இந்தப்பக்கங்களில் ஓர் முழுநீளத் திரைப்பட விமரிசனமாக எழுதிப்பார்த்து நாளாகி விட்டது இல்லையா? சிலநாட்களுக்கு முன்னால் ஒரு நாலு படத்துக்கு விமரிசனம் எழுதலாமென்றால், சரக்கே இல்லாத படத்துக்கு என்ன எழுதுவது என்று மிகவும் சுருக்கமாக இரண்டு தமிழ் இரண்டு தெலுங்குப் படங்களுக்கு சின்னக்குறிப்பாக எழுதியதை நண்பர்கள் அவ்வளவாக சட்டை செய்யவே இல்லை!
பெரிய நடிகர்கள் பெரிய பட்ஜெட் படங்கள் என்று வெளியாகி பெருமளவிலான தியேட்டர்களை ஆக்கிரமித்தும் கூடாக காற்றாடிக்கொண்டிருக்கிற நேரத்தில் குறைந்த அளவு தியேட்டர்களில் மட்டுமே ரிலீசாகி ரசிகர்கள் ஆதரவைப் பெற்றிருக்கிற ஒரு படம் என்று சொல்லவேண்டுமானால் அது V1 மர்டர் கேஸ் என்கிற படம் தான். இத்தனைக்கும் படத்தில் பெரிய நடிகர்களோ பட்ஜெட்டோ எதுவுமில்லை. ஒரு த்ரில்லர் படம்தான்! திரைக்கதை வடிவம், காட்சிப்படுத்தி இருக்கிற விதம் எல்லாமாகச் சேர்ந்து படம் வெற்றி அடைந்திருக்கிறதென்றால் என்ன சொல்வீர்கள்?
WIN News சேனல் மெல்ல மெல்ல விரிவடைந்து வருகிறது என்பதைச் சொல்கிற மாதிரி இந்தப்படம் குறித்த ஒரு கலந்துரையாடலை நேற்றைக்குப் பார்த்தேன். இயக்குனர் பாவெல் நவகீதன் சில படங்களில் நடித்திருக்கிறார். ஒரு வித்தியாசமாக இந்தப் படத்தின் இயக்குனராகவும் ஆகிவிட்டார்.
அதென்ன பாவெல் என்று பித்தியாசமாக என்ற கேள்விக்கு மேலே வீடியோவில் காரணம் சொல்வதும் தன்னுடைய படத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் தகவல் சொல்வதுமாக! நடிகர் அஜித் குமார் படம் இருக்கிறதே என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள்! ஒரு சம்பந்தனுமில்லை!
ஒரு கொலை விசாரணைதான்! ஆனால் அதுவே கொஞ்சம் வித்தியாசமானதாக, கதாநாயகன் ஏதோ ஒரு காரணத்தால் இருட்டைக்கண்டால் பயம், மயக்கம் அடைகிறவனாக! அதனாலேயே ஆக்டிவ் போலீசாக இருப்பதிலிருந்து தடைய அறிவியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டவன். அவனை சக போலீஸ் அதிகாரி ஒரு பெண் கொலை பற்றிய விசாரணைக்குள் எப்படிக் கொண்டு வருகிறார் என்பதில் ஆரம்பித்து வழக்கமான போலீஸ் விசாரணையாகக் கதைக்களம் விரிவதில் பார்ப்பவர்களை படத்தில் ஒன்றச் செய்துவிடுவதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். க்ளைமேக்ஸ் எதிர்பாராதது என்று சொல்ல முடியாதுதான்! ஆனால் அதையே இயக்குனர் ஒரு மெசேஜ் சொல்லப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார். ரொம்ப உறுத்தல் என்றாகிவிடாமல் அளவோடு முடித்திருப்பது இன்னொரு வெற்றி! எப்படி என்பதை படத்தைப்பார்த்து நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்!
இப்போதெல்லாம் சமூகத்துக்கு மெசேஜ் சொல்கிற வியாதி தமிழ்ப்பட இயக்குநர்களுக்குத் தொற்றிக் கொண்டிருப்பதில், பாவெல் நவகீதனுக்கும் அப்படி ஒரு தொற்று இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை! இதை அந்தநாட்களிலேயே கலைவாணர் நாட்டுக்கு சேதிசொல்ல நாகரீகக்கோமாளி வந்தேனய்யா என்று பாட்டுப்பாடி நாசூக்காக, பலவித மெசேஜ் சொல்லி இருக்கிறார். பராசக்தி வசனம் போல அனல்(?) துப்பாமல் மென்மையாகவே சொல்லியிருக்கிற மாதிரி, இந்தப் படத்தின் க்ளைமேக்சிலும் கதாநாயகன், கொஞ்சம் எக்ஸ்ட்ரா வசனங்களில் அந்த மெசேஜை சொல்லி இருக்கிறார். ஒரு க்ரைம் த்ரில்லருக்கு இதெல்லாம் தேவைதானா என்று பார்வையாளர்களை எரிச்சல் கொள்ளச் செய்யாமல் அளவோடு முடித்திருப்பது இயக்குனருடைய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். அதற்காகவே படம் பார்க்கலாம்!
மீண்டும் சந்திப்போம்!
பழைய விமர்சனமும் படித்தேன். என்ன சொல்ல என்றுதான் விட்டு விட்டேன்! இந்தப் படம் எங்கு காணக் கிடைக்கிறது என்று சொலல்வில்லையே? தியேட்டர்தானா?
ReplyDeleteபாறைகள் ஸ்ரீராம்! ஒரு சிறிய பட்ஜெட் படம், குறைந்த அளவு தியேட்டர்களிலேயே ஓடிக் கொண்டிருக்கிறது ஆதரிக்கப்படவேண்டிய விஷயம் என்பதால்.......
Deleteஉங்கள் விமர்சனம் படித்த பிறகு பார்த்தேன் (einthusan). சின்ன கதை. திரைக்கதை மகா மோசம். அப்படியே கதையை படமாக எடுத்தது போல. சின்ன பட்ஜெட் திரைப் படம் என்பது மட்டுமே பிளஸ்!
ReplyDeleteவாருங்கள் பந்து!
Deleteஒரு கொலை விசாரணை என்பது பார்த்துப் பழகிப்போன ஒருவிஷயம் தான்! ஆனால் forensic science தொட்டுப் பேசும் படங்கள் இங்கே அதிகம் வந்ததில்லை. சமீபத்தில் அர்ஜுன் நடித்து வந்த ஒருபடம் தவிர! இந்தப்படமும் தடைய அறிவியலை பேசுகிற படமாக இல்லை. கதையை இயக்குனர் எங்கே கொண்டுபோய் முடித்திருக்கிறார் என்பதில் மட்டுமே எனக்கு சுவாரசியம் எழுந்தது. பா ரஞ்சித் மாதிரி டமாரம் அடிக்கிற பிரசார நெடி இல்லாமல் ஒரு மெசேஜை சொல்ல முயற்சி செய்திருக்கிறார் என்பதை மட்டுமே விமரிசனத்தில் முக்கியப்படுத்தி இருந்தேன். கொஞ்சம் நேர விரையம் ஆகிவிட்டதோ?