வரலாறு என்பது வெறும் கடிதங்கள் முதலான ஆவணங்களோ அல்லது நாமாகக் கற்பிதம் செய்து கொள்ளும் பிம்பங்களோ அல்ல. வரலாறு என்பது எழுதுகிறவரின் பார்வையில் இருந்து எழுதப்படுவது, அப்படி எழுதுகிறவரின் பார்வைக்கோளாறு, எழுதிய வரலாற்றிலும் வெளிப்படும் என்பதை மறுபடியும் சொல்ல வேண்டிய விஷயமாக, சமீபத்தில் வெளியான ஒரு புத்தகம், முன்னர் எழுதப்பட்ட கற்பிதங்கள் மீதான சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஜவஹர்லால் நேரு என்கிற புனிதபிம்பம் தொடர்ச்சியாக சமீப நாட்களாக அடிவாங்குவது ஏன் என்பதும் நேருவின் புனிதபிம்பத்தைக் காப்பாற்றுவதற்கு சிலர் ஓடி வருவது ஏன் என்பதுமாக பின்னணியில் இருக்கும் இரண்டுபக்க அரசியலையும், இந்த சர்ச்சையில் இருந்து, இன்றைய தலைமுறையினர் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் போன்றவர்களை இந்த தேசத்தின் ஆகப்பெரும் ஆளுமைகளாக இளையதலைமுறையினர் தெரிந்து கொள்ள விரும்புகிறார்களா என்பதே புரியாத நிலையில், இப்படிப்பட்ட பழங்கதைகளில் சர்ச்சை என்பது எப்படிப் பார்க்கப்படும்?
இந்தப் புத்தகத்தின் விலை ரூ.799/- அமேசானில் ரூ.583/- என்பதான அச்சுப்புத்தகத்தின் விலை ஒரு தனிநபராக மலைக்க வைக்கிற விஷயம். நம்மூர் நூலகங்களில் இதெல்லாம் எப்போதுமே கிடைக்காது என்பதும் லெண்டிங் லைப்ரரிகளுமே கூட வாசகர் விருப்பத்தை அறிந்து புத்தகங்களை வாங்குவதில்லை என்ற யதார்த்தம், பேசாமல் கிண்டில் unlimited வாசிப்புக்கு மாறிவிடலாம் என்று என்னை யோசிக்க வைக்கிறது. ஒரு ரிட்டையர்ட் ஆசாமி வேறெப்படி யோசிப்பது?
The Print தளத்தில் சேகர் குப்தா ஒரு 28 நிமிட வீடியோவில் இந்தப் புத்தக வெளியீட்டை ஒட்டி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடைய ட்வீட்டர் செய்தியைத் தொடர்ந்து கிளம்பியிருக்கிற சர்ச்சையை, இப்படியும் அப்படியுமாக, பச்சையாகச் சொல்வதானால், கொஞ்சம் மழுப்பலாகவே சொல்கிறார், காரணம் நேரு, படேல், போஸ் இவர்களுக்கிடையில் இருந்த உறவு அப்படிப்பட்டது. வல்லபாய் படேலை காந்தி வேறுகாரணத்துக்காக நம்பவில்லை என்பதும் நேருவுக்கும் படேலுக்கும் பலவிஷயங்களில் கருத்து வேறுபாடு வந்தபோது காந்தி மீதிருந்த அபிமானத்தால் வல்லபாய் படேல் அமைதியாக அமைச்சரவையில் இருந்து விலகி ஒதுங்கிக் கொண்டார் என்ற விவரம் பொதுவெளியில் ஆதாரத்தோடு கிடைப்பதுதான்.
சர்தார் வல்லபாய் படேல் மட்டுமல்ல, நேருவோடு கருத்து வேறுபாடுகொண்ட ராஜாஜி முதற்கொண்டு நிறைய ஆளுமைகள் காங்கிரசிலிருந்து வெளியேறியதும் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக நேரு இந்திரா என்று ஆரம்பித்து இன்றைக்கு சோனியா & வாரிசுகளுடைய குடும்பக் கம்பனியாகக் குறுகிப்போய்க் கிட ப்பதில், மகாத்மா காந்திக்கு ஏதோ போனால் போகிறதென்று கொஞ்சம் இடம். உண்மையைச் சொல்லப்போனால் நேரு, இந்திரா இருவருமே கூட போஸ்டர்களில் மட்டுமே என்றாகிப் போனதில், நேருவின் பிம்பம் வேறு மாதிரித்தான் என்று வெளிப்படுகிற ஒவ்வொரு தருணத்திலும், சோனியா & கோவின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கிற மாதிரி ஆகிவிடுவதால் மட்டுமே இத்தனை பதட்டம்!
இந்த ஒருகாரணமே, இளைய தலைமுறையினர் இந்த சர்ச்சையைக் கூர்ந்து கவனிப்பதற்குப் போதுமானது, கவனிக்கவேண்டும் என்பது என்னுடைய கருத்து.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment