கடந்தவாரம் வெளியான இரு தமிழ்ப்படங்கள் இரு தெலுங்குப் படங்கள் என நான்கு லோக்கல் படங்கள் பார்த்ததில் எதுவும் விமரிசனம் எழுதுகிற அளவுக்குத் தேறவில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுவது உத்தமம்.
1. தர்பார் ரஜனி படத்தில் நயன்தாராவை சுத்தமாக வேஸ்ட் செய்திருக்கிறார்கள். அதேபோல தெலுங்கில் படங்கள் இல்லாததாலோ என்னவோ நிவேதா தாமஸ் மகள் வேடத்தில் நடிக்கிற அளவுக்கு கீழிறங்கி விட்டதோடு அதைக்குறித்து பெருமிதமாகவும் ட்வீட் செய்திருக்கிறார். ஆக தர்பாரில் சொல்வதற்கு வேறு என்ன மிச்சமிருக்கிறது?
2. பட்டாஸ் அசுரன் படத்தில் மிகச்சிறப்பாக நடித்த பிறகு திருஷ்டிபரிகாரம் போல இந்தப்படத்தில். தனிப் பட்ட முறையில் நடிகர்களைக் குறைசொல்ல முடியாது. 7 ஆம் அறிவு மாதிரி தனுஷுக்கும் இந்தப்படம் பெரிய சறுக்கல். மேலே உள்ள படம்தான் இந்தப்படத்துக்குப் பொருத்தமான விமரிசனமாக இருக்கும் போல!
3,சரிலேரு நீக்கெவ்வரு மகேஷ்பாபுவுக்கு இன்னுமொரு டெம்ப்லேட் படம். அதற்குமேல் பெரிதாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறதென்றால், முதல் படம் மாதிரியே கதாநாயகி தேவைப்படாத ஒரு திரைப்படம். அதிலும் ராஷ்மி மந்தனா ஒரு லூசுப்பெண் கதாநாயகியாக, I am impressed என்று ஒரு ஏழெட்டுத்தரம் ஓடிப்போய் மகேஷ்பாபுவை கட்டிப் பிடிக்கிற காட்சி லூசுத்தனத்தின் உச்சம். அதென்னவோ சமீபகாலமாக வரும் படங்களில் எதற்காக கதாநாயகி என்று தேவையில்லாமல் திணிப்பு செய்கிறார்கள் என்பதான அலுப்பு அதிகமாகி வருகிறது.
4, அல வைகுந்தபுரமுல்லோ அல்லு அர்ஜுன் படங்களில் பாடல்களும் நடனங்களும் சண்டைக் காட்சிகளும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். கதைகூட அப்புறம் தான்! ஏழை பணக்கார வீட்டுப்பிள்ளைகள் பிறந்தவுடனேயே இடம்மாறி வளர்கின்றன என்ற கதை முடிச்சை வைத்துக்கொண்டு திரைக்கதையைப் பின்னியிருக்கிறார்கள். கதாநாயகி பூஜா ஹெக்டே. ஒரு நட்சத்திரப்பட்டாளமே படத்தில் இருப்பதில், வில்லன் சமுத்திரக்கனிக்குத் தேவையான ஸ்பேஸ் இல்லாமல் ஒரு படம். மற்ற மூன்று படங்களோடு ஒப்பிடுகையில், அல்லு அர்ஜுன் படம் ஏமாற்றமளிக்காத பொழுது போக்குப் படமாக இருக்கிறது என்றாலும் இதிலும் கூட கதாநாயகி வெறும் கிளாமருக்காக மட்டுமே வந்துபோகிற பாத்திரமாக இருக்கிறார் என்பது நான்கு படங்களிலும் இருக்கிற பொதுவான விஷயம். தர்பார், சரிலேரு நீக்கேவ்வரு இருபடங்களிலும் கதாநாயகி பாத்திரமே தேவையில்லை. மற்ற இரு படங்களிலும் எதோ கொஞ்சம் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வாவு தான்!
இந்தக் குப்பைகளுக்கு வெப் சீரீஸ் எவ்வளவோ தேவலாம்! சென்றவாரம் பார்த்து முடித்த வெப் சீரீஸ்
I Medici இத்தாலியின் ஃப்லோரன்ஸ் நகரத்தின் மெடிசி குடும்பத்தின் கதை. இது வெப் சீரீசின் மூன்றாவது பாகம். ஒவ்வொன்றும் எட்டு எபிசோடுகளாக. கொஞ்சம் கற்பனையோடு ஐநூறு வருடங்களுக்கு முந்தைய இத்தாலியின் சரித்திரத்தையும், கூடவே கத்தோலிக்க சர்ச்சின் அரசியலையும் தெரிந்து கொள்ள உதவுகிற கதையாக!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment