எப்படியிருந்த தமிழ்க் கதை உலகம் என்று தன்னுடைய ஆதங்கத்தைப் பேசியிருந்த பதிவு இது. "கதை படிக்கிறோம்' என்ற எண்ணத்தையே மறக்கச் செய்த எழுத்தாளர்கள் வலம் வந்த காலம் அது; எழுத்தாளனுக்கும் எழுத்தை நேசித்த வாசகனுக்கும் பொற்காலம் அது! இப்பொழுது எழுத்தாளனுக்குப் பெயர், கதைசொல்லியாம்!"
பூவனம் வலைப் பதிவில் சென்ற ஆகஸ்ட் மாதம், எழுத்தாளர் ஜீவி விமரிசனக் கலையும், கதையின் கதையும் என்ற பதிவில் எழுத்தாளனைக் கதைசொல்லி என்று அழைக்கிறார்களே என்று ரொம்பவுமே ஆதங்கப்பட்டு எழுதியிருந்தார். அவருடைய ஆதங்கத்தைப் புரிந்து கொண்டு 'இதுவும் கடந்துபோகும்!' என்று சொன்னேன். அவருக்கு மனது ஆறவில்லை. ""காலங்கள் மாறும்"--இது சயின்ஸ் விதிதான்! இருந்தாலும் இப்பொழுதும் ராமராஜ்யத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறோம், இல்லையா?"
அப்போது கொஞ்சம் பற்றற்ற நிலையில் இருந்து பதில் எழுதுவதாக நினைத்துக் கொண்டு எழுதியது இது!
"காலங்கள் மாறும் என்ற முழுமையான மாற்றத்தைச் சொல்வதில்லை இது-just a passing phase or passing cloud ஒரு நிலையில் இருந்து இன்னொரு திசைக்கு நகருகிற மாற்றத்தின் இடைப்பட்ட பகுதியாகப் பாருங்களேன்!
எந்தக் காலத்திலுமே கூட கலைஞனை, தகுதிக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினதும் உண்டு, கண்டுகொள்ளாமல் விட்டதும் உண்டு.ஜனங்கள் வெற்று ஆரவாரங்களில், ஒரு கலைஞனைத் தூக்கி நிறுத்தினார்கள், மற்றொருவனைத் தரையில் தேய்த்தார்கள்.
இத்தனையையும் மிஞ்சி நிற்பதில்தான் உண்மையான கலைஞனின் வெற்றி இருக்கிறது.அப்படிப்பட்ட கலைஞனைப் பிரித்து அடையாளம் கண்டுசொல்வதில் தான், நல்ல விமரிசகனின் வெற்றியுமே இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
நினைவில் நின்ற ஒரு பொற்காலத்தைப் பற்றி ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்.எவ்வளவு அழகான கனவாக இருந்தால் தான் என்ன? ஒரு நேரம், கலைந்து போக வேண்டியது தான் இல்லையா? அப்படி கலைந்துபோவது கூட, அதைவிட இன்னொரு அழகிய கனவைப் படைப்பதற்காகத் தான்!
என்றோ ஒருநாள் மறுபடியும் ஒரு அழகிய கனவு வரும்!"
கிருஷ்ண பிரபு மோகமுள் புதினத்தை இப்போதுதான் படித்து விட்டுத் தனது கண்ணோட்டத்தைச் சொல்லியிருக்கிறார்.
"மோகமுள் - பல வருடங்களுக்கு முன்பே திரைப்படமாகப் பார்த்துவிட்டதால் புத்தகத்தை வாங்கியிருந்தும் வாசிக்காமலே வைத்திருந்தேன்."
"ஒரு முதிர் கன்னியை, அவளைவிட பத்து வயது இளையவன் ஒருவன் காதலிப்பதை மையமாக வைத்து தி. ஜாவால் எழுதப்பட்ட அருமையான நாவல். வெளிவந்த காலத்தில் அதனை வாசிப்பதற்கு வீட்டிலுள்ள பெரியவர்கள் அனுமதித்ததில்லை என்று சில வயோதிக நண்பர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்." என்ற வார்த்தைகளைப் படித்தபோது, ஜீவி சார் ஆதங்கப்பட்டது போலவே எனக்கும் ஒரு ஆதங்கம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.
எழுத்தாளர் ஜெயமோகன் தனது எண்ணத்தைச் சொல்வது இப்படி:
மோகமுள் ——- தி.ஜானகிராமன்.
அடிப்படையில் அழகிய கதை. நாவலுக்கான விரிவும் தீவிர அகஆராய்ச்சியும் இல்லை. ஆனால் சொகுசான நடை, தளுக்கான உரையாடல்கள், உள்ளே இறங்கி உலவி வரச்செய்யும் காட்சிச் சித்தரிப்புகள், மறக்கமுடியாதபடி மனதில் பதியும் கதாபாத்திரம் சித்தரிப்புகள் ஆகியவற்றுடன் தமிழ் மனதை கொள்ளை கொண்ட படைப்பு. இசையனுபவம் மொழியை சந்திக்குமிடங்கள் இந்நாவலின் உச்சங்கள். யமுனா என்ற (தி.ஜானகிராமன் முடிவின்றி காதலித்த இலட்சிய பெண்ணுருவான) மராட்டிய பேரிளம் பெண்ணை ஒரு தலையாக காதலிக்கும் பாபு என்ற இசைக்கலைஞனின் புரிந்து கொள்ள முடியாத (அவனால்) தாகத்தின் கதை.
1956ல் பிரசுரமாயிற்று.
அம்மா வந்தாள். —- தி. ஜானகிராமன்.
மரபான தமிழ் ஒழுக்கவியல் மீது ஃபிராய்டியம் ஓங்கி அடித்ததின் விளைவு. அலங்காரத்தம்மாள் தன் ( நெறிதவறியதனால் விளைந்த) குற்ற உணர்வை வெல்ல மகன் அப்புவை வேத பண்டிதனாக்க முயல்கிறாள். நெறிகளுக்கு அப்பால் உள்ள காதலின் தூய்மையை அப்பு உணர்ந்து தன்னை விரும்பும் இளம் விதவை இந்துவை ஏற்கிறான். ஜானகிராமனின் படைப்புகளில் வரும் ‘காமம் கனிந்த ‘ அழகிய பெண்கள் தமிழ் வாசகனுக்குள் பகற்கனவை விதைத்தவை. பாலகுமாரன்கள் முளைக்கும் நாற்றங்கால்.
1967ல் பிரசுரமாயிற்று.
மரபான தமிழ் ஒழுக்கவியலை என்னவோ தி.ஜா வந்து தான் கெடுத்து விட்டது போல இந்த வார்த்தை இருக்கிறது! சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் சொன்னதெல்லாம், தி.ஜானகிராமனை மட்டம் தட்ட வேண்டும் என்ற ஒரே நினைப்பில் சௌகரியமாக மறந்து போய்விடுகிறது. மோகமுள்ளில் நாவலுக்கான விரிவும், தீவீர அக ஆராய்ச்சியும் இல்லையாம்!
இப்படித் தன் எழுத்தைத் தானே பாராட்டிக் கொள்ளும் ஒருவருடைய எழுத்தில் இருந்து நல்ல எழுத்தைப் பிரித்து அறிவது மிகவுமே கடினம். தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு அவதானிப்பு எனக்கு உண்டு என்று பீற்றிக் கொள்கிறவருக்கு, தி.ஜாவைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பது தான் உண்மை.
தி.ஜானகிராமன் என்ற தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளருக்கு, காஞ்சி மடத்தின் கடுமையான அனுஷ்டானம் என்ற போலித்தனத்தைச் சாடுகிற தெம்பு அந்த நாளிலேயே இருந்தது. காஞ்சிப்பெரியவர் என்றாலே எல்லோரும் கைகட்டி வாய் பொத்தி நின்ற அந்த நாட்களிலேயே அங்கே இருந்த ஆஷாடபூதித் தனத்தைச் சாடினவர் தி.ஜா!.
இதயம் பேசுகிறது மணியன் மாதிரி சில தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளர்கள், தி.ஜாவை வசைபாடியதை விட ஜெயமோகன் அபத்தமாக உளறுவது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை! மணியன் போன்றவர்களுக்குத் தாங்கள், காஞ்சி மடத்தின் காவலர்கள் என்ற மமதை, உள்நோக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக வியாபாரம் எல்லாம் இருந்தது. ஜெயமோகன் மாதிரித் தற்பெருமையில் ஊறிய எழுத்தாளர்களுக்குத் தங்களுக்கு முன்னால் கொண்டாடப் பட்ட எழுத்தாளர்களைப் பற்றித் தப்பும் தவறுமாக இப்படி எதையாவது பேத்திக் கொண்டிருப்பது, ஒரு பிழைப்பாக இருக்கிறது.
இத்தனை குப்பையையும் கிளறுவதற்கு ஒரு காரணமிருக்கிறது.
தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே விமரிசனம் செய்வது, இங்கே தமிழில் மிக எளிதாக இருக்கிறது. தங்களுக்குப் பிடித்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது! இல்லையோ, தரையில் போட்டுத் தேய்ப்பது!
நல்ல எழுத்து, நல்ல வாசிப்பு என்பது வீணையும் மீட்டும் விரல்களும் சேருகிற மாதிரி! இனிமையான இசை அங்கே தான் பிறக்கும்!
ஜீவி சார் வேறோர் பதிவில் தி.ஜாவைப் பற்றி இப்படி சொல்கிறார்!
"'சக்திவைத்திய'மும், 'சிவப்பு ரிக்க்ஷா'வும் சிறுகதைத் தொகுப்புகள்.
'சக்திவைத்திய'த்திற்கு சாகித்ய அகாடமி பரிசு தேடிவந்தது. பாத்திரப்படைப்புகளுக்கு உளவியல் காரணங்களை எடுத்துச்சொல்லி, அவர் உலவ விட்ட விதவிதமான மனிதர்களின் பால் படிப்பவரின் பரிவைப் பொழியும்படிச் செய்த மிகச்சிறந்த எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்கள். எல்லோரையும் தம் எழுத்திலும், வாழ்க்கையிலும் நேசித்த மனிதாபிமானி."
நல்ல வாசகனாக இருக்கும் சுகானுபவத்தைத் தமிழில் தர முடிந்த எழுத்தாளர்களில் தி.ஜானகிராமன் முதல் வரிசையில் இருக்கிறார்! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிற, படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும், ஒரு புதிய அனுபவக் கிளர்ச்சியைத் தர வல்லதாக, படிக்கும்போதே பாத்திரங்களோடு அன்பில் ஒன்றிடச் செய்கிற விந்தையாக அவருடைய எழுத்து இருந்தது. அதனாலேயே, இன்றைக்கும் படித்தே ஆக வேண்டிய எழுத்தாகவும் இருக்கிறது!
எது நல்ல எழுத்து என்ற என்னுடைய எண்ணவோட்டத்தை இங்கே நிறைவு செய்கிறேன்! அப்படித் தேடிப் பிடித்துப் படித்த எழுத்தாளர்களை, அவர்களுடைய படைப்புக்களைத் தொடர்ந்து இந்தப் பக்கங்களில்பார்ப்போம்!
good said. great work about janaki . good effort.
ReplyDeleteவாருங்கள் சரவணன்! தமிழிலேயே பதிவு எழுதுகிறீர்கள்! பின்னூட்டம் மட்டும் ஆங்கிலத்தில்..?
ReplyDeleteதி.ஜானகிராமன் என்று முழுமையாகச் சொல்லிப் பாருங்கள்! காவிரிக் கரையோரம் வீசும் ஒரு சுகமான காற்றை உங்களால் உணர முடியும்!
அவர் எழுதிய எந்தெந்தப் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்கள், உங்கள் கருத்து என்ன என்பதையும் சேர்த்துச் சொல்லியிருந்தால், பின்னூட்டமும் கூட முழுமையாகஇருந்திருக்கும்!
ஜீவியின் அந்தப் பதிவை இப்போது தான் படித்தேன்,
ReplyDelete//பேச்சு, எழுத்து, ஆற்றங்கரை, அல்லது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு குழந்தைகளுக்குச் சொல்கிற கதை, இப்படி எதுவானாலும், சொல்லப் படுகிற ஒரு விஷயம்-அது எப்படிச் சொல்லப் படுகிறது இந்த இரண்டே அளவீடுகளுக்குள் அடங்கி விடும்போது கதை சொல்லி, எழுத்தாளர், கூத்துக் கட்டுகிறவர், உபன்யாசம் செய்கிறவர், இப்படி எல்லா வகை தொகைககுமே கூட அடங்கி விடுவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.//
உங்களின் மேற்கண்ட பின்னூட்டத்திலும் எனக்கு முழு ஒப்புதல் உண்டு, எழுத்தாளனை கதை சொல்லி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும், தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராய் கொண்டாடப்படும் கிரா, கரிசலின் கதை சொல்லி தானே!
திஜாவின் படைப்புகளில் முதன்முதலில் (அவரைப் பற்றியோ தமிழ் இலக்கிய உலகம் பற்றியோ அறிந்து கொள்ளும் முன், மேல்நிலை வகுப்பில், தமிழ் இரண்டாம் தாளின் பாடப் பகுதியாய் வந்த, அற்புதமான சிறுகதை தொகுப்பில்) படித்தது "முள்முடி" தான்.
