ச்சும்மா ஜாலிக்கு எழுத ஆரம்பித்தாலும் பழைய படங்களைத் தேடிப்பிடித்துப் பார்த்துவிட்டு, சீரியசாகவே திரை விமரிசனம் செய்வதில் நம்மூர் இலக்கியவாதிகள் (அவர்கள் எவருமே அப்படித் தங்களைச் சொல்லிக் கொண்டதில்லை) பலரை மீள்நினைவு செய்து கொள்கிற முயற்சியாகவே இந்தப்பகுதி மாறி வருவது நண்ர்களுக்குப் பிடித்திருக்கிறதா? பிலஹரி என்றொரு பழைய தமிழ் எழுத்தாளர், அவரை நினைக்கிற தருணமாக அவர் கதை ஒன்று ரோஷக்காரி என்ற பெயரில் படமாக வந்ததைத் தொட்டு எழுதியதில் ஒரு பின்னூட்ட விவாதம் எங்கள் Blog ஸ்ரீராமுடன் நடந்தது. அதன் தொடர்ச்சியாக அவரிடம் ஆனந்த விகடனில் முத்திரைக் கதைகளாக அந்தநாட்களில் வெளிவந்த நான்கு சிறுகதைகள் அவருடைய பைண்டிங் கலெக்ஷனில் இருப்பதாக, நேற்றைய பதிவில் ஸ்ரீராம் சொன்னதும், அவருடைய சிறுகதைகளை எங்கள் Blog இல் விரைவில் எதிர்பார்க்கலாம் என்பதும் கூட ஒரு Butterly effect தான்! அதேமாதிரி பிலஹரியின் ஒரிஜினல் பெயர் T ராமன் என்பது கூட அவருடைய கதை ஆலயம் என்ற பெயரில் வந்ததில் டைட்டில் கார்ட் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள முடிகிறது என்பதான வெகுஜன மறதி, ஒரு வாசகனாக என்னை மிகவும் வருத்தப் பட வைக்கிற செய்தி.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்று பெயர் சொன்னால் உடனே நினைவுக்கு வருகிற பாடல் தமிழன் என்றொரு இனமுண்டு! தனியே அவர்க்கொரு குணம் உண்டு! என்ற பாடலாகத்தான் இருக்கும். கவிஞர் கதைகளும் எழுதி இருக்கிறார் என்பது அதிகம் தெரியாத சங்கதி என்றால் அதிலொன்று திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு, வெற்றிகரமாக ஓடியதும் தமிழில் முதன் முறையாக ஜனாதிபதி விருதும் (வெள்ளிப்பதக்கம்) வாங்கி இருக்கிறது என்றால் அது எம்ஜியார் பானுமதி நடித்த மலைக்கள்ளன் படம்தான்! கொசுறுச் செய்தியாக வசனம் எழுதியவர்
மு.கருணாநிதி அடுத்தவர் கதைக்கு வசனம் எழுதியே வசன கர்த்தாவாக ஆனதும், அப்படியே அரசியல்வாதியாக மாறியதும், இந்தப்பதிவுக்கு அவசியமில்லாதவை.
மலைக்கள்ளன் படப்பாடல்கள் முழுதும்
மு.கருணாநிதி அடுத்தவர் கதைக்கு வசனம் எழுதியே வசன கர்த்தாவாக ஆனதும், அப்படியே அரசியல்வாதியாக மாறியதும், இந்தப்பதிவுக்கு அவசியமில்லாதவை.
