கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்
சுத்தானந்த நூலகம், திருவான்மியூர், சென்னை வெளியீடு.
மேல்விவரங்களுக்கு shuddhashakthi@gmail.com
தமிழை நேசித்த கவியோகி! பன்முகத் திறமை கொண்ட துறவி! சுதந்திரப் போராட்ட வீரர்! கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய சுய சரிதையை "ஆத்ம சோதனை" என்ற பெயரில் வெளியிட்ட பழைய பதிப்பைச் சிறுவயதில் படித்திருக்கிறேன்.இந்தப் பதிப்பு, அதன் இரண்டாம் பகுதியையும் உள்ளடக்கிய பதிப்பாக, 434 பக்கங்களில் எண்பது அத்தியாயங்களுடன் வெளிவந்திருக்கிறது.
சோதனையும் சாதனையும் என்று தலைப்பில் உள்ள மாதிரியே, கவியோகி தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், சாதனைகளையும் 1975 ஆம் ஆண்டு இதை வெளியிடும் தருணம் வரை உள்ள பல நிகழ்ச்சிகளைச் சுவையோடு விவரித்திருக்கிறார். நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிற நூல் இது!
இன்றைக்கு சாதிக்கொரு சிலை, என்ற அளவில் சாதியைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் தேச விடுதலை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கைப் பார்க்கிறோம்.
இன்றைக்கு டமில் பேசுகிறவர்கள், மூக்கினாலே முக்கி முக்கிப் பேசுகிறவர்கள், எலும்பைக் கடிப்பது போல வார்த்தைகளைக் கடித்துக் குதறிப் பேசுகிறவர்கள் தான் தமிழ்,தனித் தமிழ் என்று மேடையில் பேசுவது ஒன்றே தமிழுக்குச் செய்யும் சேவை என்றிருக்கும் நிலையில், உண்மையாகவே தமிழ் வளர்த்த பெரியோர்களை மறந்து போனதும், அவர்களுக்கு உரிய மரியாதை செய்யத் தோடர்ந்து தவறிக் கொண்டிருப்பதும் ஒரு கேவலமான அரசியலாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.
அப்படி மறந்துபோய்விடக் கூடாதே என்ற ஆதங்கத்தில், தமிழ் வளர்த்த பெரியோர்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைக்கும் பதிவு இது. ஒரு யோகி, அன்பிலே பழுத்த துறவி, ரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர், காவ்யகண்ட கணபதி முனி இப்படிப் பல ஞானிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர், சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், பன்மொழித் திறமை பெற்றவர் கவியோகி சுத்தானந்த பாரதியார், தூத்துக்குடிக்குச் சென்றிருந்தபோது, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்ததன் முதற் பகுதி இங்கே. இன்றைக்குக் காணும் அத்தனை குழப்பங்களுக்கும் வித்து, 1937--1942 கால கட்டத்திலேயே ஊன்றப் பட்டு விட்டது என்பதையும் சொல்லும் பகுதி இது. இன்றைக்கு டமில் பேசுகிறவர்கள், மூக்கினாலே முக்கி முக்கிப் பேசுகிறவர்கள், எலும்பைக் கடிப்பது போல வார்த்தைகளைக் கடித்துக் குதறிப் பேசுகிறவர்கள் தான் தமிழ்,தனித் தமிழ் என்று மேடையில் பேசுவது ஒன்றே தமிழுக்குச் செய்யும் சேவை என்றிருக்கும் நிலையில், உண்மையாகவே தமிழ் வளர்த்த பெரியோர்களை மறந்து போனதும், அவர்களுக்கு உரிய மரியாதை செய்யத் தோடர்ந்து தவறிக் கொண்டிருப்பதும் ஒரு கேவலமான அரசியலாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறைக்கு, உண்மையைப் பார்க்கவொட்டாமல், வெறுப்பில் எரியும் மனங்களாக அவர்களையும் மாற்றுவதற்குப் பல முனைகளில் இருந்தும் வரலாறு திரித்துச் சொல்லப் பட்டுக்கொண்டே இருக்கிறது சமீப கால வரலாற்றைக் கூட அறியாதவர்களாக, இருக்கும் இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இந்தப் புத்தகத்திலே நிறைய உண்டு.
அதில் இருந்து கொஞ்சம்! நூல் அறிமுகமாக...!
சிதம்பரம் பிள்ளையுடன்....!
தூத்துக்குடியில் மாசிலாமணிப் பிள்ளை என்னை வரவேற்றார். அரசியல் உலகின் கோழிச்சண்டையைத் தூத்துக்குடியில் கண்டேன். அங்கே இரண்டு கட்சிகள், ஒத்துழையாமைக் கட்சி என்னைத் தலைவனாக்கி விளம்பரம் செய்திருந்தது. ஸ்வராஜ்யக் கட்சி வரதராஜுலு நாயுடுவைத் தேர்ந்தது. அதை நானும் ஆமோதித்து எழுதினேன். நான் வந்ததுமே ஒத்துழையாமைக் கட்சி, நமது தலைவர் வந்து விட்டார் என்று தண்டோராப் போட்டது.காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டியவர் "என்ன சுவாமிகளே" என்றனர். சில்லறைக் கட்சியாட்கள் எங்கள் பக்கமே பேசவேண்டும் என்றனர். நான் மாநாட்டுக்குப் பொதுவாகப் பேசுவேன் என்றேன்.
நான் வந்த நாளே சிதம்பரம் பிள்ளை, மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றுப் பழைய கதைகளெல்லாம் பேசினார்--உரம் பெற்ற வீரவுள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ் பேச்சு, பெச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல்--எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. "வீரச் சிதம்பரம் பிள்ளை" என்ற பாட்டைப் பாடினேன்.