ReplyDeleteஅன்று, மனதில் ஏற்பட்ட தாக்கம், நள்ளிரவில் பாதியிலிருந்து பார்க்கத் தொடங்கிய மோகமுள்ளால் அதிகமானது. இருந்தும் அப்போதைய கால கட்டத்தில் என்னால் வாங்க முடிந்தது மரப்பசு தான். (என்னை பாதித்த பல புத்தகங்களைப் போலவே) முதல் வாசிப்பு பத்து பக்கங்களைக் கூட தாண்ட முடியாமல் நின்று விட்டது. அடுத்தமுறை தொடங்கிய வாசிப்பு மூன்று முறை மீண்டும் மீண்டும் படித்த பின்பு தான்நிட்றது.
2009 புத்தகக் காட்சியில் வாங்கிய மோகமுள்ளோ, ஆறு முறை வாசித்த பின்னும் இன்னும் என்னைக் குத்திக்கொண்டே இருக்கிறது. ராஜமும், அந்த வட நாட்டுப்பாடகரின் ஆலாபனையும் என்றும் மறக்க முடியாததாய் மனதில் உள்ளது. என்னால் ஐந்து நிமிடங்கள் கூட தொடர்ச்சியாய் கேட்க முடியாத கர்னாடக சங்கீதம் பற்றிய திஜாவின் வரிகளைப் படிக்கும் போது, இசைக்கலைஞராய்ப் பிறக்க வேண்டியவர், தவறி எழுத்தாளராகி விட்டாரா, என்று எஸ்ரா கேட்டது சரியென்றே தோன்றுகிறது.
வாருங்கள் சங்கர்!
ReplyDeleteதி.ஜானகிராமன் தான் படைத்த பாத்திரங்கள் வழியாக, அன்பையும் நேசத்தையுமே மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். அங்கே இங்கே ஒன்றிரண்டு வார்த்தைகளை வைத்துக் கொண்டு, அவரைப் பற்றிய நெகடிவான சித்திரங்களை விமரிசனமாக எழுதுவது, உண்மையிலேயே அப்படி எழுதுபவர்களின் இயலாமையையே காட்டுகிறது.
ஒரு ஓவியன், சிற்பி, எப்படித் தான் சமைக்க இருக்கும் உருவத்தை மனதில் உள்வாங்கிக் கொண்டு உருவாக்குகிறார்களோ, அதே மாதிரி, தி.ஜா தான் பார்த்த மனிதர்களுடைய அகத்தை, அவர்களுடைய உண்மையான இயல்பை உள்வாங்கிக் கொண்டு பாத்திரங்களாகப் படைத்தவர்.
அன்பு, எங்கும் எதிலும் அன்பு இதைத் தவிர தி.ஜாவின் எழுத்தைச் சொல்வதற்கு வேறு வார்த்தைகளே இல்லை! அன்பு சுரக்கும் விதத்தை அவர் மாதிரி வார்த்தைகளில் சொல்ல முடிந்தவர்கள் அனேகமாக இல்லையென்றே சொல்லி விடலாம்.
எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது. ஆனால், அதன் ஆழத்தை, ஆத்மார்த்தமான பாவனையை, தி.ஜானகிராமனிடமிருந்து தான் அறிந்துகொண்டேன். அவருடைய வெளிச்சத்தில், கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலைப் படித்தபோது தான், இசை வேளாலர்களுடைய வாழ்க்கையை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஜீவி சார் ஆதங்கப்பட்டதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.
ReplyDeleteஒண்ணாங்கிளாஸ் படம் நடத்துபவரும் ஆசிரியர் தான்! டாக்டரேட் படிப்புக்கு வழிநடத்துவதும் ஆசிரியர் தான்! இரண்டு பிரியும் வாத்தி என்று அழைத்தால் அது சரியாக இருக்குமா? இது அவருடைய ஆதங்கம்!
மேம்போக்காகப் பார்க்கும்போது அது சரியாகத் தான் இருக்கும் என்று பட்டாலும்,இரண்டு படிநிலைகளுமே வேறுதான் இல்லையா?
நண்பர் கிரிஷ்ணமூர்த்தி மற்றும்
ReplyDeleteஜிவி அவர்களுக்கு,
உங்களுக்கும் மேலாக ஜெயகாந்தனின் எழுத்தை
ரசிப்பவன் நான்.கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்
ஜெயகாந்தன் முதல் முதலில் எழுதி இயக்கிய
திரைப்படத்தை அவரே ஊர் ஊராகக்
கொண்டு சென்று காலைக்காட்சிகளில்
திரையிட்டுக் காண்பித்த போது இந்த முயற்சி
எப்படியாவது வெற்றி பெறவேண்டுமே என்று ஆவலோடு
வேண்டி விரும்பி கூடவே அலைந்தவன்
தான் நானும்.
