Showing posts with label ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன். Show all posts
Showing posts with label ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன். Show all posts

Friday, October 19, 2012

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனும் பின்னே ஸென்னும் கீபோர்டு எலியும்

கொஞ்சம் பிறவேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டதில் இந்தப் பக்கங்களில் எழுதுவதே அனேகமாக மறந்து போய்விட்டது! புதிய விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்த முனைப்பில், வழக்கமாக வாசித்துக் கொண்டிருந்த சில இழைகள் படிக்கும் வரிசையில் பின்னுக்குப்போயின. நல்லவேளை, வெறும் எட்டு-பத்து நாட்களுக்குள்ளானவைதான்!வாசிப்பதை எட்டிப் பிடித்து விடலாம் என்று திறந்தபோது, ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் இந்த இழை கொஞ்சம் கட்டிப் போட்டு விட்டது.

படியுங்களேன்! நீங்களும் கட்டுப் படுகிறீர்களா, அல்லது........!!
.



ஸான் மோட்ஸு மிகவும் கண்டிப்பானவர்.

யார் எந்த விதத்தில் தங்கள் இஷ்டத்துக்குக் கத்தினாலும் அதை ஒருநாளும் சூ சூ என்று தலையிட்டு அடக்கமாட்டார். காரணம் தெரியாமலேயே பலர் தாமாக அடங்குவர்.

பல கிராமங்களிலிருந்து வந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து பயிற்சி எடுப்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.

புதுவிதமான சண்டைப் பயிற்சிகள். அதற்கு ஏற்றாற்போல் புதுவித அடிவயிற்று ஒலிகள்.

பெரிய யந்திரத்திற்குள்ளே வித வித கோணங்களில் ப்ளெடுகள் திரும்பி திரும்பிச் சுழல்வதைப் போல் சீடர்கள் கைகளை விதவிதமான கோணங்களில் கரணை மட்டை போல் ஆக்கித் திருப்புவதைப் பார்க்கும் போது கடலில் பெரிய மீன்கள் சுழன்று அடிப்பது போல் இருக்கும்.

ஆனால் இவ்வளவு ரகளையிலும் மோட்ஸு தூங்குபவர் போல் அமர்ந்திருப்பார்.

சரி கிழம் தூங்கிடிச்சு என்று முன் வரிசை மூன்றைக் கடந்த நாலாவது வரிசையில் ஒருவர் அசிரத்தையாக முதுகைச் சொரிந்தாலும் போதும் அந்தச் சீடரின் பெயர் உச்சத்தாயியில் அவரிடமிருந்து வரும்.

தலையைக் குனிந்தபடி இருக்கும் கிழம் எப்படிக் கண்டுபிடிக்கிறது?

சீடர்கள் தூக்கத்தில் கூட களரிக் கூக்குரல்களைக் கத்த ஆரம்பித்து விட்டனர்.

ஒரு நாள் பின் ஜாமத்தில் மோட்ஸு நட்ந்தார். அப்பொழுது இளம் மாணிகள் தங்கி இருந்த கூடத்திலிருந்து பயிற்சி ஓலங்கள் கனவில் வாய்குளறி வந்து கொண்டிருந்தது.

மோட்ஸுவிற்கு கவலை. மாணிகளுக்கு மௌனம் என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விடுமோ!

மறுநாள் ஒரு வினோத பயிற்சியை ஆரம்பித்தார்.

யாரும் எதுவும் செய்யக் கூடாது; பேசக் கூடாது.

மௌனம் அதைப் பழக வேண்டும்.

அண்டை அயல் கிராமங்களில் இருந்த பழைய ஸென் முதியவர்களுக்கு அது வேடிக்கையாய் இருந்தது.

மௌனத்திற்குப் பயிற்சியா?

முதல் நாள் பயிற்சி முடிந்தது. மறுநாளும்.

பிறகு அவர்களைக் கூப்பிட்டு மௌனம் கடைபிடித்த காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? என்றார்.

பொய் தேவையே இல்லை என்ற சூழ்நிலையை வைத்திருந்தார் ஆகையாலே மாணிகள் தயங்காமல் கூறினார்கள்.

“மற்ற மாணிகள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த முதல் வரிசையில் இருக்கும் மூன்றாவது மாணி என்னை அன்று எப்படித் திட்டினான்; அதற்கு அவனை மலையிலிருந்து உருட்டிவிடுவதுதான் வழி. ஒரு நாள் அப்படிச் செய்தால்....இவ்வாறுதான் எண்ணம் இட்டுக் கொண்டிருந்தேன்” என்றான் ஒரு மாணி.

இப்படி ஒவ்வொருவரும் சொல்லுவது மொத்தத்தில் அடுத்தவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதிலும், அடுத்தவர் சொன்னதை மனத்தில் போட்டு சினம் வளர்த்து கறுவுவதிலுமாக இருந்தது.

“நீங்கள் மௌனமாக இருக்கச் சொன்னால் முன்னிலும் அதிகமாக சத்தம், இரைச்சல் என்று அவதிப்பட்டிருக்கிறீர்கள்.

புரிகிறதா?....” என்றார்.

ஆம் ஐயனே!

“நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உணர்ந்து திருத்திக்கொண்டு முன்னேறும் வழிகளைப் பார்க்காமல்...அடுத்தவரைப் பற்றி எண்ணியும், கறுவியுமே உங்கள் தியானம் கழிந்திருக்கிறது.”

தலையைக் கவிழ்ந்து அமர்ந்திருந்தனர் சீடர்கள்.

”சரி. நாளை ஒரு நாள் அவகாசம் தருகிறேன். முழு மௌனம். நல்லபடியாகப் பயன் கொள்க” என்று சொல்லிப் போகவிட்டார்.

நாளை மறுநாள் கூப்பிட்டுக் கேட்டார்.

“மௌன காலத்தில் என்ன சிந்தனை?” என்று.

சீடர்கள் உற்சாகமாக இருந்தனர்.

அநேகமாக அனைவரும் மோட்ஸுவினுடைய உபதேசத்தை நினைத்துக் கொண்டிருந்ததாகவும், மௌனம் எவ்வளவு முக்கியம் என்று மோட்ஸு கூறியதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்ததாகவும், மோட்ஸு எப்படி மௌனத்தில் இருப்பார் என்று கற்பனை பண்ணிக் கொண்டிருந்ததாகவும் -- இப்படித்தான் மாறி மாறி கூறினார்கள்.

ஒரு சிலர் தாங்கள் பக்கத்து கிராமங்களில் பழைய கிழங்கள் மௌன பயிற்சியைக் கிண்டல் அடித்ததை நினைத்துக் கொண்டதாய்க் கூறினர்.

மோட்ஸு கவலை தோய்ந்த குரலுடன் கூறலானார்,

“பார்த்தீர்களா! மௌனம் என்பது இப்பொழுதும் உங்களுக்கு எட்டவில்லை. அதைபற்றி நான் செய்த உபதேசமும், நானும்தான் உங்கள் சிந்தனையில் இருந்திருக்கிறது. கிராமத்து ஏச்சுகள் இருந்திருக்கின்றன. ஆனால் மௌனத்தில் இருக்க வேண்டியது இல்லை.”

