பட்டிக்காட்டான் பட்டணத்தில் என்ற வலைப் பதிவிலும் பின்னர் கூகிள் ப்ளஸ்ஸிலும் எழுதிவந்த தேனிக்கார இளைஞர், நண்பர் பட்டிக்காட்டான் ஜெய் மாரடைப்பினால் காலமானார் என்ற துயரமான செய்தியை பதிவர் சேட்டைக்காரனுடைய முகநூல் பகிர்வில் பார்த்தேன். நேரில் முகம்பார்த்துப் பழகவில்லை என்றாலும் பதிவுலகிலும் கூகிள் ப்ளஸ்ஸிலும் நல்ல நண்பராக இருந்தவர். மறைவுச் செய்தி உண்மையிலேயே கலங்கச் செய்கிறது.
என் தாய் உள்பட இந்த ஆண்டு, காலம் பிரித்தவர்கள் அனேகம். ஆனால், எனது வலையுலக நண்பர்Pattikattaan Jeyகாலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சென்று வா நண்பா, அவ்வுலகில் அமைதி கொள்! ஓம் சாந்தி!
பதிவுலகில் பழக்கமான நமக்கே இவ்வளவு வருத்தமாக இருக்கிறதென்றால் அவரைப் பிரிந்து வாடும் மனைவி, குழந்தைகள் நிலைமை என்னவாக இருக்கும்?
ஆண்டவனே காப்பு. நண்பர் ஜெய்க்கு அமைதியையும் நல்ல கதியையும் இறைவன் அளிக்கட்டுமென்று பிரார்த்தனை செய்வது ஒன்றே என்னால் முடிந்தது.
சரஸ்வதி பூஜை என்று கலைவாணியை வணங்குகிற நாள் இன்று! அப்படியானால் கலைவாணர்களை? இரண்டில் எது ஒன்றைச் செய்தாலும் இன்னொன்றையும் செய்த மாதிரித் தான் என்பது என்னுடைய அபிப்பிராயம்! அதற்காகக் கூத்தாடிகளை நடுவீட்டிற்குள் அழைத்துவந்து தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது என்று அர்த்தமில்லை.
ரேவதி சங்கரன்! நினைவிருக்கிறதா? பன்முகத்திறமை கொண்ட ஒரு கலைஞர்! சரியாகத் தெரியவில்லையே என்று புருவத்தை நெரிக்கிறீர்களா? இந்த 26 நிமிட வீடியோவைப் பாருங்கள், ஞாபகம் வந்துவிடும்!
இந்த 42 நிமிட சோலோ நிகழ்ச்சியில் முதல் 30 நிமிடங்கள் எப்படிக் கலக்குகிறார் என்று கொஞ்சம் பாருங்கள்! (அப்புறம் சில பழைய படங்களில் இருந்து கிளிப்பிங்ஸ்) தொடங்கும் போது அப்பளக் கச்சேரி என்று பழைய நாட்களில் கிராமங்களில் இருந்த அப்பளமிடும் முறையைச் சொன்ன விதத்தில் எழுத்தாளர் தேவனின் அப்பளக் கச்சேரி தொடரில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக நினைவுக்கு வந்து போனார்கள். நாட்டியம் தெரியாத அஞ்சலி தேவி, பானுமதி இவர்களை எப்படி நாட்டியமாடுகிற மாதிரி காமெராவில் காண்பித்தார்கள் என்பதைச் சொன்னவர் போகிற போக்கில் பத்மினி நலந்தானா நலந்தானா பாட்டுக்கு லெக்கின்ஸ் மேலே விசிறிமடிப்பு வைத்தமாதிரி உடையணிந்து ஆடியதையும் சொல்லத் தவறவில்லை. இவர் இப்படிப் பேசியது நாட்டிய கலா கானபெரென்ஸ் என்ற நிகழ்ச்சியில்!
கலைவாணிக்கு வந்தனம் செய்ய ஆரம்பித்த பதிவில் இந்த இரண்டுபேரும் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்கிறீர்களா? ராஜீய உறவுகளைத் திறம்படக் கையாளுவதே ஒரு தனிக்கலை! பிரதமர் நரேந்திரமோடி அதில் வித்தகர் என்றால் இத்தனைநாட்கள் திறமைகளைக் காட்டாமல் ஒதுங்கியே இருந்த நம்முடைய வெளியுறவுத்துறை, முந்தைய காலங்களில் இல்லாத சுறுசுறுப்பை வெளிக்காட்டிவருவதில் நம்முடைய வெளியுறவுக் கொள்கை முதிர்ச்சியடைந்து வருகிற விதமும் சமீபகாலத்து நிகழ்வுகளில் தெரிகிறது! வருகிற வெள்ளிக் கிழமை மதியம் சென்னை வந்திறங்குகிற சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த 24 மணி நேரங்களில் நான்கு முறை பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடுகிற விதத்திலும், மாமல்லபுர சிற்பங்களை இருவருமே சேர்ந்து பார்க்கிற மாதிரியும் நிகழ்ச்சி நிரல் தயார் செய்யப்பட்டிருப்பதில் கூடுதல் சுவாரசியமும் ஒன்று இருக்கிறது.
வழக்கமாக சீன அதிபர் இந்தியப் பிரதமருடன் பேசிக்கொண்டிருக்கும் சமயத்திலேயே, சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் புகுந்து அடாவடி செய்வதையும் ஒரு மறைமுகமான மிரட்டலாகச் செய்துதானே பார்த்திருக்கிறோம். இந்த முறை இந்தியா வித்தியாசமாக சீன அதிபர் வருகைக்கு முன் ஒரு கட்டமாக, வந்துபோன பிறகு இன்னொரு கட்டமாக என்று லடாக்கின் கிழக்குப் பகுதியிலும் அருணாச்சல பிரதேசத்திலுமாக ஹிம் விஜய் என்ற பெயரில் மலைப்பிரதேசப்போர் ஒத்திகை ஒன்றை நடத்துவதில் முதல் கட்டம் இன்று 7ஆம் தேதி தொடங்கி 10 தேதி வரையிலும் அடுத்த கட்டம் 20-24 தேதி வரை நடக்கிறது. வழக்கம் போல சீனா இதற்குத் தனது கண்டணத்தைத் தெரிவித்திருப்பதில் சீன அதிபர் விஜயம் திட்டமிட்டபடி நடக்குமா என்பது நாளை அல்லது நாளை மறுநாள்தான் உறுதியாகும். ஆனாலும் போர் ஒத்திகையை ரத்துசெய்வதில்லை என்பதில் இந்திய அரசு உறுதியாக இருக்கிறது என்று TOI செய்தி சொல்கிறது.
முந்தைய நாட்களில் நாம் என்ன செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதை நமது நட்பு நாடோ எதிரிகளோ தான் தீர்மானித்து வந்தது இனிமேல் நடக்கவே நடக்காது என்பதில் மிகத் தெளிவாக இந்திய அரசு இருக்கிறது.
இந்தமாதிரிச் செய்திகளுக்கென்றே அக்கம் பக்கம்! என்ன சேதி! தளம் தனியாக இருக்கிறது. இங்கே வருகிற நண்பர்கள் அந்தப்பக்கங்களுக்கும் வந்துபார்த்தால் அடிக்கடி இதுமாதிரித் தம்பட்டம், சுயவிளம்பரம் எல்லாம் தேவையில்லை தான்! மனது வைக்கவேண்டியது நீங்கள் தான்!
சமூக வலைதளங்கள் வளர்வதில் கட்டுக்கு மீறிப் போய்க் கொண்டே இருப்பதில், கட்டுப்படுத்த வேண்டும், சகட்டு மேனிக்கு கருத்து கந்தசாமிகள் உருவாகாமல் முறைப் படுத்தவேண்டும் என்றெல்லாம் கூக்குரல்கள் வெவ்வேறு பக்கங்களில் இருந்து எழுவது நமக்குத் தெரியும்! வலைதள தூதர்கள் என்ற வார்த்தை இந்த நிகழ்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலைத் தூண்டியது என்றே சொல்ல வேண்டும்!
நிகழ்ச்சி நடப்பதோ சென்னையில். நானிருப்பதோ மதுரை. நிகழ்ச்சியைப் பற்றி, பங்கேற்பாளர்கள் என்ன பேசினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எப்படித் தெரிந்து கொள்வது? இங்கே தான் இணையமும் யூட்யூப் தளமும் சேர்ந்து கை கொடுக்கிறது. இணையத்திலும் யூட்யூபிலும் நல்லதும் கெட்டதுமாகக் கலந்தே கிடைப்பதை புரிந்து கொண்டு எது வேண்டுமென்று தேர்ந்தெடுப்பது நம் கைகளில் தான் இருக்கிறது. இங்கே யூட்யூப் தளத்தில் பானு கோம்ஸ், ஹரன் பிரசன்னா, அரவிந்தன் நீலகண்டன் மூவர் பேசியதும் கிடைத்தது. வானதி சீனிவாசனுடன் பார்வையாளர்கள் நடத்திய கலந்துரையாடல் வலையேற்றப்படவில்லை. ஆக இந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் அனைவருமே ஒருமித்த கருத்துடையவர்கள், பிஜேபி ஆதரவாளர்கள் என்று இங்கே தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன?
முதலில் பானு கோம்ஸ்! சமூக வலைதளங்களின் பாசிடிவான விஷயங்கள், எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியும் என்பதை இந்த 18 நிமிட வீடியோவில் சொல்கிறார். சுருக்கமாகச் சொன்னாலும் ஒரு நல்ல அறிமுக உரை
நமது பார்வைக்கு வரும் செய்திகளில் எத்தனை போலிகள். விஷமத்தனமானவை என்பதை அறிந்திருக்கிறோமா? Fake News உருவாகும் விதம், உள்நோக்கங்கள் இவைகளைக் குறித்து ஹரன் பிரசன்னா இந்த 36 நிமிட வீடியோவில் சொல்கிறார். Fake News பின்னணியில் உள்ள அரசியலைக் குறித்து கொஞ்சம் உபயோகமான தகவல்கள் சொல்கிறார்.
முன்னால் இருவர் பேசியதற்கு மேல் அரவிந்தன் நீலகண்டன் பேச இந்த விஷயத்தில் என்ன மிச்சம் இருக்கிறது? Fake News என்று ஆரம்பமானதே நம்மூர் பள்ளிப் பாடப்புத்தகங்களில் தான் என்று ஒரு புதிய கோணத்தில் இருந்து பேசுகிற இந்த 36 நிமிட வீடியோ, கவனத்தை ஈர்க்கிற மாதிரி இருந்தது உண்மை.
இன்றைக்கு என்ன பிஜேபி RSS ஆதரவுப் பதிவா என்று கொஞ்சம் நக்கலாகக் கேட்கிற நண்பர்களுக்கு நான் சொல்லக் கூடிய ஒரே பதில்! செய்திகள், செய்திகளின் அரசியலைப் புரிந்து கொள்ள 360 டிகிரியிலிருந்தும் பார்க்கும் ஒருவனை அவ்வளவு எளிதாக எடைபோடவோ, முத்திரை குத்தவோ காட்டுகிற ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது சொல்லப் பட்ட விஷயத்தில் காட்டினால் நன்றாக இருக்குமே என்பது மட்டும் தான்!
செய்திகள் உருவாக்கப் படுவதிலும் கூட ஒருவித அரசியல் கலந்து தான் இருக்கிறது என்பது நான் கற்றுக் கொண்ட பாடம்!
டொனால்ட் ட்ரம்ப்புக்குப் பிடித்தமான அரசியல் பொழுது போக்கு, சீனாவுடன் மட்டுமல்ல, எல்லாநாடுகளுடனும் ஒரு வர்த்தகப் போரில் இறங்குவதுதான்! America First என்ற தேர்தல் கோஷத்தை இன்னமும் விடாமல் பிடித்துக்கொண்டு மல்லுக கட்டிக்கொண்டே இருக்கிறார். சீனா வருகிற செப்டெம்பரில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில் The US trade agency has confirmed President Donald Trump's higher tariffs on $US300 billion worth of Chinese goods will proceed as previously announced.என்ற செய்தியும் வந்தால் என்ன செய்வார்கள்?
சீனத்துச் சண்டியர் யார் யாரிடம் தன்னுடைய உதார் எடுபடும் அல்லது எடுபடாது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்! வெட்டி உதாரெல்லாம் அமெரிக்காவிடம் பலிக்காது என்பதால் மிகவும் பொறுமையாகப் போகிறமாதிரியே போக்குக்காட்டி அப்புறம் வாய்ப்புக் கிடைக்கிற நேரத்தில் நிதானமாக வைத்துச் செய்வார் .பூச்சாண்டி காட்டுவதில் அமெரிக்கர்களை விடச் சீனர்கள் அனுபவசாலிகள்! இது அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்துக்காக இன்று எழுதிய பதிவின் ஒருபகுதி! இங்கே விரிவாகப்படிக்கலாம். இந்தப்பக்கங்களை புக்மார்க் செய்துகொள்வதுடன் நண்பர் குழாத்துக்கும் பரிந்துரை செய்வீர்கள் தானே! நன்றி. மீண்டும் சந்திப்போம்.
இதிலேயே பதிவுகளைப் பற்றி டாக்டர் பட்ட ஆராய்ச்சியெல்லாம் பண்ணி முடிச்ச பிறகு, இப்ப வந்து, நான் ஆராய்ச்சி பண்ணப் போறேன், உதவி செய் என்றால் நக்கல் அடிக்கிற மாதிரி இருக்குமா, இருக்காதா?! வால் பையன் வேறு கூட சேர்ந்து நக்கலடிக்கிறார்! நான் ஆறு வருஷமாக் கழட்ட முடியாத பாட்டில் மூடியை, அவரை மாதிரி யூத்துங்கல்லாம் ஆறு வினாடிகளிலேயே கழட்டிடராங்களாம்! அவரால பாட்டில் மூடியைக் கழட்ட முடிஞ்சது.....
வால் பையனுக்கு உலக மகா டாக்டர் பட்டம் கொடுக்கப் பரிந்துரை செய்ய, உங்கள் ஆதரவைப் பின்னூட்டங்களில் சொல்லுங்கள்!
................நம்மால கழட்ட முடிஞ்சது இங்கே!!
"ஏதோ வலைப் பதிவுகளைத் திரட்டுற திரட்டிகளைப் பத்திக் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்த மாதிரி இருந்ததே! அதுக்காக இரண்டு திரட்டிகளில் கூட இணைஞ்ச மாதிரி இருந்ததே? புதிதாக ஏதாவது தெரிஞ்சதா, இல்லை, எல்லோரும் பாடும் பதிவுப் பாட்டுத்தானா?"
புள்ளிராஜா வங்கி தந்த புள்ளிவிவரச் சிங்கம், புள்ளி வைத்தவுடனேயோ, வைப்பதற்கு முன்னாலேயோ, புள்ளிக்கே புள்ளி வருமா, எப்பெப்போ என்னென்ன கலர்களில் வரும் என்பதையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கும் நண்பர், இன்றைக்கு என்னவோ நேரடியாகவே, விஷயத்திற்கு வந்து விட்டார்.
"அது என்ன பதிவுப் பாட்டு? பதியாதபாட்டு??"என்றேன் நான். வந்ததும் வராததுமாக புள்ளிவிவரங்களில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. எதற்கு வம்பு?
நண்பர் கொஞ்சம் அதிர்ச்சியுடனேயே கேட்ட மாதிரி இருந்தது. அவர் நினைத்த உலகத்தில் இல்லாமல் போய்விட்டால், அப்புறம் யாரிடம் புள்ளிவிவர மூட்டையை அவிழ்த்து விடுவது என்று பயத்துடனேயே கேட்ட மாதிரியும் இருந்தது.
"அதுதான் நிறைய சினிமாவுல கதாநாயகன் குடும்பத்துக்கு மட்டும்னு ஒரு குடும்பப் பாட்டு இருக்கும், காணாமப் போனவுங்க,இங்க ஒத்தர் அண்ணா சாலையில அந்தப் பாட்டபடிச்சாருன்னா, அமெரிக்காவுல இருக்குற இன்னொருத்தர் அதைக் கேட்டு "அண்ணா"ன்னு ஓடிவந்து கட்டிப் புடிச்சுச் சேந்துக்குவாங்களே ....அந்தமாதிரி, ஏதோ ஒரு திரட்டியில, ஒருத்தரோட பதிவுக்கு முக்கியத்துவம் கிடைக்கலைன்னாலும், அல்லது வேறு யாரோட பதிவுக்கு ரொம்ப முக்கியத்துவம் கிடைச்சாலும், தன்னோட பதிவுல ஒரு பாட்டுப் படிப்பாங்களே, அது தான் பதிவுப் பாட்டு!
இதுகூடத் தெரியாம, நீங்க எல்லாம் என்ன பதிவு போடறீங்க, என்னத்த எழுதறீங்க?"
நண்பரை மேலும் பேச விட்டால் நக்கல் கொஞ்சம் அதிகமாகி விடும் என்பது தெரியும், இருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? விதி வலியது என்பதை நினைத்து ஆறுதல் கொள்ளலாம் என்றால், நண்பர் விடுவதாகவே இல்லை.
லாப்டாப்பை எடுத்துக் கொண்டார். கணக்குப் போட ஆரம்பித்தார். சரி இன்னைக்கும் கிளிஞ்சது கிருஷ்ணகிரின்னு வாயை மூடிக் கொண்டு நண்பர் உதிர்க்கப் போகும் புள்ளி விவரத்தை பயபக்தியுடன் கேட்பது போல பாவனை செய்யக் கஷ்டப்பட்டு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.
"அது ஏன் எப்பவுமே கிருஷ்ணகிரியே கிளிஞ்சிட்டிருக்கனும்னு தானே நினைக்கிறே? வேற ஊர் எதுவும் மாட்டலையானும் நினைக்கிற இல்லே?"
எதுவோ முன்னால போனாக் கடிக்கும், பின்னால வந்தா உதைக்கும்னு சொல்வாங்க இல்லையா?அதேமாதிரித் தான், இந்தப் புள்ளி விவர ஆசாமிங்களும்னு தெரியும்.
வெளியில சொல்லிற முடியுமா? பாருங்க! ஏறின விலைவாசி அப்படியே ஏறினபடிக்கே இருக்கும், ஆனாக்க நம்ம அரசாங்கம் வெளியிடுற புள்ளிவிவரம் பாத்தாக்க, பண வீக்கம் கொறஞ்சுகிட்டே இருக்கும், ஆனாக்க விலைவாசிப் புள்ளி கூடுற மாதிரிக் கூடி, அப்புறம் கொறயும்! எல்லாம் அந்தப் புள்ளிவிவரத்தோட மகிமை அது!
புள்ளிவிவரமும் கூடக் கடவுள் மாதிரி! மணியாட்டிக் கற்பூரம் காட்டி இருக்குங்கிற மாதிரியும் காட்டலாம்! இல்லேன்னாக்கப் பகுத்தறிவுப் பகலவனாகி, கிளிப்பிள்ளை மாதிரி இல்லை இல்லைன்னு சொல்லிக் கிட்டே இருந்தாக்க, இல்லைன்னும் ஆக்கிப்புடலாம்!!
இதுனாலதான், புள்ளிராஜா வங்கியில, தினப்படி, வாராந்திர, மாதாந்திர, அப்புறம் நிமிஷத்துக்கொரு தரம் ஸ்டேட்மென்ட் போடற வேலையை அவ்வளவு பயபக்தியோட, எவ்வளவு தப்பாச் செய்ய முடியுமோ அவ்வளவு தப்போட இன்னிக்கும் செஞ்சு கிட்டே இருக்காங்க போல!
நண்பர் நல்ல மூடில் இருந்தார் என்பது, ஜோசியம் பார்க்கிற மாதிரிக் கை விரல்களை நீட்டி மடக்கிக் கணக்குப் போடுவது போல ஒரு பாவனையில் சுகமாக இருப்பதிலேயே தெரிந்தது.
"எல்லாஞ்சரிதான் அண்ணாச்சி, சொல்ல வந்ததைச் சொல்லிப்புடுங்க! அதுக்கு ஏன் குடும்பப் பாட்டு, பதிவுப் பாட்டுன்னு பாட்டுப் பாடிப் பயமுறுத்தறீங்க?" என்றேன். என்னுடைய திடீர் தைரியத்தைக் கண்டு நண்பர் கொஞ்சம் அசந்துபோயிருக்க வேண்டும்!
"சமீப காலமாத் தமிழ்ப் பதிவர்கள் ஒலகத்துல, ஹிட்ஸ் பத்தின கணக்கு, அது சும்மா கள்ளக் கணக்குல்லேன்னு அதன் மேல கமென்ட், அப்புறம், இந்தத் திரட்டி இன்னாருக்குச் சார்பாவே போயிட்டிருக்கு, இல்லே எனக்கு எதிரா சதிபண்ணுது , இப்படிப் பரபரப்பா எத்தையாவது கிளப்பிக் கொண்டே இருக்கறது தான் ஃபேஷன், தெரியுமா ஒனக்கு?"
"அத்தைத் தெரிஞ்சு நான் என்ன செய்யப்போறேன் அண்ணாச்சி, நீங்க என்ன சொல்ல வாரீங்கங்கறதை மட்டும் பேசுங்க."
என்னுடைய தைரியத்தைக் கண்டு, இப்ப எனக்கே ஆச்சரியம் வந்திட்டது!
"இப்ப ஒன்னோட பதிவையே எடுத்துக்குவமே! போன ஜூன் மாசத்தில நடுவுல தான் ஒன்னோட பதிவத் திரட்டிகளில் இணைச்சிருக்கே இல்லையா?"
லாப்டாப்பைத் திறந்து, அண்ணாச்சி தேட ஆரம்பித்தார். நான் பேசாமல் இருந்தேன்.
"ஜூன் மாசம் திரட்டிகளில் இணைக்கிறதுக்கு முன்னாடி, கிட்டத்தட்ட ஒம்போது மாசம், அறுபது பதிவுகள்னு எழுதியிருந்தும் கூட ஹிட்ஸ் பாத்தா வெறும் மூவாயிரம் தான் இல்லியா? அதுலயும், நீ வந்து பாத்தது, கமெண்ட்ஸ் ஏதாவது இருந்தா பதில் சொல்ல வந்தது இப்படி அப்படின்னு ஒரு 25 பெர் சென்ட் கழிச்சாக் கூட, ஒரு ரெண்டாயிரம், ரெண்டாயிரத்து இருநூறுன்னுதான் தேறும் இல்லியா?"
உள்ளூர எனக்கு அழுகை அழுகையாக வந்தது. பிரபலப் பதிவர், பரபரப்பான பதிவர் ஆகுற யோக்கியதை, எனக்கில்லே, சொக்கா, எனக்கில்லேன்னு திருவிளையாடல் நாகேஷ் மாதிரியோ, வேற வீராவேசமான பதிவருங்க மாதிரியோ கோவில் பிரகாரம், பார்க், பீச்சுன்னு திரிய முடியுமா?
பத்தாக் குறைக்கு, பார்க்,பீச்செல்லாம் கூடத் தமிழ் நாட்டுல இட ஒதுக்கீட்டின் கீழ் வந்து விட்டதாக பதிவர் டோண்டு ராகவன் கேள்வி பதில்பகுதியில் சொல்லியிருக்கார்! பைனான்ஸ் கம்பனியில எமாந்தவங்களுக்குப் பனகல் பார்க், இப்படி அப்படின்னு!
நண்பருக்கு உள்ளே நான் அழ முடியாமல் அழுது கொண்டிருந்தது தெரிந்திருக்க வேண்டும். பொம்பளை அழுதா இரக்கப் படுவாங்க. ஆம்பளை அழுதா, அடச்சீ, நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா, இப்படி மூசுமூசுன்னு அழுதுகிட்டு என்று திட்டுவாங்க.
பதிவு எழுதறவன் அழுதா......நண்பர் மாதிரி ஊரே கூடி வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுடாதா? அதுவும் புள்ளி விவரம்லாம் பாக்குறவங்களுக்கு இன்னும் கொஞ்சம் நக்கலாகிப்போய் விடாதா?
அழுகை கோபமாக மாறி, நண்பரைக் கடுப்புடன் பார்த்துக் கொண்டே, "சரி அண்ணாச்சி, உண்மைதான், பதிவ ஆரம்பிச்ச முதல் ஒம்போது மாசங்கள்ல வந்ததை விட ஜுலை 15 இற்கும் இப்பத்தைக்கும் வந்தவுங்க எண்ணிக்கை தான் அதிகம். அதுக்கு என்ன இப்போ?" என்றேன்.
என்னுடைய கோபம் நண்பருக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும். சிரித்துக் கொண்டே நண்பர் சொல்ல ஆரம்பித்தார்.
"நண்பா! இந்தப் பதிவுலக நுண்ணரசியல், நுணுக்கமான அரசியல்னு சொல்றாங்க பாரு, அது ஒண்ணுமே இல்லை! உரிக்க உரிக்கக் காணாமப் போயிடும் வெங்காயம்! அவ்ளோதான்!"
"என்ன தத்துவமா? வெங்காயமெல்லாம் உரிக்கறீங்க ?" வெங்காயம்னு சொன்ன உடனேயே ஒரு தெம்பு வருது பாருங்க, அதை அனுபவிச்சுத் தான் தெரிஞ்சுக்கணும்!
"கொஞ்சம் வெங்காயத் தொலிய ஓரங்கட்டி வச்சுட்டு, சொல்றதைக் கேளு! பதிவு எளுத ஆரம்பிக்கிற எல்லாருமே, தன்னை அடையாளம் காட்டிக்கத் தான் எளுதறாங்கன்னு சொன்னேன் இல்லியா? அப்படி ஆரம்பிக்கும்போது அங்கே இங்கே மத்தவுங்க எழுதறதைப் பாத்துட்டு, தன்னோட சொந்த அடையாளத்தை மறந்துடறாங்க! இது தான் ஒரிஜினல் பிரச்சினை!"
"யாருக்காகவோ எழுதணும்னு நெனைக்கிறதை விட்டுட்டு, தனக்காகவே எழுதணும்னு நெனைச்சிருந்தாங்கன்னா, திருவிழாக் கூட்டத்துல தொலஞ்சுபோற பிள்ளைமாதிரி ஆகாம இருக்கலாம். நீ கூட, திருவிழாவுல தொலைஞ்சுபோன பிள்ளை மாதிரி ஃபீல் பண்ணி ஒரு பதிவு எழுதியிருந்தே, இல்லியா?
தனக்காக, தான் ரசிக்கிறதுக்காகவுன்னே எளுத ஆரம்பிச்சா, உன்னையும் இந்த உலகம் தேடி வந்து ரசிக்கும்! நெசம்! தனக்குன்னு எளுதும்போது, கொஞ்சம் வக்கணையா, பொய்க் கலப்பு இல்லாம, ருசியா இருக்கணும்னு நினைப்போமில்லியா, அதுதான் சூட்சுமம்!"
என்னதான் மூச்சடக்கி, கஷ்டப்பட்டு முத்துக் குளிச்சாலும், நல்ல வெலை கெடைக்க ஒரு செட்டியார் தயவு வேணுமில்லியா?
அங்கே தான், இந்தத் திரட்டிகளுடைய அவசியமே வருது!
திரட்டிங்க பண்றதெல்லாம், ஷோக்கா டிபார்ட்மென்ட் ஸ்டோரில் டிஸ்ப்ளேல, சரக்குகளை வெளிச்சம் போட்டு வச்சிருப்பாங்கள்ள, அதே மாதிரித்தான்! நீ அவங்க கிட்டஇணைஞ்சப்புரம் பதிவுகளை சமர்ப்பிக்கும்போது, வாசகர் பரிந்துரைங்கற பேர்ல கொஞ்சம் ஓட்டுக் கிடைக்கும்! யாருடா, நம்மையும் மதிச்சு ஓட்டுப் போட வந்தவுங்கன்னு பாத்தா, அதுக்குன்னே சில பேர் இருப்பாங்க. பெரும்பாலும் இவங்க அடையாளத்துக்கும், இவங்க எழுதற பதிவுக்கும் முடிச்சே இல்லாத மாதிரித் தான் மேலோட்டமாத் தெரியும்.
ஏதோ ஒரு அளவுகோல் வச்சு, குறிப்பிட்ட சரக்குகளை மட்டும் கொஞ்சம் கூடுதலா வெளிச்சம் போட்டு, இது தான் சூடான பதிவு, அதிகம் பரிந்துரைக்கப் பட்ட பதிவுன்னு காமிப்பாங்க.அப்படிக் காமிச்சதைப் பாத்தே, கொஞ்சம் கூட்டம் அங்கே போய் மொய்க்கும்! ஆறிப் போன முந்தாநாள் இட்லி மேல, கொதிக்கக் கொதிக்க சாம்பாரை ஊத்தி சூடாக் காமிக்கிற மாதிரித் தான் இதுவும்னு வச்சுக்கோயேன்!
இப்பப் புதுசு புதுசாத் திரட்டிகள் வந்துட்டதால, ஏற்கெனெவே மணம் பரப்பிக் கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு திரட்டி, வலியவே போய், உங்களோட பதிவை எங்கள் திரட்டியில் 4000, 4500, 5000, 5500, 6000 ஆவது பதிவாக இணைத்திருக்கிறோம் என்று பரிவட்டம் கட்டி ஆளை இழுத்து வருகிற வேலையை ஆரம்பித்ததும் நடந்து கொண்டிருக்கிறது. மற்றவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்களும் பின்னூட்டம் இடுகிற சந்தடி சாக்கில், உங்கள் பதிவை எங்கள் வளையத்தில், எலி வலைக்குள் சேர்த்திருக்கிறோம் என்று சொல்ல ஆரம்பித்ததில், ஒரு அறிவிக்காத யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது.
இப்படி வெளிச்சம் போட்டுக் காமிக்கறதுல சில பதிவுகளும், பெரும்பாலான நேரங்களில் பதிவர்களுமே பிரபலமாகிப் போவது ஜஸ்ட் ஒரு ஆக்சிடென்ட் அவ்வளவுதான்! இதுல வேறு மோடி வித்தை, சூட்சுமம் எதுவுமே இல்ல. இப்படிஅதிகம் வெளிச்சம் பட்ட பதிவர்கள் எல்லாருமே சரக்கோட எப்பவுமே எழுதறதும் இல்ல. இதையும் மனசுல வச்சுக்கோ.
உன்கிட்ட இருக்கிறது நத்தைக் கூடா, நல்ல முத்தான்னு தேடறவங்களுக்குத் தெரியாதுல்ல! நல்ல முத்தைப் பிரிச்சுத் தாரேன்னு தான் ஒவ்வொரு திரட்டியை உருவாக்கி நடத்துறவங்களும் சொல்றாங்க. ஒரு அளவுக்கு, அதே மாதிரி பிரிச்சும் தராங்க!ஆனாக்க ஒரு அளவுக்கு மேல போனப்புறம், திரட்டிஙகறது புரட்டுன்னு ஆகிப் போவதை, அவ்வப்போது நடக்கும் சர்ச்சைகள், சூடான வம்பு, சூடான இடுகை, சூடான வாக்குவாதம், சூடான கண்ணீர்னு வரிசையாக் காட்டிக் கொடுத்துடுது!
திரட்டிகளில் சேருவது என்பது உன்னோட பதிவை வாசகருக்குக் கொண்டு சேர்ப்பதுல இருக்கிற பல வழிகளில் ஒரு வழி, அவ்வளவுதான்! இதைக் கொஞ்சம் மனசுல வச்சுக்கோ."
மூச்சு விடாமல் நண்பர் சொல்லிக் கொண்டே போனதில் நான் தான் அதிகக் களைப்பாகிப் போனேன்.
இப்போதைக்கு இது போதும்!
புள்ளிவிவரச் சிங்கமே, மனமுவந்து மிச்சத்தை அடுத்த இன்ஸ்டால்மென்டுல பாத்துக்கிடலாம்னு பெருந்தன்மையா நிறுத்திக் கொண்டார்!
சர்வே, கேள்வி-பதில் என்ற வடிவத்தில் பதில் சொல்வதை விட, ஆராய்ச்சி செய்ய முனைந்திருக்கும் அந்த மாணவிக்கு உதவியாக இருக்கும் என்றுதான் நம்புகிறேன்! தமிழ்ப்பதிவர்கள், பதிவர் குணாதிசயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்றால், போலி டோண்டு, குச்சிக்காரி இந்த வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடினால், இன்னும் நிறையத் தகவல்கள் கிடைக்கும்! படித்துப் பார்த்த பிறகு பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற டாக்டருக்கே பைத்தியம் பிடிச்சா.......குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் வரும் விசுவுடைய இந்த வசனம் நிஜமாகிப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல!
கற்றதும் பெற்றதும் என்று எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடனில் எழுதியது அந்தநாட்களில் ரொம்பவுமே பிரசித்தம். விகடன் அந்தத் தொடரை 4 பாகங்களாக வெளியிட்டது என்று நினைவு. கொஞ்சம் புதிய விஷயங்களைத் தொட்டு எழுத ஆரம்பித்த எழுத்து அது! வலைப்பக்கங்களில் எதற்கு எழுதுகிறோம் என்ற கேள்விக்கு முன்னெல்லாம் உழைத்துக் களைத்ததில் (?!!) ச்சும்மா டைம்பாஸ் என்று தான் பதில் வரும்! இப்படி blogs எழுதுவது பொழுதுபோக்க, மொக்கையாக இருந்தாலும் பரவாயில்லை சீரியசான மேட்டர் மட்டும் பேசாதே என்று கும்மியடிக்க கூடிய கூட்டமாகவே இருந்த பழைய காலம் மலையேறிவிட்டது என்றுதான் எனக்கு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகாலத்துக்கும் மேலான பதிவுலக அனுபவம் சொல்லிக் கொடுத்திருக்கிறது.
