Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Tuesday, March 24, 2020

ஜெயமுண்டு! #கொரோனா பயம் வேண்டாம் மனமே!

கரோனா தொற்று! ஓடவும் வேண்டாம், ஒளியவும் வேண்டாம்! இப்படிப் பதினைந்து நாட்களுக்கு முன்பு இந்தப் பக்கங்களில் எழுதியதைத்தான் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் சொந்த ஊர்ப்பக்கம் இன்று கிளம்பிய பெருங்கூட்டமும், தள்ளுமுள்ளுகளும் ஒரு மருத்துவ நெருக்கடியை மனவுறுதியுடன் எதிர்த்து வெல்கிற இயல்பைத் தமிழகத்தில் தொலைத்து விட்டு நிற்கிறோமோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க உதவுகிற KIT இந்தியாவிலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது விலை வெறும் 80000 ரூபாய்கள் தான்! ஒருவரைச் சோதனை செய்ய ஆகிற செலவு ரூ.1500/- க்குள் தான் ஆகும் என்கிற செய்திகள் வந்து கொண்டு இருக்கும் அதே நேரம், தேவையில்லாத பயம் ஜனங்களைத் தவறுக்கு மேல் தவறாகத் தொடர்ந்து செய்ய வைத்துக் கொண்டிருக்கிறதோ? 

 

பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களுக்கு மறுபடியும் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், சுகாதார அமைச்சகமும் என்ன தான் நிலைமையை சமாளிக்க சுறுசுறுப்பாக இயங்கி செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், ஜனங்களுடைய பங்களிப்பில்லாமல் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்? கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்காக   இன்று நள்ளிரவிலிருந்து அடுத்த 21 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கை, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ஜனங்களும் முழுமையாக ஒத்துழைத்தால் கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்திலிருந்து விடுபட முடியும்.   


அதே வேளையில் குறுகிய உள்நோக்கம் கொண்ட கட்சி அரசியல் செய்கிற நேரமில்லை இது என்பதை இங்கே இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ், கழகங்களுக்கும் யார் எடுத்துச் சொல்வது?  

கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் பொது இடங்களில் சுற்றியுள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து கடந்த மார்ச் 11-ம் தேதி கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் வந்துள்ளார். அப்போதே அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதைப் பொருட்படுத்தாமல் பொது நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், கால்பந்து போட்டி நடந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறார். இரண்டு எம்எல்ஏ.க்களை சந்தித்து அவர்களோடு கைகுலுக்கி ஆரத்தழுவி பேசி இருக்கிறார். அதன் பிறகு மார்ச் 14-ம் தேதி அவருக்கு காய்ச்சல் அதிகமாகி இருக்கிறது. காசர்கோடு அரசு மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அதன் பிறகே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார். இதற்கிடையில், கோவிட்-19 காய்ச்சலோடு குறைந்த பட்சம் 3000 பேரை அவர் சந்தித்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மல்லுதேச துபாய் ரிடர்ன் ஆசாமி ஒருவருடைய பொதுநல சேவையை இந்து தமிழ்திசை நாளிதழ் செய்தி இன்றைக்குச் சொல்கிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருப்பவர்கள் இவர்மாதிரி வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தான் என்பது என்னமாதிரியான சமூகப் பொறுப்புணர்வு? 


ஈரோட்டுக்கு கொரோனா வந்தவிதம் இதே போலத்தான் என்பது நினைவிருக்கிறதா? இப்போது சேலத்துக்கும்,


ஜெயமுண்டு பயமில்லை மனமே என்கிற பாரதியார் கவிதை வரியிலிருந்துதான் பதிவுக்குத் தலைப்பு உருவானதே! பதிவை முடிப்பதும் கூட பாரதியார் கவிதை வரிகளோடுதான்என்றால் பொருத்தமாக இருக்கும்!


தேடி உன்னை சரணடைந்தேன் தேச முத்து மாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்
 பாடி உனை சரணடைந்தேன் பாசமெல்லாம் களைவாய்

கோடி நலம் செய்திடுவாய் குறைகளெல்லாம் களைவாய்       

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, September 10, 2019

தடங்கல், தேங்கி நிற்பகெல்லாம் நம்முடைய சாய்ஸ் மட்டும் தான்!

TBR Joseph என்றொரு பதிவர்! முன்னாள் வங்கி மேலாளர், என்னுலகம் என்றொரு வலைப்பக்கத்தில் முன்பெல்லாம் வங்கித்துறை சார்ந்த பதிவுகளை எழுதிக்  கொண்டிருப்பார். சிலவருடங்களுக்குப் பிறகு அவருடைய இந்தப்பதிவில் மீண்டும் தொடர்பு கொள்கிற, பின்னூட்டமிடுகிற வாய்ப்பு நேற்றும் முன்தினமும் கிடைத்தது. ஈகோ, பிடிவாதகுணம் பற்றி ஒரு மேலோட்டமான பதிவு அது. அதேபோல எனக்குப் பிடித்த சேத் கோடின் (Seth Godin) பக்கங்களுக்கும் போய் வாசிக்கிற ஒரு அனுபவம் இன்று!  


  
யார் இந்த சேத் கோடின் என்று தெரிந்து கொள்ள விரும்புகிற நண்பர்கள் மேலே இந்த 56நிமிட வீடியோவைப் பார்க்கலாம் அவருடைய வலைப்பக்கத்தில் போய் வாசிக்கலாம்! தினசரி ஏதாவது உங்களுடைய சிந்தனையைக் கிளறுகிற மாதிரி ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும்!  நேற்றைய பதிவாக Being stuck is reasonable என்ற தலைப்பில், சுருக்கமாக நச் என்று வெறும் பதின்மூன்றே  வரிகளில் ஒரு வாழ்க்கை யதார்த்ததைப் புட்டு வைத்திருக்கிறார்.

தேங்கி நிற்பதெல்லாம் ஒரு காரணத்தோடுதான்! அப்படித் தேங்கி நிற்பதற்கு நீங்கள் எடுத்த ஒவ்வொரு முடிவும், இப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்று இழுத்து நிறுத்தி வைத்திருக்கிற அத்தனையும் எல்லாம் ஒரு காரணத்தோடு தான்! உங்கள் அனுபவத்தில்,பாதுகாப்பாக உணர்வதற்கு எச்சரிக்கையோடு, நீங்கள் எடுத்திருக்கிற முடிவுகளுக்குப் பாராட்டத் தான் வேண்டும், இல்லையா?

அப்படித் தேங்கி நிற்பதிலிருந்து விடுபட ஒரேவழி, முதலில். காரணம் காரியமென்று சாக்குப்போக்கு தேடிக் கொண்டிருப்பதில் இருந்து வெளியே வ்ருவது தான்.எப்படி? Reasonable என்று முதலில் நியாயப்படுத்திப் பார்த்ததற்கு நேரெதிராக unreasonable ஆகச்செய்து பார்ப்பதுதான்! அப்படிச் செய்யாததால் தானே முதலில் சிக்கிக் கொண்டீர்கள்?     
If you truly want to get unstuck, if you want to move to higher ground or do something more worthwhile, the first question to ask is, “Am I willing to be unreasonable, at least for a while? என்ற முத்தாய்ப்போடு இந்த விஷயத்தை முடிக்கிறார். 

ப்பூ! இதென்ன பிரமாதம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை! reasonable, unreasonable என்று இரு  வார்த்தைகளில் முடித்துவிடக்கூடிய எளிமையான தீர்வு இல்லை இது. ஒரு கதையாகப் பார்த்து விடலாமா? 

ஒரு முனிவருக்கு சாபம். பன்றியாகப் பிறக்க வேண்டுமென்று.

முனிவருக்குத் தாள முடியாத துக்கம், எவ்வளவு ஜபம், எவ்வளவு நியமத்தோடு காரியங்கள் ......கடைசியில் பன்றியாகப் பிறப்பதற்குத் தானா? மகனைக் கூப்பிட்டார்.

"மகனே, சாபத்தினால் பன்றியாகப் பிறக்க வேண்டியுள்ளது.அப்படிப் பிறந்தவுடன், தயவு தாட்சண்யம் பார்க்காமல் கொன்று விடு."

மகனும் தந்தைக்கு அப்படியே செய்வதாக வாக்களித்தான்.முனிவரும் பன்றியாகப் பிறந்தார். மகன், வாளை எடுத்துக் கொண்டு கொல்லப் போனான். புதிதாகப் பிறந்த குட்டிப் பன்றி சொன்னது, "மகனே, இப்போது தான் பிறந்திருக்கிறேன். ஆறு மாதம் கழித்து வா." மகனும் வாளை எடுத்துக் கொண்டு திரும்பிப் போனான்.

ஆறு மாதம் முடிந்தது. மகனும் வாளை எடுத்துக் கொண்டு பன்றியை வெட்டுவதற்காக வந்தான். பன்றி வளர்ந்து, பெண்பன்றி, குட்டிகள்எனப் பெருகி, குடும்பமாய் வாழ்வதைக் கண்டான். "நில்லடா, இப்போது தான் பன்றியாய் வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டிருக்கிறேன், சிறிது காலம் கழித்து வா."

மகனுக்குத் தாள முடியாத துக்கம். வேதம் படித்தவர். கல்வி, கேள்விகளில் சிறந்தவர்.ஏதோ, முன் வினை, இப்படி இழிபிறப்பாய்ப் பிறந்து, உழன்று கொண்டிருக்கிறாரே என்று வாளை ஓங்கி வெட்ட முனைந்தான்.

அவ்வளவுதான், முற்பிறப்பில் அவனுக்குத் தந்தையாய் இருந்த அப்பன்றி வெகுண்டெழுந்தது. கோபத்தோடு சொன்னது, "முட்டாளே, என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? பன்றி வாழ்க்கை என்றால் கேவலமா? இதில் எத்தனை சுகம் இருக்கிறது தெரியுமா உனக்கு? உனக்குத் தெரியவில்லை என்றால் ஒதுங்கிப்போய் விடு. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா, அதைக் கெடுக்காதே, போய்விடு.வேண்டுமானால், வாளை உன் நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டு மடிந்து போ "

ஆக்ரோஷமாய் உறுமிவிட்டு, பன்றி தன் பெண்டு பிள்ளை குட்டிகளோடு ஓடி மறைந்தது. மகன் இந்த விநோதத்தைக் கண்டு விக்கித்து நின்றான்.
"செல்லடா! செல்க தீக்குணத் திழிஞ!
எனக்கிவ் வாழ்க்கை இன்பமுடைத் தேயாம்;
நினைக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக"
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன்
இனத்தோடும் ஓடி இன்னுயிர் காத்தது.

பாரதி கவிதை வரிகளில் இந்தக் கதையைக் கேட்டதுண்டு. கேட்ட பொழுதில், ஒரு வினோதமான கதை என்ற அளவிற்கு மேல் யோசிக்கத் தெரிந்ததில்லை.

நம்முடைய எண்ணங்கள் செயல்கள் எல்லாவற்றிற்கும் நாமே எஜமானர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். விருப்பமாக, ஆசையாக எழுபவை எல்லாம் நம்முடையவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தோமேயானால், எதுவெல்லாம் நம்முடையது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அத்தனையும் வெளியில் இருந்து வருவது, புலன்கள் வழி மனம் போகும் போது, ஏற்படுகிற மயக்கம், ஒரு விகாரம் அவ்வளவு தான்.

பழக்கம் எப்படி ஆரம்பிக்கிறது? முதலில், கொஞ்சம் சுகமாக, சௌகரியமாக இருப்பதாக நம்ப வைத்து, சமையல் அறைச் சுவற்றில், எண்ணைப் புகை அழுத்தமாகப் படிந்து போவது போல, நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றன. ஆரம்பத்தில், நாம் அதற்கு எஜமானர்களாக இருக்கிறோம். அல்லது அப்படி நம்மை நம்ப வைத்து, நம்மை அதனதன் போக்கில் அலைக்கழித்து, ஆட்டிவைக்கும் எதிரிகளாக ஆகி விடுகின்றன
.

காலையில் எழுந்தவுடன் சிலருக்கு காபி அல்லது டீ உடனே குடித்தாக வேண்டும். அப்புறம் செய்தித்தாள் படிக்கிற வேலை, வெண்குழல் வத்தியைப் பற்ற வைத்துக் கொண்டு சிந்தனை வருகிறதோ இல்லையோ, புகையை விட்டுக் கொண்டு, பெரிய சிந்தனாவாதி போல, ஒரு லுக்கு விட வேண்டியது. இப்படி ஒவ்வொருவரும், நம்மையே கூர்ந்து கவனித்துப் பார்த்தோமேயானால், நம்முடைய வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பழக்கங்களின் அடிமையாகவே இருந்து கழிப்பதை, உணர முடியும்.

நமக்குக் கற்பிக்கப் பட்டிருக்கிற பழக்கங்கள், நம்முடைய ஒவ்வொரு சிந்தனை இழையையும், செயலையும் தன்னுடைய கட்டுப்பாட்டில்வைத்திருப்பதைக் கூட நம்மால் உணர முடிவது இல்லை. நம்முடைய எண்ணங்களுக்கு, செயல்களுக்கு, நாம் எஜமானனாக இருப்பதற்குப் பதிலாக, பழக்கங்கள், மிக சாமர்த்தியமாக நம்மை அடிமையாக வைத்திருக்கின்றன.
ஸ்ரீ அரவிந்தர், தாயகத்திற்குத்திரும்பிய புதிதில் மும்பையில் சந்தித்த ஒரு யோகி, விஷ்ணு பாஸ்கர லீலே சொன்னபடி, எண்ணங்கள் ஆசைகள் எல்லாம் எங்கிருந்து வருக்கின்றன என்று ஆராய்ந்து, வெளியிலிருந்து என்றால், அவற்றைத் திருப்பி அனுப்பிவிடும் பயிற்சியில். மூன்றே நாட்களில், சித்தி பெற்றதை முந்தைய பதிவொன்றில் பார்த்திருக்கிறோம்.

ஸ்ரீ ரமண மஹரிஷி காட்டிய "நான் யார்" என்ற விசார மார்க்கமும் இதுவே.

Emptying the cup என்பதாக ஜென் கதைகளில் படிக்கும் போது, வடிவேலு மாதிரி 'அட, ஆமா இல்லே' என்று நம்மைப் பற்றிய ஞானம் கிடைத்து விட்டதாகத் தோன்றும்.ஆனால் து அவ்வளவு எளியது இல்லை. என்று மார்ச் 2009 இல் இந்தப் பக்கங்களில் எழுகியதையும் சேர்த்துப் பார்த்து யோசிக்க வேண்டியிருக்கிறது. 
சேத் கோடின் நடைமுறைப் பிரச்சினை ஒன்றுக்கு எளிமையாக ஒரு தீர்வைச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். உண்மையிலேயே அது அத்தனை எளிதானதுதானா?
கொஞ்சம் யோசித்து,பதில் ஏதாவது கிடைக்கிறதா என்று சொல்லுங்களேன்! மீண்டும் சந்திப்போம்.        

Thursday, August 26, 2010

பாரதி ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்! சீனி.விசுவநாதன்



நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வது,  படித்ததில் பெற்ற அனுபவங்களை, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையில் இந்தப் பக்கங்களில் சில புத்தகங்கள், எழுத்தாளர்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தமிழில் கவிதை, சிறுகதை, வசன கவிதை, தேசீய கீதங்கள், கேலிச் சித்திரங்கள், பத்திரிக்கை நடத்திய அனுபவம் என்று எதைப் பேச முனைந்தாலும்  அதன் முன்னோடியாக மஹாகவி சுப்ரமணிய பாரதியார் இருப்பதைப் பார்க்க முடியும். புத்தகங்களைப் பற்றி எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் பாரதியை மறத்தல் ஆகுமோ?!

பாரதியைத் தமிழகம் முழுமையாக அறிந்திருக்கிறதா?

பாரதியைப் பற்றி அவதூறாக விமரிசித்து வரும் நிறையக் கட்டுரைகளை  இணையத்திலும் அச்சிலும் பார்க்கும்போது, பாரதியைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது மிகக் குறைவு தான் என்பது புலனாயிற்று. ஒரு நல்ல நூலைப் படித்து, அதை விமரிசனம் செய்யும்போது, படித்தவர் பரிந்துரையாக நாலு வார்த்தை சொல்லுவோமில்லையா?

அப்படிப் "படித்தான் பரிந்துரை" என்ற தலைப்பில் ஸ்ரீ ரங்கம் திரு. வி. மோகன ரங்கன் அவர்கள் மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில்  எழுதிய நூல் அறிமுகத்தை இங்கேயும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. இதோ ஸ்ரீ ரங்கம் வி மோகன ரங்கன் அவர்களின் மோகனத் தமிழில், படித்தான் பரிந்துரையாக......

