கீழை நாடுகளில் தேனீர் விருந்து என்பதே ஒரு மிகப் பெரிய கலாசார சடங்காக நடக்கும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கிளிப்பிள்ளைகள் மாதிரித் தான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்பவர்களாகத் தன்னுடைய மாணவர்கள் இருக்கக் கூடாது என்பதில் உண்மையான அக்கறையோடு, அவர்கள் சுயமாகச் சிந்தித்து எதையும் முடிவு செய்யவேண்டும் என்பதில் கவனமாகப் பாடத்தை நடத்தியவர். மாணவர்களுடைய ஆதர்சமாக ஆகிப் போனதில் வியப்பு ஒன்றுமில்லைதான்!
ஒரு நாள் அந்த ஆசிரியரைத் தேடி, அவருடைய பழைய மாணவர்கள் போனார்கள். ஆசிரியரிடம், ஒவ்வொருவரும், தங்களுடைய வேலைச் சுமை, குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம், இப்படி ஒவ்வொன்றிலும் தாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை மனம் திறந்து விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஆசிரியர் எழுந்தார். "பேசிக் கொண்டிருங்கள்! உங்கள் எல்லோருக்கும் தேனீர் கலந்து எடுத்து வருகிறேன்" என்று சமையல் அறைக்குப் போனார். தேனீர் தயாரித்துப் பெரிய குவளையில் நிரப்பி எடுத்துக் கொண்டார். பலவிதமான வண்ணப் பீங்கான் கோப்பைகள், வெண்கலக் கோப்பைகள், எவர்சில்வர் கோப்பைகள், வெள்ளிக் கோப்பைகள், பேப்பர் கோப்பைகள் என்று பலவிதமான கோப்பைகளை எடுத்து வந்து ட்ரேயில் வைத்தார்.
"வேண்டுமான அளவு தேனீரை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று உபசரித்தார். முன்னாள் மாணவர்களும், ஆளுக்கொரு கோப்பையைத் தேர்ந்தெடுத்து, குவளையில் இருந்து தேனீரை ஊற்றிக் கொண்டு குடிக்க ஆரம்பித்தார்கள். "எங்கே நிறுத்தினேன்?" என்று கேட்டுக் கொண்டு ஒரு மாணவன் பேச ஆரம்பித்தான்.
ஆசிரியர் புன்னகையுடன், "அதற்கு முன்னால் நான் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது." என்றார்.
"கொஞ்சம் உங்கள் கோப்பையைக் கவனித்துப் பாருங்கள்! நீங்கள் செய்ய வேண்டி இருந்தது தேனீரை குடிப்பது தான்! ஆனால் என்ன செய்திருக்கிறீர்கள் பாருங்கள்! தேனீரை விட, பளபளப்பாகத் தெரிந்த, உயர்த்தியாகப் பட்ட கோப்பைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தான் முக்கியமாக இருந்தது இல்லையா?
சரி, நீங்கள் ஒரு கோப்பையைத் தேர்ந்தெடுத்து எடுத்துக் கொண்டீர்கள். அதோடு முடிந்ததா? ஒவ்வொருவருடைய பார்வையும் கவனமும் அடுத்தவர் எடுத்துக் கொண்ட கோப்பை நான் எடுத்துக் கொண்டதைவிட உயர்த்தியா அல்லது கொஞ்சம் மட்டமா இப்படியே உங்களுடைய மனம் சஞ்சலிக்க ஆரம்பித்தது. நான் சொல்வது சரி தானா? இல்லையென்றால், சொல்லுங்கள்!"
அப்போது தான், மாணவர்கள், கோப்பையை எடுக்கும்போது, இருப்பதிலேயே உயர்த்தியாகத் தென்பட்டதையே எடுத்துக் கொள்ள விரும்பியதையும், மற்றவர்கள் தன்னை விட உயர்த்தியான கோப்பையை எடுத்துக் கொண்டு விட்டார்களா என்பதைக் கொஞ்சம் ஆவலோடு பார்த்ததையும், இன்னொருத்தன் தன்னை விட உயர்த்தியான கோப்பை வைத்திருந்ததைப் பார்த்தபோது பொறாமை ஏற்பட்டதையும் வெட்கத்தோடு புரிந்து கொண்டார்கள்.
ஆசிரியர் மறுபடியும் பேச ஆரம்பித்தார்: "நண்பர்களே! தேனீர் குடிப்பதற்கு,கோப்பை என்பது ஒரு சாதனம் தான்! தேனீரைக் சிந்தாமல், சூடு கைகளில் உறைக்காமல் கையாளுவதற்கான கருவி மட்டும் தான். இங்கே தேனீர் தான் பிரதானம்! கோப்பைகள் அல்ல! விலை உயர்ந்த கோப்பையோ, அல்லது சாதாரணமான கோப்பை என்பது இங்கே தேனீரின் தரத்துக்கு சம்பந்தம் இல்லாதது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை! இது புரிகிறதா?"
"அதே மாதிரி, தேனீர் என்கிற இடத்தில் வாழ்க்கை என்றும், கோப்பை என்ற இடத்தில், வேலை, சம்பாத்தியம், சமூகத்தில் அந்தஸ்து என்றும் வைத்துப் பாருங்கள். வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விடாமல், இங்கே கோப்பைகளின் மீது கவனம் போகும் போது, தேனீரை மறந்த மாதிரி வாழ்க்கையையும் மறந்து விடுகிறோம்! தன்னுடைய கோப்பை அடுத்தவனுடையதைப் போல, அல்லது இன்னும் வெகு உயர்த்தியாக இல்லை என்பதில் கவனம் சிதறும் போதே, அங்கே ஏமாற்றம், அழுகை, ஆத்திரம், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, என்று வரிசையாகச் சறுக்கிக் கொண்டே போவதில், கைக்குக் கிடைத்த தேநீர் மாதிரி, ஆறி அவலாகிப் போய்க் கடைசியில் கிடைத்ததும் பயனில்லாமல் போய் விடுகிறது. இது புரிகிறதா?"
"அது மாதிரித் தான், கிடைத்ததில் என்ன நிறைவைக் காண முடியும் என்பதைப் பார்ப்பதற்குப் பதிலாக, என்னென்ன கிடைக்கவில்லை என்பதில் கவனம் போனால், வாழ்க்கையும் அங்கே கசந்து, ஆறிப் போய்விடுகிறது. வாழ்க்கையை, நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில், சூடாக தேனீர் குடிப்பது என்பது சுறுசுறுப்பாக இருப்பதற்கு எப்படி அவசியமோ, அதே மாதிரி, வாழ்க்கை முக்கியம்! நாம் எதிர் கொள்கிற சூழ்நிலைகள் கோப்பைகள் மாதிரி இரண்டாம் பட்சம் தான்."
"அது சரியில்லை இது சரி இல்லை என்று பேசிக் கொண்டிருப்பதே நீங்கள் சந்தோஷமாக இல்லை என்பது தான்!. சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் இங்கே நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரியே குறைகளே இல்லாமல் இருப்பதும் அல்ல! உண்மையில் சந்தோஷமாக இருப்பதற்கு, குறை அல்லது நிறைவு என்ற படிக்கட்டுக்கள் அவசியமே இல்லை! சந்தோஷமாக இருப்பதன் ரகசியம், குறை, நிறை என்ற அளவீடுகளைத் தாண்டிப் போவதில் தான் இருக்கிறது. அவைகளைப் பெரிது படுத்துவதிலோ, பொருட் படுத்துவதிலேயோ அல்ல!"
ஆசிரியரைத் தேடி வந்த மாணவர்கள் இப்போது தேனீர் குடிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டார்கள்!
இணையத்தில் ஆயிரம் மொக்கைகளைப் பெரிய நகைச்சுவையாக, பொழுதுபோக்குவதற்காகப் படிக்கிறோம்! அதில் சில விஷயங்கள், வாழ்க்கையின் சிறந்த பாடங்களைக் கற்றுக் கொடுப்பவையாகவும் இருக்கும் என்பதையும் புரியவைத்தது!
இணையத்தில் ஆயிரம் மொக்கைகளைப் பெரிய நகைச்சுவையாக, பொழுதுபோக்குவதற்காகப் படிக்கிறோம்! அதில் சில விஷயங்கள், வாழ்க்கையின் சிறந்த பாடங்களைக் கற்றுக் கொடுப்பவையாகவும் இருக்கும் என்பதையும் புரியவைத்தது!
வாழ்க்கையை, எளிதாக புரிந்துகொள்ள வைக்கும் பதிவு. நன்றி.
ReplyDeleteஆங்கிலத்தில் ஏற்கனவே மின்னஞ்சலில் வாசித்து இருந்தாலும், தமிழில் அருமையாக நீங்கள் மொழி பெயர்த்த பின், வாசிக்கும் இன்னும் நல்லா இருக்குதுங்க... பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅமைதி அப்பா!
ReplyDeleteவாழ்க்கையை அதன் போக்கில் புரிந்துகொள்ள உதவும் நிறைய விஷயங்கள் இணையத்தில் forward mail களாகக் கொட்டிக் கிடக்கின்றன. எனக்கு முன்பெல்லாம் forward mail என்றாலே அவ்வளவு அலெர்ஜி. ஒருநாளைக்கு, இருபது முப்பது மெயில்கள் என்றால்....? ஆனால், இவைகளிலும், நிறைய வாழ்வியல் யதார்த்தங்கள் நிறையக் கிடைக்கும்போது, முன்பெல்லாம் நிர்தாட்சணியமாக ஸ்பாம் மெயில் என்று மார்க் செய்து ஒதுக்கியவன், இப்போது படித்துப் பார்த்துவிட்டு அப்புறம் தான் என்ன செய்வதென்று முடிவு செய்கிறேன்.
@சித்ரா,
forward mail ஆக எப்போதோ படித்தது தான்! ஏழெட்டுப் புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு, முதலில் எதைப்பற்றி எழுதுவது என்பது கொஞ்சம் முடிவாகாததால், அனுபவம் என்ற வகையில் இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பதிவாக வெளியிட்டேன். வருகைக்கு மிகவும் சந்தோஷம்!
நானும் இதை ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.
ReplyDeleteஆனால் மீண்டும் ஒரு முறை வாசித்தாலும், நமக்கான அறிவுரை அதில் எப்போதும் இருக்கிற நிலையில்தான் நாமிருக்கிறோம் என்பது உரைக்கிறது.
வாருங்கள் செல்வா!
ReplyDeleteஏற்கெனெவே படித்தது தான் என்றாலும், அதில் இருக்கும் உண்மை நமக்குப் புரிகிற வரை எத்தனை தரம் வாசிக்க வேண்டியிருக்கிறது!
யாஹூ!360 நாட்களில் இருந்து இதைப் பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் நினைவு தான் வர மாட்டேன் என்கிறது இல்லையா?