விமலாதித்த மாமல்லன் என்றொரு எழுத்தாளர். சமூக ஊடகங்களில் தடித்த வார்த்தைகளில் interact செய்கிற அலாதியான குணம். ஒரு சாம்பிளுக்காக இவருடைய கதைகளைக் கொஞ்சம் வாசித்திருக்கிறேன் என்பதைத் தாண்டி அதிகப்பரிச்சயம் இல்லை. இவருடைய வழக்கமான முகநூல் கடி ஒன்றில் தான் இந்த நிகழ்ச்சியைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
திராவிட ஆச்சி மாதிரி இதுக்கும் 50 ஆண்டு நிறைவு கொண்டாட்டமா கொய்யால😂😂😂
வாசகநிலை பல்வேறு படித்தளங்களில் உள்ளது என்பதைக் கொஞ்சம் மனதில் வைத்துக் கொண்டால், இப்படி எள்ளி நகையாடவோ தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடவோ பெரிதாக ஒன்றுமே இல்லை அவரவர் அந்தந்த நேரத்து மனநிலை மட்டுமே இதுமாதிரியான விஷயங்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஆரம்ப நிலை வாசிப்பில் தமிழ்வாணன் கூடப் பெரிதாகத் தோன்றிய காலங்கள் உண்டு. சங்கர்லால் துப்பறிகிறார் என்ற வார்த்தையே ஒரு பிரமிப்பையும் வாசிக்கவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டியதுண்டு. அப்புறம் ......? தமிழ்வாணனை இன்றுவரை நான் திரும்பவும் என் வாசிப்புக்கு எடுத்ததில்லை. அதே மாதிரி கல்லூரி நாட்களில் James Hadley Chase நாவல்கள்! படிக்க ஆரம்பித்தால், கீழே வைக்க மனம் வந்ததே இல்லை. நடுவில் வைத்துவிட்டு மீண்டும் படிக்கலாம் என்று ஆரம்பித்தால் அவ்வளவு சுவாரசியமாக இருந்ததில்லை. James Hadley Chase நாவல்கள் எல்லாம் ஒரேமூச்சில் படித்து முடிக்கிற வகையில் travelling companion மாதிரி எழுதப்பட்டவை. இரண்டாவது முறை வாசிப்புக்காக எழுதப்பட்டவை அல்ல என அதன் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு எனக்கும் சொன்னது என்னுடைய இரண்டாவது அண்ணன்தான்!
தமிழில் தத்துபித்தென்று என்னத்தையாவது எழுதிக் கதையாக்கின உஷா சுப்ரமணியன் போல நிறைய எழுத்தாளர்களை அவர்கள் எழுத்தில் ஒரு சோறு பதம் என்று பார்த்துவிட்டு நிராகரித்திருக்கிறேன். பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் போன்றவர்களையும் ஆரம்ப நாட்களில் கொஞ்சம் வாசித்து, அத்துடன் மறந்ததுதான்! ஆனால் இன்றும் கூட லயன், முத்து, இந்திரஜால் காமிக்சின் தீராக்காதலன் என்பதையும் சொல்லியாகவேண்டும்!
மாமல்லனுடைய சீண்டல் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது. எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் ஸ்ருதி டிவி உபயத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தப் பாராட்டு விழாவில் என்ன நடந்தது என்பதைக் கொஞ்சம் பார்த்து விடலாம்!
பா.ராகவன் எழுதி வைத்ததை செல்போனில் பார்த்துப் பேசியது கூட உறுத்தலாக இல்லை! கல்கி, சுஜாதா, ராஜேஷ் குமார் மூவரையும் ஒரே தராசில் நிறுத்துப் பார்த்த மாதிரிப் பேசியது வஞ்சமா? புகழ்ச்சியா? வீடியோ 7 நிமிடம்.
எழுத்தாளர் ராஜேஷ் குமாருடைய ஏற்புரை! 24 நிமிடம். பாக்கெட் நாவல் அசோகன் இல்லையென்றால் ராஜேஷ் குமார் இந்த அளவுக்குப் பாப்புலர் ஆகியிருக்க முடியுமா? அவரும் அதை உணர்ந்து பேசியது நல்ல விஷயம்.
ராஜேஷ் குமாரை விடுங்கள்! யாருடைய எழுத்தை, எதற்காகக் கொண்டாட விரும்புவீர்கள்? என்ன மாதிரியான எழுத்து உங்களுக்குப் பிடிக்கும்? மீள்வாசிப்பு செய்ய நினைக்கும் புத்தகம் எது? ஏன்? கொஞ்சம் சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
ஒரேமூச்சில் படித்து முடிக்கிற வகையில் travelling companion மாதிரி எழுதப்பட்டவை. இரண்டாவது முறை வாசிப்புக்காக எழுதப்பட்டவை அல்ல//
ReplyDeleteஇதை ராஜேஷ் குமாரின் பாக்கெட் நாவலும் இப்படித்தான். நான் பயணத்தின் போது வாசிக்க வாங்கியதுண்டு. எனக்குத் த்ரில்லர் பிடிக்கும். ஆனால் இவை மீள் வாசிப்புக்கானது அல்ல.
மற்றபடி வேறு நாவல்கள் அதிகம் வாசித்ததில்லை. பொன்னியின் செல்வன் கல்லூரிக் காலத்தில் வாசித்தது எனவெ மீண்டும் வாசிக்கும் ஆர்வம் உள்ளது. சுஜாதாவின் கதைகள் எல்லாம் வாசிக்க வேண்டும் என்ற ஆவலும் உள்ளது. நெட்டில் கிடைப்பதை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். தவிர நம்ம நட்புகள் ஸ்ரீராம், பானுக்கா சில புத்தகங்கள் ப்ளாகிலோ அல்லது பேசும் போதோ சொல்லுவதைக் குறித்து வைத்து நெட்டில் டவுன்லோட் செய்து வைக்கிறேன் வாசிக்க..
கீதா
வாருங்கள் அம்மா!
Deleteவாசிப்பு அனுபவம் பலபடித்தளங்கள் கொண்டது. எல்லா நூல்களும் எல்லோருக்குமானதல்ல. தேர்ந்தெடுத்து வாசிப்பதற்கும் நல்ல நூல்களைப் பரிந்துரை செய்வதற்கும் முதலில் நல்ல விமரிசகர்கள் இருக்கவேண்டும். துரதிர்ஷ்ட வசமாக தமிழில் முறையான திறனாய்வு, விமரிசனங்கள் செய்கிற விதம் வளர்த்தெடுக்கப் படவில்லை.
கல்கியின் பொன்னியின் செல்வன் தான் எல்லோருக்கும் தெரிகிறது. ஒப்பீட்டளவில் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு இரண்டுமே பொன்னியின் செல்வனை விட மிக அருமையானவை, முழுமையானவை. இந்த மூன்று கதைகளைத் தவிர கல்கி எழுதிய பல நெடுங்கதைகள், தியாக பூமி, அலை ஓசை எல்லாமே நல்ல கதைகள் தான் என்றாலும் அவை சுதந்திரப்போராட்ட காலத்தை ஒட்டி எழுதப்பட்டவை என்பதால் இன்றைக்கு வாசிக்கும்போது என்னமாதிரி இருக்கும் என்பது, ஆளுக்காள் வேறுபடும்.
https://www.projectmadurai.org/pmworks.html இந்த முகவரியில் உள்ள நீண்ட பட்டியலில் பொன்னியின் செல்வன் 169வதாக 193, 194, 195 மற்றும் 201 இல் சிவகாமியின் சபதமும், 205, 206 இல் அலை ஓசை, மற்றும் 214 இல் பார்த்திபன் கனவு, 376 இல் தியாகபூமியும் கிடைக்கும். பொறுமையாக எதையெல்லாம் படிக்க முடிகிறது என்று முயற்சித்துவிட்டுச் சொல்லுங்கள்.
சார் ஆ!! நான் சின்னவள்தான் சார் அம்மானு எல்லாம் சொல்லறீங்களே!!!!! கீதானே சொல்லலாம்...
