இன்று போகிப்பண்டிகை. போகி என்றாலே குப்பை செத்தைகளை இடித்துச் சுத்தமாக்கி, வீட்டுக்கும் வெள்ளை அடித்து, புதுப்பொலிவுடன் திகழச் செய்கிற நாளாகவும் இருந்ததுண்டு. இப்போதும் கிராமங்களில் இருக்கிறதென்று நினைக்கிறேன். நண்பர்கள் அனைவருக்கும் போகிப்பண்டிகை வாழ்த்துகள்!
இன்றைய காந்திகள் என்று புத்தகத்தலைப்பைப் பார்த்ததுமே மனம் துணுக்கென்றது, காரணம் என்ன என்று நண்பர்களுக்குப் புரிந்திருக்கும், இல்லையா? ஒரிஜினல் காந்தியைக்கூட மறக்கடித்துவிட்டு இன்று காந்தி என்ற பெயரை என்னமோ தங்களுடைய சொந்தக் குடும்பப்பெயர் மாதிரி வைத்துக்கொண்டு ஏமாற்றிவரும் டூப்ளிகேட் காண்டிகள் தானே நினைவுக்கு வருகிறார்கள்! அதுதான்! சுனில் கிருஷ்ணனுடைய இந்த 13 நிமிட அறிமுக உரையைப் பார்த்த பிறகுதான் பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதிய இன்றைய காந்திகள் புத்தகத்தில் பேசப்பட்ட ஆளுமைகள் வேறு என்பது புரிந்து நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
இன்றைய காந்திகள் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று என்னுடைய வாசிப்புப் பட்டியலில் கொஞ்சமும் தயங்காமல் சேர்த்துக் கொண்டுவிட்டேன். இத்தனைக்கும் இது ராமச்சந்திர குகா எழுதியதன் தமிழ் மொழிபெயர்ப்பு என்பது தெரிந்துமே கூட. இன்றும் ஒரிஜினல் காந்தி பலருக்கும் ஒரு ஆதர்சமாக இருக்கிறார் என்பதும், அவர் சொன்னதன் உட்கருத்தைப் புரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தியவர்கள் என்று ஒரு பதினோரு ஆளுமைகள் பற்றிய புத்தகம் இது.
ஆளும் கட்சியாக இருக்கக் கொஞ்சமும் லாயக்கில்லாத கட்சி காங்கிரஸ் என்பது கடந்த இரு லோக்சபா தேர்தல்களில் வெளிப்பட்டது. நம்பகமான எதிர்க்கட்சியாகவும் இருக்கமுடியாமல் காங்கிரஸ் தொடர்ந்து தடுமாறிவருவதை மேலே 27 நிமிட வீடியோவில் பார்க்கலாம். சசிதரூர் காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்க முயல்கிறார். ஆனால் காங்கிரசின் பின்னால் அணிசேர மாநிலக்கட்சிகள் தயங்குவது தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது . மற்ற மாநிலக்கட்சிகளுக்கு ஒருவிதமாகவும், திமுகவுக்கு வேறுவிதமாகவும் அந்தத்தயக்கம் இருக்கிறதென்பதை இங்கே சொல்லியிருந்தது கவனத்துக்கு வந்ததா? தேசியக்கட்சிகளாக இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள் மாநிலக்கட்சிகளாக குறுகிக் கிடக்கிறார்கள். மாநிலக்கட்சிகளும் தேய்ந்து வருவது தெளிவாகவே தெரிகிறது. விசிக மாதிரி உதிரிகள் பெருத்துக் கொண்டே வருவது, தேர்தல் ஜனநாயகத்தில் குப்பைகூளங்களைக் களைவதை, ஜனங்களாகிய நாம் சரியாகச் செய்யவில்லை என்பதன் அடையாளமே! அரசியல் குப்பைகளை எப்போது களையப் போகிறோம்? இதுவே இன்றைக்கு எழுந்திருக்கிற முக்கியமான கேள்வி.
சுதந்திரம், ஜனநாயகம் எல்லாமே காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான்! புரிகிறதா? என்னசெய்யப்போகிறோம்?
மீண்டும் சந்திப்போம்.
சுதந்திரம், ஜனநாயகம் எல்லாமே காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான்! புரிகிறதா? என்னசெய்யப்போகிறோம்?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment