Showing posts with label புத்தக விமரிசனம். Show all posts
Showing posts with label புத்தக விமரிசனம். Show all posts

Friday, January 31, 2020

ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்! வாசித்ததும் நேசித்ததும்!

இன்று எதையோ தேடப்போக, ஜெயகாந்தன் எழுதிய உன்னைப் போnல் ஒருவன் நாவல் கைக்கு கிடைத்தது. இந்தப்புத்தகத்தை வாசித்து முப்பது வருடங்களுக்கும் மேலாகியிருக்குமே, கொஞ்சம் புரட்டிப்பார்க்கலாம்  என்று வாசிக்க ஆரம்பித்தவனை, ஜெயகாந்தனுடைய நீளமான முன்னுரை நாவலுக்குள் அப்படியே இழுத்துக் கொண்டது என்பதில், இன்றைய பகல்பொழுது வாசிப்பும் யோசனையுமாகப் போனதில் ஜெயகாந்தன் எழுத்தின் வீரியம் மீதான பிரமிப்பு இன்னமும் அடங்க மறுக்கிறது.


என்னிடமிருக்கிற இந்தப்புத்தகம் மதுரை மீனாட்சி புத்தகநிலையத்தாரால் 1964 இல் முதல் பதிப்பாக வந்ததன்  மறுபதிப்பாக 2014 செப்டெம்பரில் வந்த பிரதி. 195 பக்கங்கள். அதற்கு ஜெயகாந்தன் எழுதிய  முன்னுரையே 10 பக்கங்கள். விலை நூறு ரூபாய், இதை நான் எங்கே எப்போது வாங்கினேன் என்று யோசித்துப் பார்த்தபோதுதான் இது நான் வாங்கியதில்லை என்பதே உறைத்தது. மகன் வாங்கி வாசித்ததை இங்கே விட்டுப் போயிருக்கிறான்! புத்தகமாகுமுன் ஆனந்த விகடனில் 15 வாரம் தொடர்கதையாக வெளிவந்திருக்கிறது 

கதை தங்கம் என்கிற காதலனால் கைவிடப் பட்ட சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு பெண்மணி, தன்னுடைய 10 வயது மகன் சிட்டியோடு, தனித்து வாழ்வதிலிருந்து தொடங்குகிறது. தகப்பன் முகத்தை பார்த்திராத சிட்டி, ஆரம்பத்தில் பொறுப்பே இல்லாதவனாகத் தான் வளர்கிறான். தொண்டர் துரைக்கண்ணு என்றொரு ஐஸ் ஃபேக்டரி முதலாளியின் அறிமுகம் கிடைப்பதில் சிட்டிக்குத் தாயின் அருமை தெரிகிறது. பகலில் ஐஸ் ஃபேக்டரி வேலை, இரவில் முதலாளி நடத்தும் இரவுப்பள்ளியில் படிப்பு என்று நல்லவிதமாகப் போகிறது. இந்த நேரத்தில் மாணிக்கம் என்கிற ஒரு சோசியனுக்கும் தங்கத்துக்கும் நெருக்கமான உறவும் வயிற்றில் கருவாகவும்  வளர்கிறது. மாணிக்கம், தங்கம், சிட்டி, இவர்களுடன் ஒரே வீட்டில் வசிக்க வருவதில், மாணிக்கம் என்னதான் தந்தை மாதிரிப் பாசமாகப் பழகினாலும், சிட்டிக்கு மாணிக்கத்தைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. வேலைக்குப் போவதை விடுவதுடன் வீட்டையும் விட்டு வெளியேறுகிறான்  மாணிக்கம் புரிந்து கொண்டு தங்கத்தை விட்டுப் பிரிந்த செய்தி தெரிந்த பிறகுதான்  தாயுடன் வசிக்க மீண்டும் வருகிறான். தங்கத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. மகனை அழைத்து, தன்னுடைய பூர்வக்கதையைச் சொல்லி, உன் தங்கையை என்மாதிரி இல்லாமல் நல்லவிதமாய் வளர்த்து ஆளாக்கு என்று சொல்லி, இறந்தும் போகிறாள். சிட்டி இப்போது, தாயையும் இழந்து நிற்கிற நிலையில் இருக்கிற ஒரே உறவு அவன் தங்கைதான்!

சுற்றியுள்ள மனிதர்கள் பழிக்காமல் உதவுகிறார்கள். சிட்டி மறுபடி பகலில் வேலை அப்புறம் படிப்பு, அதன் பிறகு தங்கையை எப்படி வளர்த்து ஆளாக்கலாம் என்ற கனவுகளோடு வாழ ஆரம்பிப்பதுடன் கதை முடிகிறது. அடித்தட்டு மக்களுடைய வாழ்க்கையை யதார்த்தமாக விவரிக்கிற கதைமாந்தர்கள் ஜெயகாந்தனின் இந்த நாவலில் இப்போது படித்து முடிக்கிற தருணத்திலும் வாழ்கிறார்கள்.


1964 மே மாதம் புத்தகமாக வந்த உன்னைப்போல் ஒருவன் ஜெயகாந்தன் தயாரித்து இயக்கி திரைப்படமாகவும் 1965 இல் வெளிவந்தது. பாடல்களே இல்லாமல், வெறும் ஒருலட்ச ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில், 21 நாட்களிலேயே எடுக்கப்பட்ட படம் என்பது இன்றைக்கு கொஞ்சம் நம்பமுடியாத ஆச்சரியமாகத்தான் இருக்கும்.  தேசியத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களில் மூன்றாவது பரிசைப் பெற்ற இந்தப்படத்தின் படச்சுருள் காணாமல் போய்விட்டது என்கிறார்கள்.


மீண்டும் சந்திப்போம் 
                

Saturday, January 18, 2020

புத்தகக் கண்காட்சியும் பதிப்பகங்களும்! பின்னே நாட்டு நடப்பு!

புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுதுவதற்கு நிறைய நல்ல விஷயங்களும் இருக்கின்றன என்பதை எனக்கு நானே நினைவு படுத்திக்க கொள்கிற மாதிரி சிலபல காணொளிகளும் கிடைத்துவிடுகின்றன என்பதை இங்கே மன மகிழ்வோடு பகிர்ந்துதான் ஆகவேண்டும்!  கழக, இடதுசாரிக் குப்பைகளை அப்படியே புறந்தள்ளி விட்டுப்போக இதுபோன்ற பகிர்வுகளும் அவசியமே!

  
புத்தகங்களைப் பாதுகாக்க இங்கே அரசும் பல்கலைக் கழகங்களும் செய்யவேண்டிய பணிகள் நிறைய  இருக்கின்றன. இப்படியான பெரும்பணியை எப்படி ஒருசில பதிப்பகங்கள் (எல்லாப்பதிப்பகங்களையும் இதில் சேர்த்துச் சொல்ல முடியாது) என்பதை சந்தியா பதிப்பக நிறுவனர் M நடராஜன் இந்த 28 நிமிட வீடியோவில் கொஞ்சம் தெளிவாகவே சொல்கிறார். கேளுங்கள்! 


நண்பர்களுக்கு புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றியும், அதன் நிறுவனர் ஞானாலயா கிருஷ்ண மூர்த்தி ஐயாவைப் பற்றியும் கூகிள் பிளஸ்சில் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தது நினைவிருக்கும் என்றே நம்புகிறேன். ஏழாண்டுகளுக்கு முன்னால் ஞானாலயா நூலகத்தில் தஞ்சாவூர் கல்லூரி மாணவர்களிடையே நானும், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பேசியதன் ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம். சந்தியா நடராஜன் பேசும்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் குறித்தும், தனியார் நூலகங்கள் செய்த நல்ல பணிகள் பற்றியும் கொஞ்சம் பேசுகிறார். 

   

#UrbanNaxals  இதை சமீபகாலங்களில் மிகவும் கேலிக்கு ஆளான ஒரு வார்த்தையாகவாவது அறிந்திருப்பீர்கள்!  அந்தத்தலைப்பில் திரைப்படத் தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரி, ஒரு படமும் எடுத்து, அதன் மீது ஒரு புத்தகமும் எழுதி இருப்பது, பானு கோம்ஸின் இந்த வீடியோ விமரிசன உரையைப் பார்த்தபிறகுதான், இதைப்பற்றிய அறிவிப்பொன்றைப்பார்த்துவிட்டுக் கடந்துபோய்விட்டதே ஞாபகத்துக்கு வந்தது. 1967 இல் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உடைந்ததில் பிரிந்து போனவர்கள் நக்சல்பாரி என்ற கிராமத்தில் தான் தங்களுடைய கலகக் கொடியை உயர்த்தினார்கள் என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்று அவர்கள் பெயர் சொட்டிக் கொண்டாலும் நக்சல்பாரிகள் என்றும் காலப் போக்கில் நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்டு, பதினைந்து இருபதுக்கும் மேற்பட்ட குறுங் குழுக்களாகச் சிதறியும் போனார்கள். அர்பன் நக்சல்கள் என்ற வார்த்தை அவர்களைத்தான் குறிக்கிறதா? அப்படியும் சொல்ல முடியாது. இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லவும் முடியாதமாதிரி, கொஞ்சம் குழப்பமானது.  
                                                   


இந்தக்கேள்விக்கான விடை ஒருவிதத்தில் மிகவும் சிக்கலானது, இன்னொரு விதத்தில் மிகவும் எளிமையானதும் கூட! உதாரணத்துக்கு JNUவில் ஒரு பொருளாதாரப் பேராசிரியை. CAAவுக்கு எதிராக மாணவர்களைத் தூண்டிவிடுகிறவர். இவர் நடத்தும் NGO வுக்கு வெளிநாட்டிலிருந்து 14 கோடிரூபாய் வரவு வந்திருக்கி. றது. கம்யூனிச நாடுகளிலிருந்தா? இல்லை! அமெரிக்காவின் Ford Foundation தான் இத்தனை தாராளமாக நிதி கொடுத்திருக்கிறது. எதற்காக இவர்கள் நிதி அளிக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடையை கூகிளில் தேடிப்பார்த்தாலேயே ஏகப்பட்ட விஷயங்கள் கிடைக்கும். என்றாலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிவது கொஞ்சம் கடினமானதுதான்!

படிப்பறிவு இல்லாத கிராமப்புறங்களில் மட்டுமே தன் செல்வாக்கை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் நக்சல்கள் நகர்ப்புறங்களிலும் ஊடுருவி விட்டார்களா? JNU மாதிரியான பல்கலைக்கழகங்கள் இடதுசாரிகளின் விளையாட்டு மைதானங்களாக ஆகி  இருப்பதை பலபதிவுகளிலும் பார்த்துவருகிறோம். தேசத்தை சீர்குலைக்க முனையும் அன்னிய சக்திகளும் இடதுசாரிகளும் கைகோர்க்கும் புள்ளியே அர்பன் நக்சல்கள் என்று கொஞ்சம் எளிமையாகப்புரிந்து கொள்ளலாமா? பானு கோம்ஸின் புத்தக அறிமுகம், விமரிசனம்  வீடியோ  44 நிமிடம். என்னுடைய வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் இதுவும் சேர்ந்து கொண்டு விட்டது. 

மீண்டும் சந்திப்போம்.                               

Thursday, October 17, 2019

கொஞ்சம் நல்ல எழுத்து எப்படி இருக்கவேண்டும்?

ராஜேஷ் குமார், பாலகுமாரன் இவர்களை வைத்துக் கொண்டு ஒரு நல்ல எழுத்து எப்படி இருக்கவேண்டும் என்பதைக் கண்டு பிடித்துவிட முடியுமா? முதலில் எது எழுத்து, நல்ல எழுத்து என்பதைக் கண்டுகொள்ள ஒரு ஆங்கிலப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு விமரிசனமாகப் பார்த்துவிடலாமா? 



பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட என்னை அதிகமாக மிரட்டிய ஒரே எழுத்தாளர் ராபின் குக் தான்!

நீண்ட நாட்களுக்கு முன்னால் நண்பர் டாக்டர் சுந்தரவடிவேல் இதைப் படியுங்கள் சார் என்று சிபாரிசு செய்து கொடுத்த புத்தகம், மருந்துக் கம்பனிகளின் தில்லுமுல்லு வேலைகளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியே கொடுத்த புத்தகம் தி ஃபீவர்!  (The Fever by Dr.Robin Cook)

இப்போது படிக்கிற மாதிரிக் கற்பனை செய்தாலே கூட சுரம் வந்து விடும்! அயன் ராண்ட் முதல், லியோன் யூரிஸ், போரிஸ் பாஸ்டர்நாக் இப்படி எத்தனையோ எழுத்தாளர்களை சகித்துக் கொள்ள முடிந்தவனை, படிக்கப் படிக்க வெறுப்பேற்றிய புத்தகம் அது! 

எழுதியவர் ஒரு மருத்துவர்! நிறைய தொழில்நுட்ப விவரங்களை, சாதாரணமாகப் படிக்க வருகிறவர்களுக்குக் கொஞ்சமும் புரியாத வகையில் அடுக்கிக் கொண்டே போனது தான் கோளாறு! தவிர, விவரங்களைச் சொல்லிவிட்டு நாசூக்காகத் தன்னுடைய தரப்பை எடுத்துச் சொல்வதற்குப் பதிலாக நேரடியாகவே ஒரு பிரச்சாரம் மாதிரி இருந்ததும் ஆரம்பநிலை வாசகருக்குப் புரிவதும், பிடிப்பதும் மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது.

பொதுவாகவே துறை சார்ந்த கதைகளை எழுதுவதில் ஆங்கில எழுத்தாளர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். மிகக் கடுமையான உழைப்பு, ஆராய்ச்சி, அடிப்படை விவரங்களைச் சேகரித்துக் கொண்டு, புறம் அதில் இருந்து ஒரு கதைக் களம், கதாபாத்திரங்கள் உருவாக்குவது என்பது மேற்கே கதை எழுத முனையும் அத்தனை எழுத்தாளர்களுக்குமே உரித்தான ஒரு பொதுவான பண்பாக இருக்கிறது.  

ஆர்தர் ஹெய்லி எழுதிய The Moneychangers புதினத்தைப் பற்றி இந்தப் பக்கங்களில் எழுதும்போது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வங்கிகள், இயங்கும் விதம், நடைமுறைகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அப்புறம் கதைக் களத்தை உருவாக்கிய விதத்தைச் சொல்லியிருக்கிறேன். புத்தகத்தைப் படிக்கும்போதே, ஒரு கதையைப் படிப்பதோடு, வங்கித் துறை சார்ந்த நிறைய விஷயங்களை தெரிந்துகொள்கிற மாதிரி இன்றைக்கும் பொருத்தமாக அந்தப் புதினம் இருப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் சொல்ல முடிகிறது!

முதலாவதாக, கதாசிரியர் வெறும் கதைதானே என்று அலட்சியமாக நம்மூர் பாலகுமாரன்கள் மாதிரி சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகாமல், எழுத  எடுத்துக் கொண்ட துறையைப் பற்றிய விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு, கதையோட்டத்தில் பொருத்தமான இடங்களில் அந்தத் தகவல்களை வாசகர்களும் தெரிந்து கொள்கிற மாதிரிக் கொடுத்திருந்தது!

இரண்டாவதாக, அவர் அந்தப் புதினத்தில் எடுத்துக் கொண்ட வங்கித் துறையின் பேராசை, நிர்வாகக் குளறுபடிகள், அதனால் பாதிப்புக்கு உள்ளாகும்  சாதாரண மக்கள் என்பது இன்றைக்கும் மாறாமல் அச்சு அசலாக அப்படியே திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருப்பது!

ஆக, அறிவியல் அல்லது ஏதாவது ஒரு துறை சார்ந்த புதினத்தை எழுதும் கதாசிரியருக்கு வெறும் கற்பனை மட்டுமே இருந்தால் போதாது! அவருக்கு அந்தத் துறையை பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்! தெரிந்து கொண்ட அத்தனை விஷயத்தையும் கதையில் அப்படியே கோர்த்து விட முடியாது,  துறை சார்ந்த விஷயங்களை மைஒயமாக வைத்து ஒரு சுவாரசியமான கதைக் களத்தை எடுத்துக் கொண்டு, கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிற கதா பாத்திரங்களை உருவாக்கவேண்டும், உடலுக்கு ரத்த ஓட்டம் எவ்வளவு அவசியமோ, அதேமாதிரி, துறை சார்ந்த தகவல்களைக் கதையின் ஓட்டமாகவும் அவசியமாகக் கலந்து படைக்க வேண்டும். அதில் வெற்றி காணும் போது, துறை சார்ந்த ஒரு புதினம் வெற்றிகரமாக, வாசகர்களால் கொண்டாடப் படுகிற விதத்தில் உருவாகிறது.

வாசகருக்குப் புரிய வேண்டும் என்பதையே மறந்து விட்டு எழுதிய மாதிரியிருக்கும் இந்தப் புதினத்தில், இந்த அடிப்படைக் கோளாறை மறந்து விட்டு வாசித்தால், உண்மையிலேயே மிகவும் அருமையான புத்தகம் தான்! சொல்லப் பட்ட விதம், உபயோகிக்கப் பட்ட தொழில் நுட்பச் சொற்கள், ரசாயனப் பெயர்கள் அதிகமாக இருப்பது, இன்னும் கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது.

The Fever கதையின் நாயகன்,  சார்லஸ் மார்டெல் ஒரு மருத்துவர். லுகேமியா என்ற ரத்தப் புற்றுநோய்க்குத் தனது மனைவியை பறிகொடுத்தவர். அதை அடுத்து புற்றுநோய்க்கு மருந்து கண்டு  பிடிக்கும் ஆராய்ச்சியில்  தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.  மருத்துவருடைய மகளுக்கும்அதே மாதிரியான மிக அரிதான புற்று நோய் இருப்பதைக் கண்டறிகிறார். 

ரசாயனக் கழிவை சுத்திகரிக்கிறேன் என்ற பெயரில் அந்த சிறுமி விளையாடும் இடத்தின் அருகே இருந்த சிறு குட்டையில் பென்சைன் என்ற புற்றுநோயைத் தூண்டுகிற காரணியாக இருக்கும் நஞ்சை, ஒரு மருத்துவக் கழிவை சுத்திகரிக்கும் ரசாயனக் கம்பனி தொடர்ந்து கொட்டிக் கொண்டிருப்பது தான் காரணம் என்று தெரிய வருகிறது.

தன் மகளை மருத்துவமனையின் அனுமதியில்லாமல் வெளியே கொண்டு வந்து மாற்று மருத்துவ முறையில் சிகிச்சையைத் தொடருகிறார். மருந்து ஒன்றையுமே கூடக் கண்டுபிடித்து விடுகிறார்.வில்லனாக, ஒரு மருந்துக் கம்பனி வந்து குறுக்கிடுகிறது. மருத்துவர் என்ற தகுதியையும், மகளுடைய உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக முயற்சிகளைச் செய்வதில்  பேராசை பிடித்த அந்த மருந்துக் கம்பனியின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்கிறார்.  

பெரும்பகுதிக் கதையில்  சார்லஸ் மார்டெல் எதன் மீதோ, எவர் மீதோ கோபத்தைக் கக்கிக் கொண்டிருப்பவராகவே சித்தரிக்கப் படுவதும், நிறைய ரசாயனக் கூட்டுப் பெயர்கள், விளைவுகள் என்று அடிக்கடி குறிப்பிடப் படுவதால், அடிப்படை ரசாயனம் அறியாதவர்களுக்குக் கொஞ்சம் கூடப் புரியாத வகையிலும், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை, பக்கத்திலேயே ஒரு அகராதியை வைத்துக் கொண்டு பொருள் தெரிந்துகொண்டு படிக்க வேண்டியதாக இருந்ததும் , இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கையில் எடுத்த அந்த நாட்களில் மிகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும், சோர்வடையச் செய்வதாகவும் இருந்தது.

ராபின் குக் மருத்துவராக இருந்து கொண்டே தன்னுடைய துறையில் நடக்கும் கொஞ்சம் அதீதமான அக்கிரமங்களை அம்பலப் படுத்துகிற வகையில் பல புதினங்களை எழுதியிருக்கிறார்.

இந்தப் பக்கங்களில்  போலி மருந்து, கலப்படம் செய்யப்பட மருந்துகளை அரசு மருத்துவ மனைகளிலேயே வழங்கப் பட்டதை மத்தியப் புலனாய்வுத் துறை திடீர் சோதனை நடத்தியதில் கண்டுபிடித்த விவரத்தைப் பற்றிய  பதிவாக எழுதிய பிறகு, சேகரத்தில் இருந்த ராபின் குக் எழுதிய  The Fever  புதினத்தை தேடியெடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

உயிர் காக்கும் மருந்துகள் என்று நம்பித்தான், மருத்துவர்கள், மருந்துக் கடைக் காரர்கள் சொல்வதை நம்பித்தான், என்னவென்றே தெரியாத ரசாயனக் கலவைகளை வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். கலப்படம் செய்யப் படாத சுயம்பிரகாசமாக இருக்கும் நிலையிலேயே, இந்த ரசாயனக் கலவைகள், ஒரு வலியைக் குணப் படுத்தி வேறு பல திருகுவலியைக் கொண்டு வந்து சேர்ப்பதாகத் தான் இருக்கின்றன.

உதாரணமாக, இதய நோய்க்குப் பரிந்துரை செய்யப் படும் மருந்துகளில் பெரும்பாலானவை, காலப் போக்கில் சிறுநீரகத்தைக் காலி செய்து விடுவதாகத் தான் இருக்கின்றன. மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்காகக் கொடுக்கப் படும் ஆஸ்பிரின், வயிற்றில் ஓட்டை போட்டு விடுவது  சர்வ சாதாரணமான பக்க விளைவு. 

இப்படி அலோபதி மருத்துவத்தில், ரசாயன மருந்துகளின் பக்க விளைவுகளைப் பற்றி எந்த மருந்துக் கம்பனியும், பரிந்துரை செய்யும் மருத்துவரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் எச்சரிக்கை, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை, தடுப்பு வழிகளைச் சொல்வதே பெரும் பாலான தருணங்களில் இல்லை. மாறாக  கொசு அடிக்க பீரங்கி மாதிரி, ஓவர் டோஸ் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதே நிறைய இடங்களில் நடக்கிறது.

இந்த லட்சணத்தில், இந்தத் திருநாட்டில், அரசின் அலட்சியத்தால், காலாவதியான மருந்துகளை மறுபடி தேதி பேக்கிங் மாற்றி மறுவிற்பனைக்கு அனுப்புவதும், மருந்துகளிலுமே கூடக் கலப்படமும், போலி லேபிள்களும் நிறையவே புழக்கத்தில் இருப்பதை ஏதோ அந்த நேரத்துத் தலைப்புச் செய்தியாக மட்டும் படித்துவிட்டுப் போய்விடாமல் எச்சரிக்கையாக இருக்கக் கற்றுக் கொள்ளப் போகிறோமா?

ஊமைச் சனங்களாகவே இருந்துவிடுவது தான் சௌகரியமாக இருக்கிறது என்று  இலவச டீவீக்களில், காசு கொடுத்துக் கேபிள் இணைப்பு  வாங்கி, மானாட மங்கையர்கள் மார்பாடப் பார்ப்பதிலேயே பிறவிப் பயனை அடைந்து விட்ட திருப்தியில் இருந்துவிடப் போகிறோமா?

என்ன செய்யப் போகிறோம்? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 

இப்படி சில கேள்விகளோடு இந்தப் பக்கங்களில் எழுதி இருந்தது 2010 மே மாதத்தில் என்றாலும் ஒரு நல்ல விஷயம் கூட எப்படி present செய்யப்படுகிறது என்பதில் தான் ஜனரஞ்சகமாக மட்டுமல்ல வாசகர்களால் கொண்டாடப் படுகிற எழுத்தாகவும் ஆகிறது. இந்தக்  கருத்துடன் உங்களால் உடன்பட முடிகிறதா? 

உடன்பட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை! தொடர்ந்து பேசலாம்! வாசிப்பின் சுகம் என்ன என்பதையும் பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.     
    

Thursday, August 26, 2010

பாரதி ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்! சீனி.விசுவநாதன்



நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வது,  படித்ததில் பெற்ற அனுபவங்களை, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையில் இந்தப் பக்கங்களில் சில புத்தகங்கள், எழுத்தாளர்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தமிழில் கவிதை, சிறுகதை, வசன கவிதை, தேசீய கீதங்கள், கேலிச் சித்திரங்கள், பத்திரிக்கை நடத்திய அனுபவம் என்று எதைப் பேச முனைந்தாலும்  அதன் முன்னோடியாக மஹாகவி சுப்ரமணிய பாரதியார் இருப்பதைப் பார்க்க முடியும். புத்தகங்களைப் பற்றி எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் பாரதியை மறத்தல் ஆகுமோ?!

பாரதியைத் தமிழகம் முழுமையாக அறிந்திருக்கிறதா?

பாரதியைப் பற்றி அவதூறாக விமரிசித்து வரும் நிறையக் கட்டுரைகளை  இணையத்திலும் அச்சிலும் பார்க்கும்போது, பாரதியைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது மிகக் குறைவு தான் என்பது புலனாயிற்று. ஒரு நல்ல நூலைப் படித்து, அதை விமரிசனம் செய்யும்போது, படித்தவர் பரிந்துரையாக நாலு வார்த்தை சொல்லுவோமில்லையா?

அப்படிப் "படித்தான் பரிந்துரை" என்ற தலைப்பில் ஸ்ரீ ரங்கம் திரு. வி. மோகன ரங்கன் அவர்கள் மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில்  எழுதிய நூல் அறிமுகத்தை இங்கேயும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. இதோ ஸ்ரீ ரங்கம் வி மோகன ரங்கன் அவர்களின் மோகனத் தமிழில், படித்தான் பரிந்துரையாக......

சீனி.விசுவநாதன் 

"பாரதி  ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்"  நூல்  640 பக்கங்கள்  கொண்ட ஹார்ட் பௌண்ட் புத்தகம்.   முன்னரே சிக்கல்கள்  மட்டும் பற்றிச்  சிறு நூலொன்று   இவரால்   எழுதப்பட்டு  வந்தது.   ஆனால் இந்த  நூல்   மிக  விரிந்ததும்,   கிட்டத்தட்ட  அனைத்துக் குளறு படிகளையும், பாரதி  நூல்கள்,  வாழ்க்கைச்  செய்திகள்,  சரித நூல்கள், மூன்றாம் மனிதர் தகவல்,   சக  காலத்து  அறிஞர்கள்  பின்னிட்டுப் பாரதியின் பெருமை  உணரத் தலைப் பட்ட பின் புது ஊக்கம் கொண்டு தாங்கள் பழக நேர்ந்த பாரதி நாட்களைப் பற்றிய நேரடி வர்ணனைகளின் சான்றாண்மை என்று மிக விரிவாகச் செய்திருக்கிறார் ஆசிரியர். 

பாரதி இயலின் பெரும் உபகாரி இந்த ஆசிரியர் என்பது பலருக்கும் மேன்மேலும் தெரிந்துகொண்டு வரும் விஷயம்.


10 வால்யூம்கள் கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி நூல்கள் இது வரை வந்துவிட்டன. மேற்கொண்டு ஓரிரு வால்யூம்கள் வர இருக்கின்றன. அந்த நூல்களில் எல்லாம் ஆசிரியரின் உழைப்பைப் பூரணமாகப் பார்வையிடும் பொழுது எனக்குத் தோன்றிய கருத்து இந்த ஆசிரியருக்கு உண்மையில் இந்த வேலைக்காக இரண்டு பட்டங்கள் தரவேண்டும் என்பதுதான். ஏனெனில் பாரதியின் எழுத்துக்களைத் தேடிப்பிடித்து வந்து கால நிரல் படுத்தி ஊர்ஜிதம் செய்து போடுவது ஒரு பெரும் பணி. 

அதோடு நிற்காமல் பாரதி ஒரு கட்டுரை எழுதுகிறார் என்றால் அந்தக் கட்டுரை வேறு ஏதோ நிகழ்ச்சிகளையோ, அல்லது மற்றவர் எழுதிய இதழ்க் கட்டுரைகளையோ குறிப்பிட்டால் அந்த நிகழ்ச்சிகள் பற்றிய தகவல், அந்தக் கட்டுரைகள்   பற்றிய தகவல், முடிந்த இடத்தில் எல்லாம் அந்தக் கட்டுரைகளின் நகல், மற்றும் அதன் தமிழாக்கம் (ஆங்கிலமாய் இருப்பின்) என்று அந்தக் காலக் கட்டத்தையும் சேர்த்து ஆவணப் படுத்திவிட்டார் ஆசிரியர்.

இவ்வளவு நெடிய உழைப்பில் பழுத்த, பாரதி வித்தையை வளர்க்கும் பெரியவர் இப்பொழுது கொண்டு வந்திருக்கும் நூல் ‘பாரதி ஆய்வில் சிக்கல்களும் தீர்வுகளும்’. இந்த நூல் எந்த அளவிற்குச் சான்றாண்மை மிக்கதாய் இருக்கும் என்று நீங்களே ஊகிக்கலாம்.

நூலாசிரியரின் ’படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை’ என்ற அறிமுகம், 32 தலைப்புகளில் நெடுங்கட்டுரைகள், 6 பின்னிணைப்புகள் என்று நூல் பரந்துபட்டு பாரதி ஆய்வுலகின் சிக்கல்களையும், தீர்வுகளையும் விளக்குகிறது.


உதாரணத்திற்கு மூன்று சொல்கிறேன். ‘சத்தியப் போர்’ என்பது பாரதி பாடலா? சங்கு சுப்பிரமணியன் தம் இதழில் போட்டது. அது பாரதி பாடல் இல்லை என்று பாரதியின் தம்பி திரு சி விஸ்வநாதனும், திரு சிதம்பரம் ரகுநாதனும் கருத்து தெரிவித்தனர். திருமதி செல்லம்மா பாரதி வெளியிட்ட சுதேச கீதங்கள் பதிப்பில் இருந்ததாகத் திரு சிதம்பரம் ரகுநாதனின் கருத்து. பாரதியின் தம்பி கருதியது சொற்கள் பாரதியின் சொல்லாட்சியாக இல்லை என்பது. பாரதி பிரசுராலயம் வெளியிட்ட பதிப்பில் இந்தப் பாடல் இடம் பெறவில்லை.  நூல் இந்தச் சிக்கலை விளக்கி, தீர்வும் தருகிறது.

அடுத்து பாப்பா பாடல். பாரதி பிரசுராலயத்தாரின் பதிப்பில் பல பிழைகள் என்று வாசகர்களின்  சார்பாக நியாயக் குரல் எழுப்பினார் புதுமைப் பித்தன் மணிக்கொடியில். ஆனால் அவர் சுட்டிக்காட்டிய தவறுகள் பாரதி காலத்திலேயே பதிப்பிக்கப்பட்ட தொகுப்புகளில் ஏறியிருந்தால். அப்பொழுது அவை தவறுகள் அல்லவே. 

கிடைத்ததைக் கொண்டு பாரதியின் ஆகச்சிறந்த உண்மையான பாடம் என்றுதானே ஆகும். இவை எல்லாம் பாரதி பற்றிய ஆவணங்களை பல பத்தாண்டுகளாகத் தேடித் திரட்டி வரும் ஆசிரியர் சுட்டிக் காட்டி உண்மை நிலவரங்களைத் தெளியப் படுத்துவது எத்தகைய ஆக்க பூர்வமான பணி!

அடுத்து, திலகர் மறைந்த போது ஏன் பாரதியார் அவரைபற்றி எதுவும் பாடவில்லை? எங்கிருந்தார்? கடலூரில் எழுதிக்கொடுத்த வாசகங்கள் அவரைப் பாட விடாமல் கையைக் கட்டிப் போட்டதா? கிடைத்த தகவல்களுக்கிடையிலும், அந்தத் தகவல்களையும் அணுகும் முறையில் ஆர்வம், ஆர்வமின்மை காரணமாகவும் பலரும் பெரும் கேள்விகள் எழுப்பி, தம் கேள்விகளையே முடிவுகளாகவும் ஆக்கிச் செய்திருக்கும் குழப்பத்தின் இடையே இந்தச் சிக்கல் என்ன? அதன் தீர்வு யாது? என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

பாரதிதாசன் நோக்கில் பாரதியார் என்னும்படி ஒரு நூலில் திரு மணிகண்டன் தொகுத்த பாரதி பற்றிய பாரதிதாசன் பாடல்களில் ஒன்று அன்றொரு நாள் என்று 1907 ஆம் ஆண்டைப்பற்றிக் குறிப்பிட்டு பாரதியார், வவெசு ஐயர், அரவிந்தர் ஆகியோரைப் பற்றிப் பாண்டிச்சேரி சூழலில் விவரிக்கிறது. ஆசிரியர் திரு சீனி. விசுவநாதன் ’பாரதிதாசன் ஆய்வாளர்கள்  இந்தப் பாடலை மீள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்.  ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா?

இதுபோல் 640 பக்கங்களும் பாரதி ஆய்வாளர்கள், மாணவர்கள், நேசர்கள்  ஆகியோருக்கு அருமையான பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை.

பின்னிணைப்புகளில் தலைப்புகளே அவற்றின் முக்கியத்வத்தைக் கூறும்.  

1)பாரதி காலத்தில் பத்திரிக்கைகளில் பிரசுரமான பாடல்கள்  

2)பாரதி காலத்தில் நூல் வடிவம் பெறாத பாடல்கள் 

3)பாரதி காலத்திய நூல்களில் மறுபிரசுரம் செய்யப்பட்ட பாடல்களுக்கான விவரம்  

4)பிரிட்டிஷ் அரசு ஆட்சிக்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாரதி பாடல்கள்.

பாரதி இயலை கற்பனைகளின் மைதானமாக ஆக்கிவிடும் நிலையிலிருந்து மீட்டு, ஆரோக்கியமான ஆய்வுகள் மிகுவதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியதில் பெரும் பங்கு திரு சீனி. விசுவ நாதனுடையது.


--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

பாரதி  ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும்


ஆசிரியர் --சீனி.விசுவநாதன்


முதற் பதிப்பு -- 31 டிசம்பர் 2009 

நூல் கிடைக்குமிடம்


சீனி. விசுவநாதன்
2, மாடல்  ஹவுஸ் லேன்,
சி ஐ டி நகர்,
சென்னை நகர் -- 600035
தொலைபேசி:  044-24315757


விலை ரூ 275 --00

மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தின் இழை ஒன்றில் இருந்து நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப் படுகிறது.


Sunday, June 13, 2010

நாலாவது தூண் ! எண்டமூரி வீரேந்திர நாத்


நாலாவது தூண்! கதையின் பதினோராவது அத்தியாயம் பக்கம் 171-172

மேடையின் மேல் சுவாமியும் படியின் மேல் ஆதரவில்லாமல் விழுந்துகிடந்த பல்லவியும் மட்டுமே எஞ்சி நின்றார்கள்
. அவள் பாதி நினைவிலும், பாதி மயங்கியும் விழுந்து கிடந்தாள்.


சுவாமிகள் கிட்டே வந்தார்.

அவர் நிழல் அவள் மேல் வந்து விழுந்தது. வெளியே ஜனங்களின் சந்தடி லீலையாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. அதை எதிரொலித்தாற்போலவே சிரிப்புச் சத்தம் காற்றில் தவழ்ந்து வந்தது.

"நான் சொல்லலையா பல்லவி! காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் பரவியிருக்கும் வீடு என்னுடையதுன்னு! அதன் நிழலில் தஞ்சம் புகுந்துக்கச் சொன்னேனா இல்லையா?.நீ கேட்கலை. என் முதல் தூணான அரசியல்-சூரியநாராயணன்-நீ ஹோம் மினிஸ்டருக்கு போன் பண்ணினபோது, அங்கேதான் இருந்தான். நிமிஷத்தில் விஷயம் எங்களுக்குத் தெரிந்துடுத்து. என் இரண்டாம் தூணான புத்திசாலித்தனமான லாயர் சதாசிவம் டில்லியிலிருந்து என்ன பண்ணனும்னு சொன்னான். என் மூன்றாவது தூண் தேவிதயாள்-எஞ்சிய ஏற்பாடுகளைக் கவனித்துண்டான். பலன்...? இதான்--இப்ப, இப்ப நீ இருக்கிற நிலைமைதான்!"


அவர் சிரிப்பு திரும்பவும் அவ்வெல்லை முழுவதும் அலையலையாகப் பரவிற்று.

"சென்ட்ரல் ப்யூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் டிப்டி டைரக்டரைக் கூடத் தன் காலுக்கடியில் வந்து விழச் செய்து விடுவான் இந்தப் பரமானந்த சுவாமி. இப்பச் சொல்லு பெண்ணே! இந்த நாட்டின் தலைவனாவதற்கு அவகாசமோ, அருகதையோ இருக்குங்கிறாயா, இல்லையா?"

அவள் கண்களைத் திறக்க முயன்றாள். கண்ணுக்குக் கீழே அடிபட்டிருந்ததால் பார்வை சரியாகத் தெரியவில்லை. ஒரு ஒளி மட்டும் கண்ணுக்குள் வந்து தாக்கிக் கொண்டிருந்தது. எழுந்து நிற்கக் கூடச் சக்தியில்லை. முகத்திற்கு முன்னால் வந்து, இன்னும் உயரமாய் ஒரு விக்கிரகத்தைப்போல நின்று கொண்டிருந்தார் சுவாமி.

"இப்பச் சொல்றேன் கேளு பல்லவி! என் நாலாம் தூண் எதுன்னு தெரிஞ்சுக்க இவ்வளவு நாளைக் கஷ்டப்பட்டாயோனோ?.அதென்னன்னு சொல்றேன், கேளு!

என் நாலாம் தூண்--ஜனங்களின் முட்டாள்தனம்.

அந்தக் கடைசித் தூணை இப்போ உனக்கு பிரத்தியட்சமாய் காட்டினேன்
.
பார்த்தாயோனோ என் விஸ்வரூபத்தை? இனி என்னை எதுதான் தடுத்து நிறுத்திவிடும்? வர்ற விஜயதசமி அன்னைக்கு விஜய சங்கை ஸ்தாபிக்கப்போறேன். ஜனங்களை பயந்து பீதியடையும்படி செய்வேன். செக்யூலரிசத்திலிருந்து மதத்தின் பக்கமாய்ப் போகச் செய்வேன். பாதுகாப்பு உணர்ச்சி போய்விட்ட ஜனங்கள்--அரசாங்கத்தை நம்பமாட்டாங்க. இதர மதத்தாரையும் நம்ப மாட்டாங்க.அதான் எனக்கு வேண்டியது.அரசாங்கம் இதர மதங்களைக் காப்பாற்றுவதில் ஆழ்ந்திருக்கும்போது, மக்களுக்கு இன்னும் அதிகமாய் மதத் தத்துவத்தைப் புகட்டுவேன். ஐ யாம் தி காட்! ஐ யாம் தி சுப்ரீம்! என் ஜனங்களைக் காப்பாற்றுவதற்காகவே அவதரித்திருக்கும் கடவுளின் அவதாரம் நான்......ஹா.ஹ..ஹா...ஹா.ஹ..ஹா!"

சாடிசமும் சாமர்த்தியமும் சேர்ந்து விட்டால் ஆபத்து. அப்படிப்பட்ட மனித உருவெடுத்த அரக்கனுக்கு முன்னால் ஆதரவின்றி விழுந்து கிடந்தாள் அவள்.

சி பி ஐ, சி ஐ டி போலீஸ், சட்டம், ராணுவம் --எதுவுமே தனக்கு முன்னால் நிற்க முடியாது என்பது போன்ற மிடுக்குடன் அங்கிருந்து அகன்றார் அவர்.
oooOooo
இங்கே கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உன்னைப்போல் ஒருவன் படத்தை வைத்துக் கமலை கிழி கிழி என்று பதிவர்கள் கிழித்துக் கொண்டிருந்தார்கள். பதிவில் எழுதிக் கிழித்து விட்டால் மட்டும் ....இந்த நினைப்புத்தானே நிறையப்பேருடைய பிழைப்பைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது?அது ஒழிக இது ஒழிக என்று கத்திக் கொண்டே இருப்பவன் தான் இங்கே முதலில் ஒழிந்துபோகிறான் என்ற அடிப்படை கூட ஏன் எவருக்கும் தெரிவதே இல்லை?

இங்கே நாலாவது தூண் கதையிலுமே கூட அந்த சாதாரண மனிதனைப் பற்றிய ஒரு திருப்பம் மிக சுவாரசியமாக இருக்கிறது.
A WEDNESDAY
திரைப்படத்தில் நஸ்ருதீன் ஷா சொல்கிற மாதிரி " a stupid common man" மாதிரி இல்லை.பாவம் கமல்! உன்னைப்போல் ஒருவனை இதில் விட்டு விடுவோம்! எண்டமூரி வீரேந்திரநாத் படைப்பில் கதாபாத்திரங்கள் எல்லோருமே ஒருவரை ஒருவர் மிஞ்சுகிறவர்கள், எவருமே ஏப்பை சாப்பை இல்லை.

அடுத்த அத்தியாயத்திலேயே கதாநாயகனும் வில்லனும் தங்களுடைய பலத்தை ஒருவருக்கொருவர் நிரூபித்துக் கொள்ளும் சுவாரசியமான திருப்பம், கதை அங்கேயே முடிந்து விடுவதில்லை அதற்கப்புறமும் இருநூற்றைம்பது பக்கங்கள், திருப்பம், திருப்பத்திற்குத் திருப்பம், திடீர்த் திருப்பம், அதிரடித் திருப்பம் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அந்த ஒரு சுவாரசியத்தை, படிக்க வருகிறவர்களைக் கட்டிப்போடுகிற ஜாலத்தை எண்டமூரியின் அத்தனை கதைகளிலுமே பார்க்கலாம்.எண்டமூரி சுவாரசியத்திற்கு நான் காரண்டீ! போதுமா!

இப்போது அத்தியாயம்12 பக்கம் 197-199 கொஞ்சம் ருசித்துப்பார்க்கலாம்:


அந்த ஹிட்லரைப்போல சினிக்கைக் கண் கொட்டாமல் பார்த்தான் ஆதித்யன். அவர் கார் புறப்படப்போனபோது, ஏதோ நினைவுக்கு வரவே, இறங்கி ஓட்டமாய் ஓடிப்போய்,"உங்களோடு இன்னும் இரண்டு நிமிஷம் பேசலாமா சுவாமி?" என்று கேட்டான் துணிவோடு. சுவாமியின் சைகையைப் பார்த்து டிரைவர் இறங்கி விட்டான். ஆதிதித்யன் காரை ஓட்டத் தொடங்கினான். ஆதித்யனின் காரைப் பின்னாடியே ஒட்டி வந்து கொண்டிருந்தான் . ஆனால் அந்த ஸ்பீடைப் பிடிக்க முடியாமல் விட்டு விட்டான்.

"என்ன சொல்லு?"

"நீங்க இவ்வளவு பெரிய மனுஷனா எப்படி ஆனீங்க?"

"அரசியல், பலம, கெட்டிக்காரத்தனம்--எல்லாம் என் சொத்துத் தான்." சிரித்தார்.

"ஆனால், நியாயம், சட்டம் எல்லாம் கூட இருக்கே சுவாமி?"

"இதெல்லாம் எதுக்குக் கேட்கிறாய்?"

"நான் உங்களோடு சேர்ந்தால் எந்த விதத்தில் பாதுகாப்புக் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கத்தான்."

"பைத்தியக்காரா--அப்புறம் பாதுகாப்பைப்பற்றிய பேச்சே கிடையாதே!"

"ஆனால் சட்டம்..?"

"சாட்சி இல்லாவிட்டால் சட்டம் இல்லை"

ஆதித்யனின் கையிலிருந்த காரின் வேகம் இன்னும் அதிகரித்தது. நூறு கிலோமீட்டர்களைத் தாண்டிவிட்டது. "உங்களோடு சேர்ந்துட்டால் பாதுகாப்புக்குத் தேவையே இராதுன்னு சொன்னீங்க. இப்போ உங்களுக்கே எந்தப்பாதுகாப்புமில்லையே!"

"என்ன..நீ என்ன சொல்கிறாய்?"

"நீங்க சொல்றது நிஜந்தான்! அரசாங்கமே உங்க கையில் இருக்கு. அரசியல் தலைவர்கள் உங்கள் பக்தர்கள். ஆனால், அரசியல் அதிகாரிங்களுக்கு பிரமோஷன் தாகம், தலைவர்களுக்குப் பதவிப் பாதுகாப்பு முக்கியம்.அவங்க சில நிபந்தனைகளுக்குட்பட்டுக் காரியம் பண்ணனும். உதாரணத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீங்க ஒரு பெண்ணின் காரில் ஏறினீங்க. அவளால் உங்களை ஒன்றுமே பண்ண முடியலை., காரணம்? அவள் அரசாங்க அதிகாரியானதால! நான் அப்படியில்லை, நான் என்ன வேணுமானாலும் பண்ணுவேன்."

"அப்படீன்னால்? என்ன பண்ணுவாய்?" சந்தேகத்தோடு கேட்டார்.

"அன்பு--இரக்கம் --தயாதாட்சண்யம் --இப்படிப்பட்ட எதுவுமே என்னிடம் இல்லை. இப்போது நீங்க புதிதாய்ச் சொன்ன பாடப்படி சாட்சி இல்லாவிட்டால் கேசும் இல்லை. அதையே உங்கள் மேல் பயன்படுத்தலாம்னு இருக்கேன்."

"என்னைக் கொல்லுவாயா?"

"கொல்ல  மாட்டேன், உன்னைப்போன்ற அற்பப் பிராணி எதிரியாயிருந்தால் போராட்டம் ரொம்ப ஜோராயிருக்கும். எனக்கு அது பொழுதுபோக்கு! உங்களுக்கு உயிருக்கும் சாவுக்குமிடையே போராட்டம்!"

"நீ யாரோட பேசராய்னு தெரியுமா?"

"இந்த நாட்டின் மிக குரூரமான ஆளோடு. விரைவில் இந்த நாட்டின் தலைவனாகிவிட வேண்டும் என்று தவிக்கும் ஒரு மனிதனோடு. தற்போது எனக்கு முன்னால் உயிரை உள்ளங்கையில் ஏந்திண்டு வந்துண்டிருக்கிற ஆளோடு! பரமானந்த சுவாமி! வீணாய்  என்னோடு தர்க்கத்துக்கு வந்துருக்கீங்க. பலனை அனுபவித்துத் தீருவீங்க." என்று காரை நிறுத்தினான். 

திரும்பித் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சுவாமியின் தலைமேல் பலமாய் ஒரு குத்து விட்டு, "கூட்டத்தில் என்னை அவமானப்படுத்தியதுக்கு இது! இதுக்கு சாட்சி இல்லை." என்றான். சிறிய குன்றின் மேலே இருந்தது கார். கீழே நகரத்து வெளிச்சம் நன்றாகத் தெரிந்தது.

சுவாமியின் முகம் சிவந்தது. அந்தப்பக்கமாய் இறங்கப்போனார். இம்முறை அந்தப்பக்கமாய் வந்து கன்னம் அதிரும்படி அறைந்தான்."இது சின்னப் பையனைக் கொன்றதற்கு. இதுக்கும் சாட்சியில்லை."

சுவாமி சீட்டில் மல்லாந்து விழுந்தார். ஆதித்யன் காரின் கதவை மூடிவிட்டான்.

"உங்க நாலாவது தூண் யாரு? சாதாரண மனுஷனா? இந்த நாட்டு சாதாரண மனுஷன் அவ்வளவு முட்டாளில்லை சுவாமி! அவ்வளவு கோழையுமில்லை, அதை உங்க முன்னாடியே நிரூபித்துவிட்டேன் இப்போது.  

சரி, தெய்வமாவதற்காக நீங்க ஜீவ இம்சை பண்ண மாட்டீங்க இல்லையா? இந்த நாட்டுக் குடிமகன், மனுஷனாய் வாழறதுக்காக உங்களைப்போலக் கயவர்களைப் பொறுமையாய்த் தாங்கிக் கொள்கிறான் பாவம்! வெடித்து விட்டால்....இதோ பார், இப்படி ஆயிடும் உங்க நிலைமை" என்று காரைக் கொஞ்சம் முன்னுக்குத் தள்ளினான். கார் பள்ளத்தாக்கில் இறங்கத் தொடங்கிற்று, சுவாமி உள்ளேயிருந்து கத்திக் கொண்டிருந்தார். கார் கற்களில் மோதித் திரும்பி நழுவி விழுந்துகொண்டே இருந்தது.

"பத்துக் கார் ஃபாக்டரிங்களை வைப்பீங்க இல்லையா சுவாமி? பிழைத்திருந்தால், புதுக் கார் வாங்கிக்குங்க. பெஸ்ட் ஆஃப் லக்."

oooOooo
 
சுசீலா கனக துர்கா என்பவ‌ர் மொழி பெயர்த்து தமிழில் என்டமூரி வீரேந்திர நாத் எழுதிய கதைகள் எழுத்தாளர் சாவி கொடுத்த ஊக்கத்தில் முதலில் சாவி வார இத‌ழிலும், பல புத்தகங்கள் நேரடியாகவே சுடச்சுட வெளி வந்த காலம் ஒன்று உண்டு.

ஆந்திரா வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டே பிரபலமான கதாசிரியராக பரிணமித்தவர் ஒரு கட்டத்தில் வங்கி வேலையை விட்டு விட்டு முழு நேர கதாசிரியராகவும் ஆனார். பல ஆங்கில நாவல்களின் தாக்கதோடு (காப்பியடிப்பது என்பது இன்னொரு பெயர்), உள்ளூர் சமாசாரங்களை மசாலா சேர்த்துத் தாளித்து, கதைகளை, பாத்திரங்களை  உருவாக்கின வேகம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது! இவருடைய கதைகள் தொடர்ந்து திரைப்படமாக எடுக்கப் பட்டன. சிரஞ்சீவி நடித்து பல வெற்றிப்  படங்களும் ஆயின.

இங்கே தமிழில் சுஜாதா ஒருவரைத் தவிர அனேகமாக மற்ற எல்லோருமே ஒரேமாதிரிக் கீற‌ல் விழுந்த ரெகார்ட் மாதிரி எழுதிக் கொண்டிருந்த நேரம் அது. துளசி தளம், மீண்டும் துளசி இந்த இரு கதைகளும் சாவி வார இதழில் தொடராக வந்தபோது, தமிழில் ஒரு புதிய வரவாகவே வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தவர் என்டமூரி என்றால், அது பொய்யில்லை.

நாலாவது தூண்!

ஒரு வழக்கமான முக்கோணக் காதல். கதாநாயகனை நேசிக்கும் பெண் ஒருத்தி, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் அவனுக்குத் தன்னுடைய காதலைச் சொல்கிறாள். கதாநாயகனுக்கோ அது வேறொரு பயந்தாங்குளிப் பெண் சொல்வதாகவே தொடர்ந்து  சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்து விடுகின்றன.பெண்தான் பயந்தாங்குளி. அவள் பாட்டியோ, பேத்தியை எப்படியாவது கதாநாயகனோடு சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று நினைப்பவள்.

இது ஒரு களம்.

ஒரு ஊழல் அரசியல் வாதி, அவனோடு ஊழல் மயமான அரசு இயந்திரம், சாமர்த்தியமுள்ள அடியாள் பலம், சிக்கல்களில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பிக்க உதவும் ஒரு சட்ட நிபுணர்,  இத்தனைக்கும் ஆதார சக்தியாக மூளையுள்ள ஒரு  சாமியார், இவர்களுடைய குற்றக் கூட்டணி இந்திய அரசியலையும் மீறி சர்வதேச அளவில் பரவத்தயாராயிருக்கும்சூழல்,  இதை எதிர்த்துப் போராட முடியாமல் தவிக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி  இவர்களைக் கொண்ட இன்னொரு களம்.

இந்த இரண்டு களங்களையும் ஒன்றிணைத்து, லாவகமாக கதையைப் பின்னியிருக்கும் நேர்த்திக்காகவே என்டமூரிக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்! தீரேந்திர பிரம்மச்சாரிகளும், சந்திரா சுவாமிகளும் இந்திரா காந்தி காலத்தில், ஒரு அதிகார மையங்களாக உருவாகியிருந்த பின்னணியை இவ்வளவு சுவாரசியமான கதையாக மாற்ற முடியும் என்று எவர் தான் ஊகிக்க முடியும்? ஊகிக்க முடிந்தவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்!

அந்தக் கதையில் வரும் சாமியார்,  நான்கு வலுவான தூண்கள் தன்னைத் தாங்கி நிற்பதாகவும், அந்த நான்கு தூண்களைத் தாண்டித் தன்னை எவரும் அசைக்க முடியாது என்று பீற்றிக் கொள்ளும் கட்டங்களில், முதல் மூன்று தூண்கள் இன்னார், இன்னார் என்று சொல்லிவிட்டு, நான்காவது தூண் எதுவென்பதை  கடைசி வரை சஸ்பென்சாகவே வைத்திருப்பதை இந்தக் கதையின் மிக வெற்றிகரமான உத்தியாக இப்போது கூடச் சொல்ல முடியும்!

அதைவிட, அந்த சஸ்பென்ஸ் உடைகிற நேரம், நாலாவது தூண் எது என்பதைக் கதாநாயகனுக்கும், தன்னுடைய விசுவாசமான கூட்டாளிக்கும் பெருமிதத்தோடு உடைத்துச் சொல்வதை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட, அட, ஆமா இல்லே! என்று ஆச்சரியத்தோடு, நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி, அதில் இருக்கும் உண்மையை  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது!

அது என்ன நாலாவது தூண்?

"ஜனங்களுடைய அறியாமை" அது தான் என் பலம்! இவர்களை எளிதில் ஏமாற்றிவிட முடியும், எனக்கெதிராக என்ன செய்ய முனைந்தாலும் அதைத் திசை திருப்பி விட்டு விட முடியும்!அது தான் நான் சொல்லுகிற நாலாவது தூண் என்று கொக்கரிக்கிறான் வில்லன் சாமியார்!

கதாநாயகன், எப்படி வில்லனுடைய ஒவ்வொரு தூணையும் அவனுக்கு எதிராகவே திருப்பி விடுவதில் வெற்றி பெறுகிறான் என்பதும், இந்த "நாலாவது தூணையும்" எப்படி வெல்கிறான் என்பதும் கதை!
 
ஆகரி போராட்டம் என்ற பெயரில் இந்தக் கதை நாகார்ஜுன், ஸ்ரீதேவி, சுகாசினி நடித்துப் படமாகவும் வந்தது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யப் பட்டு வந்ததாக நினைவு.

கொஞ்சம் அரசியலைப் பின்னோக்கிப் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு, இந்தக் கதையில் வரும் பரமானந்த சாமியைப் பார்க்கும்போது, நேற்றைய நாட்களில் தீரேந்திர பிரம்மச்சாரிகளும், சந்திராசாமிகளும் இந்திரா காந்தி காலத்தில் எப்படிக் கொடிகட்டிப் பறக்க முடிந்ததென்பது புரியும்! இங்கே தமிழ் நாட்டில் கூட கழகங்கள் மாறினாலும் கூட குறி சொல்கிறவன், பரிகார யாகங்கள் செய்கிறவன் எல்லாம் கோட்டைக்கு வேண்டியவனாகத் திரிந்ததும்,  நாத்திகமும் பகுத்தறிவும் பேசுவது ஊருக்குத் தான் உபதேசமே தவிர தனக்கில்லை என்றலைந்த அரசியல்வாதிகளைத் தெரிந்து கொள்ளவும்  முடியும்!

இன்னும் கொஞ்சம் கூர்ந்து யோசிக்கத் தெரிந்தவர்களுக்கு............!

நம்முடைய அறியாமை, எதுவும் செய்ய முடியாதவர்களாக ஊமைச் சனங்களாகவே குறுகிப் போய் நின்று விடுகிற கோழைத்தனம் தான், இங்கே அரசியல்வாதிகள் நம்மை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே வருகிற நாலாவது தூணாக இருக்கிறது என்பதும் புரியும்!



Saturday, June 12, 2010

ராபர்ட் லட்லம்..! The Hades Factor..! வெறும் கற்பனை தானா....?

ராபர்ட் லட்லமின் The Hades Factor கதை, மூன்று ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத, வெவ்வேறு இடங்களில் நடந்த மரணங்கள், அதைத் தொடர்ந்து எழும் கேள்விகளில் இருந்து தொடங்குகிறது.

சவப் பரிசோதனையில், அதுவரை அடையாளம் காணப் படாத ஒரு வைரசின் தாக்குதல் இருப்பதாகத் தெரிய வரவும், பிரச்சினை என்ன என்பதை ஆராய்வதற்காக  The U.S. Medical Research  Institute for Infectious Diseases(USAMRIID) மற்றும் Center for Disease Control(CDC)  என்ற இரண்டு அமைப்புக்களுக்கும் இறந்தவர்களுடைய உடலில் இருந்து எடுக்கப் பட்ட சாம்பிள் அனுப்பிவைக்கப் படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் தொற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவில் (USAMRIID) பணியாற்றும் லெப்டினன்ட் கர்னல்  டாக்டர் ஜோனாதன் ஸ்மித் லண்டனில் ஒரு மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, நாடு திரும்பி தன்னுடன் பணிபுரியும், தன்னுடன் காதலி சோபியா ரஸ்ஸலைச் சந்திப்பதை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் தருணத்தில், ஜோனாதன் ஸ்மித்தின் பால்ய  நண்பன் பில்லிடமிருந்து. லண்டனின்  ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் சந்திக்க வருமாறு சங்கேதச் செய்தி வருகிறது. சந்திக்கும்போது, ஸ்மித், மற்றும் சோபியாவின் உயிருக்குப் பெரும்  ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக அமெரிக்கா திரும்பி, சோபியாவையும் காப்பாற்றிக் கொள்ளுமாறு அந்த நண்பன் சொல்லிவிட்டு ஸ்மித் என்ன ஏது என்று கேட்கும் முன்னரே, தன்னுடன் அழைத்து வந்திருந்த நாயுடன் மறைந்து விடுகிறார்.

என்ன ஏது என்று புரியாமல் ஸ்மித் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்புகிற வழியில் அவரைத் தீர்த்துக் கட்ட ஒரு முயற்சி நடக்கிறது.  அவரைக் கொல்ல முயற்சி செய்தவர்களில் ஒருவனைக் கொன்றுவிட்டு ஸ்மித் தப்பித்துவிடுகிறார், ஃபோர்ட் டெட்ரிக்கில் இருக்கும் USAMRIID ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் தனது காதலியைக் காப்பாற்ற ஸ்மித் விரைகிறார்.

இங்கே லண்டனில் ஸ்மித்தைக் கொலை செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் அதே நேரம், அங்கே ஆராய்ச்சி மையத்தில் டாக்டர் சோபியா ரஸ்ஸல், அந்த இனம் தெரியாத வைரசை அடையாளம் காணும் முயற்சியில் தீவீரமாக இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னால், சோபியாவும் இன்னும் சில மருத்துவர்களும் பெரு நாட்டுக்குச் சென்றிருந்த தருணத்தில், அதே மாதிரி சிம்ப்டங்களுடன் பாதிக்கப் பட்ட உள்ளூர் மக்கள், ஒரு வகைக் குரங்கின் ரத்தத்தை மருந்தாக எடுத்துக் கொண்ட போது நோயில் இருந்து விடுபட்டதாகக் கேள்விப்பட்டது திடீரென நினைவுக்கு வருகிறது. அப்போது, அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த டாக்டர் விக்டர் ட்ரேமான்ட்  என்ற விஞ்ஞானியைச் சந்தித்ததும், குரங்கு ரத்தத்தில் இருந்த ஒருவகை ஆண்டி பாடீஸ் தான் அதற்கு மருந்தாக இருக்க வேண்டுமென்றும் பேசியது நினைவு வரவே,அவரைத் தொடர்பு கொள்ள முயற்ச்சிக்கிறாள். அந்த முயற்சியே, அவளது உயிரைக் கொள்ளை கொண்டுபோகும் என்பதையோ, காதலன் ஜோனாதன் ஸ்மித்துடைய உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை அறியாதவளாக!

ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் என்ற புகழ் பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உபதலைவராக  இருக்கும் விக்டர்  ட்ரேமான்ட், சோபியாவுடன் பேசுகையில் தனக்கு எதுவும் நினைவு இல்லை என்று மறுத்தாலும், டாக்டர் சோபியாவின் ஞாபக சக்தியைக் கண்டு கலக்கமுறுகிறார். தீர்த்துக் கட்டுவதைத் தவிர வேறு வழியே இல்லை! நாடல் ஹசன் என்ற தேர்ந்த கொலையாளியிடம் சோபியாவையும், ஸ்மித்தையும் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஃபோர்ட் டெட்ரிக்கின் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, சோபியாவுக்கு ஆராய்ச்சிக் கூடத்திலேயே, அந்த கொடும் வைரஸ் ஊசி வழியாகச் செலுத்தப் பட்டு ஒரு விபத்து மாதிரி செட்டப் செய்யப் படுகிறது. சோபியாவின் தொலைபேசி உரையாடல்கள், ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எல்லாமே சுத்தமாக அழிக்கப் படுகிறது.

நோயின் தாக்கத்தோடு வீடு திரும்பும் ஜோனாதன் ஸ்மித் மருத்துவ மனையில் சேர்த்தும், அந்த இனம் தெரியாத வைரஸ் அவளது உயிரைக் கொள்ளை கொள்கிறது. காதலியை  இழந்த சோகத்தில், திசை தெரியாமல் தடுமாறும் ஸ்மித்துக்கு, சவப்பரிசோதனையில், சோபியாவின் உடலில் ஊசி போடப்பட்ட இடம் அது கொலை தான் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது. தன்னுடைய மேலதிகாரி ஜெனரல் கீல்பர்கரிடம், தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் சொல்லி, ஸ்மித் சோபியாவின் மரணத்துக்குப் பழிவாங்கியே தீரவேண்டும் என்று அனுமதி கோருகிறார். ஆனால், அனுமதி கொடுப்பதற்கு முன்னாலேயே கீல்பர்கரும், அந்த வைரசுக்குப் பலியாகிறார். அது கொலை தானென்றும், அதை செய்தது ஸ்மித் தானென்றும் வேட்டையாடப் படுகிற நிலைக்கு ஸ்மித் தள்ளப் படுகிறார்.   

பீட்டர் ஹோவெல், மார்டிஜெல்லர் பாக் என்ற இரண்டு நண்பர்களுடைய உதவியோடு ஜோனாதன் ஸ்மித், இந்த வைரஸ் கோளாறு ஈராக்கில் பரிசோதிக்கப் பட்டதென்பதை அறிகிறார். ரகசியமாக ஈராக்கிற்குப் பயணமாகிறார். சி ஐ ஏ அதிகாரியாக பணியாற்றும் சோபியாவின் சகோதரி ராண்டி ரஸ்ஸலை எதிர்பாராத விதமாக அங்கே சந்திக்க நேரிடுகிறது. சோபியாவின் மரணத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் ராண்டி கோபப்படுகிறாள். பிறகு சேர்ந்து செயல்படுகிறாள். தேவையான விவரங்களைத் தெரிந்து கொண்டு ஸ்மித் அமெரிக்காவுக்குத் திருபுவதற்குள், உலகின் பல பகுதிகளிலும் ஒரு இனம் தெரியாத வைரஸ் தாக்குதலுக்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகிறார்கள்.

அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தாக்குதல் ஆரம்பிக்கலாம் என்ற நிலையில், இதற்கான மருந்தை ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் வேறு ஒரு ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருந்தபோது தற்செயலாக இந்த வைரஸ் தாக்குதலுக்கும்நிவாரணமாக  இருப்பதைக் கண்டறிந்ததாகவும், அமெரிக்க அரசு ஆர்டர் கொடுத்தால் லட்சக் கணக்கான தடுப்பு ஊசி  மருந்தைத் தயாரிக்கும் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது. அமெரிக்க மக்களைக் காப்பதற்காக, கோடிக்கணக்கான டாலர்களைக் கொடுத்து அமெரிக்க அரசு இந்த மருந்துகளை வாங்க ஆர்டர் கொடுக்கிறது. அத்தோடு விடாமல், இந்த மருந்தைக் கண்டுபிடித்ததற்காக, டாக்டர் விக்டர் ட்ரேமான்ட்டிற்கு, அமெரிக்க அதிபரே நேரடியாக சுதந்திரத்திற்கான பதக்கம் என்ற உயர்ந்த விருதை வழங்கி கௌரவப் படுத்துவதற்கும்  ஏற்பாடாகிறது.

கதையின் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழும் தருணங்கள் மிக சுவாரசியமாகக் கையாளப் பட்டிருக்கின்றன.

பெருவில் ஏற்படும் ஒருவிதமான காய்ச்சலுக்கு, மருந்தாக ஒருவகைக் குரங்கின் ரத்தத்தில் இருக்கும் ஆண்டிபாடீஸ் பயன்படுவதைக் கண்டறியும் டாக்டர் ட்ரேமான்ட், நோயை உண்டாக்கும் காரணியையும், நோயைக் குணப்படுத்து
ம் ஆண்டி பாடீசையும் தயாரித்து, நோயை பரப்பி அதற்குப் பிறகு அதற்கு மருந்தையும் கண்டுபிடித்துக் கோடிக்கணக்கில் காசாக்குகிற சதியை ஹேட்ஸ் ப்ராஜக்ட் என்ற பெயரில், அமெரிக்க அரசின் மிகப் பெரிய பதவியில் இருப்பவர்களுடைய கூட்டணியோடு உருவாக்குகிறார். ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் என்ற பழமையான நிறுவனத்தின் உரிமையாளருக்குத் தெரியாமலேயே, மிக நவீனமான ஆய்வுக் கூடம், மருந்து தயாரிப்பு எல்லாம் நடக்கின்றன.

நோயை உருவாக்கும் வைரஸ்,  குறிப்பிட்ட சிலருக்கு மருத்துவ உதவி என்ற பெயரில் செலுத்தப் படுகிறது. மாற்று மருந்து ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப் பட்டு, மருந்து சரியாக வேலை செய்கிறது என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. மற்றவர்கள், பெரும் அவஸ்தையுடன், இன்னதென்று நிர்ணயிக்கமுடியாத காரணத்தால் சாக விடப் படுகிறார்கள். நோயை உருவாக்குவதற்காக  ஆண்டிபயாடிக்ஸ் மருந்து என்ற போர்வையில், நோயைப் பரப்பும் மருந்துகள் ஏராளமாக சந்தையில் விடப் படுவதும், சரியான விலை கிடைத்ததும் மாற்று மருந்தும் கிடைக்கச் செய்வதுமான மருந்துத் தயாரிப்பு  நிறுவனத்தின் சதி மோசடி இப்படியாக அம்பலமேறுகிறது.

கதாநாயகன் ஜோனாதன் ஸ்மித், ஈராக்கில் இருந்து திரும்புகிற சமயம், அவரது நண்பர்களில் ஒருவரான மார்டி எதிரிகளிடம் சிக்கிவிடுகிறார். ஆரம்பத்தில் அவரை எச்சரித்த பால்ய நண்பர் பில், இந்த சதிகாரர்களுடைய கூட்டத்தில் ஒருவர் என்பதும், தன்னுடைய நண்பனைக் காப்பாற்ற முயற்சிப்பது தெரிந்த நிலையில் அவரை வைத்தே ஸ்மித்தை வலையில் சிக்க வைக்கிற முயற்சியும் நடக்கிறது. நண்பனைக் காப்பாற்றுகிற முயற்சியில் பில் தன்னுடைய உயிரைக் கொடுக்கிறார். அதற்குப் பிறகு, ஜோனாதன் ஸ்மித் எதிரிகளை எப்படி சமாளிக்கிறார் என்பது விறுவிறுப்பான க்ளைமாக்சில் வந்து முடிகிறது.


துறை சார்ந்த புதினமாக ராபர்ட் லட்லம், இன்னொரு எழுத்தாளருடன் சேர்ந்து எழுதிய கவர்ட் ஒன் தொடர் புதினங்களாக எழுதியதில் இது முதலாவது! இதற்கடுத்த கதைகள் எல்லாம் 2001 இல் ராபர்ட் லட்லம் மரணமடைந்த பிறகு, அவர் எழுதி வைத்திருந்த குறிப்புக்களின் அடிப்படையில் இன்னொரு எழுத்தாளரும் சேந்து எழுதி வெளிவந்தவை என்பது தகவல் தான்.

இந்தக் கதைகளில் முக்கியமாக, ஒரு விஷயம் எப்படி நடக்கிறது என்பதை விட அது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்பதில் தான் மனிதனின் கவனம் இயல்பாக இருக்கிறத் தன்மை வெளிப்படுவதைப் பார்க்கலாம். இந்த முதல் கதை அமெரிக்காவில்  கவர்ட் ஒன் என்ற ரகசிய அமைப்பு ஏற்படுத்தப் படுவதன் பின்புலமாக இருக்கிறது. இந்த அமைப்பு, கதாநாயகனுக்கு இதில் எதனால் ஒரு பிடிப்பு அல்லது லட்சிய வெறி ஏற்படுகிறது என்பதை, இந்தக் கதையில், கதாநாயகனுக்கு ஏற்படும் சொந்த இழப்பு வலுவான மோடிவாக  ஆரம்பித்து, தன் உயிரையே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய  சர்வைவல்,அப்புறம் இப்படியெல்லாம் அலைய, அழ வைக்கிறவர்களின் மீது வருகிற கோபம் என்று நாடகத்தனமான லாஜிக்குடன் கதை நகர்கிறது.

இப்படி நாடகத்தனமான லாஜிக் இருந்தால் தான் ஜனங்களிடம் இன்றைக்கு எடுபடுகிறது என்பது தான் மிகப் பெரிய சோகம்!

ராபின் குக் எழுதிய சுரம் புதினத்தில் இருந்த பலவீனம் இது தான்! ஊர்க் குளத்தில் ரசாயனக் கழிவைக் கொட்டிய நிறுவனம் வேண்டுமென்றே கான்சர் நோயைப் பரப்புவதற்காக அதைச் செய்யவில்லை என்று தானே சாதாரணமாகப் படிப்பவருக்குத் தோன்றும்! ராபர்ட் லட்லமின் இந்தக் கதையை எடுத்துக் கொள்ளுங்கள்! கதாநாயகனுடைய சொந்த இழப்பு இங்கே மிகப் பலமான மோடிவாக இருக்கிறது.

போபால் விஷவாயு வழக்கில் கூட நடந்த படுகொலையை நீதிமன்றம் திட்டமிட்ட படுகொலை அல்லது, அங்கே ஜனங்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்ததும், லட்சக் கணக்கானோர் பாதிக்கப் பட்டிருப்பது கண்கூடாக இருந்த போதிலும், சட்டம் அதைக் கொலையாகவோ, ஒரு பெரும் குற்றமாகவோ  பார்க்க முடியவில்லை என்பது தெரியும் தானே!

நாம் கூட அந்த நீதிபதியைப் போல, இவ்வளவுபேர் மடிந்த விவகாரத்தை செய்தித் தாளின் ஒரு ஓரத்தில் நாலைந்து நாட்களுக்கு வந்து அப்புறம் மறந்து போய் விடுகிற சமாசாரமாகத் தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம், இல்லையா!



Tuesday, May 25, 2010

நாட்டிய தாரா! ஒரு காதல் கதைக்குள் இன்னொரு காதல் கதை!


பொதுவாகக் கலைஞர்களே எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் தான்! உணர்ச்சி வசப்படும்போது விளிம்பு நிலைக்கே போய் விடக் கூடியவர்கள் தான்!
 
வெவ்வேறு கலைகளில் ஆர்வமுள்ள இருவர் காதலில் ஒன்று சேர்கிறார்கள். ஆனால் உணர்ச்சிகள் அவர்களை வெகு தூரத்துக்கு விலக்கி வைக்கின்றன. சந்தியா தேவி! சங்கீதத்தில் புகழ் பெற்றவள்! ஆனாலும் சொந்த வாழ்வில் இழக்கக் கூடாத ஒன்றை இழந்து விட்ட சோகத்தின் தனிமையுடன் வெளி நாட்டில் இருந்து இந்தியாவுக்குத் திரும்புகிறாள். கூடவே அவளது வளர்ப்பு மகனும்!  

வெளியே யாருக்கும் திவாகர் அவளது வளர்ப்பு மகன் தான் என்பது தெரியாது. தான் இறப்பதற்குள் இருக்கிற ஒன்றையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு! அது அவளுடைய மகன்! வெளிநாடு செல்லும்போது, இடைஞ்சலாக இருக்கக் கூடாதென்று சிநேகிதியின் பொறுப்பில் விட்டு விட்டுப் போன மகன்!
 
திவாகருக்கோ, சந்தியா தேவி தன் தாய்க்குச் செய்த துரோகத்திற்கு, அவளை அனலில் வாட்டி எடுக்க வேண்டும் என்ற வெறி! தன்னுடைய தகப்பனைக் கைக்குள் போட்டுக் கொண்டு, இரண்டாவது திருமணமும் செய்து கொண்ட இந்தப் பெண்மணியால் தான் தன்னுடைய தாய் மனம் முறிந்து இறந்துபோனாள் என்கிற வெறி. அதே நேரம், அவளுடைய சொத்துக்களை என்னவோ செய்து, கைக்கெட்டாத தூரத்தில் வைத்திருக்கிறாள், அதையும் கைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்கிற எண்ணம்! சந்தியா தேவி எவ்வளவோ தன்மையாகச் சொல்லிப் பார்த்தும் விரியன் பாம்பாக விஷத்தை மட்டுமே கக்குகிற ஜாதி!
 
இந்துமதி, சந்தியா தேவியின் சிநேகிதி! சந்தியா தேவியின் மகனுக்கு இந்துமதியின் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக எப்போதோ முடிவு செய்திருந்தார்கள்! இந்துமதி, பெரும் செலவாளி! போதாக்குறைக்கு அரசியலிலும் ஈடுபட்டுப் பெரிய தலைவியாகி விடவேண்டுமென்ற கனவும் உண்டு. ஒரே மகள் சுபா என்ற சுபாங்கி! பெரிய நாட்டியத் தாரகையாக்கி விடவேண்டும் என்ற ஆசை! திவாகருக்குத் திருமணம் செய்து வைத்து விட்டால் பணம் பணத்தோடு சேர்ந்து பெரிதாகிவிடும்!
 
சினேகிதிகள் தனியாகச் சந்திக்கிற தருணம் ஒன்று வருகிறது. சந்தியா தேவியின் சோகம் என்னவென்று கொஞ்சம் கொஞ்சமாக கதைக் களம் விரிகிறது. இந்துமதியின் பொறுப்பில் விட்டு விட்டுப் போன உண்மையான மகன் என்ன ஆனான்?  

அவனுக்காக அனுப்பிய பணத்தையெல்லாம், இந்துமதி தன்னுடைய சொந்த உபயோகத்திற்கே எடுத்துக் கொண்டாள் என்பது தெரிந்தும், சுபாங்கிக்காகக் கொடுத்ததாக வைத்துக் கொள் என்று சொன்னவள், இப்போது சுபாங்கியைத் திவாகருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்கிறாள். இந்துமதிக்கு, திவாகர் சந்தியா தேவியின் உண்மையான மகன் அல்ல என்பது தெரியும். தெரிந்துமே, சுபாங்கியைத் திவாகருடன் பழக விட்டு, அவன் தான் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் என்ற எண்ணத்தை மகள் மனத்தில் விதைத்தாயிற்று. இப்போது வேண்டாமென்றால்...?
 

வளர்ப்புமகனின் சாமர்த்தியமான வலையில் சிக்கிக் கொண்டு சந்தியா தேவி மறுகுகிறாள். சினேகிதியோ, சொல்வதைக் காத்து கொடுத்துக் கேட்க மாட்டேன் என்கிறாள். பிறந்த மகனோ, தாயின் முகத்தைப் பார்க்கக் கூட விருப்பமில்லாமல், ஒரு குக்கிராமத்தில் அப்பன் வழித் தாத்தா, அத்தை இவர்களே போதுமென்று, ரகசியமாகத் தாய் டிரைவர் வழியாகக் கொடுத்தனுப்பும் கடிதங்களை உதாசீனப் படுத்திக்கொண்டிருக்கிறான்.
 

திவாகர், சுபாங்கியை இந்துமதியின் பிடியில் இருந்து, தன்னுடைய முழுக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர சாமர்த்தியமாகக் காய் நகர்த்துகிறான். சுபாங்கி பெரிய நாட்டிய தாரகையாக வேண்டுமென்று திவாகர் மிகவும் அக்கறை இருப்பது போலக் காட்டிக் கொள்ள நாட்டிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறான். அப்படி அதிக டாம்பீகமாக நடத்தும் முதல் நிகழ்ச்சியிலேயே அரங்கத்தின் கொள்ளளவுக்கு மேலேயே டிக்கெட்டை விற்று விட்டு, காசுகொடுத்து டிக்கெட் வாங்கின ஜனங்கள் எல்லாம் வெளியே நிற்கும் நிலை, கோபாவேசமான கொந்தளிப்பை உருவாக்குகிறது. ஜனங்களின் கோபத்தில் இருந்து ராஜா என்ற இளைஞன் அவளைக் காப்பாற்றுகிறான். நாட்டியக் குழுவில் பதம் பாடும் பெண் ஜானகியின் கணவன் கோபாலனும் ராஜாவும் சிநேகிதர்கள். அவர்கள் வற்புறுத்தலின் பேரிலேயே ராஜா அந்த நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க வந்தான் என்பதை சுபா பிறகு தெரிந்து கொள்கிறாள்.
 

திவாகருடைய வலை விரிவாகிறது.சுபாங்கியும் அவளது குழுவும் வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடுகிறான். சந்தர்ப்பம் கிடைக்கும் தருணங்களில் எல்லாம், தனக்கும் சுபாங்கிக்கும் திருமணம் நடக்க இருப்பதைப் பத்திரிகையாளர்களிடம், சுபாங்கியையே சொல்ல வைக்கிறான். இந்துமதிக்கு, திவாகர் செய்வது எல்லாமே மகளை சாமர்த்தியமாகத் தன்னிடமிருந்து பிரிப்பது தான் என்பது ஒருவாறாகப் புரிய வருகிறது.
 
மகள் மீதிருந்த பிடிமானத்தை, திவாகர் இப்படி அதிரடியாகக் கைக் கொள்ள முயற்சிப்பது இந்துமதிக்குப் பிடிக்கவில்லை. போதாக் குறைக்கு ஒரு மொட்டைக் கடிதம் வேறு திவாகரைப் பற்றி என்னென்னமோ சொல்லி... ! திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று காரில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது எழும் வாக்கு வாதத்தில் மகளை எச்சரிக்கிறாள்.  

எப்போதுமே அம்மா பேச்சை மீறாத சுபாங்கி எரிச்சல் அடைகிறாள். நீயாகத் தானே இவனைத் தான் நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய், அவனுடன் சினிமாவுக்குப் போ அங்கே போ இங்கே போ என்றெல்லாம் சொல்லிவிட்டு இப்போது அவன் அயோக்கியன் திருமணம் வேண்டாம் நிறுத்திவிடுவேன் என்றால் என்ன அர்த்தம்? நீ சாவி கொடுக்கும்போதெல்லாம் ஆட வேண்டிய பொம்மையா நான் என்று தாயிடம் குமுறுகிறாள். பயணம் செய்து கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகிறது. தாய், தந்தை இருவரும் விபத்தில் உயிரிழக்க, சுபாங்கி மட்டும் கால் முறிந்து உயிர் தப்புகிறாள்.
 
தாய் தகப்பன் இருவரும் இறந்தபிறகுதான், இந்துமதி எவ்வளவு பெரிய கடனாளியாக இருந்திருக்கிறாள் என்பது சுபாங்கிக்குத் தெரிய வருகிறது. எனக்கு எந்த சம்பந்தமுமில்லை என்று சொல்லிவிடு, கடன்காரர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறான் திவாகர். என்ன இருந்தாலும் என் தாய் என் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவள், செய்ததெல்லாம் எனக்காகவே, அதனால் கடனை அடைக்க வேண்டியதும் நானே என்கிறாள் சுபாங்கி! நாட்டிய நிகழ்ச்சி நடத்தக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றவர்கள் கடனை அடைத்து விடுவேன் என்று மறுத்து விடுகிறாள்..கால் முறிந்த நிலையில், அவளால் இனிமேல் நாட்டியம் ஆடவே முடியாது என்பதை அறியாதவளாக!
 
சொத்துமில்லை, ஆடிச் சம்பாதித்துக் கொடுக்கக் கால்களும் இல்லை! இனிமேலும் சுபாங்கியைக் கட்டியழ திவாகருக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? அவளை உறவுக்காரர்களிடம் தள்ளி விட்டு, வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு வேறு ஒரு நாட்டியக் காரியை ஏற்பாடு செய்துகொண்டு போய்விடுகிறான். உறவினர் வீட்டில் சுபாங்கி உதாசீனப்படுத்தப் படுகிறாள். ஆனாலும், திவாகரின் சுயரூபத்தை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
 
ஜானகியின் மூலம் நடந்ததைத் தெரிந்துகொள்ளும் ராஜா, சுபாங்கியைத் தன்னுடைய கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறான். பாசமுள்ள மனிதர்களைக் கொண்ட அந்த கிராமத்தில், சுபாங்கிக்குப் புதியதோர் உலகத்தின் தரிசனம் கிடைக்கிறது. ராஜா அவளிடம் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், நெருங்கிப் போனாலோ மிதியுண்ட நாகம் போல அவளிடமிருந்து விலகிப் போவதும்!  

என்னவென்று சொல்ல முடியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அவன் வசம் ஈர்க்கப் படுவதைப் புரிந்துகொள்கிறாள். விட்ட குறை, தொட்ட குறை என்பது போலத் தான்! இந்த கிராமத்தில் உள்ள அத்தனை பேருக்கும் அவள் அம்மாவைப் பற்றி, அவளைப் பற்றித் தெரிந்திருக்கிறது! ஆனாலும் எவரும் எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்!
 
கிராமத்து வைத்தியம், அன்பான மனிதர்கள், ராஜா கொடுக்கும் தன்னம்பிக்கை எல்லாம் சேர்ந்து சுபாங்கியின் கால்களைக் குணப் படுத்துகிறது. அணியவே முடியாதோ என்று மறந்துபோன சலங்கைகளைக் கட்டிக் கொண்டு ஆடும் திறமும் திரும்புகிறது! கூடவே திவாகரும்!
 
அப்புறம் கதை எப்படி அதிரடித் திருப்பங்களோடு முடிகிறது என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்களேன்!
 
கதைக்குள் கதை என்று சொன்னேன் அல்லவா? இந்தக் கதைக்குள் இரண்டு காதல் கதைகள்! சந்தியா தேவி-தேவி பிரசாத் ஒருவர் சங்கீதத்திலும், மற்றொருத்தர் ஓவியம், சிற்ப வேலைகளிலும் கலைஞர்கள்! காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற போதிலுமே கூட, இருவருடைய குடும்பச் சூழ்நிலைகளும் வெவ்வேறாக, உணர்ச்சிவசப்பட வைத்து உறவையும் சுனாமி மாதிரிப் புரட்டிப் போட்டு விட, ஆண் தற்கொலை செய்து கொள்கிறான்.

ஆசையாய்ப் பிறந்த மகன் தாயிடம் ஓட்ட முடியாத சூழ்நிலை உருவாகிறது. தன்னிடம் செயலாளராக இருந்தவரையே மறுமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்குப் போய் சங்கீதத்தில் புகழ் பெற்றவளாகத் தாய் அங்கே! ஆசையாய்ப் பிறந்த மகன், சிநேகிதியின் பொறுப்பில்! சினேகிதியோ, பொறுப்பில்லாமல், தாய்க்காக ஏங்கித் தவிக்கும் பிள்ளையைப் புறக்கணிக்கிறாள். தந்தை வழிப் பாட்டன் பிள்ளையை எடுத்துச் செல்கிறார். அங்கே கிராமத்தில் வளரும் இளைஞன், திறமை சாலியாக இருக்கிறான். மிகவும் ரோஷக் காரனாகவும் இருக்கிறான். புறக்கணித்து விட்டுப் போன தாய், எவ்வளவோ மன்றாடியும், அவளைப் பார்க்க விருப்பமில்லை என்று நிராகரிக்கிறான்.
 
தோல்வியில் முடிந்த காதலில் பிறந்த பிள்ளை! அவனுக்கும் காதல் வருகிறது! ஆனால் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான். ஒரு சிறு குறிப்புத் தெரிந்தால் கூடப் போதும்! அந்தப் பெண் அவன் வாழ்க்கையில் பிரிக்க முடியாதவளாகி விடுவாள்!  

ஆனால் இரண்டு பேருடைய சுய கவுரவம், ரோஷம் குறுக்குச் சுவராக இருக்கிறது! குறுக்குச் சுவராக இருந்து கொண்டே இருவருடைய ஆத்மார்த்தமான காதலையும் வளர்த்தும் கொண்டிருக்கிறது.
காதலில் பெண் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது மிகவும் தாமதமாகத் தான் என்றாலுமே கூட, பெண் தான் காதலை வெளிப்படுத்துவதில் உறுதியுடனுமிருக்கிறாள்! 

இங்கே கதைக்குள் கதையாக, காதலுக்குள் காதலாக வெளிப்படும் வெளிப்படும் இரண்டு கதைகளில் முதலாவதில், பெண் தான் தேடியது என்ன, எது பிரதானம் என்பதில் தெளிவில்லாமல் இருந்ததால் தோல்வியும் சோகத்தையுமே சந்திக்கிறாள்.
 
இரண்டாவதிலோ, சுபாங்கி என்ற வெகுளிப் பெண்ணுக்கு முதலில் தன்னுடைய உலகம், தன்னுடைய தேவை எதுவென்று ஆரம்பத்தில் தெரிந்து கொள்ளாமல், அம்மா சொல்வது சரி என்று இருந்த நிலையில் இருந்து விடுபட்ட தருணத்தில், தன்னுடைய உலகத்தைக் கண்டு கொண்ட தருணத்திலேயே, அவளுடைய காதல் உறுதியாகிறது! அவளுடைய அந்த உறுதி தான், அவளுடைய காதலை ஜெயிக்க வைக்கிறது!

எண்டமூரி வீரேந்திர நாத்! அடுத்த வீடான தெலுங்கு தேசத்தின் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்! கதை சொல்வதில், கதைக்களம், கதாபாத்திரங்களை உருவாக்குவதில், ஒவ்வொரு அத்தியாயத்திலும் வித்தியாசமான திருப்பங்களை வைத்து, அந்தத் திருப்பங்களிலேயே அதிரடித் திருப்பமாக, நாம் எதிர்பார்க்காத திசையில் நகர்த்திச் செல்வதில் வல்லவர். அதிரடி,ஆக்ஷன் கதைகளில் மட்டுமில்லை, சாதாரணமான காதல் கதைகளில் கூட இந்தத் திறமை பளிச்சிடுவதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்!
நீங்களும் படித்துத் தான் பாருங்களேன்!
 
நாட்டிய தாரா 

எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழில்: சுசீலா கனக துர்கா
 

நர்மதா பதிப்பக வெளியீடாக
முதற்பதிப்பு வந்த வருடம் நவம்பர் 1994

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)