Deleteகுறித்துக் கொண்டேன் சார் உங்கள் பதில் பார்த்து. கல்கியின் சிறு கதைகளும் இப்போது வாசித்து முடித்தேன் ராய செல்லப்பா சார் கொடுத்திருந்தார் அந்த புக்கை.
அப்புறம் கல்கி தொடர முடியாமல் விட்டுப் போனதை அவர் மகன் திரு ராஜேந்திரன் எழுதி முடித்த கதை என் என் மாமனார் தொகுத்து வைத்திருந்த பைண்டிங்கில் இருந்தது அதையும் வாசித்தேன். அது இப்போது ராயசெல்லப்பா சாரிடம் இருக்கிறது.
நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியும் எடுத்து சேவ் செய்து வைத்துவிட்டேன் சார். மிக்க நன்றி
கீதா
வாருங்கள் கீதா அம்மா!
Deleteசிறுபெண்ணாக இருந்தாலும் வளர்ந்து பெரியவர்களானாலும் அம்மா என்று அழைத்தே எனக்குப் பழக்கமாகி விட்டது. அலை ஓசை தொடராகக் கல்கியில் வந்து கொண்டிருந்தபோதே கல்கி இறந்துவிட்டார். அதை எழுதி முடித்தது கல்கியின் மகள் ஆனந்தி! கி ராஜேந்திரன் அல்ல! கல்கியிடம் இருந்த ஒரு அலாதியான வழக்கம், இந்தக் கதை எழுதுவதானாலும் அதைத் தன் மகள் மகன் இருவருக்கும் சொல்லிவிட்டுத்தான் எழுதுவாராம்! குழந்தைகள் புரிந்துகொள்ளத் தடுமாறினால், அதை உடனே புரிகிற மாதிரி மாற்றம் செய்து கொள்வார் என்பதை தந்தையைப் பற்றிய நினைவுகளை ஆனந்தியே பகிர்ந்து கொண்டிருக்கிறார். கல்கியின் எழுத்து நடை மிக எளிமையாக இருந்ததற்கான காரணமும் இதுவே.
விமலாதித்தான் மாமல்லன் அமேசான் கிண்டிலில் புத்தகம் வெளியிடுவது எப்படினு ஒரு மின் நூல் போட்டிருக்கிறார். நல்ல பயனுள்ளதா இருக்கு எனக்குத் தோழி ஒருவர் அதை வாட்சப்பில் அனுப்பித் தந்தார்.
ReplyDeleteகீதா
இந்தத்தகவலை சில காலத்துக்கு முன்பே, அதாவது அவர் அமேசானில் தன்னுடைய புத்தகங்களை வெளியிட ஆரம்பித்து அதைக்குறித்து கூகிள் ப்ளஸ் முகநூல் பகிவுகளில் சொன்ன காலத்திலிருந்தே, அறிவேன். ஒரு வாசகனாக மட்டுமே இருந்துவிட விரும்புவதால் அமேசான் எழுத்தாளர் ஆவதெப்படி என்று தெரிந்து கொள்வதில் விருப்பமில்லை.
Deleteசுஜாதா கதைகள் கொடுக்கும் ஆச்சர்யங்கள் தனித்தன்மை கொண்டது. எப்போது படித்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஆச்சரியப்படுத்தும். அதுவே மறுமுறை படித்தாலும் கவரும். பாயசத்தில் திராக்ஷை மாதிரி. ராஜேஷ் குமார் கதைகள் அந்த ஆச்சர்யத்தை மட்டுமே பிரதானப் படுத்தி கண்டெண்ட்டில் கோட்டை விட்ட ரகம். வேகமாக கதை ஓடுவதால் அந்த நேரத்துக்கு நன்றாக இருப்பது போல தோன்றினாலும் கொஞ்சம் யோசித்தால் பல் இளிக்கும் ரகம்!
ReplyDeleteகல்கி - சுஜாதா - ராஜேஷ் குமார் ஒரே தராசில்? ராகவன் வெறும் பாப்புலாரிட்டி பற்றி கம்பேர் பண்ணியிருப்பாரோ?
வாருங்கள் பந்து!
Deleteஅந்த 7 நிமிட வீடியோவை ஒருமுறை பார்த்துவிடுங்கள்! பா ராகவன் என்னமோ நாலுவார்த்தை பாராட்டியாக வேண்டுமே என்பதற்காக கொஞ்சம் உளறிய மாதிரி இருந்தது. கல்கி ஒரு விதம், சுஜாதா வேறுவிதம்! பாப்புலாரிடியை வைத்துப்பார்த்தாலும் கூட ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை. ஆனால் இதில் ராஜேஷ் குமாரை எப்ப்டிக் கொண்டுவந்து சேர்த்தார் என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியம்!
என்ன மாதிரியான எழுத்து உங்களுக்குப் பிடிக்கும்? மீள்வாசிப்பு செய்ய நினைக்கும் புத்தகம் எது? ஏன்? கொஞ்சம் சொல்லுங்களேன்!
நாவல்கள் படிப்பதில் இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. சமீபத்தில் படித்ததில் மிகவும் பிடித்தது எஸ் எல் பைரப்பா எழுதிய பர்வா .. தமிழில் பருவம். மஹாபாரதத்தை வேராகக் கொண்டு அனைத்து பாத்திரங்களையும் சாதாரண மனிதர்களாகக் கொண்டு எழுதப்பட்டது.
Deleteபடிக்கப் படிக்க வெகு சுவாரஸ்யமாகவும் பல நாட்களாக நான் பார்த்த பார்வையை மாற்றி அமைத்தும் என்னை அசைத்து விட்டது. ஒவ்வொரு முறை படிக்கும்போதும், இதை எப்படி கவனிக்காமல் விட்டேன் என்று ஆச்சர்யப்படுத்துகிறது. வெகுவாக பரிந்துரைக்கிறேன்!
பா.ராகவன் தினமணியில் எழுதிய யதி தொடரை படித்தேன். சுவாரஸ்யமாக எழுதிக்கொண்டே போய் தடாலென்று தூக்கிப் போட்டு உடைத்த மாதிரி இருந்தது முடிக்கும்போது.
இதனாலேயே ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது. எழுத்து புத்திசாலித்தனமாக இல்லை என்றால் கவருவது இல்லை!
வாருங்கள் பந்து!
Deleteபைரப்பா புத்தகத்தை எல்லோரும் சிலாகித்துச் சொல்கிறார்களே என்று நானும் என்னுடைய சேகரத்தில் வைத்திருக்கிறேன், ஆனால் இன்னமும் எடுத்து வாசிக்க பொழுது வாய்க்கவில்லை. நம்முடைய இதிஹாசங்கள் இதுபோல எத்தனை பரிசோதனைகளை வேண்டுமானாலும் தாங்கும் என்பது தமிழில் திறனாய்வு என்று சொல்லிக்கொள்ளாமலேயே தங்களுடைய கண்ணோட்டத்தில் எடைபோட முயன்ற பல எழுத்தாள ஆராய்ச்சியாளர்களை நிறைய வாசித்திருக்கிறேன். பைரப்பா எழுதிய புத்தகம் உங்களுடைய பார்வையை மாற்றிவிட்டதென்றால், எப்படி என்று கொஞ்சம் விரிவாகத் தெரிந்துகொள்ள ஆசை!
பா ராகவனை நான் அவளவாகப் பொருட்படுத்துவதில்லை. அவர் எழுதிய புத்தகங்களில் இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் நான் வாசித்ததில்லை. நானறிந்தவரை, அவர் திறமையான எடிட்டராக அறியப்பட்ட அளவுக்கு, கொண்டாடும் அளவுக்கான எழுத்தாளராக இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம். கருணாநிதி கூட ராமானுஜர் என்ற தொடருக்கு வசனம் எழுதினார் என்பதற்காக ராமாநுஜரைப் புரிந்து கொள்ள முயற்சியாவது செய்தார் என்று சொல்லிவிட முடியுமா? பா ராகவனும் அதே ரகம்தான்!
வாசிப்பதில் ஆர்வம் குறைய வேண்டிய அவசியம் என்ன? எனக்குப் போரடித்தால் ஒரு ஆலிவர் டிவிஸ்டையோ அல்லது அலெக்சாண்டர் டூமா எழுதிய பழைய நாவல்களை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்து விடுவேன். தி ஜானகிராமன், ஜெயகாந்தன், conan doyle, robert ludlum என்று பல எழுத்தாளர்கள் என்னுடைய மீள்வாசிப்பில் இருக்கிறார்கள்! இவர்களெல்லாம் புத்திசாலித்தனமாக எழுதினார்கள் என்பதல்ல; எழுதிய எழுத்தில் நேர்மை இருந்தது என்பதல்லவா முக்கியம்!
ReplyDeleteதிங்கள் கிழமை வரைக்கும் தொடர்ந்து இரவு பகலாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் வேலை. தினமும் உங்கள் பதிவுகளைப் பார்க்க மட்டுமே முடிகின்றது. மேலோட்டமாக வாசிக்க விரும்புவதில்லை. சேமித்து வைத்துள்ளேன்.
1. ஆங்கில வழிக் கல்வியில் படித்து விட்டு விஜய் தொலைக்காட்சி புண்ணியத்தில் பெயரும் புகழும் பெற்று, உச்சரிக்கத் தெரியாமல் தமிழ் பற்றி அடிப்படை அறிவு கூட தெரியாமல் தாளில் எழுதக்கூடத் தெரியாமல் திறன் பேசியில் தங்கீலிஷ் ல் எழுதி வைத்துக் கொண்டு பாடும் பாடகர்களைப் பார்த்து இருக்கக்கூடும். அவர்களின் சின்ன வயது முயன்றால் கற்றுக் கொள்ள முடியும். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டு தமிழர்களுக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்த சுசீலா அம்மா அவர்களைப் பார்த்து இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் கற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இசை அமைப்பாளர் இது குறித்துக் கவலைப்பட மாட்டார். பாடல் காட்சி யூ டியூப் ல் வெளியிடும் போதே தங்கிலிஷ் வார்த்தைகளை வரி வரியாகப் போடும் போது வரும் எரிச்சல் அளவில்லாதது. பா.ராகவன் மேல் தவறில்லை. எழுத்தாளர்களுக்கு மேடைப் பேச்சு அவ்வளவு சீக்கிரம் கைகூடாது. இது ஒரு வகையில் நல்லது தான். சொல்ல வந்த விசயத்தைத் தயக்கமில்லாமல் சொல்ல உதவும்.
2. கடந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனை எழுத்தாளர்கள் இன்னமும் கொண்டாடப்படுகின்றார்கள். மூன்றாவது நான்காவது ஐந்தாவது தலைமுறை வரைக்கும் படிக்கும் நிலையில் உள்ளவர்கள் எனக்குத் தெரிந்து ராஜேஷ்குமார் அவர்களும் ஒருவர். என் மகள் இரண்டு நாளில் பத்துக்கும் மேற்பட்ட ராஜேஷ் குமார் புத்தகங்களை கிண்டில் வழியாக வாசித்து முடித்தார். விட்டால் பாடப் புத்தகங்களை விட இவரையே படித்துக் கொண்டிருப்பார்.
3. எழுத்தாளரின் வெற்றி ஒருவரை வாசிக்க வைப்பது. தொடர்ந்து அவர் எழுத்துக்களை வாசிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது. இலக்கியம் லேகியம் சமாச்சாரங்கள் பேசலாம், விவாதிக்கலாம். ஆனால் அது சிறிய வட்டம். ஒரு முறை வாசித்து விட்டுத் தூக்கி எறியக்கூடியது என்று பலரைச் சுட்டிக் காட்டலாம். திரைப்படங்களும் அப்படித்தானே உள்ளது. ஆனால் அந்த ஒரு மணி நேரம் நம்மைக் கட்டிப் போட வைத்து விடுகின்றார்களே? அதுவே எழுத்தாளர்களின் சாதனை தான். என்னால் இன்று வரையிலும் ராஜேஷ் குமார் கதைகளைப் படிக்க முடிகின்றது. சிறப்பாகவே உள்ளது.
4.எழுத்தாளர்கள் அனைவரையும் திருப்தி படுத்திவிட முடியாது. அவரவர் அனுபவம் வாழ்ந்த வளரும் சூழல் பொறுத்தே வாசிக்கும் எழுத்து நம்மைக் கவரும்.
இந்த பாராட்டு விழா நிகழ்வை முழுமையாகப் பார்க்க வேண்டும். நன்றி.
வாருங்கள் ஜோதிஜி!
Deleteபா ராகவனை நான் பொருட்படுத்தக்கூடிய எழுத்தாளராக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறபோது அவருடைய மேடைப்பேச்சை மட்டும் எப்படிப் பொருட்டாக எடுத்துக் கொள்ளுவேன்?
ராஜேஷ் குமாரையெல்லாம் எடுத்துக்கொண்டு இங்கே ஒரு பதிவு எழுதுவதற்கு விமலாதித்த மாமல்லன் சீண்டல் மட்டுமல்ல, நீங்கள் உங்கள் மகள்கள் இருவரும் கிண்டிலில் ராஜேஷ் குமார் மின்னூல்களாக நிறைத்து வாசித்துக் கொண்டிருப்பதைப் பற்றி எழுதியிருந்ததும் ஒரு காரணம். புதிதாக வாசிக்க ஆரம்பிக்கிறவர்களுடைய இளம்பருவ ஆர்வக் கோளாறு என்பதற்கு மேல் அதில் புதிதாக ஒன்றுமே இல்லை. ஒரே ஒருவருடம், அதற்குப்பின் ராஜேஷ் குமாரை விரும்பிப் படிப்பார்களா என்று பொறுத்திருந்துதான் சொல்லுங்களேன்! எனக்குத் தெரிந்த ஒரு ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தில், அம்மா தன்னுடைய வயது வந்த மகளுக்கு Mills & Boon கதைகளாகப் பழைய புத்தகக் கடைகளில் தேடிப்பிடித்து வாங்கி வாசிக்கக் கொடுப்பார். படிப்படியாக விஷயத்தைப் பிள்ளைகள் கற்றுக்கொள்ள அவருக்குத் தெரிந்த வழி அது.
ஒரு காலத்தில் எனக்கு பெரி மேசன் நாவல்களும் ஹாட்லி சேஸ் நாவல்களும் ஒரு வெறித்தனமான வாசிப்பைத் தூண்டின. இன்றைக்கு பெரி மேசன் நாவல்களில் 46 என்னுடைய சேகரத்தில் இருப்பதுபோல ஹாட்லி சேஸ் நாவல் எதுவுமில்லை. ஆரம்பநாட்களில் ஹெரால்ட் ராபின்ஸ் நாவல்களில் பாத்திரங்களின் வடிவமைப்பு அவ்வளவு பிடித்தமானதாக இருந்தது. அவர் இடத்தைப் பின்னாட்களில் Robert Ludlum பிடித்துக் கொண்டார்.
இங்கே எழுத்தாளர்கள் கதை எழுதுவதற்கு முன்னால் கதைக்களத்தைப் பற்றிய ஞானம் எதுவுமில்லாமல் எழுதுவதுதான் பெரும் குறை என்பதை யார் அவர்களுக்குப் புரிய வைப்பது? இதே தளத்தில் ஆர்தர் ஹெய்லியின் The Money Changers புத்தக விமரிசனமாக, இங்கே நம்மூரில் ஒரு புள்ளிராசா வங்கியையும் தொட்டு எழுதியிருக்கிறேன்.
பதிவின் ஆரம்பத்தில் சொன்னதுபோல வாசிப்பு என்பது பல்வேறு படித்தளங்களைக் கொண்டது. ஒரே தளத்தில் தேங்கிவிடுகிற எவரும் வாசிப்பு அனுபவத்தை முழுமையாகப் பெறுவதில்லை. ஒரு காலத்தில் தினத்தந்தியில் கன்னித்தீவு படக்கதை கூட பரவலான ரசிகர்களைக் கொண்டிருந்தது என்பதற்காக இன்றைக்கும் அதிலேயே தேங்கி நின்றுவிடுவோமா என்ன?