என் கட்டுரையை மீண்டும் ஒரு முறை படித்துப்
பாருங்கள். அவர் எழுத்தை எங்கேயாவது குறை
கூறி இருக்கிறேனா ?
நான் குறை கண்டது ஜெயகாந்தன் என்கிற மனிதரில் தான் !
தன்மானச்சிங்கமாக இருந்த, யாருக்கும்
பணியாதவராக இருந்த ஜெயகாந்தன் -
இன்று கனிமொழியை அண்ணாவுடனும், பெரியாருடனும்
ஒப்பிட்டு பாராட்டிப் பேசும் அளவிற்கு இறங்கி
வந்து விட்டதைப் பற்றித்
தான் நான் விமரிசனம் செய்தேன்.
முதுமை காரணமாகவோ, தேவைகள் காரணமாகவோ
ஜெயகாந்தன் தன் நிலை தாழக்கூடாது. அவருக்கு
தேவை எதுவாக இருந்தாலும் - ஒரு குரல் கொடுத்தால் -
உங்களைப்போல், என்னைப்போல் ஆயிரம் ஆயிரம்
வாசகர்கள் இருக்கிறோம் - உதவி செய்ய
என்று தான் நான் கூறுவேன்.
வாசகர்களிடம் உதவி பெறுவதால் அவருக்கு எந்த
இழுக்கும் வராது. அதிகாரத்தில் இருப்பவரை
அண்டினால் தானே ஏளனம் பிறக்கிறது !
அந்தக் கூட்ட அரங்கிலேயே அவருக்கு நிகழ்ந்த
அவமானம் பற்றிய ஆற்றாமை தான்
என் அந்தக் கட்டுரை.
என் வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு
நன்றி நண்பர்களே. அடிக்கடி வாருங்கள்.
காவிரிமைந்தன் -http://www.vimarisanam.wordpress.com
வாருங்கள் காவிரிமைந்தன்!
ReplyDeleteநிறையவே உணர்ச்சி வசப்படுகிறீர்கள்!
உங்களுடைய ஆதங்கத்தைப் புரிந்துகொண்ட பிறகே ஜெயகாந்தனை, எது எழுத்து என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் விதத்தில் மேற்கோளாகக் காட்ட முனைந்தேன். நீங்கள் அவருடைய அபிமானியாகவும், கூட்டாளியாகவும் இருந்திருக்கலாம், என்னை விட நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கலாம், அதைப் பற்றி எல்லாம் நானோ, ஜீவீ சாரோ எதுவும் பேசவில்லை.
உங்களுடைய பதிலில் இருந்து, தகுதி இல்லாதவர்களிடம் கையேந்துகிற அளவுக்குத் தாழ்ந்து விட்டாரே என்ற ஆதங்கம் தான் கோபமான வார்த்தைகளில், சிங்கமாக இருந்த ஜெயகாந்தன் என்று உங்களைச் சொல்ல வைத்திருக்கிறதென்று நன்றாகப் புரிகிறது.
ஜெயகாந்தன் என்ன செய்திருக்கவேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை. அதேபோல, ஜெயகாந்தனும், எவர் எதிர்ப்ப்பார்கள், ஆதரிப்பார்கள் என்று கணக்குப் போட்டு எதையும் செய்வதாகவோ, பேசுவதாகவோ கூட எனக்குத் தோன்றவில்லை. அப்போதும் கூட, ஜெயகாந்தன் சொன்னது செய்தது சரியா, தவறா என்பதைப் பற்றியோ, ஒரு வாசகராக, அபிமானியாக உங்களைத் தொட்டுக் கூட தனிப்பட்ட விமரிசனம் எதையும் முன்வைக்கவில்லை.
அவர் தன்னுடைய இயல்பிலேயே இருக்கிறார். அதைச் சொல்வதற்காகத் தான், மாதவராஜ் வலைப் பக்கங்களில் இருந்த அவரது பேட்டியில் ஒரே ஒரு கேள்விக்கான பதிலை மட்டும், அதன் பொருத்தம் கருதிச் சொல்லியிருந்தேன். இப்போது கூட ஜெயகாந்தனுக்கு எதிராக மாதர் சங்கங்கள் போர்க்கொடி என்று ஒரு விவாத இழையில் படித்தபோது என் மனதில் பட்டதை மட்டுமே என்னுடைய இன்னொரு பதிவில் சொல்லியிருக்கிறேன்.