நேற்றைக்கு இந்தப் புதினத்தைத் தான் மறுவாசிப்பாகவும், வாசித்த அனுபவமாகவும் இந்தப் பக்கங்களில் பகிர்ந்து கொள்ள குறிப்புக்களை ஆன்லைனிலேயே தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன். திருத்தங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த தருணம், கைதவறி ஆன்லைனில் தட்டச்சு செய்த விண்டோவை மூடிவிட, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலான உழைப்பு ஒரு கணத்தில் காணாமல் போனது.
கொஞ்சம் வருத்தத்துடன், தான் பதிவிட நினைத்திருந்தது வேறொன்றாக இருந்தாலும், என்னுடைய சேகரத்தில் குறிப்புக்களாகச் சேகரம் செய்து வைத்திருந்ததில், திண்ணை இதழில் பாவண்ணன் நா.பாவின் வேப்பம் பழம் சிறுகதையை விமரிசனமாகப் பகிர்ந்து கொண்டிருந்த ஒரு பகுதியையும் சேர்த்து ஒரு பதிவாக வெளியிடும்படி ஆனது.
சமுதாய வீதி! இந்தப் பெயர் அல்லது தலைப்பு கதையோடு எப்படிப் பொருந்துகிறது என்பது எனக்குள் இன்னமும் இருக்கும் விடை கிடைக்காத கேள்வி! இந்தக் கதையை எழுதிய நேரத்தில், தமிழ் நாட்டில் அரசியல் ஆகட்டும், செய்தி, பொழுதுபோக்கு, ஊடகங்கள் இப்படி எது வேண்டுமானாலும் ஆகட்டும் சினிமா தான் கதி என்று புரையோடிப்போய்க் கிடைக்கவில்லை.
சினிமா நடிகைகளுக்குக் கோவில் கட்டுகிற அளவுக்கு, சமுதாயம் அவ்வளவாக சீரழிந்திருக்கவில்லை. நாலு சினிமாவில் நடித்து முகம் அறிமுகமானவன் எல்லாம், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக முனைகிற அளவுக்கு தமிழ்நாடு அவ்வளவு மோசமாக இருந்ததில்லை.
சமுதாயவீதி என்ற இந்தப் புதினத்தின் கதைக்களம் என்னவோ நாடக, திரைப்படக் கலைஞர்களை வைத்துத் தான்! அதனாலேயே சமுதாய வீதி என்று தலைப்பு வைத்து விட முடியுமா என்பது இன்னமும் எனக்கு புரிபடாமல் இருக்கும் கேள்வி.
மதுரை கந்தசாமி வாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடக சபா கலைக்கப்பட்டுப் பட்டினத்துக் கலையுலகத்தில் பஞ்சம் பிழைக்க வந்த ஆளாக நுழைந்தபோது வாழ்க்கை வசதிகள் சுருங்கியது போலவே பெயரும் சுருங்க வேண்டிய நியதிக்கு அவன் தலை வணங்கியாக வேண்டியிருந்தது.
முத்துக்குமரன் - என்ற பெயர் நாகரிகமாகவே தோன்றியது அவனுக்கும் மற்றவர்களுக்கும். சேத்தூர், சிவகிரி ஜமீன்தார்களை அண்டிப் பிழைத்த அவன் முன்னோர்கள் வேண்டுமானால் 'அகடவிகட சக்ர சண்டப்பிரசண்ட ஆதிகேசவப் பாவலர்' - என்பது போன்ற நீண்ட பெயர்களை விட்டுக் கொடுக்கவும் குறைக்கவும் அஞ்சியிருக்கலாம். ஆனால், இன்று இந்த நூற்றாண்டில் அவனால் அப்படி வாழ முடியவில்லை. பாய்ஸ் கம்பெனி மூடப்பட்டுப் பத்து மாதம் மதுரையில் ஒரு பாடப் புத்தகக் கம்பெனியில் சந்தியும், குற்றியலுகரமும் திருத்தித் திருத்திப் புரூஃப் ரீடராக உழன்ற பின் நாடகத்தின் மூத்த பிள்ளையாகிய சினிமா உலகத்தைத் தேடிப் பட்டினத்துக்குத்தான் ஓடி வந்தாக வேண்டியிருந்தது அவன்.
மதுரையிலிருந்து முத்துக்குமரன் - பட்டினத்துக்கு ரயிலேறியபோது - அவனிடம் சில அசௌகரியங்களும் இருந்தன - சில சௌகரியங்களும் இருந்தன. அசௌகரியங்களாவன;
பட்டினத்துக்கு அவன் புதிது; முகஸ்துதி செய்ய அவன் பழகியிருக்கவில்லை. அவனிடம் யாருக்கும் அறிமுகக் கடிதமோ சிபாரிசுக் கடிதமோ இல்லை. கையிலிருந்த பணம் நாற்பத்து ஏழு ரூபாய்தான். கலையுலகத்துக்கு மிகுந்த தகுதியாகக் கருதப்பட்ட எந்தக் கட்சியிலும் அவன் உறுப்பினரோ, அநுதாபியோ இல்லை.
சௌகரியங்களாவன :
அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதன் பொருள் அவன் திருமணத்தையோ பெண்ணையோ வெறுத்தான் என்பதில்லை. ஒரு நாடகக் கம்பெனி ஆளுக்குப் பெண் கொடுக்கவோ, மதிக்கவோ அன்றைய சமூகத்தில் யாரும் தயாராயில்லை என்பதுதான் காரணம். பின்புறமாக அலையலையாய்க் கருமை மின்னும்படி சுருளச் சுருள வாரிவிட்ட அமெரிக்கன் கிராப், கிரேக்க வீரர்களில் சுந்தரமான தோற்றமுடைய ஒருவனைப் போன்ற எடுப்பான முகத்தில் இடையறாத புன்முறுவல், நல்ல உயரம், அளவான பருமன், இரண்டாம் முறையாகத் திரும்பிப் பார்க்க யாரும் ஆசைப்படுகிற களையான தோற்றம், கணீரென்ற குரல் - இவை அவனிடம் இருந்தவை.
எழும்பூர் நிலையத்தில் அவன் வந்து இறங்கிய தினத்தன்று மழை கொட்டு கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. ஒரு தென்பாண்டிச் சீமை கவி பட்டினத்தில் வந்து இறங்குவதைக் கொண்டாடுவதற்காக மழை பெய்ததாக யாரும் அதற்குள் தப்புக் கணக்குப் போட வேண்டியதில்லை. அது டிசம்பர் மாத பிற்பகுதியாதலால் வழக்கம் போல் சென்னையில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. டிசம்பர் மாதத்தில் மட்டுமில்லை; எந்த ஒரு மாதத்திலுமே பட்டினத்துக்கு அப்படி ஒரு மழை தேவையில்லை. மழை பெய்தால் பட்டினத்தில் எதுவும் விற்பதில்லை. தியேட்டர்களில் கூட்டம் குறைகிறது. குடிசைப் பகுதிகளில் நீர் ஏறுகிறது. அழகிய பெண்கள் மினு மினுப்பான புடவைகளில் சேறு தெரிக்குமே என்று பயந்து கொண்டே தெருக்களில் நடக்க வேண்டியிருக்கிறது. வெற்றிலை பாக்குக் கடை முதல் புடவைக் கடை வரை வியாபாரம் மந்தமடைகிறது. குடைகள் மறதியால் தவறிப் போகின்றன. ஏழைப் பள்ளி ஆசிரியர்கள், குமாஸ்தாக்களின் செருப்புக்களில் திடீரென்று வார் அறுந்து போகிறது. டாக்ஸிக்காரர்கள் எங்கே கூப்பிட்டாலும் வர மறுக்கிறார்கள்.
இப்படி மழைக்குப் பயப்படுகிற பட்டினத்திற்கு எதற்காக மழை வேண்டும்?
இப்படி ஆரம்பிக்கிற அறிமுக வரிகளிலேயே, கதாநாயகன் கெட்டும் பட்டினம் சேர் என்று பிழைப்பைத் தேடித் பட்டணத்துக்கு வருகிறானேயன்றி, கெட்டுப் போவதற்காகப் பட்டணம் வரவில்லை என்பதும், எவருக்கும் தலை வணங்காதவன் என்பதும் நறுக்குத் தெறித்தாற்போல ஒரு அறிமுகம் ஆகி விடுகிறது. கதாநாயகன் சென்னைக்கு வந்து சேரும் நேரம் மழைக்காலம்! சிங்காரச் சென்னை அன்றைக்கும் இப்போது நாறுகிற மாதிரித் தான் நாறிக் கொண்டிருந்தது என்பதை அதிக வார்த்தைகளை வீணாக்காமல் மழைபெய்யும் நேரம் பட்டினம் எப்படியிருக்கும் என்ற வர்ணனையே சொல்லி விடுகிறது.
நாடக சபாவில் முத்துக்குமாரோடு ஒன்றாகத் தங்கி, ஸ்திரீபார்ட் வேஷம் கட்டிய கோபாலசாமி என்ற கோபால், இன்றைக்கு சினிமாவில் பிரபலமான ஆளாக ஆகிவிட்டான். அவனைச் சந்தித்தால், வேலைக்கு ஒரு வழி சொல்வான் என்ற நம்பிக்கையோடு நாயகன் சினிமாக்காரன் கோபால் வீட்டுக்கு வருகிறான். அங்கே ஏகப்பட்ட கூட்டம். கோபால் ஒரு நாக்கக் குழுவை ஆரம்பிக்கப் போகிறானாம். அதற்காகத் தகுதி உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஏதோ நேர்முகத் தேர்வாம்! ஆணும் பெண்ணுமாக நிறையப்பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து காத்துக் கொண்டிருக்கையில் இன்றைக்குப் பிரபலமாகிவிட்ட பழைய நண்பன் நினைவு வைத்துக் கொண்டிருப்பானா, மரியாதை கொடுப்பானா என்ற நினைவும் நாயகனுக்கு வந்துபோகிறது. மாதவி என்கிற ஒரு பெண், இவன் பக்கத்தில் வந்து தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள். அவனும் அந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்குத் தான் வந்திருக்கிறானா என்று நாசூக்காக விசாரிக்கிறாள். கதாநாயகியின் அறிமுகமும், இங்கேயே மென்மையாக ஆரம்பமாகி விடுகிறது.
திரைப்பட நடிகர், நடிகர்திலகம் கோபால் ஒரு அமர்க்களமான சூழ்நிலையில் கதையில் அறிமுகமாகிறான்.முத்துக் குமாரைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் வாத்தியார் எப்ப வந்தாப்பில என்று பாந்தத்துடன் விசாரிக்கிறான். ஒரு நாடகக் குழுவை ஆரம்பிக்க நினைத்து ஆட்களையும் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் வாத்தியாரும் வந்தது நல்லதாகப் போயிற்று என்று சொல்லி, முத்துக் குமார் தனது கெஸ்ட் ஹவுசிலேயே தங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி பெட்டி படுக்கையை எல்லாம் டிரைவரை விட்டு ஹோட்டலில் இருந்து எடுத்து வரச் செய்கிறான்.
நாடகக் குழுவுக்கு என்ன பெயர் வைக்கலாம்என்று முத்துக் குமாரிடமே யோசனை கேட்கும் கோபாலுக்கு, கோபால் நாடக மன்றம் என்றே பெயர் வைக்கலாமே என்று கொஞ்சம் எகத்தாளமாக முத்துக் குமார் சொல்கிறான்.
"வம்பளக்காதே... பெயரைக் கண்டுபிடிச்சுச் சொல்லு வாத்தியாரே...?"
'கோபால் நாடக மன்றம்'னே வையி! இந்தக் காலத்திலே ஒவ்வொருத்தனும் கும்பிட வேறே தெய்வம் இல்லே; தானே தனக்குத் தெய்வம்னு மனிதன் நினைக்கிற காலம் இது. கண்ணாடியிலே தன் உருவத்தைப் பார்த்துத் தானே கைகூப்புகிற காலம் இல்லையா?"
"'கோபால் நாடக மன்றம்'னு என் பெயரையே வைக்கிறதிலே எனக்குச் சம்மதம்தான். ஆனா ஒரு விசயம் செக்ரட்டரியைக் கலந்துக்கிடணும். 'இன்கம்டாக்ஸ் - தொந்தரவு இல்லாமப் போக வழியுண்டான்னு தெரிய வேண்டியது முக்கியம். அந்தத் தொந்தரவை ஓரளவு குறைக்கிறதுக்காகத்தான் இதைத் தொடங்கினதினாலே அது அதிகமாயிடப்பிடாது."
"ஓகோ! ஒரு கலைக்குப் பின்னால் கலையல்லாத இத்தனை காரணங்களை யோசிக்கணும்... என்ன?"
"கலையாவது ஒண்ணாவது. கையைப் பிடிக்குமா, பிடிக்காதான்னு முதல்லே பார்க்கத் தெரிஞ்சுக்கணும்?"
"ஓகோ! புதுசா இப்பத்தான் நான் இதெல்லாம் கேள்விப்படறேண்டா கோபாலு."
என்னதான் சுபாவமாகவும் சகஜமாகவும் பழகினாலும் கோடீஸ்வரனாகவும், நடிகர் திலகமாகவும் ஆகிவிட்ட தன்னை முத்துக்குமரன் 'அடாபிடா' போட்டுப் பேசுவதைக் கோபால் ரசிக்கவில்லை. ஒவ்வொரு 'டா'வும் முள்ளாகக் குத்தியது. ஆனால், அதே சமயத்தில் முத்துக்குமரனின் கவிதைச் செருக்கும், தன்மானமும், பிடிவாதமும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தவை. ஆகவே, முத்துக்குமரனுக்கு அவன் பயப்படவும் செய்தான். பதிலுக்குப் பழி வாங்குவது போல் தானும் அவனை 'அடா' போட்டுப் பேசலாமா என்று ஒரு கணம் குரோதமாகத் தோன்றினாலும் அப்படிச் செய்யத் தைரியம் வரவில்லை. நீ, நான் போன்ற ஒருமைச் சொற்களும், 'வாத்தியாரே' போன்ற பெயரும்தான் தைரியமாகக் கூற வந்தன. முத்துக்குமரன் என்ற தைரியசாலியோடு மேடையில் ஸ்திரீ பார்ட் போட்ட காலங்களில், 'நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்' என்று நாணிக் கோணிக்கொண்டு அன்று கூறிய நிலையே இன்னும் நீடித்தது. முத்துக்குமரனை மீறி நிற்க முடியாத மனநிலை இன்னும் அவனிடம் இருந்தது. அந்தப் பிரமையிலிருந்து அவனால் இன்னும் விடுபட முடியவில்லை. எதிரே வந்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு எடுத்தெறிந்தாற் போன்ற கர்வத்துடனும், ஒரு கவிஞனின் செருக்குடனும் பேசும் முத்துக்குமரனின் உரிமையையோ துணிவையோ, அந்தக் கோடீஸ்வர நடிகனால் நிராகரிக்க முடியாமலிருந்தது.
...................
"முதல் நாடகத்தை நீதான் கதை - வசனம், பாட்டு உள்படத் தயாரிச்சுக் கொடுக்கணும் வாத்தியாரே?"
"நானா? இதென்னப்பா வம்பா இருக்கு? எத்தினியோ புகழ்பெற்ற நாடகாசிரியருங்கள்ளாம் மெட்ராஸ்லே இருக்காங்க? என்னை யாருன்னே இங்கே யாருக்கும் தெரியாது. எம்பேரைப் போட்டா எந்த விளம்பரமும் ஆகாது! நான் எழுதணும்னா சொல்றே?" என்று கோபாலின் மனநிலையை அறிய முயன்றவனாகக் கேள்வி கேட்டான் முத்துக்குமரன்.
"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ எதை எழுதினாலும் பேர் வர்ராப்பிலே செய்யிறது என் பொறுப்பு" என்றான் கோபால்.
கோபால் உத்தேசித்திருக்கும் நாடகக் குழுவிற்காக முத்துக்குமார் ஒரு சரித்திர நாடகத்தை எழுதுவதென்று முடிவாகிறது
இப்படி இரண்டு விதமான குணாதிசயங்களைப் படைத்த பிறகு, இந்த குணாதிசயங்கள் மோதிக்கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டாமா?
அதுவும் மாதவியை வைத்தே வருகிறது. நேர்முகத் தேர்வின் போது கம்பீரமாக எவருக்கும் தலை வணங்காதவனாக உட்கார்ந்திருந்த முத்துக் குமார், மாதவி இதயத்திலும் ராஜாமாதிரி அமர்ந்து விடுகிறான். எழுதியதைப் படியெடுக்க ஒத்தாசைக்கு வருகிற மாதவி நாயகன் மனதுக்குள்ளும் ஒரு ராணியைப்போல கம்பீரமாக அரியணை ஏறிவிடுகிறாள்.
கழைக் கூத்தியின் காதல்! முத்துக்குமாரின் கைவண்ணத்திலும் கற்பனையிலும் நாடகம் மிகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. நாடக ஒத்திகை, மந்திரி தலைமையில் அரங்கேற்றம், அப்படியே மலேசியக் கலாரசிகர் கம் காண்ட்ராக்டருமான அப்துல்லாவையும் அழைத்து மலேசியா, சிங்கப்பூரில் ஒரு மாதத்துக்கும் குறையாமல் நாடகத்தை நடத்த ஒப்பந்தம் செய்து கொள்வது என்று கோபால் வியாபார விஷயங்களில் படுஜரூராக இறங்கி விடுகிறான்.
கழைக் கூத்தியாக நடிக்கும் மாதவியைக் கண்டு காண்ட்ராக்டர் அப்துல்லா சொக்கிப் போய்விடுகிறார். கலா ரசிகர்கள் எல்லோருக்குமே வருகிற வியாதிதானே இது! விமானப் பயணத்தில் மாதவி தன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு தன்னோடு ஆசையாகப் பேசிக் கொண்டு வர வேண்டும் என்று அப்துல்லாவுக்கு ஆசை. முத்துக்குமார் தனியாக விடப்படுவானே என்பதால் மாதவி மறுக்கிறாள். அப்துல்லாவின் கோபம் முத்துக் குமாரிடம் திரும்புகிறது.
முத்துக்குமரன் தனிமையை உணராமலிருப்பதற்காக மாதவி உட்கார்ந்திருந்த ஸீட்டில் கோபால் உட்கார்ந்து கொண்டு - அவனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான்.
''அதுல பாரு வாத்தியாரே; அப்துல்லா ஒரு குஷால் பேர்வழி. நல்ல பணக்காரன், ஒரு நட்சத்திரத்தோட பக்கத்திலே உட்கார்ந்து பேசிப்பிடணும்னு உயிரை விடறான். கொஞ்சம் பொம்பளைக் கிறுக்கும் உண்டு! போய் உட்கார்ந்து பேசினாக் கொறஞ்சா போயிடும்? அவனோட காண்ட்ராக்ட்ல தானே இந்தத் தேசத்துக்கே வந்திருக்கோம்? இதெல்லாம் மாதவிக்குப் புரியமாட்டேங்கிறது! முழுக்கப் புரியலேன்னும் சொல்ல மாட்டேன். ரொம்ப சூட்டிகையான பொண்ணு அவ. புத்திசாலி, கண்ணசைச்சாலே அர்த்தம் புரிஞ்சிக்கிறவதான். வாத்தியார் இங்க வந்தப்புறம்தான் ஒரேயடியா மாறிப்போயிட்டா. முரண்டு, கோபம், உதாசீனம் எல்லாமே வந்திருக்கு...''
இப்படி வெளிநாட்டில் கலைச் சேவை செய்வதற்காகப் போகும் ஒரு நாடகக் குழு, தன்மானமும் ரோஷமும் மிகுந்த நாடக ஆசிரியன், அவனைக் காதலிக்க ஆரம்பிக்கும் நாடகத்தின் கதாநாயகி, திடீர் பிரபலமாகி சினிமாவில் நடிகர் திலகமுமாகிவிட்ட பழைய நண்பன் கோபால், கலாரசிகர் கம் காண்ட்ராக்டர் அப்துல்லா என்று கதை, மனித உணர்வுகளின் வெவ்வேறு நிலைகளைத் தொட்டு நகர்கிறது. கலையுலகின் பல்வேறு வக்கிரங்களையும் அப்பட்டமாகத் துகிலுரித்துக் காட்டுகிறது. இதற்கு மேலும் சம்பவங்களை அடுக்குவது, மொத்தக் கதையையும் சொல்லி விடுகிற மாதிரி ஆகிவிடக் கூடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
சமுதாய வீதி! கொஞ்சம் சுவாரசியமான புதினமும் கூட!
இதில் வர்ணிக்கப் பட்ட நடிகர் திலகம் கோபால், சினிமாவில் நடிகர் திலகமாக இருந்தவரைப் பிரதிபலிப்பதுபோலப் படைக்கப் பட்டது தான் என்பது இன்னொரு கூடுதல் சுவாரசியம்!
சமுதாய வீதி! முத்துக்குமார்-மாதவி பாத்திரப்படைப்புக்காகவே மறுபடி படிக்கத் தூண்டுகிற அளவுக்கு சுவாரசியமான புதினம் தான்!
எது நல்ல எழுத்து என்பதற்கு ஒரு அடையாளமாகச் சொல்ல முடிகிற புதினமும் கூட!
வாசிப்பதில் நீங்கள் தேர்ந்தெடுப்பனவற்றை பகிர்ந்து கொள்ளும் உங்கள் பணி பாராட்டக்கூடியது. எழுதிய எழுத்தாளனே நினைத்துக்கூடப் பார்த்திருக்காத பல தளங்களுக்கு எடுத்துச் சென்று பன்முகப்பார்வைக்கான
ReplyDeleteசாத்தியக்கூற்றை நிச்சயப்படுத்துகிறீர்கள். பலரது நல்ல வாசிப்பிற்கு இது துணைபுரிவது நிச்சயம். உங்களுடைய Presentation பாணி நன்றாக இருக்கிறது. தொடர்ந்து பல நல்ல நூல்களுக்கான உங்கள் வாசிப்பனுவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
வாருங்கள் ஜீவி சார்!
ReplyDeleteசென்ற வருடம் நவம்பர் 18 ஆம் தேதி இன்னொரு வலைப்பதிவில் எழுதியது இது:
"ஆனால் நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைக்கிற மாதிரிக் கூட இல்லை, நம் தலை மேலேயே வைத்துக் கொண்டாடும் வேறு சில குப்பைகள், இவற்றை என்ன செய்யப்போகிறோம்? சினிமாக்காரர்களைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடிய ஒரு சமூகத்துக்குக் கிடைத்தது என்ன?"
சமுதாயவீதி புதினத்தில் இந்தக் கேள்வி வெளிப்படையாக இல்லை! அன்பே ஆரமுதே புதினத்தில் வருகிற அருண் குமார் என்ற சினிமா நடிகன் பாத்திரத்தை வைத்தும் தி.ஜானகிராமன் இந்தக் கேள்வியை வெளிப்படையாகக் கேட்கவில்லை. ஆனால், கதையைப் படித்த பிறகு, இந்தக் கலைஞர்கள் செய்கிற அழும்பும், அதற்கு இடம் கொடுக்கிற ஜனங்களின் மடத்தனமான அபிமானமும் இந்தக் கேள்வியை முன்வைப்பதை வாசகர் எவரும் உணர முடியும்.
கலைஞர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் அல்லது அழைக்கப் படுகிறவர்கள் இந்த சமுதாயத்திற்கு இழைத்திருக்கிற தீங்குகள் இன்னமும் நீடிக்கிற அவலத்தைப் பார்க்கும்போது, சத்திய வெள்ளம் பெருக்கெடுப்பது போல எழுதக்கூடிய நா.பா மாதிரி ஒரு எழுத்தாளர் இப்போது இல்லையே என்ற ஏக்கம் நிறைய இருக்கிறது.
மிகவும் பி(ப)டித்த புதினம்.இதில் முத்துக்குமரன் பாத்திரம் நா.பா வையே பிரதிபலிப்பதாய் விமர்சனமுண்டு :-)
ReplyDeleteஇப்படி ஒரு வதந்தி அல்லது விமரிசனத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஒரு எழுத்தாளன் தன்னை முன்னிலைப் புடுத்திக் கொண்டே பாத்திரப்படைப்புச் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லையே!
Delete