Sunday, June 13, 2010

நாலாவது தூண் ! எண்டமூரி வீரேந்திர நாத்


நாலாவது தூண்! கதையின் பதினோராவது அத்தியாயம் பக்கம் 171-172

மேடையின் மேல் சுவாமியும் படியின் மேல் ஆதரவில்லாமல் விழுந்துகிடந்த பல்லவியும் மட்டுமே எஞ்சி நின்றார்கள்
. அவள் பாதி நினைவிலும், பாதி மயங்கியும் விழுந்து கிடந்தாள்.


சுவாமிகள் கிட்டே வந்தார்.

அவர் நிழல் அவள் மேல் வந்து விழுந்தது. வெளியே ஜனங்களின் சந்தடி லீலையாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. அதை எதிரொலித்தாற்போலவே சிரிப்புச் சத்தம் காற்றில் தவழ்ந்து வந்தது.

"நான் சொல்லலையா பல்லவி! காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் பரவியிருக்கும் வீடு என்னுடையதுன்னு! அதன் நிழலில் தஞ்சம் புகுந்துக்கச் சொன்னேனா இல்லையா?.நீ கேட்கலை. என் முதல் தூணான அரசியல்-சூரியநாராயணன்-நீ ஹோம் மினிஸ்டருக்கு போன் பண்ணினபோது, அங்கேதான் இருந்தான். நிமிஷத்தில் விஷயம் எங்களுக்குத் தெரிந்துடுத்து. என் இரண்டாம் தூணான புத்திசாலித்தனமான லாயர் சதாசிவம் டில்லியிலிருந்து என்ன பண்ணனும்னு சொன்னான். என் மூன்றாவது தூண் தேவிதயாள்-எஞ்சிய ஏற்பாடுகளைக் கவனித்துண்டான். பலன்...? இதான்--இப்ப, இப்ப நீ இருக்கிற நிலைமைதான்!"


அவர் சிரிப்பு திரும்பவும் அவ்வெல்லை முழுவதும் அலையலையாகப் பரவிற்று.

"சென்ட்ரல் ப்யூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் டிப்டி டைரக்டரைக் கூடத் தன் காலுக்கடியில் வந்து விழச் செய்து விடுவான் இந்தப் பரமானந்த சுவாமி. இப்பச் சொல்லு பெண்ணே! இந்த நாட்டின் தலைவனாவதற்கு அவகாசமோ, அருகதையோ இருக்குங்கிறாயா, இல்லையா?"

அவள் கண்களைத் திறக்க முயன்றாள். கண்ணுக்குக் கீழே அடிபட்டிருந்ததால் பார்வை சரியாகத் தெரியவில்லை. ஒரு ஒளி மட்டும் கண்ணுக்குள் வந்து தாக்கிக் கொண்டிருந்தது. எழுந்து நிற்கக் கூடச் சக்தியில்லை. முகத்திற்கு முன்னால் வந்து, இன்னும் உயரமாய் ஒரு விக்கிரகத்தைப்போல நின்று கொண்டிருந்தார் சுவாமி.

"இப்பச் சொல்றேன் கேளு பல்லவி! என் நாலாம் தூண் எதுன்னு தெரிஞ்சுக்க இவ்வளவு நாளைக் கஷ்டப்பட்டாயோனோ?.அதென்னன்னு சொல்றேன், கேளு!

என் நாலாம் தூண்--ஜனங்களின் முட்டாள்தனம்.

