Sunday, April 25, 2010

மதுரை மீனாட்சிக்குக் கல்யாணம்!

மலையத்துவசன் என்று ஒரு பாண்டிய ராஜா!

நீண்ட நாட்களாகப் பிள்ளை இல்லை. தவமிருந்து, அப்புறம் ஒரு பெண் பிள்ளை பிறந்தது..பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்களோடு பிறந்த பெண்பிள்ளையைப் பார்த்து, ஐயோ, இப்படி இருக்கிறதே என்று பாண்டியன் கலங்கினானாம்! இந்தப் பெண்பிள்ளை வளர்ந்து பெரியவளானால் யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கவலை வாட்ட ஆரம்பித்தது. அசரீரியாக, "வருந்தாதே! அவளுக்குத் திருமண நேரம் வரும்போது, அவளைத் தேடி மணாளன் வருவான். அவனைப் பார்த்ததுமே, மூன்றாவதாக இருக்கும் ஸ்தனம் மறைந்துவிடும்!" என்று ஆறுதல் சொல்லியுமே கூட, மன்னனுக்குத் துயரம் தாங்கவில்லை. அந்தக் கவலையுடனேயே மரணமடைந்தான்.

கண் ஊஞ்சல் ஆட்டினாள் காஞ்சனமாலை என்று தாலாட்டுப் பாட்டெல்லாம் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை
, மீனாக்ஷி பெரிய ராவடியாகவே இருந்தாள் என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது. இப்படித் தாலாட்டுப் பாடியே, அவளை ராவடியாக்கி விட்டார்களோ?!

ஒவ்வொருத்தரிடமாகப் போய்
,
என்னுடன் சண்டைக்கு வருகிறாயா என்று கூப்பிட்டுக் கூப்பிட்டுச் சண்டை செய்வதற்காகவே திக்விஜயம் செய்ய  ஆரம்பித்தாள். பூலோகம், மேலோகம் என்று இவளது ராவடியை கண்டு அத்தனை பேருமே அரண்டு போய்த் தோல்வியை ஒப்புக் கொண்டார்களாம்!தனி ஆவர்த்தனமாகவே போய்க் கொண்டிருந்த போது, இவளை விடப் பெரிய ராவடியாகஅந்தப் பரமேஸ்வரனே சோம சுந்தரனாக மதுரைக்கு வந்தானாம்! அப்படி  வந்தவனைக் கண்டவுடன், ராவடி, சண்டை போடுவதை எல்லாம் மறந்து மீனாக்ஷி  வெட்கம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டாளாம்! மூன்றாவது ஸ்தனமும், ஏற்கெனெவே அசரீரி சொல்லியிருந்ததைப் போல, மறைந்தது.

மூன்றாவது ஸ்தனம் மறைந்ததைக் கண்டு
, காஞ்சனமாலை மாப்பிள்ளை ஒருத்தன் வசமாக மாட்டிக் கொண்டான் என்று தெரிந்துகொண்டு, முப்பத்து முக்கோடி தேவர்களோடு சேர்ந்து பெண்ணுக்குத் திருமண ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தாள்


மதுரையில் மீனாட்சிக்குக் கல்யாணம்! 

ஊரெல்லாம் கொண்டாட்டம்!

கல்யாணமும் ஆகி, சாப்பாட்டுப் பந்தியெல்லாம் முடிந்தபிறகு , சமைத்ததெல்லாம் நிறைய மீந்து போனது! முப்பத்து முக்கோடி தேவர்களும் சாப்பிட்டும் மீந்துபோனால் எப்படி! சமைத்து வைத்த உணவெல்லாம் மீந்து போய்விட்டது, உம்முடைய உறவினர்கள் எண்ணிக்கை அவ்வளவுதானா என்று கொஞ்சம் நக்கலாகக்  கேட்கிறாள் மதுரைக்கு அரசி, முத்து மீனாக்ஷி! 

அதுவரை அடக்க ஒடுக்கமாக இருந்த மாப்பிள்ளை சோமசுந்தரன், தன்னுடைய ராவடியை ஆரம்பித்தானாம்!

இரு! ஒரே ஒரு குட்டிப் பூதத்தை அனுப்புகிறேன்
, அவன் சாப்பிட்ட பிறகு மிச்சம் மீதி ஏதாவது இருந்தால், அப்புறம் மற்றவர்களைக் கூப்பிடுவதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு குண்டோதரன் என்ற ஒரு பூதத்தை அனுப்பி வைத்தானாம்.  


குண்டோதரனும் சமைத்து வைத்திருந்த அத்தனை உணவையும் சாப்பிட்டு, பசி, இன்னும் வேண்டும், பசி, இன்னும் வேண்டும் என்று அரிசி, காய்கறி இப்படி சமைப்பதற்கு வைத்திருந்த அத்தனையையும் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்து மீனாட்சியே பயந்து போனாளாம்! போதும் போதுமென்று வீட்டுக்காரனிடம் கெஞ்சுகிறாள் மீனாக்ஷி!

ராவடி மன்னனான சுந்தரேசப் பெருமானும் குண்டோதரனின் பசி அடக்கித் தாகத்தை உண்டு பண்ணினானாம்! தண்ணீர், தண்ணீர் என்று அலைந்த குண்டோதரனிடம் இதோ வை கை என்று சொல்ல, வைகை நதி உண்டாயிற்றாம்! இது திருவிளையாடல்  புராணத்தில் வருகிற கதை!



வையை என்னும் பொய்யாக் குலக்கொடி என்று மகிழ்ந்து கொள்கிறது திரு விளையாடற் புராணம்! வை கை என்று சொன்னதினாலோ என்னவோ கை நனைக்கிற அளவுக்குக் கூட வைகையில், பெரும்பாலான தருணங்களில் தண்ணீர் இருப்பதில்லை! சிறு கூடற்பட்டியில் பிறந்த எங்கள் கவிஞன் கண்ணதாசன் ஒரு திரைப் படப் பாடலில் சொன்னபடி,

மலைமேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயுமுன்னே வந்த வெள்ளம் போனது ராசா!


இப்படி, அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும், வைகையின் கதை மட்டுமல்ல, பாண்டிய நாட்டின் கதையே அப்படித்தான் இருக்கிறது!
அம்மையும் அப்பனுமே ராவடி பண்ணிக் கொண்டிருந்தால் எப்படி? 
அடிப்பொடிகளோடு அட்டகாசம் பண்ணஅடுத்து ஒரு 'னா வர வேண்டாமா!

ராவடி பண்ணிய  மீனாட்சியும், ராவடி மன்னன் சுந்தரேசனுமே  

அ' றங்காவலர் குழு செய்வது தான் சரி என்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்! மதுரைக்கு அரசி மீனாக்ஷி என்பதெல்லாம் முப்பதாண்டுகளுக்கு முந்தைய பழைய நம்பிக்கை!  என்னை மாதிரிப் பழைய நினைவுகளைக் கொஞ்சம் சுமந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே,  இன்னமும் அப்படி நம்பிக் கொண்டிருக்கிறோம்!

பண்டிகை என்ற மட்டுக்கு சித்திரைத் திருவிழாவின் போது  மீனாக்ஷி கையிலும் ஆவணி மாதத்தில் சோமசுந்தரர் கையிலும் மதுரையின் ஆட்சி இருப்பதாக ஒரு கற்பனை மட்டும் பண்ணிக் கொண்டு, செங்கோல் கொடுக்கிற படலம் ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறது!
 
ஆக, மதுரை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மூணு!  

அப்புறம் ராவடி! ஒரு ராவடியை அடக்க, அதற்குக் கொஞ்சம் அதிகமான ராவடி என்று அராத்தாக, ராவடியாக இப்படித் தொடர்ந்து இருப்பதே மதுரையின் கதையாக, புராணமாக இருக்கிறது!

தடி எடுத்தவனெல்லாம்  தண்டல்காரனா என்று கேட்கிற மாதிரி  ராவடி செய்யத் தெரிந்தவனை எல்லாம் பாண்டியனாக ஆக்கிப் பார்ப்பதே மதுரைக்கு உள்ள தனிச் சிறுமை! கலக்டராக இருந்த ஒரு ஆங்கிலேயன், மீனாட்சிக்கு ஆபரணம் செய்து போட்டானாம்! அவனையும் பீட்டர் பாண்டியன் என்பார்கள்! பெரிய மருது, சின்ன மருது என்று இரு சகோதரர்கள்! அவர்களையும் பாண்டியன் என்பார்கள்! பிற்கால பாண்டிய வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் பாண்டியன் என்று எவர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்! என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்!

திருநெல்வேலி தாண்டி தெற்கே, பாண்டியன் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டுப் பாருங்கள்!

இன்றைக்கு, மதுரையில் மீனாக்ஷி திருக்கல்யாணம்! திருக்கல்யாணத்தை கேபிள் டிவியில் பார்த்தும்,  இரவு  யானை வாகனத்திலும், ஆனந்தராயர் பல்லக்கிலும் மீனாக்ஷி சுந்தரேஸ்வராள் மாசி வீதிகளில் புறப்பாடு கண்டருளுவதை ஒதுங்கியிருந்து  சேவித்துக் கொண்டு, ஏற்கெனெவே எழுதியிருந்த பதிவைக் கொஞ்சம் மாற்றியமைத்து எழுதிய மீள் பதிவு!

மதுரைக்கு அரசி நீயல்லவோ என்று அவளிடத்தில் கேட்க ஆசைதான்! 


அவள் என்றைக்கடா வாயைத் திறந்து பேசினாள் என்ற  வசனம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது!


Friday, April 16, 2010

கருத்தொற்றுமை காண்பதற்கு.....முடியாத ஐந்து வழிகள்...!

டோனி மோர்கன் என்றொரு வலைப் பதிவர்! இவருடைய வலைப் பதிவுகள் பெரும்பாலும் கிறித்தவ சர்ச்சுகளின் நிதி நிர்வாகத்தைப் பற்றியது, கிறித்தவ சர்ச்சுக்களால் ஸ்பான்சர் செய்யப்பட பதிவுகள்  என்றாலும் கூட, பதிவுகளில், மனிதவளம், மேலாண்மை, நிர்வாகம் குறித்த சில விஷயங்களைப் பற்றிய கருத்துக்கள்  கொஞ்சம் யோசிக்க  வைப்பதாக இருக்கும். அப்படிப் படித்த நல்ல  பதிவுகளில் ஒன்று கருத்தொற்றுமை Consensus பற்றியது!

டோனி மோர்கன், இந்தக் கருத்தொற்றுமை என்பது வெறும் கேலிக் கூத்து என்பதைக் குறைந்தது ஐந்து காரணங்களை வைத்தாவது சொல்லிவிட முடியும் என்கிறார்.

கருத்தொற்றுமை ஏற்பட சில அடிப்படைத்தேவைகள், காரணிகள் இருக்கவேண்டும்! கீழே உள்ள படத்தைப் பாருங்கள்! இங்கே நாம் கருத்தொற்றுமை பற்றிப்  பேசுகிற பெரும்பாலான தருணங்களில், இவை எதுவுமே இருப்பதில்லை!



 
டோனி மோர்கன் சொல்கிறபடி பார்த்தால், இந்தக்  கருத்தொற்றுமை என்பதே அர்த்தமில்லாத வெறும் வார்த்தை! எப்படி என்று கொஞ்சம் பார்க்கலாமா?

முதலாவதாக, கருத்தொற்றுமை என்ற வார்த்தை, குறிப்பிட்ட ஒரு தருணத்துச் சூழ்நிலையோடு நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.  


மாற்றம் என்பது  ஒரு பக்குவ நிலை, அதற்குத் தயாராக இருக்கும் தைரியம் எல்லோருக்குமே இருப்பதில்லை. கருத்தொற்றுமை என்று பேச ஆரம்பிக்கும்போதே, மாற்றத்திற்குத் தயாராக இருப்பவர்கள், இல்லாதவர்கள் இரண்டு தரப்பையும் ஒன்றாக உட்கார்த்தி வைக்கும் போதே, தேக்க நிலை வந்து விடுகிறது.  

Status Quo என்றபடிக்கு, எப்படி இருந்ததோ அதே பழைய நிலையிலேயே நிற்பது என்பது, கருத்தொற்றுமை என்பதன் முதல் கோணலாக, அவலட்சணமாக இருக்கிறது. 

இரண்டாவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பிக்கும்போதே, அங்கே எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகி,  சந்தைக் கடை மாதிரி இரைச்சலும், கூச்சலுமாகிப் போய் விடுகிறது.  


தரங்கெட்ட விஷயங்களும், எதிர்மறையான போக்குகளும், கெட்ட எண்ணம் உடையவர்களுமே கூட சம வாய்ப்பு என்ற சந்தடி சாக்கில் உள்ளே நுழைந்து, உண்மையான குறிக்கோளை எட்ட விடாமல் செய்துவிடுகிற வாய்ப்பும் அதிகமாகி விடுகிறது.

மூன்றாவதாக, தைரியமான முடிவுகளை, நல்ல விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் எடுபடாமல் போய்விடுகிறது. நல்லதோர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களைப் பேச முடியாமலேயே போய்விடுகிறது.  


நடுநிலை என்பது ஆகச் சிறந்தது எது என்று சீர்தூக்கிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது என்பதற்குப் பதிலாக, மதில் மேல் பூனை மாதிரி ரெண்டுங் கெட்டானான  நிலையை எடுப்பது தான் என்றாகிப் போய்விடுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம், இங்கே மதச் சார்பின்மை-செக்குலரிசம் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கும் விதம்!

நான்காவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்யும் முனைப்பு, பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே வளர்த்துக் கொண்டிருப்பதாக மாறிப்போய் விடுகிறது. ஒ
ரு ஆரோக்கியமான விவாதம், அழுத்தமான கருத்தைப் பேசினால், எங்கே மற்ற தரப்பு விறைத்துக் கொள்ளுமோ என்ற பயத்தில், நடக்காமலேயே தவிர்க்கப் படுகிறது.  

அந்த நேரத்துக்கு, இரண்டு தரப்பையும் சமாதானமாகப் போகும்படிக்  கெஞ்சலாக,  விரிசலை பெயின்ட் அடித்து மறைத்துவிடலாம் என்கிற மாதிரியானதாக, நின்று விடுகிறது.

ஐந்தாவதாக,கருத்தொற்றுமை என்கிற பெயரில், இப்போதிருக்கும் நிலையை விட உயரத் தவிக்கும் கனவுகளின் சிறகுகளை முறிப்பதாக மட்டுமே நடக்கிறது. கொஞ்சம் வித்தியாசமாக, ஆக்கபூர்வமாகச் சிந்திக்க முற்படுபவர்களை, கூட்டத்தோடு கோவிந்தா என்று போய்விடும்படி வற்புறுத்துகிறது.  


மறுப்பவர்களை வலுக்கட்டாயமாகப்  பேசாமல் இருக்கும்படி மிரட்டுகிற கட்டைப் பஞ்சாயத்தாகவுமே பெரும்பாலான சமயங்களில் மாறிவிடுகிறது.

அரசியலாகட்டும், அல்லது பணிபுரியும் இடமாக இருக்கட்டும்! கருத்தொற்றுமை என்பது எப்படி ஏற்படுகிறது, அல்லது ஏற்படாமல் போகிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!

*கருத்தொற்றுமை என்ற பேரில் ஒருவிதமான தேக்கநிலை அல்லது அதே பழைய நிலை  உங்கள் மீது திணிக்கப் படுகிறதா?

*எதில் கருத்தொற்றுமை அவசியம் என்பதை விட்டு விலகி, சம்பந்தமே இல்லாமல், சந்தைக் கடையாகவும், சண்டைக்களமாகவும் ஆகி விடுகிறதா?

*மிகச் சொற்பமான அளவிலேயே சொல்லப் பட்டாலும், சொல்வதன் உண்மையை ஏற்றுக் கொள்ள முடிகிறதா, அல்லது கும்பலாகக் கூச்சல் போட்டே நல்ல விஷயம் கூட அம்பலமேறாமல் போய் விடுகிறதா?

*கூட்டமாகச் சொல்வது தான் சரி, அது சரி அது சரி என்று தலையாட்டிப் பொம்மைகளாக்குகிறதா அல்லது, தீர்க்கமாகச் சிந்திக்க இடம் இருக்கிறதா?

*நடுநிலைமை என்ற பெயரில், சுதந்திரமாகச் சிந்திப்பது தடுக்கப் படுகிறதா?


இந்த ஐந்து காரணங்கள் அத்தனையும் உங்களுடைய அனுபவத்தில், யோசித்ததில்  பொருந்துகிறதா?

கூடுகிறதா? குறைகிறதா?


உங்களுடைய  எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கேட்போம்!  



Wednesday, April 14, 2010

சோதனையும் சாதனையும்-சுத்தானந்த பாரதியார்!

சோதனையும் சாதனையும்
 
கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்
 
சுத்தானந்த நூலகம், திருவான்மியூர், சென்னை வெளியீடு.
மேல்விவரங்களுக்கு  shuddhashakthi@gmail.com  

434 பக்கங்கள் விலை ரூ.120/-
 

தமிழை நேசித்த கவியோகி! பன்முகத் திறமை கொண்ட துறவி! சுதந்திரப் போராட்ட வீரர்! கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய சுய சரிதையை "ஆத்ம சோதனை" என்ற பெயரில் வெளியிட்ட பழைய பதிப்பைச் சிறுவயதில் படித்திருக்கிறேன்.இந்தப் பதிப்பு, அதன் இரண்டாம் பகுதியையும் உள்ளடக்கிய பதிப்பாக, 434 பக்கங்களில் எண்பது அத்தியாயங்களுடன் வெளிவந்திருக்கிறது.

சோதனையும் சாதனையும் என்று தலைப்பில் உள்ள மாதிரியே, கவியோகி தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், சாதனைகளையும் 1975 ஆம் ஆண்டு இதை வெளியிடும் தருணம் வரை உள்ள பல நிகழ்ச்சிகளைச் சுவையோடு விவரித்திருக்கிறார். நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிற நூல் இது!



இன்றைக்கு சாதிக்கொரு சிலை, என்ற அளவில் சாதியைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் தேச விடுதலை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கைப் பார்க்கிறோம்.

இன்றைக்கு டமில் பேசுகிறவர்கள், மூக்கினாலே முக்கி முக்கிப் பேசுகிறவர்கள், எலும்பைக் கடிப்பது போல வார்த்தைகளைக் கடித்துக் குதறிப் பேசுகிறவர்கள் தான் தமிழ்,தனித் தமிழ் என்று மேடையில் பேசுவது ஒன்றே தமிழுக்குச் செய்யும்  சேவை என்றிருக்கும் நிலையில், உண்மையாகவே தமிழ் வளர்த்த பெரியோர்களை மறந்து போனதும், அவர்களுக்கு உரிய மரியாதை செய்யத் தோடர்ந்து தவறிக் கொண்டிருப்பதும் ஒரு கேவலமான அரசியலாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.

அப்படி மறந்துபோய்விடக் கூடாதே என்ற ஆதங்கத்தில், தமிழ் வளர்த்த பெரியோர்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைக்கும் பதிவு இது. ஒரு யோகி, அன்பிலே பழுத்த துறவி, ரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர், காவ்யகண்ட கணபதி முனி இப்படிப் பல ஞானிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர், சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், பன்மொழித் திறமை பெற்றவர் கவியோகி சுத்தானந்த பாரதியார், தூத்துக்குடிக்குச் சென்றிருந்தபோது, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்ததன் முதற் பகுதி இங்கே. இன்றைக்குக் காணும் அத்தனை குழப்பங்களுக்கும் வித்து, 1937--1942  கால கட்டத்திலேயே ஊன்றப் பட்டு விட்டது என்பதையும் சொல்லும் பகுதி இது.  

இன்றைய இளைய தலைமுறைக்கு, உண்மையைப் பார்க்கவொட்டாமல், வெறுப்பில் எரியும் மனங்களாக அவர்களையும் மாற்றுவதற்குப் பல முனைகளில் இருந்தும் வரலாறு திரித்துச் சொல்லப் பட்டுக்கொண்டே இருக்கிறது சமீப கால வரலாற்றைக் கூட அறியாதவர்களாக, இருக்கும் இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இந்தப் புத்தகத்திலே நிறைய உண்டு.

அதில் இருந்து கொஞ்சம்! நூல் அறிமுகமாக...!  


சிதம்பரம் பிள்ளையுடன்....!

தூத்துக்குடியில் மாசிலாமணிப் பிள்ளை என்னை வரவேற்றார். அரசியல் உலகின் கோழிச்சண்டையைத் தூத்துக்குடியில் கண்டேன். அங்கே இரண்டு கட்சிகள், ஒத்துழையாமைக் கட்சி என்னைத் தலைவனாக்கி விளம்பரம் செய்திருந்தது. ஸ்வராஜ்யக் கட்சி வரதராஜுலு நாயுடுவைத் தேர்ந்தது. அதை நானும் ஆமோதித்து எழுதினேன். நான் வந்ததுமே ஒத்துழையாமைக் கட்சி, நமது தலைவர் வந்து விட்டார் என்று தண்டோராப் போட்டது.காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டியவர் "என்ன சுவாமிகளே" என்றனர். சில்லறைக் கட்சியாட்கள் எங்கள் பக்கமே பேசவேண்டும் என்றனர். நான் மாநாட்டுக்குப் பொதுவாகப் பேசுவேன் என்றேன்.

நான் வந்த நாளே சிதம்பரம் பிள்ளை, மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றுப் பழைய கதைகளெல்லாம் பேசினார்--உரம் பெற்ற வீரவுள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ் பேச்சு, பெச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல்--எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. "வீரச் சிதம்பரம் பிள்ளை" என்ற பாட்டைப் பாடினேன்.

(வ. உ.சிதம்பரம் பிள்ளை  இந்த சம்பாஷணை முழுதும் சித என்றே குறிப்பிடப் படுகிறார்) 

நான் :  தங்களைக் காணவே மகாநாட்டிற்கு  வந்தேன். எந்தாய் வாழ்க!

சித :     பாட்டு கம்பீரமாயிருக்கிறது. பாரதி கேட்டால் மகிழ்வார். ஸ்வராஜ்யாவில் தங்கள் தலையங்கம் பார்த்தேன். நடையில் பழைய விறுவிறுப்பும் புதிய மறுமலர்ச்சியும் உள்ளன. ஆனால் எல்லாம் காந்தி மயமாயிருக்கிறது. திலகரும்  உமது நண்பர் தாமே!

நான் :  எனக்குத் திலகரிடமும் உள்ளன்புதான். அந்த மராட்டிய வீரம் தங்கள் தமிழ் மீசையில் துடிக்கக் கண்டேன். வெள்ளையரை விரட்டியடிக்க அவர் வீரம் பேசினார். தாங்கள் வெள்ளையன்  வெட்கக் கப்பல் விட்டீர்கள். தங்கள் தியாகத்தை சுதந்திர பாரதம் பொன்னெழுத்தில்  பொறிக்கும்.

சித  :   நான் சிறையை விட்டு வந்தபோது, எனக்கு மாலை சூட்டி வரவேற்கக் கூட ஒரு தமிழன் இல்லை. எண்ணெய்க் கடை வைத்தும் பிழைத்தேன். வறுமையால் வாடினேன், வாலஸ் துரை எனது சன்னதை  மீட்டுத் தந்தார். அந்த நன்றிக்கே என் பிள்ளைக்கு வாலேசன் என்று பெயரிட்டேன். அதற்கொரு குறள்:

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும் "

இன்று எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் தந்தாள், இப்படியே அரசியல் மேடையில் குதிக்கிறேன். நான் ஒருவன் கிளம்பினால் போதும், நாட்டை உரிமைக்கு அழைத்துச் செல்வேன்.

நான் :  இந்தக் காலம்
கதர் கட்டினாலே மேடையில் மதிப்பு.

சித :      ஹார்வி மில் முன், ராட்டையும் கதரும் எந்த மட்டு ஐயா?  இந்தியர் மான்செஸ்டருடன் போட்டி போட மின்சார யந்திரம் வேண்டும். கொட்டை நூற்று, முப்பது கோடிக்குக் கோவணம் கட்டவாவது முடியுமா? நான் என் ஊரில் நோற்று நெய்த கைத்தறி ஆடையை அணிகிறேன். நான் காந்தியை வெறுக்கவில்லை. திலகரை மதிக்கிறேன். எனது குருநாதன் சுதந்திரச் சங்கூதினான். விடுதலை, பிறப்புரிமை என்று உணர்த்தினான். பாரதி வாக்கில் திலகர் உணர்ச்சியே வெடித்தெழுகிறது.

நான் :  தங்கள் உணர்ச்சிதான், பாரதி வாணியாகப் பாடியது. தங்கள் பேச்சு, பாரதி பாட்டு,  (வ வே சு )ஐயர் எழுத்து, சிவாவின் ஆவேசம்---இந்நான்கும் தமிழுலகைத் தட்டி எழுப்பின. இன்று வகுப்பு வாதம் நாட்டைப் பிளந்தது.

சித :     எனது குருநாதன் காலத்தில், வகுப்புவாதமே கிடையாது. இன்று நாடு வகுப்புக் கந்தலாயிருக்கிறது. இந்து-முஸ்லீம்,பார்ப்பான்-அல்லான்,
வைதீக ஒத்துழையாமை-ஸ்வராஜ்யக் கட்சி என்ற பிரிவெல்லாம் தற்கால அரசியல் ஊழலையே காட்டுகின்றன. எனக்கு மட்டும் வாய்ப்பளித்தால், தமிழரை ஒன்று சேர்ப்பேன். நாயக்கரும், நாயுடுவும் ஐயங்காரும் ஐயரும் என்னுடன் கைகோத்து நடக்கச் செய்வேன்.

நான்:  தடையென்ன? தமிழன் தன்நாட்டு வீரரை மதிக்கத் தொடங்கினாலே, அந்த அற்புதம் நடக்கும். இப்போதுள்ள நிலையை இங்கே வந்ததுமே கண்டேன். பொதுக் கூட்டத்தில் பேச வேண்டாம் என்று பார்க்கிறேன், நீங்கள் பேசினாலே போதும்.

சித :    தாங்கள் பேச வேண்டும், நான் கேட்க வேண்டும்.

இச்சமயம் டாக்டர் வரதராஜுலு வந்தார். எலாரும் வட்டக் கிணற்றிற்குப் பவனி சென்றோம். அங்கே பதினாயிரம் பேர் கூடினர். சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார். நாயுடுகாரு, எம் எஸ்
சுப்ரமணிய ஐயர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையர்---எல்லாரும் பேசினர்.

கடைசியில், "சுவாமி சுத்தானந்த பாரதியார் பேசுகிறார், பேசத்தான் வேண்டும், பேசும் பாரதியார்" என்று அழைத்தார் தமிழ்ச் சிங்கம். நான் ஒருமணி நேரம் பேசினேன்.




நூலின் 70 ஆவது அத்தியாயத்தின் முற்பகுதி. 2003 ஆம் ஆண்டுப் பதிப்பின் பக்கங்கள் 337-339 நூலை அறிமுகம் செய்வதற்காக மட்டும்
வணிக அல்லது வேறெந்த உள்நோக்கமும் இல்லாமல் எடுத்தாளப்பட்டது. 



Monday, April 5, 2010

சந்தோஷத்திற்கு ஒரு குறுக்குவழி!

 
செய்தி சானல்களை மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் இடையில், ஸ்டார் மூவீஸ் வந்து போனது. சந்தோஷத்திற்கான குறுக்குவழி Shortcut to Happiness ஓடிக் கொண்டிருந்தது. ஏற்கெனெவே இதை ஸ்டார் மூவீஸ் சானலிலேயே  மூன்று நான்கு தரம் பார்த்தது தான்!

இந்த வலைப்பக்கங்களில், வாசிப்பு அனுபவங்களை வைத்து எது நல்ல எழுத்து என்று மூன்று நான்கு பதிவுகளை எழுதியதன் தொடர்ச்சியாக இந்தத் திரைப்படம், ஒரு புதிய பார்வையில்,பார்க்கத் தூண்டியது என்றே சொல்லவேண்டும்!

அல்லது ஏற்கெனெவே, ஆழ்மனதில், இந்தப் படத்தை முதன் முதலில் பார்த்தபோதே தங்கிவிட்டதாகக்  கூட இருக்கலாம்! எப்படியிருந்தாலும், இங்கே தமிழ் எழுத்துலகத்தில் இப்போது நடந்து வரும் சில போக்குகளுக்கு, இந்தத் திரைப்படம், ஒரு அழகான அடித்தளம், தொடர்பு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

Faust, Faustus என்ற லத்தீன் வார்த்தைக்கு அதிர்ஷ்டம் என்று பெயர். இதையே ஜெர்மானிய மொழியில் சொல்லும்போது fist,  அதாவது கைவிரல்களை மடக்கிக் காட்டுகிற முஷ்டி, இது ஜெர்மானிய நாடோடி இலக்கியங்களில் சாத்தானோடு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தைக் குறிப்பதாகவும் இருக்கிறது! இந்த ஜெர்மானிய நாடோடி இலக்கியக் கதை அடிப்படையை வைத்து வாஷிங்டன் இர்விங்  என்பவர் எழுதிய கதைத் தொகுப்பில்(1824) இருந்து சாத்தானும் டாம் வாக்கரும் என்ற கதையை,  தன்னுடைய பாணியில் திரும்பச் சொல்கிற விதமாக சாத்தானும் டேனியல்வெப்ஸ்டெரும்  என்ற  தலைப்பில் 1937 வாக்கில் ஸ்டீபன் வின்சென்ட் பெனெட்  என்ற கதாசிரியர் எழுதினார். எழுத்தாளர்  ஒ ஹென்றி பெயரிலான விருதையும் இந்தக் கதை 1938 ஆண்டு பெற்றது.

1941 இலும், அப்புறம் 2007 இலும் திரைப்படமாக வந்த இந்தக் கதை என்ன தான் சொல்கிறது? 2007 வடிவத்தைப்  பார்ப்போம்! இதில் 1941 வடிவத்தைப் போல அல்லாமல், சாத்தான் ஒரு அழகான பெண்ணாக வருகிறது என்பதற்காக மட்டுமல்ல! முந்தைய வடிவத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை, நம்ப முடிந்தால்நம்புங்கள்!

ஜாபெஸ் ஸ்டோன், ஒரு பிரபலமாகாத எழுத்தாளர். அவருடைய எழுத்துக்களை பதிப்பகங்களுக்கும்,  இலக்கியத் தரகர்களுக்கும் அனுப்பி விட்டுக் காத்திருக்கிறார். வாய்ப்பு வருகிற மாதிரித் தெரியவில்லை. ஒரு நாள், வெறுத்துப் போய்,  தன்னுடைய எழுத்துக்களை சேர்த்து வைத்திருக்கும் லேப்டாப்பை ஜன்னல் வழியாக வீசி எறிகிறார். அது வீதியில் நடந்துபோய்க் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தலைமீது விழுந்து, அந்தப் பெண் உயிரிழக்கிறார்.

சந்தர்ப்பம் கிடைத்தவுடன், சாத்தான், ஒரு அழகிய பெண்ணாக உள்ளே நுழைகிறது! வெறுப்பு, குற்றவுணர்வுடன் தவிக்கும் எழுத்தாளனோடு, பேரம் ஆரம்பிக்கிறது. நாம் இருவரும்  கூட்டு சேர்ந்து கொண்டால் புகழ், பணம் எல்லாம் கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறாள் அந்த அழகான ராட்சசி! பதிலுக்கு உன்னுடைய ஆத்மாவை எனக்கு விற்றுவிடு என்கிறாள்.

கதாநாயகன் ஒத்துக் கொள்கிறான். கீழே லேப்டாப் விழுந்து தலையில் அடிபட்டு இறந்த பெண்மணி உட்பட, சிக்கல்கள், வேறு விதமாக மாறி, கதாசிரியனைத் தேடி, இது வரை அவன் பார்த்திருக்காத அங்கீகாரம், புகழ் பணம் எல்லாமே கிடைக்கிறது. அந்த அழகான ராட்சசி, அவனோடு சல்லாபித்துக் கொண்டே, வாக்களித்தபடி எல்லாவற்றையும் தந்தாலும், ஜாபெஸ் ஸ்டோன் ஒரு வெறுமையை உணர்கிறார். தான் எதிர்பார்த்தது இது இல்லை, இதிலிருந்து விடுபட்டால் தேவலை என்று தவிக்கிறார்!


தான் முன்னால் சந்திக்கத் தவமிருந்த ஒரு பதிப்பாளரைச் சந்தித்து, தனக்கு உதவும்படி வேண்டுகிறார்.

வழக்கு ஆரம்பிக்கிறது! உண்மையிலேயே ஒரு நீதிமன்ற விசாரணை மாதிரித் தான் களம் விரிகிறது.
ஒரு நீதி மன்ற விசாரணை போல நடக்கும் இந்தப் பகுதி மிக அருமையாக எடுக்கப் பட்டிருக்கிறது.

கதாநாயகன் தரப்பில், டேனியல் வெப்ஸ்டர் வழக்கறிஞராகவும், சாத்தான் அழகிய பெண்வடிவத்தில் எதிர்த்தரப்பு வழக்கறிஞராகவும்  வழக்கு நடக்கிறது. ஜாபெஸ் ஸ்டோன் தன்னிடம் ஒப்புக் கொண்டபடி ஆத்மாவைத் தர மறுத்து மோசடி செய்ததாக சாத்தான் குற்றம் சாட்ட, பதிலுக்கு டேனியல் வெப்ஸ்டர் வாதங்கள் என்று கதை மிகவும் சுவாரசியமான தளத்தில் விரிகிறது!

அந்தோணி ஹாப்கின்ஸ், பதிப்பாளர், கதாநாயகனின் வழக்கறிஞரான  டேனியல் வெப்ஸ்டராகவும், அலெக் பால்ட்வின்  கதாநாயகன் ஜாபெஸ் ஸ்டோன் ஆகவும், ஜெனிஃபர் லவ் ஹெவிட் . அழகான சாத்தானாகவும் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம், ஒரு எழுத்தாளன் ஏங்குவது எதற்காகவெல்லாம் என்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. நல்ல எழுத்தாளனாக வரஆசையில் முனைகிறவன்,  திசை மாறிப்போய் புகழ், பணம், அங்கீகாரம் என்பது போதையாகிக் கடைசியில் தன்னுடைய ஆத்மாவையே இழந்து நிற்கிற அவலத்தைத் தொட்டுச் சொல்கிறது.

சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில், மிக வித்தியாசமான அணுகுமுறை, வழக்கு, வாதங்கள் என்று சுவாரசியமான திரைக்கதை இது!
ஆனால் திரையரங்குகளைப் பார்க்காத படம் என்று சொல்கிறார்கள்! நேரடியாகத் தொலைக் காட்சியில் ரிலீஸ்!
ஸ்டார் மூவீஸ் சானலில் இந்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில்,  குறைந்தது நான்கு முறையாவது போட்டிருப்பார்கள்! இன்னும் ஒரு பத்துத் தரமாவது போடுவார்கள் என்று தான் நினைக்கிறேன்! பார்க்க முடிந்தால் பாருங்கள்!

எது நல்ல எழுத்து, எதற்காக எழுதுவது, யாருக்காக என்ற மாதிரியான அடிப்படைக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிற மாதிரி ஒரு நல்ல திரைப் பட வடிவம் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை!

 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)