சீனி.விசுவநாதன் 

"பாரதி  ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்"  நூல்  640 பக்கங்கள்  கொண்ட ஹார்ட் பௌண்ட் புத்தகம்.   முன்னரே சிக்கல்கள்  மட்டும் பற்றிச்  சிறு நூலொன்று   இவரால்   எழுதப்பட்டு  வந்தது.   ஆனால் இந்த  நூல்   மிக  விரிந்ததும்,   கிட்டத்தட்ட  அனைத்துக் குளறு படிகளையும், பாரதி  நூல்கள்,  வாழ்க்கைச்  செய்திகள்,  சரித நூல்கள், மூன்றாம் மனிதர் தகவல்,   சக  காலத்து  அறிஞர்கள்  பின்னிட்டுப் பாரதியின் பெருமை  உணரத் தலைப் பட்ட பின் புது ஊக்கம் கொண்டு தாங்கள் பழக நேர்ந்த பாரதி நாட்களைப் பற்றிய நேரடி வர்ணனைகளின் சான்றாண்மை என்று மிக விரிவாகச் செய்திருக்கிறார் ஆசிரியர். 

பாரதி இயலின் பெரும் உபகாரி இந்த ஆசிரியர் என்பது பலருக்கும் மேன்மேலும் தெரிந்துகொண்டு வரும் விஷயம்.


10 வால்யூம்கள் கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி நூல்கள் இது வரை வந்துவிட்டன. மேற்கொண்டு ஓரிரு வால்யூம்கள் வர இருக்கின்றன. அந்த நூல்களில் எல்லாம் ஆசிரியரின் உழைப்பைப் பூரணமாகப் பார்வையிடும் பொழுது எனக்குத் தோன்றிய கருத்து இந்த ஆசிரியருக்கு உண்மையில் இந்த வேலைக்காக இரண்டு பட்டங்கள் தரவேண்டும் என்பதுதான். ஏனெனில் பாரதியின் எழுத்துக்களைத் தேடிப்பிடித்து வந்து கால நிரல் படுத்தி ஊர்ஜிதம் செய்து போடுவது ஒரு பெரும் பணி. 

அதோடு நிற்காமல் பாரதி ஒரு கட்டுரை எழுதுகிறார் என்றால் அந்தக் கட்டுரை வேறு ஏதோ நிகழ்ச்சிகளையோ, அல்லது மற்றவர் எழுதிய இதழ்க் கட்டுரைகளையோ குறிப்பிட்டால் அந்த நிகழ்ச்சிகள் பற்றிய தகவல், அந்தக் கட்டுரைகள்   பற்றிய தகவல், முடிந்த இடத்தில் எல்லாம் அந்தக் கட்டுரைகளின் நகல், மற்றும் அதன் தமிழாக்கம் (ஆங்கிலமாய் இருப்பின்) என்று அந்தக் காலக் கட்டத்தையும் சேர்த்து ஆவணப் படுத்திவிட்டார் ஆசிரியர்.

இவ்வளவு நெடிய உழைப்பில் பழுத்த, பாரதி வித்தையை வளர்க்கும் பெரியவர் இப்பொழுது கொண்டு வந்திருக்கும் நூல் ‘பாரதி ஆய்வில் சிக்கல்களும் தீர்வுகளும்’. இந்த நூல் எந்த அளவிற்குச் சான்றாண்மை மிக்கதாய் இருக்கும் என்று நீங்களே ஊகிக்கலாம்.

நூலாசிரியரின் ’படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை’ என்ற அறிமுகம், 32 தலைப்புகளில் நெடுங்கட்டுரைகள், 6 பின்னிணைப்புகள் என்று நூல் பரந்துபட்டு பாரதி ஆய்வுலகின் சிக்கல்களையும், தீர்வுகளையும் விளக்குகிறது.


உதாரணத்திற்கு மூன்று சொல்கிறேன். ‘சத்தியப் போர்’ என்பது பாரதி பாடலா? சங்கு சுப்பிரமணியன் தம் இதழில் போட்டது. அது பாரதி பாடல் இல்லை என்று பாரதியின் தம்பி திரு சி விஸ்வநாதனும், திரு சிதம்பரம் ரகுநாதனும் கருத்து தெரிவித்தனர். திருமதி செல்லம்மா பாரதி வெளியிட்ட சுதேச கீதங்கள் பதிப்பில் இருந்ததாகத் திரு சிதம்பரம் ரகுநாதனின் கருத்து. பாரதியின் தம்பி கருதியது சொற்கள் பாரதியின் சொல்லாட்சியாக இல்லை என்பது. பாரதி பிரசுராலயம் வெளியிட்ட பதிப்பில் இந்தப் பாடல் இடம் பெறவில்லை.  நூல் இந்தச் சிக்கலை விளக்கி, தீர்வும் தருகிறது.