அந்தக் கடைசித் தூணை இப்போ உனக்கு பிரத்தியட்சமாய் காட்டினேன்
.
பார்த்தாயோனோ என் விஸ்வரூபத்தை? இனி என்னை எதுதான் தடுத்து நிறுத்திவிடும்? வர்ற விஜயதசமி அன்னைக்கு விஜய சங்கை ஸ்தாபிக்கப்போறேன். ஜனங்களை பயந்து பீதியடையும்படி செய்வேன். செக்யூலரிசத்திலிருந்து மதத்தின் பக்கமாய்ப் போகச் செய்வேன். பாதுகாப்பு உணர்ச்சி போய்விட்ட ஜனங்கள்--அரசாங்கத்தை நம்பமாட்டாங்க. இதர மதத்தாரையும் நம்ப மாட்டாங்க.அதான் எனக்கு வேண்டியது.அரசாங்கம் இதர மதங்களைக் காப்பாற்றுவதில் ஆழ்ந்திருக்கும்போது, மக்களுக்கு இன்னும் அதிகமாய் மதத் தத்துவத்தைப் புகட்டுவேன். ஐ யாம் தி காட்! ஐ யாம் தி சுப்ரீம்! என் ஜனங்களைக் காப்பாற்றுவதற்காகவே அவதரித்திருக்கும் கடவுளின் அவதாரம் நான்......ஹா...ஹா...ஹா...ஹா!"

சாடிசமும் சாமர்த்தியமும் சேர்ந்து விட்டால் ஆபத்து. அப்படிப்பட்ட மனித உருவெடுத்த அரக்கனுக்கு முன்னால் ஆதரவின்றி விழுந்து கிடந்தாள் அவள்.

சி பி ஐ, சி ஐ டி போலீஸ், சட்டம், ராணுவம் --எதுவுமே தனக்கு முன்னால் நிற்க முடியாது என்பது போன்ற மிடுக்குடன் அங்கிருந்து அகன்றார் அவர்.
oooOooo
இங்கே கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உன்னைப்போல் ஒருவன் படத்தை வைத்துக் கமலை கிழி கிழி என்று பதிவர்கள் கிழித்துக் கொண்டிருந்தார்கள். பதிவில் எழுதிக் கிழித்து விட்டால் மட்டும் ....இந்த நினைப்புத்தானே நிறையப்பேருடைய பிழைப்பைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது?அது ஒழிக இது ஒழிக என்று கத்திக் கொண்டே இருப்பவன் தான் இங்கே முதலில் ஒழிந்துபோகிறான் என்ற அடிப்படை கூட ஏன் எவருக்கும் தெரிவதே இல்லை?

இங்கே நாலாவது தூண் கதையிலுமே கூட அந்த சாதாரண மனிதனைப் பற்றிய ஒரு திருப்பம் மிக சுவாரசியமாக இருக்கிறது.
A WEDNESDAY
திரைப்படத்தில் நஸ்ருதீன் ஷா சொல்கிற மாதிரி " a stupid common man" மாதிரி இல்லை.பாவம் கமல்! உன்னைப்போல் ஒருவனை இதில் விட்டு விடுவோம்! எண்டமூரி வீரேந்திரநாத் படைப்பில் கதாபாத்திரங்கள் எல்லோருமே ஒருவரை ஒருவர் மிஞ்சுகிறவர்கள், எவருமே ஏப்பை சாப்பை இல்லை.

அடுத்த அத்தியாயத்திலேயே கதாநாயகனும் வில்லனும் தங்களுடைய பலத்தை ஒருவருக்கொருவர் நிரூபித்துக் கொள்ளும் சுவாரசியமான திருப்பம், கதை அங்கேயே முடிந்து விடுவதில்லை அதற்கப்புறமும் இருநூற்றைம்பது பக்கங்கள், திருப்பம், திருப்பத்திற்குத் திருப்பம், திடீர்த் திருப்பம், அதிரடித் திருப்பம் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அந்த ஒரு சுவாரசியத்தை, படிக்க வருகிறவர்களைக் கட்டிப்போடுகிற ஜாலத்தை எண்டமூரியின் அத்தனை கதைகளிலுமே பார்க்கலாம்.எண்டமூரி சுவாரசியத்திற்கு நான் காரண்டீ! போதுமா!

இப்போது அத்தியாயம்12 பக்கம் 197-199 கொஞ்சம் ருசித்துப்பார்க்கலாம்:


அந்த ஹிட்லரைப்போல சினிக்கைக் கண் கொட்டாமல் பார்த்தான் ஆதித்யன். அவர் கார் புறப்படப்போனபோது, ஏதோ நினைவுக்கு வரவே, இறங்கி ஓட்டமாய் ஓடிப்போய்,"உங்களோடு இன்னும் இரண்டு நிமிஷம் பேசலாமா சுவாமி?" என்று கேட்டான் துணிவோடு. சுவாமியின் சைகையைப் பார்த்து டிரைவர் இறங்கி விட்டான். ஆதிதித்யன் காரை ஓட்டத் தொடங்கினான். ஆதித்யனின் காரைப் பின்னாடியே ஒட்டி வந்து கொண்டிருந்தான் . ஆனால் அந்த ஸ்பீடைப் பிடிக்க முடியாமல் விட்டு விட்டான்.

"என்ன சொல்லு?"

"நீங்க இவ்வளவு பெரிய மனுஷனா எப்படி ஆனீங்க?"

"அரசியல், பலம, கெட்டிக்காரத்தனம்--எல்லாம் என் சொத்துத் தான்." சிரித்தார்.

"ஆனால், நியாயம், சட்டம் எல்லாம் கூட இருக்கே சுவாமி?"

"இதெல்லாம் எதுக்குக் கேட்கிறாய்?"

"நான் உங்களோடு சேர்ந்தால் எந்த விதத்தில் பாதுகாப்புக் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கத்தான்."

"பைத்தியக்காரா--அப்புறம் பாதுகாப்பைப்பற்றிய பேச்சே கிடையாதே!"

"ஆனால் சட்டம்..?"

"சாட்சி இல்லாவிட்டால் சட்டம் இல்லை"

ஆதித்யனின் கையிலிருந்த காரின் வேகம் இன்னும் அதிகரித்தது. நூறு கிலோமீட்டர்களைத் தாண்டிவிட்டது. "உங்களோடு சேர்ந்துட்டால் பாதுகாப்புக்குத் தேவையே இராதுன்னு சொன்னீங்க. இப்போ உங்களுக்கே எந்தப்பாதுகாப்புமில்லையே!"

"என்ன..நீ என்ன சொல்கிறாய்?"

"நீங்க சொல்றது நிஜந்தான்! அரசாங்கமே உங்க கையில் இருக்கு. அரசியல் தலைவர்கள் உங்கள் பக்தர்கள். ஆனால், அரசியல் அதிகாரிங்களுக்கு பிரமோஷன் தாகம், தலைவர்களுக்குப் பதவிப் பாதுகாப்பு முக்கியம்.அவங்க சில நிபந்தனைகளுக்குட்பட்டுக் காரியம் பண்ணனும். உதாரணத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீங்க ஒரு பெண்ணின் காரில் ஏறினீங்க. அவளால் உங்களை ஒன்றுமே பண்ண முடியலை., காரணம்? அவள் அரசாங்க அதிகாரியானதால! நான் அப்படியில்லை, நான் என்ன வேணுமானாலும் பண்ணுவேன்."

"அப்படீன்னால்? என்ன பண்ணுவாய்?" சந்தேகத்தோடு கேட்டார்.

"அன்பு--இரக்கம் --தயாதாட்சண்யம் --இப்படிப்பட்ட எதுவுமே என்னிடம் இல்லை. இப்போது நீங்க புதிதாய்ச் சொன்ன பாடப்படி சாட்சி இல்லாவிட்டால் கேசும் இல்லை. அதையே உங்கள் மேல் பயன்படுத்தலாம்னு இருக்கேன்."

"என்னைக் கொல்லுவாயா?"

"கொல்ல  மாட்டேன், உன்னைப்போன்ற அற்பப் பிராணி எதிரியாயிருந்தால் போராட்டம் ரொம்ப ஜோராயிருக்கும். எனக்கு அது பொழுதுபோக்கு! உங்களுக்கு உயிருக்கும் சாவுக்குமிடையே போராட்டம்!"

"நீ யாரோட பேசராய்னு தெரியுமா?"

"இந்த நாட்டின் மிக குரூரமான ஆளோடு. விரைவில் இந்த நாட்டின் தலைவனாகிவிட வேண்டும் என்று தவிக்கும் ஒரு மனிதனோடு. தற்போது எனக்கு முன்னால் உயிரை உள்ளங்கையில் ஏந்திண்டு வந்துண்டிருக்கிற ஆளோடு! பரமானந்த சுவாமி! வீணாய்  என்னோடு தர்க்கத்துக்கு வந்துருக்கீங்க. பலனை அனுபவித்துத் தீருவீங்க." என்று காரை நிறுத்தினான். 

திரும்பித் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சுவாமியின் தலைமேல் பலமாய் ஒரு குத்து விட்டு, "கூட்டத்தில் என்னை அவமானப்படுத்தியதுக்கு இது! இதுக்கு சாட்சி இல்லை." என்றான். சிறிய குன்றின் மேலே இருந்தது கார். கீழே நகரத்து வெளிச்சம் நன்றாகத் தெரிந்தது.

சுவாமியின் முகம் சிவந்தது. அந்தப்பக்கமாய் இறங்கப்போனார். இம்முறை அந்தப்பக்கமாய் வந்து கன்னம் அதிரும்படி அறைந்தான்."இது சின்னப் பையனைக் கொன்றதற்கு. இதுக்கும் சாட்சியில்லை."

சுவாமி சீட்டில் மல்லாந்து விழுந்தார். ஆதித்யன் காரின் கதவை மூடிவிட்டான்.

"உங்க நாலாவது தூண் யாரு? சாதாரண மனுஷனா? இந்த நாட்டு சாதாரண மனுஷன் அவ்வளவு முட்டாளில்லை சுவாமி! அவ்வளவு கோழையுமில்லை, அதை உங்க முன்னாடியே நிரூபித்துவிட்டேன் இப்போது.  

சரி, தெய்வமாவதற்காக நீங்க ஜீவ இம்சை பண்ண மாட்டீங்க இல்லையா? இந்த நாட்டுக் குடிமகன், மனுஷனாய் வாழறதுக்காக உங்களைப்போலக் கயவர்களைப் பொறுமையாய்த் தாங்கிக் கொள்கிறான் பாவம்! வெடித்து விட்டால்....இதோ பார், இப்படி ஆயிடும் உங்க நிலைமை" என்று காரைக் கொஞ்சம் முன்னுக்குத் தள்ளினான். கார் பள்ளத்தாக்கில் இறங்கத் தொடங்கிற்று, சுவாமி உள்ளேயிருந்து கத்திக் கொண்டிருந்தார். கார் கற்களில் மோதித் திரும்பி நழுவி விழுந்துகொண்டே இருந்தது.

"பத்துக் கார் ஃபாக்டரிங்களை வைப்பீங்க இல்லையா சுவாமி? பிழைத்திருந்தால், புதுக் கார் வாங்கிக்குங்க. பெஸ்ட் ஆஃப் லக்."

oooOooo
 
சுசீலா கனக துர்கா என்பவ‌ர் மொழி பெயர்த்து தமிழில் என்டமூரி வீரேந்திர நாத் எழுதிய கதைகள் எழுத்தாளர் சாவி கொடுத்த ஊக்கத்தில் முதலில் சாவி வார இத‌ழிலும், பல புத்தகங்கள் நேரடியாகவே சுடச்சுட வெளி வந்த காலம் ஒன்று உண்டு.

ஆந்திரா வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டே பிரபலமான கதாசிரியராக பரிணமித்தவர் ஒரு கட்டத்தில் வங்கி வேலையை விட்டு விட்டு முழு நேர கதாசிரியராகவும் ஆனார். பல ஆங்கில நாவல்களின் தாக்கதோடு (காப்பியடிப்பது என்பது இன்னொரு பெயர்), உள்ளூர் சமாசாரங்களை மசாலா சேர்த்துத் தாளித்து, கதைகளை, பாத்திரங்களை  உருவாக்கின வேகம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது! இவருடைய கதைகள் தொடர்ந்து திரைப்படமாக எடுக்கப் பட்டன. சிரஞ்சீவி நடித்து பல வெற்றிப்  படங்களும் ஆயின.

இங்கே தமிழில் சுஜாதா ஒருவரைத் தவிர அனேகமாக மற்ற எல்லோருமே ஒரேமாதிரிக் கீற‌ல் விழுந்த ரெகார்ட் மாதிரி எழுதிக் கொண்டிருந்த நேரம் அது. துளசி தளம், மீண்டும் துளசி இந்த இரு கதைகளும் சாவி வார இதழில் தொடராக வந்தபோது, தமிழில் ஒரு புதிய வரவாகவே வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தவர் என்டமூரி என்றால், அது பொய்யில்லை.

நாலாவது தூண்!

ஒரு வழக்கமான முக்கோணக் காதல். கதாநாயகனை நேசிக்கும் பெண் ஒருத்தி, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் அவனுக்குத் தன்னுடைய காதலைச் சொல்கிறாள். கதாநாயகனுக்கோ அது வேறொரு பயந்தாங்குளிப் பெண் சொல்வதாகவே தொடர்ந்து  சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்து விடுகின்றன.பெண்தான் பயந்தாங்குளி. அவள் பாட்டியோ, பேத்தியை எப்படியாவது கதாநாயகனோடு சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று நினைப்பவள்.

இது ஒரு களம்.

ஒரு ஊழல் அரசியல் வாதி, அவனோடு ஊழல் மயமான அரசு இயந்திரம், சாமர்த்தியமுள்ள அடியாள் பலம், சிக்கல்களில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பிக்க உதவும் ஒரு சட்ட நிபுணர்,  இத்தனைக்கும் ஆதார சக்தியாக மூளையுள்ள ஒரு  சாமியார், இவர்களுடைய குற்றக் கூட்டணி இந்திய அரசியலையும் மீறி சர்வதேச அளவில் பரவத்தயாராயிருக்கும்சூழல்,  இதை எதிர்த்துப் போராட முடியாமல் தவிக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி  இவர்களைக் கொண்ட இன்னொரு களம்.

இந்த இரண்டு களங்களையும் ஒன்றிணைத்து, லாவகமாக கதையைப் பின்னியிருக்கும் நேர்த்திக்காகவே என்டமூரிக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்! தீரேந்திர பிரம்மச்சாரிகளும், சந்திரா சுவாமிகளும் இந்திரா காந்தி காலத்தில், ஒரு அதிகார மையங்களாக உருவாகியிருந்த பின்னணியை இவ்வளவு சுவாரசியமான கதையாக மாற்ற முடியும் என்று எவர் தான் ஊகிக்க முடியும்? ஊகிக்க முடிந்தவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்!

அந்தக் கதையில் வரும் சாமியார்,  நான்கு வலுவான தூண்கள் தன்னைத் தாங்கி நிற்பதாகவும், அந்த நான்கு தூண்களைத் தாண்டித் தன்னை எவரும் அசைக்க முடியாது என்று பீற்றிக் கொள்ளும் கட்டங்களில், முதல் மூன்று தூண்கள் இன்னார், இன்னார் என்று சொல்லிவிட்டு, நான்காவது தூண் எதுவென்பதை  கடைசி வரை சஸ்பென்சாகவே வைத்திருப்பதை இந்தக் கதையின் மிக வெற்றிகரமான உத்தியாக இப்போது கூடச் சொல்ல முடியும்!

அதைவிட, அந்த சஸ்பென்ஸ் உடைகிற நேரம், நாலாவது தூண் எது என்பதைக் கதாநாயகனுக்கும், தன்னுடைய விசுவாசமான கூட்டாளிக்கும் பெருமிதத்தோடு உடைத்துச் சொல்வதை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட, அட, ஆமா இல்லே! என்று ஆச்சரியத்தோடு, நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி, அதில் இருக்கும் உண்மையை  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது!

அது என்ன நாலாவது தூண்?

"ஜனங்களுடைய அறியாமை" அது தான் என் பலம்! இவர்களை எளிதில் ஏமாற்றிவிட முடியும், எனக்கெதிராக என்ன செய்ய முனைந்தாலும் அதைத் திசை திருப்பி விட்டு விட முடியும்!அது தான் நான் சொல்லுகிற நாலாவது தூண் என்று கொக்கரிக்கிறான் வில்லன் சாமியார்!

கதாநாயகன், எப்படி வில்லனுடைய ஒவ்வொரு தூணையும் அவனுக்கு எதிராகவே திருப்பி விடுவதில் வெற்றி பெறுகிறான் என்பதும், இந்த "நாலாவது தூணையும்" எப்படி வெல்கிறான் என்பதும் கதை!
 
ஆகரி போராட்டம் என்ற பெயரில் இந்தக் கதை நாகார்ஜுன், ஸ்ரீதேவி, சுகாசினி நடித்துப் படமாகவும் வந்தது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யப் பட்டு வந்ததாக நினைவு.

கொஞ்சம் அரசியலைப் பின்னோக்கிப் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு, இந்தக் கதையில் வரும் பரமானந்த சாமியைப் பார்க்கும்போது, நேற்றைய நாட்களில் தீரேந்திர பிரம்மச்சாரிகளும், சந்திராசாமிகளும் இந்திரா காந்தி காலத்தில் எப்படிக் கொடிகட்டிப் பறக்க முடிந்ததென்பது புரியும்! இங்கே தமிழ் நாட்டில் கூட கழகங்கள் மாறினாலும் கூட குறி சொல்கிறவன், பரிகார யாகங்கள் செய்கிறவன் எல்லாம் கோட்டைக்கு வேண்டியவனாகத் திரிந்ததும்,  நாத்திகமும் பகுத்தறிவும் பேசுவது ஊருக்குத் தான் உபதேசமே தவிர தனக்கில்லை என்றலைந்த அரசியல்வாதிகளைத் தெரிந்து கொள்ளவும்  முடியும்!

இன்னும் கொஞ்சம் கூர்ந்து யோசிக்கத் தெரிந்தவர்களுக்கு............!

நம்முடைய அறியாமை, எதுவும் செய்ய முடியாதவர்களாக ஊமைச் சனங்களாகவே குறுகிப் போய் நின்று விடுகிற கோழைத்தனம் தான், இங்கே அரசியல்வாதிகள் நம்மை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே வருகிற நாலாவது தூணாக இருக்கிறது என்பதும் புரியும்!



8 comments:

  1. எண்டமூரி எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர்.. அவருடைய துளசித் தளம், பணம், லேடிஸ் ஹாஸ்டல், வெள்ளை ரோஜா (??) முதலிய புத்தகங்களை திரும்ப திரும்ப படித்திருக்கிறேன்.. அனைத்துமே வித்தியாமான கதைக் களத்துடன் விறுவிறுப்பாக அமைந்திருக்கும்..

    பல வருடங்களுக்கு முன்னால் நான் படித்து என்னைக் கவர்ந்த இன்னொரு புத்தகம் 'கண் சிமிட்டும் வின்மீண்கள்'.. அது ஒரு அறிவியல் கதை.. எப்படியாவது அந்த புத்தகத்தை திரும்ப படித்துவிட வேண்டும் என்று சென்னை போன போது தேடினேன்.. கிடைக்கவில்லை..

    எண்டமூரியின் (அனைத்து) புத்தகங்கள் சென்னையில் / இணையத்தில் எங்கு கிடைக்கும் என்று உங்களுக்கு தெரிந்தால் எனக்கும் சொல்லுங்களேன் (இணையத்தில் வெகு சில புத்தகங்களே உள்ளன)

    ReplyDelete
    Replies
    1. எண்டமூரியின் நாவல்கள் இப்போது அல்லயன்ஸ் கம்பெனி மயிலாப்பூரில் கிடைக்கின்றன. கண்சிமிட்டும் விண்மீன்கள் இப்போது " இருட்டில் சூரியன்" என்ற புதிய தலைப்பில் அல்லயன்ஸ் கம்பெனியில் கிடைக்கிறது. 044 2464 1314

      Delete
  2. உடுமலைடாட்காமில் முயற்சித்துப் பாருங்கள்! அவர்களிடம் இணைய தளத்தில் மூன்று புத்தகங்கள் விவரம் தான் இருக்கும். ஆனால்அதன் நிர்வாகி திரு சிதம்பரத்திடம் பேசினால் எங்கிருந்தாலும் வரவழைத்துக் கொடுத்து விடுவார். எண்டமூரியின் பல புத்தகங்களை திருமகள் நிலையம் வெளியிட்டது. இன்னும் இரண்டு மூன்று பதிப்பகங்களும் வெளியிட்டன., தற்சமயம் அவை எல்லாம் அல்லயன்ஸில் வெளியிட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.. www.alliancebook.com என்ற இணையதளத்தில் தேடக் கிடைக்கிறதா என்று பாருங்கள்.

    ReplyDelete
  3. உடனடியாக பதில் தந்ததற்கு நன்றிங்க..முயற்சி செய்து பார்க்கிறேன்..

    ReplyDelete
  4. நேற்று உங்களுக்குப் பதில் சொன்ன பிறகுதான் அல்லயன்ஸ் தளத்தில் மறுபடியும் பட்டியலைப் பார்த்தேன். கண் சிமிட்டும் விண்மீன்கள் அதில் இல்லை. என்றாலும், udumalai.com இல் முயற்சித்துப் பாருங்கள். திரு சிதம்பரம் உங்களுக்கு உதவக் கூடும்..

    ReplyDelete
  5. Thanks Again.. I'll definitely try...
    can't type in tamil from office..

    ReplyDelete
  6. நானு அவர படிச்சதே இல்லை.அடுத்த முறை மதுரை வந்தேன்னா 2 பொய்தவம் குடுங்க. படிச்சுட்டு தாரேன். நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  7. மதுரைக்கு வந்தாக்க அவசியம் தாரேன்!

    மதுரைக்கு வருகிற செலவிலேயே, அல்லயன்ஸ் பதிப்பகத்தில் எண்டமூரியின் மூன்று அல்லது நான்கு புத்தகங்களை சொந்தமாகவே வாங்கிவிடலாம்! துளசிதளம், மீண்டும் துளசி இந்த இரண்டையும் படித்துப் பாருங்கள்.

    தமிழில் இந்திரா சௌந்தரராஜன் ஒருவர் தான் கொஞ்சம் ஆன்மிகம், கொஞ்சம் யதார்த்தம் , கொஞ்சம் சஸ்பென்ஸ் இப்படிக் கலந்து கதை எழுதுகிறவர். என்ன, எல்லாக் கதைகளுமே அந்த அடித்தளத்தை வைத்து மட்டுமே இருக்கும். எண்டமூரி இன்னும் கொஞ்சம் விரிவான தளங்களைத்தொட்டுக் கதை எழுதியிருக்கிறார்.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)