Saturday, June 19, 2010

வேப்பம் பழம் -- நா.பார்த்த சாரதி


நா.பார்த்தசாரதியை தங்களுடைய ஆதர்சமாக, மானசீக குருவாக ஏற்றுக் கொள்ளாத இளைஞர்களே 1960,1970 களில் கிடையாது என்ற அளவுக்கு, நா.பார்த்தசாரதியின் எழுத்துக்களை ஒரு வெறியோடு படித்துக் கொண்டிருந்த மாணவர்களாகவும், இளைஞர்களாகவும் இருந்த கூட்டத்தில் நானும் ஒருவன்

 நா.பாவின் எழுத்துக்களில் அங்கங்கே தென்படும் சில பொன் மொழிகளை அடிக் கோடிட்டு, அதைத் தனி நோட்டுப் புத்தகத்திலும் குறித்து வைத்துக் கொள்வது அனேகமாக நா.பார்த்த சாரதி என்ற ஒரு எழுத்தாளரைப் பின்பற்றிய வாசகர்களிடம் மட்டுமே இருந்த ஒரு வழக்கம்.

கலகத்தை, நாசத்தைத் தூண்டக் கூடிய எழுத்தை இன்றைக்கு இணையத்திலேயே நிறையத் தருணங்களில் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம் . அடிப்படையில் சரியான காரணமே இல்லாமல் வெறுப்பைக் கக்குகிற எழுத்தையும் தான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் .  

அன்றைய நாட்களில் நா.பார்த்தசாரதி, அகிலன், தி.சா.ராஜு, ராஜம் கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் ஒரு லட்சிய தாகத்தோடு எழுதிக் கொண்டிருந்தார்கள் என்பதோடு, அவர்கள் எழுத்தைப் பின்தொடர்ந்த வாசகர்களும் ஒரு சத்திய வேட்கையோடு, ஆவேசத்தோடு படித்துக் கொண்டிருந்தார்கள்

இன்றைக்கு இரண்டுமே அதிகம் இல்லை என்ற வெறுமையைப் பார்க்கும்போது ஒரு வாசகனாக கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது! 

இன்னும் சில நாட்களில் நம்முடைய இந்திய சுதந்திரத்திற்கு இருபத்தைந்து வயது நிறையப் போகிறது. அந்நியர்களிடமிருந்து விடுதலைப் பெற்றுக் கால் நூற்றாண்டு முடியப் போகிறது என்றாலும் நமக்காக நம்மிடையில் நம்மவர்களிடம் இருந்தே நாம் பெற வேண்டிய விடுதலைகள் இன்னும் பல உள்ளன. மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும், சுபாஷ் சந்திர போஸும் தொடங்கிய போராட்டங்கள் முடிந்து விட்டது போல் தோன்றுகின்றன. ஆனால், இன்னும் அவை முடியவில்லை. அதிகாரம், ஆணவம், பதவி வெறி, சுயநல நஞ்சு, வறுமைப் பிடி ஆகியவற்றிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இங்கே இன்னும் விடுதலை பெறத் துடித்துக் கொண்டிருப்பது உண்மை.

இது 1972 இல் சத்திய வெள்ளம் என்ற தன்னுடைய புதினத்தின் கதை முகமாக முன்னுரையில் நா.பார்த்தசாரதி எழுதிய வார்த்தைகள். முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின்னாலும் கூட நமக்காக நம்மிடையில் நம்மவர்களிடமிருந்தே நாம் பெற வேண்டிய விடுதலைகள் இன்னும் பல உள்ளன என்ற வார்த்தைகளில் இருக்கும் செய்தி, அதன் வீரியம் அப்படியே இருக்கிறது. அன்னியரிடமிருந்து விடுதலை என்பது மாறி, நம்மவர்களிடமிருந்தே விடுதலை பெற வேண்டியிருக்கிறது என்ற அந்த வார்த்தைக்குள் தான் எத்தனை பொருள் பொதிந்து கிடக்கிறது! 

திருடன் திருடிக் கொண்டு ஓடும் போது, யாரையோ கைகாட்டி 'அதோ திருடன்! அதோ திருடன்' என்று கூச்சல் போட்டுக் கொண்டு தானும்  துரத்துவது போல ஒரு பாவனை செய்து தப்புவது போல இங்கே, சீர்திருத்தம், சமதர்மம் பற்றி வாய் கிழியப் பேசுகிறவர்கள் எல்லாம் அந்தத் திருடனைப் போல, வேறு யாரையோ கையைக் காட்டிவிட்டுத் தங்களுடைய சுயநலத்தை ஆதாயத்தைப் பெருக்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் தமிழ்வாசகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட எழுத்தாளராக விளங்கியவர் நா.பார்த்தசாரதி. அவர் எழுதிய 'குறிஞ்சிமலர் ' அரவிந்தனாக லட்சியத்துடன் தானும் விளங்கவேண்டும் என்று எண்ணாத லட்சிய இளைஞர்கள் அன்று மிகவும் குறைவு. சமுதாய வீதி, பொன்விலங்கு, மணிபல்லவம் ஆகியவை இவருடைய பிற புகழ்பெற்ற லட்சியப்படைப்புகள். 1960 ஆம் ஆண்டில் தமிழ்ப்புத்தகாலயத்தின் வெளியீடாக வந்த 'காலத்துக்கு வணக்கம் ' என்னும் சிறுகதைத் தொகுதியில் 'வேப்பம்பழம் ' என்னும் கதை இடம்பெற்றிருக்கிறது.

இப்படி ஒரு அடிக் குறிப்புடன் திண்ணை இதழில் பாவண்ணன் நீண்ட நாட்களுக்கு முன்னால் நா.பார்த்த சாரதியின் சிறுகதை ஒன்றை அறிமுகம் செய்து எழுதிய பக்கத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா?



கல்லுாரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிற்சபேசன் மன அமைதியை விரும்பி ஒரு கிராமத்தில் குடியேறுவதிலிருந்து வேப்பம் பழம் என்ற சிறுகதை  தொடங்குகிறது. குடும்பத்தில் அவரும் அவர் மனைவியும் மட்டுமே இருக்கிறார்கள். குடிவந்த மறுநாள் அதிகாலை அழகைச் சுவைத்தபடி வாசலில் இருக்கும் வேப்பமரத்தடியில் நின்றிருக்கும்போது பதின்மூன்று அல்லது பதினான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி நெருங்கி வந்து வணங்குகிறாள்.  

அழுக்குச் சிற்றாடையும் கிழிந்த தாவணியுமாக ஏழைமைக் கோலத்தில் இருந்த அச்சிறுமியைக் கண்டு பேராசிரியர் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும்போது தனக்கு வீடு வாசலைப் பெருக்கிச் சுத்தமாக வைத்திருக்கத் தெரியுமென்றும் சம்பளமாக எவ்வளவு கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியுமென்றும் சொல்கிறாள். மேலும் தாயும் தந்தையுமற்ற தனக்கு தொடக்கப்பள்ளியில் படிக்கக்கூடிய ஒரு தம்பி மட்டும் இருப்பதாகவும் தான் உழைத்து அவனைக் காப்பாற்றுவதாகவும் பணிவுடன் சொல்கிறாள்.

பேராசிரியர் ஆதரவுடன் அவளுடன் பேச்சைத் தொடங்குகிறார். அவள் பெயர் பட்டு. பெற்றோர்கள் இல்லை. உறவு என்று சொல்லிக்கொள்ள ஒன்றிரண்டு பேர் வெளியூரில் இருந்தாலும் அவர்களால் உதவி எதுவுமில்லை. கிராமத்தில் இருக்கிற முன்சீப்பின் ஆலோசனையின் பேரில்தான் நாலு வீட்டில் எடுபிடி காரியங்கள் செய்து தம்பியைப் படிக்க வைக்கிறாள். தம்பி படித்துப் பெரிய ஆளானதும் வாழ்வில் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி தானாக விழுந்துவிடும் என்பது அவள் நம்பிக்கை.  

அவள் பேச்சும் சுறுசுறுப்பும் மனத்தைக் கவரத் தன் வீட்டிலும் அவள் தாராளமாக வேலை செய்யலாம் என்று அனுமதி கொடுக்கிறார் பேராசிரியர். அடுத்த தருணமே நெடுநாள் பழகிய வேலைக் காரியைப்போல சிற்றாடை நுனியை இழுத்துச் செருகிக்கொண்டு விளக்குமாறால் வாசலைக் கூட்டிச் சுத்தப்படுத்தி கோலம் போடத் தொடங்கிவிடுகிறாள் சிறுமி.

சிற்சபேசன் வீட்டுக்குள் போய் காப்பி குடித்துவிட்டு, மனைவியிடம் வேலைக்காரச் சிறுமி கிடைத்த பெருமையை அளந்துவிட்டுத் திரும்பவும் வாசலுக்கு வருகிறார். அப்போது வாசலில் விளக்குமாறு புரளும் பெருக்கல் ஓசை கேட்கவில்லை. வேப்பமரத்தடியில் விழுந்து கிடக்கிற பழங்களைக் குனிந்து எடுத்து ஒவ்வொன்றாக ஊதி வாயில் போட்டுச் சுவைத்துத் துப்பிக் கொண்டிருக்கிறாள் அவள்.  

ஆச்சரியத்தில் உறைந்து போகும் பேராசிரியர் 'ஐயையோ, வேப்பம் பழத்தைச் சாப்பிடுகிறாயே, கசக்கவில்லையா உனக்கு ? '
என்று கேட்கிறார். சிறுமியோ புன்னகையுடன் 'பழமா இருக்கும்போது சாப்பிட்டா கசப்பு தெரியாது சார், அசட்டுத் தித்திப்பா ஒரு இனிப்பு இருக்கும். மென்னு கடிக்காம லேசா சப்பிச் சுவைத்துவிட்டுத் துப்பிடணும் ' என்கிறாள்.  

ஆவலில் ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட மறு கணமே கசப்பு தாங்காமல் துப்பி விடுகிறார் பேராசிரியர். வேப்பம்  பழத்தை சாக்லெட்டாக விழுங்கும் சிறுமியை அதிசயமாகப் பார்த்த படி வாயைக் கழுவ உள்ளே செல்கிறார்.

சிறுமிக்கு ஊர்முழுக்க நல்ல பேர்தான். யார் எந்தக் காரியத்தைச் சொன்னாலும் தட்டுவதில்லை. யாரிடமும் எதற்காகவும் அலுத்துக் கொள்வதில்லை. ஒருநாள் மாலைநடையின் போது ஊர்க்கோடியை அடைகிறபோது சிறுமியின் வீட்டைக் கவனிக்கிறார் பேராசிரியர்.  

இடிந்த சுவர்கள். வாசலில் புதர்கள். தாறுமாறாகச் செடிகள் 
முளைத்துக் காடாக இருக்கின்றன. 'ஊர்க்காரங்க வீடெல்லாம் வாசல் தெளிச்சுக் கோலம் போடறியே, உன் வீட்டிலே மட்டும் வாசல் எல்லாம் எருக்கஞ்செடியா முளைக்க விட்டிருக்கிறியே ' என்று கேட்கிறார்

'அதுக்கு நேரம் ஏது சார் ? எனக்குத்தான் கோழி கூவறதுக்கு முன்னேயிருந்து இருட்டறவரிக்கும் வாடிக்கைக்காரங்க வீடுங்கள்ள வேலை சரியா இருக்கே. இங்கே தம்பிக்கும் எனக்கும் சாப்பாடு வேறே சமைக்கணுமே ' என்று காரணம் சொல்கிறாள் சிறுமி.

ஏறத்தாழ ஒரு ஆண்டு ஓடிவிடுகிறது. திடுமென ஒருநாள் சிறுமி வாசலைக்கூட்ட வரவில்லை. தாமதமாக அவள் பூப்படைந்திருக்கிற சங்கதி தெரிய வருகிறது. பேராசிரியருக்குத் திகைப்பு ஒருபுறம். மகிழ்ச்சி ஒருபுறம். இரண்டையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் அச்சிறுமிக்காக அனுதாபப் படுகிறார். உறவுக்காரர்களால் எந்தப் பயனுமில்லை என்று அச்சிறுமி சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது. புதுச்சிற்றாடையும் கண்ணாடி வளையலும் மஞ்சள் குங்குமமும் வாங்கிக்கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வரும்படி மனைவியைக் கேட்டுக்கொள்கிறார். மனைவியும் அவ்வாறே செய்கிறாள்.

மறுபடியும் வீட்டுவேலைக்கு வருவாளோ மாட்டாளோ என்று இருவருமே பேசிக் கொள்கிறார்கள். கிராமத்து நடைமுறைப்படி அவள் வெளியே வராமலேயே வீட்டுக்குள் அடைபட நேரும் என்று நினைக்கிறார்கள். இனிமேல் எப்படிக் காலம் தள்ளப்போகிறார்களோ என்று வருந்துகிறார்கள்.  

ஆனால் பட்டு இந்த மாதிரி எதையுமே யோசிக்கவில்லை. நாலாவது நாள் விடிந்ததுமே வாசல்பெருக்க வந்துவிடுகிறாள். வேலைகளை முடிக்கும் தருணத்தில் பேராசிரியர் தயங்கித் தயங்கி பெரிய பெண்ணான பிறகு வீட்டு வேலைக்குப் போவதைப் பற்றி ஊர் நாலு தினுசாப் பேசாதா என்று தயக்கத்துடன் கேட்கிறார். ஆனால் அவளுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை

'பட்டினி கிடந்தா ஏன்னு கேக்க இந்த ஊராருக்குத் துப்பு இருக்கா ? அவுங்க என்ன பேசினாலும் கேட்க நான் தயாராயில்ல சார் ' என்று சொல்கிறாள். பிறகு வழக்கம்போல மரத்தடியில் உதிர்ந்திருந்த வேப்பம்பழங்களை எடுத்துத் தின்கிறாள்.

வீட்டுக்குள் செல்லத் தயாரான பேராசிரியர் அவள் பழம் தின்னுவதைப் பார்த்து அவள் பழக்கத்தைக் கேலி செய்கிறார். அவளும் 'சின்ன வயசிலேருந்தே எனக்கு இந்தக் கசப்பிலே ஒரு பிரியம். இந்தக் கசப்பிலே ஒரு அசட்டு இனிப்பும் இருக்கு சார் ' என்று களங்கமற்றுச் சிரித்தபடி சொல்கிறாள்.

வேப்பம்பழம் சாப்பிடும் பழக்கம் தொடக்கத்தில் ஒரு சிறிய குறிப்பாக இடம்பெற்றாலும் கதையின் போக்கில் அது அவளுடைய கசப்புகள் நிறைந்த வாழ்வையே குறிப்பிடுகிற ஒரு வலிமையான படிமமாக இயல்பாக மாறிவிடுவதை இக்கதையின் வெற்றியாகக் குறிப்பிட வேண்டும். வழக்கமாக குறிப்புப்பொருளை விரித்தெழுதிவிடும் பழக்கமுள்ள நா.பார்த்தசாரதி அதைச் செய்யாமல் மெளனமாக விட்டிருப்பதே இக்கதைக்கு அழகு சேர்க்கிறது.

8 comments:

  1. சுவாரசியம் குறையாமல் தொகுத்து எழுதி இருக்கீங்க... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வாருங்கள் திருமதி சித்ரா!

    கொஞ்சம் வெட்டிப் பேச்சு, தம்பட்டம் தாயம்மா என்று வலைச்சரம் ஆசிரியராகப் போனவாரம் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறீர்கள்! உங்களுக்கும் இந்தப் பதிவு பிடித்துப் போனதில் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  3. வாழ்க்கையின் கசப்புகளை இனிப்பாக இல்லையேயாயினும் அசட்டுத் தித்திப்பாகவாகவேனும் மாற்றிக் கொண்டவள் பட்டு.வேப்பமரத்தின் இலையிலிருந்து பழம் வரை சகலமும் மருத்துவ குணம் கொண்டது. சமூகத்தின் வம்புப்பேச்சு நோயைப் புறந்தள்ளித் தீர்வுகாணும் மருந்தாகத்தான் அவளது அந்த 'பட்டினி கிடந்தா ஏன்னு கேட்க...' பதிலும் இருக்கிறது.
    நா.பா.வைப் பற்றிய பகிர்வு அவரைப் பற்றிய நினைவுகளை நினைக்கச் செய்தது. மிக்க நன்றி,சார்!

    ReplyDelete
  4. Dear Krishna,

    Is it possible to buy this short story book? If yes, send me the getails. I am searching for this particular short story. I red crtics about this story in pavanan essay.

    Thank you.

    ReplyDelete
  5. வாருங்கள் ஜீவி சார்!

    உங்களுடைய பூவனம் தளத்தில் அகிலனைப் பற்றி எழுதிக் கொண்டிருந்த தருணத்திலேயே நா.பார்த்தசாதியைப் பற்றி எழுத நினைத்திருந்தது, இப்போது தான் நேரம் வந்திருக்கிறது. அகிலன் பக்கம் வீசிய அதிர்ஷ்டக் காற்றில் ஒரு சிறு பகுதி கூட நா.பாவுக்குக் கிடைத்ததில்லை. மாணவனாக, அரசியல் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்த தருணங்களில் நா.பாவை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. வல்லிக் கண்ணன் ஒருவரைத் தவிர வேறு எவரும் நா.பாவின் "தீபம்" இதழைக் குறித்து அதிகம் பேசியதில்லை. பொள்ளாச்சி நசனின் தமிழம்டாட்நெட் தளத்தில் தீபம் பழைய இதழ்கள் பிடிஎப் கோப்புக்களாகக் கிடைத்ததைப் படித்தபோது, இன்றைக்கும் சுவாரசியமான இதழாக இருப்பதைப் பார்க்க முடிந்தது.

    நா.பாவைப் பற்றி இந்தப் பக்கங்களில் இன்னும் நிறையப் பேச ஆசை.

    ReplyDelete
  6. காலத்துக்கு வணக்கம் சிறுகதைத் தொகுதி தற்சமயம் கிடைப்பது கடினமே. தமிழ்ப் புத்தகாலயத்தில் கேட்டுப் பாருங்கள். சென்னை லைப்ரரிடாட்காம் தளத்தை நடத்தும் திரு சந்திர சேகரன், நா.பார்த்தசாரதியின் படைப்புக்களை பிடிஎப் கோப்புக்களாக, குறுந்தகடில் 99 ரூபாய் விலையில் தருகிறார். அது கூட இப்போது இரண்டு பகுதிகளாக வருகிறது என்றும், முதற்தொகுதியில் இந்த சிறுகதைத் தொகுப்பு இல்லை என்று தான் அறிகிறேன்.. 96888 29900 என்ற எண்ணிலோ admin@gowthampathippagam.com/ இந்த மின்னஞ்சல் முகவரியிலோ திரு கோ.சந்திர சேகரனைத் தொடர்பு கொண்டால், இன்னும் கொஞ்சம் பயனுள்ள விவரங்களைத் தருவார்.

    முயற்சித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  7. அன்பு நண்பருக்கு,

    தாங்கள் குறிப்பிட்டது போல் எமது புதிய வெளியீடான "தமிழ் புதினங்கள்-1" குறுந்தகடில் கீழ்க்கண்ட நூல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

    1. பொன் விலங்கு - நா. பார்த்தசாரதி
    2. குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி
    3. வெற்றி முழக்கம் (உதயணன் கதை) - நா. பார்த்தசாரதி
    4. சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி (சாகித்ய அகாதமி பரிசு)
    5. சாயங்கால மேகங்கள் - நா. பார்த்தசாரதி
    6. ஆத்மாவின் ராகங்கள் - நா. பார்த்தசாரதி
    7. நெஞ்சக்கனல் - நா. பார்த்தசாரதி
    8. துளசி மாடம் - நா. பார்த்தசாரதி (ராஜா சர் அண்ணாமலைப் பரிசு)
    9. ராணி மங்கம்மாள் - நா. பார்த்தசாரதி
    10. பிறந்த மண் - நா. பார்த்தசாரதி
    11. கபாடபுரம் - நா. பார்த்தசாரதி
    12. வஞ்சிமா நகரம் - நா. பார்த்தசாரதி்
    13. நெற்றிக் கண் - நா. பார்த்தசாரதி
    14. பாண்டிமாதேவி - நா. பார்த்தசாரதி
    15. சத்திய வெள்ளம் - நா. பார்த்தசாரதி
    16. ரங்கோன் ராதா - அறிஞர் அண்ணா
    17. ஊருக்குள் ஒரு புரட்சி - சு. சமுத்திரம்
    18. ஒரு கோட்டுக்கு வெளியே - சு. சமுத்திரம்
    19. வேருக்கு நீர் - ராஜம் கிருஷ்ணன்
    20. ஆப்பிள் பசி - சாவி

    அடுத்து வெளிவர இருக்கும் குறுந்தகடில் சிறுகதைகளை இணைக்க முயல்கிறேன். அதே போல் கூடிய விரைவில் சிறுகதைகளை எமது சென்னைநூலகம்.காம் இணையதளத்திலும் வெளியிட முயற்சிக்கிறேன்.

    அன்புடன்
    கோ.சந்திரசேகரன்
    சென்னைநூலகம்.காம்
    கௌதம்பதிப்பகம்.காம்

    ReplyDelete
  8. http://classic1231.tripod.com/id38.html
    இந்தப்பக்கங்களில், தமிழ்ப் புத்தகாலயம்-தாகம் வெளியீடாக நா.பார்த்தசாரதியின் சிறுகதைத் தொகுப்பு இருக்கிறது. விலை.ரூ.475/- எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பில் காலத்துக்கு வணக்கம் தொகுப்பில் வந்தவையும் அடக்கமா என்பது தெரியவில்லை.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)