Wednesday, October 16, 2019

எது நல்ல எழுத்து? ஒரு வாசகனாய் நீங்கள் கொண்டாடும் எழுத்து?

என்ன மாதிரி எழுத்தைக் கொண்டாடுவீர்கள்? எதற்காக? இப்படி ஒரு கேள்விக்கான தேடலாக அந்த நேரத்தில் உந்துதலாக அமைந்த ராஜேஷ் குமார் பாராட்டு விழா இருந்தாலும், கேள்விக்கான விடை அந்த விழா எடுத்தவர்களிடமோ, எழுத்தாளரிடமோ இல்லை என்பதைப் பின்னூட்ட விவாதங்களில் நண்பர்கள் கவனித்திருக்கலாம்.  கேள்வியைச் சரியாக, இன்னமும் தெளிவாகக் கேட்டிருக்க வேண்டும் என்ற பாடத்தையும் அது எனக்குத் தந்தது. 


இந்த 10 நிமிட வீடியோவைக் கொஞ்சம் பாருங்கள்! எழுத்துச் சித்தர் என்று கொண்டாடப்பட்ட பாலகுமாரனை ஞாபகம் இருக்கிறதா? இது சென்ற ஆண்டு அவர் காலமாவதற்கு  முன்னால் எடுக்கப்பட்டது.  நேர்காணல் என்று  கூட சொல்ல முடியாது, அவர் மட்டும்தான் பேசுகிறார். இதில் யாரென்று பாலகுமாரனைத் தெரிந்து கொள்ள முடிகிறதா? முடியாவிட்டால் பரவாயில்லை. இன்னொரு வீடியோ 43 நிமிடம் இந்த வருடம் மே மாதம்  வெளிவந்ததில் கொஞ்சம் விரிவாகத் தெரிந்துகொள்கிற மாதிரி!  முதல் வீடியோவைப் பார்க்காவிட்டாலும் போகிறது, இரண்டாவதாய்க் கீழே இருக்கும் வீடியோவைத் தவற விட வேண்டாம்!  



இந்த வீடியோத் தொகுப்பில் பாலகுமாரனுடைய வாழ்க்கையை, எழுத்தை, வாசகர்கள் கொண்டாடிய விதம், சினிமாப படங்களுக்கு வசனம் எழுதியது, ஆன்மீக நாட்டம், வாசகர்கள் அவரை குருவாகவே ஏற்றுக்கொண்டது இவைகளை மிக நேர்த்தியாக, பிரபலங்கள் + வாசகர்கள் சொல்வதை வைத்துப் படமாக்கியிருக்கிறார்கள்.ஆனால் பாலகுமாரனை மதிப்பிட அவருடைய எழுத்தை வாசித்திருக்க வேண்டும். அந்த எழுத்தில் எது தன்னைக் கவர்ந்த அம்சமாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். 

இளம் வயதில் முடிவெட்டிக் கொள்ளப்போகிற சலூனில் தினத்தந்தியில் வெளியான கன்னித்தீவு  படக்கதை அழகாக பைண்ட் செய்துவைத்து, என்னைமாதிரி சிறுவர்கள் படிப்பதற்கு கொடுப்பார்கள். வெளிவர ஆரம்பித்த நாளிலிருந்து ஒருபத்துப் பன்னிரண்டு வருடக் கன்னித்தீவு கதையை அந்தநாட்களில் படித்திருக்கிறேன்.அதற்கும் கூடத்தான் வாசகர்கள் இருந்தார்கள். கன்னித்தீவும், ராஜேஷ் குமார் கதைகளும் ஒன்றா? வெறும் நேரவிரையம், timepass என்பதற்கு மேல் அவற்றில் உங்களுக்குப் பிரயோசனமான அல்லது இன்னமும் மனதில் நிற்கிற மாதிரி ஏதேனும் அந்த எழுத்தில் இருந்ததா? 




பாலகுமாரனும் பட்டிமன்றப்பேச்சாளராக அறியப்படும் பாரதி பாஸ்கரும் உரையாடுவதன் முதற்பகுதி வீடியோ 37 நிமிடம் 


பாரதி பாஸ்கரின் நேர்காணல் தொடரும் 2வது பகுதி வீடியோ 46 நிமிடம்!  நேரமிருந்தால் அவசியம் பார்க்க வேண்டுகிறேன். 

பாலகுமாரன்  சிறிதும் பெரிதுமாக 278 நூல்களை  எழுதி இருக்கிறார். அவற்றில் எதையெல்லாம் படித்திருக்கிறீர்கள்? எந்தெந்தக் கதாபாத்திரங்கள் உங்கள் மனதுக்கு இன்றைக்கும் நெருக்கமாக இருக்கிறார்கள்? பாலகுமாரன் எழுத்தைப்  பற்றி உங்கள் மதிப்பீடு ஏதாவது இருக்கிறதா? சொல்லுங்களேன்!


தொடர்ந்து பேசலாம். மீண்டும் சந்திப்போம்.   


18 comments:

  1. பாலகுமாரன் நிறைய படித்திருக்கிறேன்.   நான் பணிக்குச் செல்ல ஆரம்பித்த நாட்களில் என் சம்பளத்தில் ஒரு  வாங்கிவிடுவேன்.  என் கலெக்ஷனில் சிலபல பாலகுமாரன் புத்தகங்கள் இருக்கின்றன.   எது நினைவில், எது பிடிக்கும் என்பதெல்லாம் சிரமமான கேள்விகள்...  சாய்ஸில் விட்டுவிடுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்!

      மனதில் எதுவும் தங்கவில்லை என்பதாக மட்டுமே உங்களுடைய சாய்ஸில் விடுவதான பதிலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறதே! பாலகுமாரனுக்கே இப்படி என்றால் ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் இன்னபிற எழுத்தாளர்களைப் பற்றி என்னவென்று சொல்வீர்களாம்? இரண்டாவது வீடியோவை ஒரு முறை பார்க்கும் படி உங்களுக்கு இன்னொரு முறை சிபாரிசு செய்கிறேன்! :-))))

      Delete
  2. பாலகுமாரன் எழுத்துக்களை முன்னிலைப் படுத்துங்க. அவரைப் பற்றி வெளியே உள்ள நபர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர் வாழ்நாள் முழுக்க அரசியல்வாதிகள், நடிகர்களை விட மூன்று நான்கு வாழ்க்கை வாழ்ந்தவர்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      பாலகுமாரன் மட்டுமே அல்ல, நாம் ஒவ்வொருவருமே கூட இரண்டு, மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வாழ்க்கையைத் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்! இல்லையா? :-)))

      பாலகுமாரனை வெறித்தனமாக வாசித்தவர்கள் இங்கே நண்பர்களில் எவராவது இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள விரும்பியதால் இந்தப்பதிவில் என்னுடைய அபிப்பிராயத்தைச் சொல்லாமல் சில வீடியோக்களில் அவருடைய பிம்பம் எப்படியிருந்தது என்பதைமட்டும் காட்டிவிட்டு ஒதுங்கி நின்றேன்.

      உங்களுக்கு மாறுபட்ட பார்வை இருக்குமேயானால், அதைச் சொல்வதற்குத் தயங்குவானேன்?

      Delete
    2. அரசியல்வாதிகளை ஒப்பிடும் போது எழுத்தாளர்களை நாம் கேவலப்படுத்த வேண்டியதில்லை என்பது என் கருத்து. அவர்களால் சமூகம் மாறுதல் அடைந்துள்ளது. அவர்கள் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்கவில்லை. கேவலமான காரியங்கள் எதுவும் செய்யவில்லை. மறந்து விடலாம். மன்னித்து விடலாம். அதனால் தான் பாலகுமாரன் மேல் எந்தக் குற்றச்சாட்டுகளையும் நான் வைக்க விரும்பவில்லை. ஆனால் அவர் பேசுவதற்கும் சொல்லும் பேசிய, எழுதிய கொள்கைகளுக்கும் கடைசி வரைக்கும் எதிராக வாழ்ந்தவர் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மிக நன்றாகவே தெரியும். தன் படத்தையே இறைவன் போல வணங்க வேண்டும் என்று உருவாக்கிய தந்திர வலைகளை கூட்டத்தை வளர்த்த விதங்களை வியப்புடன் வெறுப்புடன் பார்த்துள்ளேன். ஃபேஸ்புக்கில் அவர் முகத்திரை அறிந்து வெறுத்துப் போய்விட்டேன். ஆனால் இன்று என் குடும்ப வாழ்க்கையில் தொழில் வாழ்க்கையில் அமைதியாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முழு முதல் காரணம் பாலகுமாரன் எழுத்துக்கள் தான் முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதும் உண்மை. அவர் எழுத்துக்கள் 1992 வரைக்கும் எனக்கு வேதம்.

      Delete
    3. வாருங்கள் ஜோதிஜி!

      எந்தவொரு எழுத்தாளரையும் (அவர்கள் அரசியல் சார்புடன் பேசாதவரை) அரசியல்வாதிகளுடன் ஒப்பிடவோ கேவலப்படுத்தவோ முயற்சித்ததில்லை. பாலகுமாரன் ஒரு எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, ஆன்மீகவாதி,எனப் பலப்பல முகங்களை மாறிமாறி அணிந்திருக்கிறார் என்பதில் பலவிதமான கருத்து இங்கே நிறையப்பேருக்கு இருக்கலாம்! பாலகுமாரனை கொஞ்சம் வாசித்திருக்கிறேன் என்பதற்கு மேல் அவர்மீது எந்தவொரு பிம்பத்தையும் எனக்குள் கட்டமைத்துக் கொள்ளவில்லை என்பதாலேயே அவரைப் பற்றிப் பேசியவர்களின் பேச்சை அல்லது அவர் பேச்சை இங்கே வீடியோக்களாக எடுத்துக் போட்டிருக்கிறேன். எந்தவொரு இடத்திலும் என்னுடைய கருத்தை எடுத்துவைக்காமல் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

      ஆக, பாலகுமாரன் எழுத்தால் உங்களுக்கு உபயோகமும் இருந்திருக்கிறது.

      Delete
  3. நீங்கள் போன பதிவில் எனக்கு சொன்ன பதில் என்ன எழுத்து பிடிக்கும் என்பதற்க்கு விடையாக இருக்கிறது. நேர்மையான எழுத்து பிடிக்கும். அலங்கார நடை / திடுக்கிடும் திருப்பம் எல்லாம் ஒரு கட்டத்தில் அலுத்து விடுகிறது. ஜெயகாந்தன் எழுத்தை எப்பொழுது வேண்டுமானாலும் மறுபடி மறுபடி படிக்கத் தூண்டுவது அந்த நேர்மை...

    பைரப்பா எழுதிய பருவா பற்றி குறிப்பிட்டிருந்தேன். அந்த புத்தகத்தில் கர்ணன் குந்தி அவனிடம் தான் தான் அவன் தாயார் என்று சொன்னவுடன் - மிகையான கழிவிரக்கம் / நட்புக்காக தியாகம் என்ற வழக்கமான நிலைக்கு மாற்றாக - அவன் எனக்கு பிடித்த ராதை என் தாயில்லை என்று அவள் இறந்த பிறகு இந்த குந்தி வந்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன? எனக்கு பிடித்தவள் என் தாயில்லை. என்னை வேண்டாம் என்று கைவிட்டவள் நான் தான் தாய் என்று எதற்கு சொல்ல வேண்டும் என்று குந்தி மீது மிக வெறுப்படைகிறான். இது நான் எண்ணிப்பார்க்காத கோணம். இது போல பல புதிய பார்வைகளை போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறார்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      இராமாயண மஹாபாரதக் கதைகளை, காலம் காலமாக வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதமாகச் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள். கதைகளாகச் சொல்லப்பட்டாலும், மனிதர்கள் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவும், சுயமாக தர்க்கம் செய்து சிந்திக்கவும் இதிஹாசங்கள் உதவுகின்றன.

      பைரப்பாவின் கர்ணன் கேட்டுக்கொள்கிற கேள்வி சரி! ஆனால் இன்னொரு கேள்விக்கு விடைதெரிந்தாக வேண்டுமே! இன்ன இடத்தில் இன்னாராக இன்னாருடைய பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்கிற சாய்ஸ், அந்தப் பிள்ளைக்கு இருந்ததா? பாரதத்திலேயே கர்ணன் குந்தியை நிராகரிக்கிறான், போரின் முடிவில் உனக்கு ஐந்து மகன்கள் உயிரோடு இருப்பார்கள் என்று சொல்கிறான். தாய் என்று சொன்னவுடனேயே அவள் பின்னால் ஓடிவிடவில்லை. அந்தத் தாயும் கூட அர்ஜுனன் மீது நாகாஸ்திரத்தை இரண்டாம் முறை பிரயோகிக்கக் கூடாது என்று யாசித்துப் பெறுவதோடு விட்டுவிடுகிறாள். அந்த ஐந்து மகன்களோடாவது அவள் நிம்மதியாக இருந்தாளா? மனிதமனங்களில் எழும் பல நுட்பமான கேள்விகளை பாரதத்தில் பார்க்க முடியும், சரியான விடையைக் கண்டறியவும் முடியும் என்பதுதான் மஹாபாரதத்தில் நான் கண்டுகொண்ட விஷயம்.

      Delete
    2. பைரப்பா கதைகள் தமிழ் மொழிபெயர்ப்பில் பி டி எஃப் கிடைக்குமா?   குறிப்பக பருவா?

      Delete
    3. அந்த ஒரு புத்தகம் மட்டும் என்னிடமிருக்கிறதென்று நினைக்கிறன் ஸ்ரீராம்! கிடைத்தவுடன் அனுப்பி வைக்கிறேன்.

      Delete
  4. பாலகுமாரன் கதைகளில் எனக்கு பிடித்த அல்லது நினைவில் உள்ள ஒரே கதை இரும்பு(க்?) குதிரைகள். It reminded me Arthur Hailey's Wheels.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கௌதமன் சார்! கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, மறுபடியும் ஆக்டிவாகப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி!

      மெர்க்குரிப்பூக்கள், தாயுமானவன் நாவலுக்கு அடுத்து இரும்புக்குதிரைகள் பாலகுமாரன் நாவல்களில் மிகவும் கொண்டாடப்பட்ட நாவல்தான்! ஆர்தர் ஹெய்லி இங்கே பல எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருந்திருக்கிறார் என்பது வரை சரிதான்! ஆனால் எடுத்துக் கொண்ட களத்துக்குத் தேவையான பின்னணித் தகவல்களை ஆர்தர் ஹெய்லி மாதிரி வருடக்கணக்கில் பொறுமையாக சேகரித்த மாதிரி பாலகுமாரனோ வேறு எழுத்தாளர்களோ உழைத்தார்களா என்ன?! மிக மேம்போக்காக லாரித்தொழிலை வைத்து பாலகுமாரன் கதை பின்னியிருந்தார். ஆர்தர் ஹெயிலியின் The Wheels நாவல் கிளாஸ் அதோடு போய்.ஒப்பிட்டால் மிக மட்டமான முயற்சியே! அதேபோல த்லையணைப்பூக்கள் என்ற நாவலில் விஜிபி சகோதரர்கள் ஆரம்பித்து வைத்த தவணைமுறையில் பொருட்களை வணிகம் செய்கிற பின்னணிக்களம் வைத்து, அதுவும் மேம்போக்காக பேசப்பட்ட விஷயம் தான்! நினைவுக்கு வருகிறதா?

      Delete
    2. முதலில் wheels படித்து ரசித்ததனால், இரும்புக்குதிரைகள், பாலகுமாரனின் சிம்ப்சன் (டாஃபே ?) அனுபவங்களின் தொகுப்பு என்று யூகிக்க முடிந்தது. அசோக் லேலண்டு R&D பிரிவில் நான் வேலை பார்த்ததால், wheels புத்தகத்தில் உள்ள கேரக்டர்களை இரசித்துப் படிக்க முடிந்தது. ஒரு automobile design and manufacturing கம்பெனியில் உள்ளே நிகழ்பவைகளை ஆழமாக, தத்ரூபமாக எழுதியிருந்தார், A.H. நீங்கள் சொல்லியிருப்பதுபோல பா கு வின் இ கு மேம்போக்குதான். ஆனால் அன்றளவில் வித்தியாசமான முயற்சி. தாயுமானவன் பாதி படித்து பிறகு நிறுத்திவிட்டேன்.

      Delete
    3. கௌதமன் சார்!

      மேற்கத்திய எழுத்தாளர்கள், கதைதான் என்றாலும் இஷ்டத்துக்குக் கதைக்காமல், கதையின் பின்னணிக் களம் குறித்து நன்றாக ஆராய்ந்து தகவல்களை சேகரித்தபிறகுதான் எழுத ஆரம்பிக்கிறார்கள். இங்கே சரித்திரக் கதை எழுத்துவதானாலும் கூட சரித்திரம் தெரியாமல் எழுதுவதுதானே வழக்கம் (சாண்டில்யன் ஒருவர் நீங்கலாக) ?

      தமிழில், ஏதோ கொஞ்சம் விஷயம் தெரிந்தமாதிரி எழுதினாலே ஆஹா ஓஹோ என்று குதித்துக் கொண்டாடுகிறவர்கள் உண்மையிலேயே அதிகம்தான்! (மற்ற இந்திய மொழிகளில் நிலவரம் என்ன என்பது தெரியாது) இலுப்பைச் சர்க்கரைக்கே இத்தனை கொண்டாட்டம் என்றால் ....?

      Delete
  5. சார் இங்கு பலரது கருத்துகளையும் வாசித்து நான் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் வீடியோக்களும் பதிவும் அதற்குக் காரணம். இப்போதுதான் வாசிக்கவெ தொடங்கியிருக்கிறேன்...சார்.

    பாலகுமாரன் எழுத்து பற்றி விமர்சனம் சொல்ல பானுக்கா (பானுமதி வெங்கடேஸ்வரன்) வருவாங்கனு நினைக்கிறேன். அவங்க கருத்து இங்கு எதிர்பார்த்தேன்...

    வாசிப்பு அனுபவம் இங்கு வர நான் அதை வாசித்து ரசிக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தலைவர் கொடுக்கும் தகவல்களை முழுமையாக உள் வாங்கி அறிந்த கொள்ள ஒவ்வொரு பதிவுக்கும் நான் சில மணி நேரங்கள் எடுத்துக் கொள்வதுண்டு. வேறு எதையும் கவனிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு நாளின் சமூக தேசிய சர்வதேச விசயங்களை இங்கு வந்து இவர் பதிவுகளை படித்தாலே போதுமானது கீதா.

      Delete
    2. தில்லையகத்து கீதா அம்மா!

      வெறுமனே வாசிப்பதால் அல்ல, தொடர்ந்து வாசித்து உள்வாங்கிக் கொள்கிற பனுவல் வாசிப்பில் தான் வாசக அனுபவமும், தொடர்ந்து வாசகன் என்று சொல்லிக் கொள்கிற தகுதியும் வருகிறது என்று நண்பர் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் சொல்வது நினைவுக்கு வருகிறது. ஒரு கவிதையை ரசிக்க வேண்டுமானால் கவி உள்ளம் காணப்பழக வேண்டும் என்று சொல்வார் அவர்.

      Delete
    3. ஜோதிஜி! ஒரு ரிடையரான வேறு வேலை வெட்டி இல்லாதவனுடைய எண்ணங்கள், கிறுக்கல்கள்களாக எழுதப்படுபவை என்பதற்குமேல் இதில் உண்மையிலேயே ஒன்றுமில்லை!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)