யூட்யூப் தளத்தில் செய்திகளைத் தேடிக்கொண்டிருந்த தருணத்தில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. அரசியல் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவனை, கொஞ்சம் இலக்கியமும் வாசியேன் என்று இழுத்துக் கொண்டு போன ஒரு பாடல்! கேட்கலாமா?
புறநானூற்றில் இருந்து ஒரு சிறிய பாடல். இயற்றிய புலவர் யாரென்று தெரியாது, பிரிவாற்றாமையில் பாடுவதாக, இங்கே பாடியிருப்பவர் சைந்தவி, இசை அமைத்தவர் ராஜன் சோமசுந்தரம். 5 நிமிடம்.
கலம்செய் கோவே கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!
கலம் செய் கோவே என்று இங்கே விளிக்கப்படுவது ஈமத்தாழி செய்கிற குயவன். ஊர் நனந்தலை என்பது மட்டும் பாடலில் குறிப்பு இருக்கிறது. பாடலை ரசிக்க முடிந்ததா?
2018 இல் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிற சுஜா சுயம்பு தொகுத்திருக்கும், தமிழ்த் தொகுப்பு மரபு - எட்டுத்தொகைப்பனுவல்கள் என்ற புத்தகத்தைக் குறித்த ஒரு சிறு அறிமுகம் இந்து தமிழ் திசையில் படித்த நினைவு இன்னும் இருக்கிறது. புத்தக விலை ரூ.700/- என்பது கொஞ்சம் பயமுறுத்தியதும் நினைவு வருகிறது. ஒரு தனிநபர் வாசிப்புக்காக இவ்வளவு செலவு செய்வது என்பது எல்லோராலும் இயலாத ஒன்று.வாசிப்பவர் தேவையறிந்து உதவுகிற ஒரு நல்ல நூலகத்தின் அருமையை நான் மீண்டும் மீண்டும் அனுபவித்த வேளையும் கூட! இங்கே பொது நூலகத் துறை ஒரு உயிரோட்டமான துணையாக இருந்ததே இல்லை என்கிற கசப்பான உண்மையும், லெண்டிங் லைப்ரரிகளிலும் கூட படிக்க விரும்புகிற புத்தகங்கள் கிடைப்பதில்லை, அங்கேயும் ரமணி சந்திரன், பால குமாரன், போன்ற இலக்கிய ஆளுமைகளின் புனைவுகள் மட்டுமே கிடைக்கும் என்பதான கசப்பும் ஒருசேர மறுபடியும் சைந்தவியின் குரலில் ஒரு பழந்தமிழ் இலக்கியப்பாடலைக் கேட்டபோது அனுபவித்தேன். அதென்னய்யா எட்டுத்தொகை என்று கேட்கிறீர்களா? 1) குறுந்தொகை 2) நற்றிணை 3) அகநானூறு 4) ஐங்குறுநூறு 5) கலித்தொகை 6) பரிபாடல் 7) புறநானூறு 8) பதிற்றுப்பத்து என்று சங்க இலக்கியப்பாடல்களை பாடியவர் யார் பாடப்பட்டவர் யார், திணை, கூற்று என்று இன்னும் சில குறிப்புகளோடு வகைப்படுத்திப் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டவைதான் எட்டுத்தொகை.
இவற்றில் புறநானூற்றில் பாடியது யார் என்ற விவரம் கிடைக்காமல், மனித வாழ்க்கையின் மிக நுண்ணிய உணர்வான பிரிவாற்றாமையில் பாடுவதாக அமைந்த ஒரு சிறுபாடல், ஒரு நூலகம் எப்படிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்கிற விதத்தில் இருக்க வேண்டும் என்கிற யோசனையைக் கிளறி விட்டது. சங்க இலக்கியப்பாடல்கள் முழுதும் Project Madurai தமிழ் இணைய பல்கலைக்கழகத் தளத்தில் கிடைக்கும் என்றாலும் அவை தொகுக்கப்பட்ட விதத்தை விளக்கும் விதத்தில் ஆய்வுகளைத் தருவதில்லை.
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் மாதிரி ஒன்றிரண்டு தனியார் நூலகங்களில் இன்னும் அது மாதிரியான தேடல்களுக்கு விடை கிடைக்கிறது என்பது மட்டும்தான் இப்போதைக்கு ஆறுதல்.
ஞானாலயா மாதிரி நல்ல நூலகங்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?
மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணமூர்த்தி சார் சைந்தவி பாடியபாடலில் வரிகள் இப்படி வருகின்றன ஆனால் நீங்கள் எழுதியவையில் மாறி வந்து இருக்கின்றன
ReplyDeleteசிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
வாருங்கள் பந்து!
ReplyDeleteவிக்கிபீடியாவில் இருந்து பாடல்வரிகளை மேலதிக விவரங்களுக்காக எடுத்தேன். சைந்தவி பாடியதோடு ஒப்பிட்டுப் பார்க்கவில்லை
சார் நான் மதுர பந்து சார் இன்னும் வரலை அவர் பிஸி போல இருக்கு
ReplyDeleteவாருங்கள் ம.த.!
Deleteஏதோ யோசனையில் பெயர்மாறிவிட்டது. மன்னிக்கவும்! முந்தைய பதிலில் சொன்னதில் கூட இன்னொரு மாற்றம்! பாடல்வரிகளில் ஒருவரி மேலேறி முன்னது கீழிறங்கி விட்டதையும் இப்போதுதான் கவனித்தேன்.