வருடாவருடம் சென்னைப்புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் பேசப்படுகிறதோ இல்லையோ சாட் மசாலா தூவிய டெல்லி அப்பளம் பரபரப்பாகப் பேசப்படுவதில், மக்களுடைய ரசனை குறித்து உங்களுக்கு ஏதாவது ஊகிக்க முடிகிறதா? சீரியசாகப் புத்தகங்கள் வாங்கவருகிற முகங்கள் எத்தனை?வாங்கியதைப் படிக்காமலேயே இருப்பது குறித்து பெருமிதமாக சமூகவலைதளங்களில் பகிர்பவர்கள் எத்தனை? இப்படி எதையுமே கணிக்கமுடியாத சென்னை புத்தகக் கண்காட்சி நாளையோடு ஒருவழியாக நிறைவு பெறுகிறது.
"நேத்து நான் மீட்டிங்ல சொன்னது 'இந்த மைக் சரியில்லை.எக்கோ அடிக்குது.யாராவது சரி பண்ணுங்க"'
புத்தகங்களை வாங்கி வாசிக்கிறோமோ இல்லையோ, நொறுக்குத்தீனி வாங்கித் தின்பதற்காகவே வருகிறோம் என்று சொல்கிற மாதிரி ஒரு வீடியோ, 8 நிமிடம், இந்து தமிழ்திசைக்காரர்களிடமிருந்து!
முகநூல் பகிர்வுகளில் சரவெடியாக இப்படிப் பகடி செய்யும் போகன் சங்கர் புத்தக அறிமுக நிகழ்ச்சியில் எப்படிப் பேசுகிறார் என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்!
வீடியோ 7 நிமிடம் செல்வம் அருளானந்தம் எழுதிய சொற்களில் சுழலும் உலகம் புத்தகம் பற்றிப் பேசியது இது. ஏதாவது புரிகிறதா?
"அண்ணா பேசும்போது எங்களோட மன நிலையையும் நீங்க கணக்கில எடுத்துக்கணும். ரொம்ப அடர்த்தியாப் பேசறீங்க.உங்களவுக்கு நாங்கள் படிக்கலை.நேத்து நீங்கள் மீட்டிங்ல சொன்னது புரியவே இல்லை"
"நேத்து நான் மீட்டிங்ல சொன்னது 'இந்த மைக் சரியில்லை.எக்கோ அடிக்குது.யாராவது சரி பண்ணுங்க"'
ஆக, புத்தகக்கண்காட்சி புத்தகங்களையும் தாண்டி நிறைய அக்கப்போர்களையும் கொண்டிருந்தாலும் வாசிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நல்ல முயற்சியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் புதிதுபுதிதாக முளைக்கும் எழுத்தாளர்கள் வாசகர்களுக்குப் பயன்படுத்துகிற விஷயங்களைத் தான் எழுதினார்களா? வாசகர்கள் மதிப்பீடு என்ன? இதைப்பற்றி யாராவது இங்கே பதிவு செய்திருக்கிறார்களா, யாருக்காவது தெரியுமா?
என்னை எடுத்துக் கொண்டால் ஒரு புத்தகக் கண்காட்சிக்கும் போனவனில்லை. ஆனால் புத்தகக் கடைகளுக்குப் போவதை வாடிக்கையாக வைத்து இருந்தவன். புத்தகங்களைக் கையிலெடுத்து புரட்டிப் பார்த்து எழுத்தாளரின் மொழிநடை, சொல்லவரும் செய்தி இவைகளைக் கவனித்து, வாங்குவதா வேண்டாமா என்பதை அந்த நேரத்திலேயே முடிவு செய்து, புத்தகங்களை வாசிக்கும் இயல்பு உள்ளவன்.
புத்தகங்கள் தான் பேசவேண்டுமே தவிர எழுதியவன் அல்ல என்பது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை.
ஒரு தேர்ந்த வாசகன், புத்தகத்தைத் திறனாய்வு அல்லது மதிப்பீடு செய்வதான போக்கை எப்போது வளர்த்தெடுக்கப் போகிறோம்? மேற்கத்திய நாடுகளில் literary critics புத்தகவாசிப்புக்கு மிகவும் உற்றதுணையாக இருப்பதுபோல விமரிசனக்கலையை இங்கும் எப்போது உருவாக்கிக்கொள்ளப்போகிறோம்?