ஒரே ஒரு சீடன் மட்டும் தயங்கிக் கொண்டு சொன்னான், தன் மௌனத்தில் தான் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததாக.

சிறிது முகம் மலர மோட்ஸு அவனைப் பார்த்தார்.

அவன் மேலும் சொன்னான், “ஆம் மௌன காலத்தில் நான் என்னைப் பற்றியே சிந்தித்தேன். எதிர்காலத்தில் நான் மோட்ஸுவின் இடத்தில் அமர்ந்ததும் சீடர்களுக்கு என்ன பயிற்சி அளிக்கலாம், மௌனப் பயிற்சியையே ஏதாவது மலை குகைகளில் ஏற்பாடு செய்யலாம் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டிருந்தேன்” என்றான்.

மோட்ஸு முக மலர்ச்சி எல்லாம் மறைந்து ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.

சிறுவயதில் அவர் குரு கூறியது ஞாபகத்திற்கு வந்தது -- “கிடைத்தற்கரியது மௌனம். மனத்திலும் பிறரைக் கொண்டு சத்தம் செய்தே வாழ்பவன் பரிதாபத்திற்கு உரியவன்” 

ஒரு கூகிள் குழுமத்தில் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதியது. அவருக்கு நன்றியுடன்!

*****


இன்று மாலை மனிதர் பேசுகையில் ஒரு கட்டளை போட்டார்.மீற முடியவில்லை, ஆனால், எனக்கோ வேறு விதமான சூழ்நிலை! இருக்குமிடமே வைகுந்தம், கைகூப்பித் தொழும் திசையே ஸ்ரீரங்கம் என்ற மாதிரி, நவராத்ரிப் பொழுதில் தக்ஷிணேஸ்வரியை , இங்கிருந்தே கைகூப்பி நமஸ்கரிக்கிறேன். சரணடைகிறேன்.


வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே



Tuesday, June 21, 2011

இது கவிதை நேரம்!

'மோகனத்தமிழ்' அரங்கனும், மின்தமிழ் கண்ணனும்!


கவிதைக்கு வழிசொல்லி
ஆற்றுப் படுத்துகின்ற
கவியாற்றுப் படையீதாம். ஆற்றுப்படையென்னும்
இலக்கணத்திற் கொத்ததுதான்..
என்றாலும்...
அள்ளித்தரும் கைநிறைவோ
உள்ளிப் பெரும் பொருள்நிறைவோ
கள்ளம் அவிழக் காலம் கனிவதற்கே
மெள்ளக் குமுறும் மனக்குறையோ
விள்ளற் கரிதாம் விடம்பனமோ
தள்ளற்கரிதாம் என உரைப்பேன்
தளர்விலராய்க் கேட்டல் கடன்.
*
*----* ஐயா! கவிராயா! சந்தையொன்று நடக்கிறதாம்
எங்கென்று அறிவீரா?
எனக்கும்வழி சொல்வீரா?
*----*ஆஹா அதற்கென்ன! ஊருக்கு நடுவே
ஒதுக்கு மைதானத்தில்
உள்ளே சென்றக்கால் ஒரு சந்தை நடக்கிறது.
அதுவா நீர் கேட்கின்றீர்?
*----*அதுதான் நினைக்கின்றேன்.
கவிகூடும் சந்தையென்றார்
*---- *ஆமாமாம் அங்குதான் நடக்கிறது.
விற்பதற்கோ வாங்குதற்கோ
எற்றுக்கு நீர் செல்வீர்?
கற்றவித்தை காட்டிக்
கரகாட்டம் ஆடுதற்கே
கூட்டத்தின் நடுவே
கோணமேடை தானுமுண்டு.
*---- *சரக்கெடுக்கச் செல்கின்றேன்
அட்டிகையாய்ப் பணப்பட்டை
அணாக்கயிறு சுற்றிவந்தேன்
படிந்ததென்றால் பேரம்தான்
என்ன சொல்வீர்?
*---- *பணமெதற்கு?
பா தொடுத்த பொருள் எல்லாம்
பண்ட மாற்று முறைதானே
புழக்கத்தில் ஆதிமுதல்
கவிதையுள்ளம் கையிருப்பு
கவிதை உங்கள் சரக்கெடுப்பு
கையிருப்பு இல்லையெனில்
சரக்கெதுவும் பேராது.
கடன் சொல்லி வாங்கிவர
கண்டு கொள்வார் யாருமில்லை.
கவியுள்ளம் இருந்ததென்றால்
சந்தைக்குப் போயிடுவீர்
இல்லையெனில் வந்தவழி
இங்கிருந்தே திரும்பிடுவீர்
பண்டம் கவியுள்ளம்
மாற்றிக்கொள் வியாபாரம்
அக்கா அத்திம்பேர்
அப்பன் மகன் சம்சாரம்
ஆத்தாள் அத்தை தங்கை
அருமைமகள் அடுத்தாத்துப்
பழக்கம்தான் என்றகதை
பம்மாத்து செல்லாது
சந்தைக் கெடுபிடியில்
சரக்கிருந்தால் சரக்கு
சரக்கோ கவியுள்ளம்
சரக்கின்றிச் சென்றீரேல்
கவிதையிலே சிந்துகிற
சக்கை சருகு குப்பை
சுற்றிவந்த காகிதம்
பொக்கைப் புழுதிப்
பொதிந்து வைத்த மரத்தூளாய்
சமுதாயச் சீர்திருத்தம்
சன்மார்க்க உபதேசம்
சமாதிநிலை சாகஸங்கள்
சித்தாந்த சிலம்பங்கள்
காமாதி உலாமடல்
கண்டதுண்டமாக வெட்டி
கூறுகெட்ட வேகத்தில்
கொள்ளைவண்டி ஓட்டுநர்க்காய்
நெடுஞ்சாலை ஓரத்தில்
நாயொதுங்கும் வாசத்தில்
கொத்துபரோட்டா
குமட்டெண்ணை துணுக்குவரி
ஏப்பம்போல் அப்போதைக்கு
இரைச்சலிடும் சொல்ஜிகினா
தாழ்ப்பாள் விவகாரம்
தப்படிக்கு அச்சாரம்
குத்தாலக் குழியெண்ணை
பிடித்துவிடும் பேச்சாரம்
ஹேர்கட்டிங் சலூன்சரக்காய்
அள்ளாது குவிந்திட்ட
அற்புத முடிச்சரக்கு
செல்லும் வழியெல்லாம்
சிந்திக்கிடக்குமங்கே
செலவின்றி அவற்றினிலே
ஏதேனும் அள்ளிவரலாம்
அள்ளிவந்தே
ஊரெங்கும் சுற்றி
உள்ளத்தில் ஒதுக்குப் புறமாகக்
கழிமனக் குளமேட்டில்
கழிப்பறை அகம் எதிராய்க்
குந்தி விரித்திட்டுக் கடைபரப்பிக்
கோணியிலே கட்டிவந்த
குப்பையெலாம் விற்றிடலாம்
கோணல் பெருமக்கள்
உளக் கூனல் புன்மதியார்
ஓட்டை மனத்தோடும்
உளுத்தச் சொல்லோடும்
கேட்டுவந்த பேரத்தில்
கிடைத்தவரை கொள்ளைதான்
ஆகமொத்தம் கவிராயா!
சரக்கிருந்தால் சந்தைக்குச் சென்றிடுக
சரக்கோ கவியுள்ளம்
பண்டமாற்று வியாபாரம்.

இப்படிப் பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்ததால், பலருக்கும் வயிறு எரியத்தானே செய்யும்!


இப்படிப் பலரது வயிற்று எரிச்சலைக் கட்டிக் கொண்ட இந்தக் கவிதை 2001 வாக்கில் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்கிறார், ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்! இந்தக் கவிதைக்கு அவரே சொந்தக்காரர்! தமிழினி வெளியீடாக, அவருடைய கவிதைத் தொகுப்பு உணர்வின் உயிர்ப்பு என்ற தலைப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியானது. அப்புறம் தேர்ந்தெடுத்த 100 அயல்மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பாக காற்றுகளின் குரல் என்ற தலைப்பில் தமிழினி வெளியீடாக, 2008 ஆம் ஆண்டு வெளிவந்தது.

இன்னும் கொஞ்சம் ருசி பார்க்க வேண்டுமென்றால், தமிழ்வாசல் கூகிள் குழுமத்தில் இங்கே பார்க்கலாம்!



சண்டேன்னா மூணு! படித்ததும் பிடித்ததும்!ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்!

அங்கேயும் கொஞ்சம் பார்க்கலாமே!

அரங்கனுடைய ஹிந்துமதம் ஒரு அறிமுகத் தெளிவு தொடர் பற்றிய அறிவிப்பு, சில நாட்களாகவே இந்தப்பக்கங்களில் இருக்கிறதே, படித்தீர்களா? படித்த பிறகு, அதைக் குறித்த உங்களுடைய கருத்து என்ன என்பதைக் கொஞ்சம் பகிர்ந்துகொள்ள முடியுமா?



 

Thursday, May 26, 2011

கவிதை நேரம்! ஸ்ரீரங்கம் மோகனரங்கன்!


நேற்றிரவு, ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனிடமிருந்து, சேட்டில் ஒரு மொழி பெயர்ப்புக் கவிதை வந்தது. ஒரு குழுமத்தில் நடந்த அக்கப்போர் பிடிக்காமல், நேற்று முற்பகலில் தான் அந்தக் குழுமத்தை விட்டு வெளியேறி ஒதுங்கி இருந்தேன். இந்தக் கவிதையை முதலில் படித்த போது, எனக்குள்ளே நானே இரு பகுதியாகப் பிரிந்து, அந்த சிறு பறவையாகவும், அதை விரட்டுகிறவனாகவும், அப்புறம் அதை நினைத்துப் பார்ப்பவனாகவும், கடைசியில், "உன் திருவுள்ளப்படியே நடந்தேறட்டும் என்னுடைய ஆசைப்படி அல்ல" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய பிரார்த்தனையை செய்கிறவனாகவும் கொஞ்சம் அனுபவித்துப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது.

ஆனால், இதை எழுதிய ஆங்கிலக்கவிஞன் அப்படி நினைத்து எழுதவில்லை என்பது நிச்சயம்!

இந்தக் கவிதை மொழிபெயர்ப்புக்காக ஸ்ரீரங்கம் மோகனரங்கனுக்கும், இதை வெளியிட்டிருக்கும் தமிழ்வாசல் கூகிள்வலைக் குழுமத்திற்கும்  நன்றி!

Whittier என்ற கவிஞர் எழுதிய The Common Question என்ற கவிதையின் தமிழாக்கம்:

மாலையில் எங்கள் உணவறையில்

மங்கிய நிறத்தில் ஒரு பறவை
கூடியுண்டபின் கிளம்பியது
வட்டமிட்டொரு வாகினிலே
வளைந்த கூரலகைத்
தேய்த்துக்கொண்டே.  


சிறகுகளசைத்துச் செவ்வாலாட்டி
சிரத்தை ஒருபுறம் ஒருக்களித்தே
சில்லெனும் குரலில் பொறுமையற்றே
கேட்டது,

"சின்னப்பயலுக் கென்னவேண்டும்?

பதில்சொன்னேன், உதை! சிறு புள்ளே!
புதை உன் தலையை சிறகுக்கிடையே
துயில்வதி! போஎன சொன்னாலும் *
மறுபடி மறுபடி கேட்டது
முதலில் கேட்ட அதையேதான்.
புன்சிரிப்பில் நான் எனக்குரைத்தேன்:
மனிதரும் பறவையும் ஒன்றுதானோ!
அது சொன்னதைத்தானே
நாம் சொல்கின்றோம்.
செயலிலோ அல்லது சொற்களிலோ

சாட்டைப் பம்பரம் பறையுடன் சிறுவரும்
தாண்டுகயிறு பாவையுடன் சிறுமியரும்
நிலங்களும் வீடும் கொண்டே மனிதரும்
கேட்கும் ஏழமைக் கேள்வியும் அதுதானே!

போட்டுப் பிதுங்கி வெளியில்வந்தாலும்
பைக்குள் எதையோ திணிக்கின்றோம்;
வீசும்வலையும் நிரம்பிவிட்டாலும்
வராத மீனுக்கும் ஏங்குகிறோம்  



வானம் திறந்து கொட்டித் தந்தாலும்
வரையற்ற ஆசை விட்டுவிடாது
தான் என்ற ஆசைப் பூத யந்திரத்தில்
தளராமல் பிரார்த்தனை மாவரைக்கும்.



அருள்மிகும் கடவுள்
அனைத்தையும் கேட்டே
ஐயோ பாவம் என்றுரைப்பார்
நம் தேவைகள் அனைத்தும் அவர் அறிவார்;
கண்ணை மூடி நாம் கேட்பதையே 
தருவதும் மறுப்பதும் அவர் அருளே. 



எனவே நானும் சமயத்தில் நினைப்பதுண்டு;
நம் பிரார்த்தனை அனைத்தையும் ஒன்றாக்கி
கூட்டில் வீட்டில் குலவுமிடத்தில் கோயிலினில்
கேட்பது ஒன்றே,  


உன் சித்தம் போலே நடக்கட்டும்.”  


--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்



 

Friday, February 25, 2011

சப்த வசுக்கள்..! ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் சிறுகதை



"மொத மொதல்ல ஒரு தலைச்சன் பொறந்துது. எண்ணி ஏழே நாள்தான் இருந்துது. ...ப்ச்...அப்பறம்...பாவம்...'

அம்மாவின் இந்த வார்த்தையில் பழகித்தான் வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள் போயிருக்கின்றன அவனுக்கு.

தங்களுக்கெல்லாம் முந்தி வந்து மூவிரு நாள் இருந்து சென்று விட்ட அந்த ஜீவன் இன்று எங்கு இருக்கும்?

ஒரு வேளை தங்களிலேயே யாராகவேனும் கூடப் பிறந்திருக்குமோ? ஒரு தடவை எல்லாரையும் கூர்ந்து கவனித்தான். தன்னையும் எதேச்சையாகக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். ஏதோ அப்படி இருந்தாலும் ‘இதோ’ என்று தெரிந்துவிட சாத்தியம் ஏதோ அங்கு இருக்கும் பாவனை.

இருப்பாரைக் கவனி. இல்லாதாரைப் பற்றி என்ன யோசனை?

அவன் குடும்பத்திலேயே பலமுறை அவனுக்கு சொல்லப் பட்டதுண்டு. ஆனாலும் அந்தத் தலைச்சன்.........?

சிறு வயதில் பாச்சுவாத்தில் அவனுக்குத் தங்கை பிறந்திருக்கிறது என்று செய்தி. பாச்சு ஏதோ முக்கியத் தகவல் இவனுக்கு மட்டும் முதல் தகவல் கொடுக்கும் வேகத்தில் வந்து சொல்லிய பின் மூன்று நாள் கழித்து அவர்கள் வீட்டில் ஏதோ தூளி போல் கட்டிப் புறப்பட்டார்கள்.

இவனும் பாச்சுவோடு சேர்ந்து துக்கம் காத்திருக்கிறான்.

ஒரு தடவை, இரண்டு தடவை பொறுத்துப் பார்த்தாள் அம்மா.

"என்னடா இது சும்மா அதைப் பத்தியே பேசிண்டு? வேலையைக் கவனி. அவாளெல்லாம் பெருமாள்ட்ட  சௌக்கியமா போய்ச் சேர்ந்திருப்பா. .."

"இருக்கறவாதான் ஐயோ பாவம்.... போனவா புண்ணியம் செஞ்சவா. அதுவும் பொறந்து கண்ணு முழிக்காம போயிட்றது எல்லாம் கொடுத்துவச்சதுகள்.... என்னமோ அதையே பெனாத்திண்ட்ருக்க..? படிக்கற வேலையைப் பாரு."

அவன் பேசுவதைக் கேட்க அப்பாவுக்குப் பிடிக்கும். சந்திர கதி சூர்ய கதி என்று ஒருவாறு அதன் பயணகதியை ஃபிக்ஸ் பண்ண முயல்வார்.

அதற்குள் அம்மா, ‘போய் கறிகா இல்லை. வாங்கிண்டு வாங்கோ’ என்று துரத்திவிடுவாள்.

ஆனாலும் அந்தத் தலைச்சன் அங்கு எங்கோதான் சுற்றிக் கொண்டு இருக்கும்.

மாலை நேரம். வெளியில் விளையாடி விட்டு வந்து கைகால் அலம்பிக் கொண்டு வீட்டுப் பாடம் படிக்க உட்காரும் வேளையில் அம்மாவுக்குக் கொஞ்சம் ஓய்வு. பழைய நினைவுகள் ஏதேனும் எழுந்துகொள்ளும். அந்த நினைவுகளைக் கொஞ்சம் எடுத்துத் தூசி தட்டி வைக்கும் போது அங்கு எங்கோ இடுக்கில் இந்தத் தலைச்சன் உட்கார்ந்திருக்கும். கொஞ்ச நேரம் அதை லாலனை பண்ணுவாள்.

அவன் பாடத்தை நிறுத்திவிட்டு உற்றுக் கேட்கிறான் என்றதும் பேச்சை மாற்றி விடுவாள்.

எதிர்த்த வீடு கரைவழிச் சோழியர்கள் வீடு. அவர்களாத்து டேச்சு கதை கதையாய்ச் சொல்வான். எந்த மரித்த ஜீவன் தங்காத்தில் பின் எந்த ஜீவனாக வந்து பிறந்தது என்று துல்லியமான விவரம் காட்ட அவனால் முடியும். தயவு அவன் கிராமத்துத் தாத்தா ஒருவர்.

ஏன் ஒரு ஜன்மத்தில் எங்கோ பொறையில் ஒளித்து வைத்துப் போன காதுக் கம்மலை அடுத்த பேத்தியாகப் பிறந்து நினைவாக இங்க இருக்குன்னு எடுத்துத் தந்ததாக டேச்சு சொல்வதைக் கேட்டால்தான் நம்பமுடியும்.

இருந்தாலும் அவர்கள் மீட்டில் மூன்றாவது குழந்தை, நாலு வயசு, அழகான பெண் குழந்தை, அதன் சிரிப்பு என்பது சர்வ ஆகர்ஷணம். காரணம் என்ன என்று தெரியவில்லை. இப்படித்தான் கேள்விக் குறியாகிப் போனது. நேர்த்திக்கடன் பாக்கி. அதுக்குத்தான் வசூல் என்று அப்பொழுதும் டேச்சு ஃபைலைக் க்ளோஸ் பண்ணிவிட்டான்.

ஒரு நாள் டேச்சு, இவன், கண்ணாமணி, விச்சு எல்லாரும் சேர்ந்து இரவு 8 மணி வரையில் துளசிங்கத்தாத்துத் திண்ணையில் இருட்டுப் புறை ஒட்டுத் திண்ணையில் சீரியஸான டிஸ்கஷன்.ஆவி இருக்கா இல்லையா?

வழக்கம் போல் டேச்சுதான் ஆவிக்குக் குலம் கோத்திரம், சயனம் சஞ்சாரம் எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டான். ஒரு நாள் காலை 2 மணிக்குத் தெரு வழியாகவே ஓர் ஆவி போனதையும், அது இவன் முழித்திருக்கிறான் என்று உணர்ந்து இவாத்துக் குறட்டை உற்றுப் பார்த்து முழித்ததாகவும், உடனே டேச்சு சம்யோசிதமாகக் குறட்டை விடும் சப்தத்தை அபிநயிக்கவே அது சரிதான் என்று சாந்தமாகி டேச்சுவாத்து லைட் கம்பம் வழியாகப் பிடித்துக் கொள்ளாமலேயே ஏறி மாடிப் பக்கம் எங்கோ போய் விட்டதாகவும் கூறினான்.

"இவன் வுட்டா ரீலு உடுவாண்டா இவன்" என்று கண்ணாமணி கடுப்பாகிக் கத்தியதற்கு, டேச்சு முனீஸ்வரன் மேலயே சத்யம் செய்து விட்டான். அதற்கப்புறம்தான் ஆவி என்பது மறுக்க முடியாத உண்மை கிவிட்டது இவனுக்கு.

விச்சுவுக்கு ஏன் திடீரென்று தோன்றியதோ, கட்டைக் குரலில், "ஏய்! நாம சுடுகாட்டில சத்தம் போடாம ஒரு மந்திரம் சொல்றேன் அதைச் சொல்லிண்டே போய் நின்னா நிச்சயம் இதெல்லாம் அங்கதாண்டா வரும். அப்ப பார்த்துடலாம். ஆனா இந்த டேச்சுவைக் கூட்டிக்கிட்டுப் போகக் கூடாதுடா. சமயம் பார்த்து டமார்க் குசுவை விட்டான்னா அவ்வளவுதான் அதெல்லாம் கடுப்பாயிடும். துரத்த ஆரம்பிச்சுடும் அப்பறம்....."

டேச்சு உத்தரவாதம் தந்ததன் பேரில் உளவுப்படை மறுநாளே புறப்பட்டுப் போய்ப் பதுங்கிப் பதுங்கிச் சுடுகாட்டை அடைந்தது.

கொஞ்சம் முன்னாடியே வந்து விட்டதாக அலுத்துக் கொண்டான் டேச்சு. இரவு 11.45 மணி இருக்கும்.

இவனுக்கு அந்தத் தலைச்சன் அங்குதான் எங்காவது தென்படும் என்ற நிச்சயம் அதிகப்பட்டது.

டேச்சுவுக்கு முழிகள் முகத்தைவிட்டுத் தனியே வந்துவிட்டன என்பது போலத்தான். உளவுத்துறைக்கு வெளிப்படையாகவே உதறல். எல்லாம் டேச்சுவால் என்று பொதுப் பழி.

‘நான் என்னடா பண்ணட்டும். விச்சுதாண்டா சொன்னான்’ என்று தொண்டையோடு தொண்டையாக ரகசியமாக அரைத்தான். ஆவிகளின் காதில் விழுந்திருக்காது.

ஒண்ணரை, இரண்டு மணி இருக்கும் மண்டபத்தை ஒட்டிய இருட்டுத் திட்டு திடீரென எழுந்துகொண்டது. எவ்வளவு கைகள் என்று நிச்சயமாகத் தெரியவில்லை. அப்படியும் இப்படியும் நகர்வு.

ஐயய்யோ...! இந்தக் கூட்டம் இருப்பது பார்த்துவிட்டதா? இந்தப் பக்கம் நோக்கியே வருகிறது.

கண்ணாமணிக்கு அடக்க முடியவில்லை. வாய் தந்தி!! 'முதலில் வாங்கடா' என்று ஓட ஆரம்பித்தவன். கூட்டமே அவன் பின்னால் மந்திரித்து விட்டால் போல்.

‘ஏய் இங்க என்னடா இம்மா நேரத்துல பண்றீகளூ?’ என்று அது கேட்கிறது. இவனுக்கு அந்தக் குரல் ஆரடிக் குரல் போல் இருக்கிறது.

‘ஆரடி?’ ஆரடி?’ என்று ஒரு பைத்தியம். பாவம் வாழ்ந்து பின் கெட்டு, துரத்தப்பட்டு, ஜீவனம் பிடுங்கப்பட்டு, நிம்மதியாகத் தூங்க சுடுகாடு புகலிடம்.

ஒரு வேளை இதனிடமே கேட்கலாமோ அந்தத் தலைச்சன் பற்றி........ 

'ஏய் சீக்கிரம் வாடா..... '

மற்ற எல்லாரும் பக்குவமாகப் போய் செட்டில் ஆகி விட்டார்கள். இவன் தான் கொஞ்சம் கவனப் பிசகில் சத்தம் வர, ஏய் யாரது? என்பதைத் தொடர்ந்து லைட்டுகள் போடப்பட்டு, இவன் என்னமோ நிதானமாக விளக்குபவன் போல் ‘நான் தான் கதவைத் திறந்துண்டு வந்தேன்’ என்று சொல்ல, பிறகு பெரிய இன்வெஸ்டிகேஷன், எதிர்வீட்டு மாமா, வீட்டில் உள்ளவர்கள், வாசலில் ஒண்ணுக்குப் பெய்ய வந்த கிழவர் -- ஐம்பேர் ஆயம், எண்மர் குழுவாக ஆகி, தெருச் சட்ட சபை ஆக இருந்தது. 

நல்ல வேளை. யாருடைய குரலோ ‘எல்லாம் நாளை காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற தீர்ப்பில் கலைந்து போனது.

மறுநாள் இவனின் தகப்பனாரும், தாயும் துயரக் காட்சியாய் அழாக் குறையாகக் கேட்டார்கள். டேச்சு, கண்ணாமணி இன்னும் மற்றவர்களின் வீட்டுப் பெரியவர்களும் இவன் வீடு தேடி வந்து விட்டனர்.


‘இந்தப் பசங்க போக்கே ஒன்னும் சரியில்லை’

"என்ன சார்! ராத்திரி எழுந்து சுடுகாட்டுக்குப் போயிருக்கானுக...."

"என்னடா என்ன குறை வைச்சோம் உங்களுக்கு..."

"வந்து பொறந்துருக்கு பார் போன ஜன்ம கர்மம்!?".

"ஏண்டா நீயாவது இவாளுக்குச் சொல்லக் கூடாதோ? நீயும் சேர்ந்து போனியா?"

"என்ன அம்மக்கள்ளனாட்டம் உம்முனு இருக்காத. சொல்லு".

"இல்ல.... அந்தத் தலைச்சன் அங்க இருக்குமான்னு பார்க்கப் போனேன்...."

"அதான் அதான்! இவனுக்கு அதே பல்லவிதான்!. என்ன கர்மாந்திரமோ.....பெத்தவ நானே மறந்துட்டு ஒக்காந்திருக்கேன். உனக்கு என்னடா வழுச நாயி...தலைச்சன்.....மண்ணாங்கட்டின்னு. எங்க பாவத்தைக் கொட்டிக்கறதுக்குன்னே வந்து தொலைச்சிருக்கியா? "

"அது பாருங்கோ....சுடுகாட்டுக்குப் போயிட்டு வந்துருக்கா,,,பசங்க...ஏதாவது சாங்கியம் பண்ணிடுங்கோ .....ஏன் சொல்றேன்னா..... "

ஓய் சும்மா இதான் சாக்குன்னு ஏதாவது கதை பண்ணாதீர் சாங்கியம் அது இதுன்னு...வேலையைப் பாரும்.... நீர் ராத்திரி ஆச்சுன்னா அப்பப்ப அங்க சுடுகாட்டுப் பக்கம் தானே ரகசியமாப் போயிட்டு வரீர். உமக்கு என்ன சாங்கியம் பண்து.............?

"சூ ....பேசாம....எதாவது கிண்டியாய நமன்னு சொல்லிவுட்றீரே..... "

எந்தச் சம்பவமும் போன்றே சுடுகாட்டுச் சம்பவமும் சூடு தணிந்து அன்றைய பொழுது மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தது.

மாலையில் தெருமுக்கில் கதாகாலட்சேபம் ஆரம்பம். இவனையும் கூட்டிக் கொண்டு இவன் தந்தை அங்கு போகும் சமயத்தில் சந்தனு கங்கை கெட்டம். அஷ்ட வசுக்கள். சாபத்தால் பிறந்து, உடனே அவளால் கொல்லப் பட்டு, எட்டாவது மிஞ்சியது.

மிஞ்சின வசு பீஷ்மர்.........

இவனுக்கு மீண்டும் தலைச்சன் பிரச்சனை.

ஆம் அந்தத் தலைச்சன்கள் ஏழு பேர் என்ன ஆனார்கள்? அந்த எட்டாவது பீஷ்மனுக்கு இந்தக் கேள்வி எழுந்திருந்திருக்குமா?

இப்படி அங்கங்கே பிறந்து உடனே பதிவு இல்லாமலேயே இறந்து மறையும் இந்த மாதிரியான ஸப்த வசுக்கள் என்ன ஆகின்றார்கள்?
தலைச்சனும் ஸப்த வசுக்களாய் ஆகியிருக்குமோ?

கதையிலிருந்து திரும்பி வரும் போது ஆரடிப் பைத்தியம் கத்திக் கொண்டு இருந்தது கந்தன் கடையின் பக்கம்....


"அந்தக் கெட்ட பசங்களோட சேராத...."

******
சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதை குறித்து ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஒரு அற்புதமான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். சில நுணுக்கமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார். 

இந்தச்சிறுகதையில் நீங்கள் புரிந்து கொள்வதென்ன என்பதைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன், கேட்கலாம்!



Friday, February 18, 2011

நீ.....! ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் சிறுகதை!

நீ.....

ன்று காலையிலிருந்தே தான் ஆகிய ஜெனி ஏதோ எங்கோ மறந்து வைத்துவிட்டவளைப் போல்தான் பொருந்தாமல் இருக்கிறாள்.


கைவிரல் நகங்கள் கச்சிதமாகக் கடிக்கப்பட்டுவிட்டன. முன்னத்தி மயிர்ச்சுருள் இறுக்கி, நெகிழ்த்தி, இறுக்கிப் பல ஆவ்ருத்தி ஆகிவிட்டது.

பிரபாகரன் அவளுக்குக் காலையில் காப்பிப் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தவனைப் பார்த்து, “நீ...” என்றவள்தான் பிறகு ஒன்றும் பேசவில்லை.  பிரபாகரன் நயமறியும் ஜீவன். ஏதோ எண்ண ஓட்டம் என்று எடுத்துக்கொண்டு அவள் செய்யும் வழக்கமான வேலையை எல்லாம் தானே முடித்துவிட்டான். தெரியும் அவனுக்கு. அவளை இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வேலை செய்யத் தொணப்பினால் பல குளறுபடிகள் நடக்கும்.

வன் சுறு சுறுவென்று வேலை செய்வதை நெட்டுக்குத்தினால் போல் பார்த்துக்கொண்டிருந்தாள் என்றும் சொல்லலாம். ஏதும் அவள் அறியாள் என்பதும் உண்மை. ஆனால் அவன் தடுமாடும் போது தன்னிச்சையாக அவள் வாயும் பழக்கமும் சில உதவிக் குறிப்புகள் கொடுப்பதை வைத்து அவள் மனத்தில் பதிந்திருக்கும் இதெல்லாம் என்பது சொல்ல முடியாது.

பிரபாகரனுக்குப் புதிதில்லை. ஆயினும் அவனுக்கு இது புரிபடவில்லை.
பெரிய அக்கா ஒரு சமயம் அலுத்துக்கொண்ட போதும் அவனிடமிருந்து எந்த உடன்பாட்டுப் பதிலும் இல்லை --- ‘இதுக்குத்தான் வீட்டுல பெரியவா பார்த்துப் பண்ணி வைக்கணும்ங்கறது’

ந்தச் சொல் ஜெனியின் மனத்தில் எப்படி தைத்தது என்று அவனுக்குப் புரியவில்லை. பின்னொரு சமயம் அவள் கேட்டாள் அவனை -- பெரியவா பார்த்து ஒரு பெண்ணை நீ பண்ணிக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா?

பெரிய அக்கா கிடக்கிறா விடு!

ன் பெரிய அக்காவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

வள் சொன்னதைத்தானே நீ கேட்கிறாய்?

ல்லை. எனக்குத் தெரியாது அவள் சொன்னாளா என்று. ஏதோ எனக்குத் தோன்றியது.

வள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்வது சரி என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் பிரபாகரன்.

ன்? இவ்வளவு மாவு இருக்கிறதே. எதற்கு இப்பொழுது மீண்டும் ஊறப்போட்டாய்?’

'ல்லை. மிகவும் புளித்துப் போய்விட்டது. அது வேண்டாம். '

வனோடு ஏற்பட்ட முதல் சந்திப்பு. பால் பூத்திலா? இல்லை எதாவது நிச்சயம் ஏதோ கடையில்தான். என்னமோ ஒரு துள்ளல். இவனே வேறு மாதிரிதான் தெரிந்தான். அதுதான் இவனா? அல்லது இவன் தான் அதுவா? இது ஒன்றும் புரிந்து கொள்ள சுளுவாய்த் தெரியவில்லை. அக்கறை அன்பு கடமை பொறுப்பு இதில் எல்லாம் ஒன்றும் குறைவு இல்லை.
லட்சியக் கணவனா என்பது அநாவசியக் கேள்வி. நம்முடைய வாழ்க்கையை  வேறு எங்கோ மாட்டிவைத்து ஒப்பிடுவது. ஆனால் அன்று நம் கண்ணுக்குப் பட்ட அந்தக் காதலன்...என்ன ஆனான்? அல்லது நாமும்தான் அவன் கண்ணுக்கு அப்படித்தானோ?

ரொம்பப் பண்ணாத! தலைமுடி உதிரும் பார்த்து......

ரி காதல் என்பதுதான் என்ன? உடல் இச்சைக்கு உள்ளம் பூசும் சாயமா? அப்படி என்றால் உடலோடு போய்த் தொலையாமல் உள்ளத்தை இந்தப் பாடு படுத்துவானேன். அன்று தேவ குமாரனாய்க் காட்சி தந்தவன் இன்று ஏன் மடைப்பள்ளி பரிசாரகன் போன்று ஆகிவிட்டான்? அவனுக்குத் தான் செய்யும் எந்தப் பணிவிடையிலும் அவன் தனக்குச் செய்ய என்றும் சளைத்தவனில்லை என்றாலும் அந்தக் காதல் மனிதன் மறைந்தவன் தான். காணவில்லை.

த்தனைக்கும் அன்று, காதல் காலத்தில் பேசிய பேச்சு எல்லாம் பிதற்றல். இன்றோ உளறாமல், தடுமாறாமல் எந்தச் சூழலையும் சமாளிக்கும் நேர்த்தி மிக்கவன். ஆனாலும் அந்தப் பிதற்றலில் திகழ்ந்த வாழ்வின் ஆழம் அடிமண் இட்டுப்போய் வாழ்வே கணுக்கால் அளவு ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

'சாப்பிட்டுவிடு. ஆறுகிறது பார். மறுபடியும் கொஞ்சம் சூடு பண்ணிவிடவா?'

'இல்லை. இப்படியே இருக்கட்டும். '

ல்லாப் பெண்களின் வாழ்விலும் இப்படித்தானோ? காதலன் ஒரு தோற்ற மயக்கம் தானோ?

ண்ணுக்கு மையிட்டுக் காணும் மயல் காட்சியோ? முன்னொரு முறை இதைப் பற்றி வினவியபொழுது வாழ்க்கை வேறு, கற்பனை வேறு என்று சொல்லிப் போய்விட்டான். ஆனால் அந்தக் காதலனை விரும்பித்தானே நான் இவனை மணந்தேன். அவன் மறைந்து போன இவனின் மிச்ச வடிவத்தை வைத்து வாழ்வு ஓடுவதை எப்படிச் சீரணித்துக்கொள்வது? எல்லாப் பெண்களுமே இப்படிக் காதலனை இழந்து இப்படிக் கொடுப்பினை இருந்தால் பரிசாரகனுடனோ அல்லது துரதிருஷ்டம் என்றால் பாதகனுடனோ தான் காலம் தள்ளுவர் போலும்.

தியிலிருந்தே அப்படித்தானோ? அதனால்தான் வாழ்வின் முடை நாற்றங்களில் சிக்காத நித்திய கற்பனையாக, கற்பனைக்கும் எட்டாத நிதய காதலனாக கிருஷ்ணனை வைத்தார்களோ? ஆம் !

வன் ஒருவன் தான் காதலனாக இருக்க முடியும். மனிதர்கள் எப்படிக் காதலர்களாக இருத்தல் கூடும்? இங்குதான் நடைமுறை என்னும் தரைமட்டப் பிசாசு அனைத்துக் காதல்களையும் துடைத்துவிடுகிறதே. ராதையும் உலகத்தைச் சேர்ந்தவள் இல்லை. கிருஷ்ணனும் உலகத்தைச் சேர்ந்தவன் இல்லை. காதல் என்பதே உலக சமாச்சாரம் இல்லை.

கையை அலம்பிண்ட்ரேன், காயறது பாரு.....  ஹலோ....ஜெயபத்மாசினி...

ஹாங்....

ப்ப காதல் என்பதை யார் தமக்குள் நிரந்தரமாகக் குடிகொள்ள வைத்து விடுகிறார்களோ அவர்களிடத்தில் கிருஷ்ண பிரஸன்னம் என்று கொள்ளலாமா?  ராதையின் லீலை என்று சொல்லலாமா? ஆனால் பாவம், இந்த ஆண்பிள்ளைகள் அச்சுப் பிச்சுக்கள் பாவம்!

மக்காவது காதல் என்பதற்குக் காதலன் தெய்வம் இருக்கிறது. இதுகளுக்குக் காதலி தெய்வம் எங்கிருக்கிறது? எல்லாம் அம்மா அம்மா என்று சொல்லிக் காதலியைத் தெய்வமாக்குவதில் கோட்டை விட்டுவிட்டதுகள். ஏதோ பாரதியே கஷ்டப்பட்டுக் கண்ணம்மா என்றெல்லாம் சொன்னாலும் மரபில் வரவில்லையே! ஒரு வேளை காதலி தெய்வம் ஏற்படாத காரணம்தானோ இதுகள் எல்லாம் கல்யாணத்திற்குப் பிறகு மண்ணாந்தைகளாய் ஆகி விடுகின்றன. ச ... ரொம்ப பாவம்... !

ன்ன ஒரே யோசனை? இப்படியேவா உட்கார்ந்துண்ட்ருக்கப் போற?

'ம் இல்லல்ல........... நீ.... சாப்பிட்டாயா? '

ரிதான். இவ்வளவு நேரம் நீதானே பரிமாறினே..... சரி வா தூங்கு. ராத்திரி கண் முழிக்காத.

....................................

ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்!  என்னுடைய இரண்டு வலைப்பதிவுகளிலும் இவரைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறேன். மோகனத்தமிழை வியந்து கொண்டாடி இருக்கிறேன்.

"கதைசிறுத்தாலும்..." சிறுகதை எப்படி உருவாகிறது என்பதை  தமிழ் வாசல் கூகிள் வலைக் குழுமத்தில் ஒரு அட்டகாசமான ஒரு விவாத இழையாகத் தொடங்கினார். இதை ஏற்கெனெவே ஒருபதிவில் சொல்லியிருந்தேன். அந்தத்தருணத்தில் விவாத இழைகளைக் குழும உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்று இருந்தது, இன்று முன்னிரவு முதல் எவரும் பார்க்கலாம்,  படிக்கலாம் என்று பொதுவெளியில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது சிறு கதை என்ற இழையைத்தொடங்கி....மூன்று  சிறுகதைகள்! மனிதன் கலக்கிக் கொண்டிருக்கிறார்! அதில் முதல் சிறுகதை இது!

சிறுகதை வடிவம் பொருந்தி வந்திருக்கிறதா? என்ன சொல்கிறீர்கள்?


Monday, January 24, 2011

தர்க்கத்திற்கு அப்பால்..........ஜெயகாந்தன் !

தர்க்கத்திற்கு அப்பால்...

ஜெயகாந்தன்


வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு 

இப்படிப்பட்ட 'வெற்றி 'கள் வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன.
என் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன் வழக்கம்போல 'தோல்வி நிச்சயம் ' என்ற மனப்பான்மையுடன் போன நான், வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப் போனேன். தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்குத் தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. 

கற்பனைக்கும் எட்டாத ஒரு பேரழகியை ரகஸ்யமாய் மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் எண்ணத்தை நானே பரிகஸித்து, பின்னொரு அசட்டுத் துணிவில், அவளது பரிகஸிப்பையும் ஏச்சையும் எதிர் பார்த்துத் தயங்கி, நாணிக் கூசி அவள் சந்நிதியில் நின்று 'உன்னை நான் காதலிக்கிறேன் ' என்று முற்றிலும் கூறி முடிக்கும் முன்பாக, அந்த வானத்துக் கனவு எனது வார்த்தையை எதிர்ப்பார்த்துப் பலகாலம் தவங் கிடந்தவளே போன்று ஆயிரம் முத்தங்களை எதிர்நோக்கிச் சிவந்த அதரங்கள் துடி துடிக்க என் கரங்களினிடையே விழுந்ததற்கொப்பான தோல்வி அது '

இந்த தோல்வியை, அல்லது வெற்றியைக் கொண்டாடித் தீர வேண்டும். ஊருக்குத் திரும்பிய பின்தானே ? அல்ல, இப்போதே. நான் ரொம்ப அவசரக்காரன். 

கொண்டாடுவது என்பது பெரிய காரியமா ? அது கொள்ளப்பட்ட உள்ளம் தன்னுள் லயித்துக் குதூகலிப்பது. அதன் விளைவாய் ஏற்படும் புற நிகழ்ச்சிகள் பெரிய காரியமன்று. கொண்டாடத் தக்கதை, சிலர் வானத்தை வண்ணப்
படுத்தும் வேடிக்கை நிகழ்த்திக் கொண்டாடுவார்கள். சிலர் நாலு பேருக்கு வயிறார உணவளித்துக் கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் அந்தப் பொழுதிலாவது தன் வயிறாரத் தான் உண்டு மகிழ்வார்கள். அதெல்லாம் அப்பொழுதிருக்கும் அவரவர் சக்தியைப் பொருத்தது எனினும் மனசில் ஏற்படும் அனுபவம் அனைவர்க்கும் ஒன்றுதான். 

இப்பொழுது என் நிலைமை... பையிலிருக்கும் ஒரு வெள்ளி ரூபாய் நாணயம்தான். அதற்கென்ன ? இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே ' 

அதுதான் முடியாது. ஊருக்குப் போக முக்கால் ரூபாய் வேண்டும். அதனால்தான் என்ன ? கால் ரூபாயில் கொண்டாட முடியாதோ ? நிச்சயம் முடியும். 

சங்கரய்யர் ஹோட்டலில், புதுப்பால், புது டிகாக்ஷன், சர்க்கரை கம்மி, ஸ்ட்ராங்கா ஒரு கப் காப்பி இரண்டனாதான். காப்பி அருந்தியதும் உடம்பில் ஒரு புதுத் தெம்பும் மனசில் ஒரு தனிக் குதூகலமும் பிறந்தன. ஊர் திரும்ப, ஒதுக்கி வைத்த பன்னிரண்டணாபோக, கையிலிருக்கும் இரண்டணாவை என்ன செய்யலாம். 'கடைசிச் சல்லியையும் ஒரு ராஜாவைப் போல் செலவு செய் ' என்ற பழமொழியும் நினைவுக்கு வந்தது. 

'ஐயா தருமதுரை.....கண்ணில்லாத கபோதி ஐயா... ' என்ற குரல். 

ஸ்டேஷனுக்குள் நுழையும் இடத்தில், ஒரு ஓரமாய் அந்த குருட்டுப் பிச்சைக்
காரன் உட்கார்ந்திருந்தான்; கிழவன். அவன் எதிரே இருந்த அலுமினியப் பாத்திரத்தில் வெறும் செப்புக் காசுகளே கிடந்தன. அவற்றின் நடுவே நான் போட்ட இரண்டணா, வெள்ளை வெளேரென்று விழுந்தது அழகாகத்தான் இருந்தது. குருடன் அதை எடுத்துத் தடவிப் பார்த்தவாறே, நான் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்ட திசை நோக்கி கரம் குவித்து, 'சாமி நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியமுண்டு ' என்று வாழ்த்தினான். அதன் பிறகு உண்மையிலேயே நாலணாவில் அந்த நல்ல நாளை கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது எனக்கு. 

புக்கிங்கவுண்டரின் அருகே போய் என் சொந்த கிராமத்தின் பெயரைச் சொல்லிச் சில்லறையை நீட்டினேன். சிறிது நேரத்திற்கெல்லாம் டிக்கெட்டை எதிர்பார்த்து நீண்டிருந்த என் கைக்குள் மீண்டும் சில்லறையே விழுந்தது; 

'இன்னும் ஓரணா கொடுங்கள் சார். '

'பன்னிரண்டணாதானே ? '

'அது நேற்றோட சரி, இன்னிலேருந்து அதிகம். '

என் கை சில்லறையுடன் வெளியே வந்தது திடாரென்று பாதாளத்தில் வீழ்ச்சியுற்றது போன்ற திகைப்பில் நின்றுவிட்டேன். 'யாரிடம் போய் ஓரணா கேட்பது ? '

'அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே அவரிடம்..... ' என்று நினைக்கும்போதே.... ஒரு அணாதானே, கேட்டால்தான் என்ன என்று நினைக்கும்போதே --- கேட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது அங்கே. யாரோ ஒருவன் அவரருகே சென்றான். அவன் என்ன கேட்டானோ ? அவர் சொன்ன பதில் உலகத்துக்கே கேட்டது எனக்கும் உறைத்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம் ஆகவில்லை. ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்துவிட்டதை எண்ணும்போது, மனம்தான் வாழ்க்கையுடன் என்னமாய்த் தர்க்கம் புரிகிறது ?

'அதோ அந்தக் குருடனின் அலுமினிய பாத்திரத்தில் செப்புகாசுகளின் நடுவே ஒளிவிட்டுச் சிரிக்கிறதே இரண்டணா, அது என்னுடையது ? '

'அது எப்படி உன்னுடையதாகும். நீ கொடுத்துவிட்டாய், அவன் வாழ்த்தி விட்டான் '

'இப்ப சந்தியில் நிற்கிறேனே ? அதில் ஓரணா கூடவா எனக்குச் சொந்தமில்லை 

? அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா ? கேட்டால் தருவானா ? தரமாட்டான். அவனுக்கு எப்படித் தெரியும் அதைப் போட்டவன் நான் என்று ' '

'எடுத்துக்கொண்டால் ? அதோ ஒரு ஆள் ஓரணா போட்டு விட்டு அரையணா எடுத்துக் கொள்கிறானே ' அதுபோல் ஒரு அணாவைப் போட்டுவிட்டு அந்த -- என்னுடைய --இரண்டணாவை எடுத்துக்கொண்டால் ? '

'இது திருட்டு அல்லவா ? '

'திருட்டா ? எப்படியும் என் பக்கத்திலிருந்து தர்மமாக ஓரணா அவனுக்குக் கிடைக்குமே... அந்த ஓரணா புண்ணியம் போதும்; என் காசை நான் எடுத்துக் கொள்கிறேன் ' என்று பொருளாதார ரீதியாய்க் கணக்கிட்டுத் தர்க்கம் பண்ணிய போதிலும், திருடனைப் போல் கை நடுங்குகிறது.

ஓரணாவைப் போட்டேன், இரண்டணாவை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.

\'அடப்பாவி ' ' -- திரும்பிப் பார்த்தேன். குருட்டு விழிகள் என்னை வெறிக்க, வாழ்த்தத் திறந்த வாயால் சபிப்பது போல் அவன் கேட்டான்.

'சாமி, இதுதானுங்களா தர்மம் ? யாரோ ஒரு புண்ணியவான் இரண்டணா போட்டாரு.... அதை எடுத்துக்கிட்டு ஓரணா போடறியே ? குருடனை ஏமாத்தாதே, நரகத்துக்குத்தான் போவே... '

நெருப்புக் கட்டியைக் கையிலெடுத்ததுபோல் அந்த இரண்டணாவை அலுமினியம் தட்டில் உதறினேன், இப்பொழுது என் கணக்கில் மூன்றணா தர்மம்.தெரியாம எடுத்துட்டேன் ' என்று சொல்லும்போது, என் குரலில் திருட்டுத்தனம் நடுங்கியது.

ஒரு பெண் அரையணா போட்டுவிட்டுக் காலணா எடுத்துச் சென்றாள்; குருடன் உடனே இரண்டணா இருக்கிறதா என்று தடவிப் பார்த்தான்.

அப்படிப்பார்த்தபோது அது இல்லாதிருந்ததுதான் நான் சிக்கிக்கொண்டேன் என்று புரிந்துகொண்டேன். அது அவனுக்குக் கிடைக்காமல் கிடைத்த செல்வம். விட மனம் வருமா ?

நான் யோசித்தேன்.

'அது அவன் பணமா ? '

'ஆமாம் ' '

'நான்தானே தந்தேன். '

'காசைத்தான் கடன் தரலாம், தருமத்தைக் கடன் தரமுடியுமா ? தர்மத்தை யாசித்து, தந்தால்தான் பெற வேண்டும். '

வெகு நேரம் நின்றிருந்தேன். நான் போக வேண்டிய ரயில் வந்துபோய்விட்டது. அடுத்த வண்டிக்கு இன்னும் நேரமிருக்கிறது. தர்மத்தின் பலனை அடுத்த ஸ்டேஷன்வரை கால் வலிக்க நடந்து அனுபவித்தேன்.

சில வருஷங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு ரயில் விபத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது, அன்று நான் போக இருந்து தவற விட்ட ரயில் தான்.

இந்த விபத்திலிருந்து நான் எப்படித் தப்பினேன் ?

தருமம் காத்ததா ?

எனக்குத் தெரியாது. இதெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. 

சிறுகதையின் வடிவத்தைப் பற்றி ஸ்ரீரங்கம் மோகனரங்கன், அவருக்கே உரிய பாணியில் இங்கே கலக்கிக் கொண்டிருக்கிறார்.எத்தனையோ பேர் எத்தனையோ தரம் பேசிப் பேசி இன்னமும் பிடிபடாத விஷயமாகத் தான் இருக்கிறது. 

ஜெயகாந்தனின் இந்த சிறுகதை, சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது என்று எனக்குப் படுகிறது.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது, சொல்லுங்களேன்!







இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)