சமீபநாட்களில் அச்சுப்புத்தகங்களை எடுத்து வாசிப்பது அனேகமாகக் குறைந்தே போய்விட்டது. சினிமா, வெப் சீரீஸ்களிலும், இங்கே நடந்து கொண்டிருக்கும் அரசியல் கோமாளித்தனங்களைக் கவனித்து, பதிவுகள் எழுதுவதிலுமே பொழுது சரியாகப்போய் விடுகிறது என்ற கவலையை மாற்ற நேற்றைக்கு ஒரே ஒரு சினிமா மட்டும் பார்த்துவிட்டு சில அச்சுப் புத்தகங்கள், கிண்டில் வாசிப்பில் படிக்கத் தரவிறக்கம் செய்தவைகள் என்று வாசிக்க எடுத்துக் கொண்டதில் நண்பர் திருப்பூர் ஜோதி ஜி எழுதிய கிண்டில் புத்தகமும் ஒன்று.
2025 இந்தியா - மாற்றம் - முன்னேற்றம் என்ற தலைப்பிற்குச் சம்பந்தமே இல்லாமல் அமேசான் நிறுவனர் Jeff Bezos இந்திய விஜயம் பற்றி அமேசான் நிறுவனம் பற்றி எழுதியிருக்கிறார் என்பதில் முதலில் என்னுடைய ஏமாற்றத்தைப் பதிவு செய்தே ஆக வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்திற்கோ மாற்றத்துக்கோ அமேசான் எந்தவகையிலும் தொடர்பு உள்ளது இல்லை என்ற அடிப்படையான விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ள முடியுமானால், இந்தச் சிறு வாசிப்பை, ஒரு ஆரோக்கியமான உரையாடலுக்கு எடுத்துச் செல்லவும் முடியும்.
இந்த 26 நிமிட வீடியோவில் Jeff Bezos தன்னுடைய இந்திய விஜயத்தை ஒட்டி, சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதை சென்ற மாதமே பார்த்து விட்டதால் ஜோதி ஜி தன்னுடைய சிறுநூலில் சொல்லியிருந்தது எதுவும் புதிதாகத் தெரியவில்லை என்பதாகக் கூட இருக்கலாம்! இங்கே அதையும் சேர்த்தே பதிவு செய்கிறேன். அமேசான் தளம் இங்கே தமிழில் எழுதுகிறவர்களுக்கு ஒரு புதிய வாசலைத் திறந்து விட்டிருப்பதென்னவோ நிஜம்தான்! அதற்காக அமேசான் இந்தியாவில் மாற்றத்துக்கான புது நண்பன் என்கிற அளவுக்குப் போயிருக்க வேண்டுமா?
இப்போது இந்தச் சிறுநூலில் பேச விடுபட்டுப்போன விஷயங்களை கொஞ்சம் பார்க்கலாமா? இந்தியாவில் தொழில்முனைவோர் என்ற சிறுதுளி இன்னமும் பெரு வெள்ளமாக மாறவில்லை, தோல்விகளுக்கு அஞ்சுகிற பகுதியாக அது இருப்பதற்கு அடிப்படைக் காரணிகள் என்ன, அதற்கு என்ன செய்யலாம், ஒரு சொந்தத் தொழில் செய்கிறவராக தன்னுடைய அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டதென்ன என்பதை, சேர்த்துச் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக, பயனுள்ளதாக இருந்திருக்கும்.
அமெரிக்க சூழ்நிலைகளை இங்கே அப்படியே பொருத்திப் பார்க்க முடியாது. இந்தியாவில் மாற்றத்துக்கான காரணிகளும் இந்த மண்ணுக்கேற்ற விதத்தில் தான் வந்தாகவேண்டும், அதை மனதில் வைத்துக் கொண்டு நண்பர் ஜோதி ஜி தன்னுடைய எழுத்தை, இன்னமும் கூர்மைப்படுத்தினாரென்றால் நிச்சயம் மகிழ்வேன். இதுவும் கூட அவருடைய கிண்டில் மொழி நூலுக்கு நண்பர் B K ராமச்சந்திரன் ஒரே இந்தியா தளத்தில் எழுதியிருந்ததைத் தொடர்ந்து இந்தப்பக்கங்களிலேயே ஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை நூலுக்கு ஒரு அறிமுகமாக எழுதியிருந்ததன் தொடர்ச்சிதான்!
அனுபவஸ்தரும் அமேசானில் தமிழ் எழுத்தாளர்களுக்கு முன்னோடியுமான விமலாதித்த மாமல்லன் சொல்கிற இந்த விஷயத்தைக் கவனத்தில் வைத்துக் கொள்வது ஒரு எழுத்தாளராக நண்பர் ஜோதிஜிக்கு உதவும் என்றே நம்புகிறேன்.
நேற்றைக்கு வாசிப்புக்கு எடுத்துக் கொண்ட 2 அச்சுப் புத்தகங்கள் இவை:
கல்கியில் தொடர்கதையாக வந்த இந்தப்புத்தகம் 2012 இல் 16வது பதிப்பைக் கண்டிருக்கிறது என்பதே சாண்டில்யன் எழுதிய சரித்திரக்கதைகளுக்கு இன்னமும் மவுசு இருக்கத்தான் செய்கிறது என்பதன் அடையாளம். மராத்தியக் கடற்பகுதியில் பிரிட்டிஷ் காரர்கள் காலூன்ற முயற்சி செய்துகொண்டிருந்த காலகட்டத்தை வைத்து எழுதப்பட்ட கதை. வரலாறு என்கிற கசப்பு மருந்தையும் தனது சிருங்காரம் சொட்டும் எழுத்து நடையால் விரும்பி ஏற்றுக்கொள்ளச் செய்தவர் சாண்டில்யன். நேற்று மாலை கொஞ்சம் தாமதமாகத்தான் வாசிக்க எடுத்துக் கொண்டேன் என்பதால்,ஐநூற்றுச் சொச்சப்பங்கங்களில் 270 வரை தான் வாசிக்க முடிந்தது. இன்றைக்கு வாசித்து முடித்து விடுவேன்!
வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளாமல் எத்தனையோ புத்தகங்கள் கையருகே இருக்கையில், ஏற்கெனெவே படித்த இந்தப்புத்தகத்தைமறுபடியும் வாசிக்க எடுத்துக் கொள்ளத் தூண்டியது என்னவாக இருக்கும்?
கதைக்களம், வாசகனைக் கட்டிப்போட வைக்கும் திருப்பங்கள் என்கிற வசீகரமான எழுத்துநடையை எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்களில் அனுபவித்த மாதிரியே ராபர்ட் லாங்டன் என்கிற பாத்திரத்தை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட 5வது நாவல் இது. முழுக்க வாசித்த திருப்தியோடுதான் தமிழில் ஏதாவது வாசிக்கலாமே என்று ஜோதிஜியின் புத்தகத்தையும், சாண்டில்யனுடைய கடல் ராணியையும் எடுத்துக் கொண்டதே!
மீண்டும் சந்திப்போம்.
நன்றி. மாமல்லன் புத்தகம் வேறு தளம். என் பாதை வேறு.
ReplyDelete1. 50 வயதினிலே கடந்த சில நாட்களாக இலவசமாக வாசிக்கக் கொடுத்தேன். அமேசான் தளத்தில் (உலக அளவில் தான் அவர்கள் பட்டியில் இடுவார்கள்) 3 ஆவது இடத்தை அடைந்தது. நான் எதிர்பார்க்காத வெற்றி.
2. அமேசான் 2025 17 ஆவது இடத்தை அடைந்தது. இது வெளியான போது முதல் முறையாக தங்கள் அலைபேசியில் செயலியை தரவிறக்கம் செய்து வாசித்தேன் என்றவர்கள் பலர்.
நான் இவர்களை பெருமைப் படுத்தக் காரணம் நம் பலவீனங்களை யாரோ ஒருவர் அறுவடை செய்யப் போகின்றார்கள். செய்யத் தயாராக இருக்கின்றார்கள். செய்வார்கள் என்ற நோக்கத்தில் மட்டுமே.
வாருங்கள் ஜோதி ஜி!
Deleteவிமலாதித்த மாமல்லனுடைய நேற்றைய FB ஸ்டேடசைப் பகிர்ந்து வேறொரு தகவலைச் சொல்வதற்காக. என்னதான் அமேசான் தமிழ் எழுத்தாளர்களுக்கு இடம் கொடுத்தாலும், இங்கே கிண்டில் வாசிப்புக்கு பரவலான வாசகர்கள் பெருகவில்லை என்பது முதலாவது.
இலவசமாகக் கொடுப்பதனாலேயே வாசகர்கள் கூடிவிடுவார்கள் என்பது ஒரு மாயைதான்! இது இரண்டாவது.
மூன்றாவதாக Pricing! நல்ல content கொடுத்தாலொழிய pricing 0 வாக இருந்தாலும் 49 எனக் குறைந்தபட்சமாக வைத்தாலும் வாசகர்களை சென்றடையாது. ஆக அமேசானில் நல்ல reach இருக்கிறதென்ற புள்ளிவிவரமெல்லாம் வெறும் கானல் நீர் மட்டும் தான்! அச்சுப்புத்தகமாகவே இருந்து சுஜாதா ஜெமோ எஸ்ரா போல் எழுதிக் குவித்தவர்களானாலும் பக்கத்துக்கு ஒரு ரூபாய்க்கு மேல் விலை வைக்க முடியாத தமிழ்ப் புத்தகச் சூழலில், தப்பிப் பிழைக்க, தரமான content உடன் குறைந்த பட்சம் 150 -200 பக்க அளவிலாவது அசசுப்பக்கங்களில் இருக்கவேண்டும்!
ஒரு அனுபவத்துக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட இலவசங்களைத் தரவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அவைகளை எப்படி டெலிட் செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். இந்தத் தொல்லையைத் தவிர்ப்பதற்காக, ஒரு கிண்டில் கருவியை வாங்குகிற வரை, இனிமேல் கிண்டில் வாசிப்பில் தமிழ்ப்புத்தகம் எதையும் சேர்த்துக் கொள்வதாயில்லை என்றாகிப்போனதுதான் மிச்சம். .
//நான் இவர்களை பெருமைப் படுத்தக் காரணம் நம் ப.லவீனங்களை யாரோ ஒருவர் அறுவடை செய்யப் போகின்றார்கள். செய்யத் தயாராக இருக்கின்றார்கள். செய்வார்கள் என்ற நோக்கத்தில் மட்டுமே.//
Deleteஅது புத்தகத்தில் வெளிப்பட்டிருக்கிறதா என்ன? அதையும் நீங்கள்தான் தெளிவுபடுத்திச் சொல்லவேண்டும்
நீங்கள் எந்தப் புத்தகம் தேவை இல்லை என்று நினைக்கின்றீர்களோ அதன் மேல் சில நொடிகள் விரலை வைத்து அழுத்தினால் சில கட்டளைகள் தோன்றும். அதில் டெலிட் ப்ரம் டிவைஸ் என்று பட்டனைத் தட்டுங்க. காணாமல் போய்விடும். அமேசான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நல்ல பொருட்களை என் வீட்டுக்கு எளிய விலையில் கொண்டு வந்து சேர்த்துள்ளது. அதை எழுதி உள்ளேன்.
Deleteright click செய்து நீக்க ஒருவழியாக இன்றைக்குக் கற்றுக்கொண்டுவிட்டேன்! page read தான் எனக்கெல்லாம் சரிப்பட்டுவரும் என்ற முடிவுக்கு வந்தாயிற்று. தனியொருவனுக்காக எத்தனை செலவை இழுத்துவிட்டுக் கொள்வது என்ற யோசனைதான் கிண்டில் வாங்காத தடையாக இருக்கிறது .
Deleteநீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு அச்சுப்புத்தகங்களும் படித்த புத்தகங்கள் என்பதில் சிறு மகிழ்ச்சி!
ReplyDeleteவாசிப்பு அனுபவமே மிகுந்த மகிழ்ச்சியளிப்பதுதான் ஸ்ரீராம்!
Deleteநல்ல பதிவு. என்னதான் இருந்தாலும் அச்சில் வாசிக்கும் அனுபவத்தை இ-புத்தகங்களட தராது என்பதே உண்மை.
ReplyDeleteஉங்கள் பதிவு எங்கள் தளத்தில்:
தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஐந்து வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் உங்கள் பதிவு எங்கள் தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வாசிக்க எடுத்துக் கொண்ட புத்தகங்கள்! ஒரு பார்வை!
எனும் தலைப்பில் பரீட்சார்த்தமாக வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
வாருங்கள் சிகரம் பாரதி!
ReplyDeleteநாமெல்லாம் அச்சுப்புத்தகங்களுக்கே பழக்கப்பட்டுவிட்டதால் அப்படித் தோன்றுகிறது! ஆனால் அச்சுப்புத்தகங்கள் வழக்கொழிந்து போகும் காலம் வெகுதொலைவில் இல்லை!
ஒரு நல்ல திரட்டிக்காகப் பதிவர்கள் காத்துக் கொண்டிருக்கும் தருணம் இது. இந்த நேரத்தில் மிகவும் அவசியமான ஒரு நல்ல முயற்சி. சிகரங்களைத்தொட நல்வாழ்த்துகளுடன்!
-.