நாமக்கல் கவிஞர் கல்கி ராகிருஷ்ணமூர்த்தி போல மிகப் பிரபலமான கதாசிரியர் இல்லைதான்! ஆனால் கல்கியின் மூன்று கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்ட போதிலும் கூட மலைக்கள்ளன் அளவுக்கு வெற்றிப்படமாகவோ, விருது வாங்கும் அஅளவுக்குப் பரிசீலிக்கப்பட்டதாகவோ எதுவுமே தேறவில்லை. இதை முன்னால் அவருடைய கள்வனின் காதலி திரைப்பட விமரிசனமாக எழுதியபோதே சொல்லி இருக்கலாம். கல்கியின் பெயரை பொன்னியின் செல்வன் ஒன்று தான் இன்னமும் நினைவில் வைத்திருக்கும்படி செய்து கொண்டிருக்கிறது என்பதில் எழுத்தாளரின் குற்றம் எதுவுமே இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த ஒரு ஸ்பானிஷ் இளைஞன், தன்னுடைய நாடும் ஏழை ஜனங்களும் சுரண்டப் படுவதை சகிக்க முடியாமல் Zorro என்று முகமூடி அணிந்த கள்வனாக மாறி ஏழைகளைக் காப்பாற்றுகிற கதாபாத்திரம் கதைகள் மிகவும் பிரசித்தம்! அந்தக் கதைகளில் ஒன்றை அப்படியே லோக்கலைஸ் செய்து எழுதப்பட்ட கதைதான் மலைக்கள்ளன். கள்வனின் காதலி கூட அந்த நாட்களில் கொள்ளிடக் கரையில் பிரசித்தமாக இருந்த ஜம்புலிங்க நாடார் என்ற திருடனுக்கு கதாநாயகன் வேஷம் போட்டு எழுதிய கதைதான் என்பதும் ஞாபகம் வைத்துக் கொண்டீர்களேயானால் ஆங்கிலத்தில் படித்த பார்த்த கதைகளில் இருந்து அங்கே இங்கே கொஞ்சம் உருவிக் கதை எழுதுவது கல்கிக்கு கைவந்த கலை என்பதை மறைந்த பதிவர் டோண்டு ராகவன் விலாவாரியாக அவருடைய பதிவுகளில் எது எங்கிருந்து எப்படி அப்பட்டமாக உருவப்பட்டது என்பதை ஆதாரங்களோடு எழுதியிருக்கிறார்! அப்படியிருக்கும்போது நாமக்கல் கவிஞரும் கூட கதையைத் திருடி எழுதினார் என்று சொல்லலாமா? அபாண்டம்!
கதைக்களம் என்னவோ மிகவும் சுவாரசியமாகப் பின்னப்பட்ட, விறுவிறுப்பாகப்போகிற சம்பவங்களின் கோர்வைதான்!
விஜயபுரி என்றொரு மலைப்பிரதேசம். அழகான வளமான இடமென்கிற போது கள்வர்களும் கொள்ளையர்களும் வீடு புகுந்து பெண்ணைக் கடத்துகிறவர்களும் இல்லை என்றால் எப்படி? கதாநாயகி பூங்கோதை, பெருந்தனக்காரர் சொக்கேச முதலியாரின் பெண். தாயில்லாத பூங்கோதையை அவளது விதவை அத்தை காமாட்சி தான் ஆதரவாக வளர்க்கிறாள். காமாட்சியுடைய ஒரே மகன் குமாரவீரன் சிறு வயதிலேயே காணாமல் போய்விடுகிறான்.
வீரராஜன்! பூங்கோதையின் உறவுக்காரன். பணத்துக்காக பூங்கோதையைத் திருமணம் செய்துகொள்ளக் காத்த்திருப்பவன். கெட்ட சகவாசம் உள்ளவன் என்பதால் அந்த எண்ணம் ஈடேறாமல், தன்னுடைய அந்தரங்கத்துக்குப் பாத்திரமான காத்தவராயன் என்ற கள்ளன் , அவனது ஆட்கள் துணையுடன் பூங்கோதையைக் கடத்தி வரும்போது, மலைக் கள்ளனும் அவனது ஆட்களுமாக இடைமறித்துப் பூங்கோதையைக் காப்பாற்றுகிறார்கள்.
காத்தவராயன், மலைக்கள்ளன் என்று இரு கள்வர்களுடைய கூட்டத்தையும் பிடிக்கப் போலீஸ் படாதபாடு படுகிறது, இந்த இடத்தில் அப்துல் ரஹீம் என்ற ஒரு பணக்கார வியாபாரி, அடிக்கடி வியாபார விஷயமாக தூரதேசங்களுக்குப் போய் வருவதில், விஜயபுரியில் அவ்வப்போது தலைகாட்டுகிறவர் அறிமுகமாகிறார்.
கடத்திவரச்சொன்னதில் கோட்டைவிட்ட காத்தவராயன் வீர ராஜனுடைய கோபத்துக்கு ஆளாகிறான். மலைக்கள்ளனின் பாதுகாப்பில் பூங்கோதை பத்திரமாக இருக்கிறாள்.ஆரம்பம் அவநம்பிக்கையில் என்றாலும் அது படிப்படியாகக் காதலாகவும் மாறாவிட்டால்தான் அதிசயம்! இப்படிப் பல திருப்பங்களுக்குப் பிறகு காத்தவராயன் வீரராஜன் கூட்டம் பிடி படுகிறது மலைக்கள்ளன் தான் சிறுவயதில் காணாமல் போன அத்தைமகன் குமாரவீரன் என்று தெரியவந்து, சுபமாக கதை, படம் முடிகிறது.
மூன்றுமணிநேரப் படம், ஒன்பது பாடல்கள் என்பதை எல்லாம் தாண்டி, இன்றைக்கும் எப்படிப் பார்ப்பவர்களைக் கட்டிப் போடுகிறது என்பதில் அது கருணாநிதி வசனத்தால் அல்ல என்பதும் முழுக்க முழுக்க எம்ஜியார் முகராசியால் மட்டுமே என்பதும் தனியாகச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
வாராய் நீ வாராய் போகும் இடம் வெகு தூரமில்லை! போன்ற பாடல்கள், படத்துடன் இன்றும் மனதில் நிற்பது அதிசயம்!
மீண்டும் சந்திப்போம்.
ஓ... பிலஹரியின் இயற்பெயர் ராமனா? செய்தி!
ReplyDeleteஸ்ரீராம்! கொஞ்சம் ஆர்வம் தரக்கூடிய செய்தியை உங்களுக்குச் சொல்ல முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி! :-)))
Deleteஅரசியல் காரணமாக கலைஞரை வெறுப்பது வேறு. ஆனால் அவரின் அசாத்தியான திறமைகளை மறுப்பது வேறு தலைவரே. திரைப்பட உலகில் இருவரும் தனித்துவம் மிக்கவர்கள். என்னவொன்று மக்கள் செல்வாக்கில் எம்ஜிஆர் பல காத தூரம் முன்னேறிச் சென்றவர். கலைஞருக்கு அது பாதி அளவு தான் வாய்த்தது,
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி!
Deleteகருணாநிதியின் அரசியல் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது என்பதை இந்த விமரிசனத்தில் சொல்ல முற்படவே இல்லை. இது அதற்கான இடமும் இல்லை. . இந்தப்பதிவை எழுதுவதற்காக விஷயங்களை சேகரிப்பதற்காக தேடிய போது அன்னாருடைய குடும்படிவி நிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதி வசனத்தால் புகழ் பெற்ற படம் என்ற மாதிரி மலைக்கள்ளனைப் பற்றிச சொல்லியிருந்த மிகச்சமீபத்தைய வீடியோவைப் பார்த்தபிறகு தான் மேலோட்டமாக அதைப்பற்றி பேச வேண்டி வந்தது.
கீழே லிங்கில் முழுப்படத்தையோ, ஒரு பகுதியையோ பார்த்தால்,கருணாநிதியின் வசனத்திறமை என்று இங்கே பரவலாக ஒரு விஷயம் மகிமைப்படுத்தப்படுகிறதே, அப்படி ஒரு விஷயம் இந்தப்படத்தில் சுத்தமாகவே மிஸ்ஸிங்! டைட்டிலில் கருணாநிதி என்று போட்டிருக்காவிட்டால், வசனகர்த்தா என்று ஒருத்தர் இருந்த இடமே தெரிய வந்திருக்காது. இதுமட்டும் தான் நான் சொல்ல வந்தது.
திறமையான வசனகர்த்தா என்பதை விட, கருணாநிதிக்கு அதை நன்றாக சினிமாத்துறையிலும் அரசியலிலும் மார்க்கெட்டிங் செய்யத் தெரிந்திருந்தது என்பதை ஏனோ எல்லோருமே கவனிக்கத் தவறி விடுகிறோம்!
புதிய விசயங்கள் நிறைய...
ReplyDeleteவாழ்க நலம்..
வாருங்கள் துரை செல்வராஜூ சார்!
Deleteபழசைத்தோண்டத் தோண்ட வருகிற விஷயங்களெல்லாம் புதுசாய்த் தெரிவது சகஜம்தானே!
பிலஹரி எல்லாம் மறக்கக் கூடிய நபர்களா ஜி.
ReplyDeleteவிகடனில் இந்தக் கதைக்கு ஸாரதி ,ஓவியம் வரைந்தது கூட நினைவில் இருக்கிறது. எத்தனை சோதனை அந்த குமாஸ்தா ஒட்டுப் போட்ட கோட்டுடன் சமாளிக்கிறார்.
அவர் பெயர் .ராமனா. அருமை. எங்கேயாவது படிக்கக் கிடைக்குமொ
தேடுகிறேன்.
மலைக்கள்ளன் படம் முழுவதும் ரசிக்கும்படியே இருக்கும்.
வெகு இயல்பான நடிப்பு.
அருமையான பாடல்கள். சற்றே பருமனான் பானுமதியின் நடனமும் பாடல்களும்.
எம் ஜி ஆரின் மாறு வேடம்.
பக்ஷிராஜா மூவீஸ் எடுத்த நல்ல படம்.
அவர்கள் சென்னையில் ஜம்புலிங்கம் தெருவில்
எட்வர்ட் எலியட்ஸ் ரோடில் பார்த்திருக்கிறேன்.
சந்தித்தும் இருக்கிறேன். நல்ல மினைவுகள் மீட்டெடுத்ததற்கு நன்றி ஜி.
வாருங்கள் அம்மா!
Deleteபிலஹரி என்ற எழுத்தாளரைப் பற்றி இன்றைக்குத் தேடினாலும் எந்தத்தகவலும் கிடைப்பதில்லை என்பது நம்முடைய ஞாபகமறதியைத்தான் குறிக்கிறது. தமிழ் எழுத்தாளர் யார் எவர் (தலைப்பு அதுதான் என்று ஞாபகம்) எனத தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான விவரமான புத்தகம் ஒன்று என்னிடமிருந்தது, நான் தொலைத்த ஏராளமான புதகங்களில் எதையெல்லாம் தொலைத்திருக்கிறேன் என்று பட்டியலிடுவது மிக்க கடினம்
எங்கள் Blog ஸ்ரீராம் மனது வைத்தால் அவரது சிறுகதைகளில் சில விரைவிலேயே எபியில் வெளியாகலாம்/ பிலஹரியின் கதையொன்று ஆலயம் என்ற பெயரில் திரைப்படமாகவம் வந்ததில் டைட்டில் கார்ட் போடும் போது கதை - பிலஹரி (T ராமன்) என்று போட்டதை பார்த்தபிறகுதான் எனக்கு அந்த விவரமும் தெரியவந்தது.
மலைக்கள்ளன் கதையில் எந்தப்புதுமையும் இல்லாவிட்டாலும் கூட சிடுக்கல் இல்லாமல் திரைக்கதையை நகர்த்திக் கொண்டுபோன விதம் அன்றைய ரசிகர்களுக்கு மிக சுவாரசியமாகத்தான் இருந்திருக்கும் போல!!
காரணமில்லாமல் ஜனங்கள் ஒருபடத்தை வெற்றிப்படமாக ஆக்குவதில்லை! இன்றோ, நிலைமை விபரீதம்!
பிலஹறி பற்றி எபி யில் ஸ்ரீராம் சொன்னதும் இங்கு வாசிக்க வர வேண்டும் என்று நினைத்து வந்தால் மலைக்கள்ளன் பற்றிய செய்திகள், பிலஹரி பற்றிய கூடுதல் செய்திகள்...அந்தப் பதிவையும் வாசிக்கிறேன் ஸார்.
ReplyDeleteமுதலில் பிலஹரி என்று எபியில் பார்த்ததும் ஓ ராகம் பற்றிய விவரமோ என்று நினைத்துவிட்டேன் அப்புறம்தான் எழுத்தாளர் பற்றி என்று தெரிந்தது...
அவர் எழுதிய கதையை பானுக்கா ஒன்று தெரிவு செய்திருக்கிறார். எனக்கோ விஷயஞானம் குறைவு என்பதால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எல்லாத்தையுமே போட்டாலும் வாசிக்க ரெடி என்று சொல்லிய நினைவு!!
கீதா
பிலஹரி என்ற எழுத்தாளரை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவர் கதையில் வெளிவந்த ரோஷக்காரி படவிமரிசனத்தை எழுதியிருந்தேன். ச்சும்மா ஜாலிக்கு என்ற குறியீட்டுச் சொல்லில் தேடினாலே லிங்க் கிடைக்கும். மேலே வல்லிம்மாவுக்கு எழுதியிருந்த பதிலில் சொன்ன மாதிரி, ஒரு பழைய எழுத்தாளரை நினைவுபடுத்திக் கொள்கிற அனுபவமாக எனக்கும் எபி ஸ்ரீராமுக்கும் வாய்த்திருப்பது ஒரு நல்ல விஷயம்.
Delete