Saturday, July 31, 2010

தி லாஸ்ட் சிம்பல்...! டான் பிரவுன் !




இது சென்ற வருடம் அக்டோபரில் எழுதப்பட்டு இன்னொரு வலைத் தளத்தில் வெளியானன் மீள்பதிவு தான்! புத்தகங்களைக் குறித்த எனது எண்ணங்களை ஒரே இடத்தில் தொகுத்து வைக்க வேண்டும் என்பதற்காக இங்கே இப்போது.

டான் பிரவுன் எழுதி
, சமீபத்தில் வெளியாகியிருக்கும் புத்தகம், தி லாஸ்ட் சிம்பல்
ஞ்செல்ஸ் அண்ட் டெமன்ஸ், டாவின்சி கோட், வரிசையில் மூன்றாவது. குறியீடுகளில் வல்லுனரான ராபர்ட் லாங்டன் பாத்திரத்தை மையமாக வைத்து வந்திருக்கும் இந்தப் புதினம் கைக்குக் கிடைத்துச் சில நாட்களாகிறது. ஆனாலும், வெறும் அறுபது பக்கங்களைக் கூடத் தாண்டி தொடர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை, என்னென்னவோ வேலைகள்!


இந்த நிலையில் "மரண மொக்கை ஃப்ரம் டான் பிரவுன்" என்ற வெண்பூவின் வலைப்பதிவைப் படித்த போது, ச்சே அப்படியெல்லாம் இருக்காது, கதைக்களத்தை திறம்படச் செய்கிற கலையில் வல்லுனரான கதாசிரியர் அந்த அளவுக்கெல்லாம் மோசம் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில், இப்படி ஒரு பின்னூட்டமும் போட்டாயிற்று!


"ஏமாற்றம் டான் பிரவுன் எழுதினதில் இல்லை.முந்தைய கதைகளை வைத்து, எக்கச்சக்கமாக எதிர்பார்த்துப் படிக்க ஆரம்பிப்பதில் வரும் கோளாறு இது!"



வெண்பூ கொஞ்சம் பொறுமையாகவே பதிலும் சொன்னார். அப்போதாவது சுதாரித்திருக்க வேண்டும்!


"வாங்க கிருஷ்ணமூர்த்தி.. நீங்க சொல்றது ரொம்ப சரி. ஆனா அந்த எதிர்பார்ப்பை கிளப்புறது அவங்களேதானே. டாவின்சி கோடுக்கு அடுத்ததா வர்ற புத்தகத்துல இது மாதிரி எதிர்பார்ப்புகள் தவறில்லையே. அந்த எதிர்பார்ப்பு இருந்ததாலதானே முதல் பிரிண்டே 6.5 மில்லியன் ஆகுது. நம்ம எதிர்பார்ப்பை அவங்க காசாக்கும்போது, அதை பூர்த்தி செய்யுற கடமையும் அவங்களுக்கு இருக்குன்னு நான் நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி."


மருதைக்காரங்க கிட்ட ஒரு கெட்ட பழக்கம், எப்பவுமே முன் வச்ச காலைப் பின் வைக்க மாட்டோம்லன்னு கொஞ்சம் அலட்டலாகவே சொல்லிக்கிறது! நானும் அப்படித் தான் கொஞ்சம் அலட்டலா, மறுபடியும் ஒரு பின்னூட்டம் எழுதினேன்.


"/நம்ம எதிர்பார்ப்பை அவங்க காசாக்கும்போது, அதை பூர்த்தி செய்யுற கடமையும்/


இந்த இடத்துல தான் பிரச்சினையே வருது. ஏற்கெனெவே நாம் ஒரு மாதிரி கற்பனை செய்து வைத்திருக்கும் எதிர்பார்ப்பின்படி இல்லைன்றால், உடனே வருவது ஏமாற்றம் தான் இல்லையா?



இந்தப் புத்தகம் கைக்கு வந்தாயிற்று. ஆனால், படிக்க ஆரம்பிக்க- வில்லை. இவரது புத்தகங்கள்,மற்ற எல்லாவற்றையும் படித்த அனுபவத்தில் தான் சொல்கிறேன், எதையும் கொஞ்சம் திறந்த மனதோடு,கதைக்களமாக எடுத்துக் கொண்டிருப்பதைக் கொஞ்சம் புரிந்து கொள்கிற விதத்தில் படிக்க ஆரம்பித்தால் இத்தனை ஏமாற்றம் இருக்காது.


எடுத்துக் கொண்ட கதைக் களத்தை, ஏகப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புக்களின் அடிப்படையில், ஒரு புதினமாகச் சொல்ல முனைந்திருக்கிறார். அடுத்தடுத்து ஒரே மாதிரிப் பார்க்க, படிக்க நேரிடும்போது இந்த மாதிரி சலிப்பு ஏற்படுவது இயற்கைதான்.


கொஞ்ச நாள் கழித்து நிதானமாக இன்னொருதரம் படித்துப்பாருங்கள், நிச்சயமாக, வேறு விதமாக உணர்வீர்கள்!" 

இது நான் சொன்னது.


அவரும், இன்னும் பொறுமையாச் சொன்னப்பவே தெரிஞ்சிருக்கணும்! அப்ப அது உறைக்கவில்லை. என்ன சொன்னாருன்னா....


"மறுவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி கிருஷ்ணமூர்த்தி.. புத்தகத்தைப் படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தையும் சொல்லுங்கள்."


பதிவர் வெண்பூ அவர்களே! பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன்! இந்தப் புத்தகம் படு மொக்கைதான்! மரண மொக்கை என்றெல்லாம் சொல்ல மாட்டேன், நான் படித்து நொந்து நூடுல்சான ஒரே புத்தகம் ராபின் குக் எழுதிய தி ஃபீவர்! அதை விட மரண மொக்கையான ஒரு புத்தகத்தை, இன்னமும் நான் படிக்கவில்லை.


ஒப்புதல் வாக்கு மூலம் ஆயிற்று! சரி புத்தகம் எப்படியெல்லாம் ஏமாற்றியது, எதனால் மொக்கை என்று விமரிசனம் செய்ய வேண்டி ருக்கிறது என்பதையும் பார்த்து விடலாமா?


ராபர்ட் லாங்டன் கதாபாத்திரத்தை சிம்பாலாஜி துறைப் பேராசிரியராக மையப்படுத்தி, முதல் இரண்டு புதினங்கள், முதலில் ஏஞ்செல்ஸ் அண்ட் டெமன்ஸ், ஒன்பது வருடங்களுக்கு முன்னால் வந்தது;  

மூன்று வருடம் கழித்து டாவின்சி கோட்! புத்தகமாக வந்த போது ஏகப்பட்ட சர்ச்சைகள்! கிறித்தவத்தை இழிவு படுத்தி விட்டார், அவர் கதையில் என்னென்னவெல்லாம் திரித்துச் சொல்லியிருக்கிறார் என்பதைக் கிறித்தவக் காவலர்கள் நிறையப் பேர் ஏராளமான வலைத் தளங்களை ஆரம்பித்து, டான் பிரவுன் சொன்னது உண்மையாக இருக்குமோ என்ற அளவுக்கு எதிர் பிரச்சாரம், இலவச விளம்பரம் செய்தது,  இப்போது மிஸ்ஸிங்!


டாவின்சி கோட் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது, வாடிகன் நகரில் படமெடுக்க அனுமதித்த திருச்சபை, தங்களைப் பற்றிய பிம்பம் சரிந்து விழுவதைக் கண்டு, அடுத்த படமான ஏஞ்செல்ஸ் அண்ட் டெமன்ஸ் படத் தயாரிப்பின் போது,ரோம் டயசீஸ் சீப்பை ஒளித்து வைத்துக் கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று கணக்குப் போட்டது. படப் பிடிப்புக்கு வழங்கியிருந்த அனுமதியை மூன்று நாட்களுக்கு முன்னால் ரத்து செய்தது.  

படத்தின் இயக்குனர் ரான் ஹோவார்ட், அனுமதி மறுக்கப் பட்ட நிலையிலும், ரகசிய காமெராக்கள் வழியாக அதிரடியாக சில இடங்களில் படமெடுத்ததோடு, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் செட், சிமுலேஷன் என்று பல விதங்களிலும், படப்பிடிப்பை நடத்தினார் என்பது ஒரு சுவாரசியமான தகவல். படமெடுத்த விதத்தில், திட்டமிடுவதில் இருந்த சுவாரசியம், படத்திலும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?


மறுத்துப் பேசிப் பேசியே, கவிழ்த்துவிடலாம் என்று செயல்பட்ட போது, அதுவே டான் பிரவுன் புத்தகத்திற்கும், படத்திற்கும் பெரிய விளம்பரமாகிப் போன அதிர்ச்சியில் ஏற்கெனெவே கையைச் சுட்டுக் கொண்ட வாடிகன் திருச்சபை, ஏஞ்செல்ஸ் அண்ட் டெமன்ஸ் படம் வெளியானபோது கொஞ்சம் கவனமாகவே இருந்தது.


"Church dignitaries diplomatically praised its “dynamic director,” "splendid photography" and "magnificent" studio and computer simulations of the Vatican, Sistine Chapel and St. Peter's Basilica. An Italian daily quoted the L'Osservatore Romano editor Gian Maria Vian “(it) only confirms the centuries-old fascination with our faith and our symbols,” adding a who-cares, “If only all anti-Catholic operations were like this."


திருச்சபையின் பிரமுகர்கள் ராஜதந்திரமாகப் படத்தின் இயக்குனரை பாராட்டியதைப் படிக்கும் போது தெனாலி ராமன் கதையில், பாலைப் பார்த்தவுடனேயே பயந்து ஓடும் பூனை ஒன்றின் கதை நினைவுக்கு வருகிறதா?


இப்படியெல்லாம் நிறையக் கேள்விப்பட்டு, வாசித்துப் பழகினதால், டான் பிரவுன் கொஞ்சம் விவரமாகவே எழுதியிருப்பார் என்ற நம்பிக்கையில் வெண் பூ வலைப்பதிவில் கொஞ்சம் அவசரப்பட்டு, என்னுடைய பின்னூட்டங்களைப் பதிவு செய்தேன்! முழுவதும் கதையைப் படித்தபிறகு அல்லவா தெரிகிறது!!


பொறுங்கள்! நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை நான் சொல்ல வருவது!

கிறித்தவம் ஒரு நிறுவனப் படுத்தப்பட்ட மதம் என்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தாலும், நிறுவனப் படுத்தப்பட்டது எவ்வளவு தூரம் ஜோடிக்கப் பட்ட அல்லது மாற்றி எழுதப் பட்ட வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டது என்பது ஒரு சராசரி வாசகனுக்குத் தெரியாத விஷயம்!  

அந்த ஒரு களத்தை எடுத்துக் கொண்டு இல்யூமினாடி
, ஓபஸ் தேய் என்று அதிகம் வெளியில் தெரியாத விஷயங்களில் கவனத்தை ஈர்த்து, சரித்திரம் இப்படிக் கூட இருந்திருக்கலாம் என்ற ஊகத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தபோது, அடுத்தடுத்த சிக்சர்களாக ஆட்டம் இருந்தது!


அடுத்த பந்தில் சிக்சரா, பவுண்டரியா இல்லை விக்கெட் போய்விடுமா என்ற எதிர்பார்ப்போடு படிக்க ஆரம்பிக்கும் வாசகனை முழுக்க முழுக்க ஏமாற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்! முதலிரண்டு நாவல்களில், வாடிகனின், மறைக்கப்பட்ட அல்லது அதிகம் வெளியே தெரியாத விஷயங்களைத் தொட்டவர், மூன்றாவதில் அப்படியே ஒரு சோமெர்சால்ட் அடித்து, கிறித்தவ நம்பிக்கையை முன்னிறுத்திக் கதையை முடித்திருப்பதைப் படிக்கும்போது, முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே கதாசிரியர் டான் பிரவுன் தெரிகிறார்.


முந்தின இரண்டு நாவல்களிலும், மத நம்பிக்கைகள் சம்பந்தமான சில கேள்விகளை, அது தொடர்பான ஊகங்களை முன்வைத்தவர், இந்த மூன்றாவது புத்தகத்தில், சில முடிவுகளை முன்வைக்கிறார்.  

அந்த முடிவுகளாவது, ஏற்கெனெவே அவர் சொல்லிப் போன விதத்தோடு பொருந்துகிறதா என்று பார்த்தால், இல்லை, இல்லவே இல்லை என்பதே விடையாக வரும்போது, படிப்பவர் தான் ஏமாற்றப் பட்டதாகவே உணருகிற தருணத்தில், மொக்கை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வதாம்?


நிகோலஸ் கேஜ் நடித்து வெளியான "நேஷனல் ட்ரெஷர்" படத்தை ஏற்கெனெவே பார்த்து விட்டரசிகர்களுக்கு (நான் பார்த்து விட்டேன்) இந்தக் கதையைப் படிக்கும் போது, கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கதைக் களத்தை ஏற்கெனெவே பார்த்திருக்கிறோமே என்று தோன்றும் அளவுக்கு இருக்கும் இந்தக் கதையில் அப்படி என்னதான் இருக்கிறது?


ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில், குறியீடுகள் குறித்த துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் கதா நாயகன் ராபர்ட் லாங்டனுக்குப் பழைய நண்பர் பீடர் சாலமனிடமிருந்து வாஷிங்டனுக்கு வருமாறு ஒரு அவசர அழைப்பு வருகிறது. நண்பரின் அழைப்பை ஏற்று வாஷிங்டன் வரும் கதாநாயகனுக்கு அப்புறம் தான் அந்த அழைப்பே போலியானது என்று தெரிய வருகிறது.


பன்னிரண்டு மணி நேரத்திற்குள் மொத்தக் கதையும் நடப்பதாக, ஒரு விறுவிறுப்போடு கதை ஆரம்பிக்கிறது. போலியான அழைப்பை விடுக்கும் வில்லன், நண்பரைத் தான் கடத்தி வைத்திருப்பதாகவும், ஃப்ரீ மேசன்ஸ் எனப்படும் ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பீடர் சாலமனை விடுவிக்க வேண்டுமானால், லாங்டன் ஒரு புதிரை விடுவிக்க வேண்டும் என்று சொல்கிறான்.


அமெரிக்க உளவுத்துறையான சி ஐ ஏ வின் ஒரு பிரிவின் டைரக்டர் சாடோ, லாங்டனிடம், பீடர் சாலமன் காப்பாற்றப் படுவது முக்கியமில்லை, புதிரை விடுவித்து வில்லனிடம் அவன் கேட்கிறபடி கொடுத்து விட்டால் நல்லது என்று குறுக்கே வருகிறார்.


பீடர் சாலமனின் தங்கை, காதரின் சகோதரனுடைய வழிகாட்டுதலின் பேரில் ஒரு விஞ்ஞானக் கூடத்தை நிறுவி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். வில்லன் அவரிடமும், நம்பவைத்து, ஆராய்ச்சிக் கூடத்திற்குள் ஊடுருவுகிறான். வில்லனிடமிருந்து தப்பி லாங்டனுடன் சேர்வது, புதிரைச் சேர்ந்து விடுவிக்க முயல்வது, முந்தின கதைகளில் வருவது மாதிரியே ஒரு ஸ்டாண்டர்ட் பாட்டர்ன் தான்! மாறுதலுக்காக, லாங்டனையே மூழ்கடித்துச் சாகடிப்பதாக ஒரு ட்விஸ்ட் வேறு!


மலாக் என்ற அந்த வில்லனுடைய கடந்த காலம் ஃபிளாஷ் பேக் முறையில் சிறிது சிறிதாகச் சொல்லப் படுகிறது. பீடர் சாலமனுடைய அன்னையைக் கொலை செய்தது முதல், அந்தக் குடும்பத்தையே கருவறுக்கச் சூளுரைத்துச் செயல் படும் வன்மம் அங்கங்கே சொல்லப்படுகிறது. வாஷிங்டன் நகரில் காபிடல் கட்டடத்திற்குள் எங்கேயோ புதையுண்டு கிடக்கும் "அது" என்ன? வில்லனுக்கு பீடர் சாலமனுடைய குடும்பத்தையே கருவறுக்கும் அளவுக்கு வன்மம் ஏன்?  

எது எப்படிப்போனாலும் சரி, மறைந்து கிடக்கும் புதிரை விடுவித்து வில்லனிடம் அவன் கேட்கிறபடி கொடுத்து, வேறுபிரச்சினையில் இருந்து தேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று உளவுத் துறை டைரக்டர் சாடோ முனைப்புதான் இருப்பது ஏன், அப்புறம் டான் பிரவுன் கதைகளில் வழக்கமாக வருகிற மாதிரி குறியீடுகள், அவை மேலோட்டமாகச் சொல்வது ஒன்றாகவும், உண்மையில் சொல்வது வேறாகவும் இருப்பதை கதாநாயகன் எப்படி விடுவிக்கிறார் என்பது எல்லாம், சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கின்றன.


அதையும் தாண்டி, முந்தின இரண்டு நாவல்களில், கிறித்தவத்தின் மீதே சந்தேகம் வருகிற மாதிரி, வாடிகனை மையப்படுத்திக் களம் அமைத்ததற்கு மாறாக, இந்தக் கதையில் இல்யூமினாடி,வாடிகன், சர்ச்இவைகளெல்லாம் இல்லை. சரித்திரத்தில் மறைக்கப் பட்டதாக அல்லது திரிக்கப் பட்டதாகத் தேடும் எதுவும் இல்லை.  

ஃப்ரீ மேசன்கள் என்று அழைக்கப்படும் குழுவினரைப் பற்றி மட்டுமே! நொயெடிக் சயன்ஸ், எண்ணங்களின் ஆற்றல் இந்த விஷயங்கள் ஏதோ புதிதாகச் சொல்லப் படும் விஷயம் போல அங்கங்கே வந்து போகிறது.


கதையை டான் பிரவுன் தான் எழுதினாரா அல்லது ஏதோ கிறித்தவ விசுவாசக் குழு, தன்னுடைய பிரச்சாரத்தை வித்தியாசமாக ஒரு கதைக்குள் வைத்துக் கொடுத்திருக்கிறதோ என்ற சந்தேகம். அப்புறம், எனக்குக் கிடைத்த புத்தகம் ஒரிஜினல் தானா இல்லை புருடாவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்!

கொஞ்சம் மொக்கைதான்அதுகூட கதைசொன்ன விதத்தில் இல்லை, முன்பு சொன்னதோடு முரண் பட்டுப் போன போது, நம்பகத் தன்மையை இழந்து விட்டதால் தான் என்று தோன்றுகிறது.

டான் பிரவுனுக்கு இந்தப் புத்தகம் ஹாட்ரிக் இல்லை!

தயிர்வடையை ஆசையாகச் சாப்பிட்டுக் கொண்டே தத்துவம் பேசும் தோழர்  வரதராஜன் அடிக்கடி ஆசையோடு மேற்கோள் காட்டுவது இது:

"நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டின் மீதேறிக் கூட ஒருவன் நரகத்துக்குப் போக முடியும்!"

டான் பிரவுன் இந்தக் கதையில், சில முடிவுகளுக்கும் வருகிறார் என்று சொன்னே
ன் ல்லவா!அது கூட இப்படித்தான் இருக்கிறது!!

It is true that the words "Laus Deo" [under God] are inscribed on the east face of the Washington monument in Washington DC. It is also true that all the four sides bear some inscriptions.


டான் பிரவுனின் இந்தக் கதையில் வரும் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தில் கிழக்கு முகமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் கடவுளுக்குக் கீழ்ப்படிதல் உள்ள என்று பொருள் படும் வாசகம், ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவுக்காக எழுதிய பிரார்த்தனை,  இவற்றைப்பற்றிய விவரங்களை, அமெரிக்க  வரலாற்றுப் பெருமிதங்களாகக் குறிப்பிடும் இந்தப் பக்கங்களில்  இன்னும் கொஞ்சம் விரிவாகப் படிக்க முடியும்.

வெறும் கதையாக மட்டும் படிக்க முனைபவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. இதயம் பேசுகிறது மணியன் தனது முதல் அமெரிக்கப் பயணத்தின் போது பார்த்த ஒரு விசித்திரமான அனுபவத்தைச் சொல்லியிருப்பார். 


இவர் பயணித்துக் கொண்டு இருந்த போது, அருகில் இருந்த ஒருவர் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டே, படித்த  பக்கங்களைக் கிழித்து ஒவ்வொன்றாகக் குப்பைத் தொட்டியில் போட்டுக் கொண்டிருப்பார். மணியன் ஆச்சரியப்பட்டு அது என் என்று கேட்டபோது, அந்தநபர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இப்படிச் சொன்னாராம். 

"படித்தாயிற்று! இன்னொரு தரம் படிக்கப் போவதில்லை, அப்புறம் எதற்காக அதை வைத்துக் கொள்ள வேண்டும்"

அந்த மாதிரியோ, அல்லது நூலகத்திலோ எடுத்துப் படிக்கலாம்!



Tuesday, July 27, 2010

ஒரு சாயா குடித்துக் கொண்டே ஜெயிக்கலாம் வாங்க....!



கீழை நாடுகளில் தேனீர் விருந்து என்பதே ஒரு மிகப் பெரிய கலாசார சடங்காக நடக்கும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். 

இங்கே லோகல் சாயாக் கடைகளில், டீத்தூள் என்பது சாயமேற்றிய புளியங் கொட்டையா, மரத்தூளா என்பதே தெரியாமல், கொதிக்க வைத்து அதில் பால் என்று சொல்லப் படுகிற ஒன்றைக் கலந்து கோப்பை நான்கு அல்லது ஐந்து ரூபாய்க்குக் கடனே என்று வாங்கிக் குடிக்கிற நமக்கு சாயா குடிப்பதே ஒரு திருவிழா, சடங்கு, தவம் மாதிரி என்றால் என்ன பெரிதாகப் புரிந்துவிடப்போகிறது என்று அலட்சியமாக இருந்தவனை, இணையத்தில் ஒரு சாயா குடிக்கும் குழு அல்லது கும்பலைப் பற்றிப் படித்தபோது, ஓஹோ, இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப் பட வைத்தது. ஒரு பாடமும் கிடைத்தது! 


ஒரு நல்ல ஆசிரியர்! 

கிளிப்பிள்ளைகள் மாதிரித் தான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்பவர்களாகத் தன்னுடைய மாணவர்கள் இருக்கக் கூடாது என்பதில் உண்மையான அக்கறையோடு, அவர்கள் சுயமாகச் சிந்தித்து எதையும் முடிவு செய்யவேண்டும் என்பதில் கவனமாகப் பாடத்தை நடத்தியவர். மாணவர்களுடைய ஆதர்சமாக ஆகிப் போனதில் வியப்பு ஒன்றுமில்லைதான்!

ஒரு நாள் அந்த ஆசிரியரைத் தேடி
, அவருடைய பழைய மாணவர்கள் போனார்கள்
. ஆசிரியரிடம், ஒவ்வொருவரும், தங்களுடைய வேலைச் சுமை, குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம், இப்படி ஒவ்வொன்றிலும் தாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை மனம் திறந்து விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆசிரியர் எழுந்தார். "பேசிக் கொண்டிருங்கள்! உங்கள் எல்லோருக்கும் தேனீர் கலந்து எடுத்து வருகிறேன்" என்று சமையல் அறைக்குப் போனார். தேனீர் தயாரித்துப் பெரிய குவளையில் நிரப்பி எடுத்துக் கொண்டார். பலவிதமான வண்ணப் பீங்கான் கோப்பைகள், வெண்கலக் கோப்பைகள், எவர்சில்வர் கோப்பைகள், வெள்ளிக் கோப்பைகள், பேப்பர் கோப்பைகள் என்று பலவிதமான கோப்பைகளை எடுத்து வந்து ட்ரேயில் வைத்தார்.

"வேண்டுமான அளவு தேனீரை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று உபசரித்தார். முன்னாள் மாணவர்களும், ஆளுக்கொரு கோப்பையைத் தேர்ந்தெடுத்து, குவளையில் இருந்து தேனீரை ஊற்றிக் கொண்டு குடிக்க ஆரம்பித்தார்கள். "எங்கே நிறுத்தினேன்?" என்று கேட்டுக் கொண்டு ஒரு மாணவன் பேச ஆரம்பித்தான்.

ஆசிரியர் புன்னகையுடன்
, "அதற்கு முன்னால் நான் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது." என்றார்.

"கொஞ்சம்  உங்கள் கோப்பையைக் கவனித்துப் பாருங்கள்! நீங்கள் செய்ய வேண்டி இருந்தது
தேனீரை குடிப்பது தான்! ஆனால் என்ன செய்திருக்கிறீர்கள் பாருங்கள்தேனீரை விட, பளபளப்பாகத் தெரிந்த, உயர்த்தியாகப் பட்ட கோப்பைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தான் முக்கியமாக இருந்தது இல்லையா?  

சரி, நீங்கள் ஒரு கோப்பையைத் தேர்ந்தெடுத்து எடுத்துக் கொண்டீர்கள். அதோடு முடிந்ததா? ஒவ்வொருவருடைய பார்வையும் கவனமும் அடுத்தவர் எடுத்துக் கொண்ட கோப்பை நான் எடுத்துக் கொண்டதைவிட உயர்த்தியா அல்லது கொஞ்சம் மட்டமா இப்படியே உங்களுடைய மனம் சஞ்சலிக்க ஆரம்பித்தது. நான் சொல்வது சரி தானா? இல்லையென்றால், சொல்லுங்கள்!"

அப்போது தான், மாணவர்கள், கோப்பையை எடுக்கும்போது, இருப்பதிலேயே உயர்த்தியாகத்  தென்பட்டதையே எடுத்துக் கொள்ள விரும்பியதையும், மற்றவர்கள் தன்னை விட உயர்த்தியான கோப்பையை எடுத்துக் கொண்டு விட்டார்களா என்பதைக் கொஞ்சம் ஆவலோடு பார்த்ததையும்இன்னொருத்தன் தன்னை விட உயர்த்தியான கோப்பை வைத்திருந்ததைப் பார்த்தபோது பொறாமை ஏற்பட்டதையும் வெட்கத்தோடு புரிந்து கொண்டார்கள்.

ஆசிரியர் மறுபடியும் பேச ஆரம்பித்தார்: "நண்பர்களே! தேனீர் குடிப்பதற்கு,கோப்பை என்பது ஒரு சாதனம் தான்! தேனீரைக் சிந்தாமல், சூடு கைகளில் உறைக்காமல் கையாளுவதற்கான கருவி மட்டும் தான். இங்கே
தேனீர் தான் பிரதானம்! கோப்பைகள் அல்லவிலை உயர்ந்த கோப்பையோ, அல்லது சாதாரணமான கோப்பை என்பது இங்கே தேனீரின் தரத்துக்கு சம்பந்தம் இல்லாதது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை! இது புரிகிறதா?"

"அதே மாதிரி, தேனீர் என்கிற இடத்தில் வாழ்க்கை என்றும், கோப்பை என்ற இடத்தில், வேலை, சம்பாத்தியம், சமூகத்தில் அந்தஸ்து என்றும் வைத்துப் பாருங்கள்.   வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விடாமல், இங்கே கோப்பைகளின் மீது கவனம் போகும் போது, தேனீரை  மறந்த மாதிரி வாழ்க்கையையும் மறந்து விடுகிறோம்! தன்னுடைய கோப்பை அடுத்தவனுடையதைப் போல, அல்லது இன்னும் வெகு உயர்த்தியாக இல்லை என்பதில் கவனம் சிதறும் போதே, அங்கே ஏமாற்றம், அழுகை, ஆத்திரம், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, என்று வரிசையாகச் சறுக்கிக் கொண்டே போவதில், கைக்குக் கிடைத்த தேநீர் மாதிரி, ஆறி அவலாகிப் போய்க் கடைசியில் கிடைத்ததும் பயனில்லாமல் போய் விடுகிறது. இது புரிகிறதா?"

"அது மாதிரித் தான், கிடைத்ததில் என்ன நிறைவைக் காண முடியும் என்பதைப் பார்ப்பதற்குப் பதிலாக, என்னென்ன கிடைக்கவில்லை என்பதில் கவனம் போனால், வாழ்க்கையும் அங்கே கசந்து, ஆறிப் போய்விடுகிறது. வாழ்க்கையை, நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில், சூடாக
தேனீர் குடிப்பது என்பது சுறுசுறுப்பாக இருப்பதற்கு எப்படி அவசியமோ, அதே மாதிரி, வாழ்க்கை முக்கியம்! நாம் எதிர் கொள்கிற சூழ்நிலைகள் கோப்பைகள் மாதிரி இரண்டாம் பட்சம் தான்."


"அது சரியில்லை இது சரி இல்லை என்று பேசிக் கொண்டிருப்பதே நீங்கள் சந்தோஷமாக இல்லை என்பது தான்!. சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் இங்கே நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரியே குறைகளே இல்லாமல் இருப்பதும் அல்ல! உண்மையில் சந்தோஷமாக இருப்பதற்கு, குறை அல்லது நிறைவு என்ற படிக்கட்டுக்கள் அவசியமே இல்லை! சந்தோஷமாக இருப்பதன் ரகசியம், குறை, நிறை என்ற அளவீடுகளைத் தாண்டிப் போவதில் தான் இருக்கிறது. அவைகளைப் பெரிது படுத்துவதிலோ, பொருட் படுத்துவதிலேயோ அல்ல!"

ஆசிரியரைத் தேடி வந்த மாணவர்கள் இப்போது தேனீர் குடிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டார்கள்!

இணையத்தில் ஆயிரம் மொக்கைகளைப் பெரிய நகைச்சுவையாக, பொழுதுபோக்குவதற்காகப் படிக்கிறோம்! அதில் சில  விஷயங்கள், வாழ்க்கையின் சிறந்த பாடங்களைக் கற்றுக் கொடுப்பவையாகவும் இருக்கும் என்பதையும் புரியவைத்தது! 



Saturday, July 17, 2010

ஆத்மாவின் ராகங்கள் ! நா.பார்த்தசாரதி


சென்ற வருடம் புத்தகக் கண்காட்சியில் மகன் வாங்கி வந்திருந்த ஜெயமோகனின் இன்றைய காந்தி புத்தகத்தை ஒருவழியாகப் படித்து முடித்தாயிற்று.  
காந்தியைப் பற்றி ஆரம்பநாட்களில் கொண்டிருந்த உயர்வான பிம்பம், எனது இடதுசாரி நாட்களில் தகர்க்கப் பட்டு, கேலிக்குரிய ஒருவராகவே ஆனதும், தொடர்ந்த அனுபவங்களில் சிந்தனை முதிர்ச்சியும் தெளிவும் ஏற்பட்ட பிறகு, தன்னைத் தானே தொடந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டே வந்த காந்தி என்ற மனிதன், மகாத்மாவாக, மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்ற நிலைக்கு உயர்ந்த விதத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.  
ல்கி ரா.கிருஷ்ண மூர்த்தி, காந்தியின் கதையை  மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்ற தலைப்பிலேயே இரண்டு பாகங்களாக எழுதியதை அமுத நிலைய வெளியீடாகச் சிறு வயதில் படித்தது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாகவே இன்றைக்கு உணர முடிகிறது.
நா.பார்த்தசாரதி, 1970 களில், ஸ்தாபன காங்கிரசில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். காந்தீயக் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவராக, அதே நேரத்தில் ஒரு சத்திய ஆவேசத்தோடு அவர் எழுதிய சில புதினங்கள், மாணவனாக இருந்த அந்த நாட்களில் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை இன்னதென்று விவரித்துச் சொல்லி விட முடியாததாக, இப்போதும் கூட இருக்கிறது.  
ஜெயமோகன் தன்னுடைய இன்றைய காந்தி புத்தகத்தில் பலநூறு பக்கங்களில் நீட்டி முழக்கி முழுமையாகச் சொல்ல முடியாத ஒரு விஷயத்தை மிக எளிமையாக, நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய ஆத்மாவின் ராகங்கள் புதினத்தில் சொல்லியிருப்பதை, அதை மறுவாசிப்பு செய்த பிறகு பார்க்க முடிகிறது.
தை 1968 ஆண்டு வாக்கில் நிகழ்வதாகத் தொடங்குகிறது.

திகாலை ஒன்றரை மணி. காந்திராமன் என்ற சுதந்திரப் போராட்டத் தியாகி மறைந்த செய்தியைப் பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்த டெலிபிரிண்டர் அடித்துத் தள்ளுகிறது. அவரால் வளர்ந்து ஆளான பத்திரிகையாளர் கண்ணீருடன் அதைப் பத்திரிகையில் வெளியிடுவதற்காக செய்தியாக எழுதுகிறார். கண்களில் நீர் மறைக்க, கடைசியாக அவரைச் சந்தித்தபோது, காந்திராமன் தேசத்தில் அந்த நேரத்தில் இருந்த நாட்டு நடப்பைப் பார்த்து விசனப்பட்டுச் சொன்னது நினைவுக்கு வருகிறது.

னம் பதற - கை பதற செய்தியை எழுத உட்கார்ந்தேன். சொந்தத் தந்தையின் மரணத்தின் போதுகூட நான் இவ்வளவு வேதனைப்பட்டதில்லை. யாரால் இந்த நிலைக்கு வந்தேனோ அந்தப் பெருந்தன்மையாளரின் மரணச் செய்தியை எழுதும் போது நான் எத்தகைய உணர்வுகளை அடைந்திருப்பேன் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. போன மாதம் மதுரைக்குப் போயிருந்த போது ஓர் இரண்டு மணி நேரம் ஆசிரமம் இருந்த கிராமத்துக்குப் போய், அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.

"
நாங்களெல்லாம் அரும்பாடுபட்டுப் பாரத மாதாவின் முகத்தில் பன்னூறு ஆண்டுகளாக மறைந்திருந்த புன்னகையை மீண்டும் வரவழைத்தோம். இந்த இருபத்தோராண்டுகளில் அந்தப் புன்னகை மீண்டும் படிப்படியாக மறைந்து கொண்டு வருகிறது. ராஜூ! மறுபடியும் அவள் முகத்தில் புன்னகையைப் பார்க்காமல் நான் சாக விரும்பவில்லை. எனக்கு வயதாகி விட்டது. நீங்களெல்லாம் புகழ்ந்து எழுதும்படி தேசத்துக்கு எவ்வளவோ செய்தாச்சு. ஆனாலும் மறுபடி நான் கவலைப்பட எத்தனையோ காரணங்கள் இருக்கின்றனநாங்கள் போராடிய காலத்தில் இந்த தேசத்தில் தேசம் விடுதலை பெற வேண்டுமென்ற ஒரே இயக்கமும், ஒரே தலைமையும் தாம் இருந்தனஇன்றோ ஒவ்வோரு மாநிலத்திலும் ஒன்பது வகை இயக்கம்; ஒன்பது வகைத் தலைமை எல்லாம் வந்துவிட்டன. ஆயிரம் காரணங்களுக்காகப் பதினாயிரம் கட்சிகள் போராடும் போது தேசம் என்கிற சக்தி எவ்வளவு பலவீனமாகி விடுகிறது பார்த்தாயா?"

"
நீங்கள் இணையற்ற ஒரு சகாப்தத்தைப் பார்த்தீர்கள். இன்னொன்றையும் இப்போது பார்க்கிறீர்கள்..."

"
வலையோடு பார்க்கிறேன் என்று சொல்."
 
டைசியாக நான் அவரைச் சந்தித்த நினைப்பை மறுபடி எண்ணியபோது இப்படிப் பெருமூச்சோடு அந்த எண்ணம் முடிகிறது.
 