(வ. உ.சிதம்பரம் பிள்ளை இந்த சம்பாஷணை முழுதும் சித என்றே குறிப்பிடப் படுகிறார்)
நான் : தங்களைக் காணவே மகாநாட்டிற்கு வந்தேன். எந்தாய் வாழ்க!
சித : பாட்டு கம்பீரமாயிருக்கிறது. பாரதி கேட்டால் மகிழ்வார். ஸ்வராஜ்யாவில் தங்கள் தலையங்கம் பார்த்தேன். நடையில் பழைய விறுவிறுப்பும் புதிய மறுமலர்ச்சியும் உள்ளன. ஆனால் எல்லாம் காந்தி மயமாயிருக்கிறது. திலகரும் உமது நண்பர் தாமே!
நான் : எனக்குத் திலகரிடமும் உள்ளன்புதான். அந்த மராட்டிய வீரம் தங்கள் தமிழ் மீசையில் துடிக்கக் கண்டேன். வெள்ளையரை விரட்டியடிக்க அவர் வீரம் பேசினார். தாங்கள் வெள்ளையன் வெட்கக் கப்பல் விட்டீர்கள். தங்கள் தியாகத்தை சுதந்திர பாரதம் பொன்னெழுத்தில் பொறிக்கும்.
சித : நான் சிறையை விட்டு வந்தபோது, எனக்கு மாலை சூட்டி வரவேற்கக் கூட ஒரு தமிழன் இல்லை. எண்ணெய்க் கடை வைத்தும் பிழைத்தேன். வறுமையால் வாடினேன், வாலஸ் துரை எனது சன்னதை மீட்டுத் தந்தார். அந்த நன்றிக்கே என் பிள்ளைக்கு வாலேசன் என்று பெயரிட்டேன். அதற்கொரு குறள்:
"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும் "
இன்று எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் தந்தாள், இப்படியே அரசியல் மேடையில் குதிக்கிறேன். நான் ஒருவன் கிளம்பினால் போதும், நாட்டை உரிமைக்கு அழைத்துச் செல்வேன்.
நான் : இந்தக் காலம் கதர் கட்டினாலே மேடையில் மதிப்பு.
சித : ஹார்வி மில் முன், ராட்டையும் கதரும் எந்த மட்டு ஐயா? இந்தியர் மான்செஸ்டருடன் போட்டி போட மின்சார யந்திரம் வேண்டும். கொட்டை நூற்று, முப்பது கோடிக்குக் கோவணம் கட்டவாவது முடியுமா? நான் என் ஊரில் நோற்று நெய்த கைத்தறி ஆடையை அணிகிறேன். நான் காந்தியை வெறுக்கவில்லை. திலகரை மதிக்கிறேன். எனது குருநாதன் சுதந்திரச் சங்கூதினான். விடுதலை, பிறப்புரிமை என்று உணர்த்தினான். பாரதி வாக்கில் திலகர் உணர்ச்சியே வெடித்தெழுகிறது.
நான் : தங்கள் உணர்ச்சிதான், பாரதி வாணியாகப் பாடியது. தங்கள் பேச்சு, பாரதி பாட்டு, (வ வே சு )ஐயர் எழுத்து, சிவாவின் ஆவேசம்---இந்நான்கும் தமிழுலகைத் தட்டி எழுப்பின. இன்று வகுப்பு வாதம் நாட்டைப் பிளந்தது.
சித : எனது குருநாதன் காலத்தில், வகுப்புவாதமே கிடையாது. இன்று நாடு வகுப்புக் கந்தலாயிருக்கிறது. இந்து-முஸ்லீம்,பார்ப்பான்-அல்லான்,வைதீக ஒத்துழையாமை-ஸ்வராஜ்யக் கட்சி என்ற பிரிவெல்லாம் தற்கால அரசியல் ஊழலையே காட்டுகின்றன. எனக்கு மட்டும் வாய்ப்பளித்தால், தமிழரை ஒன்று சேர்ப்பேன். நாயக்கரும், நாயுடுவும் ஐயங்காரும் ஐயரும் என்னுடன் கைகோத்து நடக்கச் செய்வேன்.
நான்: தடையென்ன? தமிழன் தன்நாட்டு வீரரை மதிக்கத் தொடங்கினாலே, அந்த அற்புதம் நடக்கும். இப்போதுள்ள நிலையை இங்கே வந்ததுமே கண்டேன். பொதுக் கூட்டத்தில் பேச வேண்டாம் என்று பார்க்கிறேன், நீங்கள் பேசினாலே போதும்.
சித : தாங்கள் பேச வேண்டும், நான் கேட்க வேண்டும்.
இச்சமயம் டாக்டர் வரதராஜுலு வந்தார். எலாரும் வட்டக் கிணற்றிற்குப் பவனி சென்றோம். அங்கே பதினாயிரம் பேர் கூடினர். சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார். நாயுடுகாரு, எம் எஸ் சுப்ரமணிய ஐயர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையர்---எல்லாரும் பேசினர்.
கடைசியில், "சுவாமி சுத்தானந்த பாரதியார் பேசுகிறார், பேசத்தான் வேண்டும், பேசும் பாரதியார்" என்று அழைத்தார் தமிழ்ச் சிங்கம். நான் ஒருமணி நேரம் பேசினேன்.
நூலின் 70 ஆவது அத்தியாயத்தின் முற்பகுதி. 2003 ஆம் ஆண்டுப் பதிப்பின் பக்கங்கள் 337-339 நூலை அறிமுகம் செய்வதற்காக மட்டும்
வணிக அல்லது வேறெந்த உள்நோக்கமும் இல்லாமல் எடுத்தாளப்பட்டது.
வணிக அல்லது வேறெந்த உள்நோக்கமும் இல்லாமல் எடுத்தாளப்பட்டது.
