் வீடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டு இருந்தது.

மாலை ஆறுமணி. கணவன் இன்னும் வரவில்லை. ராதாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஹாலில் குறுக்கே நடை பயின்றுக்கொண்டிருந்தாள்.
அறையில் அவன் வாசித்துக் கொண்டிருந்த ட்ரம் பீட்ஸ் அவளுக்கு தன் இதயத்தின்மீதே அடிப்பது போல் இருந்தது. சற்று நேரம் கழித்து இனி கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், தானே போய் அவனை நாலு வார்த்தை சூடாக கேட்டு விடலாம் என்ற எண்ணத்தில் அவனுடைய அறையை நோக்கிப் போனாள். சாத்தியிருந்த கதவைத் தட்ட நினைத்து எண்ணத்தை மாற்றிக்கொண்டு லேசாக திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்பக்கம் பார்த்தாள்.

அவ்வளவுதான்!

அவளுக்கு உடம்பு முழுவதும் திடீரென்று வியர்த்துக்கொட்டியது. கால்கள் நடுங்கத் தொடங்கின. கிடாருக்கு பக்கத்திலேயே கண்ணாடி டம்ளரில் மஞ்சள் நிறத்தில் திரவம் பளபளவென்று மின்னிக்கொண்டிருந்தது. ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டே நடு நடுவில் ஒரு மடக்கு குடித்துக்கொண்டு இருந்தான். இந்த உலகம் முழுவதும் தன்னுடையதுதான் என்பது போல் ராயஸமாக அந்த மாலைப்பொழுதை அனுபவித்துக்கொண்டு இருந்தான்.

காற்றைவிட வேகமாய் தன்னுடைய அறைக்கு திரும்பியவள் அப்படியே படுக்கையின் மீது சரிந்து விட்டாள். டிரிங்க்ஸ் விஷயம் அவளுக்கு புதிது இல்லை. வங்கியில் ஏதாவது பார்ட்டீ நடந்தால் கணவன் ஒன்றோ இரண்டோ பெக்குகளை குடித்துவிட்டு வருவது வழக்கம்தான். இருந்தாலும் ஏதாவது சொல்ல வேண்டுமே என்று பொய்யாக கோபித்துக்கொள்வாள். ஆனால் உள்ளூர அவன் எப்போதாவது அதுபோல் குடித்துவிட்டு வருவது அவளுக்கு பிடித்துத்தான் இருந்தது. அப்படி வந்த நேரங்களில் அவன் வழக்கத்திற்கும் அதிகமான வேகத்தோடு செயல்படுவான். உண்மையைச் சொல்லப் போனால் அப்பொழுதுதான் அவளுக்கு சமமான நிலையில் இருப்பான்.
ஆனால் இதென்ன? வீடா இல்லை சத்திரமா? வீட்டிலேயே இந்த இளைஞன் மதுபானக்கடையை திறந்து விட்டான். நல்லவேளை இந்த விஷயம் முதல் முதலில் தன்னுடைய கண்ணில் பட்டுவிட்டது. வேறு யாராவது உறவினர்கள் வந்தபோது இந்த விஷயம் வெளிப்பட்டு இருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்?"

திடீரென்று அவளுக்கு வேறு ஒரு விஷயம் நினைவுக்கு வந்து உடம்பு சிலிர்த்து விட்டது.


வீட்டில் தாமிருவர் மட்டும்தான். அவனோ குடித்திருக்கிறான். வெளியில் இருட்டு. மணி ஏழடிக்கப் போகிறது.

அங்கங்கே  வீடுகள் அமைந்த அந்தக் காலனியில் ஒரு வீட்டில் என்ன நடந்தாலும் அடுத்த வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியப் போவதில்லை. அவள் ஜன்னல் கர்ட்டனை  விலக்கிவிட்டு எதிர் வீட்டுப் பக்கம் பார்த்தாள். எதிர்வீட்டு சுவாமிநாதன் இந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்று ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். ராதா எப்போ வெளியில் வருவாள் என்று பார்த்துக் கொண்டிருப்பது தான் தற்போது அவருடைய பொழுதுபோக்கு. அவள் எரிச்சலுடன் ஜன்னல் கதவைச் சாத்தினாள். கணவன் மீது கோபம் கோபமாய் வந்தது. நேரத்தோடு வீட்டுக்கு வராமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

கைக்கு அகப்பட்ட புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள். கணவன் சீக்கிரமாக வந்தால் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போகலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் கணவன் வரும் ஜாடையே தெரியவில்லை.அவள் படித்துக் கொண்டிருந்த நாவலில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. ஹீரோ அடிக்கடி ஹீரோயினை தோளைப் பற்றி அருகில் இழுத்துக் கொள்கிறானே தவிர ஒன்றுமே செய்யவில்லை. ஹீரோயினும் ரோஷத்துடன் ஹீரோவை பார்க்கிறாளே தவிர தன் மனதில் இருப்பதை வெளிப் படுத்தமாட்டேன் என்கிறாள். இருவரில் யாராவது அடுத்த கட்டத்திற்கு போயிருந்தால் இந்நேரத்திற்கு கதை முடிந்திருக்கும். போகாததால் முன்னூறு பக்கங்களுக்கு நாவல் ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு போகிறது.

புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கும்போது குப்புறப் படுத்துக் கொண்டு மார்புக்குக் கீழே தலையணை அண்டை கொடுத்து கால்களை காற்றில் அசைத்துக் கொண்டே படிப்பது அவள் வழக்கம். இன்றும் அதே போல் படித்துக் கொண்டு யதேச்சையாக கதவு பக்கம் பார்த்தாள். தங்களுடைய அறைக்கும் அவனுடைய அறைக்கு நடுவில் இருந்த கதவு அது.

சட்டென்று ஏதோ சந்தேகம் வந்து கதவு அருகில் சென்றாள். கதவில் ஓட்டை ஏதாவது இருக்கிறதா என்று சோதித்தாள். அவள் இதயம் நின்று விடும் போல் இருந்தது. வலதுப்பக்கம் இரண்டு கதவுகளும் இணையும் இடத்தில் சிறிய ஓட்டை இருந்தது. இடுக்கு வழியாக அடுத்த அறைக்குள் பார்த்தவள் அதிர்ச்சி அடைந்தவள்போல் பின்னால் நகர்ந்தாள். அவள் முகம் சிவந்துவிட்டது.

விளக்கை அணைத்துவிட்டு முன் அறைக்கு வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். இதயம் வேகமாக துடிக்கும் சத்தம் அவளுக்கே கேட்டது. தன்னைத் தானே சமாளித்துக் கொள்வதற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப் பட்டது. நல்லவேளை! இந்த விஷயத்தை  முன்னாடியே கவனித்து விட்டாள். இல்லாவிட்டால் இரவு வேளையில் ரொம்ப நேரம் விளக்கு போட்டிருக்கும் தங்களுடைய பழக்கதினால் ...ச்சீ... ச்சீ. அதற்குமேல் அவளால் யோசிக்க முடியவில்லை.

மெழுகுவர்த்தியைக் கொண்டு வந்து அதன் மெழுகை எடுத்து அந்த ஓட்டையை அடைத்துக் கொண்டிருந்தபோது வாசற்கதவு தட்டிய சத்தம் கேட்டது. கணவன் தானோ என்று நினைத்து வேகவேகமாய் சென்று கதவைத் திறந்தாள். ஆனால் அவன்தான். அவள் சட்டென்று பின்னால் நகர்ந்து "என்ன வேண்டும்?" என்று கடினமாக கேட்டாள்.

"எனக்காக யாராவது வந்தால் அறையில் உட்காரச் சொல்லுங்கள். அரை மணியில் வந்து விடுகிறேன். பெயிண்டிங் ட்யூப்ஸ் தீர்ந்துவிட்டன. இதோ சாவி."

அவள் ஏதோ சொல்ல முற்படும் போதே அவள் கையில் சாவியை வைத்து விட்டு படிகளில் இறங்கி போய்விட்டான். இதெல்லாம் வெறும் நடிப்பு என்று அவளுக்குத் தெரியும். தான் ஒரு ஓவியன் என்று தெரியப்படுத்தும் முயற்சி. சாவியை கொடுக்கும் சாக்கில் தன்னை சந்திக்கும் திட்டம். எல்லாவற்றையும் விட முக்கியமாக சாவியைத் தரும்போது வேண்டுமென்றே கையைத் தொடுவது.

அவன்மீது அவளுக்கு துவேஷம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே போனது. அவன் வந்து இருபத்தி நான்கு மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் எத்தனையோ நிகழ்ச்சிகள். நடந்தவை எல்லாமே அவளை சங்கடத்தில் ஆழ்த்தியவைதான். யோசித்துக்கொண்டே உறங்கிவிட்டாள்.

இன்னும் ஒன்பது ஆகவில்லை. திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள். அவன் உள்ளே வந்துகொண்டே "சாவி" என்றான். அவள் எழுந்துகொள்ளப் போனாள்.

அவன் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவனுடைய எண்ணம் புரிந்தபோது அவள் பயந்துவிட்டாள். ஜன்னல் விளிம்பில் வைத்திருந்த சாவியை அவன் பார்த்தான். ஆனால் அந்தப் பக்கம் போகவில்லை. அவள் கத்த வேண்டும் என்று நினைத்தாள். பயத்தினால் வாயில் வார்த்தை வரவில்லை. அதற்குள் அவன் நெருங்கி வந்து இரண்டு கைகளாலேயும் அவளுடைய தோள்களை பற்றி அருகில் இழுத்துக் கொண்டான். அதில் பயமோ, தயக்கமோ இருக்கவில்லை. அவள் தனக்கு சொந்தம் என்பது போலவும், அவள் மீது தனக்கு எப்போதிலிருந்தோ அதிகாரம் இருப்பது போலவும் அவளை அணைத்துக் கொண்டான். உடலில் இருந்த சக்தியெல்லாம் திரட்டிக் கொண்டு அவள் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள். ஆனால் அதற்குள் அவன் இதழ்கள் அவள் இதழ்கள் மீது அழுத்தமாய் பதிந்தன. அவனுடைய வலிமை, ஆளுமையின் முன்னால் அவள் வெறும் பதுமையாகிவிட்டாள். அவளை அப்படியே அலாக்காக தூக்கிக்கொண்டு கட்டில்மீது படுக்கவைத்தான். அவள் சரேலென்று எழுந்துகொள்ளப் போனாள். அதை உணர்ந்துகொண்டவன்போல் கைகளால் பலமாக அழுத்தி அவளை எழமுடியாமல் செய்துவிட்டான்.

இயலாமை நிரம்பிய குரலில் அவள் "விடு, என்னை விட்டுவிடு" என்றாள். அவன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவன் கை அவள் இடுப்பில் பதிந்தது. அவள் கழுத்தில் புதைந்திருந்த அவன் முகம் மேலும் கீழே இறங்கியது. அந்தச் செயல் அவன் உடலில் மின் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியிலேயே வலது பக்கம் திரும்புவதற்கு முயற்சி செய்தாள். அந்த முயற்சியில் அவனுக்கு மேலும் நெருக்கமாகிவிட்டாள். அவளுடைய உடலில் ஒவ்வொரு பகுதியும் அலை அலையாய் மூளைக்கு செய்தியை அனுப்பிக் கொண்டிருந்தது. திடீரென்று நாலா பக்கத்திலிருந்து ஷவர் வழியாய் குளிர்ந்த தண்ணீர் தன் உடல்மீது பாய்வது போன்ற உணர்வு ஏற்பட்டு மேனி நடுங்கியது. உயரத்திலிருந்து பள்ளத்தாக்கில் குதித்துவிட்டது போல் உடல் இலேசாகி காற்றில் மிதந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கழித்து சுய உணர்வு பெற்றவளாய் அவன் கழுத்தைச் சுற்றியிருந்த தன்னுடைய கைகளை விடுவித்துக் கொண்டு பலமாக அவனைத் தள்ளிவிட்டாள். அவன் காற்றில் கரைந்து போய்விட்டான். அவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தலையணையில் முகம் புதைத்து விசும்பி விசும்பி அழுதுகொண்டிருந்தாள்.
................
அதற்குள் வெளியில் சத்தம் கேட்டது. அவள் கண்களைத் திறந்தாள்.. கசங்காத படுக்கை கலைந்த கனவை கேலி செய்வது போல் இருந்தது. போய்க் கதவைத் திறந்தாள். விஸ்வநாதன் முறுவலுடன் "என்ன? நன்றாக தூங்கிவிட்டாயா? எத்தனை நேரமாய் கதவைத் தட்டுகிறேன் தெரியுமா?" என்றான்.

அவள் பதில் சொல்லவில்லை. அதற்குள் மறுபடியும் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. ரவிசங்கர் வந்து கொண்டிருந்தான். அவள் சட்டென்று ஜன்னல் விளிம்பில் வைத்திருந்த சாவியை எடுத்து கணவனிடம் கொடுத்துக் கொண்டே "இதை அவனிடம் கொடுங்கள். இதுபோல் நேரம் தப்பி நேரம் வந்தால் ஒத்துவராது என்று சொல்லுங்கள்" என்றாள். அந்த வார்த்தைகள் அவனுக்கும் கேட்கும் என்று அவளுக்குத் தெரியும். அதேபோல் நடந்தது. அவன் எதுவும் சொல்லாமல் சாவியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குப் போய்விட்டான். விஸ்நாதன் மனைவியை கேள்விக்குறியுடன் பார்த்து விட்டு உள்ளே வந்தான். வாசற்கதவைச் சாத்திவிட்டு அவளும் உள்ளே வந்தாள்.
அன்று இரவு அவள் எதையும் பிரஸ்தாபிக்கவில்லை. ஆனால் மறுநாள் கணவன் ஆபீசுக்குப் போகும் முன் உணவு சாப்பிடும் போது சொன்னாள்.

"நீங்க எப்படியாவது அந்தப் பையனை அறையை காலி பண்ணும் விதமாக செய்யவேண்டும்."

தயிரைப் பரிமாறிக்கொண்டே "எதற்காக?" என்றான்.

"எனக்குப் பிடிக்கவில்லை, அதுதான்."

"அதுதான் ஏன் என்று கேட்கிறேன்?"

அவளால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

"அவன் நேற்றும், இன்றும் உன்னிடம் ஏதாவது தரக்குறைவாக நடந்து கொண்டானா?"

அவள் பதில் பேசவில்லை.

"இத்தனைக்கும் நீ சொல்ல வந்ததுதான் என்ன? அவனை அறையை காலி செய்யச் சொல்லிவிட்டு வேறு யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றா? இல்லை யாருக்குமே கொடுக்க வேண்டாம் என்றா?"

"வேறு யாருக்காவது கொடுக்கலாம்."

"அவனை போகச் சொல்வதற்குச் சரியான காரணம் இருக்க வேண்டும் இல்லையா?"

அவள் பதில் சொல்லவில்லை. அவன் சாப்பிட்டு முடித்துவிட்டு பாக்கை வாயில் போட்டுக் கொண்டான். ஸ்கூட்டர் சாவியை எடுத்துக்கொண்டே சொன்னான்.

"ராதா! நான் உன்னைப் போல் இலக்கியத்தை, மனிதர்களின் மனங்களை படித்தவன் இல்லை. எனக்கு சரியாக சொல்லவும் தெரியாது. நேற்றிலிருந்து உன்னைக் கவனித்துக்கொண்டு வருகிறேன். நீ ஒரு விதமான அப்செஷனால் பாதிக்கப்பட்டிருக்கிறாயோ என்று தோன்றுகிறது.  இந்த உலகில் எந்த மனிதனும் கெட்டவன் இல்லை. எதுவும் நாம் நினைத்துக்கொள்வதில்தான் இருக்கிறது. மற்றவர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாமும் அதே கண்ணோட்டத்தில் பார்த்தாக வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. நாம் எந்த கோணத்திலிருந்து பார்க்கிறோமோ எதிராளியும் அதேபோல் தென் படுவான். பெண் என்பதால் ஆணைக் கண்டு பயப்பட வேண்டும். குறைந்த பட்சம் பயப்படுவது போல் நடிக்க வேண்டும் என்ற மனநோய் தான் உன்னை இந்த விதமாக மாற்றிவிட்டதோ என்று நினைக்கிறேன். 

பொய்யான உலகத்திலிருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய். உன் கண்ணில் பட்ட சில நிகழ்ச்சிகள், அவற்றின் ஆதாரமாக நீ ஊகித்துக் கொண்டது உண்மையாக இல்லாமல் போகலாம். ஒரு வேளை அது உண்மைதான் என்று தெரிந்தால் கட்டாயம் அவனை அறையை காலி செய்யச் சொல்லிவிடலாம். ஆனால் உன் பக்கத்திலிருந்து சின்ன முயற்சிகூட செய்யாமல் ஒரு முடிவுக்கு வருவது தவறு என்பது என்னுடைய அபிப்பிராயம்." சொல்லி முடித்துவிட்டு ஆபீசுக்குப் போய்விட்டான்.

அவள் கற்சிலையாக நின்றுவிட்டாள். கணவன் இந்த விதமாக பேசியது அவளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அளவுக்கு அனலைஸ் செய்யக் கூடிய திறமை அவனிடம் இருக்கும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. அவன் தன்னையும், தன் மனதில் நடக்கும் போராட்டத்தையும் கவனித்து வருகிறான் என்பதே அவளுக்குப் புதுமையாக இருந்தது.இங்கே மற்றொரு விஷயமும் இருக்கிறது. அவள் ஒன்றும் முட்டாள்தனமாக பிடிவாதம் பிடிக்கும் பெண் இல்லை. கணவன் அப்படிப் பேசியதும் முதலில் ஆவேசமடைந்தாள். ஆனால் பிறகு அதில் இருக்கும் லாஜிக்கை யோசித்தாள். யோசிக்க யோசிக்க தான் எடுத்த முடிவுகள் எத்தனை அர்த்தமற்றவை என்று புரிந்தபோது வெட்கமாக உணர்ந்தாள்.

அப்பொழுது மணி இன்னும் பத்தடிக்கவில்லை. ரவிசங்கர் தன்னுடைய அறையிலேயே இருந்தான்.

"உள்ளே வரலாமா?" வாசல் அருகிலேயே நின்றுகொண்டு கேட்டாள்.

அவள் வருவாள் என்று எதிர்பார்க்காததால் கொஞ்சம் வியப்பு அடைந்தாலும், அவள் குரலில் கோபமோ எரிச்லோ தென்படாதது கண்டு உற்சாகத்துட்ன் "வாங்க வாங்க" என்றான்.

அவள் உள்ளே காலடி எடுத்து வைத்து அவன் வரைந்து கொண்டிருந்த ஓவியத்தைப் பார்த்தாள். அவளுக்கு வர்ணங்களின் சேர்க்கை பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால் எதுவும் தெரியாதவர்களுக்குக் கூட நன்றாக இருக்கும் வகையில் அந்த ஓவியம் சிறப்பாக இருந்தது.

"எங்கே படிக்கிறீங்க?" என்று கேட்டாள்

"யூனிவர்சிடீ நைட் காலேஜில்" என்றான். "அதோடு ஒரு கமர்ஷியல் கம்பெனியில் பார்ட் டைம் வேலை செய்கிறேன்."

அவள் அவனை கவனமாக பரிசீலிப்பது போல் பார்த்தாள். தன்னைவிட மூன்று வயது சிறியவனாக இருப்பானோ என்னவோ. முகத்தில் இன்னும் குழந்தைத் தனம் மாறவில்லை. முரட்டுத்தனமாக தோன்றவேண்டும் என்பதற்காக தாடியை, கிருதாவை வைத்துக்கொண்டிருப்பான் போலும். அவளுக்குச் சிரிப்புத் தான் வந்தது. ஊரில் படிக்கும் தம்பியின் நினைவு வந்தது. அவனும் இப்படித்தான் தன் வயதைவிட பெரியவனாக தென்பட வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருப்பான்.

அவளுடைய பார்வை கிடார், டிரம்ஸ்மீது படிந்ததை கவனித்தவன் சங்கடப் பட்டுக்கொண்டே சிரித்தான். "விடியற்காலை வேளையில் உங்களுடைய தூக்கத்தை டிஸ்டர்ப் செய்கிறேனோ?"

"இல்லை இல்லை." அவசரமாக மறுத்தாள். "நீங்க எப்போ எழுந்து கொள்கிறீர்கள் என்றுகூட எங்களுக்குத் தெரியாது."

"காலை வேளையில் பிராக்டீஸ் செய்தால் நன்றாக இருக்கும். அதான் நாலு மணிக்கே எழுந்துகொண்டு விடுவேன்."

திடீரென்று தர்ட் டைமன்ஷனில் ஏதோ ஜன்னல் கதவு திறந்துகொண்டு வெளிச்சம் பரவியது போல் அவளுக்குத் தோன்றியது. கணவன் சொன்னது நினைவுக்கு வந்தது. சிலர் வெளியில் பார்ப்பதற்கு நல்லவர்களாக, அப்பாவிகளாக தென்படுவார்கள். சிலர் முரடர்களாக, வாழக்கையில் லட்சியம் இல்லாதவர்களைப் போல் தோற்றம் தருவார்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் எவ்வளவு வேறுபாடு இருக்கிறதோ புரியும். எப்போதும் சிகரெட் பிடித்துக் கொண்டு, இரவு வந்ததும் பாட்டிலைத் திறக்கும் இந்த இளைஞன் தங்கள் எல்லோரையும் விட இரண்டு மடங்கு உழைக்கிறான். வாழ்க்கையிடம் ஸ்திரமான அபிப்பிராயம் வைத்திருக்கிறான். அவனுக்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.

வாழ்க்கையில் லட்சியம் இருப்பது வேறு. அதைச் சாதிப்பதற்காக கஷ்டப் படுவது வேறு. அந்த மாதிரி கஷ்டப்படும்போது இந்த உலகின்மீது ஒரு விதமான அலட்சியம், ஆர்வமற்ற தன்மை ஏற்பட்டு இருக்கலாம். அதைப் புரிந்து கொள்ளாதது தன்னுடைய தவறுதான்.

கம்யூனிகேஷன் கேப் என்ற சுவரை தகர்ந்துவிட்ட பிறகு பனித்திரை விலகியதுபோல் அவளுக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

"நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. அவரும் இருப்பார். எங்கள் வீட்டுக்கு லஞ்சுக்கு வரணும்" என்றாள்.

அவன் தன்னுடைய மகிழ்ச்சியை மறைத்துக்கொள்ளும் முயற்சி எதுவும் செய்யவில்லை. "கட்டாயம் வருகிறேன். நல்ல சாப்பாட்டுகாக ரொம்ப நாளாக ஏங்கிக்கொண்டு இருக்கிறேன்" என்றான் பளீரென்று சிரித்துக் கொண்டே.!தெலுங்கில் எண்டமூரி வீரேந்திரநாத்
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் 8 comments:

 1. நாவலின் ஒரு பகுதி போல இருக்கிறது சிறு கதை ... ஆனால் உலகத் தரம் என்று சொல்ல முடியாத படிக்கு ஏதோ ஒன்று குறைகின்றது ...

  ReplyDelete
 2. நியோ!

  நாவலின் ஒரு பகுதி போல இருப்பதாகச் சொல்வது, சிறுகதை வடிவம் உங்களுக்குப் பிடிபடவில்லை என்பதைக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

  //ஆயிரம் பக்கங்களில் எழுதப்படும் நாவல் வடிவத்தை விட சிறுகதை களின் வீரியம் அதிகம் என்பதை இந்தப் பக்கங்களில் சில சிறு கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பேச ஆரம்பித்திருக்கிறோம்.சிறுகதையின் மிகப் பெரிய பலமே, அது வர்ணனைகளில் அதிகம் பூசி மெழுகாது சொல்ல வரும் விஷயத்தை நேரடியாகவே சொல்லி விடுவது தான். மிகவும் பிரபலமான நாவலாசிரியர் என்றாலுமே கூட சிறுகதை என்று வரும்போது அவ்வளவாக சோபிக்காத தருணங்களும் நிறைய உண்டு என்பதைப் பார்த்திருக்கிறேன்.//

  இப்படி ஒரு அறிமுகத்துடன் எண்டமூரி எழுதிய இன்னொரு சிறுகதை, பெண்ணுக்குப் பெண்ணே-வை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்.

  இந்தக் கதையில் மூன்றே மூன்று பேர்! அதில் ஒருத்தி பெண்! அவள் தன்னுடைய வீட்டுக்குக் குடிவரும் இளைஞனைப் பற்றித் தவறான அபிப்பிராயங்களையும் வெறுப்பையும் வளர்த்துக் கொள்கிறாள். அவள் கணவன் ஒரே ஒரு வார்த்தை தான் சொல்கிறான்.நீயாக ஒரு அப்செஷனை வளர்த்துக் கொண்டு போய்க் கொண்டிருப்பதை தவிர்த்துவிட்டு, உண்மையிலேயே அப்படித்தானா என்பதை ஒருதரமாவது சோதித்துப் பார்க்க முயற்சி செய் என்று மட்டும் சொல்கிறான்.

  கதையில் வரும் பெண் யதார்த்தவாதி, புத்திசாலியும் கூட! தன்னுடைய தவறான பார்வையில் தான் இத்தனை சந்தேகமும் எழுந்தது என்பதைப் புரிந்துகொள்கிறாள். தடையாக இருந்த அந்தப் பார்வையின் கோணம் விலகியதும், மிக இயல்பான சிநேகிதம் வந்துவிடுகிறது என்பதோடு கதை முடிகிறது. இதை ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் விரித்து எழுதக்கூடிய நாவலின் ஒரு பகுதியாக உங்களால் எப்படிப் பார்க்க முடிகிறது?

  எடுத்துக் கொண்ட விஷயம் மிகவும் சிறியது, எளிதான ஒரு உண்மைதான்! நல்லதோ, கெட்டதோ, நாம் பார்க்கும் பார்வயில் தான் பெரும்பாலான தருணங்களில் இருக்கிறது. அதை, அந்தப் பெண்ணின் மனச் சலனங்களோடு கதையாகப் பின்னியிருப்பது இப்போது விளங்கிக் கொள்ள முடிகிறதா?

  ReplyDelete
 3. அப்புறம்,அந்த
  //உலகத் தரம் என்று சொல்ல முடியாத படிக்கு ஏதோ ஒன்று குறைகின்றது ...//

  உள்ளூர்த் தரம், உள்நாட்டுத் தரம், உலகத் தரம் இதை யார், எதை வைத்து நிர்ணயிப்பது, நியோ?

  அர்த்தமில்லாத இந்த அளவீடுகளை நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதே இல்லை! இங்கே தமிழ்நாடு அரசு நிறைய எழுத்தாளர்களுடைய படைப்புக்களை நாட்டுடைமையாக்கிக் கொண்டிருப்பதாக வருடந்தோறும் அறிவிப்புச் செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு அரசியல் பிரமுகருடைய நூல்களை இரண்டு கோடி கொடுத்து வாங்கியது, வேறு சில எழுத்தாளர்களுடைய படைப்புக்களை வெறும் ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம் என்று பேரம் பேசியது. அப்படிப் பேரம் பேசப்பட்ட நூலாசிரியர்களுடைய குடும்பத்தினர் அரசு நிர்ணயித்த நிலையை நிராகரித்தனர்.

  நிராகரித்தவர்களில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகள் சிலர், கவியோகி சுத்தானந்த பாரதியார்! சாண்டில்யன்! கண்ணதாசன்!

  இங்கே உள்ளூரிலேயே தரத்தை நிர்ணயிப்பதில் இருக்கும் ஏகப்பட்ட குளறுபடி, கோல்மால் அல்லது அரசியல் இருப்பதைச் சுட்டிக் காட்டத் தான் இத்தனையும் சொன்னேன்! அப்புறம், உலகத் தரம், உலோகத் தரத்தைஎல்லாம் பேசுவது கொஞ்சம் வேடிக்கையாக இல்லை!?

  ReplyDelete
 4. நாஞ்சில் கார்முகிலன்!

  த்ரில்லர் எண்டமூரி எழுதிய ஒரு புதினம், அது பிடித்திருக்கிறது சரி! இந்தப்பக்கங்களில் உள்ள சிறுகதையைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே!

  ReplyDelete
 5. தீதும் நன்றும் பிறரைப் பார்க்கும் பார்வையில் தான் உள்ளதோ?!!!!

  ReplyDelete
 6. முதலில் ஒரு நாவலின் சிறுபகுதியைத்தான் தந்திருக்கிறீர்கள் என்று நினைத்தே படித்தேன். அருமையான கதை. மனைவியைக் கணவன் துல்லியமாகப் படிப்பது ஆச்சர்யம். அவளின் பயம் ஆச்சர்யம்.

  ReplyDelete
 7. வாருங்கள் ஸ்ரீராம்! கதையில் வரும் பெண் யதார்த்தவாதி, புத்திசாலியும் கூட! தன்னுடைய தவறான பார்வையில் தான் இத்தனை சந்தேகமும் எழுந்தது என்பதைப் புரிந்துகொள்கிறாள். தடையாக இருந்த அந்தப் பார்வையின் கோணம் விலகியதும், மிக இயல்பான சிநேகிதம் வந்துவிடுகிறது என்பதோடு கதை முடிந்து விடுகிறதில்லையா? அதனால் இது #சிறுகதை தான்!

  ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)