புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுதுவதற்கு நிறைய நல்ல விஷயங்களும் இருக்கின்றன என்பதை எனக்கு நானே நினைவு படுத்திக்க கொள்கிற மாதிரி சிலபல காணொளிகளும் கிடைத்துவிடுகின்றன என்பதை இங்கே மன மகிழ்வோடு பகிர்ந்துதான் ஆகவேண்டும்! கழக, இடதுசாரிக் குப்பைகளை அப்படியே புறந்தள்ளி விட்டுப்போக இதுபோன்ற பகிர்வுகளும் அவசியமே!
புத்தகங்களைப் பாதுகாக்க இங்கே அரசும் பல்கலைக் கழகங்களும் செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. இப்படியான பெரும்பணியை எப்படி ஒருசில பதிப்பகங்கள் (எல்லாப்பதிப்பகங்களையும் இதில் சேர்த்துச் சொல்ல முடியாது) என்பதை சந்தியா பதிப்பக நிறுவனர் M நடராஜன் இந்த 28 நிமிட வீடியோவில் கொஞ்சம் தெளிவாகவே சொல்கிறார். கேளுங்கள்!
நண்பர்களுக்கு புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றியும், அதன் நிறுவனர் ஞானாலயா கிருஷ்ண மூர்த்தி ஐயாவைப் பற்றியும் கூகிள் பிளஸ்சில் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தது நினைவிருக்கும் என்றே நம்புகிறேன். ஏழாண்டுகளுக்கு முன்னால் ஞானாலயா நூலகத்தில் தஞ்சாவூர் கல்லூரி மாணவர்களிடையே நானும், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பேசியதன் ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம். சந்தியா நடராஜன் பேசும்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் குறித்தும், தனியார் நூலகங்கள் செய்த நல்ல பணிகள் பற்றியும் கொஞ்சம் பேசுகிறார்.
#UrbanNaxals இதை சமீபகாலங்களில் மிகவும் கேலிக்கு ஆளான ஒரு வார்த்தையாகவாவது அறிந்திருப்பீர்கள்! அந்தத்தலைப்பில் திரைப்படத் தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரி, ஒரு படமும் எடுத்து, அதன் மீது ஒரு புத்தகமும் எழுதி இருப்பது, பானு கோம்ஸின் இந்த வீடியோ விமரிசன உரையைப் பார்த்தபிறகுதான், இதைப்பற்றிய அறிவிப்பொன்றைப்பார்த்துவிட்டுக் கடந்துபோய்விட்டதே ஞாபகத்துக்கு வந்தது. 1967 இல் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உடைந்ததில் பிரிந்து போனவர்கள் நக்சல்பாரி என்ற கிராமத்தில் தான் தங்களுடைய கலகக் கொடியை உயர்த்தினார்கள் என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்று அவர்கள் பெயர் சொட்டிக் கொண்டாலும் நக்சல்பாரிகள் என்றும் காலப் போக்கில் நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்டு, பதினைந்து இருபதுக்கும் மேற்பட்ட குறுங் குழுக்களாகச் சிதறியும் போனார்கள். அர்பன் நக்சல்கள் என்ற வார்த்தை அவர்களைத்தான் குறிக்கிறதா? அப்படியும் சொல்ல முடியாது. இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லவும் முடியாதமாதிரி, கொஞ்சம் குழப்பமானது.
இந்தக்கேள்விக்கான விடை ஒருவிதத்தில் மிகவும் சிக்கலானது, இன்னொரு விதத்தில் மிகவும் எளிமையானதும் கூட! உதாரணத்துக்கு JNUவில் ஒரு பொருளாதாரப் பேராசிரியை. CAAவுக்கு எதிராக மாணவர்களைத் தூண்டிவிடுகிறவர். இவர் நடத்தும் NGO வுக்கு வெளிநாட்டிலிருந்து 14 கோடிரூபாய் வரவு வந்திருக்கி. றது. கம்யூனிச நாடுகளிலிருந்தா? இல்லை! அமெரிக்காவின் Ford Foundation தான் இத்தனை தாராளமாக நிதி கொடுத்திருக்கிறது. எதற்காக இவர்கள் நிதி அளிக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடையை கூகிளில் தேடிப்பார்த்தாலேயே ஏகப்பட்ட விஷயங்கள் கிடைக்கும். என்றாலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிவது கொஞ்சம் கடினமானதுதான்!
படிப்பறிவு இல்லாத கிராமப்புறங்களில் மட்டுமே தன் செல்வாக்கை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் நக்சல்கள் நகர்ப்புறங்களிலும் ஊடுருவி விட்டார்களா? JNU மாதிரியான பல்கலைக்கழகங்கள் இடதுசாரிகளின் விளையாட்டு மைதானங்களாக ஆகி இருப்பதை பலபதிவுகளிலும் பார்த்துவருகிறோம். தேசத்தை சீர்குலைக்க முனையும் அன்னிய சக்திகளும் இடதுசாரிகளும் கைகோர்க்கும் புள்ளியே அர்பன் நக்சல்கள் என்று கொஞ்சம் எளிமையாகப்புரிந்து கொள்ளலாமா? பானு கோம்ஸின் புத்தக அறிமுகம், விமரிசனம் வீடியோ 44 நிமிடம். என்னுடைய வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் இதுவும் சேர்ந்து கொண்டு விட்டது.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment