வருடாவருடம் சென்னைப்புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் பேசப்படுகிறதோ இல்லையோ சாட் மசாலா தூவிய டெல்லி அப்பளம் பரபரப்பாகப் பேசப்படுவதில், மக்களுடைய ரசனை குறித்து உங்களுக்கு ஏதாவது ஊகிக்க முடிகிறதா? சீரியசாகப் புத்தகங்கள் வாங்கவருகிற முகங்கள் எத்தனை?வாங்கியதைப் படிக்காமலேயே இருப்பது குறித்து பெருமிதமாக சமூகவலைதளங்களில் பகிர்பவர்கள் எத்தனை? இப்படி எதையுமே கணிக்கமுடியாத சென்னை புத்தகக் கண்காட்சி நாளையோடு ஒருவழியாக நிறைவு பெறுகிறது.
"நேத்து நான் மீட்டிங்ல சொன்னது 'இந்த மைக் சரியில்லை.எக்கோ அடிக்குது.யாராவது சரி பண்ணுங்க"'
புத்தகங்களை வாங்கி வாசிக்கிறோமோ இல்லையோ, நொறுக்குத்தீனி வாங்கித் தின்பதற்காகவே வருகிறோம் என்று சொல்கிற மாதிரி ஒரு வீடியோ, 8 நிமிடம், இந்து தமிழ்திசைக்காரர்களிடமிருந்து!
முகநூல் பகிர்வுகளில் சரவெடியாக இப்படிப் பகடி செய்யும் போகன் சங்கர் புத்தக அறிமுக நிகழ்ச்சியில் எப்படிப் பேசுகிறார் என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்!
வீடியோ 7 நிமிடம் செல்வம் அருளானந்தம் எழுதிய சொற்களில் சுழலும் உலகம் புத்தகம் பற்றிப் பேசியது இது. ஏதாவது புரிகிறதா?
"அண்ணா பேசும்போது எங்களோட மன நிலையையும் நீங்க கணக்கில எடுத்துக்கணும். ரொம்ப அடர்த்தியாப் பேசறீங்க.உங்களவுக்கு நாங்கள் படிக்கலை.நேத்து நீங்கள் மீட்டிங்ல சொன்னது புரியவே இல்லை"
"நேத்து நான் மீட்டிங்ல சொன்னது 'இந்த மைக் சரியில்லை.எக்கோ அடிக்குது.யாராவது சரி பண்ணுங்க"'
ஆக, புத்தகக்கண்காட்சி புத்தகங்களையும் தாண்டி நிறைய அக்கப்போர்களையும் கொண்டிருந்தாலும் வாசிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நல்ல முயற்சியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் புதிதுபுதிதாக முளைக்கும் எழுத்தாளர்கள் வாசகர்களுக்குப் பயன்படுத்துகிற விஷயங்களைத் தான் எழுதினார்களா? வாசகர்கள் மதிப்பீடு என்ன? இதைப்பற்றி யாராவது இங்கே பதிவு செய்திருக்கிறார்களா, யாருக்காவது தெரியுமா?
என்னை எடுத்துக் கொண்டால் ஒரு புத்தகக் கண்காட்சிக்கும் போனவனில்லை. ஆனால் புத்தகக் கடைகளுக்குப் போவதை வாடிக்கையாக வைத்து இருந்தவன். புத்தகங்களைக் கையிலெடுத்து புரட்டிப் பார்த்து எழுத்தாளரின் மொழிநடை, சொல்லவரும் செய்தி இவைகளைக் கவனித்து, வாங்குவதா வேண்டாமா என்பதை அந்த நேரத்திலேயே முடிவு செய்து, புத்தகங்களை வாசிக்கும் இயல்பு உள்ளவன்.
புத்தகங்கள் தான் பேசவேண்டுமே தவிர எழுதியவன் அல்ல என்பது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை.
ஒரு தேர்ந்த வாசகன், புத்தகத்தைத் திறனாய்வு அல்லது மதிப்பீடு செய்வதான போக்கை எப்போது வளர்த்தெடுக்கப் போகிறோம்? மேற்கத்திய நாடுகளில் literary critics புத்தகவாசிப்புக்கு மிகவும் உற்றதுணையாக இருப்பதுபோல விமரிசனக்கலையை இங்கும் எப்போது உருவாக்கிக்கொள்ளப்போகிறோம்?
டிஸ்கி: ஒருவழியாக என்னுடைய லேப்டாப்பில் கிண்டில் அப்ளிகேஷனை மறுபடியும் நிறுவியாகி விட்டது. அதனால் நண்பர் திருப்பூர் ஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்.


தி.ஜா,
திரு .ராஜநாராயணன்,ஜயகாந்தன்,இன்னும் ராஜம் கிருஷ்ணன் ,அநுத்தமா
வித விதமான எழுத்துகள் .ஒவ்வொன்றும் ஒரு அனுபவம்.
அனந்தசாமியும் ருக்குவும் ,டொக்கியும்,சந்திராவும், இன்னும் அம்மாவந்தாளின் அம்மாவும், அவள் மகனும்,
அவனை வளர்க்கும் வேதபாடசாலை,காவிரிக்கரை, இந்து,அந்தப் பாட்டி.
ஒரு, கதா பாத்திரத்தை மறக்கமுடியுமா.??
நன்றி.
ஒருவன் தன்னை, தன்னுடைய மனைவி மக்களுள் கானுவதாலேயே, தன்பொருட்டே அவர்களை நேசிக்கிறான் என்கிறது அவரது உபதேசம். அதே மாதிரி, ஒரு கதையாக இருந்தால் கூட, அதில் வரும் பாத்திரங்களோடு, அந்த மொழியோடு தன்னை, தன்னுடைய அனுபவங்களை ஒன்றுபடுத்திக் கொள்ள முடியும் போது ஏற்படும் லயிப்பு, அதுவே வாசிக்கும் அனுபவமாகவும்விரிகிறது.
அன்பே ஆரமுதே புதினத்தில், நீங்கள் சொல்லும் பிரதான பாத்திரங்கள் மட்டுமே அல்ல, சினிமா நடிகனாக டாம்பீகத்தைக் காட்டிக் கொண்டு அறிமுகமாகும் அருண், அனவது மனைவி, உடல் குறைபாட்டோடு பிறந்த அவர்கள் குழந்தை, இப்படி எந்தக் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டாலும் நினைவில் தங்குகிற மாதிரி, அதே மாதிரி ஆனந்தசாமி தங்கியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரியாக வரும்கிழவி இப்படி ஒவ்வொரு பாத்திரமுமே முழுமையாகச் செதுக்கப்பட்டிருப்பதும், அவர்களில் நாம் அன்றாடம் பார்க்கும் பழகிய மனிதர்களாகவே நம் முன் உயிரோடு கொண்டுவந்து நிறுத்துகிற வல்லமையைத் தான் எழுத்து என்றுசொல்கிறேன்!i
சிறப்பான பதிவு. வாசகன் தனக்கென எல்லைகளை கொண்டிருந்தாலும் அவனது வாசிப்பனுபவம் அவன் எல்லைகளை பெரிதுபடுத்திக் கொண்டே இருக்கிறது.
படைப்பு குறித்த விமர்சனம் என்பது, நான் விரும்பிய புத்தகங்கள் மீது நான் கொண்ட கருத்தை பெரிதும் மாற்ற உதவியதில்லை. என் பார்வை வேறாகவும், விமர்சகரின் பார்வை வேறாகவும் இருக்கிறது. அவ்விமர்சகர் யாராகவிருப்பினும் ஒரு நாவல் எனக்கு தந்த வாசிப்பனுபவத்தை அவர் விமர்சனம் தந்து விடுவதில்லை. விமர்சனங்கள் வழியாக பல பார்வைகளை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கிறது என்பதால் அதுவும் தேவையானதே.
ஒரு வாசகனாக எனக்கென்று இது தான் எல்லை என்று எதையும் எல்லை கட்டி வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்ததில்லை!
விமரிசனங்களை, ஒரு புத்தகத்தைக் குறித்த அறிமுகம் என்ற அளவில் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை! தான் படித்ததை, தன்னுடைய அனுபவமாகப் பகிர்ந்துகொள்கிற நிலையில், வாசகன் தான் படித்ததை மட்டுமல்ல, தன்னையுமே ங்கே வெளிப்படுத்திக் கொள்கிற அனுபவமாக ஆகிவிடுகிறது. இங்கே ஒரு வலைப்பதிவில், எழுத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற ஒரு அனுபவத்தைப் படித்தபோது, ஏற்பட்டஉணர்வுகள் இவை!
எண்ணங்கள் மனதை பாதிக்கும் விஷயங்களால் உருவாவது.
நீங்கள் சொல்லியுள்ள எழுத்தாளர்களை நானும் படித்திருக்கிறேன். நன்றாகச்சொல்லியுள்ளீர்கள். அடுத்தவர்களுடைய விமர்சனங்களால், அல்லது அறிமுகத்தால் புதிய எழுத்துக்கள் அறிமுகமானால் சந்தோஷம். அவரவர் ரசனை அவரவர் மனதைப் பொறுத்து. எனக்குப் பிடித்தது மற்றவர்க்குப் பிடிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. படித்தவற்றை படமாகப் பார்க்கும்போது ஒன்ற முடியாது. படிக்கும்போது மனதில் உருவாகும் பிம்பங்கள், திரையில் வேறு நடிகர்கள் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது ஒத்துப் போவதில்லை. கதை படிக்காமல் பார்த்தால் ஒட்டலாம்.உணர்ந்தவைகளை உணர்வு மாறாமல் சொல்லத் தெரிந்தாலே போதும்
கொத்தமங்கலம் சுப்புவின் இரண்டு புதினங்கள் திரைப்படமாக சிவாஜி நடிப்பில், ஒன்று தில்லானா மோகனாம்பாள், இன்னொன்று ராவ் பகதூர் சிங்காரம் விளையாட்டுப் பிள்ளை என்ற பெயரில் வந்தன. திரைக்கதை கதையின் மைய நீரோட்டத்தை விட்டு விலகியிருந்தது கதையைப் படித்துப் பார்த்தால் தான் புரிந்துகொள்ள முடியும்.
கதையில் மைய நீரோட்டம், திரைக்கதையில் எந்த அளவுக்கு விகாரப் படுத்தப் பட முடியும் என்பதற்கு இந்த இரண்டு படங்களே போதும்.
அதே மாதிரி, மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில், துப்பறியும் சாம்பு கதையில் இருந்து சில பகுதிகளை எடுத்து நாகேஷை வைத்துத் தனியாகக் காமெடி ட்ராக் பண்ணியிருந்ததற்கும், நாவலைப் படிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருந்தது என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
தொலைக் காட்சியில், ஒய் ஜி மகேந்திரா துப்பறியும் சாம்புவாக வந்ததுமே கூட அவ்வளவாக எடுபடவில்லை என்பதையும் இந்த நேரத்தில் சொல்லத்தோன்றுகிறது.
இது கதையைப் படித்திருந்த என்னுடைய கருத்து மட்டுமில்லை! இந்தக் கதைகளைப் படிக்காதவர்களே கூட சொன்னதும் கூட!