அடுத்து பாப்பா பாடல். பாரதி பிரசுராலயத்தாரின் பதிப்பில் பல பிழைகள் என்று வாசகர்களின்  சார்பாக நியாயக் குரல் எழுப்பினார் புதுமைப் பித்தன் மணிக்கொடியில். ஆனால் அவர் சுட்டிக்காட்டிய தவறுகள் பாரதி காலத்திலேயே பதிப்பிக்கப்பட்ட தொகுப்புகளில் ஏறியிருந்தால். அப்பொழுது அவை தவறுகள் அல்லவே. 

கிடைத்ததைக் கொண்டு பாரதியின் ஆகச்சிறந்த உண்மையான பாடம் என்றுதானே ஆகும். இவை எல்லாம் பாரதி பற்றிய ஆவணங்களை பல பத்தாண்டுகளாகத் தேடித் திரட்டி வரும் ஆசிரியர் சுட்டிக் காட்டி உண்மை நிலவரங்களைத் தெளியப் படுத்துவது எத்தகைய ஆக்க பூர்வமான பணி!

அடுத்து, திலகர் மறைந்த போது ஏன் பாரதியார் அவரைபற்றி எதுவும் பாடவில்லை? எங்கிருந்தார்? கடலூரில் எழுதிக்கொடுத்த வாசகங்கள் அவரைப் பாட விடாமல் கையைக் கட்டிப் போட்டதா? கிடைத்த தகவல்களுக்கிடையிலும், அந்தத் தகவல்களையும் அணுகும் முறையில் ஆர்வம், ஆர்வமின்மை காரணமாகவும் பலரும் பெரும் கேள்விகள் எழுப்பி, தம் கேள்விகளையே முடிவுகளாகவும் ஆக்கிச் செய்திருக்கும் குழப்பத்தின் இடையே இந்தச் சிக்கல் என்ன? அதன் தீர்வு யாது? என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

பாரதிதாசன் நோக்கில் பாரதியார் என்னும்படி ஒரு நூலில் திரு மணிகண்டன் தொகுத்த பாரதி பற்றிய பாரதிதாசன் பாடல்களில் ஒன்று அன்றொரு நாள் என்று 1907 ஆம் ஆண்டைப்பற்றிக் குறிப்பிட்டு பாரதியார், வவெசு ஐயர், அரவிந்தர் ஆகியோரைப் பற்றிப் பாண்டிச்சேரி சூழலில் விவரிக்கிறது. ஆசிரியர் திரு சீனி. விசுவநாதன் ’பாரதிதாசன் ஆய்வாளர்கள்  இந்தப் பாடலை மீள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்.  ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா?

இதுபோல் 640 பக்கங்களும் பாரதி ஆய்வாளர்கள், மாணவர்கள், நேசர்கள்  ஆகியோருக்கு அருமையான பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை.

பின்னிணைப்புகளில் தலைப்புகளே அவற்றின் முக்கியத்வத்தைக் கூறும்.  

1)பாரதி காலத்தில் பத்திரிக்கைகளில் பிரசுரமான பாடல்கள்  

2)பாரதி காலத்தில் நூல் வடிவம் பெறாத பாடல்கள் 

3)பாரதி காலத்திய நூல்களில் மறுபிரசுரம் செய்யப்பட்ட பாடல்களுக்கான விவரம்  

4)பிரிட்டிஷ் அரசு ஆட்சிக்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாரதி பாடல்கள்.

பாரதி இயலை கற்பனைகளின் மைதானமாக ஆக்கிவிடும் நிலையிலிருந்து மீட்டு, ஆரோக்கியமான ஆய்வுகள் மிகுவதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியதில் பெரும் பங்கு திரு சீனி. விசுவ நாதனுடையது.


--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

பாரதி  ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்


ஆசிரியர் --சீனி.விசுவநாதன்


முதற் பதிப்பு -- 31 டிசம்பர் 2009 

நூல் கிடைக்குமிடம்


சீனி. விசுவநாதன்
2, மாடல்  ஹவுஸ் லேன்,
சி ஐ டி நகர்,
சென்னை நகர் -- 600035
தொலைபேசி:  044-24315757


விலை ரூ 275 --00

மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தின் இழை ஒன்றில் இருந்து நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப் படுகிறது.


இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)