புத்தகங்கள், வாசிப்பு அனுபவத்தைப் பேசுவதற்காக ஆரம்பித்த வலைப்பூ இது. ஜோதிபாசு முதல்வராக இருந்த மேற்குவங்கம், கம்யூனிசத்தின் பொன்னுலகம் என்று வர்ணிக்கப்பட்ட காலத்தில் நடந்த கொடூரமான மரிச்சபி தீவுப் படுகொலைகளைப் பற்றி இதுநாள் வரை கள்ளமௌனம் சாதித்துவந்த மார்க்சிஸ்டுகளின் முகத்திரையைக் கிழிக்கும் ஒரு புத்தகம் வெளிவந்து இருக்கிறது.
Blood Island : Oral History of Marichjapi massacare.
கம்யூனிஸ பொன்னுலகம் : மரிச்சபி படுகொலையில் தப்பியவர்களின் பதைபதைக்கும் வாக்குமூலம்.
ஆசிரியர் : தீப் ஹல்தர் ஹார்ப்பர் காலின்ஸ் வெளியீடு.
பங்களாதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு விரட்டியடிக்கப்பட்ட இந்துக்கள் (பெரும்பாலும் பட்டியல் ஜாதியினர்) மேற்கு வங்காள கம்யூஸ வேட்டைநாய்களால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வரலாறின் ஆவணம்.
இப்போதைய அகதிகள் குடியுரிமை தொடர்பான கலவரங்களின் பின்னால் இடதுசாரிகளே இருப்பதாக பிரதமர் சொன்னபோது, நாங்கள் பின்னாலெல்லாம் இல்லை முன்னால் இருந்துதான் வழிநடத்துகிறோம் என்று தெனாவெட்டாக பதில் சொல்லியிருந்தனர்.
இதில் இருக்கும் உண்மையைவிட மரிச்சபி தீவில் பங்களாதேஷ இந்து அகதிகளை பாலியல் பலாத்காரம், சொத்துகளைச் சூறையாடுதல், படுகொலை செய்தல் என செய்ததில் உண்மையிலேயே இடதுசாரிகள்தான் முன்னணியில் இருந்தனர்.
மேற்கு வங்க இடதுசாரி அரசின் உத்தரவின் பேரிலேயே அவர்களுடைய காவல்துறையினர்தான் இந்தக் கோர நடனத்தைப் புரிந்திருந்தனர்.
சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியல் ஜாதியினர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான குடிசைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
பங்களாதேச முஸ்லீம் அடிப்படைவாதிகளால் அடித்து விரட்டப்பட்ட பட்டியல் ஜாதியினரில் இந்தியாவுக்கு உயிர் தப்பி வந்து மரிச்சபி தீவில் குடியேறியவர்களை கம்யூனிஸ அரசு கொன்று குவித்தது; விரட்டியடித்தது. அந்தத் தீவின் மரங்கள், செடிகள், மீன்கள், விலங்குகள் ஆகியவற்றைக் 'காப்பாற்றுவதற்காக' அங்கு வாழத் தொடங்கியிருந்த பட்டியல் ஜாதியினரின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியது கம்யூனிஸ அரசு.
அந்தப் படுகொலையில் தப்பியவர்களின் நேரடி வாக்குமூலங்கள், பேட்டிகளின் தொகுப்பே இந்த நூல்.இடதுசாரி எக்கோ சிஸ்டம் எவ்வளவு வலிமையானது என்பதற்கான முகத்தில் அறையும் படியான உதாரணம் இந்த மரிச்சபி – பட்டியல் ஜாதி மக்கள் படுகொலை.
இதைப் பற்றி இதுவரை ஒரு புத்தகமோ, ஆவணப்படமோ எந்தவொன்றும் வெளிவராமல் மிகத் தெளிவாக கொடூரமாக இதுவரை நடந்துகொண்டிருக்கிறார்கள். அறிவுஜீவிகளின் கள்ள மவுனம் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதன் உதாரணம் இது. நடுநிலையாளர்கள் கூட யாருமே இதுபற்றி எங்கும் பெரிதாகப் பேசிப் பார்த்திருக்க முடியாது.
அந்தப் படுகொலைகள் நடந்து 40க்கும் அதிகமான ஆண்டுகள் கழித்து முதன் முதலாக இந்தப் படுகொலை பற்றி ஒரு ஆவணப் புத்தகம் அதுவும் மிகக் குறைவான பக்கங்களே கொண்ட ஒரு புத்தகம் வெளிவர அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இத்தனைக்கும் மேற்குவங்கத்தில் இடதுசாரிக் கட்சிகள் எதிர்கட்சியாக இருந்த 1960-70களின் காலகட்டத்தில் பங்களாதேச இந்து அகதிகளுக்கு அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் அரசு வெகு தொலைவில் பிஹார்-ஒரிஸாவின் தண்டகாரண்ய பகுதியில் வாழிடம் அமைத்துக் கொடுத்தது. மேற்குவங்காளத்திலேயே அவர்களுக்கு வாழ வழி செய்து தரவேண்டும் என்று பேசியிருக்கிறார்கள் இடதுசாரிகள்.
ஐந்து லட்சம் வங்காளிகள் பத்து லட்சம் கரங்களுடன் உங்களை வரவேற்போம் என்று பேசியிருக்கிறார்கள். தொடர்ந்து வென்றுகொண்டே இருந்த ஜோதிபாசு பல பொதுக்கூட்டங்களில் மேற்கு வங்காளத்திலேயே இந்து பட்டியல் ஜாதி அகதிகளுக்கு வாழ வழி செய்துதரப்படும் என்று சொல்லியிருக்கிறார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் தண்டகாரண்யப் பகுதிக்குச் சென்று அங்கிருந்த அகதிகள் மத்தியில் அந்த வாக்குறுதியைத் தந்திருக்கிறார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் கம்யூனிஸ்ட்களின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது.
பங்களாதேசத்தில் இருந்து இஸ்லாமிய வன்முறையாளர்களால் விரட்டியடிக்கப்பட்ட பட்டியல் ஜாதியினருக்கு தண்டகாரண்யப் பகுதியில் வாழ்வது மிகவும் சிரமமாகவே இருந்திருக்கிறது. கடும் கோடை, வறண்ட நிலம், கடும் குளிர் போன்ற எதிர்மறை அம்சங்களையெல்லாம் விட அவர்களை மிகவும் வாட்டிய விஷயம் அவர்கள் மேற்குவங்காளத்தில் சக வங்காளிகளுடன் வசிக்க விரும்பினார்கள். என்ன இருந்தாலும் தாய் மொழி பேசுபவர்களுடன் வாழ்வதில் இருக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைக்காது அல்லவா.
1947-ல் பிரிவினை நடந்தபோதே கிழக்கு பாகிஸ்தானில் தங்கிவிட்ட இந்து பட்டியல் ஜாதியினர் பங்களாதேசம் என்று வங்காள மொழி அடிப்படையில் தேசம் அமைந்தபோது மிகுந்த நம்பிக்கையுடன்தான் அங்கு வாழ முடிவெடுத்திருந்தனர். பாகிஸ்தான் என்ற தேச உணர்வு கிழக்கு பாகிஸ்தானில் இருந்தவர்களுக்கு இல்லையே தவிர இஸ்லாமிய தேசக் கனவுகள் அப்போதே அவர்கள் மனதில் இருக்கத்தான் செய்தது.
வங்காள தேசம் என்று மொழி அடிப்படையில் தேசத்தை உருவாக்குவதாக முதலில் அவர்கள் வேஷம் கட்டினார்கள். வங்காள இந்து பட்டியல் ஜாதியினர் அந்த இஸ்லாமியர்களை நம்பினார்கள். ஆனால், அதி விரைவிலேயே பங்களாதேசம் தன்னை இஸ்லாமியக் குடியரசாக அறிவித்துக் கொண்டது. முதல் வேலையாக இந்து பட்டியல் ஜாதியினரை விரட்டியடித்தது.
இந்துக்கள்தான் எங்கள் எதிரிகள். நீங்கள் இந்துக்கள் இல்லை; பட்டியல் ஜாதியினர்; எங்கள் நண்பர்கள் என்று பேசுவதெல்லாம், இஸ்லாமிய அரசு அமையும் வரைதானே. அது அமைந்த பின் இஸ்லாமியராக மாறு என்று சொல்வார்கள். மாறவில்லையென்றால் விரட்டியடிப்பார்கள். மாறியவர்களையும் அஹ்மதியாக்களைப் போல் அடக்கி ஒடுக்கவே செய்வார்கள் என்ற உண்மைகளின் ஒரு பாதிக்கான ஆதாரபூர்வ ஆவணமாக இந்த நூல் உருவாகியிருக்கிறது.
பங்களாதேச பட்டியல் ஜாதியினர் முதுகில் குத்தப்பட்ட முதல் துரோகக் கத்தி இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் குத்தப்பட்டது. மரிச்சபி படுகொலை என்பது அதே பட்டியல் ஜாதியினரின் மீது குத்தப்பட்ட இரண்டாவது துரோகக் கத்தி. இம்முறை அது இரு கரம் நீட்டி (இயேசு கிறிஸ்துபோல்?) அரவணைப்பதாகச் சொல்லி நேருக்கு நேர் நின்ற இடதுசாரிகளால், சொந்த வங்காளி தோழர்களால் நெஞ்சில் குத்தப்பட்டது.
பொதுவாக, பிரிவினைபற்றிப் பேசும்போது இந்தியாவின் மேற்குப் பகுதியில் நடந்த வன்முறை பற்றியே பேசுவார்கள். பாகிஸ்தானில் இந்து சீக்கியர்கள் மேல் வன்முறை கட்டவிழ்க்கப் பட்டதுபோலவே இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் மேல் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதாகச் சொல்வார்கள்.
இது உண்மை இல்லை; இந்தியாவின் மேற்கு எல்லை நீங்கலாக 80 சதவிகித இந்துப் பெரும்பான்மை இருந்த (நாக்பூர் உட்பட) மாநிலங்களில் இருந்த இஸ்லாமியர்களின் மேல் சிறு கீறல் கூட விழுந்திருக்கவில்லை என்பது வேறு விஷயம்.
அதோடு பாகிஸ்தானில் இப்போது இந்து சீக்கியர்களின் எண்ணிக்கை என்ன... இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை என்ன என்பதையெல்லாம் எடுத்துப் பார்த்தாலே உண்மை புரியும். ஆனாலும் பிரிவினை காலத்தில் இந்து-சீக்கியர்களுமே அதாவது இந்துத்துவர்களுமே இஸ்லாமியர்களைப் போல் வன்முறையில் ஈடுபட்டதாகவே இடதுசாரி எக்கோசிஸ்டம் ஒரு புனைவு வரலாற்றை உருவாக்கி வைத்திருக்கிறது.
ஆனால், இவர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பங்களாதேசத்தில் நடந்தவைபற்றிப் பேசுவதே இல்லை. ஏனென்றால் அங்கு முழுக்க முழுக்க கொல்லப்பட்டது இந்துக்கள் மட்டுமே. பட்டியல் ஜாதி பாட்டாளிகள் மட்டுமே.
பங்களாதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டது பற்றி இடதுசாரிகள் பேசாமல் இருப்பதன் முக்கிய காரணம் அதே அளவுக்கு இவர்களும் அதே வன்முறையை பட்டியல் ஜாதியினர் மீது நிகழ்த்தக்கூடியவர்கள் என்பதுதான். மரிச்சபி அந்தக் கொடூரமான உண்மையின் மறந்துபோன, மறக்கடிக்கப்பட்ட வரலாற்று ஆவணம்.
கேரள அரசு இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல் செய்யமாட்டோம் என்று சொல்கிறது.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கனிஸ்தான் பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கி அதைச் செய்துகாட்டுவார்களா...
அல்லது இந்த மூன்று இஸ்லாமிய தேசங்களில் இருந்து அடைக்கலம் தேடி வரும் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, பார்ஸிக்களுக்கு இடம்கொடுக்க மாட்டோம் என்று சொல்வார்களா..?
அநேகமாக, இரண்டாவதைத்தான் செய்வார்கள். ஒருவேளை மத்திய அரசு அதையும் மீறி அடைக்கலம் தேடி வந்தவர்களை அங்கு குடியமர்த்தினால் இடதுசாரி அரசு என்ன செய்யும் என்பதற்கான எச்சரிக்கை வரலாறாக உயிர் தப்பிய மரிச்சபி மக்களின் வாக்குமூலம் திகழ்கிறது.
பத்து லட்சம் கரங்களை நீட்டி வரவேற்கிறோம் என்று சொன்னதை நம்பி வந்த அப்பாவி பட்டியல் ஜாதியினரையே அத்தனை கரத்திலும் ஆயுதத்தை ஏந்திச் சென்று கொன்று குவித்திருக்கிறார்கள். இப்போது அத்தனை கரங்கள் கொண்டு வராதே என்று கேரளத்தில் தடுக்கிறார்கள்.
இஸ்லாமிய நாடுகளின் அடக்குமுறையில் இருந்து தப்பி வந்த சிறுபான்மை அகதிகளுக்கு குடியுரிமை கொடுத்து அங்கு தங்க வைக்கும் திட்டம் இருந்தால் முதலில் எல்லாக் கைகளையும் மத்திய அரசு நன்கு கவனித்தாகவேண்டும்.
ஓரிடத்தில் கிடை அமைக்கும் முன் ஓநாய்களை அந்தப் பகுதியில் இருந்து விரட்டியடிப்பது மிகவும் அவசியம் என்ற எளிய உண்மையை இந்தப் புத்தகம் நமக்குத் தெரிவிக்கிறது.
(ஜோதிர்மய மண்டல், சஃபல் ஹல்தர், சுக்ராஞ்சன் சென் குப்தா, நிரஞ்சன் ஹல்தர், சாக்ய சென், மன கோல்தர், சந்தோஷ் சர்கார், காந்தி கங்குலி, மனோரஞ்சன் ப்யாபாரி ஆகியோ மரிச்சபி படுகொலையின், நேரடி சாட்சிகளின் சொந்த அனுபவங்களின் தொகுப்பாக இந்த நூல் உருவாகியிருக்கிறது.நூலாசிரியர் தீப் ஹல்தர் இந்தியா டுடே –எக்ஸிக்யூட்டிவ் எடிட்டராக இருக்கிறார்)
******
இது தமிழில் எழுதப்பட்ட சுருக்கமான விமரிசனம். விரிவான விமரிசனம் வேண்டுமென்றால் புத்தக அட்டைப் படத்தின் கீழே இருக்கிற சுட்டியைக் க்ளிக் செய்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட விமரிசனத்தைப் படிக்கலாம்.
இந்தப் புத்தகம் இந்தப்புது ஆண்டில் நான் வாசிக்க எடுத்துக் கொண்டிருக்கிற முதல் புத்தகம். வாசித்த பிறகு எனக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பதிவு செய்ய வேண்டிவரலாம்! ஒரு முன்னாள் மார்க்சிஸ்டாக, டோளர்களின் கொலைவெறி எப்படிப்பட்டது என்பதை பக்கத்து வீடான கேரளாவில் கண்ணூர்ப்பகுதியில் நடந்த, இன்னும் நடந்து கொண்டே இருக்கிற கொலை வெறித் தாண்டவங்களில் இருந்து நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறேன்.
கிண்டில் வாசிப்பில் எனக்கிருக்கும் மனத்தடைகளை ஒதுக்கிவைத்து விட்டு ஒரு கிண்டிலை விரைவிலேயே வாங்கிவிடுவேன் என்றே இந்தப்புத்தகத்தை வாசிக்க எடுத்துக் கொண்டதிலிருந்து தோன்றுகிறது.
மீண்டும் வேறொரு புத்தகத்துடன் இந்தப்பக்கங்களில் சந்திப்போம்.