நல்ல எழுத்தென்பது எழுதியவனுக்கும் வாசிப்பவருக்கும் கொஞ்சம் பயனுள்ளதாக, எழுதுகிறவன் தான் கற்றுக் கொண்ட அனுபவத்தை வாசிப்பவருக்கும் கடத்துவது தான்! இது ஒருவாசகனாக என்னுடைய தீர்மானமாக இன்றுவரை இருக்கிறது. ஏதோ பதிவுக்கு வந்தோமா என்னத்தையோ வாசித்தோமா என்றில்லாமல் வந்ததற்குப் பயனாக ஏதோவொரு புது விஷயத்தை அல்லது ஒரு மாறுபட்ட பார்வையில் செய்தியைப் பார்க்க முடிவதாக இந்தப் பக்கங்கள் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக! எனக்குப் புதியவிஷயங்களைக் கற்றுக்கொடுத்த இணையத்தில், பயனுள்ளதாக சிலவிஷயங்களைக் கவனப் படுத்துவது என்னுடைய நன்றியைத் திருப்பிச் செலுத்துவதாக இருக்கவேண்டும், இல்லையா!
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காஷ்மீரில் மத்திய அரசு செய்திருக்கிற ஆர்டிகிள் 370 abrogation இன்னும் கொஞ்ச காலத்துக்கு இந்தியா பாகிஸ்தான் சீனா மூன்று நாடுகளிலும் தேநீர்க் கோப்பைக்குள் சுனாமியாக மட்டுமே பேசுபொருளாக இருக்கும் என்பதால் அங்கே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கவோ பேசாமல் இருக்கவோ முடியுமா? ஜம்மு காஷ்மீர் விவகாரம் இதுவரை இருந்த தேக்கத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டு விட்டது. எப்படி என்பதை சேகர் குப்தா 14 நிமிட வீடியோவில் இங்கே சொல்கிறது.
இதுவரை சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு மட்டுமே சாதகம், ஆதரவு என்றிருந்த நிலை அப்படியே உல்டாவாக மாறியிருக்கிறது. தீவீரவாதிகளை அனுப்பிக் கலவரங்களை உருவாக்குவது, அணுஆயுதப் பூச்சாண்டி காட்டுவது, எல்லைப் பகுதியில் போர்ப்பதற்றத்தை சும்மா லுலுலாயிக்காகவேனும் பில்டப் கொடுத்துப் பார்ப்பது என்ற வழக்கமான ஸ்டன்ட் எதையுமே செய்யமுடியாமல் இம்ரான்கான் தொடர்ச்சியாக ஐந்து ட்வீட்டர் செய்திகளோடு ஒப்பாரியை நடத்திக்கொண்டு குறுகிப்போய்க் கிடக்கிறார். அவரைப் பொம்மையாக வைத்து ஆட்டுவிக்கும் பாகிஸ்தான் ராணுவம் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நிற்கிறது. இதற்கு மேலும் ஆர்டிகிள் 370 கைகழுவப்பட்டது சரிதானா என்ற வீண் சந்தேகம், விவாதங்கள் எல்லாம் எதற்கு? நேரமிருந்தால் யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவுக்கு வந்திருக்கிற கமென்ட்ஸ் என்னவென்றும் பாருங்களேன்!
இங்கே படத்தில் லொள்ளு பிரசாத் யாதவுடன் கைகொடுத்துக் கொண்டிருப்பவர் பீஹார் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா.பிஹார் மாநிலத்தில் 3 முறை முதல்வர் பதவியை வகித்தவர் ஜெகநாத் மிஸ்ரா. இன்று காலமானார் என்ற தகவலோடு இந்துதமிழ்திசை நாளிதழ் இப்படி அவருடைய கீர்த்தியைச் சொல்கிறது: பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் முன்பாக காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த ஜெகநாத் மிஸ்ரா மாநிலத்தின் மிக வலிமையான தலைவராக விளங்கினார். லாலு பிரசாத்தின் அரசியல் எழுச்சிக்கு பிறகு மிஸ்ராவின் அரசியல் வீழ்ச்சியடைந்தது. பிஹாரில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன.
முதல் முறை முதல்வராக இருந்தது 750 நாட்கள் 2வது முறை 1133 நாட்கள் 3வது முறை 95 நாட்கள் என்று மொத்தம் 1978 நாட்கள் பீஹார் முதல்வராக இருந்தார். பீகாரின் கடைசி காங்கிரஸ் முதல்வர் இவரே! 1990 மார்ச் மாதத்தோடு சரி! அப்புறம் காங்கிரஸ் கட்சி இன்றைக்கும் அங்கே எழுந்திருக்க முடியவில்லை என்பது தான் முக்கியமான செய்தி. இன்னொரு சுவாரசியமான கேள்வி, ஊழல்புகாரில் சிக்கிய காங்கிரஸ் மந்திரிகள் தண்டிக்கப் பட்டாலும் கூட சிறைக்குப் போனதில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் அதீத சாமர்த்தியமா? அல்லது நம்முடைய சிஸ்டம் எப்படிக் காங்கிரசால் கெடுக்கப்பட்டது என்பதன் அடையாளமா?
சேனல்களில் ஆர்டிகிள் 370 ஐ விட தயாநிதி மாறன் ஃபரூக் அப்துல்லாவைக் காப்பாற்றும்படி இன்று சபாநாயகரிடம் முறையிட்ட காமெடி அப்புறம் TR பாலு முதுகெலும்பு பற்றிப் பேசிய காமெடி இவைகள்தான் அதிகமாகப் பேசப்பட்டிருக்க வேண்டும்! ஆனால் அது காமெடிதான் என்று புரியாத வடக்கத்தி சேனல்கள் தான் புறக்கணித்தன என்றால் நம்மூர் சேனல்களும் கூட உரிய இடம் கொடுத்துப் பேசவில்லை என்பதைப் பார்க்கும்போது அந்தநாளைய கருணாநிதி மாதிரி ஏ! தாழ்ந்த தமிழ் ஊடகமே! என்று பொங்கியிருக்கலாம் தான்! என்னமோ யோதனைகளில் விடுபட்டுப்போய்விட்டது!
சேகர் குப்தா! காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காசுக்காகக் கூவுவது எதனாலே என்று அனுபவித்தவர் தான்! அவர்கூட இன்றைக்கு காங்கிரஸ்கட்சியை headless chickens என்று சொல்கிற அளவுக்கு காங்கிரஸ் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, கட்டெறும்பும் சிறுத்து சிற்றெறும்பாகி, இன்று சிற்றெறும்பும் தேய்ந்து.....கிடக்கிறதே! NDTV, The Wire, scroll in என்று காங்கிரசைக் காசுக்காகத் தாங்கிப்பிடிக்கிற ஊடகங்கள் கூட, தூக்கி நிறுத்த முடியவில்லையே! வீடியோ 12 நிமிடங்கள் தான்!
Behind the scenes திரைக்குப் பின்னால் /திரைமறைவில் என்னமோ நடந்திருக்குப்பா என்று ஆவலோடு தகவல் தெரிந்து கொள்ள விரும்புவது மனித இயல்போ இல்லையோ அப்படி ஒரு பில்டப் கொடுத்துத் தங்கள் ஊகங்களையே செய்திகளாக மாற்றுவது ஊடகங்களுக்கு வாடிக்கை என்றால் அப்படியே அதை நம்பி அடடே! இத்தனை நடந்திருக்கா என்று ஏமாறுவது ஜனங்களுக்கு வாடிக்கை! வீடியோ 9 நிமிடம்தான்.
சரத் பவாருடைய மகள் சுப்ரியா சுலே மக்களவையில் இன்று தனது பக்கத்து இருக்கையில் இருந்த ஃபரூக் அப்துல்லாவைக் காணோமே என்று உருகினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா அவருக்கு ஒன்றும் ஆகவில்லை சுயவிருப்பத்தின் பேரில் வீட்டில் இருக்கிறார் என்று பதில் சொன்னார், உள்துறை அமைச்சர் பொய் சொல்கிறார் என்று இங்கே ஊடகங்களிடம் அதுவும் ANI மற்றும் NDTV மட்டும் தான் - அதிலேயே கொஞ்சம் உறுத்துகிறது -நாடாளுமன்றத்தில் அமைச்சர் பேசியதைக் குறித்துப் பொங்குகிறார், அழுகிறார்! ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னால்கூட இந்த ஊழல் மன்னனை கைது செய்வது, தடுப்புக் காவலில் வைப்பது இவை எதையுமே கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க முடியாது! இந்த அழுவாச்சி காவியத்தை NDTV சேனலில் நாலைந்து முறை பார்த்தேன். ஒரே ஒரு கேள்வி, வீட்டுச் சிறை அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிற ஒருவரை இப்படி ஊடகங்கள் பேட்டி எடுக்க முடியுமா? ஒளிபரப்பத்தான் முடியுமா? பொய்சொல்வது யார்? அமித் ஷாவா? அல்லது ஃபரூக் அப்துல்லாவா? #அரசியல்லஇதெல்லாம் சாதாரணமப்பா!
வளைகுடாநாடுகளில் UAE என்கிற அமீரகம் ஆர்டிகிள் 370 இல் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்களை இன்று ஆதரித்திருக்கிறது. சவூதி அரேபியாவுமே கூட இதை இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாக மட்டுமே பார்க்கும் என்று ஊகிப்பதும் கடினமானது இல்லைதான்! ஆனால் நம்மூரில் இருந்து அங்கே போன பதிவுலக நண்பர்கள் என்ன மாதிரி சாமியாடுவார்கள் என்பது கூட ஊகிப்பதற்கு கடினமா என்ன?
அப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வாசிப்பு அனுபவம் தான்! சிலர் வாழ்க்கையைப் படித்தே அறிந்துகொள்கிறார்கள்! வேறுபலருக்கோ, புத்தகங்களை வாசித்தே வாழ்க்கையை அறிந்து கொள்கிற அனுபவம் வாய்க்கிறது.வாசிப்பதில் ஆழ்ந்து லயிக்கும்போது அதை யாருடனாவது பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பு, மடி கனத்துப் போன பசுவைப் போல, எழுதத் தூண்டுகிறது.
வாசித்ததும், நேசித்ததுமான சில அனுபவங்கள் இந்தப்பக்கங்களில்!
புத்தகங்கள், கவிதைகள் என்று மட்டுமல்ல, மன வளம் பெருக உதவியாகக் கிடைக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் சுவாசக் காற்றாக!
புத்தகங்கள், கவிதை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எதில் வேண்டுமானாலும், படித்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இன்னும் அதிக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவுமான நுழைவாயில் இது!
வாருங்கள்! பேசுவோம்! இப்படி ஒரு முகவுரையோடு 2009 டிசம்பர் கடைசிவாரத்தில் துவங்கப்பட்ட வலைப்பதிவு இது. என்னவோ சில காரணங்களால் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு 2012 இல் இரு பதிவுகள், 2014 இல் இருபதிவுகள், அதற்குப்பிறகு 2018 டிசம்பரில் 6 பதிவுகள் என்று தொடங்கி இந்த வருடம் தான் தொடர்ச்சியாக, அனேகமாக தினசரியே
இந்தப்பக்கங்களில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்து, இந்தப்பதிவுடன்
223 பதிவுகள் என்று வளர்ந்திருக்கிறது.
விடுபட்டுப்போன நண்பர்கள் தொடர்பு மீண்டும் சீராக ஆரம்பித்ததும் பக்கங்களுக்கு வருகை களைகட்ட ஆரம்பித்ததும் இந்த வருட பிப்ரவரியில் இருந்துதான்! 2009 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரையே இந்தப் பக்கங்களுக்கு வந்தவர்கள் எண்ணிக்கை 39025 தான்! நண்பர்கள் வருகை கடந்த ஆறுமாதங்களில் இருமடங்குக்கும் கொஞ்சம் கூடுதலாக ஆகியிருப்பதில் எங்கள்Blog ஸ்ரீராம், தமிழ்மணம் திரட்டி, என்று வெளியே
இருந்து கிடைத்த referral ஆதரவு முக்கியப்பங்கு வகிக்கின்றன.