டிஸ்கி: ஒருவழியாக என்னுடைய லேப்டாப்பில் கிண்டில் அப்ளிகேஷனை மறுபடியும் நிறுவியாகி விட்டது. அதனால் நண்பர் திருப்பூர் ஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
போகன் கவிதை படித்து சிரித்துக் கொண்டேயிருக்கிறேன். டெல்லி அப்பளம் காட்சி என் முகநூலில் போட்டுள்ளேன். நன்றி. வாசித்துவிட்டு சொல்லுங்க. உங்கள் முயற்சிக்குவாழ்த்துகள்.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி!
Delete5 முதலாளிகளின் கதையை நேற்றே வாசித்து முடித்துவிட்டேன். எளிமையான வாக்கியங்கள், சிறிய பாராக்கள் என்று உங்கள் மகள்களுக்கு கதை சொல்கிற மாதிரியான மொழிநடையில் வாசகர்களுக்கு திருப்பூரின் கதையைக் கொஞ்சம் சொல்லியிருக்கிறீர்கள்! ஒரு நல்ல முயற்சி.
பனியன் தொழிலை திருப்பூர் அறிவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னாலேயே, நகரத்தார் அதை மதுரையில் ஆரம்பித்து, வாங்குவார் இல்லாததால் கைவிட்டுவிட்டு, நூற்பாலைகளை மட்டுமே நடத்தி வந்தார்கள் என்ற தகவல் சொல்ல விடுபட்டதாக, ஒரே ஒரு சிறுகுறை. .
.
1980 களிலேயே திருப்பூர் பக்கத்திலேயே Foreign Exchange லைசன்ஸ் பெற்ற ஒரு வங்கிக்கிளையில் பணியாற்றி ஜவுளி ஏற்றுமதி செய்துவந்த வாடிக்கையாளர்களையும், அவர்களுடைய தொழில் நிர்வாகத்தையும் நேரடியாகவே அறிந்தவன் என்கிற வகையில் 5 முதலாளிகளின் கதை எனக்குப் புதியதகவல்களைச் சொல்லவில்லை. ஆனால் திருப்பூரின் அவலநிலையைச் சுட்டிக்காட்டுகிற ஒரு புதிய திறப்பாகவே எனக்கு உங்களுடைய புத்தகம் இருந்தது என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.
எனக்குத் தெரிந்த முதலாளிகளுடைய தகிடுதத்தங்கள், மோசடியை என்னால் வெளியே சொல்ல முடியாதபடி ஒய்வு பெற்றுவிட்டாலும் கூட தொழில் தர்மம் தடையாக இருக்கிறது. ஆனால் அந்தத்தொழிலில் இருந்து கொண்டே, அதில் உள்ள குறைகளை சொல்வது உங்களுக்கிருக்கிற தைரியம்!
லேப்டாப்பில் கிண்டிலை நிறுவி புத்தகங்களைத் தரவிறக்கம் செய்வது கொஞ்சம் பாடாய்ப் படுத்தி எடுத்து விட்டது. வேடிக்கை என்னவென்றால் விமலாதித்த மாமல்லன் எழுதிய சின்மயி விவகாரம் எப்போதோ தரவிறக்கம் ஆனதைத் தெரிந்துகொள்ளக் கூட முடியவில்லை. உங்களுடைய புத்தகம் இலவசமாய்த் தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதி அளித்திருந்த தருணத்தில் தரவிறக்கம் ஆனதை வாசிக்க முடியவில்லை. மீண்டுமொரு இலவசத்தரவிறக்கம் செய்து பார்த்ததில் உங்கள் புத்தகமும் லிஸ்டில் இருப்பதைப் பார்த்துவிட்டு,, கையோடு வாசிக்க ஆரம்பித்தேன் ,
இந்த அவஸ்தைக்கு, ஒரு கிண்டில் ரீடரை வாங்கிவிடலாமென்று இருக்கிறேன்.