Wednesday, June 30, 2010

இலைக் குணம்! புதுமைப் பித்தன் கட்டுரை

 30, ஜூன் 1948 இல் மறைந்த புதுமைப்பித்தனுடைய நினைவு தினம் இன்று! அவருடைய கட்டுரை ஒன்றை, நினவஞ்சலியாக இங்கே!
ன்று நானும் எனது நண்பரும் ஒரு வேலையாகச் சென்றிருந்தோம். திரும்பும்பொழுது நல்ல வெயில். எனக்குக் கொஞ்சம் தாகமெடுத்தது.எனது நண்பருக்கோ காப்பி பிடிக்காது. இப்படிப் பட்ட பிரகிருதிகளும் உண்டா என்று ஆச்சரியப் படாதீர்கள்.அதற்காக சாப்பாட்டுக் கடைஎன்று சொல்லப் படும் ஒரு கீழ்த்தர ஹோட்டலுக்குப் போய் சுக்கு வெந்நீர் கொண்டு வரச் சொன்னோம். அங்கே இருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
 
ருவர் விநாயக பகவானுக்கு அண்ணா என்று சொல்லலாம். மற்றவரோ எனில் உண்ணாவிரத உபவாச  மகிமைகளை அனுபவத்தில் அறிந்த மகான் போலத் தோன்றினார். முதற் கூறப்பட்ட மனிதர் சுமார் ஒரு அரைப்படி மோர்சாதத்தை சட்னியுடன் வேட்டையாடின காட்சியை எப்படி உரைப்பேன்!  
லையாழ்வானிடத்தில் இடையறாத அன்பு! ஒன்று மாத்திரம் சொல்கிறேன். அவரது கை தறியின் ஓடம் போல, இலைக்கும் வாய்க்குமாகப் பறந்ததுகடைசியாக இலையை வழித்து நக்கி விட்டு, பக்கத்தில் இருந்த ஒரு செம்பு ஜலத்தையும் ஒரே மூச்சில் தனது குஷியில் செலுத்திவிட்டு "ஹாய் " என்ற சத்தத்துடன்  சுவரில் சாய்ந்தார்என்ன! எரிமலைகள் நெருப்பைக் கக்கும்போது பாதாளத்திலிருந்து ஒரு ஹூங்கார சப்தம் புரண்டு கொண்டே வருமாம். அது போல எங்கே வாந்தி எடுக்கப் போகிறாரோ என்று நினைத்தேன். நல்லகாலம், அது சாதாரண ஏப்பம் தான்! சாப்பாட்டை எப்படி அனுபவித்தாரோ அப்படியே ஏப்பத்தையும் நன்றாக அனுபவித்துத் தான் விட்டார். "கிறள்" புலவர் வேடிக்கையாக
 
தின்றதனால் ஆயபயன் என்கொல்--ஏப்பந்தான்
நன்றுவராஅ தெனின்
 
ன்றதின் உண்மையைக் கண்டேன்.

"
ரி, நாம் சேர்மாதேவியில் இறங்க வேண்டுமானால், இந்த ரயிலுக்கே புறப்பட வேண்டும்"  .என்று எழுந்தார் விநாயகர் அண்ணா.
 
சேர்மாதேவி, திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து  முக்கால் மணி நேரப் பிரயாணம்.

"
ன் நாம் சேர்மாதேவியில் இறங்க வேண்டும்?" என்று தயங்கினார் உபவாச விரதர்.

"
ன் நாம் சேர்மாதேவியில் இறங்க வேண்டும்?" என்று ஆச்சரியமும் கோபமும் கலந்த குரலில் திரும்பச் சொல்லிவிட்டு " ஏன்? என்ன காப்பி சாப்பிட வேண்டாமா?" என்றார் இந்த பூலோக விநாயகர்.
 
வர் இப்படிப் பதில் சொல்லும்பொழுது அவரது அந்தராத்மாவின்  "மருமத்தில் எறிவேல்" பட்டதுபோலத் தோன்றியது அவரது குரலின் தொனி. திருச்செந்தூர் போய்விட்டு வருகிறவர்கள் திருநெல்வேலி ஜங்ஷனில் மத்தியான போஜனத்தை முடித்து விட்டு, சேர்மா தேவியில் காப்பி சாப்பிட வேண்டும் என்று தெரியாத மனிதனும் உண்டோ என்று ஆச்சரியப்பட்டார் இந்தக் கலிகாலக் கவந்தன்.  
வரது மனவுலகில் திருநெல்வேலி என்றால் திருப்தியான "சாம்பார் சாதம்" "தயிர் சாதம்" என்றும், சேர்மாதேவி என்றால் ஒரு டஜன் இட்லி சட்னிகளை அடித்துச் செல்லும் பெருவெள்ளமாகிய காப்பி என்ற சிற்றுண்டி என்றும் பொருள்பட்டு  நின்றது.
 
ம்மாதிரி இலையாழ்வாருக்குப் பக்தி செலுத்தும் அன்பர்களை மரியாதைக் குறைவாக எழுதுவதாக எண்ணக் கூடாது. என்ன, நமது பண்டைக் கிழவியின் கவிகள், நமது இலக்கியத்தில் அவள் உண்ட விருந்துகளின் ஜாபிதாக்களாகப் பரிமளிக்கின்றன அல்லவா!
 
டகென்று  சொல்லி அமுதத்தையிட்ட
கடகம் செறிந்த கை
 
கை மட்டுமா அவ்வையின் ஓவியத்தில் பாதிக்கப் படுகிறது? கைக்குப் பின் நங்கையின் மனமும் வன்மையுமன்றோ  நமது மனக்கண் முன் நிற்கிறது!மற்றும்,
 
ரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும்

ரிந்திட்ட புல்வேளூர் பூதனது வன்மையையும்  நமது கிழவி காலவாரியை எதிர்த்துப் புகழ் பெறும் தன கவிகளில் நமக்குக் காண்பிக்கிறாள்! விருந்து மணக்கும் இக்கவிகள் அவள் காலத்துச் சாதாரண மக்களின் உள்ள நிலையையும் வள்ளன்மையையும் நமக்குக் காட்டுகின்றன.
 
நான் எப்பொழுதும் ராமலிங்க சுவாமியை சாப்பாட்டுச் சாமி என்று சொல்லுவது வழக்கம். கடவுள் என்றால் எத்தனை டஜன் மாம்பழங்கள் என்று சொல்லிவிடுவார் போலிருக்கிறது. அவர் திருவாசகத்தை அனுபவித்த அருமையைப் பாருங்கள்!
 
வான் கலந்த மாணிக்க வாசகத்தின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ் சுவை கலந்தென்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!
 
ந்த "மோஸ்தர்" இலக்கிய ஆராய்ச்சி நமக்குள் இன்னமும் புறப்படவில்லை. வந்தால் நமக்குக் கம்ப ராமாயணம் எத்தனை பதிர் பேணைக்குச் சமானம் என்று சொல்லி இலக்கியச் சுவையை  லேசாக எடுத்து ஊட்டி விடுவார்கள்.

வ்வடியார் கூட்டத்தில் நானும் ஒருவன். எனது அனுபவத்தைச் சிறிது கேளுங்கள்.
னது நண்பரும் குருநாதருமானவர்--பெயரைச் சொல்ல இஷ்டமில்லை.--'ரசிகர்' என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் மாணவனாக இருந்த காலத்தில்  தமிழ் இலக்கியம் என்றால், சமணரைக் கழுவேற்றுவதற்கும், "காதைக் குறும்பையளவாகத் தோண்டி எடுப்பதற்கும்" இடையிடையே "முதலையுண்ட பாலனை அழைத்தல்" "எலும்பைப் பெண்ணுருவாக்குதல்" முதலிய செப்படி வித்தைகள் செய்வதற்கும், தற்காலத்தில் சர்வகலாசாலைப் பண்டிதர்கள் கால ஆராய்ச்சி செய்து, பால் மணம் மாறாத மாணவர் தலையில் சுமத்துவதற்கும், ஏற்பட்ட சித்திரவதை செய்யும் ஸ்பானிய யந்திரம் (Spanish English of Inquisition) என்று எண்ணியிருந்தேன்.
 

சிகர் தன் தமிழ் இலக்கியத்தின்  உண்மை இனிமையாகக் காட்டி என்னை அனுபவிக்கச் செய்பவர். அவருடன் பேசுவதே ஒரு அனுபவம் என்று சொல்லுவேன். அவர் இப்பொழுது சென்னையில் இருக்கிறார். கொஞ்ச நாட்களுக்கு முன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது.அதைப்பற்றித் தான் நான் சொல்ல வந்தது.
 

குசலம் விசாரித்த பிறகு சாப்பிட உட்கார்ந்தோம். சமையல் அன்று விசேஷம். ஆனால் விருந்தல்ல. நான் பொறித்த குழம்பை  விளக்கெண்ணைப் பிள்ளைக்கும்,நோயாளிக்கும் நெருங்கிய பந்து என்று நினைத்திருந்தேன். நான் அன்று உண்ட பொறித்த குழம்பு எந்த வெங்காய சாம்பாரையும் தூக்கி அடித்துவிடும்!

பேச்சின்போக்கில் பாரதியாரின் "நெஞ்சு பொறுக்குதில்லையே"  என்ற நொண்டிச் சிந்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர், சிலரைப் போல பிரசங்க மாருதத்தால்  ஏன் மூளையைச் சிதற அடிக்க வில்லை. பாரதியின் பாட்டுக்கு "ஸ்பெஷல் ப்ளீடிங்" மாதிரி இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் வேலை செய்யவில்லை. அதைக் கேட்ட பிறகு, பாரதி உண்மைக் கவி என்பதற்கு அந்தப் பாட்டு ஒன்றே போதும் என்று பட்டது. அன்று பாரதியாரின் ஆவேசமும் மனக் கொதிப்பும் அந்தப் பொறித்த குழம்பு பெற்றதென்றால் வியப்பென்ன! பாட்டை அனுபவித்ததனால் உண்டான குதூஹலமும் எக்களிப்பும் அன்று உணவிற்கு ஒரு கவிதை உணர்ச்சியைக் கொடுத்தது.
 

னால் ஒன்று! தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும் வாழ்க்கையின் ஓர்  உன்னத ஆதர்சமாக வைப்பது சரியல்ல. சாப்பாடு, உயிர் வாழ்வதற்கு அவசியம் தான்! ஆனால் வாழ்க்கை வேறு. உயிர் வாழ்தல் வேறு. வாழ்க்கை ஓர் அனுபவம். சிலர் உலகம் முழுவதையுமே சாப்பாட்டுக் கடையாக மதித்து விடுகிறார்கள்.
******

கொஞ்ச நாளைக்கு முன் இந்த மாதிரி மனிதனை நான் சந்திக்க நேர்ந்தது. அவர் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள க்ஷேத்திரங்கள் எல்லாம் தரிசிக்க வந்திருந்தார். உண்மையில் வாழ்க்கை இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தாமிரவருணி தீரத்தில் உள்ள கிராமாந்தரத்தில் தான் வசிக்க வேண்டும். நான் சந்தித்த மனிதனுக்கும் அதே தான் ஆசை. ஆனால் காரணம்  வேறு! அவருக்கு வாய் அரை நிமிஷம் சும்மாயிராது. சாப்பிட்டுக் கொண்டாவது அல்லது அதன் பெருமைகளைப் பேசிக் கொண்டாவது இருக்க வேண்டும். "அப்படிப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே."

"
சார், போளி என்றால் அது கடம்பூர் போளிதான் சார்! நானும் எங்கெங்கோ பார்த்திருக்கிறேன், அதற்கு ஈடுஜோடு இந்த உலகத்திலேயே கிடையாது சார்!" இவர் இப்படிப் பேசி வருவதைப் பார்த்தால், உண்மையில் சைவப் பற்றுடைய பக்தர் ஒருவர் தேவாரத் திருமுறைகளைப் பக்தி சிரத்தையுடன் எடுத்து ஒதுவது போலிருந்தது. உண்பதே ஒரு பெரிய சமயமாகக் கொண்ட சாப்பாட்டு நாயன்மாராக இருந்தார்.
 
டனே சித்திரான்னத்திற்குப் பாய்ந்தார்."ஆமாம் சார். ஜங்ஷனில் இறங்கும்போது பசி அதிகம். அதுதான் முதல் தடவை போனது. அந்த ஹிந்து காலேஜ் பக்கத்தில் ஒரு பிராம்மணன் இருக்கிறான் சார். சின்ன  ஹோட்டல் தான்--சித்திரான்னம் என்றால் அங்கு தான் சார்! செலவு ஜாஸ்தியில்லை--நான் வயிற்றுக்கு வஞ்சகம் செய்து மிச்சம் பிடிப்பவனல்ல, என்ன! போங்க!. அந்த அய்யன் என்னதான் போடுவானோ....!" என்று ஆரம்பித்து சித்திரான்ன மான்மியத்தை முடிப்பதற்குள்  நாங்கள் ஜங்ஷனுக்கே வந்து சேர்ந்தோம்.
 
ப்படி இந்த மனிதன் தேடிக் கண்டுபிடித்த அம்பாசமுத்திரம் முறுக்கு, ஆழ்வார் திருநகரி தேங்குழல், நாங்குநேரி நெய்யப்பம், இத்தியாதி பொருள்களின் அருமை பெருமைகளை, கொலம்பஸ் அமெரிக்கா கண்டு பிடித்த மாதிரிஎங்களுக்கு எடுத்துச் சொல்லித் திருநெல்வேலி ஜில்லா சாப்பாட்டு பூகோள சாஸ்திரத்தை எங்களுக்குக் கற்பித்தார்.
 
வர் கண்ட திருநெல்வேலியை நான் கனவிலும் கண்டதில்லை! கடம்பூர் போளியும், பழனி பஞ்சாமிர்தமும் வாழ்க்கையின் ஆதர்சமாகக் கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் நடமாட வேண்டும்!
******

இன்றைக்குப் புதுமைப் பித்தன் நினைவு தினம்! நாற்பத்து நான்கே ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த சொ. விருத்தாசலம் என்ற இந்த எழுத்தாளருடைய தாக்கம் தமிழில் எழுத முனைகிற ஒவ்வொருவரிடத்திலும் கொஞ்சமாவது இருக்கிறது.

இது புதுமைப்பித்தன் 1943 ஆம் ஆண்டில் எழுதியது.  Sunday, June 20, 2010

சமுதாய வீதி! நா.பார்த்த சாரதி


சமுதாய வீதி! நா.பார்த்தசாரதிக்கு சாஹித்ய அகாடெமி விருதைப் பெற்றுத் தந்த புதினம்!

நேற்றைக்கு இந்தப் புதினத்தைத் தான் மறுவாசிப்பாகவும், வாசித்த அனுபவமாகவும் இந்தப் பக்கங்களில் பகிர்ந்து கொள்ள குறிப்புக்களை ஆன்லைனிலேயே தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன். திருத்தங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த தருணம், கைதவறி ஆன்லைனில் தட்டச்சு செய்த விண்டோவை மூடிவிட, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலான உழைப்பு ஒரு கணத்தில் காணாமல் போனது. 


கொஞ்சம் வருத்தத்துடன், தான் பதிவிட நினைத்திருந்தது வேறொன்றாக இருந்தாலும், என்னுடைய சேகரத்தில் குறிப்புக்களாகச் சேகரம் செய்து வைத்திருந்ததில், திண்ணை இதழில் பாவண்ணன்  நா.பாவின் வேப்பம் பழம் சிறுகதையை விமரிசனமாகப் பகிர்ந்து கொண்டிருந்த ஒரு பகுதியையும் சேர்த்து ஒரு பதிவாக வெளியிடும்படி ஆனது.

சமுதாய வீதி! இந்தப் பெயர் அல்லது தலைப்பு  கதையோடு எப்படிப் பொருந்துகிறது என்பது எனக்குள் இன்னமும் இருக்கும் விடை கிடைக்காத கேள்வி! இந்தக் கதையை எழுதிய நேரத்தில், தமிழ் நாட்டில் அரசியல் ஆகட்டும், செய்தி, பொழுதுபோக்கு, ஊடகங்கள் இப்படி எது வேண்டுமானாலும் ஆகட்டும்  சினிமா தான் கதி என்று புரையோடிப்போய்க் கிடைக்கவில்லை. 


சினிமா நடிகைகளுக்குக் கோவில் கட்டுகிற அளவுக்கு, சமுதாயம் அவ்வளவாக சீரழிந்திருக்கவில்லை. நாலு சினிமாவில் நடித்து முகம் அறிமுகமானவன் எல்லாம், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக முனைகிற அளவுக்கு தமிழ்நாடு அவ்வளவு மோசமாக இருந்ததில்லை.

சமுதாயவீதி என்ற இந்தப் புதினத்தின் கதைக்களம் என்னவோ  நாடக, திரைப்படக் கலைஞர்களை வைத்துத் தான்! அதனாலேயே சமுதாய வீதி என்று தலைப்பு வைத்து விட முடியுமா என்பது இன்னமும் எனக்கு புரிபடாமல் இருக்கும் கேள்வி.

மதுரை கந்தசாமி வாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடக சபா கலைக்கப்பட்டுப் பட்டினத்துக் கலையுலகத்தில் பஞ்சம் பிழைக்க வந்த ஆளாக நுழைந்தபோது வாழ்க்கை வசதிகள் சுருங்கியது போலவே பெயரும் சுருங்க வேண்டிய நியதிக்கு அவன் தலை வணங்கியாக வேண்டியிருந்தது.

முத்துக்குமரன் - என்ற பெயர் நாகரிகமாகவே தோன்றியது அவனுக்கும் மற்றவர்களுக்கும். சேத்தூர், சிவகிரி ஜமீன்தார்களை அண்டிப் பிழைத்த அவன் முன்னோர்கள் வேண்டுமானால் 'அகடவிகட சக்ர சண்டப்பிரசண்ட ஆதிகேசவப் பாவலர்' - என்பது போன்ற நீண்ட பெயர்களை விட்டுக் கொடுக்கவும் குறைக்கவும் அஞ்சியிருக்கலாம். ஆனால், இன்று இந்த நூற்றாண்டில் அவனால் அப்படி வாழ முடியவில்லை. பாய்ஸ் கம்பெனி மூடப்பட்டுப் பத்து மாதம் மதுரையில் ஒரு பாடப் புத்தகக் கம்பெனியில் சந்தியும், குற்றியலுகரமும் திருத்தித் திருத்திப் புரூஃப் ரீடராக உழன்ற பின் நாடகத்தின் மூத்த பிள்ளையாகிய சினிமா உலகத்தைத் தேடிப் பட்டினத்துக்குத்தான் ஓடி வந்தாக வேண்டியிருந்தது அவன்.

மதுரையிலிருந்து முத்துக்குமரன் - பட்டினத்துக்கு ரயிலேறியபோது - அவனிடம் சில அசௌகரியங்களும் இருந்தன - சில சௌகரியங்களும் இருந்தன. அசௌகரியங்களாவன;

பட்டினத்துக்கு அவன் புதிது; முகஸ்துதி செய்ய அவன் பழகியிருக்கவில்லை. அவனிடம் யாருக்கும் அறிமுகக் கடிதமோ சிபாரிசுக் கடிதமோ இல்லை. கையிலிருந்த பணம் நாற்பத்து ஏழு ரூபாய்தான். கலையுலகத்துக்கு மிகுந்த தகுதியாகக் கருதப்பட்ட எந்தக் கட்சியிலும் அவன் உறுப்பினரோ, அநுதாபியோ இல்லை.

சௌகரியங்களாவன :

அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதன் பொருள் அவன் திருமணத்தையோ பெண்ணையோ வெறுத்தான் என்பதில்லை. ஒரு நாடகக் கம்பெனி ஆளுக்குப் பெண் கொடுக்கவோ, மதிக்கவோ அன்றைய சமூகத்தில் யாரும் தயாராயில்லை என்பதுதான் காரணம். பின்புறமாக அலையலையாய்க் கருமை மின்னும்படி சுருளச் சுருள வாரிவிட்ட அமெரிக்கன் கிராப், கிரேக்க வீரர்களில் சுந்தரமான தோற்றமுடைய ஒருவனைப் போன்ற எடுப்பான முகத்தில் இடையறாத புன்முறுவல், நல்ல உயரம், அளவான பருமன், இரண்டாம் முறையாகத் திரும்பிப் பார்க்க யாரும் ஆசைப்படுகிற களையான தோற்றம், கணீரென்ற குரல் - இவை அவனிடம் இருந்தவை.

எழும்பூர் நிலையத்தில் அவன் வந்து இறங்கிய தினத்தன்று மழை கொட்டு கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. ஒரு தென்பாண்டிச் சீமை கவி பட்டினத்தில் வந்து இறங்குவதைக் கொண்டாடுவதற்காக மழை பெய்ததாக யாரும் அதற்குள் தப்புக் கணக்குப் போட வேண்டியதில்லை. அது டிசம்பர் மாத பிற்பகுதியாதலால் வழக்கம் போல் சென்னையில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. டிசம்பர் மாதத்தில் மட்டுமில்லை; எந்த ஒரு மாதத்திலுமே பட்டினத்துக்கு அப்படி ஒரு மழை தேவையில்லை. மழை பெய்தால் பட்டினத்தில் எதுவும் விற்பதில்லை. தியேட்டர்களில் கூட்டம் குறைகிறது. குடிசைப் பகுதிகளில் நீர் ஏறுகிறது. அழகிய பெண்கள் மினு மினுப்பான புடவைகளில் சேறு தெரிக்குமே என்று பயந்து கொண்டே தெருக்களில் நடக்க வேண்டியிருக்கிறது. வெற்றிலை பாக்குக் கடை முதல் புடவைக் கடை வரை வியாபாரம் மந்தமடைகிறது. குடைகள் மறதியால் தவறிப் போகின்றன. ஏழைப் பள்ளி ஆசிரியர்கள், குமாஸ்தாக்களின் செருப்புக்களில் திடீரென்று வார் அறுந்து போகிறது. டாக்ஸிக்காரர்கள் எங்கே கூப்பிட்டாலும் வர மறுக்கிறார்கள்.

இப்படி மழைக்குப் பயப்படுகிற பட்டினத்திற்கு எதற்காக மழை வேண்டும்?


இப்படி ஆரம்பிக்கிற அறிமுக வரிகளிலேயே, கதாநாயகன்  கெட்டும் பட்டினம் சேர் என்று  பிழைப்பைத் தேடித் பட்டணத்துக்கு வருகிறானேயன்றி, கெட்டுப் போவதற்காகப் பட்டணம் வரவில்லை என்பதும், எவருக்கும் தலை வணங்காதவன் என்பதும் நறுக்குத் தெறித்தாற்போல ஒரு அறிமுகம் ஆகி விடுகிறது. கதாநாயகன் சென்னைக்கு வந்து சேரும் நேரம் மழைக்காலம்! சிங்காரச் சென்னை அன்றைக்கும் இப்போது நாறுகிற மாதிரித் தான் நாறிக் கொண்டிருந்தது என்பதை அதிக வார்த்தைகளை வீணாக்காமல் மழைபெய்யும் நேரம் பட்டினம் எப்படியிருக்கும் என்ற வர்ணனையே சொல்லி விடுகிறது.

நாடக சபாவில் முத்துக்குமாரோடு ஒன்றாகத் தங்கி, ஸ்திரீபார்ட் வேஷம் கட்டிய கோபாலசாமி என்ற கோபால், இன்றைக்கு சினிமாவில் பிரபலமான ஆளாக ஆகிவிட்டான். அவனைச் சந்தித்தால், வேலைக்கு ஒரு வழி சொல்வான் என்ற நம்பிக்கையோடு நாயகன் சினிமாக்காரன் கோபால் வீட்டுக்கு வருகிறான். அங்கே ஏகப்பட்ட கூட்டம். கோபால் ஒரு நாக்கக் குழுவை ஆரம்பிக்கப் போகிறானாம். அதற்காகத் தகுதி உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஏதோ நேர்முகத் தேர்வாம்! ஆணும் பெண்ணுமாக நிறையப்பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து காத்துக் கொண்டிருக்கையில் இன்றைக்குப் பிரபலமாகிவிட்ட பழைய நண்பன் நினைவு வைத்துக் கொண்டிருப்பானா, மரியாதை கொடுப்பானா என்ற நினைவும் நாயகனுக்கு வந்துபோகிறது. மாதவி என்கிற ஒரு பெண், இவன் பக்கத்தில் வந்து தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள். அவனும் அந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்குத் தான் வந்திருக்கிறானா என்று நாசூக்காக விசாரிக்கிறாள். கதாநாயகியின் அறிமுகமும், இங்கேயே மென்மையாக ஆரம்பமாகி விடுகிறது.

திரைப்பட நடிகர், நடிகர்திலகம் கோபால் ஒரு அமர்க்களமான சூழ்நிலையில் கதையில் அறிமுகமாகிறான்.முத்துக் குமாரைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் வாத்தியார் எப்ப வந்தாப்பில என்று பாந்தத்துடன் விசாரிக்கிறான். ஒரு நாடகக் குழுவை ஆரம்பிக்க நினைத்து ஆட்களையும் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் வாத்தியாரும் வந்தது நல்லதாகப் போயிற்று என்று சொல்லி, முத்துக் குமார் தனது கெஸ்ட் ஹவுசிலேயே தங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி பெட்டி படுக்கையை எல்லாம் டிரைவரை விட்டு ஹோட்டலில் இருந்து எடுத்து வரச் செய்கிறான்.

நாடகக் குழுவுக்கு என்ன பெயர் வைக்கலாம்என்று முத்துக் குமாரிடமே  யோசனை கேட்கும் கோபாலுக்கு, கோபால் நாடக மன்றம் என்றே பெயர் வைக்கலாமே என்று கொஞ்சம் எகத்தாளமாக முத்துக் குமார் சொல்கிறான்.


 "வம்பளக்காதே... பெயரைக் கண்டுபிடிச்சுச் சொல்லு வாத்தியாரே...?"

'கோபால் நாடக மன்றம்'னே வையி! இந்தக் காலத்திலே ஒவ்வொருத்தனும் கும்பிட வேறே தெய்வம் இல்லே; தானே தனக்குத் தெய்வம்னு மனிதன் நினைக்கிற காலம் இது. கண்ணாடியிலே தன் உருவத்தைப் பார்த்துத் தானே கைகூப்புகிற காலம் இல்லையா?"

"'கோபால் நாடக மன்றம்'னு என் பெயரையே வைக்கிறதிலே எனக்குச் சம்மதம்தான். ஆனா ஒரு விசயம் செக்ரட்டரியைக் கலந்துக்கிடணும். 'இன்கம்டாக்ஸ் - தொந்தரவு இல்லாமப் போக வழியுண்டான்னு தெரிய வேண்டியது முக்கியம். அந்தத் தொந்தரவை ஓரளவு குறைக்கிறதுக்காகத்தான் இதைத் தொடங்கினதினாலே அது அதிகமாயிடப்பிடாது."

"ஓகோ! ஒரு கலைக்குப் பின்னால் கலையல்லாத இத்தனை காரணங்களை யோசிக்கணும்... என்ன?"

 "கலையாவது ஒண்ணாவது. கையைப் பிடிக்குமா, பிடிக்காதான்னு முதல்லே பார்க்கத் தெரிஞ்சுக்கணும்?"

 "ஓகோ! புதுசா இப்பத்தான் நான் இதெல்லாம் கேள்விப்படறேண்டா கோபாலு."

என்னதான் சுபாவமாகவும் சகஜமாகவும் பழகினாலும் கோடீஸ்வரனாகவும், நடிகர் திலகமாகவும் ஆகிவிட்ட தன்னை முத்துக்குமரன் 'அடாபிடா' போட்டுப் பேசுவதைக் கோபால் ரசிக்கவில்லை. ஒவ்வொரு 'டா'வும் முள்ளாகக் குத்தியது. ஆனால், அதே சமயத்தில் முத்துக்குமரனின் கவிதைச் செருக்கும், தன்மானமும், பிடிவாதமும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தவை. ஆகவே, முத்துக்குமரனுக்கு அவன் பயப்படவும் செய்தான். பதிலுக்குப் பழி வாங்குவது போல் தானும் அவனை 'அடா' போட்டுப் பேசலாமா என்று ஒரு கணம் குரோதமாகத் தோன்றினாலும் அப்படிச் செய்யத் தைரியம் வரவில்லை. நீ, நான் போன்ற ஒருமைச் சொற்களும், 'வாத்தியாரே' போன்ற பெயரும்தான் தைரியமாகக் கூற வந்தன. முத்துக்குமரன் என்ற தைரியசாலியோடு மேடையில் ஸ்திரீ பார்ட் போட்ட காலங்களில், 'நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்' என்று நாணிக் கோணிக்கொண்டு அன்று கூறிய நிலையே இன்னும் நீடித்தது. முத்துக்குமரனை மீறி நிற்க முடியாத மனநிலை இன்னும் அவனிடம் இருந்தது. அந்தப் பிரமையிலிருந்து அவனால் இன்னும் விடுபட முடியவில்லை. எதிரே வந்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு எடுத்தெறிந்தாற் போன்ற கர்வத்துடனும், ஒரு கவிஞனின் செருக்குடனும் பேசும் முத்துக்குமரனின் உரிமையையோ துணிவையோ, அந்தக் கோடீஸ்வர நடிகனால் நிராகரிக்க முடியாமலிருந்தது.

...................

"முதல் நாடகத்தை நீதான் கதை - வசனம், பாட்டு உள்படத் தயாரிச்சுக் கொடுக்கணும் வாத்தியாரே?"

"நானா? இதென்னப்பா வம்பா இருக்கு? எத்தினியோ புகழ்பெற்ற நாடகாசிரியருங்கள்ளாம் மெட்ராஸ்லே இருக்காங்க? என்னை யாருன்னே இங்கே யாருக்கும் தெரியாது. எம்பேரைப் போட்டா எந்த விளம்பரமும் ஆகாது! நான் எழுதணும்னா சொல்றே?" என்று கோபாலின் மனநிலையை அறிய முயன்றவனாகக் கேள்வி கேட்டான் முத்துக்குமரன்.

 "அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ எதை எழுதினாலும் பேர் வர்ராப்பிலே செய்யிறது என் பொறுப்பு" என்றான் கோபால்.


கோபால் உத்தேசித்திருக்கும் நாடகக் குழுவிற்காக முத்துக்குமார் ஒரு சரித்திர நாடகத்தை எழுதுவதென்று முடிவாகிறது

இப்படி இரண்டு விதமான குணாதிசயங்களைப் படைத்த பிறகு, இந்த குணாதிசயங்கள் மோதிக்கொள்வதற்கான  சூழலை உருவாக்க வேண்டாமா?
 

அதுவும் மாதவியை வைத்தே வருகிறது. நேர்முகத் தேர்வின் போது கம்பீரமாக  எவருக்கும் தலை வணங்காதவனாக  உட்கார்ந்திருந்த முத்துக் குமார், மாதவி  இதயத்திலும் ராஜாமாதிரி அமர்ந்து விடுகிறான். எழுதியதைப் படியெடுக்க ஒத்தாசைக்கு வருகிற மாதவி  நாயகன் மனதுக்குள்ளும் ஒரு ராணியைப்போல கம்பீரமாக அரியணை ஏறிவிடுகிறாள்.

கழைக் கூத்தியின் காதல்! முத்துக்குமாரின் கைவண்ணத்திலும் கற்பனையிலும் நாடகம் மிகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. நாடக ஒத்திகை, மந்திரி தலைமையில் அரங்கேற்றம், அப்படியே மலேசியக்  கலாரசிகர் கம் காண்ட்ராக்டருமான அப்துல்லாவையும் அழைத்து  மலேசியா, சிங்கப்பூரில் ஒரு மாதத்துக்கும் குறையாமல் நாடகத்தை நடத்த ஒப்பந்தம் செய்து கொள்வது என்று கோபால் வியாபார விஷயங்களில் படுஜரூராக இறங்கி விடுகிறான்.

கழைக் கூத்தியாக நடிக்கும் மாதவியைக் கண்டு காண்ட்ராக்டர் அப்துல்லா சொக்கிப் போய்விடுகிறார். கலா ரசிகர்கள் எல்லோருக்குமே வருகிற வியாதிதானே இது! விமானப் பயணத்தில் மாதவி தன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு தன்னோடு ஆசையாகப் பேசிக் கொண்டு வர வேண்டும் என்று அப்துல்லாவுக்கு ஆசை. முத்துக்குமார் தனியாக விடப்படுவானே என்பதால் மாதவி மறுக்கிறாள். அப்துல்லாவின் கோபம் முத்துக் குமாரிடம் திரும்புகிறது.


முத்துக்குமரன் தனிமையை உணராமலிருப்பதற்காக மாதவி உட்கார்ந்திருந்த ஸீட்டில் கோபால் உட்கார்ந்து கொண்டு - அவனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான்.

 ''அதுல பாரு வாத்தியாரே; அப்துல்லா ஒரு குஷால் பேர்வழி. நல்ல பணக்காரன், ஒரு நட்சத்திரத்தோட பக்கத்திலே உட்கார்ந்து பேசிப்பிடணும்னு உயிரை விடறான். கொஞ்சம் பொம்பளைக் கிறுக்கும் உண்டு! போய் உட்கார்ந்து பேசினாக் கொறஞ்சா போயிடும்? அவனோட காண்ட்ராக்ட்ல தானே இந்தத் தேசத்துக்கே வந்திருக்கோம்? இதெல்லாம் மாதவிக்குப் புரியமாட்டேங்கிறது! முழுக்கப் புரியலேன்னும் சொல்ல மாட்டேன். ரொம்ப சூட்டிகையான பொண்ணு அவ. புத்திசாலி, கண்ணசைச்சாலே அர்த்தம் புரிஞ்சிக்கிறவதான். வாத்தியார் இங்க வந்தப்புறம்தான் ஒரேயடியா மாறிப்போயிட்டா. முரண்டு, கோபம், உதாசீனம் எல்லாமே வந்திருக்கு...''

இப்படி வெளிநாட்டில் கலைச் சேவை செய்வதற்காகப் போகும் ஒரு நாடகக் குழு, தன்மானமும் ரோஷமும் மிகுந்த நாடக ஆசிரியன், அவனைக் காதலிக்க ஆரம்பிக்கும் நாடகத்தின் கதாநாயகி, திடீர் பிரபலமாகி சினிமாவில் நடிகர் திலகமுமாகிவிட்ட பழைய நண்பன் கோபால், கலாரசிகர் கம் காண்ட்ராக்டர் அப்துல்லா என்று கதை, மனித உணர்வுகளின் வெவ்வேறு நிலைகளைத் தொட்டு நகர்கிறது. கலையுலகின் பல்வேறு வக்கிரங்களையும் அப்பட்டமாகத் துகிலுரித்துக் காட்டுகிறது. இதற்கு மேலும் சம்பவங்களை அடுக்குவது, மொத்தக் கதையையும் சொல்லி விடுகிற மாதிரி ஆகிவிடக் கூடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

சமுதாய வீதி! கொஞ்சம் சுவாரசியமான புதினமும் கூட!

இதில் வர்ணிக்கப் பட்ட நடிகர் திலகம் கோபால், சினிமாவில் நடிகர் திலகமாக இருந்தவரைப் பிரதிபலிப்பதுபோலப் படைக்கப் பட்டது தான் என்பது இன்னொரு கூடுதல் சுவாரசியம்!


நா.பார்த்தசாரதியின் படைப்புக்களிலேயே ஆகச் சிறந்தவைகளாகச் சொல்லக் கூடியவை குறிஞ்சிமலர், பொன் விலங்கு, மணி பல்லவம் இந்த மூன்றும் தான்!  நித்திலவல்லி, கபாடபுரம், வஞ்சிமாநகரம், ராணி மங்கம்மாள் என்று சரித்திரப் புதினங்களையும் சுவையாகப் படைத்தவர் நா.பார்த்தசாரதி.

சமுதாய வீதி! முத்துக்குமார்-மாதவி பாத்திரப்படைப்புக்காகவே மறுபடி படிக்கத் தூண்டுகிற அளவுக்கு சுவாரசியமான புதினம் தான்!எது நல்ல எழுத்து என்பதற்கு ஒரு அடையாளமாகச் சொல்ல முடிகிற புதினமும் கூட! Saturday, June 19, 2010

வேப்பம் பழம் -- நா.பார்த்த சாரதி


நா.பார்த்தசாரதியை தங்களுடைய ஆதர்சமாக, மானசீக குருவாக ஏற்றுக் கொள்ளாத இளைஞர்களே 1960,1970 களில் கிடையாது என்ற அளவுக்கு, நா.பார்த்தசாரதியின் எழுத்துக்களை ஒரு வெறியோடு படித்துக் கொண்டிருந்த மாணவர்களாகவும், இளைஞர்களாகவும் இருந்த கூட்டத்தில் நானும் ஒருவன்

 நா.பாவின் எழுத்துக்களில் அங்கங்கே தென்படும் சில பொன் மொழிகளை அடிக் கோடிட்டு, அதைத் தனி நோட்டுப் புத்தகத்திலும் குறித்து வைத்துக் கொள்வது அனேகமாக நா.பார்த்த சாரதி என்ற ஒரு எழுத்தாளரைப் பின்பற்றிய வாசகர்களிடம் மட்டுமே இருந்த ஒரு வழக்கம்.

கலகத்தை, நாசத்தைத் தூண்டக் கூடிய எழுத்தை இன்றைக்கு இணையத்திலேயே நிறையத் தருணங்களில் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம் . அடிப்படையில் சரியான காரணமே இல்லாமல் வெறுப்பைக் கக்குகிற எழுத்தையும் தான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் .  

அன்றைய நாட்களில் நா.பார்த்தசாரதி, அகிலன், தி.சா.ராஜு, ராஜம் கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் ஒரு லட்சிய தாகத்தோடு எழுதிக் கொண்டிருந்தார்கள் என்பதோடு, அவர்கள் எழுத்தைப் பின்தொடர்ந்த வாசகர்களும் ஒரு சத்திய வேட்கையோடு, ஆவேசத்தோடு படித்துக் கொண்டிருந்தார்கள்

இன்றைக்கு இரண்டுமே அதிகம் இல்லை என்ற வெறுமையைப் பார்க்கும்போது ஒரு வாசகனாக கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது! 

இன்னும் சில நாட்களில் நம்முடைய இந்திய சுதந்திரத்திற்கு இருபத்தைந்து வயது நிறையப் போகிறது. அந்நியர்களிடமிருந்து விடுதலைப் பெற்றுக் கால் நூற்றாண்டு முடியப் போகிறது என்றாலும் நமக்காக நம்மிடையில் நம்மவர்களிடம் இருந்தே நாம் பெற வேண்டிய விடுதலைகள் இன்னும் பல உள்ளன. மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும், சுபாஷ் சந்திர போஸும் தொடங்கிய போராட்டங்கள் முடிந்து விட்டது போல் தோன்றுகின்றன. ஆனால், இன்னும் அவை முடியவில்லை. அதிகாரம், ஆணவம், பதவி வெறி, சுயநல நஞ்சு, வறுமைப் பிடி ஆகியவற்றிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இங்கே இன்னும் விடுதலை பெறத் துடித்துக் கொண்டிருப்பது உண்மை.

இது 1972 இல் சத்திய வெள்ளம் என்ற தன்னுடைய புதினத்தின் கதை முகமாக முன்னுரையில் நா.பார்த்தசாரதி எழுதிய வார்த்தைகள். முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின்னாலும் கூட நமக்காக நம்மிடையில் நம்மவர்களிடமிருந்தே நாம் பெற வேண்டிய விடுதலைகள் இன்னும் பல உள்ளன என்ற வார்த்தைகளில் இருக்கும் செய்தி, அதன் வீரியம் அப்படியே இருக்கிறது. அன்னியரிடமிருந்து விடுதலை என்பது மாறி, நம்மவர்களிடமிருந்தே விடுதலை பெற வேண்டியிருக்கிறது என்ற அந்த வார்த்தைக்குள் தான் எத்தனை பொருள் பொதிந்து கிடக்கிறது! 

திருடன் திருடிக் கொண்டு ஓடும் போது, யாரையோ கைகாட்டி 'அதோ திருடன்! அதோ திருடன்' என்று கூச்சல் போட்டுக் கொண்டு தானும்  துரத்துவது போல ஒரு பாவனை செய்து தப்புவது போல இங்கே, சீர்திருத்தம், சமதர்மம் பற்றி வாய் கிழியப் பேசுகிறவர்கள் எல்லாம் அந்தத் திருடனைப் போல, வேறு யாரையோ கையைக் காட்டிவிட்டுத் தங்களுடைய சுயநலத்தை ஆதாயத்தைப் பெருக்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் தமிழ்வாசகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட எழுத்தாளராக விளங்கியவர் நா.பார்த்தசாரதி. அவர் எழுதிய 'குறிஞ்சிமலர் ' அரவிந்தனாக லட்சியத்துடன் தானும் விளங்கவேண்டும் என்று எண்ணாத லட்சிய இளைஞர்கள் அன்று மிகவும் குறைவு. சமுதாய வீதி, பொன்விலங்கு, மணிபல்லவம் ஆகியவை இவருடைய பிற புகழ்பெற்ற லட்சியப்படைப்புகள். 1960 ஆம் ஆண்டில் தமிழ்ப்புத்தகாலயத்தின் வெளியீடாக வந்த 'காலத்துக்கு வணக்கம் ' என்னும் சிறுகதைத் தொகுதியில் 'வேப்பம்பழம் ' என்னும் கதை இடம்பெற்றிருக்கிறது.

இப்படி ஒரு அடிக் குறிப்புடன் திண்ணை இதழில் பாவண்ணன் நீண்ட நாட்களுக்கு முன்னால் நா.பார்த்த சாரதியின் சிறுகதை ஒன்றை அறிமுகம் செய்து எழுதிய பக்கத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா?கல்லுாரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிற்சபேசன் மன அமைதியை விரும்பி ஒரு கிராமத்தில் குடியேறுவதிலிருந்து வேப்பம் பழம் என்ற சிறுகதை  தொடங்குகிறது. குடும்பத்தில் அவரும் அவர் மனைவியும் மட்டுமே இருக்கிறார்கள். குடிவந்த மறுநாள் அதிகாலை அழகைச் சுவைத்தபடி வாசலில் இருக்கும் வேப்பமரத்தடியில் நின்றிருக்கும்போது பதின்மூன்று அல்லது பதினான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி நெருங்கி வந்து வணங்குகிறாள்.  

அழுக்குச் சிற்றாடையும் கிழிந்த தாவணியுமாக ஏழைமைக் கோலத்தில் இருந்த அச்சிறுமியைக் கண்டு பேராசிரியர் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும்போது தனக்கு வீடு வாசலைப் பெருக்கிச் சுத்தமாக வைத்திருக்கத் தெரியுமென்றும் சம்பளமாக எவ்வளவு கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியுமென்றும் சொல்கிறாள். மேலும் தாயும் தந்தையுமற்ற தனக்கு தொடக்கப்பள்ளியில் படிக்கக்கூடிய ஒரு தம்பி மட்டும் இருப்பதாகவும் தான் உழைத்து அவனைக் காப்பாற்றுவதாகவும் பணிவுடன் சொல்கிறாள்.

பேராசிரியர் ஆதரவுடன் அவளுடன் பேச்சைத் தொடங்குகிறார். அவள் பெயர் பட்டு. பெற்றோர்கள் இல்லை. உறவு என்று சொல்லிக்கொள்ள ஒன்றிரண்டு பேர் வெளியூரில் இருந்தாலும் அவர்களால் உதவி எதுவுமில்லை. கிராமத்தில் இருக்கிற முன்சீப்பின் ஆலோசனையின் பேரில்தான் நாலு வீட்டில் எடுபிடி காரியங்கள் செய்து தம்பியைப் படிக்க வைக்கிறாள். தம்பி படித்துப் பெரிய ஆளானதும் வாழ்வில் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி தானாக விழுந்துவிடும் என்பது அவள் நம்பிக்கை.  

அவள் பேச்சும் சுறுசுறுப்பும் மனத்தைக் கவரத் தன் வீட்டிலும் அவள் தாராளமாக வேலை செய்யலாம் என்று அனுமதி கொடுக்கிறார் பேராசிரியர். அடுத்த தருணமே நெடுநாள் பழகிய வேலைக் காரியைப்போல சிற்றாடை நுனியை இழுத்துச் செருகிக்கொண்டு விளக்குமாறால் வாசலைக் கூட்டிச் சுத்தப்படுத்தி கோலம் போடத் தொடங்கிவிடுகிறாள் சிறுமி.

சிற்சபேசன் வீட்டுக்குள் போய் காப்பி குடித்துவிட்டு, மனைவியிடம் வேலைக்காரச் சிறுமி கிடைத்த பெருமையை அளந்துவிட்டுத் திரும்பவும் வாசலுக்கு வருகிறார். அப்போது வாசலில் விளக்குமாறு புரளும் பெருக்கல் ஓசை கேட்கவில்லை. வேப்பமரத்தடியில் விழுந்து கிடக்கிற பழங்களைக் குனிந்து எடுத்து ஒவ்வொன்றாக ஊதி வாயில் போட்டுச் சுவைத்துத் துப்பிக் கொண்டிருக்கிறாள் அவள்.  

ஆச்சரியத்தில் உறைந்து போகும் பேராசிரியர் 'ஐயையோ, வேப்பம் பழத்தைச் சாப்பிடுகிறாயே, கசக்கவில்லையா உனக்கு ? '
என்று கேட்கிறார். சிறுமியோ புன்னகையுடன் 'பழமா இருக்கும்போது சாப்பிட்டா கசப்பு தெரியாது சார், அசட்டுத் தித்திப்பா ஒரு இனிப்பு இருக்கும். மென்னு கடிக்காம லேசா சப்பிச் சுவைத்துவிட்டுத் துப்பிடணும் ' என்கிறாள்.  

ஆவலில் ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட மறு கணமே கசப்பு தாங்காமல் துப்பி விடுகிறார் பேராசிரியர். வேப்பம்  பழத்தை சாக்லெட்டாக விழுங்கும் சிறுமியை அதிசயமாகப் பார்த்த படி வாயைக் கழுவ உள்ளே செல்கிறார்.

சிறுமிக்கு ஊர்முழுக்க நல்ல பேர்தான். யார் எந்தக் காரியத்தைச் சொன்னாலும் தட்டுவதில்லை. யாரிடமும் எதற்காகவும் அலுத்துக் கொள்வதில்லை. ஒருநாள் மாலைநடையின் போது ஊர்க்கோடியை அடைகிறபோது சிறுமியின் வீட்டைக் கவனிக்கிறார் பேராசிரியர்.  

இடிந்த சுவர்கள். வாசலில் புதர்கள். தாறுமாறாகச் செடிகள் 
முளைத்துக் காடாக இருக்கின்றன. 'ஊர்க்காரங்க வீடெல்லாம் வாசல் தெளிச்சுக் கோலம் போடறியே, உன் வீட்டிலே மட்டும் வாசல் எல்லாம் எருக்கஞ்செடியா முளைக்க விட்டிருக்கிறியே ' என்று கேட்கிறார்

'அதுக்கு நேரம் ஏது சார் ? எனக்குத்தான் கோழி கூவறதுக்கு முன்னேயிருந்து இருட்டறவரிக்கும் வாடிக்கைக்காரங்க வீடுங்கள்ள வேலை சரியா இருக்கே. இங்கே தம்பிக்கும் எனக்கும் சாப்பாடு வேறே சமைக்கணுமே ' என்று காரணம் சொல்கிறாள் சிறுமி.

ஏறத்தாழ ஒரு ஆண்டு ஓடிவிடுகிறது. திடுமென ஒருநாள் சிறுமி வாசலைக்கூட்ட வரவில்லை. தாமதமாக அவள் பூப்படைந்திருக்கிற சங்கதி தெரிய வருகிறது. பேராசிரியருக்குத் திகைப்பு ஒருபுறம். மகிழ்ச்சி ஒருபுறம். இரண்டையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் அச்சிறுமிக்காக அனுதாபப் படுகிறார். உறவுக்காரர்களால் எந்தப் பயனுமில்லை என்று அச்சிறுமி சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது. புதுச்சிற்றாடையும் கண்ணாடி வளையலும் மஞ்சள் குங்குமமும் வாங்கிக்கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வரும்படி மனைவியைக் கேட்டுக்கொள்கிறார். மனைவியும் அவ்வாறே செய்கிறாள்.

மறுபடியும் வீட்டுவேலைக்கு வருவாளோ மாட்டாளோ என்று இருவருமே பேசிக் கொள்கிறார்கள். கிராமத்து நடைமுறைப்படி அவள் வெளியே வராமலேயே வீட்டுக்குள் அடைபட நேரும் என்று நினைக்கிறார்கள். இனிமேல் எப்படிக் காலம் தள்ளப்போகிறார்களோ என்று வருந்துகிறார்கள்.  

ஆனால் பட்டு இந்த மாதிரி எதையுமே யோசிக்கவில்லை. நாலாவது நாள் விடிந்ததுமே வாசல்பெருக்க வந்துவிடுகிறாள். வேலைகளை முடிக்கும் தருணத்தில் பேராசிரியர் தயங்கித் தயங்கி பெரிய பெண்ணான பிறகு வீட்டு வேலைக்குப் போவதைப் பற்றி ஊர் நாலு தினுசாப் பேசாதா என்று தயக்கத்துடன் கேட்கிறார். ஆனால் அவளுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை

'பட்டினி கிடந்தா ஏன்னு கேக்க இந்த ஊராருக்குத் துப்பு இருக்கா ? அவுங்க என்ன பேசினாலும் கேட்க நான் தயாராயில்ல சார் ' என்று சொல்கிறாள். பிறகு வழக்கம்போல மரத்தடியில் உதிர்ந்திருந்த வேப்பம்பழங்களை எடுத்துத் தின்கிறாள்.

வீட்டுக்குள் செல்லத் தயாரான பேராசிரியர் அவள் பழம் தின்னுவதைப் பார்த்து அவள் பழக்கத்தைக் கேலி செய்கிறார். அவளும் 'சின்ன வயசிலேருந்தே எனக்கு இந்தக் கசப்பிலே ஒரு பிரியம். இந்தக் கசப்பிலே ஒரு அசட்டு இனிப்பும் இருக்கு சார் ' என்று களங்கமற்றுச் சிரித்தபடி சொல்கிறாள்.

வேப்பம்பழம் சாப்பிடும் பழக்கம் தொடக்கத்தில் ஒரு சிறிய குறிப்பாக இடம்பெற்றாலும் கதையின் போக்கில் அது அவளுடைய கசப்புகள் நிறைந்த வாழ்வையே குறிப்பிடுகிற ஒரு வலிமையான படிமமாக இயல்பாக மாறிவிடுவதை இக்கதையின் வெற்றியாகக் குறிப்பிட வேண்டும். வழக்கமாக குறிப்புப்பொருளை விரித்தெழுதிவிடும் பழக்கமுள்ள நா.பார்த்தசாரதி அதைச் செய்யாமல் மெளனமாக விட்டிருப்பதே இக்கதைக்கு அழகு சேர்க்கிறது.

Wednesday, June 16, 2010

நியாயத் தீர்ப்பு..! எண்டமூரி வீரேந்திரநாத்!


 வெற்றிக்கு ஐந்துபடிகள் புத்தக வெளியீட்டு விழாவில் திரைப்பட நடிகர் நாகார்ஜுனன் மாலை அணிவித்துக் கட்டித் தழுவுகிறார்!

என்னுடைய இன்னொரு வலைப்பக்கங்களில், தமிழில் புத்தக வெளியீடு, பதிப்பாளர்களுடைய மனோபாவத்தைத் தொட்டு கொஞ்சம்  எழுதி இருந்தேன். அதில் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய நியாயத் தீர்ப்பு என்ற ஒரு சிறு புத்தகம், மூன்று குறுங்கதைகளைக் கொண்டதைத் தொட்டுச் சொல்லியிருந்தது இங்கே மீள்பதிவாக. 

புத்தகங்களைப் பகிர்ந்து கொள்கிற பதிவுகள் எல்லாம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவுமே கூட!

நாலாவது தூண் புத்தக விமரிசனமாக எழுதும்போது, இப்படிச் சொல்லி இருந்தது நினைவு வருகிறதா?

"கதை எழுத ஆரம்பிக்கும் போதே, ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது மூன்று திருப்பங்களையாவது வைத்துவிடுகிறார். கதையின் பிளாட் என்ன என்பதை நடுவிலேயே இந்தக் கதையில் மொத்தமாகவே சொல்லி விடுகிறார். வித்தியாசமான பாத்திரங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கதைக்களங்கள், என்று தேர்ந்த நெசவாளி சின்னச் சின்ன இழையாகப் பின்னிப் பின்னி ஒரு பட்டுப் புடவையை நெய்வதுபோல, கதையை கண்முன்னால் நிகழ்கிறமாதிரிக் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்!

திருப்பம், திருப்பத்திற்குத் திருப்பம், திடீர்த் திருப்பம், அதிரடித் திருப்பம் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அந்த ஒரு சுவாரசியத்தை, படிக்க வருகிறவர்களைக் கட்டிப்போடுகிற ஜாலத்தை எண்டமூரியின் அத்தனை கதைகளிலுமே பார்க்கலாம்.எண்டமூரி சுவாரசியத்திற்கு நான் காரண்டீ! போதுமா! "

எண்டமூரி வீரேந்திரநாத் என்ற அருமையான கதை சொல்லியின் திறமையை வியந்து எழுதிய வார்த்தைகள் அவை! கதை சொல்கிற நேர்த்தி, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு  இப்போது மறுபடி படிக்க ஆரம்பித்தபோதும் மனதைக் கொள்ளை கொள்வதாக இருக்கிறது.

எண்டமூரி வீரேந்திரநாத் எழுதி, சுசீலா கனக துர்க்கா மொழிபெயர்ப்பில் வெளியான "நியாயத் தீர்ப்பு "என்று ஒரு புத்தகம். மூன்று குறுங்கதைகள். இதுவும் சென்னை, திருமகள் நிலையம் வெளியீடு தான்..1992 இல் வெளியானது வெறும் 191 பக்கங்கள் தான்.

முதல் கதை நாற்பத்தெட்டே பக்கங்கள் தான்! ஐந்து கதா பாத்திரங்கள். ஆறாவது கதாபாத்திரத்தைப் பற்றி பிரஸ்தாபம் மட்டுமே இருக்கிறது.

ஒருவன் தன்னுடைய மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்று அதற்காக இன்னொருவனிடம் இரண்டுலட்சம் ரேட் பேசி, ஒருலட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறான்.

அதை மூன்றாவதாக ஒருவன், அவன் தான் இந்தக் கதையின் நாயகன், கவனித்துக் கொண்டிருக்கிறான்! கொலைகாரனிடம் போய், அவனுடைய திட்டம் எல்லாம் தெரியும் என்று காட்டி, அட்வான்ஸ் தொகை ஒரு லட்சத்தையும் அடித்துக் கொண்டு வந்து விடுகிறான்.

அடுத்து, கொலை செய்ய ஏவியவனிடம் போகிறான். அங்கேயும் கதாநாயகன், தனக்குத் தெரிந்த ஆதாரங்களை எடுத்து வைக்கிறான். வேறு வழி இல்லாமல், ஏவியவன் நான்கு லட்சம் ரூபாயைக் கதாநாயகனுக்குக் கொடுக்கிறான்.

இரண்டு மனிதர்களையும் எப்படி எதிர்கொள்கிறான், அவர்களும் என்ன மாதிரியான நிர்பந்தத்திற்குப் பணிந்து போகிறார்கள் என்பது, அடுத்தடுத்த திருப்பங்களாக எண்டமூரி தனக்கே உரிய லாவகத்தோடு கதையைப் பின்னியிருக்கிறார்.

அதோடு கதை முடிவதில்லை அன்பர்களே! எண்டமூரியின் ஸ்பெஷாலிடியே, திருப்பத்துக்கு மேல் திருப்பம், கடைசியாக ஒரு பன்ச் வைத்து ஒரு அதிரடித் திருப்பம் தான்!

மனைவியைக் கொல்வதற்கு அலையும் அந்த மனிதனையே  எப்படி அவளுக்கு செக்யூரிடி கார்டாக,  கண்ணின் இமையாகக் காப்பாற்ற வைத்து விடுகிறான் என்பது  அதிரடித் திருப்பம்! அதற்கும் மேல் ஒரு சூபர் பன்ச் இருக்கிறது-

அது தான் இந்தப் புத்தகத்தின் முதல் கதை. குயிலின் குஞ்சு!

ராபின் ஹூட் கதைகளை அல்லது அந்த மாதிரி உல்டா அடித்து வந்திருக்கும் ஏராளமான கதைகளில் ஒன்றையாவது படித்திருப்போம். இந்தக் கதையிலுமே ஒரு ராபின் ஹூட்  டைப் ஆசாமி தான் கதாநாயகன்! இருப்பவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்பவன்! 

அதிலும் கூடக் கொஞ்சம் நியாயம், தர்மம் என்று பார்ப்பதாக முடித்திருக்கும்  கடைசி பதினைந்து-இருபது வரிகள் சூபர் பன்ச்!
3500 வார்த்தைகளுக்குள் இவ்வளவு டிவிஸ்டா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? படித்துப்பாருங்கள்!

வாசிப்பதில் தான் எத்தனை சுகம்!  மலருக்கு மலர் தாவித் தேன் குடிக்கிற வண்டுகள் மாதிரி, ஒரு நல்ல வாசகனாக இருப்பதில் தான் எத்தனை ஆனந்தம்!

எனக்கு எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியதையும் படிக்கப் பிடிக்கிறது.  வி.ச. காண்டேகர் முதல் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் ஜெயமோகன் வரை, எல்லாத் தளங்களையும் தொட்டு விட ஆசைதான்!  ஒரு நல்ல வாசகனாக இருப்பதில் தான் எத்தனை ஆனந்தம்!

வாசகனாக, இது தொட்டு விட முடிகிற வானம் தான் என்பது நன்றாகவே தெரிகிறது.

இங்கே இன்னொரு விஷயத்தையும் தொட்டுச் சொல்லியாக வேண்டும்.

இணையத்தில் புத்தக அட்டைப்படங்களைத் தேடிய போது, எண்டமூரியின் பல புத்தகங்கள்  தெலுங்கில்  இன்றைக்கும் கூட முப்பது ரூபாயில் இருந்து எண்பது ரூபாய்களுக்குள் கிடைக்கிறது.

தமிழில் வெளிவரும் சிறு புத்தகங்கள் கூட நூறு ரூபாய்களுக்கும் அதற்கு மேலும் இருப்பது வாசகர்கள் விலை கொடுத்து வாங்கிப்படிக்கத் தயாராக இருந்தாலும், பதிப்பாளர்கள் தயாராக இல்லாத நிலையைத் தான் காட்டுகிறது. இங்கே சரக்குக்குத் தகுந்த விலை என்று இருப்பதில்லை. அதுக்கும் கொஞ்சம் மேலே, ஓவராகத் தான் இருக்கிறது.

ஒரு கால கட்டத்தில், மலிவு விலைப் பதிப்புக்களாக, பிரேமா பிரசுரம் முதலில் மர்ம  நாவல்களை ஆரம்பித்தது. பிரபல எழுத்தாளர்கள் எவருமே அதில் எழுத முனையவில்லை.நடுவில் ராணி முத்து என்று தினத்தந்தி குழுமத்தில் இருந்து சுருக்கப்பட்ட கதைகள் வெளிவந்தன. பின்னாட்களில், ஜி ஏ அசோகன் பாக்கெட் நாவல் என்று ஆரம்பித்தார். பாலகுமாரன் ஒருவர் தான் பாக்கெட் நாவலில் தொடர்ந்து தனது கதைகளை வெளியிட்டுக் கொள்ள அனுமதித்திருந்தார் என்பதை வைத்தே அவர் சுருங்கிப்போனதாக ஒரு விமரிசனமும் உண்டு.

நேசமுடன் வெங்கடேஷ் எழுதிய இந்தப் பதிவு தமிழ்ப் பதிப்புத் துறையை வேறு கோணத்தில் இருந்து பார்க்கிறது

கேரளத்தில் எழுத்தாளர்கள் கூடி, ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் வழியாகத் தங்கள் புத்தகங்களை ஜனங்கள் காசுகொடுத்து வாங்கிப் படிக்கும் விலையில் வைத்திருந்தார்கள்.

இங்கே தமிழ்நாட்டிலும் புத்தகங்கள் அந்த மாதிரி, கைக்கெட்டுகிற விலையில் கிடைக்கும் நாள் என்னாளோ? 


Sunday, June 13, 2010

நாலாவது தூண் ! எண்டமூரி வீரேந்திர நாத்


நாலாவது தூண்! கதையின் பதினோராவது அத்தியாயம் பக்கம் 171-172

மேடையின் மேல் சுவாமியும் படியின் மேல் ஆதரவில்லாமல் விழுந்துகிடந்த பல்லவியும் மட்டுமே எஞ்சி நின்றார்கள்
. அவள் பாதி நினைவிலும், பாதி மயங்கியும் விழுந்து கிடந்தாள்.


சுவாமிகள் கிட்டே வந்தார்.

அவர் நிழல் அவள் மேல் வந்து விழுந்தது. வெளியே ஜனங்களின் சந்தடி லீலையாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. அதை எதிரொலித்தாற்போலவே சிரிப்புச் சத்தம் காற்றில் தவழ்ந்து வந்தது.

"நான் சொல்லலையா பல்லவி! காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் பரவியிருக்கும் வீடு என்னுடையதுன்னு! அதன் நிழலில் தஞ்சம் புகுந்துக்கச் சொன்னேனா இல்லையா?.நீ கேட்கலை. என் முதல் தூணான அரசியல்-சூரியநாராயணன்-நீ ஹோம் மினிஸ்டருக்கு போன் பண்ணினபோது, அங்கேதான் இருந்தான். நிமிஷத்தில் விஷயம் எங்களுக்குத் தெரிந்துடுத்து. என் இரண்டாம் தூணான புத்திசாலித்தனமான லாயர் சதாசிவம் டில்லியிலிருந்து என்ன பண்ணனும்னு சொன்னான். என் மூன்றாவது தூண் தேவிதயாள்-எஞ்சிய ஏற்பாடுகளைக் கவனித்துண்டான். பலன்...? இதான்--இப்ப, இப்ப நீ இருக்கிற நிலைமைதான்!"


அவர் சிரிப்பு திரும்பவும் அவ்வெல்லை முழுவதும் அலையலையாகப் பரவிற்று.

"சென்ட்ரல் ப்யூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் டிப்டி டைரக்டரைக் கூடத் தன் காலுக்கடியில் வந்து விழச் செய்து விடுவான் இந்தப் பரமானந்த சுவாமி. இப்பச் சொல்லு பெண்ணே! இந்த நாட்டின் தலைவனாவதற்கு அவகாசமோ, அருகதையோ இருக்குங்கிறாயா, இல்லையா?"

அவள் கண்களைத் திறக்க முயன்றாள். கண்ணுக்குக் கீழே அடிபட்டிருந்ததால் பார்வை சரியாகத் தெரியவில்லை. ஒரு ஒளி மட்டும் கண்ணுக்குள் வந்து தாக்கிக் கொண்டிருந்தது. எழுந்து நிற்கக் கூடச் சக்தியில்லை. முகத்திற்கு முன்னால் வந்து, இன்னும் உயரமாய் ஒரு விக்கிரகத்தைப்போல நின்று கொண்டிருந்தார் சுவாமி.

"இப்பச் சொல்றேன் கேளு பல்லவி! என் நாலாம் தூண் எதுன்னு தெரிஞ்சுக்க இவ்வளவு நாளைக் கஷ்டப்பட்டாயோனோ?.அதென்னன்னு சொல்றேன், கேளு!

என் நாலாம் தூண்--ஜனங்களின் முட்டாள்தனம்.

அந்தக் கடைசித் தூணை இப்போ உனக்கு பிரத்தியட்சமாய் காட்டினேன்
.
பார்த்தாயோனோ என் விஸ்வரூபத்தை? இனி என்னை எதுதான் தடுத்து நிறுத்திவிடும்? வர்ற விஜயதசமி அன்னைக்கு விஜய சங்கை ஸ்தாபிக்கப்போறேன். ஜனங்களை பயந்து பீதியடையும்படி செய்வேன். செக்யூலரிசத்திலிருந்து மதத்தின் பக்கமாய்ப் போகச் செய்வேன். பாதுகாப்பு உணர்ச்சி போய்விட்ட ஜனங்கள்--அரசாங்கத்தை நம்பமாட்டாங்க. இதர மதத்தாரையும் நம்ப மாட்டாங்க.அதான் எனக்கு வேண்டியது.அரசாங்கம் இதர மதங்களைக் காப்பாற்றுவதில் ஆழ்ந்திருக்கும்போது, மக்களுக்கு இன்னும் அதிகமாய் மதத் தத்துவத்தைப் புகட்டுவேன். ஐ யாம் தி காட்! ஐ யாம் தி சுப்ரீம்! என் ஜனங்களைக் காப்பாற்றுவதற்காகவே அவதரித்திருக்கும் கடவுளின் அவதாரம் நான்......ஹா...ஹா...ஹா...ஹா!"

சாடிசமும் சாமர்த்தியமும் சேர்ந்து விட்டால் ஆபத்து. அப்படிப்பட்ட மனித உருவெடுத்த அரக்கனுக்கு முன்னால் ஆதரவின்றி விழுந்து கிடந்தாள் அவள்.

சி பி ஐ, சி ஐ டி போலீஸ், சட்டம், ராணுவம் --எதுவுமே தனக்கு முன்னால் நிற்க முடியாது என்பது போன்ற மிடுக்குடன் அங்கிருந்து அகன்றார் அவர்.
oooOooo
இங்கே கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உன்னைப்போல் ஒருவன் படத்தை வைத்துக் கமலை கிழி கிழி என்று பதிவர்கள் கிழித்துக் கொண்டிருந்தார்கள். பதிவில் எழுதிக் கிழித்து விட்டால் மட்டும் ....இந்த நினைப்புத்தானே நிறையப்பேருடைய பிழைப்பைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது?அது ஒழிக இது ஒழிக என்று கத்திக் கொண்டே இருப்பவன் தான் இங்கே முதலில் ஒழிந்துபோகிறான் என்ற அடிப்படை கூட ஏன் எவருக்கும் தெரிவதே இல்லை?

இங்கே நாலாவது தூண் கதையிலுமே கூட அந்த சாதாரண மனிதனைப் பற்றிய ஒரு திருப்பம் மிக சுவாரசியமாக இருக்கிறது.
A WEDNESDAY
திரைப்படத்தில் நஸ்ருதீன் ஷா சொல்கிற மாதிரி " a stupid common man" மாதிரி இல்லை.பாவம் கமல்! உன்னைப்போல் ஒருவனை இதில் விட்டு விடுவோம்! எண்டமூரி வீரேந்திரநாத் படைப்பில் கதாபாத்திரங்கள் எல்லோருமே ஒருவரை ஒருவர் மிஞ்சுகிறவர்கள், எவருமே ஏப்பை சாப்பை இல்லை.

அடுத்த அத்தியாயத்திலேயே கதாநாயகனும் வில்லனும் தங்களுடைய பலத்தை ஒருவருக்கொருவர் நிரூபித்துக் கொள்ளும் சுவாரசியமான திருப்பம், கதை அங்கேயே முடிந்து விடுவதில்லை அதற்கப்புறமும் இருநூற்றைம்பது பக்கங்கள், திருப்பம், திருப்பத்திற்குத் திருப்பம், திடீர்த் திருப்பம், அதிரடித் திருப்பம் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அந்த ஒரு சுவாரசியத்தை, படிக்க வருகிறவர்களைக் கட்டிப்போடுகிற ஜாலத்தை எண்டமூரியின் அத்தனை கதைகளிலுமே பார்க்கலாம்.எண்டமூரி சுவாரசியத்திற்கு நான் காரண்டீ! போதுமா!

இப்போது அத்தியாயம்12 பக்கம் 197-199 கொஞ்சம் ருசித்துப்பார்க்கலாம்:


அந்த ஹிட்லரைப்போல சினிக்கைக் கண் கொட்டாமல் பார்த்தான் ஆதித்யன். அவர் கார் புறப்படப்போனபோது, ஏதோ நினைவுக்கு வரவே, இறங்கி ஓட்டமாய் ஓடிப்போய்,"உங்களோடு இன்னும் இரண்டு நிமிஷம் பேசலாமா சுவாமி?" என்று கேட்டான் துணிவோடு. சுவாமியின் சைகையைப் பார்த்து டிரைவர் இறங்கி விட்டான். ஆதிதித்யன் காரை ஓட்டத் தொடங்கினான். ஆதித்யனின் காரைப் பின்னாடியே ஒட்டி வந்து கொண்டிருந்தான் . ஆனால் அந்த ஸ்பீடைப் பிடிக்க முடியாமல் விட்டு விட்டான்.

"என்ன சொல்லு?"

"நீங்க இவ்வளவு பெரிய மனுஷனா எப்படி ஆனீங்க?"

"அரசியல், பலம, கெட்டிக்காரத்தனம்--எல்லாம் என் சொத்துத் தான்." சிரித்தார்.

"ஆனால், நியாயம், சட்டம் எல்லாம் கூட இருக்கே சுவாமி?"

"இதெல்லாம் எதுக்குக் கேட்கிறாய்?"

"நான் உங்களோடு சேர்ந்தால் எந்த விதத்தில் பாதுகாப்புக் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கத்தான்."

"பைத்தியக்காரா--அப்புறம் பாதுகாப்பைப்பற்றிய பேச்சே கிடையாதே!"

"ஆனால் சட்டம்..?"

"சாட்சி இல்லாவிட்டால் சட்டம் இல்லை"

ஆதித்யனின் கையிலிருந்த காரின் வேகம் இன்னும் அதிகரித்தது. நூறு கிலோமீட்டர்களைத் தாண்டிவிட்டது. "உங்களோடு சேர்ந்துட்டால் பாதுகாப்புக்குத் தேவையே இராதுன்னு சொன்னீங்க. இப்போ உங்களுக்கே எந்தப்பாதுகாப்புமில்லையே!"

"என்ன..நீ என்ன சொல்கிறாய்?"

"நீங்க சொல்றது நிஜந்தான்! அரசாங்கமே உங்க கையில் இருக்கு. அரசியல் தலைவர்கள் உங்கள் பக்தர்கள். ஆனால், அரசியல் அதிகாரிங்களுக்கு பிரமோஷன் தாகம், தலைவர்களுக்குப் பதவிப் பாதுகாப்பு முக்கியம்.அவங்க சில நிபந்தனைகளுக்குட்பட்டுக் காரியம் பண்ணனும். உதாரணத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீங்க ஒரு பெண்ணின் காரில் ஏறினீங்க. அவளால் உங்களை ஒன்றுமே பண்ண முடியலை., காரணம்? அவள் அரசாங்க அதிகாரியானதால! நான் அப்படியில்லை, நான் என்ன வேணுமானாலும் பண்ணுவேன்."

"அப்படீன்னால்? என்ன பண்ணுவாய்?" சந்தேகத்தோடு கேட்டார்.

"அன்பு--இரக்கம் --தயாதாட்சண்யம் --இப்படிப்பட்ட எதுவுமே என்னிடம் இல்லை. இப்போது நீங்க புதிதாய்ச் சொன்ன பாடப்படி சாட்சி இல்லாவிட்டால் கேசும் இல்லை. அதையே உங்கள் மேல் பயன்படுத்தலாம்னு இருக்கேன்."

"என்னைக் கொல்லுவாயா?"

"கொல்ல  மாட்டேன், உன்னைப்போன்ற அற்பப் பிராணி எதிரியாயிருந்தால் போராட்டம் ரொம்ப ஜோராயிருக்கும். எனக்கு அது பொழுதுபோக்கு! உங்களுக்கு உயிருக்கும் சாவுக்குமிடையே போராட்டம்!"

"நீ யாரோட பேசராய்னு தெரியுமா?"

"இந்த நாட்டின் மிக குரூரமான ஆளோடு. விரைவில் இந்த நாட்டின் தலைவனாகிவிட வேண்டும் என்று தவிக்கும் ஒரு மனிதனோடு. தற்போது எனக்கு முன்னால் உயிரை உள்ளங்கையில் ஏந்திண்டு வந்துண்டிருக்கிற ஆளோடு! பரமானந்த சுவாமி! வீணாய்  என்னோடு தர்க்கத்துக்கு வந்துருக்கீங்க. பலனை அனுபவித்துத் தீருவீங்க." என்று காரை நிறுத்தினான். 

திரும்பித் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சுவாமியின் தலைமேல் பலமாய் ஒரு குத்து விட்டு, "கூட்டத்தில் என்னை அவமானப்படுத்தியதுக்கு இது! இதுக்கு சாட்சி இல்லை." என்றான். சிறிய குன்றின் மேலே இருந்தது கார். கீழே நகரத்து வெளிச்சம் நன்றாகத் தெரிந்தது.

சுவாமியின் முகம் சிவந்தது. அந்தப்பக்கமாய் இறங்கப்போனார். இம்முறை அந்தப்பக்கமாய் வந்து கன்னம் அதிரும்படி அறைந்தான்."இது சின்னப் பையனைக் கொன்றதற்கு. இதுக்கும் சாட்சியில்லை."

சுவாமி சீட்டில் மல்லாந்து விழுந்தார். ஆதித்யன் காரின் கதவை மூடிவிட்டான்.

"உங்க நாலாவது தூண் யாரு? சாதாரண மனுஷனா? இந்த நாட்டு சாதாரண மனுஷன் அவ்வளவு முட்டாளில்லை சுவாமி! அவ்வளவு கோழையுமில்லை, அதை உங்க முன்னாடியே நிரூபித்துவிட்டேன் இப்போது.  

சரி, தெய்வமாவதற்காக நீங்க ஜீவ இம்சை பண்ண மாட்டீங்க இல்லையா? இந்த நாட்டுக் குடிமகன், மனுஷனாய் வாழறதுக்காக உங்களைப்போலக் கயவர்களைப் பொறுமையாய்த் தாங்கிக் கொள்கிறான் பாவம்! வெடித்து விட்டால்....இதோ பார், இப்படி ஆயிடும் உங்க நிலைமை" என்று காரைக் கொஞ்சம் முன்னுக்குத் தள்ளினான். கார் பள்ளத்தாக்கில் இறங்கத் தொடங்கிற்று, சுவாமி உள்ளேயிருந்து கத்திக் கொண்டிருந்தார். கார் கற்களில் மோதித் திரும்பி நழுவி விழுந்துகொண்டே இருந்தது.

"பத்துக் கார் ஃபாக்டரிங்களை வைப்பீங்க இல்லையா சுவாமி? பிழைத்திருந்தால், புதுக் கார் வாங்கிக்குங்க. பெஸ்ட் ஆஃப் லக்."

oooOooo
 
சுசீலா கனக துர்கா என்பவ‌ர் மொழி பெயர்த்து தமிழில் என்டமூரி வீரேந்திர நாத் எழுதிய கதைகள் எழுத்தாளர் சாவி கொடுத்த ஊக்கத்தில் முதலில் சாவி வார இத‌ழிலும், பல புத்தகங்கள் நேரடியாகவே சுடச்சுட வெளி வந்த காலம் ஒன்று உண்டு.

ஆந்திரா வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டே பிரபலமான கதாசிரியராக பரிணமித்தவர் ஒரு கட்டத்தில் வங்கி வேலையை விட்டு விட்டு முழு நேர கதாசிரியராகவும் ஆனார். பல ஆங்கில நாவல்களின் தாக்கதோடு (காப்பியடிப்பது என்பது இன்னொரு பெயர்), உள்ளூர் சமாசாரங்களை மசாலா சேர்த்துத் தாளித்து, கதைகளை, பாத்திரங்களை  உருவாக்கின வேகம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது! இவருடைய கதைகள் தொடர்ந்து திரைப்படமாக எடுக்கப் பட்டன. சிரஞ்சீவி நடித்து பல வெற்றிப்  படங்களும் ஆயின.

இங்கே தமிழில் சுஜாதா ஒருவரைத் தவிர அனேகமாக மற்ற எல்லோருமே ஒரேமாதிரிக் கீற‌ல் விழுந்த ரெகார்ட் மாதிரி எழுதிக் கொண்டிருந்த நேரம் அது. துளசி தளம், மீண்டும் துளசி இந்த இரு கதைகளும் சாவி வார இதழில் தொடராக வந்தபோது, தமிழில் ஒரு புதிய வரவாகவே வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தவர் என்டமூரி என்றால், அது பொய்யில்லை.

நாலாவது தூண்!

ஒரு வழக்கமான முக்கோணக் காதல். கதாநாயகனை நேசிக்கும் பெண் ஒருத்தி, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் அவனுக்குத் தன்னுடைய காதலைச் சொல்கிறாள். கதாநாயகனுக்கோ அது வேறொரு பயந்தாங்குளிப் பெண் சொல்வதாகவே தொடர்ந்து  சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்து விடுகின்றன.பெண்தான் பயந்தாங்குளி. அவள் பாட்டியோ, பேத்தியை எப்படியாவது கதாநாயகனோடு சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று நினைப்பவள்.

இது ஒரு களம்.

ஒரு ஊழல் அரசியல் வாதி, அவனோடு ஊழல் மயமான அரசு இயந்திரம், சாமர்த்தியமுள்ள அடியாள் பலம், சிக்கல்களில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பிக்க உதவும் ஒரு சட்ட நிபுணர்,  இத்தனைக்கும் ஆதார சக்தியாக மூளையுள்ள ஒரு  சாமியார், இவர்களுடைய குற்றக் கூட்டணி இந்திய அரசியலையும் மீறி சர்வதேச அளவில் பரவத்தயாராயிருக்கும்சூழல்,  இதை எதிர்த்துப் போராட முடியாமல் தவிக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி  இவர்களைக் கொண்ட இன்னொரு களம்.

இந்த இரண்டு களங்களையும் ஒன்றிணைத்து, லாவகமாக கதையைப் பின்னியிருக்கும் நேர்த்திக்காகவே என்டமூரிக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்! தீரேந்திர பிரம்மச்சாரிகளும், சந்திரா சுவாமிகளும் இந்திரா காந்தி காலத்தில், ஒரு அதிகார மையங்களாக உருவாகியிருந்த பின்னணியை இவ்வளவு சுவாரசியமான கதையாக மாற்ற முடியும் என்று எவர் தான் ஊகிக்க முடியும்? ஊகிக்க முடிந்தவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்!

அந்தக் கதையில் வரும் சாமியார்,  நான்கு வலுவான தூண்கள் தன்னைத் தாங்கி நிற்பதாகவும், அந்த நான்கு தூண்களைத் தாண்டித் தன்னை எவரும் அசைக்க முடியாது என்று பீற்றிக் கொள்ளும் கட்டங்களில், முதல் மூன்று தூண்கள் இன்னார், இன்னார் என்று சொல்லிவிட்டு, நான்காவது தூண் எதுவென்பதை  கடைசி வரை சஸ்பென்சாகவே வைத்திருப்பதை இந்தக் கதையின் மிக வெற்றிகரமான உத்தியாக இப்போது கூடச் சொல்ல முடியும்!

அதைவிட, அந்த சஸ்பென்ஸ் உடைகிற நேரம், நாலாவது தூண் எது என்பதைக் கதாநாயகனுக்கும், தன்னுடைய விசுவாசமான கூட்டாளிக்கும் பெருமிதத்தோடு உடைத்துச் சொல்வதை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட, அட, ஆமா இல்லே! என்று ஆச்சரியத்தோடு, நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி, அதில் இருக்கும் உண்மையை  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது!

அது என்ன நாலாவது தூண்?

"ஜனங்களுடைய அறியாமை" அது தான் என் பலம்! இவர்களை எளிதில் ஏமாற்றிவிட முடியும், எனக்கெதிராக என்ன செய்ய முனைந்தாலும் அதைத் திசை திருப்பி விட்டு விட முடியும்!அது தான் நான் சொல்லுகிற நாலாவது தூண் என்று கொக்கரிக்கிறான் வில்லன் சாமியார்!

கதாநாயகன், எப்படி வில்லனுடைய ஒவ்வொரு தூணையும் அவனுக்கு எதிராகவே திருப்பி விடுவதில் வெற்றி பெறுகிறான் என்பதும், இந்த "நாலாவது தூணையும்" எப்படி வெல்கிறான் என்பதும் கதை!
 
ஆகரி போராட்டம் என்ற பெயரில் இந்தக் கதை நாகார்ஜுன், ஸ்ரீதேவி, சுகாசினி நடித்துப் படமாகவும் வந்தது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யப் பட்டு வந்ததாக நினைவு.

கொஞ்சம் அரசியலைப் பின்னோக்கிப் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு, இந்தக் கதையில் வரும் பரமானந்த சாமியைப் பார்க்கும்போது, நேற்றைய நாட்களில் தீரேந்திர பிரம்மச்சாரிகளும், சந்திராசாமிகளும் இந்திரா காந்தி காலத்தில் எப்படிக் கொடிகட்டிப் பறக்க முடிந்ததென்பது புரியும்! இங்கே தமிழ் நாட்டில் கூட கழகங்கள் மாறினாலும் கூட குறி சொல்கிறவன், பரிகார யாகங்கள் செய்கிறவன் எல்லாம் கோட்டைக்கு வேண்டியவனாகத் திரிந்ததும்,  நாத்திகமும் பகுத்தறிவும் பேசுவது ஊருக்குத் தான் உபதேசமே தவிர தனக்கில்லை என்றலைந்த அரசியல்வாதிகளைத் தெரிந்து கொள்ளவும்  முடியும்!

இன்னும் கொஞ்சம் கூர்ந்து யோசிக்கத் தெரிந்தவர்களுக்கு............!

நம்முடைய அறியாமை, எதுவும் செய்ய முடியாதவர்களாக ஊமைச் சனங்களாகவே குறுகிப் போய் நின்று விடுகிற கோழைத்தனம் தான், இங்கே அரசியல்வாதிகள் நம்மை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே வருகிற நாலாவது தூணாக இருக்கிறது என்பதும் புரியும்!இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)