நாயுடு செய்தியை வாங்கிக் கொண்டு போன பின் மானோ மிஷின் இயங்கும் சப்தம் வருகிறது. நைட் ரிப்போர்ட்டரின் குறட்டை ஒலியை அந்த மிஷின் இயங்கும் ஓசை உள்ளடக்கிக் கொண்டு விழுங்கி விடுகிறது. இன்று ஸிடி எடிஷன் முக்கால் மணி நேரம் தாமதமாக மிஷினில் ஏறும். டெலிவரி வான் வெளியே வந்து நிற்கிறது. ஹார்ன் தொடர்ந்து ஒலிக்க, அதையடுத்து டைம் கீப்பர் உள்ளே வந்து பார்சல் செக்ஷனில் இரைவது கேட்கிறது. நான் என்னுடைய லீவு லெட்டரை எழுதிக் கொண்டிருக்கிறேன். மதுரைக்குப் போக வேண்டும். மாபெரும் தேச பக்தரின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டும். பத்திரிகை ஆசிரியன் என்ற முறையை விட இதில் என் சொந்தக் கடமை பெரிதாயிருந்தது.  
மிகவும் நெருங்கிய ஆத்ம பந்து ஒருவரின் மரணத்துக்குப் போவதுபோல், நான் இதற்குப் போக வேண்டியவனாயிருந்தேன். பல வருடங்களாக என் வாழ்க்கைக்கு அவர் குருவாகவும், நண்பராகவும் இருந்திருக்கிறார். வக்கீலுக்குப் படித்துவிட்டு, ராஜகோபால் பி.., பி. எல்., என்று போர்டு மாட்டிக் கொண்டு கோர்ட்டுகளின் படிகளில் நான் ஏறி இறங்கிக் கொண்டிருக்காமல்
"னக்குப் பத்திரிகைத் துறைதான் பொருத்தமாயிருக்கும். அதன் மூலமாகத் தேசத்துக்கும், பொது வாழ்க்கைக்கும் நீ எவ்வளவோ நல்லது செய்யலாம்"  
ன்று எனக்கு அறிவுரை கூறி, என்னை இந்தத் துறைக்கு அனுப்பி வைத்தவரே காந்திராமன் தான். குடும்ப விஷயத்திலும் சரி, பொது விஷயங்களிலும் சரி, நேரிலோ கடித மூலமோ நான் அவரைக் கேட்காமல் எந்த முடிவும் செய்ததில்லை. எந்தக் காரியத்திலும் இறங்கியதில்லை.
ப்படி மறைந்த ஒரு சகாப்தத்தைத் தொட்டுக் கதைக் களம் துவங்குகிறது. பத்திரிக்கை ஆசிரியர் ராஜு என்கிற ராஜகோபால், காந்திராமனுடைய சரிதையை எழுதவேண்டும் என்று ஆசைப்பட்டு அவரிடம் கேட்டபோது, ஒரு கதையின் நாயகனை விட சுவாரசியமாக வாழ்ந்திருக்கிறேன், ஆத்மாவினால் வாழ்ந்திருக்கிறேன் பார் அதுதான் முக்கியம்! அப்படி ஆன்மாவினால் வாழ்ந்த தலைமுறையின் கடைசிக் கொழுந்து நான், என்னுடைய காலத்திற்குப் பிறகு, என்னுடைய டயரிக் குறிப்புக்களை உனக்குத் தருகிறேன், அப்போது எழுது என்று சொல்லி விடுகிறார்.
 
தந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப் பட்டாலும்,  
தந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும் 
விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட் டாலும் 
சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே 

ன்ற பாரதியின் ஆவேசத்தோடு, காந்தியின் சத்தியாக்கிரக வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற வாலிபன் ராஜா ராமனுக்கு இரண்டு துணைகள்! விடுதலை கிடைக்கிற வரை திருமணத்தை நினைப்பது இல்லை என்ற வைராக்கியத்துடன் இருப்பவனுக்கு, எடுத்துக் கொண்ட சபதத்தோடு அவனையே நினைந்து உருகும் ஒருத்தியின் தியாகமும் கட்டுப் படுத்துகிறது.

ந்த ஒருத்தியின் தியாகம்காதல் சாமானியப் பட்டதா என்ன! ஆத்மாவின் ராகங்களாகப் பிறக்கும் அந்த உறவு, விடுதலைப் போராட்ட வரலாறோடு சேர்ந்தே கதையாக விரிகிறது.தாசி குலத்தில் பிறந்தவள் அவள்! ஊர் உலகம் ஏளனமாகப் பார்க்கும் குலம் அவளுடையது. ஆனால், அப்படி ஏளனமாகப் பார்க்கப் பட்ட குலத்தில் பிறந்தவர்களுக்கும் கூட வேறெங்கும் காண முடியாத குண நிதியங்களைப் பார்க்க முடியும் தருணங்கள் கதையின் நாயகனான ராஜாராமனுக்கு வாய்க்கிறது.
 
திலகர் தேசிய வாசகசாலையின் செலவுகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகிக்கும் செலவு, கஷ்டப்படும் தேசத் தொண்டர் குடும்பங்களுக்கு உதவி என்று எல்லாச் செலவுகளுக்கும் பொக்கிஷ தாரராக அமைந்தது போல் முகங்கோணாமல் கொடுத்தாள் மதுரம்.  

மீந்தார் இறந்த வருஷம் முழுவதும் கச்சேரிக்கோ, மேடையில் பாடவோ ஒப்புக் கொள்ளாமல் துக்கம் கொண்டாடினாள் அவள்.
தனபாக்கியம் வெளியே நடமாடுவதையே நிறுத்தியிருந்தாள். குடும்பத்தை விட விசுவாசமாக அவர்கள் நாகமங்கலத்தாரைப் பாவித்த அந்த உண்மை அன்பு ராஜாராமனைக் கவர்ந்தது. ஜமீந்தாருடைய மனைவி மக்கள் கூட அந்தத் துக்கத்தை இவ்வளவு சிரத்தையோடு அநுஷ்டித்திருப்பார்களா என்பது சந்தேகமாயிருந்தது. மனித சமூகம் நீண்ட நாளாக யாருக்கு உண்மை நன்றி செலுத்தவில்லையோ, அவர்களிடம் நிரம்பிக் கிடக்கும் சத்தியமான அன்பின் இறுக்கத்தைக் கண்டு ராஜாராமனுக்கு ஆச்சரியமாயிருந்தது.


னிதர்கள் யாருடைய அன்பு பணத்துக்காக மட்டுமே கிடைக்குமென்று நினைக்கிறார்களோ அவர்களிடம் பணத்தைக் கொண்டு அளவிட முடியாத பிரியம் சுமந்து கிடப்பதை அவன் கண்டான்

யாருடைய மனங்கள் நிதிவழி நேயம் நீட்டும் பொதுமனம் என்று பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாடி வைத்துப் பழி சுமத்தப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் மனமே ஒரு பெரிய அன்பு நிதியாக இருப்பதை அவன் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தான்.  

மீந்தாருடைய பிறந்த நாளை நினைவு வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது முதல், அவர் இறந்த தேதியில் விரத நியமங்களோடு திதி கொடுப்பதுவரை தனபாக்கியமும், மதுரமும் காட்டிய அக்கறை அவனை மலைக்கச் செய்தது. அன்பைக் கலையாகவே, சங்கீதம் போல், நிருத்தியம் போல் போற்றி வளர்க்கும் நாகரிகம் இவர்கள் குலதனம் போலிருக்கிறது என்றே அவன் எண்ணினான். ஜமீந்தார் தனபாக்கியத்துக்கு ஊரறிய தாலி கட்டவில்லை. ஆனால், தனபாக்கியமோ அதைச் சிறுமையாக எண்ணியதாகவே தெரியவில்லை. இது மிக மிக விநோதமாயிருந்தது அவனுக்கு. அந்தக் குடும்பத்தின் மேல், குடும்பமாக உலகம் கருதாத வீட்டின் மேல் எல்லையற்ற பரிவு ஏற்பட்டது அவன் மனத்தில். அவர்களுடைய விளம்பரம் பெறாத பண்பாடு அவ்னைக் கருத்தூன்றிக் கவனிக்கச் செய்தது.
 
யர்ந்த சாதிக் குடும்பங்களில் இருப்பதை விட சுத்தத்தில் அக்கறை, தேவதைகளைவிட அழகு, கந்தர்வர்களை விடக் கலையில் சிரத்தை, பிராமணர்களை விட விரதங்களில் பற்று, மேதைகளை விட அதிகமான குறிப்பறியும் நாகரிகம், படித்தவர்களைவிட இங்கிதம் இவை எல்லாம் ஒரு தாசியின் வீட்டில் இருப்பதைக் கண்டு அவன் சொல்ல முடியாத வியப்பில் மூழ்கினான். 'இது இவர்கள் குலதனம்' - என்று அவன் மனம் இடையறாது கூவியது.

 '
ரிசுத்தமான அன்புதான் இவளுடைய முதல் சங்கீதம். இவள் வாசிக்கும் சங்கீதமோ அதே அன்பின் இன்னொரு வெளியீடு' - என்று மதுரத்தைப் பற்றி அவன் எண்ணினான். அவள் பாடும் சங்கீதத்தில் மட்டுமல்ல, பேசும் சங்கீதத்திலும் அபஸ்வரமே வராமலிருப்பதை அவன் ஒவ்வொரு முறையும் கூர்ந்து கவனித்தான். ஜமீந்தார் காலமான பின்போ மதுரம் படிப்படியாகத் தன்னிடமிருந்த பட்டுப் புடவைகளை உபயோகிப்பதையே விட்டுவிட்டாள். அவளிடம் மிக மிக எளிமையான கதர்ப் புடவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. அவன் ஒரு நாள் அவளைக் கேட்டான்.

"
ன்ன மதுரம், பட்டுப்புடவை ஆசையை அறவே விட்டாச்சுப் போலிருக்கே!"

"
ப்பவும் எனக்கு அந்த ஆசையே இல்லை? அப்பா பட்டுப் புடவையா வாங்கிக் குமிச்சார். அரண்மனைக்குப் பட்டுப்புடவை வாங்கினா ஞாபகமா இங்கேயும் சேர்த்து வாங்குவார். கட்டிக்காவிட்டால் அவர் மனசு புண்படுமேன்னு கட்டிண்டிருந்தேன். இனிமே அது கூட அவசியமில்லே..."

"
ன்? இனிமே பட்டுப்புடவை கிடைக்காதோ?"

"
ந்தேகமென்ன? உங்ககிட்டச் சொன்னா, நீங்க கதர்ப் புடவைதானே வாங்கிக் குடுப்பீங்க? நானும் நிறைய நூல் சிட்டம் போடுகிறேன். கதர்தானே சிட்டத்துக்குக் கிடைக்கும்?"

"
னக்கு வேணும்னாப் பட்டுப்புடவையே வாங்கிக்கலாமே?"

"
ப்படியில்லை! தனியா எனக்குப் பிரியம்னு எதுவுமே கிடையாது. உங்களுக்கு எது பிரியமோ அதுதான் எனக்குப் பிரியம்..."
 
னத்தின் ஆழத்திலிருந்து பிறந்த அவளுடைய இந்தச் சொற்கள் ராஜாராமனைப் பெருமைப்பட வைத்தன. அவள் இசைக்க முடிந்த ராகங்களில் மிக உயர்ந்த ராகமாக இந்தச் சொற்கள் அவன் செவிகளில் ஒலித்தன. இந்த வார்த்தைகள் அவனைக் கிறங்கவே செய்தன. முரட்டுத்தனமும், இங்கிதமும், நளினமும், நாசூக்கும், நாகரிகமும் தெரியாத பல ஜமீந்தார்களும், செல்வக் குடும்பத்து இளைஞர்களும் அவற்றை முதல் முதலாக தாசிகளின் வீடுகளிலிருந்துதான் இப்படிப் பட்ட நளினவதிகளிடம் கற்றுக் கொள்கிறார்களோ என்று கூட அவன் அடிக்கடி நினைக்கத் தொடங்கியிருந்தான்

'ங்கீதமும், கலைகளும் தான் மனிதனை நாகரிகமடையச் செய்கின்றன' என்று கூறுவது உண்டு. ஆனால், குரூரமான மனிதர்களாகிய பல செல்வந்தர்கள் கருணை, அன்பு, இங்கிதம் போன்ற கனிவான அம்சங்களையே கலையை ஆளும் அழகின் கிருஹங்களில் தான் படித்துத் தேறுகிறார்கள் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அவனுள் வலுத்தது. நாகமங்கலம் ஜமீந்தாரின் பட்டமகிஷி அவரைக் கணவனாகவும் கனவானாகவும் வேண்டுமானால் ஆக்கியிருக்கலாம்.  

னால், மதுரை ஒண்ணாம் நம்பர்ச் சந்தில் தனபாக்கியத்தின் நட்பு கிடைத்த பிறகே, அவர் மனிதராக நாகரிகம் அடைந்திருக்க முடியுமென்று அவனுக்குப் புதிதாக ஒரு கருத்துத் தோன்றியது. ஜப்பானிய கெய்ஷாக்களைப் பற்றி இப்படிக் கூறும் ஓர் ஆங்கிலப் புத்தகத்தை அவன் படித்திருந்தான். கெய்ஷாக்களைப் போலவே தமிழ்நாட்டுத் தேவதாசிகளிடம் அந்தப் பண்பு நிறைந்திருப்பது அவனுக்குப் புரிந்தது. 'மிருச்ச கடிக'த்தில் சாருதத்தனுக்குக் கிடைத்த சுகம் அன்பின் சுகமாகத்தான் இருக்க வேண்டும். வஸந்தசேனையின் நாகரிகம், கலை நாகரிகத்தின் மிக உயர்ந்த எல்லையாக அவனுக்குத் தோன்றியது.
 
வர்கள் மிருகங்களை மனிதர்களாக்குகிறார்கள்! மனிதர்களைத் தெய்வங்களாக்குகிறார்கள்!" என்று எண்ணிய போது மிக மிக விநோதமாக வளர்ந்தது அந்தச் சிந்தனை. வேட்டையிலும், குடியிலும், மல்யுத்தத்திலும் போதையேறிக் கிடந்த நாகமங்கலம் ஜமீந்தாரைத் தனபாக்கியம் மனிதனாக்கிச் சங்கீத ரசிகராக மாற்றி விட்டாள்.  

னபாக்கியத்தின் மகளோ வெறும் மனிதனாகிய என்னைத் தன்னுடைய பக்தியால் தெய்வமாகவே ஆக்க முயல்கிறாள். என்னையே எண்ணி உருகி உருகித் 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - என்று பாடுகிறாள். மனிதனைப் பக்தி செய்த உடம்பை இழப்பதன் மூலம் தெய்வத்தைப் பக்தி செய்யும் தத்துவத்துக்கு உலகத்தைப் பழக்கும் உபாசனா மார்க்கங்களில் ஒன்றாகவே தொடக்கத்தில் இந்தத் துறை தோன்றியதோ என்றெல்லாம் பலவிதமாகச் சிந்திக்கத் தொடங்கியபோது அவன் மனத்திலிருந்த பல பழைய மாற்சரியங்களை அந்தச் சிந்தனை போக்கி விட்டது.

மிக நுணுக்கமாகச் செதுக்கப் பட்ட பாத்திரங்கள்! சுதந்திரப் போராட்டத்தின் பல கட்டங்களைத் தொட்டு, ராஜாராமனாக இருந்தவன் காந்திராமனாக மாறிய கதையாக விரிகிறது. முன்னுரையில் நா.பா சொல்வதைப் போல இந்தக் கதை இரண்டு சகாப்தங்களைத் தொட்டுச் செல்கிறது. உப்பு சத்தியாக் கிரகத்திலிருந்து தொடங்கி விடுதலை அடைந்த நாட்கள், அதற்குப் பின் என்று கதை வளர்கிறது.
 
காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி அரசியல் ஆரம்பித்த கதை, ராஜாஜி-சத்தியமூர்த்தி என்று ஆரம்பித்து, ராஜாஜி காங்கிரசில் இருந்து ஒதுங்கி, மறுபடி வந்து சேர்ந்து கொண்டு கோஷ்டி அரசியலாக ஆக்கிய  கதையையும் போகிற போக்கில் இந்தப் புதினம் சொல்லிவிட்டுப் போகிறது.
 
நேற்றைய நாட்களைப் பற்றி அறிந்து கொள்ள, எப்படி காந்தி மகானுடைய ஆளுமையின் கீழ் லட்சக்கணக்கான இந்திய மக்கள் விடுதலைப் போராட்டத்தைத் தங்களுடைய தவமாகவும் ஏற்றுக் கொண்டார்கள், அவர்களை ஆட்கொண்ட மாந்தருக்குள் ஒரு தெய்வமாக காந்தி எப்படி இருந்தார் என்பதையும் கதை ஒரு கோடி காட்டுகிறது.

இணையத்தில்  படிக்க இங்கே.

குறுந்தகடாக நா.பாவுடைய படைப்புக்களை பிடிஎப்  வடிவில் பெறவும் இந்தத் தளத்தில் விவரங்கள் கிடைக்கும்.

ஆத்மாவின் ராகங்கள்

நா.பார்த்தசாரதி

தமிழ்ப்புத்தகாலயம்-தாகம் வெளியீடு
 
விலை ரூ.80/- 



 

Friday, July 16, 2010

தில்லானா மோகனாம்பாள்! கொத்தமங்கலம் சுப்பு

சில மாதங்களுக்கு முன்பாக உடுமலைடாட்காமில் தி.ஜானகிராமன் புத்தகங்கள் சிலவற்றுக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன். ஆர்டர் கொடுத்ததில், மலர் மஞ்சம் மட்டும் ஸ்டாக் இல்லை என்று தகவல் சொன்னபோது, கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய தில்லானா மோகனாம்பாள் இருக்கிறதா என்று கேட்டேன். வரவழைத்துத் தர முடியும் என்று சொல்லி, அனுப்பியும் உதவினார்கள்.

றவினர் ஒருவர் வீட்டில் இருந்து,ஆனந்தவிகடனில் தொடராக வந்ததை எடுத்து கவனமாக பைண்ட் செய்யப் பட்ட வடிவத்தில், திரு கோபுலு வரைந்த ஓவியங்களோடு தில்லானா மோகனாம்பாள் கதையை நீண்ட நாட்களுக்கு முன்னால் படித்திருக்கிறேன். ஏ பி நாகராஜன் தயாரிப்பில் தில்லானா மோகனாம்பாள் படம் வந்த தருணத்தில், நூலகத்தில் புத்தகத்தை தேடியெடுத்து  மறுபடி வாசித்திருக்கிறேன். இப்போது மறுபடியும்..!

1341 பக்கங்கள்! இரண்டு தொகுதிகளாக. முதல் தொகுதி தொள்ளாயிரம் பக்கங்கள், இரண்டாம் பகுதி நானூற்றிச் சொச்சம் பக்கங்கள் என்று என் மேசையில் இந்தப் புத்தகம் இருந்ததை  உறவினர் ஒருவர் பார்த்து விட்டு, "இதுவா? ரொம்ப போரடிக்குமே!"  என்று என் வீட்டம்மாவிடம் சொன்னாராம்! என் சேகரத்தில் வேறு கதைப் புத்தகங்களை எடுத்துப் போனவர், இந்தப் புத்தகத்தைத் தொட்டு ஒரு நாலு பக்கங்களைப் புரட்டியாவது பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே.

புத்தகங்களை வாசிக்கும்போது, நம்முடைய முன்கூட்டிய முடிவுகள், தீர்மானங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஆசிரியர் என்ன கருத்தைச் சொல்ல வருகிறார், எப்படிப் பட்ட கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்குத் தகுந்த மாதிரிப் பாத்திரங்களைப் படைத்திருக்கிறார் என்பதை ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு கவனிக்க ஆரம்பித்தோம் என்றால் எப்படிப் பட்ட புத்தகமும் அலுக்காது, போரடிக்காது, பயமுறுத்தாது!

ரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்,தோல்ஸ்தாய் எழுதிய அன்னா கரீனினா புத்தகத்தை என்னுடைய பள்ளிப் பருவத்தில் தமிழில் படித்திருக்கிறேன். ஆரம்பத்தில் ரஷ்யப் பெயர்கள் கொஞ்சம் மிரட்டின என்றால், அந்தக் கதையில் நூற்றுக் கணக்கான பிரதான பாத்திரங்கள், அப்புறம் கொஞ்சம் துணைப் பாத்திரங்கள் என்று கதையில் வருகிறவர்களை நினைவு வைத்துக் கொள்வதே பெரும் பாடாக இருக்கும்போது, கதையோட்டத்தைப் புரிந்துகொள்வது எப்படி?  ஆனால் புத்தகம் படிப்பதில் இருந்த ருசியில், இந்த மாதிரி விஷயங்களை  ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தோன்றியதே இல்லை. இந்தக் கதையை முழுமையாகப் புரிந்துகொண்டேன் என்று சொல்ல முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, இதையும் மறு வாசிப்புக்கு எடுத்துக் கொள்வதைத் தவிர ஒரு வாசகனாக என்ன செய்து விட முடியும்?

காபாரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! ஒரு காவியத்துக்குள் எத்தனை ஆயிரம் கிளைக் கதைகள்! எத்தனை
ஆயிரம் கதா பாத்திரங்கள்! ஒன்றோடொன்று  இணைந்து எத்தனை ஆயிரம் உணர்வுகள், கருத்துக்கள் இந்தக் காவியத்தின் மூலமாக வெளிப் படுத்தப் பட்டன என்பதைப் பார்த்தோமானால், புத்தகங்களின் பக்க எண்ணிக்கை, காலச் சூழ்நிலை எல்லாம் தொடக்க நிலையில் கொஞ்சம் மயக்கத்தை உண்டு பண்ணினாலும், படிக்க ஆரம்பித்து விட்டோமென்றால் வருகிற மயக்கமே வேறு!

ஞ்சை மண்ணுக்கு ஒரு தனிப் பெருமை உண்டு.  கலைஞர்களும், கலையை ரசிக்கத் தெரிந்தவர்களும் வாழ்ந்த மண் அது. ஆடும் கலையானாலும், ஆட்டுவிக்கும் இசைக் கலையானாலும், இரண்டையும் ஆதரிக்கும் ரசிப்புத் தன்மையானாலும் சரி, தஞ்சை மண் மற்றப் பகுதிகளை விட ஒரு படி மேலாகவே இருந்த காலத்தைக் கதைக் களமாக எடுத்துக் கொண்டு துவங்கும் புதினம் தில்லானா மோகனாம்பாள். 


ன்றைக்கு எண்பது தொண்ணூறு வருடங்களுக்கு முன்னால் இருந்த காலம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாமே!

நாதமே தங்களுடைய உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த இசை வேளா
ர்களைப் பற்றி,  நாட்டியக் கலையைத் திருவாரூர் தியாகராசனுக்கே அர்ப்பணித்து வாழ்ந்த தாசிகள், தேவரடியார்கள் என்றழைக்கப் பட்ட ஆடல்கலைஞர்களைப் பற்றித் தமிழில் இந்த அளவுக்கு அற்புதமான ஒரு புனைவு, சொற்சித்திரம் வேறு ஒன்று இன்று வரை வந்ததே இல்லை. ஆடலும், நாதசுரமும் இருவேறு கலைகள் என்று தான் தோன்றும்! தங்களுடைய கலைத் திறமையை இறைவனுக்கே அர்ப்பணித்து அந்தக் கலையைத் தங்களுடைய உயிருக்கும் மேலாக மதித்து வாழும் இரண்டு கலைஞர்கள், ஒருவருடைய கலைத் திறமை இன்னொருவரை ஈர்த்துக் காதல், கல்யாணத்தில் கொண்டு விடுகிறது. தங்களுடைய கலையை உயர்வாக என்னும் குணம் கொஞ்சம் மோதலையும் தோற்றுவிக்கிறது.

லையை மதிக்கத் தெரிந்தவர்கள் நாலு பேர் இருந்தால்  ஒரு துளி விஷம் கலக்கிற மாதிரி, கலையைத் துச்சமாக எண்ணுகிற மனிதர்கள், சபையில் நடனமாடுகிறவள் என்றால் தங்களோடு அந்தரங்கத்தில் வேறுவிதமாகவும் ஆடவேண்டுமென்று சபலப் படுகிற ஒன்றிரண்டு பேராவது இருக்க வேண்டுமே! இருக்கிறார்கள்!

ப்படி சிக்கல் ஷண்முக சுந்தரம் என்ற நாதசுரக் கலைஞன், திருவாரூர் மோகனாங்கி என்ற நாட்டியக்காரி இருவரும் ஒருவரது கலையை ஒருவர் அதிசயித்து  ஆசை கொண்டு அப்படியே தங்களை அறியாமல் காதல் வசப் படுகிறார்கள். நாகலிங்கம் என்று நாகப் பாம்பாகத் தன்னைச் சொல்லிக் கொண்டாலும்  காலைச் சுற்றும் வெறும் சாரைப் பாம்பு தான், சிங்கபுரம் மைனர் - காசிருந்தால் எதுவும் வரும், எவளும் வருவாள் என்று நம்புகிற அப்பாவி, ஒரே ஒருதரம் சறுக்கி விழத் தெரிந்து திருந்தும் மனிதர், சவடால் வைத்தி என்ற பிரகிருதி, ஏமாறத் தயாராக ஜனங்கள் இருக்கும்போது எதற்காகத் திருட வேண்டும் என்று ஒரு கொள்கைப் பிடிப்புடன், எவரை வேண்டுமானாலும் தன்னுடைய சவடால் பேச்சினால் ஏமாற்றிக் கவிழ்க்கத் தெரிந்த மனிதர், நல்லவள்தான், ஆனால் தன்னுடைய மகள் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும், இளமையும் அழகும் இருக்கும்போதே நாலு பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ளாமல் காசு சேர்த்துக் கொள்ள வேண்டும்  என்று ஆசைப் படுகிற மோகனாவின் தாய் வடிவு, பரமானந்தப் பரதேசி- காவியணிந்த பரதேசி தான் என்றாலும், ஆடல் கலை, சங்கீதம் இரண்டின் மீதும் அளப்பரிய காதல் கொண்ட விந்தைப் பரதேசி, ஜில்ஜில் ரமாமணி-நாகலிங்கத்தின் ஆசைநாயகியாக வாழ்ந்தவள், அவளும் ஒரு நாட்டியக் காரிதான், மதன்பூர் மகாராஜா- பழைய சமஸ்தானாபதிகளுக்கே உண்டான பகட்டும் போலிக் கௌரவமும் கொண்ட வீம்பு பிடித்த மனிதர்   இப்படி வரிசையாக மோகனா-சண்முகசுந்தரம் இவருடைய வாழ்க்கையில் குறுக்கே வருகிறார்கள்.

தை மோகனா-சண்முகசுந்தரம் இருவருடைய காதலோடு மட்டும் நகருவதில்லை! அன்றைக்குத் தஞ்சை மண்ணில் இசைக்கும், நாட்டியத்துக்கும் இருந்த மரியாதை, தங்களிடமிருக்கும் கலை ஆடிய பாதமாக திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கே அர்ப்பணிக்கப் பட வேண்டியது என்ற உணர்வோடு போற்றிப் பாதுகாத்த இசை வேளாளர்கள் வாழ்க்கையைத் தொட்டும் நகருகிறது.

ந்தப் புதினத்தின் ஜீவனை, இதைத்
திரைப்படமாக எடுத்த ஏ பி நாகராஜன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அல்லது, கதை வடிவமாகப் பார்க்கும்போது உயர்ந்த கோபுரமாகத் தெரிகிற ஒன்றைக் காமெரா வழியாகப் பார்க்க முடிகிற அளவு கம்மிதானோ என்னவோ! 

சிவாஜியின் மிகைப் படுத்தப்பட்ட நடிப்பும், பத்மினிப் பாட்டியும் இந்தப் படத்தின் மைனஸ் பாயிண்டாகத் தான் இருந்தார்கள். 

கதையில் படித்த படி, கொஞ்சம் உயிரோட்டமாகப் படத்தில் பார்க்க முடிந்தது சவடால் வைத்தி பாத்திரத்துக்கு உயிர் கொடுத்த நாகேஷ், ஜில் ஜில் ரமாமணியாக வந்து ஒரு கலக்குக் கலக்கிய மனோரமா இருவரும் தான்! அவர்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால், அந்தப் படம் மிகப் பெரிய தோல்வி தான்.

தோ பழங்காலத்துக் கதை, ரொம்பவே போரடிக்கும் என்று எண்ணுகிறவர்கள் படித்துப் பார்த்தால் தாங்கள் எண்ணியது எவ்வளவு தவறு  என்பதைப் புரிந்து கொள்வார்கள். 1956 வாக்கில் ஆனந்த விகடனில் தொடராக வந்த இந்தப் புதினம், இன்றைக்குப் படிக்கும் போதும் சுவாரசியமாகத் தான் இருக்கிறது! ஒரே வித்தியாசம், இந்தக் கதையில் நீங்கள் பார்க்கிற கலைஞர்கள், கலாரசிகர்கள் தான் இன்றைக்கு ரொம்பவுமே மாறிப் போய்விட்டார்கள். 

ரண்டு ஹிட் கொடுத்தவுடன் இங்கே கதாநாயகனுக்கு முதல் மைச்சராகும் கனவு வந்து விடுகிறது! திரைப்படத்தில் நாட்டாமையாகவும், வீரப் பிரதாபனாகவும் விஜயகுமாரனாகவும் வேஷம் கட்டியவுடனேயே நடிகனுக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து மிரட்டுகிற அளவுக்கு, இன்றைய அரசியல் தரம் தாழ்ந்துபோயிருக்கிறது. கலைஞர்கள் அதைவிடத் தாழ்ந்து போயிருக்கிறார்கள்! 

ல்ல கலைஞர்கள், ரசிகர்கள் அந்த நாட்களில் எப்படிருந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவாவது, இந்தப் புதினத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று பலமான சிபாரிசு செய்கிறேன்!

திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் கலைமணி என்ற புனை பெயரில் அன்றைக்கு எழுதிய  ஆரம்ப வரிகளை ஒரு சாம்பிளுக்காக-...........


ப்படி இன்றைக்கும் சுவாரசியம் குறையாமல் இருக்கிறது ன்பதைத் தொட்டுக் காட்டுவதற்காக.......

"டவுள் ஆண் பிள்ளையை முதலில் படைத்தாரா, அல்லது பெண்ணை முதலில் படைத்தாரா?" என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டதால் எனது நண்பர் பேராசிரியர் தில்லைநாயகம் அவர்களிடம் இதைப் பற்றி ஆராய்ந்தேன். அவர் பின்வருமாறு கூறினார்.

"டவுள் ஆணைத்தான் முதலில் படைத்தார். ஆண்மகன் புதிதாகப் பிறந்த கா
ளங்கன்று போல் துள்ளி விளையாடினான். அவன் உடலில் வலிமையையும், உள்ளத்தில் வீரமும், நடையில் அழகும், செயலில் கம்பீரமும், ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு வந்தன. சிங்கம், புலி, கரடி ஆகிய எல்லாவற்றையும் மனிதன் அடக்கினான். மலையைப் புரட்டினான். மரத்தை வெட்டினான். கடலில் நீந்தினான். கப்பல் விட்டான். இவ்வாறு நாளாக நாளாக, அவன் வீரம் வளர்ந்து வரவே, அவனை எதிர்ப்பார் யாருமின்றி உலாவத் தொடங்கினான். உலாவினான், உலாவினான், உலாவினான், வேறென்ன செய்வது? வாழ்க்கை சலித்து விட்டது. வெறும் வீரத்தில் அவனுக்கு இன்பம் இல்லை."நம்மை யாராவது அடக்க மாட்டார்களா?" என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.அவனை அடக்குவார் உலகில் ஒருவருமே இல்லை என்றால் மனிதன் உயிரை விட்டு விடக் கூடத் துணிந்தான். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கடவுள் கையிலே ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு மனதில் தியானித்தார். வீராதி வீரர்களையெல்லாம் அடக்கும் ஒரு பிறவி இதில் பிறக்க வேண்டும் என்று எண்ணினார். அவர் கையிலிருந்து ஒரு பெண் குதித்தாள். கடவுளுக்கே அந்த வ்யக்தியைப் பார்த்ததும் தலை சுழன்றது. சற்று நேரம் சிந்தனை செய்து மனத்தை அடக்கிக் கொண்டு, "உன் பெயர் பெண். போ, ஆணுக்கு எதிரே போய் நில்" என்றார். மதோன்மத்தனாகத் திரிந்த ஆணின் முன் பெண் வந்து நின்றாள். ஆண்மகனைத் தன் கண்களால் ஒரு முறை பார்த்தாள். ஒரே ஒரு முறை தான் பார்த்தாள்.அந்தப் பார்வையிலேயே ஆண் மகனின் வீரம் தீரமெல்லாம் விடைபெற்றுக் கொண்டன. மயங்கி வீழ்ந்தான். அப்போது வீழ்ந்தவன், வீழ்ந்தவன்தான். இன்னும் அவன் எழுந்திருக்கவே இல்லை. 

"ந்த முடிவுக்கு நன் வருவதற்குக் காரணமாயிருந்தது வெறும் ஆராய்ச்சியல்ல.........தில்லானா மோகனாம்பாளின் திவ்ய சௌந்தர்யம் தான் காரணம்." என்றார் தில்லைநாயகம்.

"யா, உமது கண்களுக்கு அழகாகத் தோன்றும் ஒன்று எனது அவ நம்பிக்கை பிடித்த கண்களுக்கு அழகில்லாமல் தோன்றலாம். இருந்தாலும், அந்த மோகனாம்பாள் எங்காவது நாட்டியம் செய்தால் எனக்கும் சொல்லுங்கள்." என்றேன் நான்.

தில்லைநாயகம் பெருமூச்சு விட்டார்.

"சில கலைஞர்களுக்கு புத்தியும் வித்தையும் இருந்தாலே போதும். சங்கீதம், நாட்டியம் போன்ற காந்தர்வ வித்தைக் கலைஞர்களுக்கோ, இவைகளோடு கூட பூர்வ புண்ணியமும் நிறைய வேண்டியிருக்கிறது. அழகும், அமைப்பும், சரீரமும், சாரீரமும் நாமாக உண்டாக்கிக் கொள்பவை அல்ல. ஆண்டவன் அருளால் தான் கிடைக்க வேண்டும். அந்த ஆண்டவனோ, ஒரு நல்லதைக் கொடுத்தால் கூடவே பத்துக் கெடுதல்களையும் கொடுத்து விடுகிறார். அப்படி இல்லையென்றால், அந்த அபூர்வ சிருஷ்டியைப் போட்டு ஆட்டி அலைக்கழித்து காட்டி மறைத்து விடுகிறார்........

"மோகனாம்பாள் அத்தகைய பிறவிகளுள் ஒருத்தி. பற்றற்று வாழும் எனக்கே அந்தப் பெண்ணின் நினைவு ஒரு பாரமாக இருக்கிறதென்றால் அவளிடம்  ஏதோ ஒரு சக்தி இருந்திருக்கத் தானே வேண்டும்?"

"வள் யார், எந்த ஊர், அவள் வரலாறு என்ன? விவரமாய்ச் சொல்லுங்கள்" என்றேன் நான்.

ஸ்ரீ தில்லைநாயகம்
அவர்கள் இந்தச் சரித்திரத்தை எனக்குச் சொல்லிப் பல வருஷங்களாய் விட்டன. இன்னும் அது என் மனத்தை விட்டு அகலவில்லை. இப்பொழுது நினைத்தாலும் பசுமையாகவே காட்சி அளிக்கிறது. அப்பேர்ப்பட்ட தில்லானா மோகனாம்பாளின் கதையைத் தான் நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்....."

தில்லானா மோகனாம்பாள்

கலைமணி (எ) கொத்தமங்கலம் சுப்பு

1341 பக்கங்கள், இரண்டு பாகங்களில்
பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு
மூன்றாம் பதிப்பு, விலை ரூ.250/- 



 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)